Tuesday, March 12, 2013

டெல்லி கேங்க் ரேப் ராம்சிங்க் கொலையா? தற்கொலையா? மர்மங்கள்

மருத்துவ மாணவி பலாத்காரம் முக்கிய குற்றவாளி ராம் சிங் திகார் தற்கொலை

 

புதுடில்லி:டில்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கின் முக்கிய குற்றவாளியான, ராம்சிங், திகார் சிறையில் நேற்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும், பல்வேறு சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

டில்லியை சேர்ந்த மருத்துவ மாணவி, கடந்த டிசம்பரில், ஓடும் பஸ்சில், ஆறு பேர் கும்பலால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தூக்கி வீசப்பட்டார். பின், சிங்கப்பூர் மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் ஆறு பேர், கைது செய்யப்பட்டனர். 


இவர்களில், டில்லி, ஆர்.கே.புரத்தை சேர்ந்த ராம் சிங், 33, அவரது சகோதரர், முகேஷ் ஆகியோர் முக்கியமானவர்கள்.பாலியல் பலாத்காரத்துக்கு பயன்படுத்தப்பட்ட, பஸ்சின் டிரைவராக செயல்பட்டது, ராம் சிங். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக, ராம் சிங் சேர்க்கப்பட்டிருந்தான். இவர்கள் மீதான வழக்கு விசாரணை, டில்லி விரைவு கோர்ட்டில் நடந்தது.

சிறை எண்-3:


குற்றவாளிகளில் ஒருவன், மைனர் என்பதால், அவன் மட்டும், சிறுவர் சீர்திருத்த மையத்தில் அடைக்கப்பட்டு உள்ளான். ராம் சிங் உள்ளிட்ட, மற்ற ஐந்து பேரும், டில்லி திகார் சிறையில், தனித்தனி அறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர்.குற்றவாளிகள், தற்கொலை செய்வதற்கான வாய்ப்புள்ளதாக கருதப்பட்டதால், ஐந்து பேருமே, திகார் சிறையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அடைக்கப்பட்டிருந்த சிறை அறைக்கு வெளியில், தனியாக ஒரு காவலர், பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டிருந்தார்.ராம் சிங், சிறை எண்-3ல் அடைக்கப்பட்டிருந்தான். அதே அறையில், மேலும் சில கைதிகளும் அடைக்கப்பட்டிருந்தனர். நேற்று காலை, விசாரணைக்காக, ராம்சிங், கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லப்படவிருந்தான்.

இந்நிலையில், நேற்று காலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர், குற்றவாளிகளை எழுப்புவதற்காக சென்றார். அப்போது, சிறை அறைக்குள், ராம் சிங் தூக்கில் தொங்கியதை பார்த்து, அவர் அதிர்ச்சி அடைந்தார். உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, ராம் சிங்கை, தூக்கிலிருந்து இறக்கிய அதிகாரிகள், அவன் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர்.

உடையால் கயிறு:


தான் அணிந்திருந்த உடைகளை, ஒன்றன் பின் ஒன்றாக முடிந்து, கயிறு போல் திரித்து, அறையின் மேல் பகுதியில் உள்ள கிரில்லில் தூக்கிட்டு, அவன் தற்கொலை செய்து கொண்டதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, டில்லியில் உள்ள தீனதயாள் மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக, ராம்சிங்கின் உடல் கொண்டு செல்லப்பட்டது.அதிகபட்ச பாதுகாப்பு வளையத்துக்குள், தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த குற்றவாளி, சிறைக்குள்ளேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது, ஆச்சர்யத்தையும், பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.
 
 
 
தேசிய பெண்கள் கமிஷன் தலைவர், மம்தா சர்மா கூறுகையில்,"" சிறைக்குள் இருக்கும் ஒரு கைதியை, சிறை அதிகாரிகளால் கண்காணிக்க முடியவில்லை என்றால், அந்த சிறை அதிகாரிகள், எதற்காக வேலை செய்கின்றனர் என, தெரியவில்லை,'' என்றார். திகார் சிறையின் முன்னாள் டைரக்டர் ஜெனரலும், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியுமான, கிரண் பேடியும், இதே சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.ராம் சிங்கின் தற்கொலை குறித்து, பல்வேறு தரப்பினரும், பல சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.
 
 
ராம் சிங், கடந்த சில நாட்களாகவே, கடும் மன உளைச்சலில் இருந்தான். சரியாக உணவு சாப்பிடுவதும் இல்லை. சக கைதிகள், ராம் சிங்கை தாக்கும் அபாயம் இருந்தது. இதனால், அவன் பயத்தில் இருந்தான். ராம் சிங்கிற்கு, ஒரு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது.ஒருகை, சரியாக செயல்படாத நிலையில், எட்டு அடி உயரத்தில் உள்ள கிரில்லில், தூக்கு போடுவது, சாத்தியமற்ற ஒன்று. அவனுடைய உடைகளையே, கயிறு போல் திரித்து, தூக்கு போடுவதற்காக பயன்படுத்தியதாக கூறுவதும், நம்பும்படியாக இல்லை.
 
 
 
அந்த அறையில், ராம்சிங் மட்டும், தனியாக அடைக்கப்படவில்லை. மேலும் சில கைதிகளும், உடன் இருந்தனர். அவர்களுக்கு தெரியாமல், ராம்சிங் தூக்கிட்டு கொண்டதாக கூறுவதையும் நம்ப முடியவில்லை. அந்த அறைக்கு வெளியில், பாதுகாவர் ஒருவரும் பணியமர்த்தப்பட்டு இருந்தார். அவருக்கும் இந்த விஷயம் தெரியவில்லை என கூறுவதும், ஆச்சர்யமாக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்
 
 
.ராம் சிங் தற்கொலை சம்பவத்தை அடுத்து, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, மற்ற நான்கு குற்றவாளிகளும், தீவிர பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.இதற்கிடையே, டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித், மத்திய உள்துறை அமைச்சர், சுஷில் குமார் ஷிண்டேயை நேற்று சந்தித்து பேசினார். இதன்பின், ஷீலா தீட்ஷித் கூறுகையில்,""இது தொடர்பாக, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானால் தான், இந்த விஷயம் பற்றி, கருத்து தெரிவிக்க முடியும்,'' என்றார்.
 
 
பாலியல் பலாத்காரத்தில் உயிரிழந்த மாணவியின் சகோதரர் கூறியதாவது:ராம் சிங்கை பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும் என்பதே, எங்களின் விருப்பம். அது நடக்காமல் போய் விட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய, மற்ற குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கிடைக்க போகிறது என்பதற்காக காத்திருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.தந்தை ஆவேசம்:ராம்சிங் தந்தை கூறியதாவது:என் மகன், தற்கொலை செய்யவில்லை. அவனை, திட்டமிட்டு கொலை செய்து விட்டனர். இந்த உண்மையை மறைக்கின்றனர். பிரேத பரிசோதனையை, எங்களுக்கு முன், வெளிப்படையாக நடத்த வேண்டும்.
 
 
 இதுகுறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். என் மகனை, ஏற்கனவே சிறைக்குள் தாக்கியுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.ராம்சிங், தற்கொலை செய்யும் நபர் அல்ல. இந்த விஷயத்தில், ஏதோ சதி நடந்துள்ளது. விசாரணைக்காக, முழு ஒத்துழைப்பு அளித்து வந்தான். விசாரணை, விரைவாக நடப்பதில், அவனுக்கு முழு திருப்தி இருந்தது. சிறை அதிகாரிகள் தான், அவனை கொலை செய்துள்ளனர்.இவ்வாறு, வி.கே.ஆனந்த் கூறினார்.திகார் சிறை வட்டாரங்கள் கூறியதாவது:திகார் சிறை, கடுமையான பாதுகாப்பு வளையத்தின் கீழ் உள்ளது. 
 
 
சிறையில், கண்காணிப்பு மற்றும் வெளிப்புற பாதுகாப்பு பணிகளில், இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையினர், மத்திய ரிசர்வ் போலீசார், தமிழ்நாடு சிறப்பு போலீசார் ஆகியோர், ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.சிறையின் அன்றாட நடவடிக்கைகளை, டில்லி போலீசார், கவனித்து வருகின்றனர். கடந்தாண்டில் மட்டும், திகார் சிறையில், 18 பேர் இறந்துள்ளனர். இவற்றில், 16 இறப்புகள், இயற்கையாக நிகழ்ந்தவை. மற்ற இரண்டும், தற்கொலை சம்பவங்கள். தற்போது, ராம் சிங்கையும் சேர்த்து, கடந்த, 15 மாதங்களில், இதுவரை, மூன்று பேர் தற்கொலை மூலம், உயிரிழந்துள்ளனர்.
 
 
இவ்வாறு சிறை வட்டாரங்கள் தெரிவித்தன. "" ராம்சிங் மரணம், தற்கொலை தான் என, முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது,'' என, மத்திய உள்துறை அமைச்சர், சுஷில் குமார் ஷிண்டே கூறினார். மத்திய உள்துறை அமைச்சர், சுஷில் குமார் ஷிண்டே, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ராம்சிங் தற்கொலை சம்பவத்தை அடுத்து, திகார் சிறையில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு குறித்து, மறு ஆய்வு செய்ய வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும். திகார் சிறையில், பாதுகாப்பு விஷயத்தில், பெரிய அளவில் குறைபாடு இருப்பது, உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
 
ராம்சிங் மரணம், தற்கொலை தான் என, முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனாலும், இந்த விவகாரம் தொடர்பான, விசாரணை முடிந்தால் தான், உண்மை நிலவரம் தெரிய வரும். ராம்சிங் கொலை செய்யப்பட்டதாக, சிலர் கூறுகின்றனர். இது தொடர்பாக, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விசாரணை முடிந்தால் தான், நடந்தது என்ன என்று தெரிய வரும். 
 
 
திகார் சிறையில், ரகசிய கண்காணிப்பு கேமராக்கள், குறிப்பிட்ட சில இடங்களில் இல்லை. இதனால், ராம்சிங் அடைக்கப்பட்டிருந்த அறையில், என்ன நடந்தது என்பதை அறிய முடியவில்லை.திகார் சிறை முழுவதையும், எலெக்ட்ரானிக் சாதன கண்காணிப்பின் கீழ் கொண்டு வருவது குறித்து, நான் எந்த பதிலும் அளிக்க முடியாது. திகார் சிறை கட்டுப்பாடு, உள்துறை அமைச்சகம் வசம் இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கான, தண்டனையை அதிகரிக்கும், குற்றவியல் சட்ட திருத்த மசோதா குறித்து, மத்திய அமைச்சரவையில், இன்று விவாதிக்கப்படவுள்ளது. இவ்வாறு, சுஷில் குமார் ஷிண்டே கூறினார்.
 
 
 
மக்கள் கருத்து 
 
 
1. குற்றவாளி ராம் சிங் யின் கூட்டாளிகள் 4 பேருடைய உடலில் போதை மாத்திரை அல்லது தூக்க மாத்திரை அதிக அளவில் கலக்கப்பட்டு உள்ளதா என்று மருத்துவர்கள் பரிசோதனை செய்து அவ்வாறு கண்டு பிடிக்கபட்டால் அது கண்டிப்பாக காங்கிரஸ் கட்சியின் வேலை தான் .....ராம்சிங் யின் கை முறிந்து உள்ளதாள் இது நடை பெற சாத்தியமே இல்லை .....ஒவ்வொரு பிரச்சனை முடிந்தவுடன் உளவு துரையின் மூலம் மக்களின் நாடி துடிப்பை துளியமாக கனிகிறது இந்த அரசு 
 
 
 
 ..........பாகிஸ்தான் வீரர்கள் இந்திய வீரரின் தலையை துண்டித பின் மக்கள் மொத்தமாக இந்த கற்பழிப்பு சம்பவத்தை மறந்துவிடுவார்கள் என்று கணக்கிட்டு ஏமார்ந்தவுடன் சுதாகரித்து கொண்ட மதிய அரசு அடுத்தடுத்த தூக்கு தண்டனையை நிறைவேற்றி பின் அதனுடன் இந்த தூக்கு மரணத்தையும் மக்கள் நியாபகம் வைத்துகொண்டால் இந்த கற்பழிப்பு சம்பவத்திலிருந்து /பிரச்சனையிலிருந்து காங்கிரஸ் கட்சி சற்று கரையை போக்கலாம் என்று உளவு துறை ஆலோசனை வழங்கி இருக்கலாம் அதனால் இந்த நாடகம் நடந்து ஏறி இருக்காலாம் .............கடந்த 24 மணி நேரத்தில் மற்ற நால்வரின் உணவு ...உடலில் அதிக அளவில் தூக்க மாத்திரை /போதை மாத்திரை கலந்து உள்ளதா என்று கண்டுபிடிப்பது திருபத்தை ஏற்படுத்தலாம்


2. அரசாங்கத்திற்கு தன்னால் இவ்வளவு செலவு ஆகிறதே என்று எண்ணி உயிரை விட்டானோ என்னவோ??? எது எப்படியோ குறைந்த பட்சம் அவன் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் இருக்கமோ என்கிற கோணத்தில் விசாரிப்பது நல்லது......அரசாங்கத்திற்கு பாதுகாப்பு செலவை மிட்சபடுத்திய இவன் செயல் விநோதமானது தான்.....இதில் ஒன்றை கவனிக்க வேண்டியது......மேற்குறிப்பிட்ட குற்றசாட்பட்ட பெயர்களை வைத்து பார்த்தால் அவர்கள் உயர் ஜாதியினர் என்பது மிகவும் அதிர்ச்சியளிக்க கூடிய விஷயம்..... இப்போதெல்லாம் தனி மனித ஒழுக்கம் இல்லாதது மற்றும் குற்றங்கள் செய்வது சமுதாயத்தில் அணைத்து பகுதியிலும் பரவிவிட்டது என்பது மாபெரும் வேதனைக்குரியது....சமயமும்,மதமும்,சமூகமும் மற்றும் பெற்றோரும் அவர்களின் கடமையை திறம்ப செய்யாததும் அவர்களுக்கு கொடுத்த அதீத சுதந்திரமும் தான் இந்த குற்றத்திற்கு காரணம் என்றால் அது மிகையாகாது....


3.இந்தியாவிலேயே மிகவும் பாதுகாப்பு நிறைந்த திகார் சிறையில் ........ ஒரு கைதி ...... அதுவும் விசாரணை கைதி ...... விடியற்காலை 5 மணிக்கு தற்கொலை செய்து கொள்கிறார் என்றால் ....... சிறைத்துறை அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் ..... வார்டன்கள் எங்கே போனார்கள் ....... மற்ற கைதிகள் கூட இதை கவனிக்கவில்லையா ...... கண்காணிப்பு கேமராக்கள் எப்படி "கண்டு கொள்ளாமல்" இதை விட்டன ...... யாரை திருப்திபடுத்த இந்த நடவடிக்கை? ..... பல சந்தேகங்கள் ........ விடை எங்கே ....


4. சிறையில் அவனைப் பரிசோதித்து வந்த மனநல மருத்துவர்கள் செயல்பாடு சரியில்லை என்கிறார் கிரண் பேடி .... தூக்கு தண்டனைக் கைதிக்குக் கூட இந்தப் பரிசோதனை நடப்பது உண்டுதான் .... ஆனா இவனுக்கெல்லாம் மனநிலை சரியா இருந்து நாட்டுக்கு என்ன ஆகணும் ????... 

5. ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது. இந்த நாட்டில் ஜெயிலுக்குள்ளே போனாலும் வெளியே இருந்தாலும் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. பாதுகாப்பான இடமே இல்லை இந்த நாட்டில். காவல் துறை நினைத்தால் எதுவும் செய்யலாம் போல் இருக்கிறது. முறைப்படி தண்டனை கொடுக்கவேண்டிய இடம் ஜெயில். முரட்டுத்தனமாக தண்டிக்க கூடாது. அவனை இந்த நிலைமைக்கு கொண்டு வந்ததே இந்த அரசு தான். ஊரெங்கும் மது கடைகள், சினிமா, சின்னத்திரை கிளுகிளுப்புகள், இன்டர்நெட் ஆபாசம், முக்கியமாக இலவசம், வேலை இன்மை, எதிலும் லஞ்சம், அரசியல் அராஜகம், இப்படிஎல்லாம் இருந்தால் மக்களின் போக்கு இப்படி தான் இருக்கும்....



நன்றி - தினமலர்

3 comments:

Easy (EZ) Editorial Calendar said...

கொலையோ, தற்கொலையோ ,எதுவாக இருந்தாலும் இது தான் அவனுக்கு கொடுத்த ஒரு சிறு தண்டனை........

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

நான் கார்த்திகேயன்/naaan.karthikeyan said...

5 வது பாய்ண்ட் நச் உண்மை சொல்கிறது

thekkadu mangutty said...

enna kodumai ithu uyar jathyinar enbathu adhirchiyaga irukiratha? appo uyar jathyinar intha mathiri thappu pannamattangala?