Monday, March 18, 2013

விகடன் விமர்சனக் குழு -சுண்டாட்டம் - சினிமா விமர்சனம்

விளையாட்டு’ வாழ்க்கையில் வினை ஆவதே 'சுண்டாட்டம்’.
 ஹீரோ இர்ஃபான், கேரம் கில்லி. தாதா நரேனின் பிரியத்துக்குப் பாத்திரமாகி, அவரது கேரம்போர்டு கிளப்பில் ஆஸ்தான பிளேயர் ஆகிறார். இன்னொரு பக்கம் தங்கையின் தோழி அருந்ததியுடன் அவருக்குக் காதல். இர்ஃபான் வரவால் கிளப்பில் ஓரம்கட்டப்படுகிற மது, கொலைவெறியுடன் திரிகிறார். மதுவின் வன்மம், அருந்ததியினுடைய அண்ணனின் எதிர்ப்பு, நரேனின் உயிருக்குக் குறிவைக்கும் எதிர் கோஷ்டி என்று மூன்று விதமான சூழலுக்கு நடுவே இர்ஃபான் எப்படி மீண்டு வந்தார் என்பது திக் திடுக் க்ளைமாக்ஸ்!வழக்கமான காதல், வழக்கமான மோதல் கதைதான் என்றாலும், படமாக்கிய விதத்திலும் திரைக்கதையின் நேர்த்தியிலும் புருவம் உயர்த்த வைக்கிறார் அறிமுக இயக்குநர் பிரம்மா ஜி.தேவ். சிற்சில கிளிஷேக்கள் இருந்தாலும், சினிமா மொழியைக் கச்சிதமாகக் கையாண்டுள்ள விதத்தில்... கை கொடுங்க பாஸ்!


நெடுநெடு உயரம், விடலை உடம்பு, காதல் கொப்பளிக்கும் கண்கள் என இர்ஃபான், இந்தப் படத்துக்கு நல்ல தேர்வு. நண்பனை அடித்துவிட்டார்கள் என்றதும் நரேனின் ஆட்கள் என்று தெரியாமலே போட்டுப் பொளப்பது, போதையில் தரையில் 'மண்சோறு’ சாப்பிடுவது, எதிரியின் ஏரியாவுக்குள் நுழையும்போது எல்லாம் கண்ணில் காட்டுகிற தயக்கம் என எல்லாவற்றிலும் செம ஃபிட்.
நிறைவாகச் செய்திருக்கிறார் அருந்ததி. மஞ்சள் பற்கள், போதை யில் செருகிய கண்கள், தளர்ந்த நடை என போதை அடிமையாக வரும் காசி கேரக்டரில் செம மிரட்டு மிரட்டுகிறார் மது. ''அவன் எப்படித் தப்பிச்சான்?'' என்று கூலிப்படை நண்பனைக் கத்தியால் குத்தும் இடத்திலும், ''நான் வேலைக்கு ஆக மாட்டேன்னு நினைச்சுட்டியா?'' என்று மனைவி யைக் கொன்று சாக்குமூட்டையில் போட்டுவிட்டு அலறிக் கதறும் இடத்திலும் அப்ளாஸ் அள்ளுகிறார்.

 நரேனும் சரி, அவரது அடியாட்களாக வரும் ஸ்டாலினும் சென்னையின் இருட்டு ஏரியா மனிதர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். படத்தின் மிகப் பெரிய பலங்கள் பாலகுருநாதனின் மிரட்டும் ஒளிப்பதிவும் அச்சுவின் அதிரடிக்கும் பின்னணி இசையும்.கதையின் முதல் பாதியில் அரை மணி நேரமும் இரண்டாம் பாதியில் அரை மணி நேரமும் சுண்டாட்டம் நொண்டி விளையாடுகிறது. அருந்ததியின் அண்ணனுக்கு அம்புட்டு பில்டப் கொடுத்துவிட்டு, கடைசியில் காமெடி பீஸ் ஆக்கிவிடுகிறார்கள். நரேனைப் போட்டுத் தள்ளுவது என்கிற அசைன்மென்ட்டை நரேனின் அடியாளுக்குக் கொடுத்துவிட்டு அடிக்கடி டென்ஷன் ஆகும் அந்த 'பாய்’ யார் பாஸ்? அவ்வளவு படைபலம் உள்ள பாய் கேரக்டரே, நரேனைப் போட்டுத் தள்ளியிருக்கலாம். 


அதே மாதிரி மிருக பலம்கொண்ட மதுவே இர்ஃபானைக் கொன்றுவிட முடியுமே? ஆளாளுக்கு அசைன்மென்ட் கொடுத்துவிட்டு ஆலாய்ப் பறக்கிறார்கள்.


கேரம் விளையாட்டு சாம்பியன்களின் உடல் மொழி, ஆடும் ஸ்டைலை நுட்பமாகப் புகுத்திய தற்கும் அழகியலுடன் படமாக்குவதற்கும் நிறையவே மெனக்கெட்டிருக்கிறார்கள். அதே உழைப்பைத் திரைக்கதையிலும் காட்டி இருந்தால், இன்னும் சுண்டி இழுத்திருக்கும்.

thanx - vikatan

0 comments: