Sunday, September 30, 2012

பத்ம வியூகம் – ஜெயமோகன்- சிறுகதை

தூண்டு விளக்கேந்திய தாதி கதவை ஓசையின்றித் திறந்து, உள்ளே வந்தாள். அவளிடம்
தீபமிருந்ததனால் அறையின் இருட்டு மேலும் அழுத்தமானதாகப் பட்டிருக்கக்கூடும்.
படுக்கையைக் கூர்ந்து பார்த்தாள். சற்றுப் புரண்டு அசைவு காட்டினேன். அணைந்து
விட்டிருந்த கன்யா தீபத்தை ஏற்றிவிட்டு, கைவிளக்குடன் என்னை நெருங்கினாள்.
குனிந்து மெல்லிய குரலில், “நேரமாகி விட்டது மகாராணி” என்றாள்.


“என்ன?” என்றேன். தொண்டைக்கும் நாவுக்கும் பேச்சே பழக்கமில்லாதது போலிருந்தது.
என் மனமோ பெரும் கூக்குரல்களினாலும் அலறல்களினாலும் நிரம்பி வழிந்து
கொண்டிருந்தது. அப்பிரவாகத்திலிருந்து ஒரு துளியை மொண்டு உதடுகளுக்குக்
கொண்டுவரப் பெருமுயற்சி தேவைப்பட்டது.
”விடிந்து வருகிறது. பிரம்ம முகூர்த்தத்தில் கிளம்பவேண்டும் என்று உத்தரவு”
என்றாள் தாதி.


“எங்கு?” என்றேன். என்னால் எதையுமே யோசிக்க முடியாதபடி மனம்
ஓலமிட்டுக்கொண்டிருந்தது.


தாதி தயங்கினாள். உதடுகளை ஈரப்படுத்தியபடி, “இன்று இளவரசருக்கு நீர்க்கடன்”
என்றாள்.


குளிர்ந்த உலோகப் பரப்புள்ள வாள் ஒன்று என் அடிவயிற்றில் பாய்ந்தது
போலிருந்தது. மனம் ஒரு கணம் நின்றுவிட, ஏற்பட்ட அமைதி வலிபோல் என் உடம்பெங்கும்
துடித்தது. பிறகு விம்மல்கள் என் வயிற்றை அதிரவைத்தபடி எழுந்தன. மார்பை மோதி,
தொண்டையை இறுக வைத்தன. உதடுகளைக் கடித்துக் கொண்டேன்.


தாதி குனிந்து, “மகாராணி” என்றாள். என்ன சொல்வது என்று அவளுக்குப் புரியவில்லை.
நான் என்னை இறுக்கி, அனைத்தையும் உடலுக்குள் அழுத்திக்கொண்டேன். ஒரு சில
கணங்கள் அப்படியே அமர்ந்திருந்தேன். என் குரல் பிறகு நிதானமாகவே வெளிப்பட்டது.
“ஏற்பாடுகள் எல்லாம் ஆயிற்றா?” என்றேன்.


“ஸ்தேதவனத்திலிருந்து பட்டத்துராணியும் பிறரும் நேராக கங்கைக் கரைக்கே வந்து
விடுவார்களாம்.”


எழுந்தேன். உடல் மிகவும் கனமாக இருந்தது. சம நிலையிழந்து துவண்டது. தாதி
என்னைப் பிடிக்கலாமா என்று யோசித்து முன்னகர்ந்தாள். வேண்டாம் என்று கையை
அசைத்தேன். மெதுவாக நடந்தேன். அரண்மனை அமைதியாக இருந்தது. தீபங்கள் நீரில்
மிதப்பவைபோல அலைய, தாதிகள் நடனமாடினார்கள். இரவுக்குரிய ஒலிகள் வெளியே கேட்டபடி
இருந்தன. இளம் தாதி ஒருத்தி வந்து “நீராட ஏற்பாடுகள் செய்துவிட்டேன்” என்றாள்.


இளம் வென்னீர் உடலைத் தழுவி வழிந்தது. மனம் அதில் சிறிது இளைப்பாறுவது
ஆச்சரியமாக இருந்தது. கூந்தலைத் துவட்டிவிட்டு வெண்ணிற உடைகளை அணிந்துகொண்டேன்.
ஒரேயொரு வைர மாலையை மட்டும் அணிந்தேன். சிதையிலும் நான் நகைகளை அணிந்தாக
வேண்டும். நான் சுபத்திரை. பாண்டவ குலத்தின் மகாவீரனின், உபசக்ரவர்த்தியின்
பத்தினி. யாதவகுலத் தலைவனின் தங்கை. அந்த இரு வேடங்களையும் ஒருபோதும் நான்
கழற்ற முடியாது. என் மகன் போர்க்களத்தில் இரும்புக்கதையால் மண்டை உடைபட்டு,
உடல் முழுக்க அம்புகள் தைத்திருக்க, விழுந்து கிடப்பதைப் பார்க்க
நேர்ந்தபோதுகூட அதை மறக்க நான் அனுமதிக்கப்படவில்லை.


செய்தியைக் கூற அன்று
அண்ணாவே வந்தார். எப்போதுமுள்ள தன்னம்பிக்கை நிறைந்த அந்தப் புன்னகை. அமைதியான
குரல். “சுபத்திரை, நீ யாதவ இளவரசி, பாண்டவ ராணி. அதை நீ ஒருபோதும் மறக்க
மாட்டாய் என்று தெரியும்…” பிற தாய்மார்களையும் மனைவிகளையும் போல் மார்பிலும்
வயிற்றிலும் அறைந்தபடி, தலைவிரிகோலமாக ஓட முடியவில்லை. அபிமன்யுவின் உடல்மீது
விழுந்து கதற முடியவில்லை. அவன் பால் குடித்த இந்த மார்புகளை அறைந்து அறைந்து
உடைத்திருந்தேனென்றால் என்னால் தூங்க முடிந்திருக்கும். எப்போதும் அண்ணாவின்
பார்வை உடனிருந்தது. அவரது அழுத்தமான சொறகள். அனைத்துமறிந்த நிதானம்.


“சுபத்திரை, பசுக்கள் திமிறும் திமில்கலைக் கருத்தரிக்கின்றன. குதிரைகள் மண்ணை
மிதித்துப் பாயும் நான்கு குளம்புக்லைக் கருத்தரிக்கின்றன. ஷத்திரியப் பெண்கள்
வீர மரணம் அடையும் மகாபுருஷர்களைக் கருத்தரிக்கிறார்கள்.” அவரை எப்படி
வெறுத்தேன் அன்று! வாழ்நாளில் முதல் முறையாக அவருடைய இனிய குரல் எனக்கு
நெருப்பாகப் பட்டது. அவருடைய நிதானம் அருவருப்பைத் தந்தது. அவருடைய தர்மோபதேசம்
மாறாத நியாயங்கள், சுற்றி வளைக்கும் தருக்கங்கள். அவர் மனிதர் அல்ல. வெறும்
ராஜதந்திரி. உறவு கிடையாது, பாசம் கிடையாது. நெகிழ்ந்துருகிக் கன்னத்தில்
வழியும் ஒரு துளிக் கண்ணீரை அவர் அறிய மாட்டார். அழகிய சொற்றொடர் ஒன்றை அவர்
அத்தருணத்தில் கூறக்கூடும்.


“அண்ணா எங்கிருக்கிறார்?”


“கண்டவனத்தில் சக்ரவர்த்தியுடன் தங்கியிருப்பதாகச் சொன்னார்கள்.”


நான் கேட்க வேண்டிய அடுத்த கேள்விக்காகத் தாதி காத்திருந்தாள்.

“அவர்?”

“இரவு இரண்டாம் நாழிகைவரைகூட இருந்தார் என்று சொன்னார்கள். பிறகு ரதத்தில்
ஏறி…”

“சரி” என்றேன். தாதி பின்வாங்கினாள். ஆம், அவர் இன்றிரவு திரௌபதியை நெருங்க
முடியாது. புண்பட்ட புலிபோல் அவள் இருப்பாள். அவளை யாருமே நெருங்க முடியாது.
கிருபரும் அஸ்வத்தாமாவும் வைத்த நெருப்பில் அவளுடைய ஐந்து புதல்வர்களும்
உயிரோடு எரிந்தார்கள். அதைத் தன் கண்ணால் பார்க்கும் சாபம் பெற்ற பிறவி அவள்.
என்ன செய்துகொண்டிருப்பாள் இந்நேரம்? வாளெடுத்து ஆயிரம் பேரின் இதயத்தைக்
கிழித்து, அந்த உதிரத்தில் நீராடினால் ஒருவேளை அவள் மனம் ஆறக்கூடும். ஆரிய
வர்த்தத்தையே சாம்பலாக்கினால் அவள் மனம் ஆறக்கூடும். இந்நிலையில்கூட அவளைப்
பற்றி இப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது. அவள் தன் புதல்வர்களை இழந்த செய்தியைக்
கேட்டபோதுகூட முதன் முதலில் மனதில் எழுந்தது திருப்திதான். அழட்டும். அடிவயிறு
பற்றியெரியட்டும். அவளுடைய ஆங்காரமல்லவா இந்த ஆரியவர்த்தத்தில் பேரழிவை
விதைத்தது. அத்தனைக்கும் பிறகு மணிமுடி சுடர அவள் சக்கரவர்த்தினியாக
சிம்மாசனமேறி அமர்ந்து சிரிக்க வேண்டுமா? தர்மம் அதற்கு அனுமதிக்குமா?
வைரமுடியின் ஒளி அவள் முகத்தில் விழும்போது கண்கள் கலங்கிக் கலங்கிக் கண்ணீர்
உகுக்க வேண்டும். பாரதவர்ஷம் அவள் பாதங்களைப் பணியும்போது அவள் உடல்
எரியவேண்டும். சப்ரமஞ்சக் கட்டிலில் மலர்ப் படுக்கைமீது ஒரு நாள்கூட அவள்
நிம்மதியாகத் தூங்கக்கூடாது. என் குழந்தை களத்தில் சிதைந்து கிடப்பதைக்
கண்டபோது; ஒரு கணம் அக்காட்சி உச்சமாக, அருவருப்பாக, அந்நியமாகத் தோன்றி என்னை
உறைய வைத்த பிறகு, அந்த குளிர்ந்த வெட்டு என் வயிற்றில் பதிந்தபோது; அடிப்பாவி
என் குழந்தையை பலிவாங்கி விட்டாயே என்றுதான் கூவினேன். என் குரல் என்
மனதுக்குள்ளேயே ஒலித்து அடங்கியது.

உறைந்த ரத்தம் கரிய தடாகமாகச் செம்மண்ணில்
பரவியிருக்க, அதன் மீது கிடந்த உடலில் நான் என் கையால் அணிவித்த மஞ்சள் மேலாடை
கிடந்தது. ஆனால் அந்த முகம்! அது என் குழந்தையல்ல. அந்தக் கணங்களில் அந்த
விலகல்தான் எவ்வளவு ஆறுதலூட்டுவதாக இருந்தது. இது அபிமன்யு இல்லை. அவன் வேறு
எங்கோ இருக்கிறான். எந்தக் கணத்தில் வேண்டுமானாலும் என்முன் தோன்றி
ஏமாந்துவிட்டாயா என்று சிரிப்பான்.


எப்படிச் சிரிப்பான்? உதடுகள் சிறியவையாக, சிவப்பாக இருக்கும். மேலுதட்டின்
இளநீல மயிர் மட்டும் இல்லையென்றால் பச்சைக் குழந்தைதான். சிரிக்கும்போது சிறிய
கண்களைப் பாதி மூடிவிடுவான். வலுவான அகன்ற தோள்களைக் குலுக்குவான். எப்போதும்
சிரிப்புதான். எதற்கெடுத்தாலும் கிண்டல். என் தோள்களைப் பிடித்து உலுக்குவான்.
அவனுக்காக அச்சம் மிகுந்தவளாக, மடமை நிரம்பியவளாக என்னையறியாமலேயே நான்
வேடமிடுவேன். கனத்த கரங்கள். வடு நிரம்பிய முழங்கை. அண்ணாந்து பார்க்க வைக்கும்
உயரம். அகன்ற மார்பு. அதைப் பார்த்ததும் மனம் மலரும். மறுகணம் கண்பட்டுவிடுமோ
என்று சுருங்கும்.

முன்பின் தெரியாத உத்வேகம் அவனுக்கு. அன்னையின் மனம்
தவிப்பது ஒருபோதும் அவனுக்குத் தெரிவதில்லை. அவன் நடக்கத் தொடங்கிய நாள்முதல்
தொடங்கிய அவஸ்தை அது. சாளரத்தில் ஏறி, பரணில் தொற்றி, தொங்கியபடி வீரிட்டலறும்.
ஏணியில் ஏறி உச்சிப்படியில் நின்று சிரிக்கும். பலாமரத்துக் கிளைகளின் நுனியில்
தொங்கி ஆடி அடுத்தக் கிளைக்குச் செல்வான். தென்னை மரத்திலிருந்து கங்கை நீரில்
தலைகுப்புறக் குதிப்பான். குதிரை மீதமர்ந்து நீரோடைகளைப் பறந்து தாண்டுவான்.
வாளைச் சுழற்றி மேலே வீசி கீழே நின்று பிடிப்பான். மதம் பிடித்த யானையை அடக்கி
ஏறி அமர்வான. “அபிமன்யு, அபிமன்யு கவனம் கவனம்!” இதுவே என் தாரக மந்திரமாக
ஆயிற்று. வேகம்தான் எப்போதும். எந்த நிமிடமும் மூடப்பட்ட கதவுகளை உதைத்துத்
திறக்கத் துடிப்பவனைப் போல. “அவசரப்படாதே அபிமன்யு” என்று எத்தனை தடவை
கண்ணீருடன் மன்றாடியிருப்பேன். உதிரம் வழிய வந்து நிற்பான். எலும்பு உடைந்து
படுத்துக் கிடப்பான். என் குழந்தைக்குத் தெரிந்திருந்தா இவ்வளவுதான் தன்
நாட்கள் என்று? அய்யோ, என் செல்வத்தை நான் கண்ணாரப் பார்க்கவேயில்லையே.
மார்போடணைத்து திருப்தி வர முத்தமிட்டதில்லையே. இந்த ஆபகரணங்கள், பட்டாடைகள்,
மகாராணிப்பட்டம் எல்லாவற்றையும் வீசிவிட்டு என் குழந்தையுடன் பத்து நாள்
எங்காவது இருக்கிறேன். அடர்ந்த காட்டில் ஒரு குடிலில். அவனுக்குப் பாத சேவை
செய்கிறேன். அவன் தூங்க், விழித்திருந்து கண் நிறைய அவனைப் பார்க்கிறேன். அவன்
என்னை அம்மா என்று அழைப்பதை மீண்டும் கேட்டால் போது. ஆசை தீர ஆயிரம் முறை
கூப்பிடச் சொல்லிக் கேட்டால் போதும். பிறகு அவனைக் கொண்டு செல்லட்டும். இல்லை;
அவனுக்குப் பதில் நான் வருகிறேன். போதும் இனி எனக்கு இங்கு எதுவும்
மிச்சமில்லை.


“தேர் வந்துவிட்டது. மகாராணி” என்று தாதி வந்து சொன்னாள். நான் எழுந்து மெல்ல
வாசலை நோக்கி நடந்தேன்.


*2*
குளிராக இருந்தது. வானமெங்கும் நட்சத்திரங்கள் விரிந்து கிடந்தன. பூமியை மாறாத
காதலுடன் பார்க்கும் ரிஷிகளின் கண்கள். என்னதான் பார்க்கிறார்கள் அப்படி?
மண்ணில் மனிதர்கள் கொள்ளும் துயரங்கள் அவர்களுக்கு அத்தனை மகிழ்வூட்டுகின்றனவா
என்ன? அவர்கள் ரிஷிகள். பந்தபாசங்களை வென்றவர்க்ள். பாமர மனதின் துக்கம்
அவர்களுக்குப் புரியாது. ஆகவேதான் அங்கிருந்தபடி தர்ம நியாயங்களைத்
தீர்மானிக்கிறார்கள். அண்ணாவும் ரிஷிதான். சதுரங்கம் விளையாடும் ரிஷி.
வெற்றிமீது மட்டும் பற்றுக்கொண்ட ரிஷி. மனிதர்களும் பேரரசுகளும் சதுரங்கக்
காய்கள்.


தேர் நிதானமாக ஓடியது. பிரதான வீதி ஓய்ந்து கிடந்தது. தூசி மணம் நிரம்பிய
குளிர்ந்த காற்று உடைகளைச் சிறகுகளாகப் படபடக்கச் செய்தது. இன்னமும் இரவின்
ஒலியே கேட்டது. அவ்வப்போது சில பறவைகளின் ஓய்ந்த ஒலிகள். வீடுகளில் விளக்குகள்
அலைய ஆட்கள் நடமாடுவது தெரிந்தது. ஆனால் குரல்கள் இல்லை. ஒருவேளை இந்த நகரமே
இன்று நீர்க்கடனுக்குத் தயாராகிறது போலும். எத்தனை ஆத்மாக்களை இன்று கங்கை
வாங்கிக் கொள்ளுமோ? அவற்றைக் கடலுக்குக் கொண்டு செல்லும் சக்தி அவளுக்கு
இருக்குமா? முலையூட்டிய மார்பில் பிணங்களை சுமந்து செல்லும் விதி அவளுக்கு.


காற்று வேகமடையும்போதெல்லாம் எண்ணங்கள் பிய்ந்து ரதத்திலிருந்து பறந்து
பின்னோக்கிச் செல்வதாகப் பட்டது. மெல்ல முகத்திலறையும் காற்றின் வேகத்தில்
தெரியும் ரதவேகம் மட்டும் மனதில் எஞ்சியது. தரையில் கால்படாத குதிரை போல மனம்
அந்த ரதத்துடன் சேர்ந்து ஓடியது. காலமும் இடமும் கரைந்து போய் எங்கு
வேண்டுமானாலும் நான் செல்ல முடியும் என்று பட்டது. என் உடலின் எடை குறைந்தது.
என் தசைகள் மென்மையும் இறுக்கமும் கொண்டன. என் சிரிப்பில் அதிர்வும் குரலில்
குழைவும் ஏறியது. அப்போதுதான் நான் சுபத்திரை என்று உணர்ந்தேன். ஆம், நான்
அணிந்திருப்பது ஒரு வேடம். இந்த கனத்த உடல் ஓர் ஆடை, இதைக் கழற்றி வீசிவிட்டால்
நான் சிற்றோடைகள் மீது ரதத்துடன் சேர்ந்து பறக்கும் சுபத்திரை. இரு கைகளிலும்
வாளேந்தி இருவரிடம் போரிடும் யாதவ இளவரசி. ரைவத மலையின் கிரி பூஜையன்று
தோழிகளுடன் மதுவருந்திவிட்டு கும்மாளமிடுபவள். வெறிகொண்டு புரவிமீதேறி உருளும்
பாறைகள் நிரம்பிய மலைச்சரிவில் காற்றாக இறங்குபவள். இது எல்லாம் கனவு.
விழித்துக்கொண்டால் நான் துவாரகையில் என் அறையில் இருப்பேன்.

சுதர்மையும்
கிரிஜையும் பக்கத்து அறையிலிருந்து வருவார்கள். வாட்போர் கற்றுத் தந்த அக்ரூகர்
தாத்தா, பிரியத்துடன் கதை சொல்லும் சாத்யகி மாமா, கண்டிப்பான சாம்பன் மாமா….
எப்போதும்கூட இருக்கும் தோழனாக அண்னா. குறும்பும் முரட்டுத்தனமும் பாசமும்
நிரம்பியவன். எதை வேண்டுமானாலும் செய்யக்கூடிய மதிநுட்பம் வாய்த்தவன். அண்ணா,
நீதான் எப்படி மாறிவிட்டாய், உன் கண்களில் மாறாமல் தெரிந்த அந்தக் குறும்பு
எங்கே?


ரதம் குலுங்கியது. பிறகு மீண்டும் வேகம் எடுத்தது. இதே போன்ற ஒரு மத்ஸ்ய
ரதத்தில் தான் துவாரகையை விட்டு வந்தேன். ரதத்திற்குள் கையில் நாணேற்றப்பட்ட
வில்லுடன் அன்று சற்றும் அறிந்திராத, எனக்கு மாறாக புதிராகத் தோன்றிய, மாவீரன்
இருந்தான். பின்னால் அக்ரூகரின் தலைமையில் யாதவப் படை துரத்தி வந்தது. அம்புகள்
சிறு பறவைகள்போல வந்து தரையிறங்கின. ரதத்தில் நாணொலியின் டங்காரம். குறிதவறாத
அம்புகள் பட்டு யாதவர்கள் குதிரை மீதிருந்து பாறைகள் நிரம்பிய மண்ணில் விழுந்து
அலறினர். மனதில் கனிவெறி ஏறியபடியே வந்தது. கிரிபூஜையின்போது மதுவின் போதை
தலையைக் கிறங்க வைக்கும். அது மேலும் மேலும் என்று குதிரையைத் தூண்டச்
செய்யும். இப்போது மது இல்லை. ஆனால் மனதில் பலமடங்கு போதை. நாணேற்றும்
கரங்களில் புரளும் தசைகளை ஓரக்கண்ணால் பார்த்தேன். மயிர் அடர்ந்த கரிய மார்பு.
மான் தோல் சரடால் கட்டப்பட்டு, காற்றில் பறக்கும் சுருண்ட காகபட்சக் குழல்.
சல்லடத்தின் இறுக்கத்தில் இறுகி இறங்கிய வயிறு. வேகம் வேகம் என்று ஆத்மா
துடிதுடித்தது. முடிவற்று திசைவெளியில் அப்படியே ஊடுருவியபடி இருக்கவேண்டும்
போலிருந்தது.


யாதவ தேச எல்லையைக் கடந்தோம். வெகு தொலைவில் காண்டவப்பிரஸ்தத்தின் மலைகள்
தெரிந்தன. மழை வரப்போகும் தருணம். மங்கிய ஒளியில் யாதவ தேசத்துப் புல்வெளி
வெகுதூரம் வரை பரவியிருந்தது. வானில் பெரும் மேகக் குவியல்கள் மெல்ல நகர்ந்தன.
கூட்டம் கூட்டமாக பசுக்களை ஓட்டியபடி இடையர்கள் சென்றனர். தூரத்தில்
மேகமொன்ரின் இடுக்கு வழியாக செம்பொன்னிற வெயில் ஒரு தூண்போலப் புல்வெளியில்
விழுந்து கிடந்தது. அப்பகுதி மரகதப் பரப்பாக ஜொலித்தது. குதிரைகள்
களைத்துவிட்டன. நுரை தள்ளிய வாயுடன் அவை தலைகுனிந்தன. அவற்றின் உடல்களிலிருந்து
வியர்வை முத்துக்களாக உதிர்ந்து கொண்டிருந்தது. குதிரை வியர்வையின் மனதைக்
கிளரச் செய்யும் மணம் எழுந்தது. என் கண்முன் அறியாத தேசமொன்றின் வாசல்
திறப்பதைக் கண்டேன். தூரத்தில் காட்டின் விளிம்பு தெரிந்தது. தியானத்திலமர்ந்த
பெரும்பாறைகள். பசும்காடுகள் மண்டிய மலைச்சரிவுகள். மலைச்சிகரஙக்ளும் வானும்
மௌனமாகக் கரைந்து ஒன்றாகும் இளநீலம். யாதவநிலத்தின் நாற்புறமும் திறந்த மண்ணில்
வாழ்ந்து பழகிய நான் மலைகளால் சூழப்பட்ட ஒரு சிறையாகவே அந்தப் புதிய தேசத்தை
உணர்ந்தேன். அங்கு குதிரைமீது ஏறி முடிவற்றுப் பாய்ந்து செல்ல முடியாது. முதல்
முறையாக அச்சம் உள் மனதில் தலைகாட்டியது.


தேரின் உள்ளிருந்து உடலில் சிறு உதிரக்கறைகளுடன் வெளிவந்தார் அவர். தேரை ஓரமாக
நிறுத்தி, குதிரைகளை அவிழ்த்து ஓரமாக நீரோடையில் நீரருந்த விட்டேன்.
புல்பரப்பில் அமர்ந்து கால்களை நீரில் விட்டு அளைந்தபடி அமர்ந்திருந்தேன்.
வானம் கறுத்திருந்ததனால் நீர் குளிராக இருந்தது. என்னருகே வந்து அமர்ந்தார்.
குதிரையின் வியர்வை மணம் என் நாசிகளை நிரப்பியது. என் தோளைத் தொட்டார். சுட்டு
விரலின் நாண்வடு மரக்கட்டை போல உறுத்தியது. கிளர்ச்சி உடம்பெங்கும் கதகதப்பாகப்
பரவியது. “சுபத்திரை, நமது எல்லைக்கு வந்துவிட்டோம். இனி இதுதான் உன் தேசம்.”
நான் தலை குனிந்தான். என் புஜங்களைப் பற்றினார். “அச்சமாக இருக்கிறதா?” மீசை
மிக அருகே தெரிந்தது. கண்களின் ஒளி குறுவாள் நுனிகள் போலக் குத்திவிடும் என்று
அச்சமூட்டுவதாகத் தெரிந்தது. “இல்லை: என்றேன். அக்கணங்களில் உள்ளூர வியந்து
கொண்டிருந்தேன். எப்படி இந்த முடிவை எடுத்தேன்? “நான் அர்ச்சுனன்” என்று இவர்
கூறியதும் எப்படி என் மனத்தின் தளைகளெல்லாம் அறுந்தன. அண்ணாவின் உயிர் நண்பர்,
பெரும் வீரர். என்னை நாடி வந்தவர். இல்லையில்லை. அவற்றையெல்லாம் விட என்னைக்
கவர்ந்தது இன்னொன்று. அவரது சாகசம் பற்றிய கதைகள். புரட்டுகள், ஜாலங்கள்.
போகுமிடமெல்லாம் அவர் வென்றடைந்த பெண்கள். வென்றடக்க ஒரு முரட்டுக் கரும் புரவி
கிடைத்த சந்தோஷம் என்னுடையது. அபாயம் தரும் ஈர்ப்பு அது. அறிய முடியாத
ஆபத்துகளும் இன்பங்களும் நிரம்பிய ஒரு வாசலைத் திறக்கும் துடிப்பு.
”எவ்வளவு அழகாக இருக்கிறாய் தெரியுமா?” என்று கேட்டபடியே என் இடையில் கையை
வளைத்து, தோள் வளைவில் முகம் புதைத்தார். மெல்ல நகர்ந்த கைகள் பின்புறம் என்
கச்சை அவிழ்த்தன. உதடுகள் வெப்பமாக அழுந்தின. என் உடம்பு வெம்மையும்
இறுக்கமுமாக எழுந்தது. மறுகணம் அந்த அலட்சியமான சுதந்திரம் என்னைச் சுட்டது.
கைகளால் அவர் மார்பைப் பிடித்துத் தள்ளினேன். திமிறினேன். என் வளையல்கள்
குலுங்கின. மாலைகள் நெறிபட்டன. அவை என்னைக் கேலிப் பொருளாக மாற்றுவதை
உணர்ந்தேன். அவருக்கு என் திமிறல் உற்சாகத்தைத் தந்தது. சிரித்தபடி,
“குதிரைக்குட்டி போலிருக்கிறாய்” என்றார்.


என் வேகம் தளர்ந்தது. கூசிச் சுருங்கிப்போனேன். நான் ஒரு முரட்டுக் குதிரையை
வெல்லவில்லை. ஒரு சிறுத்தையால் வேட்டையாடப்பட்டிருக்கிறேன். அவரைத் தள்ளுவது
பயனற்றது என்று பட்டது. அவர் என் உடலைக் கையாண்ட விதத்தில் இருந்த அனுபவத்
தேர்ச்சி என் அங்கங்களை உறைய வைத்தது. என் மனம் கூர்மையடைந்தது. அந்த எண்ணம்
வந்த உடனே அந்த ஆயுதத்தின் கூர்மையை எண்ணி என் மனம் உவகை கொண்டது. ”சரி, உங்கள்
ராஜபத்தினி என்ன சொல்லப் போகிறாள் இதற்கு?” என்றேன்.


அவர் பிடி தளர்ந்தது. முகம் வெளிறியது. எழுந்து அமர்ந்தார். தலை குனிந்தபடி,
“எனக்கும் அவளை நினைத்தால் அச்சமாகத்தான் இருக்கிறது” என்றார். “ஒரு கணம்
கங்கைபோல அரவணைப்பாள். மறுகணம் பாம்பு போலிருப்பாள்.”


என் மனம் இறுகியது. பிறகு நெகிழ்ந்தது. இந்த ஜகப் புரட்டனுக்குள் இருக்கும்
அஞ்சிய குழந்தையை இதோ நான் கண்டுகொண்டிருக்கிறேன். அவர் தலையை என்
மார்போடணைத்தபடி, “கவலைப்படாதீர்கள்” என்றேன். மனதைக் கருணை நீராட்டிய போதிலும்
உள்ளூர ஒரு வெற்றிக்களிப்புதான் இருந்தது.


“நீ ஒரு இடைச்சியாக வேடமிட்டு திரௌபதியிடம் போ. அவளிடம் எனக்கு வேறு
யாருமில்லை; நீயே அடைக்கலம் என்று கூறு. அடைக்கலம் தந்துவிட்டாளென்றால் பிறகு
விஷயத்தைச் சொல்வோம். அவள் வாக்கு மாறக் கூடியவளல்ல” என்றார்.
“ஏற்றுக்கொள்ளவில்லையென்றால்?”
”நிச்சயமாக ஏற்றுக்கொள்வாள். அவளுடைய கர்வம் ஒரு கோட்டைபோல. அதை உடைத்து உள்ளே
போனால் அவள் ஒரு குளிர்ந்த தடாகம்.”


மீண்டும் என் ஆங்காரம் படமெடுத்தது. கசப்பு மனமெங்கும் பரவியது. அதன்பிறகு அவர்
என்னைத் தொட முயலவில்லை. எரியும் மனத்துடன் நான் ரதத்தில் ஏறிக்கொண்டேன்.
மழைத்துளிகள் உதிரத் தொடங்கின. வானம் உடைந்து கொட்ட ஆரம்பித்தது. புல்வெளியில்
மழையின் வெண்பட்டுத் திரை நெளிந்தது. அதைக் கிழித்தபடி ரதம் ஓடியது.
காண்டவப்பிரஸ்தத்தின் அடர்ந்த காடு மீது மழை கொட்டும் ஓலம் பெரியதோர்
சைன்யத்தின் போர்க்குரல் போல ஒலித்தது. அச்சம் புறக்குளிரைவிட அழுத்தமான
குளிராக என் மீது பரவியது. எனக்காக வியூகமிட்டிருக்கும் படை எது? ஒரே கணத்தில்
நான் உள்ளே நுழைந்து விட முடியும். ஆனால் அதன் நிச்சயமின்மையே என்னை ஈர்க்கும்
சக்தியாக இருந்தது. காட்டில் ரதம் நுழைந்தபோது உடம்பு ஏனோ சிலிர்த்தது.


*3
*
கங்கை நீர் கலங்கலாகச் சுழித்துச் சென்றது. அதன் கரைகளில் உயரமற்ற புதர்
மரங்கள் அடர்ந்திருந்தன. கரையோரமாக செந்நிற உத்தரீயம் போலப் பாதை கிடந்தது.
புரவிகளின் பாதங்கள் புழுதிமீது ஓசையின்றிப் படிய, நீரில் மிதப்பதுபோல ரதம்
நகர்ந்தது. திரையை விலக்கிப் பார்த்தபடியே வந்தேன். இருள் இன்னும் பிரியவில்லை.
ஆயினும் கூட்டம் நிறையவே இருந்தது. மரத்தடிகளில் மூட்டை முடிச்சுகளுடன்
வயோதிகர்கள் அமர்ந்திருந்தனர். சற்று தள்ளி முகத்திரை போட்டபடி, கூட்டம்
கூட்டமாகப் பெண்கள். ஊடே குழந்தைகள் விளையாடின. மாட்டு வண்டிகள் அவிழ்த்துப்
போடப்பட்டிருந்தன. மாடுகள் மணி குலுங்கத் தலையாட்டியபடி, அசை போட்டுக்கொண்டு
படுத்துக்கிடந்தன. கங்கை நீரின்மீது மட்டும் ஒளி சற்று அதிகமாக இருந்தது. அதன்
செந்நிற ஆழத்திற்குள் எங்கோ இருந்து ஏதோ ஒளிவிடுவது போலிருந்தது.
படித்துறைகளில் புரோகிதர்கள் நிரம்பியிருந்தனர். கட்டுக் கட்டாகத் தர்ப்பை
கிடந்தது. வெண்கலப் பாத்திரங்கள் கங்கையின் அலைபாயும் ஒளியை மௌனமாகப்
பிரதிபலித்தபடி காத்து நின்றன. கங்கையின் கரையோரமாக நீலமும் சிவப்பும்
வெள்ளையுமாக நீர்ப்பூக்கள் இலைப் பரப்புடன் சேர்ந்து நெளிந்தன.


அரசகுல ரதம் வருகிறது என்று தெரிந்தும் எவரும் கிளர்ச்சி அடையவில்லை. எழுந்து
பார்க்கவுமில்லை. வெகுசிலர் ஆர்வமின்றி திரும்பிப் பார்த்தனர். வெறித்த கண்கள்
என்னைத் தொட்டு மீண்டன. மரங்களின் மேல் நுனிகளில் இளம்பசுமை துலங்க
ஆரம்பித்துவிட்டது. இன்னும் அரை நாழிகையில் நன்கு புலர்ந்துவிடும். என்ன இது?
இவ்வளவு கூட்டமிருந்தும் ஏன் ஒலியே இல்லை? மனித உடல்கள் நீர்மீன்கள் போல
ஒலியின்றி வாயசைஹ்தபடி மெல்ல நடமாடுகின்றன. விசித்திரமானதொரு பொம்மலாட்டம்
போலிருந்தது. திடீரென்று அக்கூட்டத்தில் முதியவர்களும், பெண்களும் குழந்தைகளும்
மட்டும் இருப்பதைப் பார்த்தேன். இளைஞர்களேயில்லை. மீண்டும் அடிவயிற்றில் அந்த
வாள் பாய்ந்தது. அத்தனை பேருமா? அத்தனை பேருமா? உடம்பு நடுங்க, கண்களை மூடி,
நெற்றியை விரல்களால் அழுத்தியபடி, இறுகி அமர்ந்தேன். மனம் ரத வேகத்தின்போது
கொண்ட விடுதலையுணர்வு முழுக்கப் பின்னகர்ந்து துவாரகை போல, முற்பிறப்பு
ஞாபகம்போல, எங்கோ மறைந்தது. எல்லாம் வெறும் கனவு. நான் இதுதான். இந்த கனக்கும்
உடம்பு. கனக்கும் மனம். இந்தப் பாரம்தான் நான். இந்த வெறுமைதான் நான்.
ரதம் தயங்கியது. வீரர்கள் குதிரைகளில் வந்து எதிர்கொண்டனர். என் ரத
முகப்பிலிருந்து தண்டேந்தி என் குலத்தையும் சிறப்பையும் கூறி என்னை
அறிவித்தான். அப்பெயர் வரிசை மிக அருவருப்பூட்டுவதாக எனக்குக் கேட்டது.
அவற்றில் எதுவுமே நானல்ல என்று கூவ வேண்டும் போலிருந்தது. வம்சங்கள்,
பட்டங்கள், பதவிகள். கங்கைக் கரையெங்கும் மூடுபடமிட்டுக் கூனியமர்ந்திருந்த
விதவைகளின் உருவங்கள் ஞாபகத்திற்கு வந்தன. ரதம் உள்ளே போயிற்று. புல்வெளியில்
பர்ணசாலைகள் வரிசையாக இருந்தன. செம்பட்டு முகப்பு போடப்பட்டது. திரௌபதியின்
பர்ண சாலை போலும்.


சற்றுத் தள்ளிப் பெரிய வட்ட வடிவ பர்ணசாலையைச் சுற்றிக்
காவல் வீரர்கள் உருவிய வாளுடன் நின்றனர். மன்னருக்கு ஒருபோதும் இத்தகைய
பாதுகாப்பு இருந்ததில்லை. ஆனால் இனி வேறு வழியில்லை. காட்டிற்குள் சிரஞ்சீவியான
அஸ்வத்தாமா தணியாத கோபத்துடன் அலைந்துக் கொண்டிருக்கிறான். இனி குருவம்சத்தில்
எவரும் நிம்மதியாகத் தூங்க முடியாது. ஒருபோதும் போர் அவர்களை விட்டு விலகாது.
வெற்றிமாலையின் ஏதோ ஒரு மலருக்குள் பூநாகம் காத்திருக்கிறது. தோற்றவர்கள்
நிம்மதியாகத் தூங்கலாம். அவர்களுக்கு இழக்க ஏதுமில்லை. காண்பதற்குக் கனவுகளும்
மிச்சமிருக்கும்.


என் பர்ணசாலை முன் ரதம் நின்றது. இறங்கிக்கொண்டேன். என்னைப் பார்த்ததும் பெரும்
அழுகையோசைகள் கேட்டன. என் தலையை அலை வந்து முட்டியது. என் வயிறு அதிர்ந்து
கொண்டிருந்தது. ஆனால் திடமான காலடிகளுடன் நடந்தேன். பர்ணசாலைக்குள் அரசகுலப்
பெண்கள், யார் யார் என்று பார்க்கவில்லை. விதவைகளுக்குப் பெயர் எதற்கு?
அடையாளம் எதற்கு? அவர்கள் சிதை காத்திருக்கும் ‘வெறும் சடலங்கள்’. ஒருவேளை
இதுவே அவர்கள் இறுதியாகப் பார்க்கும் வெளியுலகாக இருக்கக்கூடும். குழந்தைகளே,
வானையும் மரக்கூட்டங்களையும் மலர்களையும் நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.
திருப்தியாக கங்கையில் நீராடுங்கள்.
”மகாராணி” என்று ஒரு தாதி மரவுரியைக் கொண்டுவந்து நீட்டினாள். அதை அணிந்து
கொண்டேன். கனமாக உடலை அறுத்தியது. விரத உணவு வந்தது. கசப்பும் துவர்ப்பும். ஒரு
மண்டலமாக சக்ரவர்த்தியும் பரிவாரமும் இந்த உணவை உண்டு இந்த உடையை அணிந்து
விரதம் அனுஷ்டிக்கிறார்கள். யாருக்காக? எந்த அக்னியை அணைக்க? தாதியைக்
கையசைத்து அழைத்தேன். “அண்ணா எங்கிருக்கிறார்?” என்று கேட்டேன்.
“ராஜ சபையில் மகாராணி.”
”வியாச மகரிஷி வந்திருக்கிறார்” என்றார் ஒரு முதிய தாதி. “அவருடன் உரையாடியபடி
சோலைக்குள் செல்வதைப் பார்த்தேன்.”
“நான் உடனடியாக வியாச ரிஷியைப் பார்த்தாக வேண்டும்” என்றேன். “உபசக்ரவர்த்தி
எங்கே?”
தாதி இன்னொருத்தியைப் பார்த்தாள். தயங்கியபடி, “இரவு ரதமேறி நகருக்குள்
சென்றார். இன்னும் வரவில்லை” என்றாள்.


புதல்வனையோ கணவனையோ இழக்காத பெண் யாராவது கிடைத்திருக்கக்கூடும் என்று
கசப்புடன் எண்ணிக் கொண்டேன். இந்தக் கசப்பு எப்போது என் மனதில் நிரம்பியது?
எந்தக் கணத்தில்? பாயும் ரதத்தில் கடிவாளத்தைப் பற்றியபடி நின்று நான்
ஓரக்கண்னால் பார்த்து ரசித்த ஆண்மகன் தன் இறுகும் தசைகளுடன் இப்போதும் என் மன
ஆழத்தில் இருக்கிறான். இந்த மனிதர் – இவருடைய முகமும், குரலும், அசைவுகளும்
இவரைப் பற்றிப் பிறர் கூறிக்கேட்கும் ஒவ்வொரு சொல்லும் -என்னைக் கசப்பால்
நிறைக்கிறார். அதை அவர் அறிந்திருக்கக்கூடும். என் கண்களை ஏறிட்டுப் பார்த்துப்
பேச அவரால் முடியாது. என் முன் நிற்கும்போது அவர் உடலெங்கும் ஒரு சிறு தவிப்பு
அலையும்.


அந்தத் தாழ்வுணர்வு கோபமாக, மூர்க்கமாக வெளிப்படவும் கூடும். ஆனால்
என்னால் ஏன் இன்னமும் அவரை அலட்சியம் செய்ய முடியவில்லை? எத்தனை முயன்றும்
அவரைப் பற்றி எண்ணாமல் ஒரு பொழுதுகூடத் தாண்டுவதில்லையே. அவர் மீது என்னுள்
இன்னும் காதல் மிஞ்சியுள்ளதா என்ன? காதலா? அது வெறும் அறைக்கூவல். அவர் உள்
மனதின் அச்சம் தெரியவந்த கணமே அது அணைந்து போயிற்று. அவர் பெண்களை உடலாக
மட்டும் கையாளும்போதுதான் தன்னம்பிக்கையோடு இருக்க முடியும். அவர் கையில்
துவண்டு நிமிர்ந்து, சரம்சரமாக எய்யும் காண்டீபமே அவர் வரித்துக் கொண்ட
பாவனைத்தோழி போலும். அவர் திறமையெல்லாம் உள்ளூர ஓடும் வெறுமையின் வேகம் போலும்.
பெண்களின் உடல் வழியாக அவர் தேடுவது யாரை? காண்டீவமாக மாறித் தன் உடலின் ஒரு
உறுப்பாக இணைந்து கொள்ளும் ஒருத்தியையா?
யாரிடமாவது பேச வேண்டும் போலிருந்தது. பேசாத சொற்களெல்லாம் மனதில் தேங்கி
அவற்றின் வேகம் என்னைப் பைத்தியமாக அடித்துவிடும் என்று பட்டது. மகாராணி
பட்டத்தைத் துறந்து ஒரு பெண்ணாக, பேதையாக, குழந்தையாக, புழுவாக அழுது துடிக்க
வேண்டும். வியாச ரிஷியின் வெண்தாடி பரவிய குழந்தை முகம் மனதில் சிறு ஆறுதலாக
எழுந்தது.
தாதி என்னைச் சோலைக்குள் கூட்டிச் சென்றாள். பசுமையான மரங்கள் அடர்ந்து நிற்க
ஊடே பாதை நெளிந்து சென்றது. பாறையொன்றில் அண்ணாவும் வியாச மகரிஷியும்
அமர்ந்திருந்தனர்.


என்னைப் பார்த்ததும் வியாச மகரிஷி புன்னகையுடன், “வா குழந்தை” என்றார்.
அமரும்படி சைகை காட்டினார். அவர் பாதங்களைப் பணித்துவிட்டுத் தரையில்
அமர்ந்தேன். அண்ணா சிந்தனை நிரம்பிய முகத்துடன் என்னைப் பார்த்தார்.
“வருவீர்கள் என்று எவரும் கூறவேயில்லை தாத்தா” என்றேன்.


“இன்று நீர்க்கடன். நான் வந்தாக வேண்டுமல்லவா?” என்றார் வியாசர்.
என் கண்களும் மனமும் திறந்துகொண்டன. என் உடல் வழியாக அழுகை சுழற்காற்று
மரத்தைக் கடந்து செல்வதுபோலக் கடந்து சென்றது.
வியாசர் என் நெற்றிமயிரை வருடினார். “நான் என்ன சொல்ல இருக்கிறது குழந்தை?
அழுது அழுதுதான் உன் மனம் ஆறவேண்டும்” என்றார்.
“இதெல்லாம் எதற்காக தாத்தா? யாருடைய லாபத்திற்காக? இந்த கங்கைக்கரை முழுக்க…”
“பார்த்தேன்” என்றார் வியாசர். “எதற்காக என்று மட்டும் கேட்காதே. அப்படிக்
கேட்க ஆரம்பித்தால் தெய்வங்களே திகைத்து நின்றுவிடுவார்கள்…”


“என் அபிமன்யு.. என் தங்கம்.. அவன் தலை பிளந்து.. என்னால் மறக்கவே முடியவில்லை
தாத்தா…”


என் அழுகையைப் பார்த்தபடி வியாசர் தலை குனிந்து அமர்ந்திருந்தார். பிறகு கம்மிய
குரலில் “நான் என்ன சொல்லுவது அம்மா? உனக்கு ஒரு குழந்தைதான். எனக்கு…?
குருவம்சமே என் குழந்தைகளல்லவா? வென்றதும் வீழ்ந்ததும் என் உதிரமல்லவா? இதோ
இன்ரு கங்கை அள்ளிச் செல்லும் அத்தனை ஆத்மாக்களுக்கும் பிதாமகனல்லவா நான்?”


சட்டென்று என் மனம் சீறியெழுந்தது. ”இதோ இருக்கிறாரே, கேளுங்கள் தாத்தா.
எல்லாவற்றிற்கும் காரணம் இவர்தான். இவருடைய குயுக்தியும் தந்திரமும்
தருக்கமும். ஆட்சிக்காக சகோதரன் கழுத்தை சகோதரன் அறுக்கலாம் என்று இவர் ஒரு
உபதேச மஞ்சரி எழுதி அதைக் களத்தில் தினம் தினம் பௌராணீகர்கள் பாடினார்கள்.
கொல்லு கொல்லு என்று இரவு முழுக்க கோஷம் எழுந்தது….”


“போர் எப்போதும் வெற்றி ஒன்றால் மட்டுமே அளக்கப்படுகிறது அம்மா.”


”இப்போது இதோ வெற்றி கிடைத்துவிட்டதே. இவருக்குத் திருப்திதானா? என் குழந்தை..
என் செல்வம்.. அவன் மரணத்திற்கு யார் காரணம்? இதோ இவர்தான். என் குழந்தையைக்
கொன்றவர் இவர்தான். சதுரங்கத்தில் ஒரு காயாக அவனை வைத்து விளையாடினார். அடுத்த
நகர்வுக்குத் தேவையெழுந்தபோது தன் சுண்டுவிரலால் அவனைச் சுண்டி எறிந்தார்.
அரவான், கடோத்கஜன்… கடைசியில்க் அபிமன்யு. சொந்த ரத்தத்தில் பிறந்தவர்களைக்
கொல்லும்படி தான் சொன்ன உபதேசத்தைத் தனக்கும் பொருத்திக்கொண்ட மகான் இவர்…”
“சுபத்திரை, நீ உன் வேதனையில் பேசுகிறாய்” என்றார் வியாசர்.
“என் குழந்தை எப்படி இறந்தான்? அவன் என் கருவில் இருந்த போது பத்மவியூகத்தில்
நுழையும் வழியை இவர் கற்றுத் தந்தார். வெளியேறும் வழியைக் கூறாமலேயே
விட்டுவிட்டார். எங்கும் எதிலும் முட்டி மோதி நுழைபவனாக, வெளியேறும் வழி
தெரியாதவனாக, அவன் வளர்ந்தான். ஏன் என் குழந்தைக்கு அவன் பிறந்து வளர்ந்து களம்
காணும் தினம் வரை இவர் வெளியேறும் வழியைச் சொல்லித் தரவில்லை? சதி. வேறு என்ன?
இவருக்கு பந்தமில்லை. பாசமில்லை. தர்மம் என அவர் நம்பும் ஒன்றை நிறைவேற்றுவது
தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை.”
“யார்தான் அப்படி இல்லை?” என்றார் வியாசர். “உன் தருமம் தாய்மை என நீ
எண்ணுகிறாய். அதைத் தவிர வேறு எதுவும் உன் கண்ணில் படவில்லையே….”
”எதற்கு என் குழந்தைக்கு பத்ம வியூகத்திலிருந்து வெளியேறும் வழியை இவர்
கற்றுத்தரவில்லை? அதைச் சொல்லச் சொல்லுங்கள் முதலில்.”
அண்ணா தணிந்த குரலில், “பலமுறை சொல்லிவிட்டேன் சுபத்திரை. உன் காது
மூடியிருக்கிறது. பத்ம வியூகம் சிறிய படைகளை நடத்தும்போது செய்ய வேண்டியது.
நகரங்களைக் காப்பாற்றுவதற்காக அதைச் சுற்றியும் அமைப்பதுண்டு. துரோணர் அதைப்போல
குருஷேத்திரத்தில் வகுப்பார் என்று நான் எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்?


அந்தத் தருணத்தில் அர்ச்சுனன் சம்சப்தர்களுடன் போரிடப்போவான் என்று எப்படி நான்
ஊகித்திருக்க முடியும்? தருமர் அத்தனை வீரர்கள் இருக்க அபிமன்யுவைப் போய் அதை
உடைக்கச் சொல்வார் என்றோ, அவனைப் பின் தொடரந்த தருமரையும் பீமனையும் பிற
படைகளையும் ஜயத்ரதன் ஒருவனே தடுத்துவிடுவான் என்றோ நான் எப்படி எண்ண முடியும்?”


அண்ணா நிறுத்தினார். உடைந்த குரலில், “அதைவிட ஞானமும் விவேகமும் நிரம்பிய
குருநாதர் துரோணரும், பாண்டவ ரத்தமான கர்ணனும், மகா தார்மிகரான சல்லியரும்,
சுத்த வீரனான துரியோதனனும் சேர்ந்து ஒரு சிறுவனை சூழ்ந்து எதிர்த்துக்
கொன்றார்கள் என்பது இப்போதுகூட என்னால் நம்ப முடியாதவையாகவே உள்ளது.”
“போரில் வெற்றியே அளவுகோல்” என்றார் வியாசர் மீண்டும். “மனிதர்களால் போரைத்
தொடங்க மட்டுமே முடியும். பிறகு எல்லாம் விதியின் தாண்டவம்.” அவர் தலை மேலும்
குனிந்தது. பெருமூச்சுடன், “மனிதர்கள் போரிடாத சத்திய யுகம் ஒன்று வரக்கூடும்”
என்றார்.
“ஆம், எல்லாம் என் தத்துவம்தான்” என்றார் அண்ணா என்னிடம். “ஆனால் என் மனதை
ஆற்றும் வலிமை அவற்றுக்கு இல்லை. அபிமன்யு என் குழந்தை. பாதி நாள் துவாரகையில்
ருக்மிணியும் சத்யபாமையும் அவனை வளர்த்தார்கள். என் பிள்ளைக்கலியைத் தீர்க்க
வந்த தெய்வ அருளாக அவனை எண்ணினேன். இந்த மார்பிலும் தோளிலும் போட்டு அவனை
வளர்த்தேன். காடுகள் தோறும் அழைத்துச் சென்று அவனுக்கு வித்தைகள்
கற்றுத்தந்தேன்….”
“ஆம். அவன் களத்தில் காட்டிய வீரபராக்ரமங்களை இன்று பாரதவர்ஷமே பாடுகிறது”
என்றார் வியாசர். அவர் அண்ணாவை சமாதானப்படுத்த முயல்கிறார் என்பது தெரிந்தது.
“கோசல மன்னன் பிருஹத்பாலனை அவன் கொன்றது பற்றி சற்று முன்பு கூட ஒரு சூதன்
அற்புதமான பாடல் ஒன்றைப் பாடினான்.”
“ஆனால் நான் கற்றுத்தராத ஒன்று அவனை பலி கொண்டு விட்டதே கிருஷ்ணதுவைபாயனரே.”
“அவன் விதி அது” என்றார் வியாசர். “ஜென்மங்கள்தோறும் அது அவனைத் தொடர்கிறது.
இப்பிறவியில் உன் கருவில் அவனிருந்தபோதே அது அவனை அடைந்துவிட்டது.”


என் மனம் பகீரிட்டது. “தாத்தா, அப்படியானால் என் குழந்தைக்கு அடுத்த
பிறவியிலும் இதே விதியின் மிச்சம்தானா உள்ளது?” என்றேன்.


“இருக்கக்கூடும்; யாரறிவார்…?”


பதறிய குரலில், “தாத்தா, தன் விதியை அவன் அறிந்து கொள்ளவில்லையே. என்
குழந்தைக்கு இப்போதும் வெளியேறும் வழி தெரியவில்லையே” என்றேன்.
“இது என்ன பேச்சு குழந்தை? நமது மகனாக அவன் விதி முடிந்தது. இனி நம் கடன் அவன்
நினைவை நம் மனதிலும் வம்சத்திலும் நட்டு வைப்பது மட்டுமே…”
“அது உங்கள் வேலை. என் குழந்தைக்கு இப்போதும் வெளியேறும் வழி தெரியவில்லை. அதை
எண்ணினால் இனி நான் ஒருநாள்கூட நிம்மதியாக உயிர்வாழ முடியாது. தாத்தா நீங்கள்
முக்காலமும் உணர்ந்தவர். எனக்குக் கருணை காட்டுங்கள். உங்கள் பாதங்களைப்
பற்றிக்கொண்டு கேட்கிறேன். எனக்கு உதவுங்கள்….”
“குழந்தை, நீ உணர்ந்துதான் பேசுகிறாயா?”
“நன்றாக உணர்ந்துதான். என் குழந்தைக்கு அவன் விதியை அவன் வெல்லும் முறையை நான்
கற்பித்தாக வேண்டும். அடுத்த பிறவியிலாவது அவனுக்கு மீட்பு வேண்டும்.”
“மனிதர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள எல்லையை நீ தாண்ட முயல்கிறாய் குழந்தை. அது
சாத்தியமேயில்லை.”
நான் பாய்ந்து எழுந்தேன். “இனி உங்களிடம் கேட்க எனக்கு எதுவும் இல்லை, இப்போதே
நீங்கள் உதவ வேண்டும். இல்லையேல் இப்போதே இங்கேயே கங்கையில் குதித்து
உயிர்விடுவேன். இனி எனக்கு எதுவும் மிச்சமில்லை…”
“குழந்தை….” என்று கூறியபடி வியாசர் ஓடிவந்து என்னைப் பிடித்தார். “நில்லு.
சொல்கிறேன்…” என் தோளை அவர் கரம் இறுகப் பற்றியது. “என்ன காரியமம்மா
செய்கிறாய்? முதிய வயதில் இதுவரை நான் கண்டதெல்லாம் போதாதா? இரு, ஒரு வழி
சொல்கிறேன்.”
அப்போதும் சிந்தனை தேங்கிய முகத்துடன் அண்ணா அங்கேயே அமர்ந்திருந்தார்.
“தண்டகாரண்யத்தில் ஒரு ரிஷியை நான் பார்த்தேன். அவர் இப்போது இங்கு கங்கைக்
கரையில் எங்கோ இருக்கிறார். அவரால் பிறவிகளின் சுவரைத் தாண்டிப் பார்க்க
முடியும் என்கிறார்கள். அவரை அழைத்து வருகிறேன். உனக்காக.. ஒரு போதும் ஒரு ரிஷி
செய்யக் கூடாத காரியம் இது. என் மூதாதையரின் சாபம் என் மீது விழும்..
பரவாயில்லை.”
”எனக்கு வேறு வழியில்லை தாத்தா. என்னை மன்னித்து விடுங்கள். என் குழந்தையிடம்
நான் பேசியாக வேண்டும். என்ன நேர்ந்தாலும் சரி. என் குழந்தை வெளியேறும் வழி
தெரியாது பிறவிகள் தோறும்… தாத்தா தயவு செய்யுங்கள், தயவு செய்யுங்கள்…”
அவர் காலில் விழுந்தேன். என்னைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டார். என் கண்ணீர்
அவர் தாடியை நனைத்தது.
*4*
பர்ணசாலைக்குள் எட்டிப் பார்த்த தாதி என்னிடம் “உபசக்ரவர்த்தி தங்களை
அழைக்கிறார்” என்றாள். எழுந்து வெளியே வந்தேன். பின் மதியம் ஆகிவிட்டிருந்தது.
ஆனால் வெயில் வராமல் காலை போலவே இருந்தது. வானம் முழுக்க மேகங்கள். மஞ்சன
மரத்தடியில் அவர் நின்றிருந்தார். அவரை அணுக அணுக என் மனம் எரிச்சலடைந்தது.
ஆனால் உடலில் ஒரு கிளர்ச்சி இருந்தது. அது இம்சைக்கான ஆர்வம். அவரைக் குத்திப்
புண்படுத்தி, அவர் சுருண்டு திரும்புவதைக் கண்டு குற்றவுணர்வு கொள்ளும்போதுதான்
அது தணியும். அவர் கண்களை உற்றுப் பார்த்தபடி “என்ன?” என்றேன்.
“பொழுது சாய்ந்துவிட்டது. அபிமன்யுவிற்கு இன்னும் நீர்க்கடன் செலுத்தவில்லையே
என்று அண்ணா கேட்டார்” என்றார்.
“அரவானுக்கு நீர்க்கடன் முடிந்துவிட்டதா?” என்றேன். அவருடைய சுருண்ட மயிர்கள்
ஈரமாகத் தொங்கி ஆடின. காதோரம் சில நரை மயிர்கள். மீசை கன்னத்தில்
ஒட்டியிருந்தது. கண்களுக்குக் கீழே கருவளையங்கள். பார்வையில் எப்போதுமிருக்கும்
சிறுபிள்ளைத்தனமான உற்சாகத்தின் ஒளி அறவே இல்லை. இனி அது ஒருபோதும் திரும்பாது
போலும்.
“ஆம்” என்றார்.
அவருடைய பலவீனமான இடத்தில் நான் போட்ட அடி அது. அவர் நெற்றியில் நரம்பு
அசைந்தது. கண்கள் சுருங்கி இம்சை தெரிந்தது. என் மனம் உள்ளூர கும்மாளமிட்டது.
மேலும் மேலும் என்று தாவியது.
“சுருதர்மாவிற்கும் முடிந்துவிட்டதா?” என்று சாதாரணமாகக் கேட்டேன்.
அவர் கண்கள் சீற்றம் கொண்டன.
“அபிமன்யு மட்டும்தான் மீதி” என்றார்.
நான் தலையசைத்தேன்.
“ஏன் தாமதம்?” என்றார்.
“சற்று பிந்தட்டும்.”
“எங்கோ ரதமனுப்பியிருப்பதாகக் கூறினார்கள்.”
“ஆம்.”
“எதற்கு?”
“ஒன்றுமில்லை” என்றேன். இவரிடம் நான் கூற முடியாது. அபிமன்யு என் அந்தரஙகத்தின்
ஆழம். அதை ஒருபோதும் இவருடன் பகிர முடியாது. அதை எவரிடமும் பகிர முடியாது.
அவனிடம்கூடப் பகிர்ந்ததில்லை. அவன் பிறந்து விழுந்தபோது அவனைப் பார்த்தவர்கள்
தந்தையைப்போல என்று கூறியபோது என் மனம் எரிந்தது. அவன் வளர வளர அவனில் கூடி
வந்த குறும்பும், வில் திறனும், துணிச்சலும் அவரையே ஞாபகப்படுத்தின. அவை
என்னைக் கோபம் கொள்ளச் செய்தன. பாதி நாள் அவனை துவாரகைக்கு அனுப்பியதே
அதனால்தான். மீதிநாள் அவர் ஊரில் இருந்ததுமில்லை. ஆனால் அவனில் நான்
ரசித்ததெல்லாம் அவற்றைத்தானோ?
“ஏன் என்று கூறு” என்றார் கோபத்துடன். “இன்று நீர்க்கடன் வேண்டாம் என்று
எண்ணுகிறாயா? யாரைக் கூட்டிவரச் சொல்லியிருக்கிறாய்?”
நான் அவர் கண்களைப் பார்த்தேன். “அபிமன்யு என் மகன். அவனுக்கு எப்படிச் செய்ய
வேண்டும் என நான் அறிவேன்.”
அவர் கோபம் முகத்தில் நெளிந்தது. உரத்த குரலில், “அவன் என் மகன் இல்லையா?
எனக்கு மட்டும் துயரமில்லையா?” என்றார்.
“துயரமா…. எதற்கு?” என்றேன் வியப்புடன். உள்ளூர என் இம்சிக்கும் இச்சை
கூர்மையடைந்தது. மனம் மிகுந்த நிதானத்துடன் சொற்களைத் தேர்வு செய்தது.
“நீங்கள்தான் பழிவாங்கிவிட்டீர்களே? பொழுது சாய்வதற்குள் ஜயத்ரதன் தலையைக்
கொய்து, அதைக் காற்றில் பறக்கவைத்து, அவன் தந்தை கரங்களில் விழ வைத்து, அவர்
உயிரையும் பறித்து… சூதர்கள் பரவசமாகப் பாடும் கதை அல்லவா அது? வம்சகாதையில்
ஒரு பொன்னேடல்லவா? அப்புறம் எதற்குத் துக்கம்?”
“நீ என்னை ஏளனம் செய்கிறாய். உனக்கு மட்டும் பேரிழப்பு ஏற்பட்டுவிட்டது என்று
கற்பனை செய்து கொள்கிறாய். உன்னை முக்கியமானவளாகப் பிறரிடம் காட்டிக்கொள்ள இந்த
துக்க வேடத்தை மிகைப்படுத்திக்கொள்கிறாய்…”
நான் அவர் கண்களை மீண்டும் உற்றுப் பார்த்தேன். “நேற்றிரவும்
எங்கிருந்தீர்கள்?”
அவர் தடுமாறி, முகம் வெளிறி, “ஏன்?” என்றார்.
“இல்லை, தாத்தா தேடினார்” என்றேன்.
“அவரைப் பார்த்தேனே.”
“ஓகோ” என்றேன். பிறகு பார்வையை விலக்காமலே நின்றேன்.
“நான் வருகிறேன்” என்று அவர் நடந்தார். என் உடல் தளர்ந்தது. சன்னதம் விளகிய
குறிசொல்லி போல சக்தியனைத்தும் ஒழுகி மறைய, தள்ளாடினேன். தண்ணீர் குடிக்க
வேண்டும் போலிருந்தது. ஆனால் மீண்டும் என் பர்ணசாலைக்குப் போகத் தோன்றவில்லை.
இடுங்கின அறைகளில் துயரம் தேங்கிக் கிடக்கிறது. திறந்த வெளிகளில் மனம் சற்று
சுதந்திரம் கொள்வது போலப் பட்டது. சோலை வழியாக நடந்தேன். மீண்டும் அதே பாறையை
அடைந்தேன். அங்கு அண்ணா அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். அவரை அங்கு உள்ளூர
எதிர்பார்த்ததனால்தான் வந்திருக்கிறேன் என்று அறிந்தேன். என்னால் அவரைத்
தவிர்க்க இயல்வில்லை. அவர் இல்லாமல் என் மனமே இல்லை போலும். அவரது தலையணியின்
மீதிருந்த மயிற்பீலிக் கண் என்னைப் பார்த்தது. மனம் சற்று அமைதியடைந்தது.
மயிற்பீலியை எங்கு கண்டாலும் மனம் சற்ரு அமைதிகொள்கிறது. துணையை உணர்கிறது.
அபிமன்யு குழந்தையாக இருந்தபோது ஒரு முறை அவன் கொண்டையில் மயிற்பீலியை
அணிவித்தேன். அதைப் பார்த்ததும் அவர் முகம்தான் எப்படிச் சிவந்து பழுத்தது.
தொண்டை புடைக்க உறுமியப்டி அதைப் பிய்த்து வீசினார். “கொஞ்சிக் குலாவி
குழந்தையை அலியாகவா ஆக்குகிறாய்? பீலியும் மலரும்…” என்று கத்தினார்.
ஆங்காரமும் ஏமாற்றமுமாக, “பீலி சூடியவர்களெல்லாம் அலிகள் என்கிறீர்களா?”
என்றேன். கையை ஓங்கியபடி வந்தார். “நல்லது. கை எதற்கு, காண்டீவத்தையே எடுங்கள்.
அதுதான் புருஷ லட்சணம்” என்றேன். கதவை ஓங்கி உதைத்தபடி அந்தப்புரத்தை விட்டு
வெளியேறினார். வெளியே புரவிமீது சம்மட்டி விழும் ஒலி கேட்டது. அது கனைத்துக்
கூவியபடி கல்தளத்தில் தடதடத்து ஓடியது.
அண்ணா, “ரிஷி வந்துவிட்டாரா?” என்றார்.
“இன்னும் வரவில்லை. காத்திருந்து காத்திருந்து பொறுமை போகிறது.”
“வருவார்.”
“பின்மதியம் ஆகிவிட்டது. நீர்க்கடன் எப்போது முடிவது?” என்றேன். களைப்புடன்
கண்களை விரல்களால் அழுத்துக் கொண்டேன்.
“பார்த்தன் என்ன சொன்னான்?”
திடுக்கிட்டேன். எப்படி அறிந்தார் அவர் முகம் பதுமை போலிருந்தது. பிறகு அமைதி
ஏற்பட்டது. “நேரமாகிறது என்கிறார்” என்றேன்.
“பாவம்” என்றார்.
“ஏன்? அவர்தான் போரில் வென்று சவ்யசாஜி ஆகிவிட்டாரே. இனி அஸ்வமேதம்,
திக்விஜயம். வரலாற்றில் உங்களுக்கும் அவருக்கும் சிம்மாசனமல்லவா போட்டு
வைக்கப்பட்டுள்ளது!”
”உன் துயரம் கசப்பாக மாறிவிட்டிருக்கிறது சுபத்திரை. உலகமே உனக்கு எதிரியாகப்
படுகிறது. நீ என்னதான் எண்ணுகிறாய்? இன்று இங்கு ஒவ்வொருவரும் என்ன
எண்ணுகிறார்கள் என்று நீ அறிவாயா? இந்தக் கணம் காலதேவன் வந்து போர்
துவங்குவதற்கு முன்பிருந்த தருணத்தைத் திரும்ப அளிப்பதாகச் சொன்னானென்றால்
அத்தனை பேரும் தங்கள் எதிரிகளை ஆரத் தழுவிக் கண்ணீர் உகுப்பார்கள். இந்தப் போர்
ஒரு மாயச் சுழி. ஒவ்வொரு கணமும் இதன் மாயசக்தி எல்லோரையும் கவர்ந்திழுத்துக்
கொண்டிருந்தது. விதி அத்தனை பேர் மனங்களிலும் ஆவேசங்களையும் ஆங்காரங்களையும்
நிரப்பியது. இன்று… வெளியேறும் வழி எவருக்கும் தெரியவில்லை சுபத்திரை.
எனக்கும் தெரியவில்லை…”
நான் பெருமூச்சுவிட்டேன். அண்ணா மனம் கலங்கியபோதுதான் அவரை அப்படிப் பார்க்க
நான் விரும்பவில்லை என்று அறிந்தேன். அவர் வெல்ல முடியாத வீரயோகியாகவே என்
மனதில் இருந்தார். அண்ணாவின் முகம் மீண்டும் நிதானம் கொண்டது. “நீ
உணவருந்தினாயா?” என்றார்.
”இல்லை”
“ஏன் இப்படி உன்னை வதைத்துக் கொள்கிறாய்?”
“என்னால் எதிர்பார்ப்பின் பதற்றத்தைத் தாங்க முடியவில்லை அண்ணா.”
“சுபத்திரை, நீ செய்யப் போவது என்ன என்று அறிவாயா?”
“எனக்கு வேறு வழியில்லை” என்றேன் உறுதியாக.
“நியதியின் பேரியக்கம் மனிதர்களையும் அண்ட வெளியையும் இயற்கையிலுள்ள
அனைத்தையும் ஒன்றாகப் பிணைத்திருக்கிறது சுபத்திரை. அதில் ஒரு சிறு துளியைக்கூட
மனித மனம் அறிய முடியாது. அதை மாற்றிவிடலாம் என்று நம் அகங்காரம் சில சமயம்
கூறும். அதன்படி நாம் இயங்குவோம். பிறகு தெரியும் நமது அந்த இயக்கம்கூட
நியதியின் விளையாட்டுதான் என்று.”
“வேதாந்த விசாரம் கேட்க எனக்கு இப்போது மனம் கூடவில்லை அண்ணா….”
அண்ணா சிரித்தபடி, ”ஆம். பாரதவர்ஷத்தில் இப்போது மலிவாகப் போய்விட்டிருப்பது
அதுதான்” என்றார்.
அவரைப் புண்படுத்திவிட்டோமோ என்ற ஐயம் எனக்கு ஏற்பட்டது. “அண்ணா, என் மனதைத்
தயவு செய்து புரிந்து கொள்ளேன். நான் என் குழந்தைக்கு… அவன் தன் விதியை
அறியாமல் போகக்கூடாது அண்ணா.. அதற்காக எனக்கு எந்த சாபம் வந்தாலும் சரி…”
“சரி வா. கங்கையோரமாகப் போவோம். யாராவது நம்மைத் தேடக்கூடும்.”
காட்டுக்குள் குளிர் இருந்தது. மரங்கள் மழைக்காலத்திற்குரிய புத்துணர்ச்சியுடன்
காற்றில் குலுங்கின. தளதளக்கும் ஒளியும் சிறு மணியோசைகளும் கங்கை
வந்துவிட்டதைக் கூறின. படித்துறைகளில் புரோகிதர்கள் அமர்ந்திருந்தனர்.
தர்ப்பைப் புல்லும் பிண்டங்களும் சிதறிக் கிடந்தன. அமாத்யர் ஸௌனகர் எழுந்து
வந்து அண்ணாவை வணங்கினார். “இப்போதுதான் முடிந்தது” என்றார்.
“சரி” என்று அண்ணா தலையசைத்தார். மெதுவாக நடந்தோம். எங்கும் அமங்கலமான மௌனமும்
நிதானமும். கங்கை மீதிருந்து குளிர் பரவிக்கொண்டிருந்தது.
பர்ணசாலைகளுக்குச் செல்லும் வழியில் திடீரென்று அடிபட்ட விலங்கின் ஊளைபோல ஓர்
அழுகைக் குரல் எழுந்தது. தாதிகள் தொடர, தலைவிரிகோலமாக திரௌபதி ஓடிவந்தாள்.
அவளைத் தாதிகள் பிடித்தனர். கங்கையை நோக்கிக் கைநீட்டியபடி அலறினாள். மரவுரி
விலகிக் கிடந்தது. சர்ப்பம் போன்ற உடல் தழல் போன்ற ’உடல் விஷம்’ துப்பும்.
சுடும். இப்படித்தான் கௌரவ சபையில் சென்று நின்றாள். தலைமயிரை அவிழ்த்துப்
போட்டு சபதம் எடுத்தாள். இப்போது தலையை முடிந்துகொள்ள வேண்டியதுதானே?
இப்போதுகூட ஏன் இப்படி எண்ணுகிறேன்? அவள் என்ன செய்வாள்! அண்ணா சொன்னதுபோல
அவளும் இப்போது மனமுடைந்து ஏங்கக்கூடும். எல்லாம் எவ்வளவு எளிமையாகத்
தொடங்கிவிடுகிறது! ஐந்து குழந்தைகள். பிரிதிவிந்தியன், சுதசேனன், சுருதகர்மா,
சதானீகன், சுதேசனன். ஐந்து தளிர் முகங்கள். ஐந்து பொன்னிறத் தோள்கள். அவள்
வயிற்றில் ஊழித்தீயல்லவா எரியும். அதை எண்ணியபோதே என் மனம் பதைத்தது.
சுருதகர்மாவின் முகம் மட்டும் அவ்வளவு தெளிவாக மனதில் எழுந்தது. அவன் அவருடைய
குழந்தை என்று சொல்வார்கள். அவனை மார்போடணைத்து அவன் முகத்தை உற்று உற்றுப்
பார்ப்பேன். அபிமன்யுவின் அருகே நிறுத்தி ஒப்பிட்டுப் பார்ப்பேன். பயிற்சிப்
போர்களின் அபிமன்யு அவனை அனாயாசமாகத் தோற்கடிக்கும்போது மனதில் களிப்பு
நிறையும். அபிமன்யுவிற்கு அவன்மீது எப்போதும் குறிதான். “சித்தி, அபிமன்யு
என்னை அடிக்கிறான். சித்தி, அபிமன்யுவைப் பாருங்கள்….” என்று சதா ஓடிவருவான்.
மழலைக் குரல்கள் எங்கிருக்கிறீர்கள் என் குழந்தைகளே? வானில் எங்காவது
விளையாடுகிறீர்களா? சண்டை போடுகிறீர்களா? மண்ணில் நீங்கள் வாழ்ந்த நாட்களில்
தான் உங்கள்மீது என்னென்ன கோபதாபங்கள், போட்டி பொறாமைகள் எங்களுக்கு. நான்
ஒருபோதும் பார்த்திராத அரவான். அவன் மீது எத்தனை கோபம் எனக்கு? என்
கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது. அப்படியே படித்துறையில் அமர்ந்துவிட்டேன்.
அண்ணா பெருமூச்சுடன் சற்றுத் தள்ளி அமர்ந்து கொண்டார். கங்கை மீது இரு சிறு
ஓடங்கள் மிகுந்த துயரத்துடன் நகர்ந்து சென்றன.
*5*
ரிஷி வந்துவிட்டார் என்று செய்தி வந்தது. எழுந்து விரைந்தோடினேன். கால்
புழுதியில் பதிந்து வேகம் கூடவில்லை. என் உடல் கனத்தது. அஷ்டகலசப் படிக்கட்டில்
ரிஷி அமர்ந்திருந்தார். அவர் எதிரே நின்றிருந்த ஸ்தானிகர் என்னைப் பார்த்ததும்
வணங்கி விலகினார். என் மனம் சுருங்கியது. இனம் புரியாத ஓர் அச்சம் மனதைக்
கவ்வியது. கரிய குள்ளமான உருவம். தாடியும் தலைமயிறும் சடைகளாகத் தொங்கின.
சிவந்த கண்கள், உடம்பெங்கும் நீரு. ஒரு கண் கலங்கி சதைப்புரளலாக அசைந்தது.
வெளியே தெரிந்த பற்கள் கறுப்பாக இருந்தன. அவருக்கு சாஷ்டாங்க வணக்கம் செய்தேன்.
அவர் என் தலையைத் தொட்டு ஆசியளித்தார். அவர் கரஙக்ளை என் கண்கள் அணுகுவதைத்
தடுக்க முடியவில்லை. பழுதடைந்த நகங்கள் விகாரமாக இருந்தன.
“உன் கோரிக்கையை கிருஷ்ணதுவைபாயனர் சொன்னா. அவர் மகாவியாசர். அவருக்காகவே
இதற்கு ஒப்புக்கொண்டேன். இது சாதாரண விஷயமல்ல. தெய்வங்களின் அதிகாரத்திற்கு
அறைவிடும் செயல் இது” என்றார் ரிஷி.
“குருநாதரே, என் மீது கருணை காட்டுங்கள். என் குழந்தை…” என்று கைகூப்பினேன்.
கண்ணீர் வழிந்தது.
“அழுவதெல்லாம் எனக்குப் பிடிக்காது. விஷயத்தைத் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன்.
ஒரே ஒரு முறைதான். அதற்குள் கூறவேண்டியதைக் கூறிவிட வேண்டும். பிறகு என்னிடம்
எதையும் கோரக்கூடாது.”
“போதும், போதும்”
அண்ணா வந்து சற்றுத் தள்ளி அமர்ந்தார். ரிஷி கண்மூடி தியானத்திலாழ்ந்தார்.
பரிதவிப்புடன் அமர்ந்திருந்தேன். நீண்ட பெருமூச்சுடன் அவர் கண்களைத் திறந்தா.
“உன் குழந்தைக்கு நீர்க்கடன் அளித்தாகிவிட்டதே அம்மா. அவன் இப்போது
ஃபுவர்லோகத்தில் இல்லையே…”
“குருநாதரே….” என்று வீறிட்டேன். “இல்லை. நீர்க்கடன் இதுவரை
அளிக்கப்படவில்லை….” மறுகணம் எனக்கு என்ன நடந்தது என்று புரிந்தது. என்னைத்
தோற்கடிக்க அவர் அதைச் செய்திருக்கக்கூடும். என் உடம்பு பதறியது.
“இரு” என்றபடி ரிஷி மீண்டும் கண்களை மூடினார். நான் தவிப்புடன் அண்ணாவைப்
பார்த்தேன். அவர் கங்கைக் கரையோரம் மலர்ந்து கிடந்த தாமரைகளையும் குவளைகளையும்
பார்த்தபடி சிலைபோல அமர்ந்திருந்தார்.
ரிஷி கண்களைத் திறந்தார். “உன் குழந்தை கருபீடம் ஏறிவிட்டான்” என்றார்.
“எங்கே? எந்த வயிற்றில்?” என்று கை கூப்பியபடி பதறினேன்.
“அது தெரியாது. மனிதனா மிருகமா பறவையா புழுவா என்று கூடக் கூற முடியாது.”
“குருநாதரே, இப்போது என்ன செய்வது?”
“இன்னும் நேரமிருக்கிறது. ஆத்மா முதல் உயிரணுவாகிய பார்த்திவப் பரமாணுவை ஏற்று
அதனுடன் இணைவதுவரை வாய்ப்பிருக்கிறது. இணைந்துவிட்டால் இப்பிறவியுடனான அதன்
தொடர்பு முற்றிலும் அறுந்துவிடும். பார்ப்போம்.” ரிஷி நீரில் இறங்கி ஒரு தாமரை
மலரைப் பறித்தார். அதை எடுத்து வந்து தியானித்து என்னிடம் காட்டினார்.
“இதோ பார்.”
தாமரைப்பூவின் மகரந்தப் பீடத்தில் இரு சிறு வெண் புழுக்கள் நெளிந்தன மெல்லிய
நுனி துடிக்க அவை நீந்தி நகர்ந்தன.
“இது என் மாயக்காட்சி. உன் மகன் இருக்கும் கரு இந்த மலர். இதிலொன்று உன் மகன்.
நீ அவனிடம் பேசு. ஆனால் இந்த தாமரை கூம்பிவிட்டால் பிறகு எதுவும் செய்ய
முடியாது.”
“இதில் என் குழந்தை யார் குருநாதரே?”
“இதோ இந்தச் சிறு வெண்புழு. அவர்கள் இரட்டையர்கள்.”
என் மனம் மலர்ந்தது. பரவசத்தால் பதற்றம் பரவியது. மனதில் எண்ணங்களே எழவில்லை.
கைகள் பதைக்க அந்தப் புழுவைப் பார்த்தேன். அதன் துடிப்பு. அது அபிமன்யு சிறு
குழந்தையாக பட்டுத் தொட்டிலில் கைகால் உதைத்து நெளிவது போலிருந்தது. பேச்சே
எழவில்லை. மனம் மட்டும் கூவியது. அபிமன்யு! இதோ உன் அம்மா. என்னை
மறந்துவிட்டாயா என் செல்வமே. என்னை ஞாபகமிருக்கிறதா உனக்கு?
”பேசு பேசு” என்றார் ரிஷி.
“அபிமன்யு” என்றேன் தொண்டை அடைக்க.
அந்தச் சிறு புழு அசைவற்று நின்றது. பிறகு அதன் தலை என்னை நோக்கி உயர்ந்தது.
சிவந்த புள்ளிகள்போல அதன் கண்களைக் கண்டேன். என்னைப் பார்க்கிறானா? என்னை அவன்
ஞாபகம் வைத்திருக்கிறானா? என் மனம் களிப்பில் விம்மியது.
“பேசு பேசு” என்று ரிஷி அதட்டினார்.
திடீரென்று அந்த மற்ற புழுவைப் பார்த்தேன். “குருநாதரே இது யார்? அவனுடைய
இரட்டைச் சகோதரன் யார்?”
“அது எதற்கு உனக்கு? நீ உன் குழந்தையிடம் கூற வேண்டியதைக் கூறு.”
“இல்லை. நான் அதை அறிந்தாக வேண்டும். அவன் யார்?”
ரிஷி அலுப்புடன், “அவன் பெயர் பிருகத்பாலன். கோசல மன்னனாக இருந்தவன்” என்றார்.
என் மனம் திகிலில் உறைந்தது. “கோசல மன்னனா? என் மகனால் போர்க்களத்தில்
கொல்லப்பட்டவனா?”
“ஆம். அவர்கள் இருவருக்கும் இடையே மாற்ற முடியாத ஓர் உறவு பிறவிகள்தோறும்
தொடர்கிறது. அதன் காரணத்தை யாரும் அறிய முடியாது. நீ உன் குழந்தையிடம் சொல்ல
வேண்டியதைச் சொல்லிவிடு.”
என் தொண்டை கரகரத்தது. அடுத்தபிறவியில் என்ன நிகழப்போகிறது? “அபிமன்யு! அது
கோசல மன்னன் பிருகத்பாலன். உன்னால் கொல்லப்பட்டவன். உன் இரட்டைச் சகோதரன் உன்
எதிரி. மகனே, கவனமாக இரு…”
ரிஷி கோபமாக “என்ன பேசுகிறாய் நீ?” என்று கத்தினார்.
நான் களைப்புடன் மூச்சிரைத்தேன். திடீரென்று பத்ம வியூகம் பற்றி இன்னமும்
கூறவில்லை என்று உணர்ந்தேன். “அபிமன்யு, இதோ பார். பத்ம வியூகம்தான் உன்
விதியின் புதிர். அதிலிருந்து வெளியேறும் வழியைக் கூறுகிறேன்…..” என்மீது
யாரோ குனிந்து பார்ப்பது போல நிழல் விழுந்தது. திருக்கிட்டு அண்ணாந்தேன்.
யாருமில்லை. வானம் கன்னங்கரேலென்று இருந்தது. பதற்றத்துடன் மலரைப் பார்த்தேன்.
அது கூம்பி விட்டிருந்தது. “குருநாதரே” என்று கூவியபடி அதைப் பிரிக்க
முயன்றேன்.
“பிரயோசனமில்லை பெண்ணே. அவன் போய்விட்டான்” என்றார் ரிஷி.
“குருநாதரே” என்று கதறியழுதபடி அவர் காலில் விழுந்தேன். “எனக்குக் கருணை
காட்டுங்கள். என் குழந்தையிடம் ஒரு வார்த்தை பேசிக் கொள்கிறேன்…”
ரிஷி எழுந்து விட்டார். அவர் பாதங்களைப் பற்றிக் கொண்டேன். அவர் உதறிவிட்டு
நடந்தார். அப்படியே படிகளில் அமர்ந்து முழங்காலில் முகம் புதைத்துக் கதறிக்
கதறி அழுதேன்.
தோள்களில் கரம் பட்டது. அண்ணாவின் கரம் அது என்று தெரிந்தது. அதை நான்
விரும்பினேன் என்று அறிந்தேன். “அண்ணா! அபிமன்யு, என் குழந்தை…”
“வா போகலாம். மழை வரப்போகிறது.”
“என் குழந்தைக்கு இப்போதும் வெளியேறும் வழி தெரியவில்லையே. தன் விதியின் புதிரை
சுமந்தபடி அவன் போகிறானே. நான் பாவி பாவி….”
அண்ணா என்னைத் தூக்கி எழுப்பினார். “வா. அழுது என்ன பயன்?”
“என் குழந்தைக்கு அவன் விதியிலிருந்து மீளும் வழி தெரியவில்லையே…”
”யாருக்குத் தெரியும் அது? உனக்குத் தெரியுமா? வழி தெரிந்தா நீ உள்ளே
நுழைந்தாய்?”
நான் அப்படியே உறைந்து நின்றுவிட்டேன். பிறகு “அண்ணா” என்றேன்.
“வா. மழை வருகிறது.”
இலைகள் மீது ஓலமிட்டபடி மழை நெருங்கி வந்தது. ஆவேசமான விரல்கள் பூமியைத்
தட்டின. பிறகு நீர்த்தாரைகள் பொழிய ஆரம்பித்தன.
“அண்ணா, என் குழந்தையின் விதி என்ன? அடுத்த பிறவியில் அவனுக்கு என்ன நேரிடும்?”
மழையில் அண்ணாவின் குரல் மங்கலாகக் கேட்டது. “தெரியவில்லை. ஆனால் அதன் தொடக்கம்
மட்டும் இன்று தெரிந்தது.”
“எப்படி?” என்றேன் அவரைத் தொடர்ந்து ஓடியபடி. அண்ணா பதில் பேசாமல் நடந்தார்.
ஒரு மின்னல் வானையும் மண்ணையும் ஒளியால் நிரப்பியது. பின் அனைத்தும் சேர்ந்து
நடுங்க இடியோசைகள் வெடித்து அதிர்ந்தன. அதன் எதிரொலியை வெகுநேரம் என்னுள்
கேட்டேன். என் உடலைக் கரைத்து விடுவதுபோல மழை கொட்டிக் கொண்டிருந்தது. மழையின்
அடர்ந்த திரைக்குள் அண்ணா சென்று மறைந்தார்.*(முற்றும்)*


*காலச்சுவடு (இதழ் எண் 18), 1997*


thanx - s ramakrishnan , jeyamokan ,thamilthoguppukal

0 comments: