Thursday, March 14, 2013

எம்.ஜி.ஆர் VS மருத்துவர் ச.ராமதாஸ்


காரிலேயே காத்துக் கிடந்தோம்!

மருத்துவர் .ராமதாஸ்

நான் மறக்க முடியாத மற்றொரு போராட்டம் கும்மிடிப்பூண்டி இரயில் மறியல் போராட்டமாகும். 500 பெண்கள் உட்பட 4000 வன்னியர் சங்கத் தொண்டர்கள் அரிசி ஆலையில் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக இரவே தங்க வைக்கப்பட்டிருந்தனர். விடியற்காலை 4 மணிக்கு இரயில் நிறுத்தப் போராட்டம் கும்மிடிப்பூண்டி இரயில் நிலையத்தில் தொடங்கியது


 காலை 7 மணிக்கு இரயில் மறியலில் ஈடுபட்ட வன்னியர் சங்கத் தொண்டர்களைத் தடியால் அடித்தும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் கலைக்க முயற்சித்தனர். ஆனால், மக்கள் கலைய மறுத்ததால் துப்பாக்கிச் சூடு நடந்தது. 3 பேருக்கு மேல் குண்டு பாந்து சென்னை பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. கும்மிடிப்பூண்டியிலிருந்து சூளூர்பேட்டைவரை காலை 4 மணியிலிருந்து 8 1/2 மணிவரை வந்த இரயில்கள் அப்படியே நகரமுடியாமல் நின்று கொண்டிருந்தன. துப்பாக்கிச்சூடு நடந்த பிறகுதான் மக்கள் கலைந்து ஓட இரயில்கள் நகரத் தொடங்கின.
ஒரு வாரம் அந்தப் பகுதியிலுள்ள கிராமங்களில் காவல் துறையினருடைய காட்டு தர்பார் அரங்கேறியது. ஆண்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு, பெண்களையும் அடித்து கையில் வைத்துக் கொண்டிருந்த குழந்தைகளையும் தூக்கி வீசினர். கண்ணில் தென்பட்ட மாடுகளைக்கூட வெறிபிடித்து அடித்து அவர்களுடைய கோபத்தைத் தணித்துக் கொண்டனர். நூற்றுக்கணக்கான ஆண்கள் கைது செய்யப்பட்டு பல்வேறு வழக்குகள் அவர்கள் மீது போடப்பட்டன.

சென்னை பேசின்பிரிட்ஜ் இரயில் நிறுத்தப் போராட்டத்தில் கைதாகி பிறகு ஜாமீனில் நான் வெளிவந்தபோது என்னுடைய வீட்டுக்குக்கூடச் செல்லாமல், நேரே கும்மிடிப்பூண்டிக்குச் சென்று கிராமம் கிராமமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினேன்.
டிசம்பர் 19 போராட்டத்தில் நான் கைதாகிச் சிறையில் அடைக்கப்பட்டபோது என்னை விடுதலை செய்யக் கோரி டிசம்பர் 24 ந்தேதி அன்று கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் இரவு 12 மணியிலிருந்து வன்னியர் சங்கத் தொண்டர்கள் பத்தாயிரம் பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களைக் கலைப்பதற்குக் காலை 11 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் தட்டானோடை செல்வராஜ் என்ற இளைஞருக்கு மார்பில் குண்டு பாய்ந்து கடலூர் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்க வசதி இல்லை என்று சொல்லி சென்னைப் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
சென்னைப் பொது மருத்துவமனையில் டாக்டர் பஞ்சமூர்த்தி அறுவை சிகிச்சை செய்து குண்டுகளை அகற்றினார். இன்னும் ஒரு குண்டு விலாப் பக்கத்தில் அகற்ற முடியாமல் அதனோடேயே அவர் இன்றும் வாழ்ந்து வருகிறார். மேலும் 3 பேருக்கு கால்களில் குண்டடிபட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
செல்வராஜ் சென்னைப் பொது மருத்துவனையில் சிகிச்சை பெற்றபோது 28.12.1986 சென்னை மத்திய சிறைச்சாலையிலிருந்து நான் அவருக்கு எழுதிய ஒரு கடிதத்தை இன்றும் அவர் வைத்துக் கொண்டிருக்கிறார். அந்தக் கடிதத்தை வாசகர்களுடைய பார்வைக்கு வைத்துள்ளேன்.
மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வெளியில் வந்த பிறகு திண்டிவனத்தில் உள்ள என் வீட்டில் ஒரு மாதம் அவரைத் தங்க வைத்து அவருக்கு மேலும் சிகிச்சை அளித்தேன்.
15.3.1986 அன்று வகுப்புவாரி ஒதுக்கீட்டுக் கோரிக்கையை வலியுறுத்தி என் தலைமையில் கல்லூரி மாணவர்களுடன் முதுகிலும், நெஞ்சிலும், நெற்றியிலும் பட்டை நாமம் போட்டுக்கொண்டு கோட்டையை நோக்கி நடந்த பட்டை நாமப் பட்டினிப் போராட்டமும் இட ஒதுக்கீட்டுக்காக நடத்திய போராட்டத்தில் குறிப்பிடத்தக்கதாகும்.

1980இல் இருந்து 1987வரை அப்பொழுது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரைச் சந்தித்து மனுக்கள் கொடுப்பதற்கு பலமுறை முயன்றேன். ஆயினும் அவரைச் சந்திக்கக் கூடிய வாய்ப்பு எனக்கு ஏற்படவில்லை.
ஒரு முதல்வருக்கு, ஒரு நடிகையின் கணவர் மறைவுக்கு அடுத்த மாநிலத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தவும், ஒரு நடிகரின் தாயாரின் மணிவிழாவில் கலந்து கொண்டு வாழ்த்தவும், ஒரு நடிகரின் சொந்தப் படத்தைத் தொடங்கிவைத்து வாழ்த்தவும், ஒரு நடிகையின் மகன் பூணூல் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்தவும், ஒரு நடிகரின் தங்கை திருமணத்துக்காகக் கோவை சென்று வாழ்த்தவும், நேரம் இருக்கிறது.
ஆனால், சமுதாயத்தில் பல நூற்றாண்டுகளாக வஞ்சிக்கப்பட்ட வெகு மக்களுடைய பிரதிநிதிகளைச் சந்திக்க முதல்வருக்கு நேரம் இல்லைஎன்று அறிக்கைகளும் கருத்துப்படங்களும் தொடர்ந்துகனல்பத்திரிகையில் வெளியிடப்பட்டன.
அப்பொழுது எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் இருந்த பண்ருட்டி இராமச்சந்திரனைச் சந்தித்து எம்.ஜி.ஆரைச் சந்தித்துப் பேச ஒரு பத்து நிமிடம் ஏற்பாடு செய்யுங்கள் என்று பலமுறை கூறியும், அவர் செய்கிறேன் என்று சொல்லி சந்திப்பை ஏற்படுத்தத் தவறிவிட்டார். ஒருமுறை பண்ருட்டியார் அவருடைய வீட்டுக்கு என்னை வரச் சொல்லி நானும் தீரனும் காரிலேயே காத்துக் கிடந்தோம். காரிலேயே காத்திருக்க வேண்டும் என்று அவருடைய பணியாளர் எங்களுக்குக் கட்டளையிட காரிலேயே காத்திருந்தோம்.

பார்வையாளர்கள் அனைவரும் அமைச்சரைப் பார்த்துச் சென்ற பிறகே எங்களை பணியாளர் அமைச்சரைப் பார்க்க அழைத்துச் சென்றார். ஏற்கெனவே அமைச்சர் எங்களுக்கு அறிவுறுத்தியதற்கு ஏற்ப எம்.ஜி.ஆரைப் பார்க்கும் பொழுது கொடுக்க வேண்டிய கோரிக்கை மனு எப்படி இருக்க வேண்டும் என்பதை அவரிடம் காட்டினோம்.


 நான், குகுகு பொதுச் செயலாளர் .கே.நடராசன், தீரன் மூன்று பேரும் மெரினா கடற்கரையில் உட்கார்ந்து தயாரித்த அந்தக் கோரிக்கை மனுவை பண்ருட்டியாரிடம் காட்டினோம். அவர்நான் தேதி வாங்கித் தருகிறேன்என்று எங்களுக்கு உறுதி அளித்து வழியனுப்பி வைத்தார். ஆனால் 1987இல் தொடர் சாலை மறியல் நடக்கும்வரை எம்.ஜி.ஆரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை.
இதே பண்ருட்டி இராமச்சந்திரன், தான் அமைச்சராக இருந்தபோது தன்னுடைய தொகுதியான பண்ருட்டிக்குச் செல்லும் வழியில் சாலையோரத்தில் வண்டியை நிறுத்தினார். அங்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு படிக்காத சிறுவன் ஓடிவந்து, டாக்டர் அய்யா கேட்கிற 20 சதவிகிதத்தைக் கொடுக்க வேண்டியதுதானே" என்று கோபமாகக் கேட்டதாகப் பாட்டாளி மக்கள் கட்சியில் பண்ருட்டியார் சேர்ந்த காலத்தில் கூட்டங்களில் இதுபற்றிச் சொல்ல தவறியதில்லை. அந்த அளவு வன்னியர் சங்கத்தினுடைய இட ஒதுக்கீடு கோரிக்கை மாடு மேய்த்த சிறுவனையும் சென்றடைந்தது.


thanx - kalki

0 comments: