Thursday, September 27, 2012

கார்ட்டூனிஸ்ட் கைது - குற்றப்பின்னணி


http://mmimages.maalaimalar.com/Articles/2012/Sep/c9005c41-a08f-44af-b936-58e6ee8d2d18_S_secvpf.gif
அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வு கார்ட்டூனிஸ்ட் அசீம் திரிவேதியைத் தேசத் துரோகக் குற்றச்சாட்டில் மகாராஷ்டிர அரசு கைது செய்தது நாடெங்கும் மனித உரிமை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் இடையே கொந்தளிப்பை உருவாக்கி விட்டது. கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பூட்டுப் போட நினைத்த மகாராஷ்டிர அரசு கண்டனத்துக்கு உள்ளானது. மும்பை உயர்நீதிமன்றம் திரிவேதியை ஜாமீனில் விட்டாலும் அவரது கைது எழுப்பிய கேள்விகளுக்கு விடை?உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் அசீம் திரிவேதி. தினசரி அம்பலமாகும் ஊழல்களைப் பார்த்து மனம் நொந்து, தமது உள்ளத்து உணர்வுகளை கார்ட்டூன்களாக வரைந்து தள்ளுபவர். அண்ணா ஹசாரேயின், ‘ஊழலுக்கெதிரான இந்தியாஅமைப்பின் போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், ஊர்வலங்கள் ஆகியவற்றில் திரிவேதியின் கார்ட்டூன்கள் பேனர்களாக, போஸ்டர்களாக களைகட்டும். தமது கார்ட்டூன்களை உலகளவில் உலவ விடுவதற்காகவேஊழலுக்கு எதிரான கார்ட்டூன்கள்என்ற வலைத்தளம் அமைத்தார் திரிவேதி.


வாஷிங்டனில் உள்ள cartoonist rights network international என்ற அமைப்பு நடத்திய போட்டியில் விருது வாங்கிய திரிவேதி அதைப் பெறுவதற்காக அமெரிக்கா செல்லும் நிலையில் இருந்தபோது கைது செய்யப்பட்டார். இந்த கார்ட்டூனிஸ்ட்டின் வயது வெறும் இருபத்தைந்துதான்.


ஏன் இந்தக் கைது?


சென்ற வருடம் டிசம்பர் மாதம், மும்பையில்அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தார். அப்போது திரிவேதியின் கார்ட்டூன்கள் போஸ்டர்களாக மைதானத்தில் இடம்பெற்றிருந்தன. நமது அசோக ஸ்தூபியில் உள்ள மூன்று சிங்கங்களுக்குப் பதிலாக மூன்று ஓநாய்கள் இடம்பெற, நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டிருக்கும் அந்த ஓநாய்களின் வாயிலிருந்து ரத்தம் சொட்டிக் கொண்டிருக்கும் காட்சி அந்த கார்ட்டூனில் இடம்பெற்றிருந்தது.


ஓநாய்களின் கீழேஊழலே வெல்லும்என்ற வாக்கியம் இடம் பெற்றிருந்தது. இதைப் பார்த்த அரவிந்த் சுடர்னவார் என்ற குடியரசுக் கட்சித் தொண்டர், ‘அந்த கார்ட்டூன் தேசியச் சின்னமான அசோக ஸ்தூபியை அவமதிக்கிறது; இது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. எனவே கார்ட்டூனிஸ்ட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று மும்பை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். உடனடியாக திரிவேதியின் கார்ட்டூன் வலைத்தளம் மூடப்பட்டது. கிட்டத்தட்ட பத்து மாதங்களாக இந்தப் புகாரின் மீது விசாரணை நடத்தி வந்தது மும்பை போலீஸ். ஆகஸ்ட் மாதம் .பி.யில் உள்ள அவரது கிராமத்துக்குச் சென்றது போலீஸ். ஆனால் அங்கு திரிவேதி இல்லை. தன்னை போலீஸ் தேடுவதையறிந்த திரிவேதி, தாமாகவே முன் வந்து மும்பையில் சரணடைந்தார்.
http://www.vikatan.com/news/images/cartoon-bharat-mata.jpg

இந்த இடைப்பட்ட காலத்தில் அசீம் திரிவேதி வரைந்த வேறு பல கார்ட்டூன்களும் சர்ச்சையாகின. பார்லிமென்ட் கட்டடத்தை வெஸ்டர்ன் டாய்லெட் போன்று வரைந்த அவரது கார்ட்டூன் நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்பியது. தவிர, தேசியப் பறவையான மயிலையும் தமது கார்ட்டூனில்உல்டாவாக்கி ஊழல்வாதிகளின் தோலை உரித்தார் திரிவேதி. சரணடைந்த திரிவேதியின் மீது குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது எதிர்பார்த்ததுதான். ஆனால் எதிர்பாராத அதிர்ச்சி! அந்தச் சட்டத்தின் பிரிவு 124 பிரயோகிக்கப்பட்டதுதான். அந்தப் பிரிவு தேசத் துரோகக் குற்றங்களுக்குப் போடப்படுவது. ஜாமீனில் வெளிவர முடியாது. தேசத் துரோகக் குற்றச்சாட்டுடன், தகவல் தொழில்நுட்பச் சட்டம், மற்றும் தேசியக் கௌரவத்தை இழிவுபடுத்துவதைத் தடுக்கும் சட்டத்தின் அடிப்படையிலும் திரிவேதியின் மீது குற்றம் சாட்டப்பட்டது.
பற்றிக் கொண்டது தீ! கருத்துச் சுதந்திரம் நமது நாட்டில் கிடையாதா? ஊழலை விமர்சனம் செய்தால் தேசத் துரோகமா? அசீம் திரிவேதி என்ன அஜ்மல் கசாப்பா? என்ற கேள்விகள் சரமாரியாக எழுந்தன. பிரஸ் கவுன்ஸில் தலைவரும், உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான மார்கண்டேய கட்ஜு, ‘திரிவேதியின் கைது சட்டவிரோதம்; கைது செய்தவர்களைக் கைது செய்ய வேண்டும்,’ என்று கர்ஜித்தார். ‘விமர்சனங்களைத் தாங்கும் மனப்பக்குவத்தை அரசியல்வாதிகள் வளர்த்துக் கொள்ள வேண்டும்என்றார். ஊழல் குற்றச்சாட்டுக்களில் ஏற்கெனவே திணறும் காங்கிரஸ், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அறிவு ஜீவிகளால் வலைத் தளங்களில் வறுத்து எடுக்கப்பட்டது. ‘தேசிய அடையாளங்களை நாம் மதிக்க வேண்டும்என்று பலவீனமாகப் பதில் சொன்னது காங்கிரஸ்.


இந்தியக் குற்றவியல் சட்டப் புத்தகத்திலிருந்துதேசத் துரோகம்தொடர்பான பிரிவை உடனடியாக எடுக்க வேண்டும். கடந்த கால வரலாற்றைப் பார்த்தால் நியாயமான குரலை அடக்கத்தான் இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது" என்கிறார் மனித உரிமை அமைப்பின் (பி.யு.சி.எல்) தேசியப் பொதுச் செயலாளர் டாக்டர் வி. சுரேஷ்.


1952-ல் ஜவாஹர்லால் நேரு நாடாளுமன்றத்தில் பேசும் போது, ‘இந்தக் கொடுமையான தேசத் துரோகச் சட்டப் பிரிவு வெள்ளையர்களால் நமது சுதந்திர உணர்வை அடக்க, நசுக்கப் போடப்பட்டது. நாகரிகமான ஜனநாயக சமூகத்தில் இதுபோன்ற சட்டங்களுக்கு இடமில்லை. உடனே நீக்க வேண்டும்என்றார். ஆனால் அவரது குரல் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எடுபடவில்லை. அந்தச் சட்டப் பிரிவு அப்படியே தொடர்ந்தது. கூடங்குளத்தில் கூட 3500 பேர் மீது இந்தப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.


நக்ஸலைட் ஏரியாக்களில் சமூக, மருத்துவப் பணியாற்றிய டாக்டர் பினாயக் சென், பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் ஆகியோரும் இந்தத் தேசத் துரோகச் சட்டப் பிரிவால் பாதிக்கப்பட்டவர்கள். அடுத்து திரிவேதி. அவசியமென்ன? ‘ஒருவரைக் கைது செய்யும்போது அவர் தலைமறைவாகி விடுவாரா; தடயங்களை அழித்து விடுவாரா? அல்லது சாட்சிகளைக் கலைத்து விடுவாரா? என மூன்று அம்சங்களைப் பார்க்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. திரிவேதி இந்த மூன்றையும் செய்ய வாய்ப்பில்லை. எனவே கைது சட்ட விரோதம்" என்கிறார் சுரேஷ்.தேசத் துரோகச் சட்டப் பிரிவில் கூடதேசத்தை எதிர்த்துஎன்ற வார்த்தை இல்லை. ‘அரசை எதிர்த்து சதிசெய்தால்என்றுதான் இருக்கிறது. அரசு செய்யும் ஊழல்களை விமர்சனம் செய்தால்தேசத் துரோகமா?’ திரிவேதி தேசியச் சின்னங்களை இழிவுபடுத்தியதாகச் சொல்கிறார்கள். தேசியச் சின்னங்கள் ஒரு குறியீடுதான். அந்தக் குறியீட்டின் பின்னால் ததும்பி நிற்பது 125 கோடி மக்களின் நாட்டுப்பற்று. அந்த மக்களின் பணத்தைச் சுரண்டி சூறையாடும் அரசியல் வாதிகளைக் கருத்துச் சுதந்திரம் மூலம் அம்பலப்படுத்தியது எந்த விதத்தில் தவறு? மக்களை அவமானப்படுத்தி கூனிக்குறுக வைப்பவர்கள் ஊழல் அரசியல் வாதிகள்தான். அவர்கள் செய்வதுதான் தேசத் துரோகம். திரிவேதியை தேசத் துரோகக் குற்றச்சாட்டில் கைது செய்ததற்கான முக்கிய நோக்கம் ஊழலை எதிர்த்துப் போராடுபவர்களின் குரலை அடக்குவதுதான். ஆனால் இதற்கெல்லாம் பயப்பட மாட்டோம்," என்கிறார்ஊழலுக்கெதிரான இந்தியாஅமைப்பின் சென்னை கிளை ஆர்வலர் சந்திரமோகன்.


இந்தச் சூழலில் மும்பை உயர் நீதிமன்றம் அளித்த ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார் திரிவேதி. ‘அவர் மீது போடப் பட்டிருக்கும் தேசத் துரோகக் குற்றச்சாட்டும் நீக்கப்படும்என்று சொல்லியிருக்கிறார் மகாராஷ்டிர உள்துறை அமைச்சர். ஆனால், இந்த விவகாரத்தில் அடிப்படையாக எழுந்த கருத்தோட்டம் சட்டப் புத்தகத்திலிருந்துதேசத் துரோகம்தொடர்பான பிரிவு அகற்றப்பட வேண்டும் என்பதுதான்.


இது சாத்தியப்பட தொடர் போராட்டம் இருக்குமா?


நன்றி - கல்கி , புலவர் தருமி

0 comments: