Friday, March 29, 2013

திவாகரன் கைது பின்னணி மர்மங்கள் - ஜூ வி அலசல்

எக்குத்தப்பாகப் பேசியதால் கைதானாரா திவாகரன்?
பெங்களூரு வழக்குக்குப் பின் நிலைமை சீராகிவிடும்!
திவாகரனை மீண்டும் கைதுசெய்து மன்னார்குடி தரப்பை அதிரவைத்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. பெங்களூருவில் நடைபெற்றுவரும் சொத்துக்குவிப்பு வழக்கு முடிவை நெருங்கும் தருணத்தில் நடைபெற்றுள்ள இந்தக் கைது, பல்வேறு சந்தேகங்களைக் கிளப்புகிறது. 


கடந்த முறை கைதுசெய்யக் காரணமாக ரிஷியூர் தமிழார்வன் கொடுத்த புகாரின் பேரில்தான், இந்தக் கைதும் அரங்கேறி இருக்கிறது. திவாகரனோடு ரிஷியூர் ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணமேனன் மற்றும் ராஜேந்திரன் என்பவரையும் கைதுசெய்துள்ளது காவல் துறை. மூவர் மீதும் கொலை முயற்சி, கொலை செய்யத் தூண்டுதல், கூட்டுச் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.  


புகார் கொடுத்த ரிஷியூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தமிழார்வனிடம் பேசினோம். ''கடந்த முறை எனது வீட்டை திவாகரன் இடித்துத் தள்ளினார். அந்த வழக்கில் கைதாகி ஜாமினில் வந்ததில் இருந்து, என்னைக் கொல்லத் திட்டமிட்டு வருகிறார்கள். இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் வாக்கிங் போகும்போது, ராஜேந்திரன் என்னைக் கத்தியால் குத்த வந்தார். அதுகுறித்து புகார் கொடுத்தேன். அரெஸ்ட் ஆகி பெயிலில் வந்திருக்கிறார். இப்போது மீண்டும் என்னைக் கொல்ல முயற்சிசெய்வதாக 22-ம் தேதி உளவுப் பிரிவினர் தகவல் சொன்னார்கள். அதன் பின்னர்தான் நான் புகார் கொடுத்ததை அடுத்து, இப்போது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்'' என்றார்.


கடந்த 22-ம் தேதி இரவு 7.50-க்கு சுந்தரக்கோட்​டையில் இருக்கும் திவாகரன் வீட்டுக் கதவைத் தட்டிய மன்னார்குடி டி.எஸ்.பி-யான அன்பழகன். 'ரிஷியூர் தமிழார்வனைக் கொல்ல முயற்சித்த வழக்கில் உங்களைக் கைதுசெய்கிறோம்’ எனச் சொன்னார். 'கொஞ்சம் பொறுங்கள்!’ என வீட்டுக்குள் சென்ற திவாகரன், வழக்கறிஞருக்குத் தகவல் கொடுத்துவிட்டு, சில நிமிடங்களில் வெளியில் வந்தார். 


அங்கிருந்து புறப்பட்ட வேன் நேராக நீடாமங்கலம் சென்றது. தகவல் தெரிந்த திவாகரன் ஆதரவாளர்கள் நீடாமங்கலம் காவல் நிலையத்தை நோக்கிக் குவியத் தொடங்கினர். உடனே திவாகரனை அங்கிருந்து திருவாரூர் தாலுக்கா காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். நள்ளிரவு 1.40-க்கு காவல் துறையினரின் பாதுகாப்போடு திவாகரனை நீடாமங்கலத்துக்கு  நீதிபதியின் வீட்டுக்கு அழைத்து வந்தனர். கைதுசெய்யப்பட்ட மூவரையும் 15 நாட்கள் ரிமாண்ட் செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார்.


கைதுக்குப் பின்னணி என்ன?


''கடந்த ஆண்டும் திவாகரன் கைதுசெய்யப்பட்டார். பொது நிகழ்ச்சிகளில் அதிகம் தலைகாட்டக் கூடாது என்ற அறிவுறுத்தலுக்குப் பின்னரே, அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ஆனாலும் வெளி நிகழ்ச்சிகளில் தலைகாட்டுவதை திவாகரன் தவிர்க்கவில்லை. சமீபத்தில் திருவோணம் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ-வான எம்.ஆர். வீட்டுத் திருமணம் சங்கரன்கோவிலில் நடந்தது. அங்கு சென்ற திவாகரன் வரும் வழியில் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்றார்.


 அங்கு அவருக்கு அதிகப்படியான மரியாதை தரப்பட்டது. அதன் பிறகுதான் அந்தக் கோயிலின் செயல் அலுவலர், காத்திருப்போர் பட்டியலுக்குச் சென்றார். அடுத்து, புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் நடந்த சுற்றுச்சூழல் கருத்தரங்குக்குச் சென்றார். அங்கு அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கினார்கள். அதையடுத்து விருது வழங்கிய மன்னர் கல்லூரியின் முதல்வர், இரண்டு உதவி பேராசிரியர்கள் என மூவர், காத்திருப்போர் பட்டியலில் இடம்பெற்றனர்.



அடுத்து, திருவாரூர் மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் ஒருவர் வீட்டுத் திருமணத்துக்குச் சென்று வந்தார். திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் மதியழகன் வீட்டு திருமண நிச்சயதார்த்த விழாவிலும் கலந்துகொண்டார். அங்கு வந்திருந்த தி.மு.க. எம்.எல்.ஏ-வும் டி.ஆர்.பாலுவின் மகனுமான ராஜாவிடம் நலம் விசாரித்துப் பேசினார்.


 அடுத்து திருமண விழாவுக்கும் சென்றவர், அங்கு வந்திருந்த கே.வி.தங்கபாலு, முன்னாள் எம்.பி-யான பி.வி.ராஜேந்திரன் ஆகியோரிடம் பேசினார். இப்படி தி.மு.க., காங்கிரஸ் என ஜெயலலிதாவுக்குப் பிடிக்காத கட்சியினரின் வீட்டு விஷேசங்​களுக்கு சென்றுவந்ததை உளவுப் பிரிவு போலீஸார், தலைமையிடம் போட்டுக் கொடுத்துவிட்டனர். அங்கு பெங்களூரூ வழக்குப் பற்றி திவாகரன் பேசியதாகவும், 'விரைவில் நிலைமை சீராகிவிடும்’ என்று மற்றவர்களுடன் மகிழ்ச்சி பொங்கக் கூறினார் என்றும் உளவுப் பிரிவினர் நோட் போட்ட​னராம். அதனை அடுத்தே இந்த அதிரடிகள்'' என்கிறார்கள் விவரமறிந்த வட்டாரத்தினர்.



சமீபத்தில் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் திருவிழா நடந்தது. அந்தத் திருவிழாவில் திவாகரனுக்கு எனத் தனி மண்டகப்படியும் உண்டு. அந்த மண்டகப்படியில் கலந்துகொண்ட திவாகரனுக்கு வழக்கமான மரியாதை செய்யப்​பட்டது. அப்போது அ.தி.மு.க அவைத் தலைவரும் முன்னாள் அறங்காவலர் குழு தலைவருமான பிச்சைக்கண்ணு, முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சதாசிவம், ராஜகோ​பால், மணிவண்ணன் என நால்வர் திவாகரனைச் சந்தித்தனர். இந்தத் தகவலையும் உளவுப் பிரிவு தலைமையிடம் சொல்ல... அந்த நால்வரும் கட்சியைவிட்டே நீக்கப்பட்டனர்.
கைதுகுறித்துப் பேசும் இன்னும் சிலரோ, ''டெல்டா மாவட்ட அ.தி.மு.க-வினருக்கு திவாகரன் தான் பாஸ். அவரால் உருவாக்கப்பட்டவர்கள் ஒன்றியப் பொறுப்புகள் தொடங்கி அமைச்சர்கள் பொறுப்பு வரை வகித்து வருகின்றனர். இப்போது திவாகரன் ஓரங்கட்டப்பட்டதும் அந்த இடத்துக்கு அந்த ஏரியாவைச் சேர்ந்த ஒரு வி.ஐ.பி. ஒருவர் வர நினைக்கிறார். அவர்தான் திவா​கரனைப் பற்றிய தகவல்களை தலைமை​யிடம் போட்டுக்கொடுத்து​விட்டார்'' என்கிறார்கள்.


கைதுகுறித்து மன்னார்குடி டி.எஸ்.பி-யான அன்பழகனிடம் பேசினோம். ''ரிஷியூர் தமிழார்வன் கொடுத்த புகாரின் பேரில் விசாரணைசெய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்று மட்டும் சொன்னார்.


இன்னும் யார் யார் தலை உருளப்​போகிறதோ?


- வீ.மாணிக்கவாசகம்
படம்: செ.சிவபாலன்


நன்றி - ஜூ வி 

1 comments:

Unknown said...

அருமையான பதிவு