Thursday, March 14, 2013

சிறையிலாவது மூன்று வேளை சாப்பிடுவோம் -மருத்துவர் ச.ராமதாஸ்


பாதிப்புகள் எங்களுக்கு... பலன்கள் எல்லோருக்கும்!

மருத்துவர் .ராமதாஸ்

14-6-1987 அன்று தருமபுரியில் தொடர் சாலை மறியல் போராட்ட விளக்க மாநாடு-பேரணி. பழைய தருமபுரியிலிருந்து டி.என்.வி. வினோபா தலைமையில் வரலாற்றுச் சிறப்புமிக்க வன்னிய இளைஞர்களின் பேரணியை இன்றைய கட்சித் தலைவரும் அன்றைய கொளத்தூர் ஒன்றிய பெருந்தலைவருமான ஜி.கே. மணி தொடங்கி வைக்க, ஆயிரக்கணக்கான வண்டிகள் அணிவகுத்தன. தோழர் இனமுரசு மாநாட்டைத் தொடங்கி வைக்க, .அருணாசல படையாட்சி மாநாட்டுத் தலைவராகப் பொறுப்பேற்க, மாவட்டத் தலைவர் கே.இராமசாமி கவுண்டர், டி.பொன்னுசாமி கவுண்டர், கே.பெருமாள், டி.கோபாலன் எம்.சி, டி.கே.ஆறுமுகம் எம்.சி, பெரியசாமி எம்.சி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். வன்னியர் சங்க மாவட்டச் செயலாளர் .இராமலிங்கம் அனைவரையும் வரவேற்றார்.
வேங்கை புலியன், சீ.கோ.மணியன், டாக்டர் ஆர்.கோவிந்தசாமி, வன்னியர் சங்கத் தலைவர் சா.சுப்பிரமணியம், வன்னியர் சங்கப் பொதுச் செயலாளர் பு.தா.இளங்கோவன், இறுதியாக நான் பேச அதிகாலை 2 மணியளவில் மாநாடு நிறைவுற்றது.
26.6.1987 அன்று திருநெல்வேலி மாவட்டம் திருக்குற்றாலத்தில் வன்னியர் சங்கத் தலைவர் சா.சுப்பிரமணியம் ..எஸ். தலைமையில் என்னுடைய முன்னிலையில் நடைபெற்ற பொதுக்குழுவில் செப்டம்பர் 17 முதல் 23 வரை தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்துவதென நாள் குறிக்கப்பட்டது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்கள், 25-க்கும் மேற்பட்ட பேரணிகள், மாநாடுகள் பல லட்சம் பேர்கள் கையொப்பமிட்ட கோரிக்கை மனு, லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட உண்ணாவிரதப் போராட்டம், 6.5.1986 அன்று சாலை மறியல் மூலம் காட்டிய எழுச்சி, 19.12.1986 அன்று மத்திய அரசு கவனத்தை ஈர்க்க நடத்திய இரயில் நிறுத்தப் போராட்டம், மாணவர்கள் நடத்திய பட்டை நாமப்பட்டினி போராட்டம் இவையெல்லாம் நடத்தியும்கூட அரசு கூப்பிட்டுப் பேசவில்லை. அத னாலே ஒரு வாரத் தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்துவதற்கான தீவிரப் பிரசாரத்தில் மூன்று மாதங்களுக்கு மேலே வன்னியர் சங்கத்தினுடைய செயல் வீரர்கள் இறங்கினார்கள்.
செப்டம்பர் 17 இல் தான் வகுப்புரிமைக்குக் குரல் கொடுத்த தந்தை பெரியாரின் பிறந்தநாள். அவரவர்கள் தலையை எண்ணிக்கொண்டு அதற்கேற்ற விகிதாசார பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும். அதுதான் சமூகநீதி என்று துணிந்து சொல்லிப் போராடியவர் அவர். எனவே அவர் பிறந்த நாள் செப்டம்பர் 17-இல் போராட்டத்தைத் தொடங்குவது பொருத்தம் என்று தீர்மானிக்கப்பட்டது.
மேலும், இந்த அரசு பெரியார் வழிவந்தது என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைபவர்கள், ஆண்டுக்காண்டு பெரியார் சமாதியில் மலர் வளையம் வைப்பதிலும், சிலைக்கு மாலை போடுவதிலும் அரசு செலவிலே விழா எடுத்து அவருக்குப் புகழாரம் சூட்டுவதிலும் குறைவைக்காத இவர்கள், பெரியாரின் கொள்கையை முன்வைத்துப் போராடி வரும் வன்னியர் சங்கத்தின் கோரிக்கையை அசட்டை செய்து வந்தனர். எனவேதான் போராட்டம்.
வன்னியர் சங்கக் கூட்டம் எங்கு நடந்தாலும் அரசாங்கம் தமது ஒற்றர் கூட்டத்தை அனுப்பி வைத்தது. சங்கத்தின் முன்னணிப் பேச்சாளர்கள் பேச்சுக்கள் அனைத்தும் டேப் செய்யப்பட்டன. என்னைச் சுற்றிலும் காவல்துறையின் கண்காணிப்பு. எங்களது கோரிக்கைகள் அனைத்தும் அவர்களுக்குத் தெரிந்தும் அவற்றை அசட்டை செய்தனர். இப்படிப்பட்ட சூழலில்தான் அவர்களை வழிக்குக் கொண்டுவரும் வகையில் போராட்டம் தீவிரமடைந்தது.
இந்தப் போராட்டத்தின் தேவையை மக்கள் மத்தியில் விளக்குவதற்காக நாடு தழுவிய அளவில் பல்வேறு இடங்களில் தொடர் சாலை மறியல் விளக்கக் கூட்டங்கள் நடத்தப்பெற்றன.
தென்னார்க்காடு மாவட்டம் கொஞ்சிக்குப்பம், செஞ்சிவட்டம் தாதம்பட்டி, பல்லவர்மேடு, தஞ்சை புதுப்பட்டினம், விழுப்புரம், சேர்ந்தனூர், சேலம் சின்னபுதூர், விருத்தாசலம் ஒன்றியம் மு.பட்டி, சென்னை ஈக்காடுதாங்கல், காஞ்சிபுரம், சிங்கப் பெருமாள்கோவில், வலங்கைமான், வல்லம் ஒன்றியம் கடம்பூர் முதலான எண்ணற்ற இடங்களில் பொதுக்கூட்டங்கள் மூலம் மக்களைத் தயார் செய்யும் பணி நடைபெற்றது.

அப்போது எங்கள் கைவசம் இருந்த ஒரே பத்திரிகை கனல். ‘அரசுக்கும் அனைத்து சாதி மக்களுக்கும் வேண்டுகோள்என்ற தலைப்பில் நான் எழுதிய தலையங்கத்தில் பிற சாதி மக்களை நோக்கி, ‘எங்கள் சாதி மக்களுக்காகவும் நாங்கள் பொதுவான கோரிக்கை வைத்துப் போராட்டத்தில் குதித்து விட்டோம்! முதற்களப்பலியாக நாங்கள் எங்களை இந்தத் தியாகப் போராட்டத்தில் தீர்மானித்து இறங்கி விட்டோம்!
எங்களை நெஞ்சார வாழ்த்தி வழி அனுப்பி வையுங்கள், பாதிப்புகள் எங்களுக்கானாலும் பலன்கள் எல்லோருக்குமாக இருக்கட்டும் என்ற நோக்கத்தோடு செல்லும் வன்னியப் போராளிகளை உளமார வாழ்த்துங்கள்! ஒடுக்கப்பட்ட சாதியினர் அனைவரும் ஒன்றுதிரண்டு போராடும் காலம் வரும்போது அனைவரும் திரண்டெழுந்து ஆதிக்கச் சக்தியினை வீழ்த்திக் காட்டுவோம்என குறிப்பிட்டிருந்தேன்.
போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் வகையில் ஊர்க்கூட்டம் (கிராமக்கிளை), ஒன்றியக் கூட்டம், மாவட்டக் கூட்டம் என ஒவ்வொன்றும் இரண்டிரண்டு முறை கூட்டப்பட்டது. சுவரெழுத்து விளம்பரம், சினிமா சிலைடுகள், சுவரொட்டிகள் மூலமும் மக்கள் மத்தியில் தகவல்கள் கொண்டு சேர்க்கப்பட்டன. குடும்பத்துக்கு ஒரு ரூபாய் வீதம் வன்னியர்களிடமிருந்து போராட்ட நிதி திரட்டப்பட்டது. இவற்றையெல்லாம் செம்மையாகச் செய்வதற்காகப் போராட்டக் குழு, விளம்பரக் குழு, பிரசாரக் குழு, தொண்டர்படைக் குழு, நிதிக் குழு என ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டு, அக்குழுக்களின் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
போராட்டத்தை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்த வன்னிய தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தைத் தமிழ்நாட்டில் நடத்தாமல் பாண்டிச்சேரியில் நடத்தினோம். இதனால் எங்கள் திட்டம் தமிழகப் போலீஸுக்கு எட்டாமல் போனது. சாலை மறியலுக்குத் திட்டமிட்ட ஏற்பாடுகளை வன்னியர் சங்கம் செய்தது. வயல்வெளிகளின் மறைவான பகுதிகளில், கரும்புத் தோட்டங்களில் ஒரு வாரத்துக்கு முன்பே பாசறைகள் அமைக்கப்பட்டன.
இந்தப் போராட்டம் குறித்து 30-9-1987 நாளிட்ட ஜூனியர் விகடன் பத்திரிகை இவ்வாறு எழுதியது, ‘செயலிழந்த போலீஸ்என்னும் தலைப்பில். தமிழக போலீஸ் சற்றுத் தடுமாறிப் போனது உண்மை! ரகசிய போலீஸ் பிரிவு காரணம் தேடித் தலைகுனிந்து நிற்கிறது.
நாவன்மை உள்ள ஒரு மூத்த அமைச்சர்கூட இன்டலிஜென்ட்ஸ் பீரோ என்ன பண்ணிக்கிட்டிருக்குன்னு தெரியலை. இவ்வளவு பெரிசா நடக்கும்னு முன்கூட்டித் தகவல் தந்திருந்தால், 16-ஆம் தேதி இரவே போக்குவரத்துகளைச் சென்னையிலேயே தடுத்திருக்கலாம். முதலமைச்சர் ஊரில் இல்லாத நேரத்தில் இப்ப எல்லாமே கையை மீறிப் போய்க்கிட்டிருக்குஎன்று உயர் அதிகாரி ஒருவரிடம் சொல்லி வருத்தப்பட்டு இருக்கிறார்.
பாண்டிச்சேரியில் கூட்டம் நடத்திப் போராட்டத்துக்குத் திட்டமிட்டதால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று இப்போது காரணம் சொல்வது வெறும் சப்பைக்கட்டு. பல மாதங்களாகவே கிராமம் கிராமமாகக் கூட்டங்கள் நடந்திருக்கின்றன. இது பற்றிய எந்தத் தகவலும் போலீஸுக்குத் தெரியாது. போராட்டம் தீவிரமான பகுதிகளில் குறைந்தபட்சம் 144 தடை உத்தரவு போட்டிருக்க வேண்டும். அதையும்கூடச் செய்யவில்லை, என்று ஜூனியர் விகடன் எழுதியது. காவல்துறையின் கவனத்தில் மண்ணைத் தூவும் வகையில் போராட்ட உத்திகள் வகுக்கப்பட்டன என்பதற்கு மேற்கண்ட பத்திரிகைச் செய்தி சான்று. இந்தப் போராட்டக் குழுவுக்கு நான் தலைமை ஏற்றேன். போராட்டக் குழுவின் உத்திமுறை குறித்து மேற்படி கட்டுரையின் ஆசிரியர்களான சௌபா, வேல்ஸ் ஆகியோர் அக்கட்டுரையில் பின்வருமாறு எழுதுகின்றனர்.

போராட்டக் குழுக்களின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களை போலீஸ் முன் கூட்டிக் கைது செய்துவிட்டால்...? ராமதாஸ் இதை எதிர்பார்த்தார். இந்த மாதம் 17-ம் தேதி போராட்டம் தொடங்குகிறது என்கிற தறுவாயில் 12-ம் தேதியே வன்னியர் சங்கத்தின் மாவட்ட, ஒன்றிய, கிராம அமைப்பாளர், தலைவர், செயலர் இக்குழுக்களின் முக்கியஸ்தர்கள் அனைவருமே தலைமறைவானார்கள்! 13-ம் தேதி முன்னெச்சரிக்கைக் கைது செய்யக் கிளம்பிய போலீஸ், எங்கே வெறுங்கையோடு போனால் மேலதிகாரிகளிடம்பாட்டுகேட்க வேண்டுமோ என்று டீ குடிக்கப்போனவன், வயக்காட்டுக்குப் போனவன் எல்லோரையும் மாய்ந்து மாய்ந்து கைது செய்து 14-ம் தேதி அலுத்துப்போனது


 இந்தச் சந்தர்ப்பத்தில் பாண்டிச்சேரியில் அடைக்கலம் புகுந்திருந்த ராமதாஸும், கிராமங்களில் மறைந்திருந்த வன்னியர் சங்கத்தின் நிர்வாகிகளும் மாறுவேடத்தில் தங்கள் கிராமங்களுக்குச் சென்றார்கள். சாலை மறியல் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது பற்றி ஒவ்வொரு கிராமத்திலும் தாங்கள் நியமித்திருந்த இளைஞர்களைச் சந்தித்துக் கூறினார்கள். 15 மற்றும் 16-ம் தேதி முழுவதும் ஐந்து குழுக்களின் முக்கியஸ்தர்களும் முஸ்லிம்களைப் போல் தாடி குல்லாவுடனும், மேல் மருவத்தூர் பக்தர்களைப் போல் வெவ்வேறு வேடங்களில் மும்முரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தனர்


 இவர்களின் செயல்பாட்டை நேரடியாகப் பார்வையிட்ட ராமதாஸும் 15, 16 தேதிகளில் தென் ஆர்க்காடு மாவட்டக் கிராமங்களில்தான் மாறுவேடத்தில் அலைந்து கொண்டிருந்தார்," என்பது எங்களுடைய போராட்டத் தயாரிப்பு நிலை குறித்த பத்திரிகையாளர்களின் மிகச் சரியான கருத்துக் கணிப்பாகும்.
சிறையிலாவது மூன்று வேளை சாப்பிடுவோம்என்று தலைப்பிட்டு 18.9.1987 தேதியில் வெளிவந்த தராசு இதழில் இந்தப் போராட்ட நேரத்தில் என்னிடம் பேட்டி கண்ட .எஸ்.மணி, சங்கத்தின் முக்கியப் பிரமுகர்களை முன்கூட்டியே கைது செய்து விட்டால், போராட்டம் நடக்குமா? என்ற வினாவை என் முன்வைத்தார். அதற்கு அளித்த பதிலைக் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தது. அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும் எங்கள் மக்கள் எப்படியும் போராடுவதென்று தீர்மானித்து விட்டார்கள்.
கடந்த போராட்டங்களில்கூடப் பலர் முன்கூட்டியே கைது செய்யப்பட்டார்கள். ஆனால் என்ன நடந்தது. போராட்டத்தில் கலந்து கொண்ட எல்லோரையும் கைது செய்ய இயலாமல், கெஞ்சிக் கேட்டு வீட்டுக்கு அனுப்பினர், காவல்துறையினர். அப்படியிருந்தும் பல்லாயிரக்கணக்கில் கைதானோம். இந்தப் போராட்டத்திலாவது அரசு, எங்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். சிறையிலாவது, எங்களில் பலருக்கு மூன்று வேளை சாப்பாட்டுக்கு வழிகிடைக்குமே?" என்பது தராசு இதழில் வெளிவந்த செய்தியாகும். எங்கள் போராட்டம் திடீரென்று உருவானதல்ல, 8 ஆண்டுகள் போராடியும் நீதி கிடைக்கவில்லை, போராடுவதைத் தவிர இனி வேறு வழியே இல்லை என்பதனை விளக்கும்.
1.5.1987 முதல் 26.6.1987 வரை தராசு பத்திரிகையில்எங்கள் போராட்டம் எதற்காக?’ என்ற தலைப்பில் தொடர் கட்டுரை ஒன்றையும் எழுதி வந்தேன். எங்கள் மக்களின் வாழ்வுரிமையை மையமாகக் கொண்ட தோடர்சாலை மறியல் போராட்டம் 1987 செப்டெம்பர் 16 நள்ளிரவிலிருந்தே திட்டமிட்டவாறு தொடங்கப் பட்டது.
(தொடரும்)

thanx - kalki

0 comments: