Friday, March 01, 2013

மலையாள சினிமா - ஒரு பார்வை

மலையாள சினிமாவின் பிதாமகன்!
ப்ரியா தம்பி
மலையாளிகளுக்குத் தங்கள் சினிமாகுறித்து எப்போதுமே ஒரு பெருமிதம் உண்டு. அந்தப் பெருமிதத்துக்கான முதல் விதையை விதைத்தவர் ஜே.சி.டேனியல். சினிமா என்கிற அற்புதக் கலையை கேரளத்துக்கு அறிமுகம் செய்த டேனியல், தான் வாழும் காலம் முழுவதும் அங்கீகாரம் மறுக்கப்பட்டு, அன்றைய திருவிதாங்கூரின் சாதி வெறிக்குத் தன் சினிமா கனவைத் தின்னக் கொடுத்தவர். காலங்கள் கடந்து இன்றைக்கு மலையாள சினிமாவின் பிதாமகன் என ஜே.சி.டேனியலை கேரளம் கொண்டாடுகிறது. அவரின் வாழ்க்கைதான் இப்போது 'செல்லுலோயிட்’ என்கிற பெயரில் படமாக வெளியாகியிருக்கிறது.



 அன்றைய திருவிதாங்கூரில் குமரி மாவட்டத்தின் அகஸ்தீஸ்வரம் பகுதியில் பிறந்தவர் பி.ஜே.டேனியல் நாடார். வசதியான குடும்பத்தில் பிறந்த டேனியலின் கனவு சினிமா எடுக்க வேண்டும் என்பது. 'செல்லுலோயிட்’ படத்தின் முதல் காட்சியே டேனியல் (பிருத்விராஜ்) மும்பை சென்று பால்கேவைச் சந்திப்பதில் ஆரம்பிக்கிறது. 1920-களில் மும்பையில் பல ஸ்டுடியோக்களில் உதவியாளராகப் பணிபுரிந்து சினிமா தொழில்நுட்பங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக்கொள்கிறார் டேனியல்.



மீண்டும் திருவனந்தபுரம் வரும் டேனியல் தன் சொத்துக்களை விற்று, பட்டம் பகுதியில் கேரளத்தின் முதல் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான, திருவிதாங்கூர் நேஷனல் ஸ்டுடியோஸை ஆரம்பிக்கிறார். தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பச் சாதனங்களுக்காகப் பெரிதும் சிரமப்படுகிறார். லண்டனில் இருந்து ஒளிப்பதிவாளர் வந்துசேர, எல்லாம் சேர்ந்து படப்பிடிப்பில் எதிர்பார்த்ததைவிட அதிகம் செலவு பிடிக்கிறது. செலவுகளுக்காக, மேலும் மேலும் தன் சொத்துக்களை விற்கிறார் டேனியல். கணவரின் சினிமா கனவுக்கு முழு ஒத்துழைப்பு தருகிறார் மனைவி ஜானட் (மம்தா மோகன்தாஸ்).



'விகதகுமாரன்’ (The lost Child)  என்கிற பெயரில் கதையை உருவாக்குகிறார் டேனியல். ஆண்களே பெண் வேடமிட்டு நடித்துவந்த அந்தக் காலகட்டத்தில், நடிப்பதற்குப் பெண்கள் யாரும் முன்வரவில்லை. தேவாலய நாடகங்களிலும், குறத்தியாகவும் நடித்துக்கொண்டிருந்த ரோஸம்மா (சாந்த்னி) என்கிற தாழ்த்தப்பட்ட புலையர் சாதிப் பெண்ணைத் தேர்வுசெய்கிறார். நாயர் சாதிப் பெண்ணான சரோஜினியின் வேடத்தை ரோஸம்மா ஏற்று நடிக்க வேண்டும். படப்பிடிப்பு தொடங்குகிறது. கதாநாயகன் ஜெயச்சந்திரனாக டேனியலே நடிக்கிறார்.



கறுத்த உடம்போடு பழைய வேட்டியும் ஜாக்கெட்டுமாக தூக்குவாளியில் கஞ்சியைச் சுமந்துகொண்டு படப்பிடிப்புக்கு வருவாள், மலையாள சினிமாவின் முதல் கதாநாயகி ரோஸம்மா. முகத்தில் அப்பிய ரோஸ் பவுடரும், புடைவையும், தங்க நகைகளுமாக நாயர் பெண் வேடத்தில் தன்னைப் பார்க்க ரோஸம்மாவால் கண்ணீரை அடக்க முடியாது. தீண்டாமைக் கொடுமையால் தொடர்ந்து அவமானத்துக்கு ஆளாகும் ஒரு பெண்ணின் கண்ணீர் அது. படப்பிடிப்பில் அனைவரும் மேஜையில் அமர்ந்து சாப்பிட, ஸ்டுடியோவின் பின்னால் தரையில் அமர்ந்து, தான் கொண்டுவந்த கஞ்சியை ரோஸம்மா சாப்பிடும் காட்சியில்... நீங்கள் ஆதிக்க சாதியில் பிறந்திருந்தால், ஒரு நிமிடம் அவமானப்பட்டே ஆக வேண்டும். சினிமா என்பது ஒரு மேம்பட்ட கலை. இங்கு தீட்டு, சாதியெல்லாம் கிடையாது என டேனியல் திரும்பத் திரும்பச் சொன்னாலும், ரோஸம்மாவால் வலிந்து தன் மீது திணிக்கப்பட்ட சாதிய இழிவு உணர்வில் இருந்து வெளிவர முடியவில்லை.


ரோஸம்மாவின் பெயரை ரோஸி என மாற்று கிறார் டேனியல். ரோஸம்மா சினிமாவில் நடிப்பதை அறிந்து ஆதிக்க சாதியினர் அவளது அப்பாவை மிரட்டுகின்றனர். ரோஸம்மா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட, தன் வேடத்தைக் கலைத்துவிட்டு பழைய ரோஸம்மாவாகக் கையில் தூக்குவாளியோடும், கலங்கிய கண்ணீரோடும் மலையாளத்தின் முதல் சினிமா கதாநாயகி விடைபெறும் காட்சி 'செல்லுலோயிட்’ படத்தின் சிறப்பான காட்சிகளில் ஒன்று.



1930-ல் கேரளத்தின் முதல் சினிமாவைப் பெருமிதத்தோடு திருவனந்தபுரத்தில் ரிலீஸ் செய்கிறார் டேனியல். தன்னுடைய படத்தைப் பார்க்க ஆவலோடு ஓடிவரும் ரோஸம்மா, ஆதிக்க சாதி ஆட்களால் வெளியிலேயே தடுத்து நிறுத்தப்படுகிறாள். 'தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணோடு அமர்ந்து நாங்கள் படம் பார்ப்பதா?’ என அவர் கள் கொந்தளிக்கிறார்கள். உள்ளே தான் கதாநாயகியாக நடித்த படம் ஓடிக்கொண்டு இருக்க, கண்ணீரோடு வெளியே காத்திருக்கிறாள் ரோஸம்மா.
படத்தில் நாயர் பெண்ணாக, ஒரு தாழ்த்தப்பட்ட பெண் நடித்திருப்பதைப் பார்த்து ஆதிக்க சாதி ஆட்கள் கோபப்படுகிறார்கள். தியேட்டர் அடித்து நொறுக்கப்படுகிறது.



 படம் திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும் இதுவே நேர்கிறது. அப்போதும் கோபம் தணியாத அவர்கள் ரோஸம்மா வின் வீட்டைத் தீ வைத்துக் கொளுத்துகிறார்கள். இரவில் உயிருக்குப் பயந்து எங்கோ ஓடி மறைகிறாள் ரோஸம்மா.




சொத்துக்களை இழந்த டேனியல் மனைவி ஜானட்டோடும், இரண்டு குழந்தைகளோடும் மீண்டும் அகஸ்தீஸ் வரம் வருகிறார்.


சென்னை சென்று பல் மருத்துவம் படித்துவிட்டு மதுரையிலும் புதுக்கோட்டையிலும் பல் மருத்துவராகப் பணிபுரிகிறார். சினிமா கனவை மறந்துவிட்டு சராசரி வாழ்க்கைக்குப் பழக்கப்படுகிறார். பல்வலி சிகிச்சைக்காக வரும் பி.யூ.சின்னப்பாவோடு பழக்கம் ஏற்பட, அழுத்திவைக்கப்பட்ட டேனியலின் சினிமா கனவு விழித்தெழுகிறது. இடைப்பட்ட காலத்தில் சம்பாதித்த சொத்துக்களோடு சின்னப்பாவை நம்பி சென்னை செல்கிறார். 



 பி.யூ.சின்னப்பாவும் அவரு டைய நண்பர்களும், டேனியலை மீண்டும் தெருவில் நிறுத்து கிறார்கள். மனைவி, ஐந்து குழந்தைகளை மறந்து எங் கெங்கோ திரியும் டேனியல், சில வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் குடும்பத்தோடு வந்து சேர்கிறார். தொடர் தோல்வி கள் அவரை மீண்டும் எழ முடியாமல் செய்கின்றன. குழந் தைகள் வேலைக்காக வெளியூர் செல்கிறார்கள். அப்பாவின் சினிமா கனவை அவர்களால் புரிந்துகொள்ள முடியாமல், பிள்ளைகளுக்கும் அவருக்கும் பெரும் இடைவெளி ஏற்படுகிறது.



கேரளாவில் திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகின்றன. அந்த வருடம் 'செம்மீன்’ வெளியாகி பெரும் வெற்றி பெறுகிறது. இதன் சுவடே இல்லாமல், முதுமையிலும் வறுமையிலும் மனைவியோடு அகஸ்தீஸ்வரத்தில் வசிக்கும் டேனியலைச் சந்திக்கிறார் மலையாளப் பத்திரிகையாள ரும் எழுத்தாளருமான சேலங் காட்டு கோபாலகிருஷ்ணன் (ஸ்ரீனிவாஸ்). டேனியலைப் பற்றி தொடர்ந்து பத்திரிகையில் எழுதும் கோபாலகிருஷ்ணன், அவருக்கு நலிந்த கலைஞர் களுக்கான கேரள அரசின் பென்ஷன் கிடைக்க முயற்சி செய்கிறார். கூடவே, 'விகத குமாரன்’தான் கேரளத்தின் முதல் சினிமா என்று அரசு அங்கீகரிக்க வேண்டும் என முயற்சிக்கிறார். ஆனால், கல்ச்சுரல் துறையில் பதவி வகிக்கும் ஐ.ஏ.எஸ். மலையாற்றூர் ராமகிருஷ்ணன் ஐயர், டேனியலுக்கு அங்கீகாரம் கிடைக்கவிடாமல் தடுக்கிறார். மலையாற்றூர், கேரளாவின் பிரபல இடதுசாரி எழுத்தாளர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.



 கேரள சினிமாவைப் பொறுத்தவரை 1938-ல் வெளியான 'பாலன்’ என்கிற பேசும் படம்தான் அப்போதைக்கு மலையாளத்தின் முதல் சினிமா. ''பிராமணன் எடுத்த 'பாலன்’ முதல் படமா இருக்கணும். அதனாலதான் டேனியலை உங்களால அங்கீகரிக்க முடியலை'' என்று மலையாற்றூரிடம் கோபப்படுகிறார் கோபாலகிருஷ்ணன். எந்த அங்கீகாரமும் இல்லாமல், 1975-ல் மரணிக்கிறார் ஜே.சி.டேனியல்.



  வாழ்க்கை முழுக்க அவமதிப்புகளைப் பரிசளித்துவிட்டு, மரணத்துக்குப் பிறகு அங்கீகரிப்பது நம் மண்ணின் சாபம் போலும். டேனியல் இறந்த பிறகு, விகதகுமாரனை மலையாளத்தின் முதல் சினிமாவாக அங்கீகரிக்கிறது கேரள அரசு. அவரது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்கவும் உத்தரவிடுகிறது. 90-களில் கேரள அரசின் திரைப்பட வளர்ச்சி நிறுவனம் திரைப்படக் கலைஞர் களுக்கு வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு டேனியலின் பெயரை வைத்துத் தன் தவறுக்குப் பிராயச்சித்தம் செய்ய முயற்சித்தது. மலையாள சினிமாவின் பிதாமகனை வெகுமக்களுக்கு அடையாளம் காட்டிய வகையில் மலையாள சினிமாவில், தன் இடத்தை அழுத்தமாக நிறுவியிருக்கிறார் இயக்குநர் கமல்.



இளைஞனாக, நடுத்தர வயதில், முதிய வயது டேனியலாக, டேனியலின் மகன் ஹாரிஸ் டேனியலாக என எல்லாப் பாத்திரங்களிலும் சிறப்பாகப் பொருந்தியிருக்கிறார் பிருத்வி ராஜ். சாதித் தீண்டாமைதலை விரித்தாடிய காலம் ஒன்றில், பெண்கள் பள்ளிக்குக்கூட வராத நேரத்தில் டேனியலின் சினிமா கனவில் ஒவ்வொரு நொடியும் உடன் இருக்கும் மனைவி ஜானட் ஆச்சர்யப்படுத்துகிறார். 



அந்தப் பாத்திரத்துக்குப் பிரமாதமாகப் பொருந்துகிறார் மம்தா மோகன்தாஸ்.
படத்தில் டேனியல் மரணப்படுக்கையில் கிடக்கும்போது, எதிரில் காட்சிகள் அவருக்கு ஒரு சினிமாவாகத் தெரிகிறது. அதை மனைவிடம் பகிர்ந்தபடியே கண்கள் இமைப்பதை நிறுத்திக்கொள்கிறார் டேனியல். சினிமாவை நேசித்த ஒரு கலைஞனை வேறு எந்தக் காட்சியாலும் பெருமைப்படுத்திவிட முடியாது. கடைசிக் காட்சியில் டேனியலைக் கௌரவப்படுத்தும் ஒரு நிகழ்வில் கலந்துகொள்ள பேருந்தில் வருகிறார் அவரது மகன் ஹாரிஸ் டேனியல். 


டேனியலின் சினிமா கட்டாயமாக வெளியேற்றப்பட்ட திரை அரங்கில், அன்று மோகன்லால் படம் வெளியாகிறது. ரசிகர்கள் ஆரவாரிக்கிறார்கள். அவரது கட்அவுட்டுக்கு முத்தம் கொடுக் கிறார் ஒரு ரசிகர். அதை மெல்லிய புன்னகையால் கடக் கும் ஹாரிஸ் பேசாமல் நிறையப் புரியவைக்கிறார். கேமரா வழியே முதன்முதலாக டேனியல் பார்க்க, காட்சிகள் அவருக்குத் தலைகீழாகத் தெரிகின்றன. நிஜத்துக்கும் நிழலுக்குமான தலைகீழ் வேறுபாட்டை அந்தக் காட்சியில் வார்த்தைகள் இன்றிப் புரியவைத்திருப்பார் இயக்குநர்.



படம் வெளியான அன்று இரவு, இருளில் ஓடித் தப்பித்த ரோஸம்மா அதன் பிறகு எங்கு போனார் என்று யாருக்கும் தெரியவில்லை. இருளில் ஒரு லாரியின் முன்பு விழுந்ததாகவும், காப்பாற்றிய லாரி டிரைவரையே திருமணம் செய்துகொண்டு ராஜம்மா என்கிற பெயரில் நாகர்கோவிலில் கொஞ்ச நாட்கள் வசித்ததாக வும் தெளிவில்லாத தகவல்கள் படத்தில் வந்துபோகின்றன. 



தான் நடித்த படத்தைத் திரையில் பார்க்கவே அனுமதி மறுக்கப்பட்ட மலையாளத்தின் முதல் கதாநாயகி பற்றியே மனம் அதிகம் யோசிக்கிறது. இப்போது ரோஸம்மா உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை. அவரது அடுத்தடுத்த தலைமுறைக்கு இந்த ரோஸம்மாவை அடையாளம் தெரியுமா? அன்று இரவு இருளில் உயிருக்குப் பயந்து ஓடி மறைந்த ரோஸம்மாவின் கண்களை வெகுகாலத்துக்கு மறக்க முடியும் எனத் தோன்றவில்லை.



சினிமா என்பது சமூகத்தின் மனசாட்சியைப் பிரதிபலிக்க வேண்டும். அந்த வகையில் மலையாள சினிமாவின் பிதாமகன் டேனியலின் வாழ்க்கையை மட்டுமல்லாமல், சாதியின் கொடூரத்தைச் சமரசம் இன்றிச் சித்திரித்த வகையிலும் மலையாள சினிமாவின் மகத்தான படைப்பாக 'செல்லுலோயிட்’ என்றென்றும் பேசப்படும்.



நன்றி - விகடன்

1 comments:

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு சிபி அண்ணா...
ரோஸம்மாவை நினைக்கும் போது மனசு வலிக்கிறது.