Saturday, September 01, 2012

பூம்பூம் மாட்டுக் காரர்களின் வாழ்வு -ஒரு பார்வை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxLa7im6z-OzDLMGzOKp3Z7bcgbY_1s48ddGICy8bwm62BlrsaafZsxIDRrp0krdVYKmhZuONeKNhMcwwfbF99UxTvGJC9xLljlKtdB8az5SAmXwNafF2SpDsGTpvCFnzuRi8fN-M_XMkl/s1600/boom%252Bboom%252Bmaadu.jpgவெளிச்சத்துக்கு வரும் வித்தியாச வாழ்வுகள்!நல்ல காலம் பொறக்குமா?

நல்ல காலம் பொறக்குது... இந்த வூட்ல அய்யாவுக்கு நல்ல காலம் பொறக்குது. அம்மாவுக்கு நல்ல காலம் பொறக்குது. வூட்ல உள்ள எல்லாருக்கும் நல்ல காலம் பொறக்குது!" என்று விடியற்காலை வாசலில் வந்து நிற்கிற பூம்பூம் மாட்டுக் காரர்களின் மாடுகள் வண்ணங்களால் ஈர்த்தாலும் குழந்தைகளின் மனசுக்குள் ஒருவிதப் பயத்தை உண்டு பண்ணும். கிராமத்தில் பிறந்து இன்றைக்கு முப்பதை நெருங்கும் இளைஞர்கள் பலர் தம் வீட்டுத் திண்ணையிலுள்ள தூண்களில் ஒளிந்து கொண்டு இந்த பூம்பூம் மாட்டுக்காரர்களை நோட்டம் விட்டிருப்பார்கள்.


 ஒவ்வொரு வீட்டுவாசல்களில் நின்றவர்களை வாழ்க்கை தன் விளிம்பில் நிற்க வைத்து வேடிக்கை பார்க்கிறது. ‘தங்களுக்கு நல்ல காலம் பொறக்குமா?’ என்கிற கேள்வி சுமந்து விரக்தியுடன் வாழ்கின்றனர். பூம்பூம் மாடுகளின் அலங்காரப் பட்டைகள் இருக்கின்றன; சலங்கைகள் இருக்கின்றன; ரும் ரும்ரும் என உறுமிய உறுமிகள் இருக்கின்றன. ஆனால், பூம்பூம் மாடுகள் மட்டும் இல்லை; பாரம்பரிய தொழிலிலிருந்து விலகி, பொம்மை தொழிலுக்குச் சென்று விட்டனர் பூம்பூம் மாட்டுக்காரர்கள்.ஒரு காலைப் பொழுதில் சென்றிருந்த நம்மிடம், மனகந்த்தா தேவுடு அய்யாவை. மூர்த்திலே கண்ட்ட போதே மனந்த்த லேது!" என்றனர். நமக்கு ஏதும் புரியவில்லை. ஓர் இளைஞர் விளக்கினார். எங்களுக்கெல்லாம் கடவுள் மாதிரி அய்யாவை.மூர்த்தி. அவர் இல்லாட்டி நாங்களே இல்லை!"


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtlcYZMCKoc1lnDrpRHMUmqs6ayUbS6FbLA2Pmqy5J61taahsMFpoJLU2xg8r5VeNkUFwHfT7XTUGfVN0OQOOkGF1eb_sOGqMli4K9cLdIX_A_i-ZHU9xdTnlQpf1chWRjUJxhbzzXpdc/s1600/311661-001.jpgதிருச்சி, மணிகண்டம் யூனியன் (முதல்வர் தொகுதி) நாகமங்கலம் அருகே உள்ளது ஆதியன் குடியிருப்பு. இந்து ஆதியன் இனத்தைச் சேர்ந்தவர்களே பூம்பூம் மாட்டுக்காரர்கள். நாடோடிகளாக ஊர்ஊராய்ச் சுற்றித் திரிந்தவர்களுக்கு, 2001இல் அரசு சார்பில் இலவச வீடுகள் கட்டித் தந்து ஆதியன் குடியிருப்பினை உருவாக்கியவர் அப்போதைய திருச்சி கலெக்டர் வை.மூர்த்தி.எங்க பூர்விகம் திருவண்ணாமலை பக்கம் பெண்ணாத்தூர். பூம்பூம் மாடு ஓட்டிக்கிட்டு நாடோடிகளாய் சுத்தித் திரிவோம். திருவானைக்காவல் பக்கமாய் ரொம்ப வருஷம் தங்கியிருந்தோம்," என்கிறார் ஆதியன் குடியிருப்பு முக்கியஸ்தர் கண்ணன்!ஆதியன் குடியிருப்பில் 96 வீடுகள். நூற்றியிருபது குடும்பங்கள். அங்குள்ள பிள்ளைகளுக்கென மூன்று ஆசிரியர்கள் ஊராட்சித் தொடக்கப் பள்ளி. ஓர் அங்கன்வாடி. ஊராட்சியின் இரண்டாவது வார்டு உறுப்பினர் கண்ணன், முன்னாள் பூம்பூம் மாட்டுக்காரர்; இந்நாள் பொம்மை விற்பனையாளர். நாம் பேசிக் கொண்டிருக்கும்போது, புன்னை மரத்தடியில் உறுமிச் சத்தம்.பழைய ஞாபகத்துல இப்படி அப்பப்போ எடுத்து அடிப்பாருங்க. இப்ப எல்லாம் அவரும் அவர் மவனும் கண்ணாலக் கச்சேரிக்குப் போய் வர்றாங்க," என்றார் கண்ணன். தலையில் பிரம்மாண்ட முண்டாசு மற்றும் வெற்று மார்புடன் மரத்தடியின் கீழே நின்று உறுமி அடித்துக் கொண்டிருந்தார் கண்ணப்பன். நாம் வந்திருக்கும் தகவல் கேள்விப்பட்டு அவரது மகன் ரமேஷ் குமார், தவிலுடன் வந்தார். தோளிலே நாகஸ்வர பை. பிறகு என்ன? அப்பா கண்ணப்பன் நாகஸ்வரம் வாசிக்க, மகன் ரமேஷ்குமார் தவில் அடிக்க அரை மணி நேரக் கச்சேரி அந்த இடத்தில் அரங்கேறியது.பத்து வருஷமாய் சுபகாரியங்களுக்கு கச்சேரி செய்யக் கூப்பிடுறாங்க! வூட்ல விசேஷம், கோயில் திருவிழான்னு எங்க ஜோலி ஓடிட்டிருக்கு. ஏதோ பரவாயில்லே. ஆனா சுத்தமாய் எங்க தொழிலை விட்டுவந்து பத்து பதினஞ்சு வருஷத்துக்கு மேல ஆகுது. காடு மலை கல்லு முல்லுன்னு பாக்காம ஊரூராய் சுத்தித் திரிஞ்ச எங்க கால்களை அடக்கி வைக்கிறது பெரும்பாடாய் இருக்கு. எங்க தொழிலை விட்டதுக்கு ரெண்டு காரணங்கள்.


ஒண்ணு வருமானம் கொறைஞ்சுடுச்சு. ரெண்டாவது மாட்டுத்தீவனம் வெலை ஏறிப்போச்சு. வேட்டைக்குப் போறது மட்டும்தான் எங்களை இவன் ஆதியன்னு சொல்ல வைக்குது. சுதந்திரமாய் ஊரச் சுத்தி வந்தப்போ கிடைச்ச ஆத்மதிருப்தி இப்போ இல்லை. மரத்தடியில பொங்கித் தின்னாலும் மனசு முழுக்க றெக்கை கட்டிப் பறக்கும். அதனால எங்க சனங்க இப்போகூட வீட்டுல சோறு பொங்கறது கிடையாது. இன்னைக்கு தமிழ்நாட்டுல ஒரு பூம்பூம் மாட்டுக்காரனையும் பாக்க முடியாது. நாகரிகம் அதிகமாய் வாரி இறைச்ச பகட்டான நெறத்துல எங்க நிறம் மாறிப் போயிருந்தா கூட கவலை இல்லை; ஆனால் வெளுத்துப் போச்சு" பேசுகிற கண்ணையனின் கண்களில் விரக்தி வழிகிறது.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZYAQTtdthK1tGiabdoCHm9WZaFtEQs3bbRHiPwcfUn3oWJnpQfUwvA8v54q2hz1UjdhFdQGD1tx5HL1YnIh6xD00p3PwTJmzDUO_TexrgVXKE6Vtd_RHys4xIaB82aP4cnJs4vSCoYiA/s1600/kudukuduppai.jpg

சின்ன மளிகைக் கடை. விறகு அடுப்பில் பால் காய்ச்சும் டீ ஸ்டால். நடத்துபவரும் ஆதியன் இனத்தவரே! ஆங்காங்கு அவர்கள் பேசிக் கொண்டதை நம்மால் எளிதில் விளங்கிக் கொள்ள முடியவில்லை. என்ன பாஷை... இது என்றால், தெலுங்குதான் சார். ஆனா ரொம்பவும் மட்டம்" என்று ஒப்புக் கொள்கின்றனர்.‘மாயவா கோயிந்தா ரெங்கனாதா... அழகர் மலையானே... கள்ளங்குறிச்சி கலிய பெருமாளே... என்னைக்கும் நல்ல காலம் இந்த வீட்ல பொறக்கணும். ஏதோ இந்த பூம்பூம் மாட்டுக்காரனுக்கு அய்யா கண்டு ஒரு வேட்டி போடணும்... அம்மா கண்டு ஒரு புடைவை போடணும். சீரங்கம் ரெங்கனாத மூர்த்தி அவுங்களுக்கு நல்ல காலம் கொடுக்கணும்!’ இதைத்தாங்க நாங்க ராகமா பாடிட்டு ஒவ்வொரு வீட்டு வாசல்லயும் நிப்போம். புதுசா வேட்டியும் புடைவையும் தருவாங்க.


அஞ்சு பத்து பணம் தருவாங்க. சில நாள் நல்ல வசூல் ஆவும். சில நாள் ஏதும் ஆவாது. ஜனங்க மத்தியில எங்களுக்கு வரவேற்பும் படிப்படியாய் கொறைஞ்சிப் போச்சு. மாட்டுக்குத் தீவனம் வாங்கக்கூடத் தடுமாறிப் போனோம். அப்ப எங்ககிட்டேயிருந்து பிரிஞ்சு போன மாடுகள்தான். அத்தோட இந்தத் தொழிலுக்கு முழுக்குப் போட்டுட்டு அவுங்கவுங்களுக்குத் தோதான தொழிலுக்கு மாறிப் போனோம்!" என்கிறார் கண்ணன்.அவர் வீட்டில் பொம்மை வியாபாரச் சாமான்கள் குவிந்து கிடக்கின்றன. அதென்னங்க பொம்மை வியாபாரம்? கண் திருஷ்டி முகப் பொம்மை, திருஷ்டி சங்கு, கனரக வாகனங்களிலும் டூ-வீலர் வண்டிகளிலும் கட்டப்படும் கறுப்புக் கயிறு போன்றவை இவர்களது பொம்மை வியாபாரத்துக்குள் அடக்கம். ஊர்த் திடலின் மர நிழலில் நான்கைந்து இளைஞர்கள் வட்டமாகச் சுற்றியமர்ந்து கறுப்புக் கயிறு தயாரித்துக் கொண்டிருந்தனர். அதற்கு இன்னொரு பெயர் கம்பளிக் கயிறு.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiu_1pu5V0dCbJIvE-BqsgnAHfaUhqTO9yQ8TPRcs9tkKhTDJmDKxZdPhq7sM8xrMDdRFjwlfe3PiZSwNf2zxhgqe49y9nRJlCzXeVHMjyRhiUO4h2PK5ZTw_CD9PVYTQmoMfLH8q4OA6qj/s1600/photo%252B%2525281%252529.JPG

ஒரு வீதிக்குள் பிரவேசித்த நம்மை, கூந்தல் உலர்த்திக் கொண்டிருந்த இளம் பெண்ணின் அதட்டல் குரல் தடுத்து நிறுத்தியது. ‘யார் சார் நீங்க...? என்ன வேணும் உங்களுக்கு?’ என்றது. நம்மைத் தொடர்ந்து வந்த கண்ணன், விவரம் கூறி நம்மை விடுவித்தார். ஒன்பதாவது படிச்சிட்டு பக்கத்து ஊர்ல பஞ்சுமில் வேலைக்குப் போகிறாராம் அதட்டல் போட்ட மணிமேகலை. எங்க சனத்துல பொண்ணுங்க இப்போதான் வேலைக்குன்னு வெளியில போறோம்" என்கிறார் அவர்.‘மாரியாத்தா முத்து’ வாங்கச் சென்றிருந்த காசியம்மாள், தங்கள் குடியிருப்புக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போல்லாம் ஆண்களுக்கு பூம்பூம் மாடு. பெண்களுக்கு ‘மகமாயி முத்து’. ஒரு தாம்பாளத்தில் கொஞ்சம் அரிசி, வேப்பிலைக் கொத்து போட்டுக்கிட்டு வீடுவீடா முத்து கேட்போம். சில வீடுகளில் அரிசி; சில வீடுகளில் காசு பணம் போடுவாங்க. ஒரு நாளைக்கு பத்து கிலோ அரிசியும் கிடைக்கும்; அஞ்சாறு கிலோவும் கிடைக்கும். சில நாளைக்கு அம்பது நூறு பணம் மட்டும் கிடைக்கும்" என்கிறார் காசியம்மாள்.மின் விசை நீர்த்தொட்டியில் தண்ணீர் பிடிக்க வந்த சின்னப் பொண்ணுவிடம் விசாரித்தோம். பொம்மை ஏவாரத்துக்குப் போய் வருகிறவராம் அவர். நான் பொறந்தது மோதலோடு கோத்திரம். எம் புருசன் முங்கோடு கோத்திரம். எங்கள்ல பல கோத்திரம் இருக்கு. ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவங்க கண்ணாலம் பண்ணிக்க மாட்டாங்க" என்று சுவாரஸ்யம் கூட்டினார் அவர்.கண் திருஷ்டி முகப் பொம்மை விழுப்புரம் அருகே வாங்கி வருகின்றனர். பிறகுதான் வேண்டிய மாடல்களில் அதைத் தயாரிக்கின்றனர். கண் திருஷ்டி சங்குதான் வேலை வாங்குமாம். கடல் சங்கு, வில்வக் காய், ஐந்து முக கடல் நட்சத்திரம், படிகாரக் கல் எனக் கலைநேர்த்தியாகக் கட்டினால் உருவாகிறது கண் திருஷ்டி சங்கு.மாலை ஐந்து - ஆறு மணிக்கு தெருவில் மண் அடுப்பு மீது சோறு, குழம்பு சமைக்கின்றனர். அத்தோடு சரி. பிறகு மறுநாள் மாலைதான் சோறு, குழம்பு சமைக்கின்றனர்.லயன்ஸ் க்ளப் உதவியோடு திருமணம்(காதல் திருமணம்) செய்து கொண்ட செல்வம்-லட்சுமி தம்பதியினர் வீட்டுக்கு வெளியே சமைத்துக் கொண்டிருந்தனர். செல்வம் முருங்கைக்காய் அறுத்துக் கொடுக்க, மனைவி லட்சுமி சோறு பொங்கிக் கொண்டிருந்தார். மடியில் ஒரு குழந்தை. அடுத்த வாரிசு வயிற்றில். இரவு உங்கள் வீட்டு முருங்கைக்காய் சாம்பார்தான் எனக்கு!" என்றதும், இருவர் முகத்திலும் புன்முறுவல்.நீண்ட குச்சி, தோள்களில் கனத்த வலை சுமந்து நெடிய உருவம் நம்மை நோக்கி வந்தது. அட... காலையில் பார்த்த பெரியவர் கண்ணப்பன். மனுஷன் வேட்டைக்குக் கிளம்பி விட்டார். சிக்கிமுக்கிக் கல்லில் எப்படி தீப்பொறி உண்டாக்குவது, பஞ்சுதான் விளக்கு... என தீ மூட்டிக் காண்பித்தார். அதற்குள் வேட்டைக்குச் சென்றிருந்த சிலர் திரும்பி வந்திருந்தனர்.காட்டுப் பூனைக்கறியை ஒருவர் ஏரித் தண்ணீரில் சுத்தம் செய்து கொண்டிருந்தார். கல்லணை வரை சென்று வந்த இரண்டு பேர் நான்கைந்து ஆமைகளைப் பிடித்துப் பொசுக்கி வந்துள்ளனர். அதன் ஒரு பகுதியைப் பிய்த்து அப்படியே தின்ன ஆரம்பித்தார் ஓர் இளைஞர்.இரவு நேரம். இரண்டு மூன்று பெண்கள் அப்பகுதிக்குள் வந்தனர். நீங்களுமா எனக் கேட்டால், படம் மட்டும் புடிச்சிடாதீங்க. டவுன்ல போயி பிச்சை எடுத்துட்டு வர்றோம்," என்றனர்.செய்யும் தொழிலை இழந்தது ஒருபுறம் என்றால், அடுத்த வேளை சோற்றுக்கே கையேந்தும் அவல நிலை மறுபுறம். நாக மங்கலம் குடியிருப்புவாசிகளுக்கு நல்ல காலம் எப்போது பிறக்கும்?ஆதியன் இன மக்களிடையே ஆகுலோடு, முங்கோடு, மோதலோடு, காஞ்சானோடு, எரபினோடு, தாரம் ஓடு, ராயலோடு, கிலகாலோடு, ஈதாலோடு, குராண்ட போடு என்று மேலும் பற்பல கோத்திரங்கள் உள்ளன. காதல் மணம் தவிர ஏனைய திருமணங்களில் கோத்திரம் அறிந்தே சம்பந்தம்.பெற்றோர்கள் பார்த்துச் செய்யும் திருமணம், காதல் திருமணம் இரண்டும் உண்டு. வரதட்சணை இல்லை. மதியம் மதுச் சரக்கு மற்றும் பிரியாணியுடன் அமர்க்களமான விருந்து. மாலை நேரத்தில், திடலில், கோயில் முன்பாக மணமகள் கழுத்தில் மண மகன் தாலி கட்டுதல். திருமணப் பத்திரிகைகள் ஏதும் அச்சடிப்பதில்லை.

http://puducherrynews.com/news/wp-content/uploads/2009/03/poompoommadu-300x238.jpg

அம்மா - அப்பாக்களில் பெரும்பாலோர், எஸ்.டி. கம்யூனிட்டி சர்டிஃபிகேட் இந்து ஆதியன் எனப் பெற்றுள்ளனர். ஆனால், அவர்களது பிள்ளைகளுக்கு எஸ்.டி.சாதிச் சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.பெண் பிள்ளைகளில் பலரும் நடுநிலைப் பள்ளி கல்வி வரை படித்துள்ளனர். ஆண்களில் ஒருவர் பி.காம்., இன்னொருவர் டிப்ளமோ முடித்துள்ளார். எங்களுக்கு எஸ்.டி. சாதிச் சான்றிதழ் கிடைத்திருந்தால், அரசு வேலை கிடைத்திருக்கும்" என்கின்றனர்.

நன்றி - கல்கி , புலவர் தருமி, மழை ரேணு,கானா ப்ரபா அண்ணன்


2 comments:

Anonymous said...

மிக அருமை! அதிகம் அறியப்படாத விசயங்கள் தங்கள் தெரிவின் மூலமாக அறிண்து கொண்டேந்!

ராஜி said...

சின்ன பிள்ளையா இருக்கும்போது வீடுவீடா வருவாங்க முதல்ல பயந்து அப்புறம், மாட்டுக்காரன் சொல்றாதுக்கெல்லாம் மாடு தலையாட்டும் அழகை அதை ரசிச்ச நாட்கள் உண்டு. எப்பலாம் பூம்பூம் மாட்டுக்காரனை பார்க்குறதே இல்லை