Sunday, March 24, 2013

ஒரு கனவும் பாதி ஃபலூடாவும்- தமயந்தி - சிறுகதை

ஒரு கனவும் பாதி ஃபலூடாவும்
தமயந்தி, ஓவியங்கள்: ஸ்யாம்
சித்தி காலை ஆறரை பஸ்ஸுக்கே வந்து இறங்கியபோது வெளிச்சம் முற்றாக வரவில்லை. பாதி வெளிச்சத்தில் உற்றுப்பார்த்து ''இப்படி மெலிஞ்சிட்டியே ஜெனி... சாப்பிடுதியா, இல்லியா?'' என்றாள்.  


 அறையில் என்னோடு தங்கியிருந்த சத்யா, போர்வையை விலக்கிப் பார்த்துவிட்டுத் திரும்பிப் படுத்துக்கொண்டாள்.
''எத்தன பேரு இங்ஙன இருக்கியல?''
ஊருக்குப் போய் எட்டு மாசம் இருக்கும். சித்தி பேசும்போது ரத வீதியில் ஈரத் தரையில் நடந்து போவது மாதிரியே இருந்தது எனக்கு.
''மூணு பேரு சித்தி. ஒரு பொண்ணு ஊருக்குப் போயிருக்கு.''
''யாரும் நம்ம ஊரு இல்லியால?''
''இல்ல சித்தி. காப்பி குடிப்பமா?''
''டீக்கட இருக்கா மோளே?'' எனக்கு வாய்க்குள்ளேயே சிரிப்பு வந்தது. ஞாயிற்றுக்கிழமைக் காலையில் கோயிலுக்குப் போய்விட்டு, கதை பேசிக்கொண்டே நடந்துவந்து டீக்கடையில் இஞ்சி டீ குடிக்கிற எங்களை ஊரேவேடிக்கை பார்க்கும். சித்திக்கு எப்போதும் ஞாயிற்றுக்கிழமை என்றால், ரொம்பவும் ஸ்பெஷல்தான். அன்று முழுக்க சித்தப்பாதான் சமையல் எல்லாம். பெரும்பாலும் கோழி பிரியாணிதான் சித்தப்பா செய்வார். சாயங்காலத்தில் அந்த வாரம் பாலஸ் டி வேலஸ் தியேட்டர்ல என்ன படமோ, அந்தப் படத்துக்குப் போவோம்.
இரவு நீண்ட நேரம் தூக்கம் வரவில்லை. அந்த தியேட்டரில் சித்தியுடன் 'மௌன ராகம்’ படம் பார்த்தது மனசுக்குள் ஞாபகம் வந்தது. அப்போதெல்லாம் பக்கத்துத் தெருபிரசாந்த் என் பின்னாடியே தொடர்ந்து வந்த காலம் அது. 'மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ...’ என்று ரீவைண்ட் செய்து செய்து பாட்டுப் போட்டுக்கொண்டே இருப்பான். அந்தப் பாட்டுக்காகவே க்ருபா சித்தியைக் கூட்டிக்கொண்டுபோய் 'மௌன ராகம்’ படம் பார்த்தேன்.
'நீ கிறிஸ்டியன் ஜெனி. நான் இந்து. அதுக் காகவா வேணாம்கிறே?’ என்று பிரசாந்த் அன்றைக்கு ஒரு நாள் கேட்ட கேள்வி மனசுக்குள் எட்டிப்பார்த்தது. முதன்முதலாக க்ருபா சித்தியிடம் தயங்கித் தயங்கி இதுபற்றிச் சொன்னபோது, ''அதனால என்னலே? இதெல்லாம் இயற்கைதான. நான்கூட எபநேசர் மாமாவை லவ் பண்ணேன். உங்க ஆத்தாகாரிதான் எங்க அய்யாக்கிட்டப் போட்டுக்குடுத்துட்டா...'' என்று சொல்லிச் சிரித்தாள்.
 
அன்றைக்கு ராத்திரி முழுக்கவும் சித்தி 'பால் போலவே... வான் மீதிலே... யார் காணவே நீ போகிறாய்...?’ என்று பாடிக்கொண்டே இருந்தாள். பின்னொரு நாளில் நானும் 'மன்றம் வந்த தென்றலுக்கு...’ என யாரிடமாவது பாட நேருமோ என்று சட்டெனத் தோன்ற, ''ச்சும்மா இரு சித்தி...'' என்றேன்.
''நானெல்லாம் படம் எடுத்தா,பொம்பளப்புள்ளைங்களும் லவ் பண்ணும்னு எடுப்பேன் மோளே!'' என்றாள். எனக்குப் புரை ஏறிக்கொண்டு சிரிப்புதான் வந்தது.
''ரெண்டு டீ...''  சித்தியே சொன்னாள். டீக் கடையின் முன்னால் போடப்பட்டு இருந்த பிளாஸ்டிக் சேரில் உட்கார்ந்தாள் சித்தி.
''அம்மா போன் போட்டாளால..?''
சித்தியின் குரலில் சின்ன ஏக்கம் இருந்தது.
''இல்ல சித்தி... உங்கிட்டப் பேசல?''
கடந்துபோன பேருந்துகளை வெறித்தபடியே இருந்தாள் சித்தி. டீக்கடைக்காரர் டீயைக் கொடுத்ததும் உள்ளங்கைக்குள் டீ தம்ளரை இறுக்கிக்கொண்டாள்.
''அம்மை சொல்லி நீ வரலயா சித்தி?'' என்றேன்.
'இல்லை’ எனத் தலையசைத்தாள். அசப்பில் சித்தி செய்யும் எல்லா விஷயங்களும் வாணிஸ்ரீ மாதிரியே இருக்கும். 'வசந்த மாளிகை’ படத்துக்கு முதல் ஷோவுக்கு என்னை அழைத்துச் சென்றிருந்தாள். அந்த வார ஞாயிற்றுக்கிழமை குறுக்குத் துறையில் துணி எல்லாம் துவைத்து, நடு ஆற்றில் ஈரத்தோடு நின்று... பழைய சோறுடன் குதிப்பு மீன் தலைக் குழம்புமாக நின்றவள், 'யாருக்காக..?’ என்று சால்வையைப் போத்திக்கொண்டு, மீன் தலையை வாயில் வைத்து உறிந்தது, சட்டென ஞாபகத்தில் மிதந்தது.
''இல்லலே... 'அம்மைக்கும் ஒனக்கும் சண்டை. உன்னைப் போய் அம்மைப் பாக்கச் சொல்லுச்சு’னு தன்ராஜ் மாமன்தான் சொன்னான்.. நீ...ங்கிறனால வந்தேன். இல்லன்னா...'' என்று இழுத்தவள் சற்றுப் பேச்சை நிறுத்தி டீயைச் சர்ரென உறிஞ்சினாள். பிறகு, அவளே தொடர்ந்தாள்.
''தன்ராஜ் மாமனுக்கு மீசைல்லாம் நரைச்சிருச்சு ஜெனி...'' என்று தம்ளரை வாயில் இருந்து எடுக்காமல், க்ளுக் எனச் சிரித்தாள். கல்கண்டு மிட்டாய் கிடைக்கும் என்று  தன்ராஜ் மாமனின் காதல் தூதாக, தான் லெட்டர் கொண்டுபோய்க் கொடுத்ததாகச் சித்தி சொல்லியிருக்கிறாள். பிறகு, தன்ராஜ் மாமன் ஒரு கம்யூனிஸ்ட்டாக மாறிப்போய்... காதலை எல்லாம் மறந்துபோனதாகக் கேள்விப்பட்டு இருக்கிறேன்.
'உன் சோஷியல் சர்வீஸ்லாம் வேஸ்ட் ஆயிடுச்சு சித்தி’ என்று பேசிக்கொண்டு இருக்கிற ஒருநாளின் நடுப்பகலில் தன்ராஜ் மாமா வந்ததுகூடத் தெரியாமல் சிரித்திருக்கிறோம். மாமா எதுவுமே பேசவில்லை. கண்களை மூடி முக்கு நார் கட்டிலில் தூங்குகிற மாதிரி படுத்து இருந்தார். அவருடைய கன்னத்து மேட்டில் கண்ணீர் பிசுபிசுப்பாக இறங்கியிருந்தது. ஆனால், தன்ராஜ் மாமா கல்யாணமே பண்ணிக்கொள்ளவில்லை. பாதி நாள் கட்சி, கூட்டம் என்று எங்கேயாவாது போய்விடுவார். பெரிய அம்மாச்சி இறந்த பிறகு தாழையூத்து அம்மாச்சி வீட்டில் தங்கியிருந்தார் மாமா. என்றைக்காவது ஒரு நாள் அவரிடம் அவர் காதலைப் பற்றிக் கேட்க வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. போன தடவை குற்றாலத்தில் குளித்துவிட்டுக் குடும்பமாக செங்கோட்டை பார்டர் கடையில்பரோட்டா சாப்பிட வேனில் போனபோது, தன்ராஜ் மாமா கடைசி சீட்டில் என் அருகில்தான் அமர்ந்திருந்தார்.
''மாமா இப்ப கூட்டத்துக்கெல்லாம் போறீயளா?'' என்று கேட்டேன்.
''போறேன்மா... எங்க? இப்ப கட்சி முடிவு எதுலயும் எனக்கு உடன்பாடு இல்ல. கூடங்குளப் போராட்டத்துல கலந்துக்கிட்டேன்னு அவங்களும் என்னை நிர்வாகப் பதவிலேர்ந்து தூக்கிட்டாங்க...''
''பேசாம நீங்க கல்யாணம் பண்ணிருக்கலாம் மாமா...'' என்றேன். மாமா அமைதியாக அந்த இருட்டுக்குள்ளும் என்னை உற்றுப் பார்த்தார். ரொம்ப நேரம் கழித்து, ''பண்ணிருக்கணும்...'' என்றார் பெருமூச்சுவிட்டபடி. உடன் கண்களை இறுக மூடிக்கொண்டார். அதன் பிறகு மாமா எதுவுமே பேசவில்லை. க்ருபா சித்தி வந்திருந்தால், மாமாவை வற்புறுத்திச் சாப்பிட வைத்திருப்பாள். அம்மாவுக்கும் சித்திக்கும் பிரசாந்த் விஷயத்தில் சண்டை வந்து, பேச்சே நின்றுவிட்டது. இல்லை என்றால் சென்னையில் வேலைக்கு வந்து கம்பெனியில் என்னுடன் வேலை பார்க்கும் சிவகுமாரைக் காதலிப்பதை, சித்தியிடம்தான் முதலில் சொல்லியிருப்பேன்.
வேனை விட்டுக் கீழே இறங்காமல் நானும் மாமாவிடம், ''மாமா நான் ஒரு விஷயம் சொல்லணும். என்கூட வேலைபாக்குற ஒருத்தரை நான் விரும்புறேன். அம்மைட்ட சொன்னாக்கத்தி ரகளை பண்ணிடுவா...'' என்றேன்.
அவர் பேசாமல் உட்கார்ந்திருந்தார். நீண்ட நேரம் கழித்து ''பையன் பேரு என்ன?'' என்றார்.
''சிவகுமார்...''
''இந்துவா..?''
''மாமா நீங்க ஒரு கம்யூனிஸ்ட்...'' என்றேன்.
மாமா ஒன்றுமே பேசவில்லை. இரண்டு நாள் அம்மையிடமும் அவர் எதுவும் பேசியதாகத் தெரியவில்லை. ஊருக்குக் கிளம்புகிற அன்றைக்கு பாட்டிலில் தண்ணீர் பிடித்துக்கொண்டு இருக்கும்போதுதான் அம்மா லபோதிபோ என்று கத்தினாள்.
''என்னடி சொன்ன தன்ராஜ்கிட்ட? குடும்ப மானத்த நெனச்சியா... பாவி மவளே...'' முடியை இழுத்துச் சுவரில் முட்டினாள்.
''அவனவவன் நல்லாப் பழகிட்டு அம்போன்னு வுட்டுட்டுப் போறான். அப்படி நடந்தா என்னடி பண்ணுவே?''
''அப்ப நீ சொல்றவனக் கட்டிக்கிறேன்.''
''ஆமாமா... ஊர் மேஞ்ச நாயைக் கட்டிக்கக் காத்திருப்பானுங்க...''
''என்ன மாதிரியே ஊர் மேஞ்ச ஒருத்தனை நானே தேடிக் கட்டிக்கிறேன்...  புரிஞ்சிக்கம்மா. நீயேல்லாம் வயசுல லவ்வே பண்ணலைனு மனசைத் தொட்டுச் சொல்லு.''
''கேள்வி கேக்குறா பாரு...  இனிமே, மெட்ராஸுக்குப் போ... உன் காலை ஒடைக்கேன்.''
அவள் சொன்னதைப் போலவே சென்னைக்குப் போகக் கூடாது என்று அப்பாவும் சொல்லிவிட்டார். நான் தன்ராஜ் மாமாவுக்கு போன் செய்து, ''மாமா என்னை வந்து பஸ் ஏத்திவிட்டுருங்க...'' என்றேன். கருக்கல் சமயம் மாமா வந்ததும் அம்மா ஓவென அழுதாள்.
''அவ போனா... திரும்ப இந்த வீட்டுக்கு வரக் கூடாது. ஆனா ஒண்ணு, அவ நல்லாவே இருக்க மாட்டா... நாசமாப் போவா...''
தன்ராஜ் மாமா ஏதோ சொல்ல வாயெடுத்தவர் பின்னர் அமைதியானார். என் பையை வாங்கிக்கொண்டு பஸ் ஸ்டாண்ட் வரை நடந்தார். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மிகச் சாதாரணமாக அவரால் எப்படி நடக்க முடிகிறது என்றே தெரியவில்லை. புது பஸ் ஸ்டாண்டில் ஒரு கடையில் பரோட்டாவும் சால்னாவும் வாங்கிக் கொடுத்தார்.
''பொம்பளைங்க லவ் பண்ண மாட் டாங்கன்னும், லவ் பண்ணாத பொம்பளைலாம் நல்லப் பொம்பளைனும் பொதுவா எல்லாருக்கும் ஒரு அபிப்ராயம் இருக்கு. நீ தப்பு பண்ணல புள்ள. தைரியமா இரு...'' என்றார் பரோட்டாவைப் பிய்த்தபடியே.
''ஆம்லெட் சொல்லட்டடா?''
''வேணாம் மாமா.''
பஸ் ஏற்றிவிட்டு கையில் நூறு ரூபாய் கொடுத்தார். 'வேணாம் மாமா’ என்றோ, 'இருக்கட்டும் மாமா’ என்றோ நான் சொல்லவில்லை. அவர் உள்ளங்கையின் ஈரம் ரொம்பப் பிடித்திருந்தது. ரூபாயோடு அவர் கையையும் பற்றிக்கொண்டேன். அப்போது அந்த நிமிஷம் க்ருபா சித்தியின் ஞாபகம் வந்தது. 'பால் போலவே... வான் மீதிலே...’ என்று அவள் பாடும் குரல் எதிர் மோதும் காற்றெங்கும் கலந்து இருப்பதுபோல் இருந்தது.
இந்தச் சம்பவங்களை எல்லாம் சித்தியிடம் சொன்னபோது டீ தம்ளரைக் கீழேவைத்துவிட்டுச் சித்தி விடாமல் சிரித்தாள்.
''இன்னும் மறக்கலயாலே நீ அந்தப் பாட்டை...''
''எப்படி சித்தி முடியும்?'' என்றேன்.
சித்தி திடீரென அமைதியானது போலிருந்தது. சித்தப்பா இறந்த பிறகு மிக மெல்லிசாக மாறிப் போயிருந் தாள். ஒரே மகன். காஷ்மீர் பக்கம் ஆர்மியில் இருக்கிறான். இப்போது சித்தி வாணிஸ்ரீ மாதிரி இல்லை என்று தோன்றிற்று. பேச்சை மாற்ற விரும்பி ''நேத்து டி.வி-யில 'வசந்த மாளிகை’ பார்த்தேன் சித்தி, ஸ்ரீவைகுண்டத்துல மாட்டு வண்டியில என்னைக் கூட்டிட்டுப் போனியே...''
''ஆமால்ல...'' என்றவள் சிரிக்க முயற்சித்தாள்.
வீட்டுக்கு வந்து குளித்து இட்லியை மிளகாய்ப் பொடி வைத்துச் சாப்பிட்டுவிட்டு, ஜன்னல் வழியாக வெளியே பார்க்க ஆரம்பித்தாள்.
''தூங்குறியா சித்தி?''
''இல்லல்லே...   நீ ஆபீஸுக்குப் போகணுமா?''
''லீவ் போடவா?''
''நானும் கூட வந்தா அந்தப் பையனைப் பாக்க லாம்ல?''
''உன்ன எங்கம்மை அவனை மறக்கவைக்க இங்க அனுப்பி இருக்கு சித்தி. நீ ஆபரேஷன் ஜெனியோட குறிக்கோளை மறக்காத...'' என்று நான் சொன்னபோது சித்தி சிரித்தாள்.
''எல்லாம் மாறிடுச்சு. உங்கம்மை மட்டும் இன்னும் மாறவே இல்ல. சண்டை போட்டாலும் உன்கிட்டப் பேச என்னத்தான் நம்புறா. மக்குப் பொம்பள. அவளுக்கு சாதிதான் முக்கியம். நம்ம ஜனங்களுக்கு பொம்பளக்  காதலிச்சிரக் கூடாதாம். பொட்டை ஜென்மமா எவனுக்கோ தொவைச்சுப் போட்டு... சமைச்சுப்போட்டுப் புள்ளப் பெத்துக் கொடுக்கணும்.''
சித்திக்குக் கண்ணோரம் நீர் துளிர்த்தது. மிக மெல்லிய ஒரு நிழல் கோடாகச் சித்தி மாறியது போல் இருந்தது. ''நீ நல்லாருக்கணும்  கண்ணு...'' என்றவள், என்னை இறுகக் கட்டித் தழுவிக்கொண்டாள். அவள் உடல் தளர்ந்து இருந்தது. எனினும் சிறுத்துப்போன ஒரு பறவையின் இதம் அதில் ஒளிந்திருந்தது.
''பேசாம என்கூடவே வந்துடுறியா சித்தி? இங்கயே இருந்துடேன். தெனம் ஒரு வாணிஸ்ரீ படம் டி.வி.டி வாங்கித் தாரேன்...''
''கேக்க நல்லாத்தான்இருக்கு'' என்றாள் புன்னகை நெளிய.
மத்தியானம் சமைத்துவிட்டு தெருமுக்கில் இருந்த டி.வி.டி. கடைக்குப் போய் 'ரோஜாவின் ராஜா’ வாங்கி வந்தேன். பக்கத்து ஃபலூடா ஸ்டாலில் சித்திக்கு ஒரு ஃபலூடாவும் எனக்கு ஒரு ஜிகர்தண்டாவும் வாங்கிக்கொண்டேன். சித்தி வீட்டில் தூங்கினபடி இருந்தாள். எழுப்பி சாப்பாடு வைத்துச் சாப்பிடச் சொன்னேன். லேப் டாப்பில் படம் போட்டேன். வயது குறைந்த உற்சாகத்தோடு அவள் படம் பார்த்துக்கொண்டு இருக்க, அவளுக்கு ஃபலூடாவும் எனக்கு ஜிகர் தண்டாவும் குவளைகளில் எடுத்து வந்து கொடுத்தேன்.
''இதென்னலே சேமியாவும் ஐஸ்க்ரீமும்...'' என்றாள்.
''ஃபலூடா சித்தி... சாப்பிட்டுப் பாரேன்'' என்றேன்.
வசதியாகத் தொடையில் ஒரு தலையணை போட்டுக்கொண்டாள். ரெண்டு வாய் ஃபலூடா சாப்பிட்டுவிட்டு,  ''நல்லாருக்குலே. நம்ம தேர் திருவிழாவுல சேமியா ஐஸ்க்ரீம் விப்பாம்ல... அத மாதிரி இருக்கு'' என்றாள்.
சிவாஜி ஏவி.எம்.ராஜனோடு பெண் பார்க்க வந்திருக்க, வாணிஸ்ரீ 'ஜனகனின் மகளை மண மகளாக ராமன் நினைத்திருந்தான்... ராஜா ராமன் நினைத்திருந்தான்...’ என்று பாடிக் கொண்டு இருந்தார்.
சித்தி என் தொடையைத் தட்டி ''எபநேசருக்கு வாணிஸ்ரீனா ரொம்பப் புடிக்கும்...'' என்றாள்.அவள் குரல் மிகவும் கீழ்ஸ்தாயியில் இருந்தது. கையில் இருந்தக் குவளையை நடுக்கத்தோடு கீழேவைத்தாள்.
அதன் பிறகு ஃபலூடாவை சித்தி சாப்பிடவே இல்லை!

நன்றி - விகடன்

0 comments: