Sunday, March 10, 2013

மினரல் வாட்டர் குடிப்பவரா நீங்க? ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

உயிர் 'குடிக்கும்' நீர்!

டி.எல்.சஞ்சீவிகுமார்
கோடையில் நாளன்றுக்கு ஆறு லிட்டர் விஷத்தைத் தினமும் நீங்கள் அருந்தவிருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?


 ஆம்... சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று பாட்டிலிலும் கேன்களிலும் அடைத்து விற்கப்படும் பெரும்பாலான நிறுவனங்களின் நீர், கொஞ்சம் கொஞ்சம் உயிர் குடிக்கும் விஷம்தான் என்று பகீர் கிளப்புகின்றன சமீபத்திய ஆய்வுகள்!


தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் வீடுகளிலும் நிறுவனங்களிலுமாக, 50 சதவிகித மக்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைத்தான் விலை கொடுத்து வாங்கிக் குடிக்கிறார்கள். உண்மையிலேயே நாம் குடிக்கும் இந்தக் குடிநீர் ஆரோக்கியமானதுதானா என்றால்... சந்தேகமே! மிகச் சில நிறுவனங்களைத் தவிர, இன்று பெரும்பான்மையான நிறுவனங்களின் குடிநீர் குடிக்கத் தகுதி இல்லாதது; நம்மில் பலருக்கும் ஏற்படும் வயிற்றுப்போக்கு, சுவாச நோய்கள், பல் மற்றும் எலும்பு நோய்கள், சிறுநீரக நோய்கள், தோல் வியாதிகளுக்கு முக்கியக் காரணமே இந்த குடிநீர்தான் என்பது அதிரவைக்கும் நிஜம். காசு கொடுத்து நோயை வாங்கிக்கொண்டு இருக்கிறோம் என்பதுதான் உண்மை. இதன் பின்னணியில் இருப்பது... வேறு என்ன? ஊழல்!


தவறு ஆரம்பிப்பது எங்கே?


இந்தியத் தர நிர்ணய அமைப்புதான் (Bureau of Indian Standards) நாடு முழுவதும் இருக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும். அந்த நிறுவனங் களைக் கண்காணிப்பதும் கட்டுப்படுத்துவதும் இந்த அமைப்புதான். ஆனால், சமீபத்தில் சென்னை தரமணியில் இருக்கும் இந்த அமைப்பின் இரண்டு விஞ்ஞானிகளைச் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு நிறுவனம் தொடங்க அனுமதி அளிக்க லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கியதாகக் குற்றம்சாட்டிக் கைது செய்தார்கள். லைசென்ஸ் வாங்கவே சுமார் 10 லட்ச ரூபாய் வரை ஒரு நிறுவனம் லஞ்சம் கொடுக்கிறது என்றால், அந்த நிறுவனம் கொடுக்கும் குடிநீரின் தரம் எப்படி இருக்கும்?


இப்படித்தான் இருக்கும்!


சில மாதங்களுக்கு முன்பு இந்திய நுகர்வோர் அமைப்பின் தலைவர் தேசிகன், சென்னையில் செயல்படும் சுமார் 10 நிறுவனங்களின் சுத்திகரிக்கப்பட்ட 20 லிட்டர் குடிநீர் கேன்களை வாங்கி அவற்றை குடிநீர் பரிசோதனைக்கூடத்துக்கு அனுப்பினார். அவற்றை 'பாக்டீரியோலாஜிக்கல்’ பரிசோதனை செய்தபோது அத்தனை நிறுவனங்களின் சுத்திகரிக்கப்பட்ட(?) குடிநீருமே, மக்கள் குடிக்கத் தகுதி இல்லாதது என்று முடிவு வந்தது. இதில் அதிர்ச்சி அடையவைக்கும் இன்னோர் உண்மை, அந்த நீரில் நச்சுத்தன்மைகொண்ட கனிமங்கள் இருப்பதுடன், ஈகோலி (Escherichia coli) மற்றும் கோலிஃபார்ம் (Coliform bacteria)  போன்ற மனிதனுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய பாக்டீரி யாக்களும் இருந்துள்ளன. ஈகோலி பாக்டீரியா எதில் இருந்து உற்பத்தியாகிறது தெரியுமா? மனிதனின் மலத்தில் இருந்து!


தமிழக நிலவரம் இது!


ஆண்டுக்கு 7,000 கோடி ரூபாய் புழங்கும் தொழில் இது. ஆண்டுதோறும் சராசரி யாக 40 சதவிகிதம் வளர்ச்சி அடைகிற தொழில். கடந்த 2010 முதல் 2012 வரை இந்தியத் தர நிர்ணய அமைப்பு 96 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிறுவனங்களுக்கும் உணவுப் பாதுகாப்புத் துறை 80 நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கி இருக்கிறது. தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் 765 இருக்கின்றன. சென்னையில் மட்டுமே நாளன்றுக்கு 70 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப் பட்ட தண்ணீர் விற்பனை ஆகிறது. அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் 765 என்றால், போலி நிறுவனங்கள் சுமார் 2,000-க்கு மேல் இருக்கின்றன.


இந்தியத் தர நிர்ணய அமைப்பின் தெற்கு மண்டலத் துணை இயக்குநர் அன்பரசு, ''இது சீஸன் பிசினஸ். கோடை தொடங்கிவிட்டால், இவற்றைக் கட்டுப்படுத்துவதே கடினமாக இருக்கிறது. ஆங்காங்கே போர்வெல்களில் தண்ணீரை உறிஞ்சி குடிசைத் தொழில்போலச் செய்கிறார்கள். நாங்கள் தொடர்ந்து ரெய்டுகளை நடத்து கிறோம். நிறைய நிறுவனங் களின் லைசென்ஸ்களையும் ரத்து செய்துள்ளோம்'' என்கிறார்.


இந்தியத் தர நிர்ணய அமைப்பு மட்டுமே மொத்த போலி நிறுவனங்களையும் கட்டுப்படுத்த முடியாது. உணவுப் பாதுகாப்புத் துறை, சுகாதாரத் துறை மற்றும் மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே போலி நிறுவனங்களைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால், உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீரைப் பரிசோதிக்கப் போதிய வசதிகள் இல்லை. மெட்ரோ நகரமான சென்னை மாநகராட்சியின் குடிநீர் பரிசோதனைக்கூடமே முடங்கிக்கிடக்கிறது. இதற்கு எட்டுக் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாதனங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், பணம் கைக்கு வரவில்லை.


கிண்டியில் இருக்கும் மத்திய அரசின் கிங் இன்ஸ்டிட்யூட்டின் உணவுப் பரிசோதனைக்கூடத்தில் பரிசோதிக்கலாம் என்றால், அங்கு மைக்ரோ பயோலாஜிஸ்ட் பணியாளர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை.


குடிநீரை எப்படிச் சுத்திகரிக்க வேண்டும்?கச்சா தண்ணீரைக் கொதிக்க வைத்து 'டோஸிங் சிஸ்டம்’ மூலம் கடினத் தன்மையற்றதாக மாற்ற வேண்டும். அடுத்து மண் வடிகட்டி, கார்பன் வடிகட்டி, மைக்ரான் கார்டிரேஜ் வடிகட்டி ஆகிய மூன்று முறைகள் மூலம் தண்ணீரில் இருக்கும் நுண்ணிய மண் மற்றும் அசுத்தத் துகள்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும். அடுத்ததாக எதிர்மறை சவ்வூடு பரவல் (Reverse osmosis) மூலம் தண்ணீரில் இருக்கும் தேவையற்ற உப்புகள் நீக்கப்பட வேண்டும். அடுத்து, நுண் வடித்தல் மற்றும் புற ஊதாக் கதிர்கள் மூலம் தண்ணீரில் இருக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு நிறுவனத்திலும் அங்கீகாரம் பெற்ற பரிசோதனைக்கூடம் இருக்க வேண்டும். இங்கு பரிசோதனை செய்த குடிநீரை இந்தியத் தர நிர்ணய அமைப்புக்கு சாம்பிள் சோதனைக்கு அனுப்பி குடிக்க உகந்தது என்று சான்று பெற்ற பின்பே, விற்பனைக்கு அனுப்ப வேண்டும். மேலும், அந்த அமைப்பு மாதம் இருமுறை நிறுவனத்தின் கச்சா தண்ணீரையும் சோதனை செய்யும்.ஆனால், உண்மையில் நடப்பது என்ன?


சில நிறுவனங்களே மேற்கண்ட தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன. தில்லு முல்லு செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் பன்னாட்டு நிறுவனங்களும் உண்டு. முறையாகச் சுத்திகரிப்பவர்கள் தங்களின் பாட்டிலின் மீது நிறுவனம், பிராண்ட் பெயர், பேட்ச் அல்லது கோட் எண், சுத்திகரிப்பு செய்த தொழில்நுட்ப விவரங்கள், தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதித் தேதி ஆகியவற்றைத் தெளிவாக எழுத வேண்டும். ஆனால், எத்தனை நிறுவனங்கள் இவ்வளவு விவரங்களுடன் தங்கள் குடிநீரை விற்பனை செய்கின்றன? தனியாரை விடுங்கள்... தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயில் நிலையங்களில் காசு கொடுத்து வாங்கும் 'ரயில் நீர்’ தண்ணீரைப் பரிசோதனைக்கு உட்படுத்தி, அது குடிக்க உகந்ததுதான் என்று சான்று வாங்கும் துணிச்சல் ரயில்வே துறைக்கு இருக்கிறதா?பெரும்பாலான போலி நிறுவனங்கள் புறநகரில் விவசாயிகளிடம் போர்வெல் மற்றும் கிணற்றுத் தண்ணீரை மலிவு விலைக்கு வாங்கு கின்றன. சுத்திகரிப்பு முறைகளில் செலவு இல்லாத சிலவற்றை மட்டும் செய்துவிட்டு, தண்ணீரை அப்படியே பேக் செய்கின்றன. சிலர் தொட்டியில் தண்ணீரை ஊற்றி, அதில் அலுமினியம் சல்பேட் படிகாரத்தைப் போட்டுவிடுகிறார்கள். தண்ணீரில் இருக்கும் தேவையான மற்றும் தேவையற்ற கனிமங்கள் அத்தனையுமே அடியில் படிந்துவிடும். ஆனால், அலுமினியம் சல்பேட்டின் ரசாயனத் தன்மை குடிநீரில் இருக்கும். இந்த முறையில் பாக்டீரியாக்களும் அழியாது. அதனால் தான், ஈகோலி பாக்டீரியாக்கள் சுத்திகரிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் தண்ணீரிலும் இருக்கின்றன. இன்னும் சிலர் மேற்கண்ட எதையுமே செய்வது இல்லை. தண்ணீரை அப்படியே அடைத்து எந்த லேபிளும் ஒட்டப்படாத ப்ளைன் 20 லிட்டர் கேன்களில் விற்கிறார்கள். இவை பலவற்றில் லார்வா புழுக்கள் நெளிவதை வெறும் கண்கொண்டே பார்க்கலாம்.


''நாங்கள் முறையாகத்தான் சுத்திகரிக்கிறோம்!''


மேற்கண்ட குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஷேக்ஸ்பியரிடம் முன்வைத்து விளக்கம் கேட்டேன்... ''ஏராளமான போலி நிறுவனங்கள் இருப்பது உண்மைதான். அவ்வளவு ஏன்? அங்கீகாரம் பெற்ற பல
நிறுவனங்களே அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அனுமதி வாங்குவதுகுறித்த புகாரை அளித்ததே எங்கள் சங்கம்தான். அதன் அடிப் படையில்தான் விஞ்ஞானிகள் முரளி மற்றும் வெங்கட்நாராயணன் கைதுசெய்யப்பட்டார் கள். சுமார் 450 நிறுவனங்கள் 'ஐ.எஸ்.ஐ. 2002’ லைசென்ஸ் இல்லாமலே தொழில் செய்கிறார் கள். இதுகுறித்து சுகாதாரத் துறையில் நாங்கள் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால், நேர்மையாகத் தொழில் செய்யும் எங்கள் உறுப்பினர்களின் தொழிலும் பாதிக்கப்படுகிறது!'' என்றார்.


உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்!


தீர்வு என்ன?


'நாம் குடிக்கும் குடிநீர் குடிக்க உகந்ததுதானா?’ என்று நாமே சோதனை செய்துகொள்ள முடியும் என்கிறார் காவிரி நீர் ஆராய்ச்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் சரவணபாபு. ''பெங்களூரில் இருக்கும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் ஒரு பரிசோதனைக் கருவியை விற்பனை செய்கிறார் கள். விலை சுமார் 4,000 ரூபாய். இதைக் குடிநீரில் வைத்தால், மீட்டரில் பரிசோதனை முடிவுகளைக் காட்டும். குடிக்க உகந்ததா என்று அறிந்துகொள்ளலாம். 100 சாம்பிள் வரை இதில் சோதனை செய்யலாம். சென்னை எல்டாம்ஸ் சாலையில் பி.டி.ஆர். ஃபவுண்டேஷனில் சுமார் 250 ரூபாய்க்கு கையடக்க சோதனைக் கருவி கிடைக்கும். தவிர, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கிங் இன்ஸ்டிட்யூட் ஆகிய இடங்களில் குடிநீர் பரிசோதனைக் கருவிகள் கிடைக்கும்!'' என்கிறார்.
ஆனால், அரசு இயந்திரம் செய்ய வேண்டிய பணியையும் வரி கட்டும் மக்கள் செய்வது என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்.


அப்படியே செய்தாலும் மேற்கண்டவை எல்லாம் நடுத்தர மற்றும் வசதியானவர்களால்தான் செய்யமுடியும். ஆனால், ஏழைகள்? அவர்களுக்கும் வழி சொல்கிறார் சரவணபாபு. ''சுமார் 100 ரூபாய்க்குள் ஆரோக்கியமான, சுவையான குடிநீரைப் பெற முடியும். மூன்று மண் பானைகளை வாங்குங்கள். ஆனால், அவற்றை ஸ்பெஷலாக வடிவமைக்கச் சொல்லிக் கேட்டு வாங்குங்கள்.


மண் பானையைச் செய்யும்போதே இரண்டு பானைகளில் தலைமுடி அளவுக்கு நுண்ணிய துளையை ஏற்படுத்தித் தரச் சொல்லுங்கள். பானையைத் தயாரித்த பின்பு அப்படித் துளையிட முடியாது. உடைந்துவிடும். மூன்றாவது பானையில் குழாய் இணைப்பு வைக்கச் சொல்லுங்கள். குழாய் இணைப்பு வைத்த பானையின் மேல் துளையிடப்பட்ட இரண்டு பானைகளையும் அடுக்கிவையுங்கள். நடுப் பானையில் தேங்காய் சிரட்டையை எரியவைத்துப் பொடித்தோ அல்லது கரித் துண்டுகளாகவோ சுமார் ஒன்றரை கப் அளவுக்கு நிரப்பிக்கொள்ளுங்கள்.


 மேல் பானையில் சுமார் 20 கூழாங்கற்களை நிரப்புங்கள். இப்போது, மேல் பானையில் கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீரை மெதுவாக ஊற்றி நிரப்புங்கள். இரவில் தண்ணீர் ஊற்றினால், விடிந்த பின்பு அடிப்பானையில் குடிநீர் சேகரமாகிவிடும். ப்ளோரைடு உள்ளிட்ட நச்சுக் கனிமங்களை அகற்றி சுமார் 250 டி.டி.எஸ்ஸுக்குக் கீழே இருக்கும் கிரிஸ்டல் கிளியர் குடிநீர் இது. குடிக்கும்போது ஏதாவது ஒரு ஃப்ளேவர் வேண்டும் என்பவர்கள், தேங்காய் சிரட்டைக்குப் பதில் எலுமிச்சை அல்லது ஆரஞ்சுப் பழத் தோல்களைக் காயவைத்து எரித்து அந்தக் கரித்தூளை நிரப்பலாம். கரித்தூளையும் கூழாங்கற்களையும் 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றுவது அவசியம்.


தர்மபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஃப்ளோரைடு தன்மை அதிகம் இருக்கும் தண்ணீரைக்கூட இந்த முறையில் சுத்தமான குடிநீராக மாற்றிக் குடிக்கிறார்கள். ஆனால், கடல் நீர் ஊடுருவிய நிலத்தடி நீர் மற்றும் தொழிற்சாலை ரசாயனக் கழிவுகள் கலந்த நீரை இந்த முறையில் சுத்தம் செய்ய முடியாது.


நன்றி - விகடன் 

2 comments:

bavijai said...

அருமையான பதிவு மக்கள் மினரல் வாட்டரை புறக்கணிக்க வேண்டும் அப்பொழுதுதான் தண்ணீர்பஞ்சம் தீரும்.கொதிக்க வைத்த குடிநீரே சிறந்தது

Unknown said...

நல்ல விளக்க பதிவு . நன்றி