Thursday, March 21, 2013

வத்திக்குச்சி - சினிமா விமர்சனம் (விகடன் விமர்சனக் குழு)

சும்மா போகிறவனை உரசி, அவன் பற்றிக்கொண்டு எரிந்தால்... அதுவே வத்திக்குச்சி!

நகைக்கடை அதிபர் ஜெயப்பிரகாஷ், கூலிக்குக் கொலை செய்யும் சம்பத், சேல்ஸ் ரெப் 'நண்டு’ ஜெகன் என்று மூவரும் தனித்தனியாக திலீபனை (அறிமுகம்) போட்டுத்தள்ள வேண்டும் என்று கொலைவெறியோடு அலைகிறார்கள். அவர்கள் திலீபனை ஏன் தேடுகிறார்கள்... திலீபன் இவர்களிடமிருந்து தப்பினாரா என்பதே கதை.


சாதாரண ஷேர் ஆட்டோ ஓட்டுநரை வெரைட்டியான வில்லன்கள் ஏன் தேடுகிறார்கள் என்பதை ஹீரோ - வில்லன்கள் இருவரின் கோணத்திலிருந்தும் ஃப்ளாஷ்பேக் உத்தியில் சொன்னவிதத்தில் கவனிக்கவைக்கிறார் அறிமுக இயக்குநர் கின்ஸ்லின். ஆனால், முன்பாதி திரைக்கதையில் தூவப்பட்ட செம பில்ட் அப்கள், பின்பாதியில் நொண்டியடிக்கும் இடத்தில் தாறுமாறாகப் பயணிக்கிறது படம்!


திலீபன் ஷேர் ஆட்டோ ஓட்டுநராகக் கச்சிதம். சண்டைக் காட்சிகளில் அதிரடி காட்டுபவர், ஏமாற்றம், கோபம், குழப்பம், பரிதவிப்பு போன்ற சின்னச் சின்ன ரியாக்ஷன்களுக்கு இன்னும் ஹோம்வொர்க் செய்திருக்க வேண்டாமா? 'அஸ் யூஷ§வல் துறுதுறு... கலகல அஞ்சலி. அச்சுப்பிச்சு இங்கிலீஷ§ம், அலட்டல் பந்தாவுமாகப் பின்னுது பொண்ணு. 'உன்னையெல்லாம் காதலிக்க மாட்டேன்’ என்று சொல்லிச் சொல்லியே திலீபனிடம் காதலில் விழுவது ஜாலி ஹைக்கூ

.
குருதேவின் ஒளிப்பதிவு படத்தின் ஆக்ஷன் டெம்போவுக்கான எரிபொருள். அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளில் பொறி பறக்கவைத்திருக்கிறது ராஜசேகரின் ஆக்ஷன். ஜிப்ரானின் இசையில் பாடல்கள் இதம்.


குழந்தையைக் கடத்தத் திட்டமிடும் ஜெகன், அதற்காக திலீபனைக் கொல்லத் திட்டம் போடுவதெல்லாம்... போங்க பாஸ்... போங்கு!


ஒரே மாதத்தில் யாராவது ஜிம்முக்குச் சென்று, உடலைத் தேற்றி, சண்டை கற்றுக்கொண்டு ரவுடிகளைத் துவம்சம் செய்ய முடியுமா? உயிரை எடுக்கும் மர்டர் அசைன்மென்ட் ரகசியங்களை யாராவது டீக்கடை முன் நின்றுகொண்டு சத்தம் போட்டுப் பேசுவார்களா? வில்லன் கும்ப லிடம் சிக்கித் தப்பித்த இடைவெளியில்,  'நான் டயர்டா இருக்கேன்... கொஞ்சம் தூங்கணும்..


. பரோட்டா சாப்பிடணும்... எக்சர்சைஸ் பண்ணணும்!’  என்று யாராவது முடிவெடுப்பார்களா? இப்படிப் படமெங்கும் அலையடிக்கின்றன கேள்விகள்!
கவிழ்த்துவைத்த 20 லிட்டர் தண்ணீர் கேனில் மிக்ஸிங் சரக்கைக் குழாயில் பிடித்துக் குடிப்பது, 'எதிராளி எப்படி யோசிப்பான்னு நாம யோசிக்கணும்’ எனப் போதிப்பது, தாழ்ப்பாள் போட்டிருக்கும் குடியிருப்பின் கதவை ஆள் நடமாட்டத்தின்போது தட்டுவது போன்ற உத்திகள் ரசிக்கவைக்கின்றன.


இப்படியான சுவாரஸ்யங்களைத் திரைக்கதை முழுக்கப் பரவவிட்டிருந்தால், சுரீரென்று பற்றியிருக்கும் இந்த வத்திக்குச்சி!


நன்றி- விகடன் விமர்சனக் குழு

0 comments: