Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Thursday, August 06, 2015

அப்துல்கலாமே கோபப்பட்ட தருணம்

இளைய சமுதாயத்தினர்தான் நாட்டின் நம்பிக்கை நட்சத்திரங்கள். அனைத்துத் துறைகளுக்கும் தலைமையேற்று அவர்கள் நமது நாட்டை முன்னேற்றப்பாதையில் வழிநடத்திச் செல்வார்கள் என்பதில் அமரர் கலாமுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை.
கோபப்பட்ட கலாம்
அண்ணா பல்கலைக்கழகத்தில் அப்துல் கலாம் கவுரவப் பேராசிரியராகப் பணியாற்றினார். அந்த சமயத்தில், அகில இந்திய வானொலி நிகழ்ச்சி ஒன்றுக்காக அவரிடம் நேர்காணல் நடத்த அனுமதி கோரினேன். ‘பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இளைஞர்கள் ஈர்க்கப்படுவது எதனால்?’ என்ற கருத்தை மையமாக வைத்துத் தயாரிக்கப்படவிருந்த உரைச் சித்திரத்துக்காக அவரது கருத்துகளைத் தெரிந்துகொள்ள விரும்பினேன்.
நான் இந்த விஷயத்தைக் கூறியதும் சட்டென்று அவர் முகத்தில் லேசான கோபம் பிரதிபலித்தது. அவர் இயல்புக்கு மாறான சற்றுக் கடுமையான குரலில் ‘‘இளைஞர்கள் எவ்வளவு நல்லவர்கள் தெரியுமா சார்?’ என்று கேட்டார். ‘‘எனக்கு வரும் இ-மெயில்களைப் பாருங்கள். “நாட்டு முன்னேற்றத்துக்காக எந்த வழிமுறைகளில் நாங்கள் செயல்பட வேண்டும் என்று சொல்லுங்கள். நாங்கள் அதற்காக உழைக்கத் தயாராக இருக்கிறோம்” என்று மாணவர்களும் இளைஞர்களும் அந்த இ-மெயில்கள் மூலம் எனக்குத் தெரிவிக்கின்றனர்’’ என்று என்னிடம் பகிர்ந்துகொண்டார்.
அரசியலிலும்...
மாணவர்களிடம் அவர் கலந்துரையாடும்போது அவர்களின் எதிர்கால லட்சியம், இலக்கு குறித்துக் கேள்வி கேட்பார். ஆனால், யாருமே அரசியலில் இறங்கப்போவதாகவோ அமைச்சர்களாக மாறப்போவதாகவோ சொல்லாததால், ‘‘ஏன் நீங்கள் அரசியலில் ஆர்வம் காட்டுவதில்லை?’’ என மாணவர்களை அவர் கேட்பது வாடிக்கை. அரசியலைத் தூய்மைப்படுத்த இன்றைய இளைஞர்கள் அரசியலிலும் நேர்மையுடன் செயல்பட்டு நாட்டை வழிநடத்த வேண்டும் என்ற விருப்பத்தையும் அவர் வெளியிடுவதுண்டு.
பொதுவாகப் பள்ளிகளிலோ கல்லூரிகளிலோ பயிலும் பெரும்பாலான மாணவர்கள், பெரிய படிப்புகள் படிக்க வேண்டும், படித்த கல்வித் தகுதிக்கு ஏற்ப அதிகமான சம்பளம் கிடைக்கும் வேலையைத் தேட வேண்டும் என்பதில்தான் விருப்பம் கொண்டிருப்பார்கள். கல்வியால் தனக்குக் கிடைத்த பலன்களைப் பயன்படுத்தி, தங்களைச் சார்ந்த மக்களின் நல்வாழ்வுக்கு எப்படிப்பட்ட பங்களிப்பை வழங்க முடியும் என ஆழமாக யோசிப்பதில்லை.
சின்னது குற்றமே
மாணவர்களின் இத்தகைய மனப்போக்கை தனது கருத்தில் கொண்டுதான் மாணவர்களிடம் அவர் கலந்துரையாடும்போது சின்னதாகக் குறிக்கோள் வைத்துக்கொள்வது ஒரு குற்றம் (small aim is a crime) என வலியுறுத்தினார்.
மிகப் பெரிய இலக்குகளை மாணவர்கள் அமைத்துக்கொள்ள வேண்டும் என எப்போதுமே எடுத்துரைத்து வந்தார். மாணவர்களின் அளவுகடந்த ஆற்றலைத் தேசத்தின் வளர்ச்சிக்கு எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதற்கு அவரே ஒரு முன்மாதிரியாகவும் செயல்பட்டார்.
ஏவுகணைப் பணிகளில் மாணவர்கள்
நாம் முதல் முறையாக ஏவுகணைகளை 100 சதவீதம் நமது நாட்டுத் தயாரிப்புகளாக உருவாக்க முனைப்புடன் பாடுபட்டபோது, நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கியமான பொறியியல் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் உள்ள மாணவர்களை ஏவுகணைத் தயாரிப்புத் திட்டத்தில் அப்துல் கலாம் பங்கேற்க வைத்தார். அக்னி ஏவுகணையை தயாரிக்கும் பணிகளில் சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் உருவாக்கிய பிரத்யேக மென்பொருள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார்.
அனைத்து விண்வெளித் திட்டங்களிலும் தனது வெற்றிகளுக்குப் பக்கபலமாக இருந்தது துடிதுடிப்பாற்றலும் ஆர்வப் பெருக்கும் கொண்ட இளம் அணியினர்தான் என்பதைத் தனது சுயசரிதையான அக்னிச் சிறகுகளில் பெருமிதத்துடன் நினைவுகூர்ந்துள்ளார்.
நானும் ஒருநாள்...
வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டும் என்றால், நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்ற ஆசை, நம்பிக்கை, எதிர்பார்ப்பு ஆகிய குணாம்சங்களை ஒவ்வொரு இளைஞரும் தனக்குள் ஆழமாகப் பதிய வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறிய கலாம், தனது வாழ்க்கையில் அதை நிரூபித்துக் காட்டியுள்ளார்.
‘சாதாரண நாட்டுப்புறத்துப் பையனாக இருந்தாலும், நானும் ஒருநாள் வானத்து உச்சியை எட்டுவேன்’ என்ற நம்பிக்கையைத் தனக்குள் வேர்விட வைத்ததால்தான் தனது எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுக்க முடிந்தது என்றும், சாதனை நாயகன் கலாம் குறிப்பிட்டுள்ளார்.
சுய கட்டுப்பாட்டு நெறிகள்
சாதிக்க வேண்டும் என்று வேட்கை கொண்டுள்ள மாணவர்களுக்கு அர்த்தம் பொதிந்த ஆலோசனையைத் தனது வாழ்க்கையிலிருந்தே கீழ்வருமாறு அவர் குறிப்பிட்டுள்ளார் :
“மனதையும் எண்ணங்களையும் கட்டுப்படுத்தி, என் தலைவிதியை எனக்குச் சாதகமானதாக அமைத்துக்கொள்ள நான் கடுமையாக முயற்சி செய்தேன்.
ஒவ்வொரு மாணவருக்குமே வெற்றிபெற வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதை நிஜமாக்கிக் காட்டுவதில்தான் ஒவ்வொருவருமே வேறுபடுகிறோம். சுய கட்டுப்பாட்டு நெறிகளைப் பின்பற்றிச் செயல்பட்டால், ஒவ்வொருவராலும் சாதிக்க முடியும்.”
தீர்க்கதரிசியின் நம்பிக்கை
நாடு விடுதலை அடைந்து இத்தனை ஆண்டுகளாகியும் உலக அரங்கில் நமக்கு இன்னமும் உரிய மதிப்பும் அங்கீகாரமும் கிடைக்கவில்லை. இந்த நிலையை மாற்ற வேண்டிய முக்கியமான பொறுப்பையும் இளைய தலைமுறையினரிடம்தான் அப்துல் கலாம் ஒப்படைத்துள்ளார்.
நமது தேசம் வலுவான, வளமையான, வளர்ச்சியடைந்த ஒரு தேசமாக உயர்வடையும் என்பதில் திட்டவட்டமாக நம்பிக்கை கொண்டுள்ளதாகத் தனது சுயசரிதையில் அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார். தீர்க்கதரிசிகளின் நம்பிக்கை என்றுமே பொய்ப்பதில்லை.
“மற்றவர்கள் என்னை உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்பவில்லை. ஒருசில ஆத்மாக்களாவது எனது வாழ்க்கைக் கதையைத் தெரிந்துகொள்வதன் மூலம் உத்வேகம் பெறக்கூடும் என்று நம்புகிறேன்’ என்பதுதான் அவரது சுயசரிதையின் இறுதி வரிகள்.
அவரது நம்பிக்கை கட்டாயம் நிறைவேறவே செய்யும்.
- கட்டுரையாளர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நூல்களை தமிழாக்கம் செய்தவர்.


நன்றி - த இந்து

Wednesday, March 27, 2013

ராஜபக்சேவை அமெரிக்கா, இந்தியா ஆதரிக்கும் மர்மம் - பழ நெடுமாறன் ஜூ வி கட்டுரை

கண்டனமா? கண்துடைப்பா?
'தமிழர் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்​தினரைத் திரும்பப் பெற வேண்டும்


; இலங்கை நடத்திய போர்க் குற்றங்கள், மனித உரிமைகள் மீறல்கள் குறித்து நம்பகமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்’ - இப்படி முக்கியமான கோரிக்கைகளை ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் ஆணையர் நவநீதம் பிள்ளை, ஜெனிவாவில் கூடிய கூட்டத்தில் 38 பக்கங்கள் கொண்ட அறிக்கையாக முன்​வைத்தார். இந்தச் செய்தி வெளியானபோது உலகெங்கும் உள்ள தமிழர்களின் உள்ளங்களில் நம்பிக்கை ஒளி படர்ந்தது.அந்த அறிக்கையில் வேறு முக்கியமான அம்சங்கள் என்ன இருந்தது தெரியுமா?


இலங்கையில் போர் நடைபெற்ற வேளையில் வயதானவர்களும் சிறுமிகளுமாக ஆயிரக்கணக்கான​வர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க எந்த நடவடிக்கையையும் இலங்கை மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் போருக்குப் பிறகும் ஆள் கடத்தல் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்கின்றன.தமிழர்கள் வசிக்கும் பகுதியில் சிங்கள ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சிவில் நிர்வாகத்திலும் ஆதிக்கம் செலுத்தி வருகி​றார்கள். இதன் விளைவாக அங்கு வாழும் தமிழ்ப் பெண்களுக்கு பாலியல் வன்முறை அச்சம் நிலவுகிறது.


போருக்குப் பின் செய்ய வேண்டிய நிவாரணப் பணிகள், மீள் குடியமர்த்தல் போன்​றவை நிறைவேற்றப்படவில்லை. இலங்கை அரசின் தேசிய செயல்திட்டத்திலும் அவை புறக்​கணிக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் போர் நினைவுச் சின்னங்கள் அழிக்கப்பட்டுள்ளன.மனித உரிமை மீறல்கள் குறித்து விசா​ரணை நடத்துவதாகக் கூறிய இலங்கை அரசு முழுமையான விசாரணை எதுவும் நடத்தவில்லை. இடம்பெயர்ந்த மக்களைக் குடியமர்த்தும் பணியையும் செவ்வனே செய்ய​வில்லை. 2006-ம் ஆண்டு அதிபர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை இன்னும் வெளியிடவில்லை. சிறுபான்மையினரான தமிழர்​களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும்.


தமிழர்களின் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள ராணு​வத்தினரைத் திரும்பப் பெறவேண்டும். இலங்கை நடத்திய போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்​கள் குறித்து நம்பகத்தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்கிறது அந்த அறிக்கை.


ஆணையர் நவநீதம் பிள்ளையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஆலோசனைகளை உள்ளடக்கிய தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வதற்கு அமெரிக்கா தவறிவிட்டது.


அமெரிக்காவின் வரைவுத் தீர்மானத்தில் ஆணையரால் குறிப்பிடப்பட்ட முக்கியமான ஆலோசனைகள் இடம்பெறவில்லை. நீர்த்துப்போன தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவந்தது. இதற்கு இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பு இருந்தது.


அமெரிக்கத் தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள் இதுதான்... 'இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் உள்ள ராணுவத்தினரை உடனே அகற்ற வேண்டும். போரின்போது தமிழர்கள் பலர் காணாமல்போனது கவலை அளிக்கிறது. இலங்கை அரசு நியமித்த நல்லிணக்கக் குழுவின் பரிந்துரைகளை முழுமை​யாக நிறைவேற்றும் திட்டம் இலங்​கைக்கு இல்லை. இலங்கைத் தமிழர்களுக்கு வாழ்வாதாரம், நீதி, நல்லிணக்கம் முழுமையாகச் செய்யப்படவில்லை. போர்க் குற்றம் தொடர்பாக இலங்கை அரசே விசாரணை நடத்த வேண்டும்.’ - இவைதான் அமெரிக்கத் தீர்மானத்தின் சாராம்சம்.


உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் சார்பில் இரண்டு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஈழத் தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆளாகி வருவது குறித்தும் போர்க் குற்றங்கள் குறித்தும் சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்ற கோரிக்கைகள் முக்கியமாக வலியுறுத்தப்பட்டன. ஆனால் இந்த இரண்டு கோரிக்கைகளையும் அமெரிக்கத் தீர்மானம் புறந்தள்ளிவிட்டதுடன், அதற்கு எதிராகவும் அமைந்துவிட்டது.


அமெரிக்கத் தீர்மானம் போர்க் குற்றங்கள் குறித்த சுதந்திரமான சர்வதேச நீதி விசாரணை என்பதை ஏற்கவில்லை. மாறாக இலங்கையே அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்கிறது.


இலங்கையின் வடக்கு மாநிலத்தில் சீர்திருத்த நடவடிக்கைகளும் மனித உரிமைகளும் நிலை​நிறுத்தப்பட வேண்டும் என அமெரிக்கத் தீர்மானம் வலியுறுத்துகிறதே தவிர, கிழக்கு மாநிலத்தைப் பற்றி எதுவும் கூறவில்லை. இதன் மூலம் கிழக்கு மாநிலம் சிங்களவர்களுக்குச் சொந்தமானது என மறைமுகமாக அமெரிக்கத் தீர்மானம் கூறுகிறது.


வடக்கு மாநிலத்தில் மாகாண சபைக்கான தேர்தல் சுயாதீனமாக நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கத் தீர்மானம் கூறுவது கொடுமையான வேடிக்கை. ஏனெனில் வடக்கு மாநிலத்தில் வாழ்ந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் சொந்த வீடுகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு இன்னமும் அகதிகளாக அலைந்து திரிகிறார்கள். தமிழர் பகுதிகளில் வேகமாகவும் தங்குதடையில்லாமலும் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுகின்றன. வடக்குப் பகுதி ராணுவமயமாகிவிட்டது. இந்தச் சூழ்நிலையில் சுதந்திரமான தேர்தல் எப்படிச் சாத்தியமாகும்? ஒரு போலியான தேர்தலை நடத்துவதற்கு சிங்கள அரசுக்கு அமெரிக்கத் தீர்மானம் உதவுகிறது.வெற்று வாக்குறுதிகள் நிறைந்த இந்தத் தீர்மானத்​தில் கூறப்பட்டவற்றை நிறைவேற்றுவதற்கு சிங்கள அரசுக்கு ஓர் ஆண்டு கால அவகாசத்தை அமெரிக்கத் தீர்மானம் அளித்திருப்பது அவல நகைச்சுவையின் உச்சக்கட்டம். கடந்த ஆண்டு நடந்த மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இதைப் போல ஓர் ஆண்டு கால அவகாசம் சிங்கள அரசுக்கு அளிக்கப்பட்டபோது எத்தகைய நிவாரண நடவடிக்கைகளும் அங்கு நடைபெற​வில்லை.


கடந்த ஆண்டு இலங்கை அரசுக்குக் கொடுக்கப்பட்ட அவகாசத்தில் மேலும் மேலும் தமிழர்களுக்குக் கொடுமைகள் இழைக்கப்​பட்டனவே தவிர, நிலைமை சிறிதளவுகூட மாறவில்லை. இப்போது இன்னும் ஓர் ஆண்டு கால அவகாசம் அளிப்பது எஞ்சியுள்ள தமிழர்களை முற்றிலுமாக அழிப்பதற்கே உதவும். அமெரிக்கத் தீர்மானத்தை இலங்கை எதிர்ப்புத் தீர்மானம் என அழைப்பது மிகத் தவறானதாகும். உலகக் கண்டனத்தில் இருந்து இலங்கையைக் காப்பாற்றும் தீர்மானமே அது.அமெரிக்கத் தீர்மானம் குறித்து நடைபெற்ற விவாதத்தில் இந்தியாவின் பங்கு என்பது சூழ்ச்சிகர​மானது. தான் நேரடியாக சம்பந்தப்படாமல் பின்னணியில் இருந்து இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்காவின் தீர்மானத்தை வடிவமைத்தது இந்தியாதான். இலங்கைப் பிரச்னை சம்பந்தமாக இலங்கை அரசுடன் பேசுவதற்கு வழக்கமாக அனுப்பப்படும் பிரதமரின் ஆலோசகர் சிவசங்கர​மேனன் இம்முறை அனுப்பப்படவில்லை


. மாறாக அரசாங்கத்துடனோ காங்கிரஸ் கட்சியுடனோ எந்தவிதத்திலும் சம்பந்தப்படாத சுப்பிரமணியன் சுவாமியை, இந்திய அரசு தனது தூதுவராக இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் அனுப்பியது. அவர் சென்று இந்தியாவின் கருத்தோட்டத்துக்கு ஏற்ப அமெரிக்கா தனது தீர்மானத்தை உருவாக்குவதற்குக் காரணமாக இருந்தார். சுப்பிரமணியன் சுவாமி ஒரு தனி நபர். 


 ஆனால் இலங்கை அதிபர் ராஜபக்ஷே, அமெரிக்காவின் வெளியுறவுத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் ஆகியோரை அவர் சந்தித்துப் பேசிய விவரங்கள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. ஒரு தனி நபருக்கு இவ்வளவு செல்வாக்கு அரசு வட்டாரங்களில் இருக்க முடியாது. இந்தியாவின் சார்பில் அவர் சென்றார் என்பதினால்தான் அவரைச் சந்தித்துப் பேச, இலங்கை, அமெரிக்க அரசு உயர் மட்டத்தினர் முன்வந்தனர்.அது மட்டுமா? நாடாளுமன்றத்தில் முலாயம்சிங் யாதவ் போன்றவர்கள் இந்திய அரசின் இலங்கைக் கொள்கையைக் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். ஆனால், இப்போது அவர்கள் மாறிவிட்டனர். இதற்குப் பின்னணி என்ன? இந்தியாவில் இலங்கைத் தூதுவராக இருக்கும் பிரசாத் கரியவாசம், முலாயம் சிங் மற்றும் பல்வேறு வட மாநில முதல்வர்களை எல்லாம் சந்தித்துப் பேசி சிங்கள அரசின் நிலைக்கு ஆதரவாக அவர்களை மாற்றியிருக்கிறார். வெளிநாட்டுத் தூதுவர் ஒருவர் டெல்லியைவிட்டு வெளியேச் செல்ல வேண்டுமானால்கூட இந்திய அரசின் அனுமதி தேவை. மாநில முதலமைச்சர்களைச் சந்திப்பதற்கும் இந்திய அரசு அனுமதிக்க வேண்டும். ஆக, இந்திய அரசுதான் அவருக்கு இத்தகைய ஆலோசனைகளை வழங்கி, எதிர்க்கட்சித் தலைவர்களையும் முதல்வர்களையும் சந்தித்துப் பேசச் செய்திருக்கிறது.    ஒட்டுமொத்தத் தமிழகத்தின் கடும் எதிர்ப்பும், இதுவரை கூட்டணிக் கட்சியாக இருந்த தி.மு.க. வெளியேறியதும் மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுத்தவில்லை. அதைப்போல, உதட்டளவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசும் அமெரிக்காவும் இந்தப் பிரச்னையில் இரட்டை வேடம் போடுகிறது. அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளின் நிலைப்பாடு என்பது ஈழத் தமிழர் பிரச்னையைப் பயன்படுத்தி இலங்கை அரசை மிரட்டி சீனாவிடமிருந்து பிரிக்க நினைக்கிறது.இலங்கையிலும், குறிப்பாக இந்துமாக்​கடலிலும் சீனாவின் ஆதிக்கம்  ஏற்படுவது தன்னுடைய உலகளாவிய நலன்களுக்கு எதிரானது என அமெரிக்கா கருதுகிறது. இந்தியாவும் தனது தென்னாசிய நலன்​களைப் பொறுத்தவரையில் சீனாவின் தலையீட்டை விரும்பவில்லை. எனவே, அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து இந்தப் பிரச்னையைப் பயன்படுத்தி ராஜபக்ஷே அரசுக்கு நெருக்குதல் கொடுத்து, சீனாவின் பிடியிலிருந்து அவரை மீட்பது ஒன்றே அவர்களது நோக்கம். ஏனெனில், அமெரிக்காவின் இந்துமாக் கடலின் நலன்களும் இந்தியாவின் பிராந்திய அரசியல் பொருளாதார நலன்களும் முக்கி​யமே தவிர, ஈழத் தமிழர்களின் வாழ்வு அவர்களுக்கு முக்கியமல்ல.ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலை, போர்க் குற்றம், மனித உரிமை மீறல் ஆகியவை குறித்து எவ்வளவோ உண்மைகளை வெளிப்படுத்தியும்கூட, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தங்களின் அரசியல், பொரு​ளாதார நலன்களை மட்டுமே மனதில்கொண்டு ராஜபக்ஷேவின் ரத்த வெறிக்கு ஈழத் தமிழர்களைக் காவு கொடுக்கத் துணிந்துவிட்டன என்பதைத்தான் அமெரிக்கத் தீர்மானம் எடுத்துக்காட்டுகிறது.


எனவே, இது கண்டனத் தீர்மானம் அல்ல... கண்துடைப்புத் தீர்மானம்!


நன்றி - ஜூ வி

Thursday, March 07, 2013

பாலியல் பலாத்கார பாரதம் - தமிழருவி மணியன் -ன் ஜூ வி கட்டுரை

காதல் அறியாக் காதலர்கள்!

காதலே என்னு​டைய மதம்’ என்றான் கவிஞன் கீட்ஸ். 'காதலிக்​காமல் உயிர் வாழ்வதைவிட, காதலில் தோற் றுப்போவது உயர்வானது’ என்று வாக்குமூலம் வழங்கினான் டெனிசன். 'காதல் கண்களில் இல்லை. அது காதலிப்பவர் இதயத்தில் இருக்கிறது’ என்று கண்டறிந்து சொன்னான் ஷேக்ஸ்பியர். 'காதல் செய்வீர் உலகத்தீரே’ என்று உரத்த குரலில் அனைவரையும் கூவி அழைத்தான் பாரதி. ஆனால், அவர்கள் சொன்ன காதல் இன்றைய இளைய சமூகத்திடம் காணாமல் போய்விட்டது. இப்போது பார்க்கும் இடமெங்கும் உள்ளக்கலப்பின்றி, உடற்கலப்பில் உருக்குலையும் காமமே 'காதல் முகமூடி’ அணிந்து காட்சி தருகிறது. காரைக்கால் வினோதினி, ஆதம்பாக்கம் வித்யா, சீர்காழி மதியழகி ஆகியோர் மீது அமிலமும் பெட்ரோலும் ஊற்றி அவர்களுடைய அழகைச் சிதைத்து, உயிரைப் பறித்த இளைஞர்கள் காதலாகிக் கசிந்துருகியவர்களா? விலங்கினும் கீழான இழிமக்கள் இல்லையா இவர்கள்? காதல்... அன்பில் சுருதி கூட்டும் ஆன்ம ராகம். காமம்... சரீரத்தின் மேடு பள்ளங்களில் சரிந்து விழும் சபலத்தின் தாளம். காதல் தன்னிடம் உள்ள அனைத்தையும் அர்ப்பணித்துவிடும் தேவதை. காமம் தன் அகோரப் பசிக்குச் சகலத்தையும் சுயநலமாய்ப் பறித்துக்கொள்ளும் சாத்தான். இந்த அழிவை உருவாக்கும் சாத்தானுக்குத்தான் இன்று ஊரெங்கும் உற்சவம்.


மனித மனதில் தோன்றும் பல்வேறு உணர்ச்சிகளில் மிகவும் வலிமையானதும், கட்டுக்குள் அடங்காததும் பாலுணர்ச்சியே. அதை முழுவதுமாக அழிக்க முனைந்தால், கடுமையான எதிர்வினைகளைச் சமூகம் சந்திக்க நேரிடும். நெறிப்படுத்தப்படாத விலங்குணர்ச்சியாக அது வெளிப்படும்போது, குடும்ப உறவுகளும், சமூகக் கட்டுமானமும் முற்றிலுமாகச் சிதைந்துபோகும். தனிமனிதன் சமூக மனிதனாக வாழ்வதற்கு, நம் முன்னோர்கள் பற்பல வழிகளில் சிந்தித்துப் பண்பாட்டு விழுமியங்களை வளர்த்தெடுத்தனர். கட்டுப்பாடற்ற பாலுணர்ச்சியும், பண்பாட்டு விழுமியங்களால் வேலியிடப்பட்ட சமூக உணர்ச்சியும் எந்நாளும் பொருந்திப்போகாது. மனிதர்களை அலைக்கழிக்கும் இந்த இருநிலைப் போக்கால் உளப்போராட்டம் (Psychical conflict) உருவாகி விடுகிறது.


காதல் என்ற பெயரால் அமிலம் வீசியவர்கள் பண்பாட்டு வேலியைத் தகர்த்து அத்துமீறிய பாலு ணர்ச்சியால் பாதிக்கப்பட்ட மனநோயாளிகள். 'மனித இனமே நோய்வாய்ப்பட்டிருக்கிறது’ என்றார் உளவியல் தந்தை ஃபிராய்ட். நாம் அனைவரும் ஒருவகையில் நோயாளிகளே. அளவில் வேறுபட்டவர்கள். அவ்வளவுதான். பாலுணர்ச்சி நோய்க்கு மனக்கட்டுப்பாடு ஒன்றுதான் மருந்து என்று அனுபவத்தில் தெளிந்தவர்கள் நம் பாட்டன்மார்கள்.


உடலின்பமும் மனநிறைவும், பாலுணர்ச்சியால்தான் வாய்க்கப்பெறுகிறது. அதனால்தான், அதுவே நம் வாழ்வின் ஆதாரமாகி விட்டது. காலம் காலமாகக் குடும்ப உறவுகளும், சமூக உறவுகளும் பாலுணர்ச்சியின் மூலமே கட்டமைக்கப்படுகின்றன. 'பாலுணர்ச்சியே மனிதகுல இயக்க ஆற்றலாக இருக்கிறது’ என்பதுதான் ஃபிராய்டின் அடிப்படைக் கோட்பாடு. பாலுணர்ச்சியே மாந்தரின் பெருவேட்கை​யாகப் பரிணமிக்கிறது. உள்ளத்தை உருக்குலைக்கும் அந்த வேட்கை நிறைவேற முடி யாத நிலையில் உண்டாகும் இறுக்கமே, விபரீத விளைவுகளில் உந்து சக்தியாகிறது.


 வேட்கைக்கான வடிகால் சமூக ஒழுக்கங்களாலும், சட்டங்களாலும் அடைபடும்போது பாலுணர்ச்சி பால் வெறி யாகி விடுகிறது. அந்த வெறியே உறவுகளின் விதிக்கோட்டை தகர்த்துவிடும் இழிகாமமாகக் கனன்று எரிகிறது. கோவையில், சகோதரிக்குப் பிறந்த சின்னஞ்சிறு பிஞ்சை தாய்மாமனே சீரழித்ததற்கு இந்த இழிகாமமே காரணம். பாலுணர்ச்சியில் இருந்து விடுபட்டு விலகி நிற்க நாம் அனைவரும் விவேகானந்தராவது எளிது இல்லை. அதேநேரத்தில், வேட்கை வெறியாகிக் காமத்தில் கரிந்துபோவதும் வாழ்வு இல்லையே. நமக்கிருக்கும் ஒரே வழி காமத்தைக் காதலாக்குவதுதான். பப்களின் வாசல்களில் தற்காலிகத் துணைக்குத் தவிப்புடன் தவமிருப்பதும், உடல் தினவைத் தணிக்க ஊர் பேர் தெரியாத ஒரு பெண்ணைப் 'பிக்அப்’ செய்வதும், 'பார்ட்டி’களில் கட்டிப்பிடித்து ஆட்டம்போட்டு, விட்டுப்பிரிந்து வீடு திரும்புவதும், உடனடி நட்பு - உடனடிப் பிரிவுக்காக 'டேட்டிங்’ குறிப்பதும், காதல் இல்லை - கல்யாணம் இல்லை - கண்ணீர் விடுவதற்கு வாய்ப்பே இல்லை என்று தத்துவம் உதிர்ப்பதும், திருமண பந்தம் இல்லாமலே மனச்சான்றின் உறுத்தலின்றிப் படுக்கையைப் பகிர்ந்துகொள்வதும், 'பல இரவுகள்’ பார்த்துவிட்டு 'முதல் இரவு’ கொண்டாடுவது எந்த வகையிலும் வாழ்க்கையாகாது. 'நம் இளைஞர்களுக்கு ஷேக்ஸ்பியர் தெரியும்; ஷெல்லி தெரியும்; ஜேம்ஸ்பாண்ட் தெரியும்; கெட்டழிந்த பின்புதான் பட்டினத்தார் புரியும்’ என்று கண்ணதாசன் சொன்னது ஆழ்ந்த அர்த்தமுள்ள வாசகம்.புதுடில்லியில் நள்ளிரவில், ஓடும் பேருந்தில் 23 வயது நிரம்பிய, மருத்துவம் பயின்ற ஜோதி சிங் பாண்டே, காமவெறி பிடித்த மனித மிருகங்களால் வன்புணர்ச்சிக்கு இரையான செய்தி ஊடகங்களின் உதவியால் நாடு முழுவதும் சேர்ந்த பின்புதான் மத்திய - மாநில அரசுகளின் உறக்கம் கலைந்தது. வர்மா கமிட்டி அமைக்கப்பட்டது. மத்திய அரசு அவசர சட்டம் இயற்றியது. பாலியல் பலாத்காரம் செய்யும் பாவிகளுக்குத் தூக்கு தண்டனையா? ஆயுள் தண்டனையா? என்ற விவாதம் எழுந்தது. இதற்குப் பிறகும் பாலியல் குற்றங்கள் குறைந்த பாடில்லை. மரண தண்டனை இந்த மண்ணில் இருப்பதனாலேயே படுகொலைச் சம்பவங்கள் இல்லாமற் போய்விட்டனவா? நுகர்பொருள் கலாசாரம் இங்கு கொண்டுவந்து சேர்த்திருக்கும் 'எல்லாவற்றையும் எப்படியாவது துய்க்க வேண்டும்’ என்ற மனவிழைவும் வேட்கையும் வளரும் வரை குற்றங்கள் குறைய வாய்ப்பே இல்லை.பிறக்கும்போது மனித மனம் வெற்றுத்தாளாகவே விளங்குகிறது. காலநடையில் இந்த வெற்றுத்தாளில் புலன் சார்ந்த அனுபவங்கள் சிறிது சிறிதாகப் பதிவாகி, அவற்றிற்கேற்பவே நடத்தைகள் உருப் பெறுகின்றன என்கிறது உளவியல். பெற்றோர், ஆசிரியர், கல்விக்கூடம், குடும்ப உறவு, சமூகச் சூழல், ஊடகம் என்று ஒவ்வொரு திசையிலிருந்தும் வந்து சேரும் பதிவுகளே தனிமனித நடத்தையை நிர்ணயிக்கின்றன. 


 மனம் சார்ந்தவன்தான் மனிதன். மனதை நலமாக வைத்துக்கொள்வதுதான் நமக்கு இருக்கும் ஒரே வழி. நமக்கு வாய்த்திருக்கும் அரசுகளோ, கருவூலத்தை நிரப்பும் அவசரத்தில் நம் பண்பாட்டைப் பள்ளம் தோண்டிப் புதைப்பதில் கவனம் செலுத்துகின்றன. அரசே தவறு செய்யத் தூண்டும். அதன் தூண்டுத​லால் தவறிழைப்பவனை அதுவே வெட்கமின்றித் தண்டிக்கும். 'உனக்கு நீயே ஒளி’ என்றார் புத்தர். நாம்தான் நமக்குரிய பாதையைத் தேர்ந்து கொள்ள வேண்டும்.காமம் வேறு... காதல் வேறு. இரண்டு நிமிட இன்பத்தில் காமம் முடிந்துவிடும். வாழ்வின் இறுதிநாள் வரை காதல் இல்லறத்தை இனிமையாக்கும். காதலுக்கென்ற தனியாக ஒரு நாள் கொண் டாடப்படுவதே அபத்தம். இன்றைய இளைஞர்கள் உண்மையான காதல் எதுவென்றறிய, கார்ல் மார்க்ஸ்-ஜென்னி, ஜெயப்பிரகாஷ் நாராயண் - பிரபாவதி காதல் வாழ்க்கையை அறிந்துகொள்வது அவசியம். இவர்கள் புராண - இதிகாசப் பாத்திரங்கள் இல்லை. எலும்போடும் சதையோடும் இந்த மண்ணில் வாழ்ந்து மறைந்தவர்கள்.உலகுக்கு 'மூலதனம்’ வழங்கிய கார்ல் மார்க்ஸ் தன் காதல் மனைவி ஜென்னியைச் சில நாட்கள் பிரிந்திருக்க நேர்ந்தபோது, அந்தப் பிரிவின் வலியைத் தாங்க முடியாமல் வரைந்த கடிதம் வரலாற்றுப் புகழ் வாய்ந்தது. 'உலகில் எத்தனையோ அழகிய பெண்கள் இருக்கின்றனர். ஆனால் என்னுள் எப்போதும் இனிய நினைவுகளை எழச் செய்யும் உன் அழகு முகத்தைப் போல் வேறொரு முகத்தை எங்கு என்னால் காணக்கூடும்? என் எல்லையற்ற துன்பங்களையும், ஈடுசெய்வதற்கு இயலாத இழப்புகளையும், என்னை உள்ளிருந்து வாட்டும் வேதனைகளையும் உன் இனிய முகத்தில் முத்தமிடும்போது முற்றாக மறந்து விடுகிறேன். உச்சி முதல் உள்ளங்கால் வரை உன்னை நான் முத்தமிடுகிறேன். என்னருகில் நீ இருக்கும் தருணங்களில் கோபுரங்கள்கூட உயரமாகத் தெரிவதில்லை. உன் முன்பு நான் முழந்தாளிட்டுப் பணிகிறேன். உன் தாய்மையான இதயத்தை என் இதயத்துடன் நெருக்கமாக இணைத்துக்கொள்கிறேன். வார்த்தைகள் எதுவுமின்றி மௌனமாகிறேன்’ என்று தன் ஆழமான காதலைக் கடிதத்தில் வெளிப்படுத்திய மார்க்ஸ், புற்றுநோயால் ஜென்னி மரணத்தை நெருங்கியபோது, அந்தக் கணத்தில் வாய்விட்டு அழுதார்.ஜென்னி, மார்க்ஸுக்காகவே வாழ்ந்தவர்; பிரபுத்துவக் குடும்பத்தில் பிறந்து, மார்க்ஸைக் காதலித்துக் கரம் பற்றியவர். காதல் கணவனுக்காக வறுமையை விரும்பி ஏற்றவர்; இறந்த குழந்தைக்குச் சவப்பெட்டி வாங்க முடியாத நிலையிலும் மார்க்ஸின் மனம் நோகப் பேசாதவர்; மார்க்ஸ் நடத்திய போராட்ட வாழ்க்கையின் வலிமை மிக்க பின்புலமாக இருந்தவர். அவன் கண்ணை மூடும்போதும், 'கார்ல் என் சக்தியை நான் பறிகொடுக்கிறேன்’ என்றுதான் இறுதியாகச் சொன்னார். ஜென்னி மரணித்தபோது, 'மார்க்ஸும் செத்துவிட்டான்’ என்றார் ஏங்கல்ஸ். ஜென்னியின் மறைவுக்குப் பிறகு, தளர்ந்துபோன மார்க்ஸ் 15 மாதங்களில் உலக வாழ்விலிருந்து விடைபெற்றுக் கொண்டார்.ஜெயபிரகாஷ் நாராயண் இளம் வயதில் பேரழகன். காதல் மனைவி பிரபாவதி, காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் தங்கிவிட, கல்வி பயில்வதற்கு அமெரிக்கா சென்ற ஜெ.பி-யின் அழகில் பல அமெரிக்க மாணவிகள் அவரைச் சுற்றிவந்தபோதும், அவர்களை ஏறிட்டும் பார்க்காதவர்; நாடு திரும்பியதும் தேசம் விடுதலை பெறுவதற்கு முன்பு தேக சுகம் காண்பதில்லை என்ற மனைவியின் விரதத்தை ஏற்றுக் காதலைக் கௌரவித்தவர். பரமஹம்ஸருக்காக சாரதா தேவியும், காந்திக்காக கஸ்தூரி பாயும் பிரம்மசரியம் ஏற்றனர். ஆனால், பிரபாவதிக்காக வாழ்நாள் முழுவதும் பிரம்மசரியம் பூண்டவர் ஜெ.பி. இறுதிவரை ஒரே அறையில் இரு படுக்கைகளில் தனித்தனியாக இரவைக் கழித்த ஆன்மநேயக் காதலர்கள் ஜெ.பி-யும் பிரபாவதியும். பிரபாவதி இறப்பைத் தழுவியபோது அனைவரையும் வெளியேற்றிவிட்டுச் சடலத்தின் பக்கத்தில் 15 நிமிடங்கள் தனியே அமர்ந்து அழுத ஜெ.பி., 57 ஆண்டுகள் தன் தாயாய், தோழியாய் உடனி ருந்து சேவை செய்த மனைவியை ஒருநாளும் மறந்ததே இல்லை. அவருடைய  படுக்கை அறையில் அவர் வைத்திருந்த ஒரே நிழற்படம் பிரபாவதியின் படம். அன்பிலே தோய்ந்து, அன்பிலே கரைந்து அன்புருவாய் வாழ்வதுதான் காதல் வாழ்க்கை என்று உணர்த்திய தம்பதி இவர் கள்.இன்றைய இளைஞர்கள் ஜெ.பி-யாய் வாழ வேண்டியது இல்லை. ஆனால், கார்ல் மார்க்ஸாய் காதல் வாழ்வு வாழ்வதில் என்ன தடை? காமம் சேர்ந்த பாலியல் குற்றங்களே இப்போது பெருகி வருகின்றன. 'காதலர் தினம்’ கொண்டாடும் இளைய சமூகம் உண்மைக் காதலின் உயர்வை அறியா மலேயே 'காதல்’ வசப்பட்டு, அவசரம் அவசரமாய் இச்சையைப் பூர்த்திசெய்து, உறவு கசந்த நிலையில் விவாகரத்துக்காக நீதிமன்ற வாசலில் நிற்கின்றனர். 'நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும். நான் காணும் உலகங்கள் நீயாக வேண்டும்’ என்று கசிந்துருகிக் காதல் வளர்க்கும் இருவரிடையே வாழ்க்கை எப்படி விரைவில் கசந்துபோகும்?பாலியல் குற்றங்கள் இல்லாத சமூகத்தில்தான் பெண் பாதுகாப்பாக வாழ முடியும். அந்தப் பாதுகாப்பை ஒருபோதும் சட்டத்தின் மூலம் சாதிக்க முடியாது. பெண் ஆணுக்குரிய போகப்பொருள் என்ற அழுக்குச் சிந்தனை ஆண்களின் மனதிலிருந்து முதலில் அகல வேண்டும். பெண்ணைக் கடவுளாகவும் போற்ற வேண்டாம்; அடிமையாகவும் நடத்த வேண்டாம்; சக உயிரியாக உணர்ந்து அன்புசெய்தால் போதும். பெண்ணைக் காமத்தோடு பார்க்கும் பார்வையில் இருந்து விடுபட ஊடகங்கள் உதவ வேண்டும். பாடத் திட்டங்கள் பள்ளிகளில் பிள்ளைகளின் பண்பாட்டை வளர்க்கும் விதத்தில் வடிவமைக்க வேண்டும். காதல் என்பது வெறும் காமம் இல்லை என்ற புரிதல் வரவேண்டும்.'காதல் என்பது இன்பம் அல்ல; பொறாமைப்​படுவதும் அல்ல; ஒருவர் மீது மற்றொருவர் செலுத்தும் அதிகாரமோ, ஒருவரையருவர் விரட்டியடிப்பதோ காதலாகாது. உடைமைத்​தனத்திலும், ஒட்டிக்கொள்வதிலும் உண்மையான காதல் இல்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஒரு யுத்தம் எப்போதுமே இருந்து வருகிறது. அவர்களில் ஒருவர் மற்றவர் மீது அதிகாரம் செலுத்த முயல்கிறார். விளைவு ஆணாதிக்கம் அல்லது பெண்ணாதிக்கம். இதுதான் காதலா? 'ஆம்’ எனில் காதலே ஓர் அர்த்தமற்ற வார்த்தைதான்’ என்று தெளிவுப்படுத்தும் தத்துவ மேதை ஜே.கிருஷ்ணமூர்த்தி சூத்திரம் போல் சொன்னதை நினைவில் நிறுத்துங்கள்...


'புகையிருக்கும் இடத்தில் ஒளியிருக்காது;
ஒளியிருக்கும் இடத்தில் புகையிருக்காது!

நன்றி - ஜூ வி 


Tuesday, January 01, 2013

கண்ணாடித்தூள் டூத் பேஸ்ட்! - ஒரு ஃபாரீன் கட்டுரையின் தமிழாக்கம்

புதுசு கண்ணா புதுசு

கண்ணாடித்தூள் டூத் பேஸ்ட்!

டாக்டர் ப்ரீதா அருண்

நம்பினால் நம்புங்கள்: பற்கள் பாதுகாப்பு மற்றும் சீரமைப்புக் குறித்த சிகிச்சை, சிந்து சமவெளி நாகரிகம் உருவானபோதே, தொடங்கிவிட்டது. இதோ, சில சமீபத்திய அயல் நாட்டுக் கண்டுபிடிப்புகள். இங்கே இவை அறிமுகமாக, குறைந்தபட்சம் இரண்டு வருடங்களாவது ஆகும்.
* நைசான கண்ணாடித் தூள் கலந்த டூத் பேஸ்ட் அமெரிக்காவில் பிரபலம். பற்கள் பாழாகாமல், கூசாமல் இருக்க உதவுவதோடு, பளபளப்பையும் தருகிறது.
* மேல் வரிசைப் பற்களில் கூடுதலான நேரம் பல்லின் வேரைச் சரிபார்க்க உதவும் வகையில், அனஸ்தடிக் ஸ்ப்ரே வந்து விட்டது. ஈறு நோய்களையும், பற்கள் சிதைவையும் தடுக்கும் மாயமந்திரம் போல் சிகிச்சை!
* கன்னச் சதையிலுள்ள செல்களைப் புதிய ஈறின் திசுக்களாக மாற்றலாம். கம் ஷீல்ட் என்ற ஈறு - மூடி, பற்கள் சரியான வரிசையில் இருக்க உதவும். இப்போது வர ஆரம்பித்திருக்கிற பிரேஸ்கள் போடுவது நல்லது.
* கீ-ஹோல் டென்டல் இம்ப்ளான்ட் சர்ஜரி, அதிகமாகத் துளை போடாமல், விரைவில் குணமடைய உதவும். அனஸ் தடிக் (மயங்கியிருக்கும்) நிலையை உடனடியாக மாற்ற வழி இருப்பதால், ஃபில்லிங் முடிந்தவுடன் மரத்துப் போன நிலை பல மணி நேரம் இருக்கத் தேவையில்லை.
* பற்களின் நிறத்திலேயே ஃபில் அப் கிடைத்தால், மேல் பூச்சு தேவையில்லை. புதிய வாய்ப் பாதுகாப்பு (மவுத்கார்ட்) கிடைக்கிறது. நீங்கள் மென்று தின்ன அதிகம் சிரமப்பட வேண்டாம். இது தசைக்குக் கூடுதல் பலம் தருகிறது.
* வாய் உமிழ்நீரை சோதனை செய்தால், கான்சர் முதல் டயபடீஸ் வரை, பல நோய்களைக் கண்டுபிடித்துவிடலாம். பற்கள் கெடுவதைத் தடுக்கும் பல அம்சங்கள் தேங்காய் எண்ணெயில் இருக்கின்றன.
பல் மருத்துவத்தில் சில சமீபத்திய முன்னேற்றங்கள்:
* மன-நலம், உடல் நலம் குன்றியவர்களுக்கும், வாய்ப்பகுதி சுத்தமாக இருக்க வேண்டும். முழு மயக்கத்தில், ஒரே அமர்வில், அவர்களுடைய பற்களுக்கு முழு சிகிச்சையும் தரும் யுக்தி யு.எஸ்., யு.கே. மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவி வருகிறது.
* குழந்தையின் முதல் பிறந்த நாளிலேயே பற்கள் பரிசோதனை செய்ய வேண்டும் என்று அமெரிக்க டென்டல் சங்கம் சொல்கிறது. குழந்தைகள் பற்களை தினசரி எவ்வாறு துலக்குவது என்று கற்றுத் தருவார் பல் மருத்துவர். அதற்குத் தனி அப்பாயின் மெண்ட் உண்டு.

* லேசர் டென்டிஸ்ட்ரி வந்தபிறகு, பற்களுக்கான சர்ஜரியில் ரத்த சேதம் குறைவு. உடனடி பலன் தெரியும்; தையல் தேவையில்லை. பாக்டீரியா தொற்று இருக்காது. அருகிலிருக்கும் திசுக்களுக்குப் பாதிப்பு குறைவு. காயம் விரைவில் ஆறி விடும்.
* காஸ்மெடிக் சர்ஜரி அழகான புன்னகைக்கு வழிவகுக்கிறது. பற்களை வெளுக்க, இணைக்க, பீங்கான் தொழில் நுட்பம் பயன்படுத்த, அழகற்ற புன்னகையை அற்புதமான புன்னகையாக்க இரண்டே இரண்டு விசிட் போதும்!
* கிளினிக்கிலோ, வீட்டிலோ பற்களை வெளுப்பாக்கிக் கொள்ளலாம். வீட்டில் வசதியாகச் செய்து கொள்ளலாம். 2 - 3 வாரங்கள் ஆகும், அவ்வளவுதான்.
* இடைவெளியை மறைக்கவோ, பற்களின் நிறத்தை மாற்றவோ பயன்படுத்தப்படும் பசைபான்டிங்’. ஒருமுறை கிளினிக்குக்குப் போனால் போதும்.
* உடைந்த, கோணல்மாணலான பல் வரிசையைச் சீராக்க, பீங்கான் அல்லது பிளாஸ்டிக் சிமென்ட் பூச்சு உதவும். இதற்கு அனஸ்தீசியா தேவையில்லை. பான்டிங் செய்து கொண்டவர்களுக்கு பளபளப்பு அதிக நாள் நீடித்திருக்கும்.
* லேசர் சிகிச்சை, பான்டிங், நிற மாற்றம் தவிர, பொதுவாகவே பல் வைத்தியத்துக்கு உதவுகிறது. கிரௌன் எனப்படும் செராமிக் மூடி இயற்கையாகவும் இருக்கும்; நீண்ட நாள் உழைக்கும்.
* ஈறு நோய் பற்கள் இழக்கக் காரணமாக இருக்கிறது. இதற்கான சிகிச்சை லேசரில் செய்யப்படுகிறது. ஈறு நோய் வராமல் தடுக்க, இரண்டு வேளை பிரஷ் செய்ய வேண்டும். பற்களுக்கு இடையே உள்ள இடைவெளியில் நன்றாக கொப்பளித்துத் துலக்க வேண்டும். ஜங்க் ஃபுட் கூடாது. நல்ல சத்தான உணவு உண்ண வேண்டும். ஆறு மாதத்துக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
தமிழில்: சாருகேசி
படங்கள்: ‘க்ளிக்ரவி


நன்றி - கல்கி 

Sunday, July 01, 2012

என் முதல் தொலைக்காட்சி அனுபவம்! - சுஜாதா

http://b.vimeocdn.com/ts/148/621/14862184_640.jpgஸ்ரீரங்கத்துக்கு டெலிவிஷன் அம்பதுகளிலேயே வந்துவிட்டது என்று சொன்னால் நம்பமாட்டீர்கள்! தெற்கு உத்தர வீதியில் ‘தி ரங்கநாதா ரேடியோ அண்ட் டெலிவிஷன் டிரெயினிங் இன்ஸ்டிடியூட்’ என்ற போர்டு திடீர் என்று தோன்றியது. ‘ப்ரொப்: அண்ணாசாமி ஸி அண் ஜி லண்டன்’ என்று அடி வரியில் இருந்தது. நான் அப்போது எம்.ஐ.டி’யில் எலெக்ட்ரானிக்ஸ் படித்துவிட்டு மூன்றாம் ஆண்டு கடைசி செமஸ்டரில் ப்ராஜெக்ட் படலத்தில் ஜாலியாக இருந்தேன்.


ரங்கு கடையில் இதுபற்றித் தீவிர சர்ச்சை நடந்தது. ‘‘இண்டியாவிலேயே டெலிவிஷன் கெடையாது. எப்டிரா ஸ்ரீரங்கத்தில் மட்டும் வரும்?’’


‘‘வரும்ங்கறாரே! அண்ணாசாமி சொல்றார்… அமெரிக்காவில் காட்டறது நமக்கும் தெரியறதாம்.’’

‘‘புளுகுடா. நீ என்னடா சொல்றே… எலெக்ட்ரானிக்ஸ் படிச்சிருக்கியே?’’

‘‘சான்ஸே இல்லை!’’ என்றேன்.

‘‘அவர் வந்தா கேட்டுருவமே.

பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்காராமே… ஆள் எப்படி?’’

‘‘சுமார் முப்பது வயசிருக்கும். லேசா தொந்தி முன்&னற்க வழுக்கை. சம்பா சம்பான்னு ஒரு பொண்ணு. சித்துப் பண்ணி வெச்சாப்பல இருக்குமே, நீங்கள்ளாம் பயங்கரமா சைட் அடிச்சிண்டிருந்தீங்களே… அவளைக் கல்யாணம் பண்ணிண்டிருக்கார்’’ என்றான் ரங்கு.’’


‘‘அமெரிக்கால படிச்சிருக்காராம். அதனால வயசு வித்தி யாசம் ஜாஸ்தியா இருந்தாலும் ஒத்துண்டிருக்கா.’’


‘‘இதைவிட அநியாயம் உண்டா ரங்கு?’’ என்று தம்பு ஆத்துப் போனான். தம்பு ஒரு காலத்தில் சம்பாவைக் காதலித்தவன்.


ஒரு முறை தெற்கு வாசலுக்கு கோயில் வழியாகப் போகாமல் தெற்கு உத்தர வீதி வழியாகச் சென்றபோது, அந்த போர்டைப் பார்த்தேன். வாசலில் பையன்கள் கோடுகிழித்து வீதி கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந் தார்கள். பெரிய திண்ணையுள்ள அகலமான வீடு. போர்டு புதுசாக எழுதியிருந்தது. அதை வெளிச்சம் காட்ட பல்பெல் லாம் இருந்தது. நெற்றியில் எலுமிச்சை > பச்சைமிளகாய் வைத்துக் கட்டியிருந்தது.


‘‘அது என்னடா ஸி அண்ட் ஜி? ஓமியோபதியா?’’ என்றான் ரங்கு.


‘‘இல்லை ரங்கு. சிட்டி அண்ட் கில்ட்ஸ்னு லண்டன்ல ஒரு இன்ஸ்டிடியூட் நடத்தற பரீட்சை. ஏ.எம்.ஐ.இ. மாதிரி இதும் ஒரு பரீட்சை. பாஸ் பண்ணியிருக்கலாம்.’’


‘‘அதில் டெலிவிஷன் எல்லாம் கத்துத் தருவாளோ?’’


‘‘இருக்கலாம். அதனால அப்படி போர்டு போட்டுண்டு இருக்கலாம். ஆனா, ஸ்ரீரங்கத்தில் டெலிவிஷன் கிடையாது; தெரியாது!’’


அவரே ரங்கு கடைக்கு ஒருமுறை வந்திருந்தார். ‘‘ரங்கு, இன்சுலேஷன் டேப் இருக்குமா?’’

‘‘இல்லை. அது கறுப்பா சேப்பான்னு கூட தெரியாது!’’


‘‘கறுப்பு. இதெல்லாம் கடைன்னா வாங்கி வெச்சுக் கணும்.’’

‘‘எப்படி இருக்கும்?’’


‘‘தொட்டா ஒரு பக்கம் ஒட்டிக்கிறா மாதிரி இருக்கும். ஒயருக்கு கனெக்ஷன் கொடுக்கறப்ப, ஷாக் அடிக்காம இருக்க டேப் சுத்தணும்.’’

ரங்கு தன் தொழில்நுட்ப அறிவை அதற்குமேல் விருத்தி செய்ய விரும்பவில்லை.

‘‘அண்ணாசாமி… என்னமோ சொல்றா, உங்காத்தில டி.வி>யெல்லாம் இருக்காமே?’’

‘‘ஒரு தடவை வந்து பாரேன்…’’

‘‘நான் எங்க கடையை விட்டுட்டு வரது!’’

‘‘ஆமா, வியாபாரம் அப்படியே தட்டுக்கெட்டுப் போறது. ஈ ஓட்டிண்டிருக்கான். போய்ப் பார்த்துட்டுத்தான் வரலாமே!’’ என்றான் தம்பு. அவனுக்கு சம்பாவை பார்க்க வேண்டும்.

‘‘சம்பா சௌக்கியமா மாமா?’’

‘‘டேய்! மாமா இல்லைடா அவர். சரி அண்ணா வரேன். அதென்னதான் சமாசாரம்னு புரியறா மாதிரி சொல்லும். என்னவோ பேசிக்கிறா… அம்மணக்குண்டி பொம்மையெல்லாம் தெரியறதாம்!’’

‘‘சேச்சே… அதெல்லாம் இல்லை!’’

‘‘பின்ன என்னதான் வெச்சிருக்கீர்?’’

‘‘எதிர்காலத்தில இண்டியா வுக்கு டெலிவிஷன் வரத்�

��ான் போறது. இப்பவே டெல்லில பரீட்சார்த்தமா ஆரம்பிச்சிருக்கா. அது நாடு முழுக்கப் பரவினதும் டி.வி. ரிப்பேர் செய்ய நெறைய பேர் தேவைப்படுவா. அதை எதிர் கொள்ள நம் இளைஞர்களைத் தயார் பண்ணப் போறேன். இப்பவே சேந்தா சலுகைல கத்துத் தருவேன்.’’

‘‘எத்தனை?’’ என்றான் ரங்கு.

‘‘அவாவா வசதிக்கு ஏத்தாப்பல.’’

‘‘இதா&ன வேணாங்கறது. சில்றை எத்தனை… கரெக்டா சொல்லுமேன்.’’

‘‘ஏழையா இருந்தா இலவசமா கூட சொல்லித் தருவேன். முதல் பாடம் ஃபண்டமெண்டல்ஸ் ஆஃப் டெலிவிஷன், எல்லாருக்கும் இலவசம்!’’

‘‘பொம்மை தெரியுமா?’’

‘‘கட்டாயம்.’’

ரங்கு என்னைப் பார்த்தான். ‘‘நான்கூட சேரலாம் போலி ருக்கே. தம்பு சேர்றியா?’’

‘‘ஒரு நாள் போய்த்தான் பார்க்கணும்டா!’’ என்றான். ‘‘உன்னைக் கேட்டா டி.வி. கிடையாதுங்கறே?’’

எம்.ஐ.டி>யில் மூன்றாம் வருஷத்தில் எனக்கு பாடத்தில் டி.வி. உண்டு. அது வி.எச்.எஃப். அலைவரிசையைப் பயன்படுத்துவதும் லைன்ஆஃப் சைட் பற்றியும் படித்திருக்கிறேன். அதை ரங்குவுக்கு விவரிக்க முற்பட்டேன்.

‘‘எல்லாம் சரி. நீ நிஜ டி.வி. பார்த்திருக்கியா?’’

நிஜ டி.வி-யை ஒரு தடவைதான். சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொன்விழாக் கண்காட்சியின்போது பிலிப்ஸ்காரர்கள் கிண்டி இன்ஜினீயரிங் காலேஜில் ஒரு க்ளோஸ் சர்க்யூட் டி.வி. வைத்திருந்தார்கள். ஒரு ரூமில் காமிரா, மறு ரூமில் ரிசீவர் வைத்திருந் தார்கள். வந்திருந்த பெண்களையெல் லாம் காட்டினார்கள். கூட்டம் அலைமோதியது. ஒரு மணி நேரம் காத்திருந்ததால் திடுக்கிட்ட முகங்கள் தெரிந்தன.

ரங்குவுடன் தெற்கு உத்தர வீதிக்கு ஒரு நாள் சாயங்காலம் போயிருந்தேன். வாசலில் தெற்குச் சித்திரை வீதியுடன் பென்சில் மாட்ச் ஓடிக் கொண்டிருந் தது. நாங்கள் போனபோது பால்காரன் வந்து மடியில் தண்ணியடித்து பால் கறப்பதற்காக உருவிக் கொண்டிருந் தான். இடைவேளை விட்டிருந்தார்கள்.


அண்ணாசாமி, ‘‘வாங்க வாங்க… சம்பா காபி போடு!’’ என்று வரவேற் றார். உத்தர வீதிக்கு சாதாரணமாக நாங்கள் அதிகம் போகமாட்டோம். அவை எல்லாம் எங்களுக்கு அரைவீதிகள். ஒரு பக்கம்தான் வீடு. எதிர்ப்பக்கம் கோயிலின் மதில். முள்ளுச் செடியாக இருக்கும். எத்தனைதான் சொன்னாலும் யாராவது ஒருவர் அல்பசங்க்யைக்கு ஒதுங்கிவிடுவார்கள். மேலும் அந்த நாட்களில் மதில் சிதில நிலையில் இருந்ததால், தலைமேல் விழுந்துவிடும் பயமும் இருந்தது. ஆனால், கிரிக்கெட்டுக்கு ஒரு சாரி இல்லாததால் ஏகாந்தமான இடம்.‘‘மாமா மண்டி போட்டுண்டு க்ளான்ஸ் பண்றப்ப மார்ல பட்டா எல்.பி. கொடுக்கலாமா மாமா?’’ என்று என்னை ஒரு சிறுவன் வந்து கேட்டான்.

எனக்கு உட&ன சொல்லத் தெரிய வில்லை. அண்ணா, ‘‘வாங்க வாங்க’’ என்று வரவேற்று, சலுகையாக பனியன் போட்டுக் கொண்டார். உள்ளே சென்றோம்.

‘‘ஈயம் பூசறீங்களா என்ன?’’

‘‘இல்லை சால்டிரிங்’’ என்றார்.

ஒரு ரேடியோ கவிழ்த்துப் பிரிக்கப்பட்டு, உள்ளே கசகச வென்று பார்ட்டுகளுடன் கிடந்தது. அதன் ஐ.எஃப். டிரான்ஸ்ஃபார்மரை ஒரு குட்டிப் பையன் பலகை மேல் நின்று சீண்டிக் கொண்டிருந் தான்.


என்னவோ சத்தங்கள் கேட்டன.


இந்த ஓரத்தில் நிர்வாணமாக ஒரு ஸ்பீக்கர் வைத்து, ரேடியோவின் பல பாகங்கள் பரவலாக இருக்க… விந்தையாக அதில் கரகரப்ரியாவில் ஒரு மாமி ‘பக்கல நிலபடி’ பாடிக் கொண்டிருந்தாள். ‘ஆர்.எஃப். ஆம்ப்ளிஃபையர்’ வெச்சா எல்லா ஸ்டேஷனும் கேக்கும்!’’ என்றார் அண்ணா.


‘‘எங்கய்யா உம் டெலி விஷன்?’’

ஜமக்காளத்தால் மூடியிருந்த ஒரு வஸ்துவைக் காட்டினார். ‘‘அதுக்குள்ள இருக்கு. பசங்க கிரிக்கெட் ஆடிண்டிருக்கான்… முடிக்கட்டும். பந்து அடிச்சா பிக்சர் டியூபு உடைஞ்சுடும்!’’


‘‘அதுல பொம்மை தெரிய�

��மா?’’ என்றான் ரங்கு.

‘‘ஆமா.’’

‘‘என்ன புருடா விடறீர்?’’ என்று என்னைப் பார்த்தான். ‘‘ஏய் நீ பொம்மை வராதுன்னுதா&ன சொல்றே?’’


‘‘ஆமா…’’ என்றேன்.

‘‘டி.வி. ஸ்டேஷ&ன இல்லாம எப்டி ஓய் பொம்மை தெரியும்? இப்ப ரேடியோவுக்கு, ரேடியோ ஸ்டேஷன் வேணும். டி.வி-க்கு டி.வி. ஸ்டேஷன் வேணுமா, இல்லையா… நீ என்னடா சொல்றே?’’


‘‘நிச்சயம் வேணும். நான் படிச்சபடி நிச்சயம் வேணும்!’’ என்றேன்.


அண்ணா என்னைப் புன்னகையுடன் பார்த்தார். ‘‘அவ்வளவுதான் நீ படிச்சது. நீங்கள்ளாம் ஏட்டுச்சுரைக் காய். டெர்மன் போட்டிருக் கறதை அப்படியே நெட்ரு. நான் பிராக்டிக்கல். இந்த ரேடியோவைப் பார்த்த இல்லை… இது முழுக்க நா&ன அசெம்பிள் பண்ணது. டிரான்ஸ்ஃபார்மர் நா&ன சுத்தினது. டிராக்கிங், அலைன்மெண்ட், ட்யூனிங் எல்லாம் நான் பண்ணது. உன்னால முடியுமா சொல்லு! எங்கிட்ட ஹாம் லைசென்ஸ் இருக்கு.’’


நான் பிடிவாதமாக, ‘‘டி.வி. ஸ்டேஷன் இல்லாம டி.வி. தெரியாது!’’ என்றேன்.


‘‘அப்டின்னு நினைச்சிண்டிருக்கே. நீ கத்துக்க வேண்டியது நிறைய இருக்குப்பா.’’


ரங்கு, ‘‘ஓய் அவன் டி.வி. எல்லாம் படிச்சவன். எதுக்கு ஊரை ஏமாத்திண்டு, வாண்டுப் பசங்களுக்கெல்லாம் டி.வி. சொல்லித் தரேன்னு, ஒரொரு கிளாஸ§க்கும் அஞ்சு ரூபா வாங்கறிராமே?’’


‘‘ரங்கு, நான் கொடுக்க வசதியுள்ள வாகிட்டதான் வாங்கறேன். என் கரிகுலம் பாரு முதல்ல. டி.வி. ப்ரின்சிப் பிள். அப்புறம் பிராக்டிக்கல். சால்டரிங், பென்ச் வைஸ், கார்ப்பெண்டரி அப்புறம் காயில் சுத்தறது. பார்க் ரேடியோ, பஞ்சாயத்து ரேடியோவெல் லாம் ரிப்பேருக்கு இங்கதான் வரது.’’நான் பிடிவாதமாக ‘‘டி.வி. ஸ்டேஷன் இல்லாம டி.வி. தெரியாது!’’ என்றேன்.


‘‘முதல்ல அது என்ன பெட்டி… காட்டும். பார்த்தா நெல்லு கொட்டற பீப்பா மாதிரி இருக்கு.’’


அண்ணாசாமி மிகுந்த கோபத்துடன் ‘‘அரைகுறையா படிச்சவா, சந்தேகப் படறவா, கேலி பண்றவாளுக்கெல்லாம் செட்டை காட்டமாட்டேன். ஒஸ்தி செட்டு இது. ஆர்.ஸி.ஏ. தெரியுமா?’’


‘‘காட்றதுக்கு எதும் இல்லைன்னு அர்த்தம்!’’


‘‘என்னவேணா நினைச்சுக்கோ.’’


சம்பா எல்லோருக்கும் வெள்ளி தம்ளரில் காபி கொண்டுவந்து வைத்தாள்.


தம்பு, ‘‘என்ன சம்பா சௌக்யமா?’’ என்று வாத்சல்யமாக விசாரித்தான். ‘‘பழசெல்லாம் ஞாபகமிருக்கா?’’ அண்ணா அதை ரசிக்கவில்லை.


‘‘சம்பா நீ உள்ளபோ!’’ என்றார்.


சம்பா ஏறக்குறைய அவர் மகள் போல இருந்தாள்.


நாங்கள் வெளிவந்தபோது அந்த எல்.பி.டபிள்யூ. தீர்மானத்தில் மாட்ச் கலைக்கப்பட்டுவிட்டது.


தம்பு ஆத்து ஆத்துப் போனான். ‘‘இந்த சம்பாவுக்கு நான் கொடுத்த லெட்டர் எல்லாம்… அவ போட்ட பதில் எல்லாம் காட்டினா ரசாபாசமாய்டும். போனாப் போறதுன்னு விட்டுக் கொடுத்தேன்’’ என்றான்.


‘‘சும்மார்றா! பழசெல்லாம் கிளறாதே.’’


ஒரு காலத்தில் தம்புதான் சம்பாவைக் கல்யாணம் செய்து கொள்வதாக நிறையப் போக்குவரத்தெல்லாம் இருந்தது. அவளுக்கோ இவனுக்கோ செவ்வாய் தோஷம் என்று கல்யாணம் நின்றுவிட்டதாம். மேலும் தம்பு அவ்வளவு வசதி யுள்ளவன் இல்லை. ஒரு வருஷம் சன்யாசியாகப் போகிறதாக யோசித்துவிட்டு ஸ்ரீனிவாச நகரில் ஜெயலக்ஷ¢மி என்ற அடக்கமான பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டு விட்டான். அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகள். இருந்திருந்தால் என்னைவிட ரெண்டு வயதுதான் மூத்தவன்.


‘‘சில பேருக்கு அதிர்ஷ்டம்டா!’’ என்றான் தம்பு பொதுப்படையாக. டி.வி. சர்ச்சை அத்துடன் ஓயவில்லை. அண்ணாசாமி கடைக்கு வரும்போதெல்லாம் தம்பு அவரைப் பரிகாசம் செய்துகொண்டிருந்தான்.


‘‘என்ன அண்ணா… டி.வி. நன்னாத் தெரியறதா? அமெரிக்காகாரன் கப்பல் கார்ல போறதெல்லாம் தெரியறதாமே!’’


அண்ணாசாமி, ‘‘நம்பாத�
��ாளுக்கு ஒண்ணும் தெரியாது. பகவான் மாதிரி அது. என்ன சொன்னாலும் நம்ப வைக்க முடியாது!’’ என்றார்.


‘‘மாடிபூரா ஏரியல் போட்டிருக் கீராமே… துணி உலத்தவா?’’


‘‘ஆமா யாகி அர்ரே. உங்களுக் கெல்லாம் சொன்னா புரியாது!’’ என்று டெக்னாலஜியை முகத்தில் வீசினார்.


அவர்போனதும், ‘‘யாகி அர்ரேன்னா என்னடா? என்ன புருடா விடறான்பாரு மனுஷன்!’’


‘‘இல்லை ரங்கு. அந்த மாதிரி ஒரு அர்ரே இருக்கு. சிக்னல் வீக்கா இருந்தா அதை அதும் பக்கம் திருப்பினா வாங்கிக்கும் > ஏரியல் மாதிரி.’’


‘‘அப்ப அவர் சொன்ன மாதிரி டி.வி. தெரியும்ங்கறே?’’


‘‘சான்ஸே இல்லை! சிக்னல் இருந்தாத்தா&ன?’’


‘‘அமெரிக்காகாரன் அனுப்பறது?’’


‘‘அதெல்லாம் இவ்வளவு தூரம் கடல் தாண்டி வராது ரங்கு’’ என்றேன்.


ஒரு நாள் ராத்திரி பத்தரைக்கு ரங்குகடையில் மூணுபேர் அலமாரிக்குப் பின்னால் ஜிஞ்சர் அடித்துக் கொண்டிருந்தபோது கடைக் கதவை மூடும் சமயம் அண்ணாசாமி சைக்கிளில் வந்து இறங்கி, ‘‘வாங்கடா எல்லாரும்!’’ என்றார்.


‘‘என்ன ஓய் பதற்றமாயிருக்கீர்? ஒரு ஜி.பி. அடிச்சுட்டுப் போமேன்’’ என்றான் தம்பு.


‘‘எல்லாரும் டி.வி. தெரியாது தெரியாதுன்னு பரிகாசம் பண்ணிங் களே… உட&ன வாங்க எங்காத்துக்கு.’’


‘‘என்ன தெரியறதா?’’


‘‘அச்சுக் கொட்டினாப்பல தெரியாது. ஆனா, தெரியறது!’’


‘‘வாடா இன்ஜினீயர்!’’ என்று என்னையும் விளித்தார். எனக்கு வியப்பாக இருந்தது. ‘‘திஸ் இஸ் நாட் பாஸிபிள்’’ என்றேன். அவர் வீட்டுக்குப் போனோம். மாடியில் எடுத்துக்கட்டி ஜன்னல் வழியாக சம்பா டார்ச்லைட்டை வைத்துக் கொண்டு மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தாள் மாடிபூரா பரவியிருந்த அந்த ஏரியலை இவர் சொல்லச் சொல்ல மொத்தமாகத் திருப்பிக் கொண்டிருந்தாள்.


இங்கே கீழே கூடத்தில் ஒரு கறுப்பு > வெள்ளை டி.வி. இருந்தது அதில் மணல் ஓடிக் கொண்டிருந்தது.


‘‘சம்பா டியர்… திருப்பு திருப்பு!’’ என்றார்.


அவள் ‘‘தெரியறதா… தெரியறதா?’’ என்று கேட்டுக்கொண்டே மாடியில் ஏரியலைத் திருப்பினாள். ஒரு கணத்தின் பிரிவில் அந்தத் திரையில் ஒரு பிம்பம் தெரிந்தது. ஒரு பெண் பேசிக் கொண்டிருந்தாள். என்ன பாஷை தெரியவில்லை.


‘‘நிறுத்து… நிறுத்து! அங்கதான் அங்கயேதான்’’ என்று இங்கிருந்து சத்தம் போட்டார்.


‘‘ரங்கு! இப்ப என்ன சொல்றே?’’


‘‘பஜ்னுதான் இருக்கு… ஆனா, மூஞ்சி தெரியறது.’’


‘‘டி.வி>யே வ்தெரியாதுன்னிங்களே… உங்க எக்ஸ்பர்ட் என்ன சொல்றார் இப்ப?’’ என்று என்னைப் பார்த்துக் கண்ணடித்தார்.

நான், ‘‘இப்போதைக்கு ஒண்ணும் சொல்றதுக்கில்லை எங்க புரொபசரைத்தான் கேக்கணும்’’ என்றேன்.

‘‘எதையும் இப்படி அலட்சியமா பேசப்படாது. இன்னம் அர்ரே எலிமெண்ட்ஸ் போட்டா நன்னாவே தெரியும். அதும் ராத்திரி ஆக ஆக… போகப் போக…’’


மேலேயிருந்து சம்பா, ‘‘போருமா… இன்னும் திருப்பணுமா?’’ என்றாள்.


‘‘சம்பா, போதும் கீழ வா! எல்லாருக்கும் பயத்தஞ்கஞ்சி கொடு’’ என்று இவர் சொல்ல, மேலேயிருந்து தொபுக்கடீர் சப்தமும் ஐயோ சத்தமும் கேட்டது.


சம்பா எடுத்துக்கட்டிலிருந்து சுமார் பதினைந்து அடி விழுந்துவிட்டாள்.

அவளை கைத்தாங்கலாக நொண்டிக்கொண்டே அழைத்து வந்தோம். ‘‘பார்த்து நடக்கக்கூடாதோ?’’ என்றார். அவள் கால் சிவப்பாக இருந் தது. செமையாக வீங்கியிருந்தது. நிறைய வலித்திருக்கவேண்டும். தம்பு கண்ணீர் விட்டான்.


‘‘என்ன ஓய்… எங்க ஊர் பொண்ண மாடியெல்லாம் ஏறவிட்டு பாடாப் படுத்தறீர். கொடுமைப் படுத்தறீர்!’’

‘‘உனக்கு என்னடா ஆச்சு?’’ என்றார்.

‘‘என்ன ‘டா’வா? நாக்கை அடக்கிப் பேசும். எல்லா வண்டவாளத்தையும் வெளிலவிட்டா நாறிப்போய்டும்.’’


‘‘என்ன வண்டவாளம்…

அவ என் பெண்டாட்டி. அவளை நான் என்ன வேணா செய்யச் சொல்வன். அதைக் கேக்க நீ யாரு?’’


சம்பா, ‘‘போருமே… போருமே…’’ என்றாள்.

‘‘நான் யார்றா? ரங்கு… சொல்றா நான் யாருன்னு!’’


‘‘தம்பு நீ வாடா! அப்றம் பேசலாம்.’’


‘‘இவர் கேக்கறதைப் பாரு! நான் யாரா…’’ தம்பு, ரங்கு கடையில் ஜிஞ்சர்பரிஸ் போட்டிருந்தான். சுருதி ஏறியிருந்தான். நாக்கு தொளதொளத்து விட்டது.


‘‘நான் யாரு… சொல்றன். இதே சம்பா, இதேசம்பா… எனக்கு மொத்தம் எத்தனை லெட்டர் எழுதிருக்கா தெரியுமா? காட்டட்டுமா… நான் எத்தனை எழுதிருக்கேன் தெரியுமா?’’


அந்தக் கணத்தில் காலம் நின்று போகப் போகிறது என்றுதான் நான் எதிர்பார்த்தேன். இல்லை!


‘‘எல்லா பைத்தியக்கார லெட்டரை யும் சம்பா கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லிட்டா… காட்டிட்டா… போடா!’’ என்றார்.


கடைசி செமஸ்டருக்கு எம்.ஐ.டி>க்கு சென்னைக்கு திரும்ப வந்தபோது பேராசிரியர் சோமயாஜுலுவை சந்தேகம் கேட்டேன். ஸ்ரீரங்கத்தில் அன்றிரவு டி.வி. தெரிந்தது எப்படி என்று கேட்டேன்.


அவர், ‘‘அதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. டக்ட் (க்ஷயுஷபீ) ப்ராபகேஷன் என்று சில வேளை கடலின் இன்வர்ஷன் லேயர் இருக்கும்போது வேவ்கைடு மாதிரி ஃபார்ம் ஆகும் வி.எச்.எஃப். சிக்னல்கள் ஆயிரக் கணக்கான மைல்கள் கூட கடந்து வரும். அனாமலஸ் ப்ராப கேஷன் என்பார்கள். நீ பார்த்தது தெற்காசிய நாடுகளில் எதாவது ஒரு டி.வி>யாக இருக்கலாம்’’ என்றார்.


ரங்கு இப்போதும் அதை ரங்கநாதன் கிருபை என்றுதான் சொல்கிறான்.


நன்றி - அமரர் சுஜாதா, சிறுகதைகள்,உயிர் மை பதிப்பகம்

http://static.flickr.com/46/135192726_12a198aef5_o.jpg