Sunday, September 30, 2012

ஜெயமோகனும், நானும் சினிமாவில் - எஸ் .ராமகிருஷ்ணன் பேட்டி @ த சண்டே இந்தியன்

http://reviews.in.88db.com/images/Rajini-Ramakrishnan-events/S-Ramakrishnan-Felicitated.jpgசமகால தமிழ் எழுத்துலகின் முக்கியமான பெயர் எஸ். ராமகிருஷ்ணன். பத்திரிகை, சினிமா, இணையம் என பன்முக ஊடகங்களில் தனித்த  ஆளுமையுடன்செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் இயல் விருதுக்காக கனடா, அமெரிக்கா நாடுகளுக்குச் சென்றுவந்த அவரிடம் எழுத்துகள், பயணம், வாசிப்பு பற்றி தசஇ பேசியதிலிருந்து....சிறுபத்திரிகை எழுத்தாளராக செயல்படத் தொடங்கியவர் நீங்கள். இப்போது தமிழகம் அறிந்த பிரபல எழுத்தாளுமைகளில் ஒருவர். உங்களிடத்தில் இந்த புகழ் என்ன மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது?முதலில் நான் புகழ் என்று சொல்லமாட்டேன். மாறாக என்னுடைய வாசகர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது. வாசிக்கும் தளம் விரிவடைந்திருக்கிறது என்று நினைக்கிறேன். சிறுபத்திரிகை தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கும்போது இலக்கியம் சார்ந்த அல்லது தீவிர அக்கறை சார்ந்த ஒரு குறிப்பிட்ட பகுதியினர்தான் என்னை வாசித்தார்கள். அதுதான் என் ஆரம்பமும்கூட. அந்த வாசிப்புத்தளத்தை விரிவுபடுத்திக்கொண்டே இருக்கிறேன். ஓர் எழுத்தாளன் என்று சொல்லக்கூடியவனின் வேலை நான் நினைப்பது என்னவென்றால், தன்னுடைய சமகாலத்தின் பல்வேறு தரப்புகளோடு சேர்ந்து இயங்கி வேலை செய்கிறவன். எழுத்தின் வழியாகவே அவன் பல்வேறுதரப்பு மக்களைச் சென¢று சேரவேண்டும். இலக்கியம் சார்ந்த கூர்ந்த ரசனை உள்ளவர்களோடு மட்டுமல்லாமல் வாழ்க்கையோட பல்வேறு அம்சங்களோடு சேர்ந்தவர்களுடனும் உறவாடவும் அவர்களுடைய விஷயங்களை பகிர்ந்துகொள்ளவும் இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கு வாசிப்பின் முக்கியத்துவத்தை அறிமுகப்படுத்துவதும் எழுத்தாளனின் வேலைதான். நான் முக்கியமான நினைக்கிற ஆளுமைகள் அப்படித்தான் எனக்கு முன்பு செயல்பட்டிருக்கிறார்கள். இலக்கியமே அவ்வளவு பெருவாரியான மக்களைச் சென்றடையுமா? சென்றடைவதற்கான சந்தர்ப்பம் இருக்கிறதா? நம் சூழலில் அது குறைவாக இருப்பதால், ஊடகங்களின் மூலமாக அடையமுடியுமா என்று நினைக்கிறேன். அதன்மூலம் புகழ்பெறுவதற்கான முயற்சி இல்லை. என் எழுத்தும் அந்த எழுத்துக்குக் கிடைக்கக்கூடிய கவனிப்பும் தொடர்ந்த வாசிப்பை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. அந்த வாசிப்பின் வழியாகத்தான் இந்த இடத்தை நான் அடைந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
இணையதளம் வழியாக உலகப்படங்கள் மற்றும் முக்கியமான புத்தகங்கள் குறித்த அறிமுகங்களைச் செய்துவருகிறீர்கள்...எப்போதுமே நான் நினைத்துப் பார்க்கிறேன். ஒரு கிராமத்திலிருந்து உருவான காலகட்டத்தில்... சாதாரண அரசுப்பள்ளியில் படித்த ஒருவன் மேலே வரவேண்டும் என்று நினைக்கிறபோது, அவனுக்கு இருக்கிற முக்கியமான தடைகளாக இருந்தது அவனை வழிநடத்தக்கூடிய புத்தகங்கள், அவனது ரசனையை மேம்படுத்தக்கூடிய அம்சங்கள், இன்னும் சொல்லப்போனால் அடிப்படையான தகவல்கள் எங்குமே கிடைக்காது. காப்ரியேல் கார்ஸியா மார்க்ஸ் எழுதிய நூற்றாண்டுகால தனிமை நூலுக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கிறது என்று ஒரு செய்தி படித்தேன். இந்தப் புத்தகத்தைத் தேடத் தொடங்குகிறேன். மல்லாங்கிணறு என்ற சிறு கிராமத்திலிருந்து இந்தப் புத்தகத்தைத் தேடத்தொடங்கும்போது... அதை வாங்குவதற்கான சூழலும் இருக்கிறது. எங்கே கிடைக்கும் என்று தெரியாது. எங்கே விற்கும், யாரிடம் கேட்கலாம், யாரு இதை படித்திருக்கிறார்கள்? அல்லது இந்தப் புத்தகத்தைப் பெறுவதற்கு என்ன செய்யவேண்டும்? இந்த ஒரு புத்தகத்தைத் தேடி இந்தியா முழுவதும் சுற்றியிருக்கிறேன். டெல்லி போயிருக்கிறேன். மும்பை போயிருக்கிறேன். திருவனந்தபுரம் போயிருக்கிறேன். டெல்லியில் ஒரு புத்தகக்கடையில் இந்தப் புத்தகம் வேண்டும் என்று கேட்டபோது, நீங்கள் காத்திருக்கவேண்டும். டெல்லியில் இருந்தால் 15 நாட்களுக்குள் வாங்கித்தரமுடியும் என்று சொன்னார்கள். இந்தியாவில் ஒரு புகழ்பெற்ற புத்தகத்தை வாங்கவேண்டும் என்று நினைத்தால் அதற்காக காத்திருக்கவேண்டிய சூழல் இருந்தது. அதன் விலை 400 ரூபாய் இருக்கும். ஆனால் 1000 ரூபாய் செலவழித்து வாங்கவேண்டியுள்ளது. உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் புத்தகம் வேண்டும் என்று கேட்டால் ஐந்தாவது நாள் அது வீட்டுக்கு வந்துவிடுகிறது.ஆனால் இன்னமும் ஒரு பிரச்னை இருக்கிறது. என்ன புத்தகம் படிக்கவேண்டும்? அதை ஏன் படிக்கவேண்டும்? அந்தப் புத்தகம் என¢ன என்று தெரியவில்லை. எப்போதெல்லாம் புத்தக்கடை போகிறோமோ அப்போதெல்லாம் ஒரு திகைப்பு ஏற்படுகிறது. இங்குள்ள ஆயிரமாயிரம் புத்தகங்களில் எது முக்கியமான புத்தகம்? ஏன் படிக்கவேண்டும்? அது எப்போது வந்தது? மேலைநாடுகளில் அந்தப் புத்தகங்களை சிபாரிசு செய்யக்கூடிய பத்திரிகைகளோ படைப்பாளிகளோ அல்லது விமர்சனங்களோ இருக்கின்றன. எவ்வளவு பெரிய புகழ்பெற்ற புத்தகம் தமிழ்நாட்டில் வந்தாலும் அது கல்லைத் தூக்கி தண¢ணியில் போட்ட மாதிரி வெளியில் தெரியாமலே போய்விடுகிறது. நான் தொடர்ந்த 50 எழுத்தாளர்களைப் பற்றி கதாவிலாசம் என்று எழுதியிருக்கிறேன். 25 எழுத்தாளுமைகளைப் பற்றி வாசக பருவம் என்று எழுதியிருக்கிறேன். இன்று எழுத ஆரம்பித்திருக்கிற எழுத்தாளர்கள் வரைக்கும் 50 பேரை அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.இவ்வளவு பேரை அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டுமா என்றால், நம்முடைய சூழலில் ஒரு சிறந்த எழுத்தை அறிமுகம் செய்ய வேண்டியிருக்கிறது. புதிய வாசகர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். என்னுடைய முன்னோடிகள் இதை செய்துகொண்டே இருந்திருக்கிறார்கள். சுந்தராமசாமி முக்கியமான எழுத்தாளர்களை சிபாரிசு செய்திருக்கிறார். மொழிபெயர்த்திருக்கிறார். புதுமைப்பித்தன் அவ்வளவு முக்கியமான சிறுகதைகளை மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கிறார். இப்படியான பணிகளைச் செய்வதற்கு எழுத்தாளுமைகள் பிற நாடுகளில் இருக்கிறார்கள். சாதாரண ஒரு இலக்கிய வாசகனின¢ ரசனையை மேம்படுத்துவதற்கான தளம் நம்மூரில் குறைவாக இருக்கிறது. என் எழுத்துலகம் தாண்டி நான் பார்த்த, ரசித்த, பயணங்களில் கிடைத்த கலை அம்சங்களை பகிர்ந்துகொள்கிறவனாகத்தான் நான் இருக்கிறேன்.
புத்தகங்களில் உலகிலேயே வசிப்பவர் நீங்கள். வாசிப்பு ஒருவரை எங்கெல்லாம் அழைத்துச் செல்கிறது என்பதை உங்கள் சிறுவயது அனுபவத்திலிருந்து பகிர்ந்துகொள்ள முடியுமா?


பொதுவாக வாசிப்பு என்பது என்னைக் கேட்டால், வெறுமனே பொழுதுபோக்கிற்காகவும் ரசனையின் அம்சம் என்று நினைக்கமாட்டேன். நம்மை ஒவ்வொரு நாளும் மேம்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. எப்படி என் உடல்நலத்திற்காக அடிப்படை உணவை எடுத்துக்கொள்கிறேனோ, எப்படி என் சுகாதாரத்திற்கு என்னை ஒவ்வொரு நாளும் தூய்மைப்படுத்திக்கொண்டிருக்கிறேனோ, இதுபோல என் சிந்தனையை மன ஆரோக்கியத்தை வளர்த்துக்கொள்வதற்காக ஒவ்வொரு நாளும் வாசிக்கவேண்டியிருக்கிறது. இப்படி வாசிக்கத் தவறுகிற நேரங்களில் நான் என்னாகிறேன் என்றால், உணவில்லாதபோது ஏற்படுகிற ஒரு பட்டினியைப் போலத்தான் உணர்கிறேன். படிப்பதன்வழியாக என்ன நடக்கிறது என்றால், என்னுடைய அகம் தூய்மையடைகிறது. சிந்தனையை விரிவுபடுத்துகிறேன். இன்னும் சொல்லப்போனால் எனக்கு வெளியில் இருக்கக்கூடிய உலகத்தைப் பார்ப்பதற்கான ஒரு கண்ணாகத்தான் வாசிப்பைப் பயன்படுத்துகிறேன். இன்னொரு மனிதனை எப்படி புரிந்துகொள்வது? என்னைப்போல இருக்கக்கூடிய ஜனக்கூட்டத்தின் வாழ்க்கைமுறையை புரிந்துகொள்ளவேண்டும் என்றால் எனக்கு புத்தகங்கள்தான் வழிகாட்டவேண்டும்.
என் வாழ்க்கை முழுவதும் நான் புத்தகங்களின் தோழனாகத்தான் இருக்கிறேன். ஏனென்றால் புத்தகங்களின் தோழமை எனக்கு நிறைய கொடுத்திருக்கிறது. உலகத்தின் மிக முக்கியமான விஷயங்கள் அத்தனையையும் தேடிப்பார்ப்பதற்கு முன்பு, அதை புத்தகங்களின் வழியாகத்தான் அறிகிறேன். இன்றைக்கும்கூட என்னால் பார்க்கவேமுடியாத சாத்தியமற்ற அத்தனையையும் புத்தகங்களின்வழியாகத்தான் அறிந்திருக்கிறேன். எனக்கு நிலவைப் பற்றி அத்தனை ஆயிரம் வரிகள் தெரியும். ஒருநாளும் அந்த அனுபவத்தை நான் பெற்றது கிடையாது. நிலவைப் பார்க்கிறபோது அதை என்னால் விஞ்ஞானப் பார்வையோடு பார்க்கமுடிகிறது. 

அண்டவெளிகள் பற்றி, கடலாய்வுகள் பற்றி, நாம் அறியாத பல விஷயங்கள் பற்றி டால்ஸ்டாய், தாஸ்தாவொஸ்கி போன்ற எழுத்தாளர்கள் கண்டுபிடித்து சொன்னதால், உலகத்தை இவ்வளவு தெளிவாகப் புரிந்துகொள்ளமுடிகிறது. எல்லாம் தாண்டி இந்தப் பண்பாட்டையும் மரபையும் தொன்மைகளையும் புரிந்துகொள்ளவேண்டும் என்று சொன்னால் வேறு என்ன வழி இருக்கிறது? தமிழகத்தின் வரலாற்றைத் தெரிந்துகொள்வதற்காக சமகாலத்தில் ஒருவன் பயணம் செய்தால் தெரிந்துகொள்ளமுடியுமா?
 அவனுக்கு இருக்கிற ஒரே ஒரு வாய்ப்பு புத்தகங்கள் மட்டும்தான். வரலாற்றை பண்பாட்டை பண்பாட்டின் நுட்பங்களை இங்கு வாழ்ந்த மனிதர்களின் நினைவுகளை படிக்கவேண்டும் என்றால் ஒரே ஒரு வழி புத்தகங்கள்தான். புத்தகங்கள் என் சிறு வயதிலிருந்து வழிநடத்திக்கொண்டே இருந்திருக்கின்றன. நிறைய நேரங்களில் புத்தகங்களை நான் அச்சிடப்பட்ட காகிதங்கள் என்று மட்டும் நினைக்கவில்லை. அது ஓர் உலகம். எப்படி ஒரு ஊருக்குள் நுழைந்து அந்த மனிதர்களைப் பற்றி அந்த ஊரைப் பற்றி அறிந்துகொள்கிறோமோ அப்படித்தான் புத்தகமும் ஒரு ஊராக இருக்கிறது. இன¢னும் சொல்லப்போனால் அது ஒரு நிலவியல். அதற்குள் நான் போகிறேன். அது எழுத்தாளன் உருவாக்கிய உலகம் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம்.
ஒரு பயணியாக தமிழகம் இன்று அடைந்திருக்கும் மாற்றம் குறித்து உங்களுக்குச் சொல்ல இருக்கிறதா?நிறைய இருக்கின்றன. ஒரு பயணியாக தமிழகத்தில் சுமார் 25 ஆண்டுகளாக பயணம் செய்துகொண்டே இருக்கிறேன். இந்தியா முழுவதும் பயணம் செய்கிறேன். என்னை பிரமிக்கவைக்கிற விஷயம் இந்த சாலைகளின் வளர்ச்சிதான். உலகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த விஷயம் ஒன்று இருக்குமென்றால், அது சாலைகள்தான். சாலைகள்தான் உலகத்தை ஒன்றுசேர்த்துக்கொண்ட இருக்கின்றன. உள்ளங்கையில் இருக்கிற ரேகைகளைப் போல அவ்வளவு ஆயிரம் சாலைகள் ஒன்றுசேர்ந்து ஒன்றுசேர்ந்து எல்லா ஊர்களையும் இணைத்துவைத்திருக்கிறது. அமெரிக்காவில் நிற்கும்போது நினைத்தேன். என¢னுடைய ஊரையும் அமெரிக்காவையும் பல்வேறு சாலைகள்தான் ஒன்றுசேர்த்திருக்கின்றன. அந்த சாலைகள் ஒன்றுபோல இருக்கின்றன. பழைய சாலைகள் போய் புதிய சாலைகள் வருகின்றன. அந்த சாலைகளின் பாடலை, அதன் கதையை, அதன் நினைவுகளை கேட்டுக்கொண்டே இருக்கிறவன் என்ற முறையில் சாலைகள் மேம்படுவதைப் பார்க்கிறேன். முதன¢முறையாக என் வாழ்க்கையில் இவ்வளவு அகலமான விஸ்தாரமான சாலைகள்... சாலைப் பயணத்தில் அதனை எளிதாக்கக்கூடிய வசதிகள் உருவாகியிருக்கின்றன.
இந்தியா போன்ற ஒரு பெரிய தேசத்திற்குள் சாலைகளை மேம்படுத்துவது ஒரு சவால். ஆனால் இந்த சாலைகளின் வளர்ச்சி மெல்ல கிராமங்களிலிருந்து மனிதர்களை துண்டித்துக்கொண்டே இருக்கிறது. அது ஒரு மோசமான உதாரணம் என்று  நினைக்கிறேன். ஒருமுறை டவுன் பஸ் டவுன் பஸ்ஸாக ஏறி சென்னையிலிருந்து ஒருமுறை எங்கள் ஊருக்குப் போனேன். அப்போது அவ்வளவு கிராமங்களைப் பார்த்தேன். பெரிய சாலைகளில் பயணிக்கும்போது ஓர் ஆட்டை, ஒரு மனிதனை, வேறு எந்த விஷயத்தையும் நான் பார்த்ததில்லை. இந்தப் பயணம் ஒரு மனிதனை கிட்டத்தட்ட துண்டித்துவிட்டது. அதேநேரத்தில் சாலைகள் மேம்பட்டிருக்கின்றன. சமீபமாக ஒரு கூட்டத்தில் பேசினேன். இந்த சாலைகளின் வரவுக்குப் பிறகு மனிதர்களின் மனங்களில் ஒரு மாற்றம் வந்திருக்கிறது. வழிகாட்டுவதற்கான இன¢னொரு மனிதன் தேவையில்லை. வழிகாட்டி மனிதர்கள் தேவையற்றவர்கள் என்று நினைக்கிறார்கள்.
ரயிலில் போகும்போதோ பஸ்ஸில் போகும்போதோ கிராமங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். சிறு கிராமங்கள் வரும். அடிவாரத்தோடு அவை சேர்ந்திருக்கிற காட்சிகளைப் பார்த்திருக்கிறோம். இப்போது எதுவுமே இல்லை. இவ்வளவு சாலைகளை மேம்படுத்திய ஒரு சமூகம் அடிப்படை வசதிகளுக்கு எதுவுமே செய்யவில்லை. கழிப்பறை இல்லை. முறையான உணவகங்கள் இல்லை. நிறைய நேரங்களில் காரை இயக்குவதற்கான பெட்ரோல் பங்க்குள்கூட கிடையாது. இந்த வசதிகளை செய்திருக்கக்கூடிய மேற்கத்திய உலகம் அதில் ரொம்ப கவனமாக இருக்கிறார்கள். 15 அல்லது 20 கி.மீட்டர் இடைவெளியில் ஒரு வளாகத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அங்கே உணவகம், புத்தகக்கடை, பெட்ரோல் பங்க், உடை மாற்றுவதற்கான இடம், கழிப்பறை என எல்லா வசதிகளையும் செய்து வைத்திருக்கிறார்கள். நாம் இந்தப் பயண வழிகளைப் பயன்படுத்தியிருக்கிறோமே தவிர அடிப்படை வசதிகளைச் செய்யவில்லை. இன¢னொன்று பயண விபத்துகளுக்கான மருத்துவமனைகளே எங்கும் கிடையாது. இங்கிருந்து கன்னியாகுமரிவரை நெடுஞ்சாலைகளை எடுத்துக்கொள்ளுங்கள்... ஒரு விபத்து நடந்தால் அருகிலுள்ள நகரத்திலிருந்துதான் வரவேண்டும். ஒரு மொபைல் யூனிட் இல்லை. ஆனால் அப்படியொரு யூனிட் இருக்கிறது என்கிறார்கள். என் சாலைப்பயணத்தில் நான் பார்த்ததே இல்லை.
சாலைகளின் வருகையால் பயணம் அதிகரித்திருக்க வேண்டும். குறைந்திருக்கிறது. ஒரு விழாவோ, குடும்ப நலனோ அதற்காக பயணிக்கிறார்களே தவிர, பொதுவான பயணத்தின்மீதான அக்கறை படிப்படியாக குறைந்துவருகிறது. சலைகள் மேம்பட்டு பயண மனநிலை குறைவது ஆச்சரியமாக இருக்கிறது. ஏனென்றால் எல்லாவற்றையுமே வீட்டிலிருந்தே பார்க்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.


இணையத்தில் பார்த்தால்போதும். வீட்டில் சீரியல்களில் பார்த்தால்போதும். புகழ்பெற்ற எதையும் சந்திப்பதில்லை. அப்படியே சென¢றாலும் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டால் போதும் என்று நினைக்கிறார்கள். ஒரு வரலாற்றுப்பூர்வமான இடத்தையோ, காட்சியகத்தையோ பார்க்கிறபோது அதை புரிந்துகொள்ள முயற்சி செய்வதே இல்லை. எந்த ஊருக்குப் போகும்போதும் அதன் வரலாற்றை, கலை மேன்மையை தெரிந்துகொள்வதே இ¢ல்லை. பயணம் பற்றி முன்பு அச்சம் இருந்தது. அறியாத மனிதர்கள் இருப்பார்கள். நாம் ஊரிலிருந்து துண்டிக்கப்பட்டுவிடுவோம். பொருளாதாரத் தடைகள் இருந்தன. அவை எதுவுமே இன்று இல்லை. ஆனால் அதற்கு மாறாக பயணத்தை ஒரு வணிக நோக்கமாக மாற்றிவிட்டோம். சுற்றுலாத் தளம் என்பது முன்பு மாதிரி ஓய்வெடுக்கிற இடம் கிடையாது. அது ஒரு வணிக சந்தை. அன்றாட வாழ்க்கையைவிட ஒரு மோசமான நிலைக்கு உங்களைத் தள்ளிவிடுகிறது. விடுமுறை நாளில் ஊட்டிக்குப் போய் பாருங்கள். அதுபோல ஒரு சந்தையை நீங்கள் பார்த்தே இருக்கமாட்டீர்கள்.மாமல்லபுரத்தில் போய் இறங்கி, அந்த ஊரைத் தெரிந்துகொள்ள ஓர் எளிய கையேடு இருக்கிறதா என்று தேடிப்பார்த்தால் இருக்காது. அர்ச்சனன் தபசு சிற்பத்தை அத்தனை பேர் பு£ர்த்துச் செல்கிறார்கள். ஆனால் அதைப்பற்றிப் பேச அங்கே ஒரு ஆள் உங்களுக்குக் கிடைக்கமாட்டார். டச் ஸ்கிரீன் வைக்கலாம். வீடியோ கெய்டு வைக்கலாம். ஆடியோ கெய்டு வைக்கலாம். எதுவுமே செய்யமாட்டார்கள்.

உங்களின் ஆளுமையில் தாக்கம் செலுத்தியவர்கள் பற்றி கூறுங்கள்?
என¢னுடைய ஆளுமையில் தாக்கம் செலுத்தியவர்கள் இரண்டு விதமானவர்கள். ஒன்று எழுத்தாளர்கள். இன்னொன்று சாமானிய மனிதர்கள். இரண்டு பேருக்குமே வாழ்க்கையில் நான் முக்கியமான இடத்தைத்தான் கொடுக்கிறேன். சிறுவயதிலிருந்து எழுத்தாளர்கள் என்னை உருவாக்கி இருக்கிறார்கள். நான் தமிழில் வாசித்த எழுத்தாளர்கள் மட்டும் இல்லை. எனக்கு ரொம்பவும் விருப்பமானது ரஷ்ய இலக்கியங்கள். எப்போதுமே என்னை ரஷ்ய இலக்கியத்தின் பிரதிநிதியாகத்தான் கருதுகிறேன். அவர்கள் என்னை உருவாக்கியதில் முக்கியமானவர்கள். டால்ஸ்டாய், தாஸ்தாவொஸ்கி, ஆன்டன் செகாவ், துர்கனேவ், கார்க்கி, கோஹைல், புஷ்கின் இவர்கள்தான் என் ஆதர்சங்கள். அவர்களுடைய படைப்புகளில் ஆழ்ந்துதான் அப்புறம் தமிழ் படிக்கவந்தேன். இன்றைக்கும் எனக்குப் பிடித்த ஆளுமைகள் என்றால் டால்ஸ்டாயும் தாஸ்வொஸ்கியும்தான் என்று சொல்வேன். அதேபோல சமகாலத்தில் இருந்த அல்லது தமிழ் இலக்கிய ஆளுமைகளாக எடுத்துக்கொண்டால் புதுமைப்பித்தனையும் அழகிரிசாமியையும் வண்ணநிலவனையும் நாகராஜனையும் நகுலனையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இவர்கள் எல்லோருமே என்னை உருவாக்குவதில் முக்கிய பங்குவகித்த ஆளுமைகள். இலக்கியத்தின் அடிப்படையை புரிந்துகொள்ள இவர்கள் உதவிசெய்ததுபோல, வாழ்க்கையின் அடிப்படைகளை புரிந்துகொள்ள, வாழ்¢க்கையை எப்படி நடத்திச்செல்ல வேண்டும் என்று வழிகாட்டியவர்கள் என்று இரண்டு,  மூன்று பேரை நான் முக்கியமாக கருதுகிறேன். ஒருவர் எஸ்.ஏ. பெருமாள் என்கிற மதுரையில் வசிக்கக்கூட முக்கிய இடதுசாரித் தோழர். அவர்தான் என் பள்ளிநாட்களிலிருந்து நெறிப்படுத்தி, என்ன படிக்கவேண்டும், என்ன செய்யவேண்டும் என்பது தொடங்கி என்னுடைய இலக்கியம், வாழ்க்கை இரண்டையும் ஒழுங்குபடுத்திக்கொண்டே இருந்தார். ஒரு தீவிரமான இலக்கிய வாசகரும் பொதுவுடைமைவாதியுமான அவர் என்மேல் பெரிய அளவுக்கு ஆளுமையைச் செலுத்தியிருக்கிறார்.
இதேபோல இன்னொருவர் தேவதச்சன். கல்லூரி நாட்களிலிருந்து அவரிடம் ஒரு மாணவனாக இன்றுவரை நிறைய கற்றுக்கொண்டே வருகிறேன். என்னை அவர் வழிப்படுத்தியிருக்கிறார். அவருடைய சிந்தனைகளின் தொடர்ச்சி எனக்குள் இருக்கிறது. இலக்கியத்தை மட்டுமல்ல வாழ்க்கையைப் புரிந்துகொள்ள அவருடைய தொடர்பு நிறைய உதவி செய்திருக்கிறது. என் குடும்பத்திலிருந்து அண்ணன் டாக்டர் வெங்கடாசலம், புத்தகங்களை வாங்கவும் படிக்கவும் முக்கிய கவனம் பெறவும் உதவி செய்திருக்கிறார். இன்றுவரையில் அவருடைய அக்கறை என் எழுத்து சார்ந்த விஷயங்களை ஒழுங்குபடுத்துவதில் முக்கியமாக இருக்கிறது.

இயல் விருது வாங்க கனடாவுக்கும் பின்னர் அமெரிக்காவுக்கும் சென¢று வந்துள்ளீர்கள். அங்குள்ள அரசியல், வாழ்க்கைச் சூழல்களைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?
இயல் விருது வாங்குவதற்காக சென்ற என் பயணத்தில் இரண்டு மாறுபட்ட உலகங்களைச் சந்தித்தேன். ஒன்று கனடா போல ஒரு தேசம். அந்நாட்டைப் பற்றி முன்பு படித்து தெரிந்திருக்கிறேன். இலக்கியம் படித்திருக்கிறேன். தமிழ் மக்களைச் சந்தித்திருக்கிறேன். அங்கே போன பிறகுதான் கனடிய வாழ்க்கை, கனடிய மக்கள்... குறிப்பாக தமிழ் மக்களின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ளமுடிந்தது. ஒரு தேசத்தில் அனைத்தையும் தண்ணீர் தீர்மானிப்பதை கனடாவில்தான் பார்த்தேன். உலகத்தில் அதுதான் தண்ணீர்தேசம். எங்கே பார்த்தாலும் அருவிகள், ஏரிகள். தண்ணீர்தான் அந்த வாழ்க்கையை தீர்மானிப்பதால், இயல்பாகவே அந்த தண்ணீரின் குணங்கள் மக்களிடம் இருக்கின்றன. அவர்கள் சாந்தமாகவும், ஒர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போவதில் எளிதானவர்களாகவும், பொதுவாகவே அடக்கமாக, ஆழமான மனநிலை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

இதுவரை தண்ணீர் குறித்து என்னிடமிருந்த எண்ணங்களை கனடா புரட்டிப்போட்டுவிட்டது. மிகவும் பிரம்மாண்டமான ஏரிகள், ஏரி சார்ந்த வாழ்க்கை, இயற்கையோடு இணைந்து வாழ்வதில் மக்கள் காட்டக்கூடிய அக்கறை... கனடாவைப்போல உலகத்தில் நான் பார்த்தது கிடையாது. அச்சமில்லாத வாழ்க்கையை முதன்முறையாக கனடாவில்தான் பார்த்தேன். இங்குதான் எந்த இரவிலும் எந்த வீதியிலும் அச்சமில்லாமல் செல்லலாம். கனடியர்களிடம் அடிப்படை அன்பு இருக்கிறது. மூன்றரை லட்சத்திற்கு மேலே தமிழர்கள் வசிக்கிறார்கள். அவர்களுடன் அவர்களுக்கு இருக்கிற உறவு அவ்வளவு இணக்கமாக இருக்கிறது. உலகமே ஈழத்தமிழர்கள் விஷயத்தில் அக்கறை காட்டாதபோது கனடாதான் அவர்களை வரவேற்று, புகலிடம் கொடுத்து, இந்த நாட்டின் கௌரவமிக்க பிரஜைகளாக நடத்துகிறார்கள். அவர்கள் யாருக்கும் எந்த பேதமும் காட்டுவதில்லை. கல்வி, மருத்துவ வசதி என எல்லாமே கிடைக்கிறது. அங்கு வாழக்கூடிய தமிழ் மக்கள் ஒரு புகலிடத்தில் வசித்தாலும், அவர்களின் உணர்வுகளில், அன்றாடப் பணிகளில் ஈழமும் ஈழம் பற்றிய நினைவுகளும்தான் இருக்கின்றன. இன்றைக்கும் அவர்கள் நடந்துபோய்க்கொண்டிருந்தால்கூட ஈழம் பற்றிய நினைவுகளில்தான் இருக்கிறார்கள். யாரும் யாரைச் சந்திக்கிறபோதும் ஊரைப்பற்றித்தான் பேசுகிறார்கள். ஊரிலிருந்து வந்திருக்கக்கூடிய மனிதனைத்தான் வரவேற்கிறார்கள். ஊரினுடைய மொழியினுடைய அடையாளங்களை எல்லாம் பிரதானப்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டில்கூட அவ்வளவு நல்ல தமிழ் பேசமாட்டார்கள். அங்கே நல்ல தமிழ் பேசப்படுகிறது. தமிழின் இலக்கியமும் கலாசார அடையாளங்களும் முதன்மைப்படுத்தப்படுகின்றன. அவர்களை ஊர் வெளியில் ஒன¢றிணைத்துக்கொண்டே இருக்கிறது. ஒரு கடினமான பொருளாதாரச் சூழலில் வாழ்ந்தபோதும், தான் சம்பாதித்த பணத்தை மொழி, இலக்கியம், கலாசாரம் சார்ந்த விஷயங்களுக்கு செலவு செய்கிறார்கள்.

அதற்கு நேரெதிரான அமெரிக்க வாழ்க்கையையும் பார்த்தேன். தமிழர்கள் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. 1950களிலேயே தமிழர்கள் தொழில்நுட்பம் கற்றுக்கொண்டு பொறியியல் படித்து அமெரிக்காவில் போய் வாழத் தொடங்கிவிட்டார்கள். அமெரிக்காவில் பெருவாரியான தமிழ் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். பல நகரங்களில் ஒரு பகுதியே தமிழர்களால் நிறைந்திருக்கிறது. பெரிய பல்கலைக்கழகங்களில் முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள். தொழில்நுட்பத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள். ஆனால் இவர்களிடம் கனட தமிழர்களிடம் பார்த்த எந்த குணத்தையும் பார்க்கமுடியவில்லை. தன்னுடைய இனத்தையோ மொழியையோ இன்னும் சொல்லப்போனால், தமிழகத்தின் மிக முக்கியமான பிரச்னைகள் குறித்து எந்த ஈடுபாடும் காட்டாத மனிதர்களாக இருக்கிறார்கள். அமெரிக்கா பற்றியும்கூட வெறொரு பார்வை எனக்குக் கிடைத்தது. ஒரு பெரிய தொழில்நகரம், பிரம்மாண்ட கட்டடங்கள், வானுயர்ந்த தோற்றம் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்திருந்தேன். அமெரிக்கா ஒரு தொழில்மயமான நகரம் என்றுதான் படித்துத் தெரிந்திருக்கிறோம். எனக்கு வேறுவகையான அனுபவம் கிடைத்தது.

அது பெரும் காடு. எப்படி தண்ணீரில் ஐஸ் கட்டிகள் மிதந்துகொண்டிருக்கிறதோ... அப்படி நகரங்கள் காட்டில் மிதந்துகொண்டிருக்கின்றன. எல்லா நகரங்களின் புறநகர் சாலைகளிலும் ஒரு மானைப் பார்க்கலாம். அந்த நகரத்தின் பத்தாவது மைலில் காடு தொடங்கிவிடுகிறது. காட்டோடு இணைந்த வாழ்க்கையைத்தான் அவர்கள் வாழ்கிறார்கள். காட்டிற்குள் குடியிருப்புகள் இருக்கின்றன. சாலைகள் இருந்தால்கூட அது அடர்ந்த காடுதான். இயற்கையை அவர்கள் பார்க்கிறவிதமும் நாம் பார்க்கிற விதமும் மாறுபட்டது. துண்டிக்காமல் அப்படியே இயற்கையோ இணைந்து  வாழ்கிறார்கள். ஒரு பக்கம் நகரத்தை உருவாக்கிக்கொண்டால்கூட மறுபக்கம் அப்படியே காடாக இருக்கிறது.  அதனாலேயே அங்கே ஒரு சமநிலை அற்ற தன்மை இருக்கிறது. அமெரிக்க மக்களுடைய பொதுவான மனப்போக்கு என்பது அவர்களுடைய வேலைசார்ந்து, பண்பாட்டு வெறுமை சார்ந்துதான் இருக்கிறது. தனித்துவமான ஒரு பண்பாட்டுத் சூழல் இல்லை. அது கூட்டுக்கலவையால் ஆனது. ஏதாவதொரு உணவகத்தில் போய் அமெரிக்க உணவு என்று கேட்டால், அங்கே மெக்சிகன் இருக்கும், ஆசிய உணவுகள் இருக்கும், பல்வேறு கூட்டு உணவுகளின் பகுதிதான் இருக்கும். அவர்கள் ஒரு கூட்டு மனப்பான்மையில்தான் இருக்கிறார்கள். அமெரிக்கா போய் வந்தபிறகுதான் தெரிந்தது. பொருளாதாரம் என்பது வெறுமனே முதலாளித்துவம் சார்ந்ததாக இல்லை. அது தனிமனிதனுடைய ஆளுமையைத் தீர்மானிக்கக்கூடியதில் முதலாளித்துவம் முக்கியத்துவம் வகிக்கிறது. அது தனிமனிதனை அவனுடைய சொந்த உலகம் தாண்டி வெளியே பார்க்காதே என்று உருவாக்கி வைத்திருக்கிறது. ஆயிரக்கணக்கில் தமிழர்கள் வசிக்கிறார்கள். ஒரு தமிழ் எழுத்தாளர்கூட அங்கே உருவாகவில்லை. அதே அமெரிக்காவுக்குப் போன ஜப்பானியர்களில் எழுத்தாளர்கள் வந்துவிட்டார்கள். சீன எழுத்தாளர்கள் வந்துவிட்டார்கள். யூதர்கள் வந்துவிட்டார்கள். பல்வேறு இனக்குழுக்களிடமிருந்து எழுத்தாளர்கள் வந்திருக்கிறார்கள். படைப்பு மனநிலை சார்ந்து அங்குள்ள தமிழர்களின் வாழ்க்கையை சார்ந்து இன்னும் கவனப்படுத்தப்படவே இல்லை.
தமிழில் இன்றைய எழுத்துச் சூழல் எப்படி இருக்கிறது?இன்றைக்கு எழுத்துச் சூழல் எழுத்தாளன் உருவாவதற்கும் புதிய எழுத்தாளன் தன்னுடைய படைப்புகளை வெளியிடுவதற்கும் முந்தைய காலகட்டங்களைவிட இன்றைக்கு நிறைய வசதிகள் இருக்கின்றன. அதேநேரத்தில் இளம் எழுத்தாளன் எதிர்கொள்ளும் சவால், இந்த ஊடகங்களைத்தாண்டி ஓர் அசலான கதையை வாழ்க்கையை எழுதவேண்டியிருக்கிறது. முந்தைய எழுத்தாளர்களைவிட புதிய மொழியிலும், கதை சொல்லும் முறையிலும் வேறுபட வேண்டியிருக்கிறது. சொல்லப்போனால் நம்முடைய மரபு தேவையா இல்லையா என்பதிலும் சவால் இருக்கிறது. இளம் எழுத்தாளர்கள் பல்வேறு தளங்களிலும் எழுதத் தொடங்கியிருக்கிறார்கள். நம்பிக்கைதரக்கூடிய பல எழுத்தாளர்கள் வந்திருக்கிறார்கள். இப்போது தமிழ் இலக்கியம் என்பது தமிழ்நாட்டிற்குள் இருப்பது கிடையாது. இன்றைக்கு தமிழ் எழுத்தாளன் என்று சொன்னால், எந்த தேசத்தில் வசிக்கிறீர்கள் என்றுதான் கேட்பேன்.

தமிழ் எழுத்தாளன் என்பவன் உலகத்தில் எல்லா தேசங்களிலும் வசிக்கிறவனாக இருக்கிறான். எங்கிருந்து வேண்டுமானாலும் தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்பு வந்துவிடமுடியும். மலேசியாவில் இருக்கிறார்கள். சிங்கப்பூரில் இருக்கிறார்கள். நியூசிலாந்தில் ஆஸ்திரேலியாவில் கனடாவில் எல்லா இடங்களிலும் நுட்பமாகவும் தேர்ச்சியாகவும் எழுதக்கூடிய படைப்பாளிகள் வந்துள்ளார்கள். புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் எழுத்து உருவாகியிருக்கிறது. அவர்களும் பிரதானமான தமிழ் இலக்கியத்தின் ஒரு பகுதிதான். நிறைய நம்பிக்கைதரக்கூடியவர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக ஒரு நாலைந்து பேரை சொல்வதாக இருந்தால்... பஹிமா ஜஹான், அனார் கவிதைகளைப் படிக்கிறேன். தமிழில் சந்திரா, எஸ். செந்தில்குமார் சிறுகதைகள் பிடித்திருக்கின¢றன. லெஷ்மி சரவணக்குமார் ஒரு நல்ல நாவல் எழுதியிருக்கிறார். மலேசியாவிலிருந்து பாலமுருகன் எழுதுகிறார். சிங்கப்பூரிலிருந்து லதா எழுதுகிறார். சு.தமிழ்ச்செல்வி எழுதும் நாவல்கள் எனக்குப் பிடித்திருக்கின்றன. நிலாக்கள் தூர தூரமாக என்றொரு நாவல் நன்றாக இருக்கிறது. இன்னொரு பக்கம் மொழிபெயர்த்துறையில் குப்புசாமி போன்றவர்கள் நோபல் பரிசு பெற்ற புத்தகங்களை எல்லாம் தமிழில் மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறார்கள். இது ஆரோக்கியமான சூழலாக ஒரு பக்கம் இருந்தாலும் கவலைதரக்கூடிய அம்சமாக இருப்பது என்னவென்றால் புதிய நாவலாசிரியர்கள் என்று தமிழில் யாருமே வரவில்லை. இந்த பத்தாண்டுகளில் வெளிவந்த இளம் தலைமுறை நாவலாசிரியர் என்று ஜோ.டி.குரூஸ்தான் தெரிகிறார். கோணங்கி, ஜெயமோகன், நான் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து தொடர்ந்து எழுதிவருகிறோம். இன்று அப்படி யாரும் தொடர்ச்சியாக எழுதுவதில்லை. ஜே. பி. சாணக்யாவை நல்ல சிறுகதை எழுத்தாளராக நினைத்திருந்தேன். அவரால் ஒரு நல்ல நாவலை எழுதியிருக்கமுடியும். ஆனால் அவர் தொடர்ந்து எழுதவில்லை. ஊடகங்கள் எல்லா வடிவங்களுக்கும் கொடுக்கிற முக்கியத்துவத்தை இலக்கியத்துக்குக் கொடுப்பதேயில்லை. ஒரு புகழ்பெற்ற படைப்பு தமிழில் வெளியாகியிருக்கிறது என்று எந்த தொலைக்காட்சியிலும் சொல்லிக் கேட்கவில்லை.
நீங்கள் எழுதிய நாவல்களில் உங்கள் மனத்துக்கு மிகவும் நெருக்கமான நாவல் எது?என்னுடைய மற்ற நாவல்களை எல்லாம் எழுதிவிடமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எழுதமுடியாது என்ற நினைக்கிற நாவல் உபபாண்டவம். ஏனென்றால், அந்த நாவலை எழுதிய மனநிலை... ஒரு பெரிய இதிகாசத்தை எடுத்து அதில் பணியாற்றக்கூடிய ஈடுபாடு என்பது ஒருமுறைதான் சாத்தியமாகும். ஒரு நான்காண்டு காலம் அந்த நாவலை எழுதுவதற்காக செலவு செய்திருக்கிறேன். மீண்டும் ஒரு நான்காண்டு காலம் செலவுசெய்தால்கூட அந்த மனநிலை கிடைக்குமா என்றால் கிடைக்காது. திரும்ப அந்த புத்தகத்தை எடுத்துப்பார்க்கும்போதுகூட எனக்கு அந்தப் புத்தகம்சார்ந்த என்னுடைய அந்த எழுத்தும் அதிலிருந்து வெளிப்பட்டிருக்கக்கூடிய விஷயங்களும் வேறு புத்தகங்களில் வேறுவகையான உலகங்களை நான் எழுதும்போது இருப்பதிலிருந்து மாறுபட்டிருப்பதை நான் உணர்கிறேன். உபபாண்டவம் போன்ற ஒரு நாவல்தான் தமிழில் மகாபாரதத்தின்மீதான ஒரு புனைவு. இராமாயணம் பற்றி நிறைய எழுதப்பட்டிருக்கிறது. மகாபாரதம் பற்றி புனைவே கிடையாது. வெங்கட்ராம் எழுதிய நித்யகன்னி ஒரு கிளைக்கதை. அதைவிட்டால் பி.எஸ்.ராமய்யாவின் தேரோட்டி மகன். வேறு நவீன படைப்புகளை மகாபாரதம் பாதிக்கவேயில்லை. இந்தியாவில் பல நவீன படைப்புகளை அது பாதித்திருக்கிறது. தமிழில் மட்டும்தான் அது இல்லை. ஏன் இந்த விலகல் என¢று புரியவேயில்லை. ஒன்றிரண்டுபேர்கூட மகாபாரதம்சார்ந்து இயங்கவில்லை. ஜெயமோகன் பத்மவியூகம் போன்று ஒரு கதை எழுதியிருக்கிறார். வேறு யார் மகாபாரதம் சார்ந்த எழுதியிருக்கிறார்கள் என்றால் குறைவுதான். அந்தவகையில் இப்பவும் விருப்பமான நான் எழுதிய சவாலான எழுத்தாக உபபாண்டவன்தான் இருக்கிறது. அதற்கான ஒரு பெரிய அங்கீகாரத்தையும் அது அடைந்திருக்கிறது. இப்போது அது ஏழாவது பதிப்பு வந்திருக்கிறது.
முந்தைய தலைமுறை எழுத்தாளர்களின் படைப்புகளில் உயிர்ப்புள்ள உரையாடல்கள் அதிகம். இப்போதைய எழுத்துகளில் அது இல்லாமல் வெறுமனே விவரிப்பாகவே கதைகள் இருக்கின்றன. காரணம் என்ன?உரையாடல்கள் ஒரு கதைக்கு ஏன் தேவைப்படுகின்றன? அல்லது ஒரு உரையாடலை ஏன் எழுதுகிறோம் என்றால் நம்பகத்தன்மையை உருவாக்குவதற்கும், இரண்டு பேர் பேசிக்கொள்வதன்வழியாக சிந்தனையைப் பகிர்ந்துகொள்வதற்கும்தான் உரையாடல் தேவைப்படுகிறது. உரையாடல் என்பது பெரும்பாலும் நாடகம் சார்ந்த ஒரு விஷயம். நாடகம்தான் காட்சிப்படுத்தப்படும்போது எல்லா காட்சிகளையும் பேசினால்தான் புரியவைக்கமுடியும். நிஜவாழ்க்கையில் உரையாடல் என்பது ஒரு மனிதனுக்குக் கிடைக்கிற சந்தர்ப்பம்தான். எந்த உரையாடலும் முழுமையானதல்ல. ஒருவன் ஒரு உரையாடலை தொடங்குவதற்கு முன்பு எதிராளி கலகம் செய்தால் உரையாடல் முடிந்துவிடுகிறது. நவீன வாழ்க்கையில் உரையாடல் குறைந்துவருவதுதான் மாற்றமாக இருக்கிறது.ஒரு காலகட்டத்தில் உரையாடுவதற்கான வாய்ப்புகள் இருந்தும் உரையாடாமல் இருந்து ஒரு சமூகம், இன்றைக்கும் அதற்கான சந்தர்ப்பம் இருந்தும் உரையாட மறுக்கிற சமூகமாக மாறியிருக்கிறது. பொது இடங்களில் பேசுவதைத்தவிர, யாரும் தனிப்பட்ட முறையில் பேசுவதில்லை. நான்கைந்து பேர் சேர்ந்து பேசிக்கொள்வதில்லை. திண்ணைகள் இல்லை. வீடுகளில்கூட யாரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதில்லை. ஓர் அலுவலகத்தில் 50 பேர் வேலைபார்க்கிறார்கள். அந்த ஐம்பது பேரும் ஐம்பது இயந்திரங்களைப்போல இருக்கிறார்கள். உரையாடல் இன்மை என்பதன் தேவை ஏன¢ இருக்கிறது என்றால், எப்போதெல்லாம் நீங்கள் பேசாமல் இருக்கிறீர்களோ, அப்போதெல்லாம் உங்கள் மனம் செயல்பட தொடங்குகிறது. மனதை ஆராய ஆரம்பிக்கிறீர்கள். மனதின் நுட்பங்களைத் தெரிந்துகொள்ளத் தொடங்குகிறீர்கள். ஒருவர் மௌனமாக இருப்பது என்பது வேறு. சும்மா இருப்பது என்பது வேறு. மௌனமாக இருக்கிறோமே தவிர, சும்மா இல்லை. இன்னும் சொல்லப்போனால் மனதில் பேசுவதைவிட ஆழமான தேடல் உள்ளே போய்க்கொண்டிருக்கிறது. இன்றைய நாவல்களில் அதன் கதாபாத்திரங்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்றால்... அவர்கள் தங்களுடைய மனச்சிக்கல்களால் உருவானவர்களாக இருக்கிறார்கள். உலகத்தை புறவயமாக மட்டுமல்ல. அகவயமாகவும் புரிந்துகொள்ள நினைக்கிறார்கள். உரையாடல்களே அதிகம் இல்லாத நாவல்களை எழுதும் வகையைச் சார்ந்தவன் நான். ஏன் அப்படி எழுதுகிறேன்... உரையாடலை எழுதும்போது நாடகத்தனம் வந்துவிடுகிறது என¢று நினைக்கிறேன். பழைய நாவல்கள் ஏன் பெரிதாக இருந்தன? உரையாடல்கள் எழுதும்போது நாவல் விரிந்துகொண்டே இருக்கும். நான்கு பேர் பேசிக்கொண்டிருந்தால் 200 பக்கம் எழுதிவிடலாம். இன்று அப்படி தேவையில்லை. இப்போது 200 பக்கத்தைக் குறைக்கவேண்டியிருக்கிறது. என் நாவல்களிலும் உரையாடல்கள் உண்டு. 400 பக்க நாவலில் 50 பக்கம் உரையாடல் இருக்கும்.
நான் உரையாடலைக் குறைக்கக் காரணம், இந்த உரையாடலற்ற மனிதனைத்தான் நவீன மனிதன் என்று கருதுகிறேன்.
தமிழ் சினிமாவில் இயங்கும் அனுபவம் பற்றி கூறுங்கள்?கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் அதன் கதை, திரைக்கதை, வசனம் ஆகிய மூன்று துறைகள்சார்ந்தும் இயங்கிக்கொண்டிருக்கிறேன். பொதுவாக இன்னும் கூடுதலாக இயங்கும் காலகட்டத்திற்கு முன்பே இயங்க ஆரம்பித்துவிட்டேன். ஆவணப்படங்கள், குறும்படங்கள் தயாரிப்பில் சேர்ந்து இயங்கினேன். முறையான ஒரு கேளிக்கைத் திரைப்படத்திற்குள் போய் வேலை செய்யும்போது, எனக்கு இருந்த முதல் தயக்கம் அந்தப் படங்களுக்கு எழுத்தாளனுடைய வேலை என்ன? எழுத்தாளர்கள் என்ன பங்களிக்கமுடியும்? என்பதில் ஒரு குழப்பம் இருந்தது. ஆனால் மெதுவாக அதற்குள் போகத் தொடங்கிய பிறகு எனக்குத் தெரிந்தது... அங்கே ஒரு எழுத்தாளனின் தேவை என்பது இலக்கியவாதியின் தேவை என்பது இல்லை. ஒரு திரைக்கதையாசிரியனின் தேவை.தனிப்பட்டு ஒரு திரைக்கதை ஆசிரியர் என்பவர் இல்லை. அப்படி யாரையாவது சொல்லமுடியுமா? என்றால் நான் செல்வராஜ் அவர்களைத்தான் சொல்வேன். அவர்தான் ஓரளவுக்கு திரைக்கதை ஆசிரியர் என்ற பணியை முழுமையாகச் செய்தவர். 25, 30 முக்கியமான படங்களுக்கு எழுதியிருக்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு அவர் திரைக்கதை ஆசிரியராக இருந்திருக்கிறார். அதில் 25 படங்கள் சிறந்த படங்கள் என்று வைத்துக்கொள்ளலாம். இவர்தான் திரைக்கதை ஆசிரியர். இவரைப்போல விரல் விட்டு எண்ணக்கூடிய திரைக்கதையாசிரியர்கள்தான் தமிழில் இருக்கிறார்கள். திரைக்கதையை எழுதுவதற்கு திரைக்கலையைப் பயின்று திரைமொழி தெரிந்த திரைக்கதை ஆசிரியர்கள் இல்லாததால், அந்தப் பணியை இலக்கியவாதிகளும் வேறு சிலரும் செய்யவேண்டியிருக்கிறது. அப்படி திரைக்கதை ஆசிரியராக ஓர் எழுத்தாளன் தன்னை மாற்றிக்கொள்ளமுடியுமா என்றால் முடியும். அது எளிது. ஏற்கெனவே எழுத்தாளர்கள் வாழ்க்கையை கவனிக்கவும், கதாபாத்திரங்களை உருவாக்கவும், மனதை சார்ந்து இயங்கவும் தெரியும் என்பதால் திரைக்கலையை மட்டும் அவர்கள் படித்துவிட்டால், அவர்களால் ஒரு திரைக்கதை ஆசிரியராக இருக்கமுடியும்.

எனக்கு இரு உதாரணங்கள் தோன்றினார்கள். ஒருவர் எம்.டி.வாசுதேவன் நாயர். அவர் திரைப்பட நுட்பங்களைத் தெரிந்துகொண்டதால் எப்படி செய்கிறார்? இன்னொருவர் பத்மராஜன். இவர்கள் இருவரும் முக்கியமான படைப்பாளுமைகளாக இருந்தால்கூட அவர்கள் திரைப்படத்திற்குள் நுழைந்து ஒரு வேலையைச் செய்யத்தொடங்கி ஒரு புதிய திரைமொழியை உருவாக்கினார்கள். அப்படி ஏன¢ நம்மால் முடியாது? அப்படி சாத்தியப்படுத்துவதற்கான சூழல் தமிழில் இருந்ததா என்றால் இல்லை. மலையாளத்தில் இருந்தது. இல்லை என்பதால் விட்டுவிடாமல், முயன்றுபார்க்கலாமே என்று தோன்றியது. நான் பங்கேற்கி படங்கள் எல்லாம் சாதனைகள் என்று சொல்லமாட்டேன். மாறாக அத்தனையுமே என்னாலான பங்களிப்புக்கான இடங்கள். இதை உருவாக்குவதன் வழியாக நான் விரும்புகிற ஒரு மாற்றத்தை ஏற்படுத்தமுடியும். முழுமையாக இ¢ல்லை என்றாலும் ஒரு பயணமாக அதை நடத்தமுடியும்


. இயக்குநர்களும் சேர்ந்துவந்தால் அதை முழுமையாகச் செய்யமுடியும். சிலரிடம் பணியாற்றும்போது முழு சுதந்தரத்தை உணர்ந்திருக்கிறேன். அது அந்த இயக்குநரால் அளிக்கப்பட்டிருக்கிறது. திரைக்கதையை எழுத்தாளன் எழுதுவதற்கும் அது திரையில் வருவதற்கும் இடையில் அது நிறைய மாற்றங்களைச் சந்திக்கிறது. தனித்துச் செயல்பட்ட எழுத்தாளன் கூட்டுமுயற்சியில் செயல்படும்போது அவன் மனம் சிரமப்படுகிறது. சினிமா என்பது 100 பேர் சேர்ந்து செய்கிற வேலை. அதனால் உங்கள் எழுத்து மாற்றங்களைச் சந்திக்கும். டப்பிங்கில் உங்கள் வசனம் மாறிப்போகலாம். படப்பிடிப்பில் மாறலாம். இந்த ஏமாற்றங்களுக்கு இடையில்தான் நீங்கள் பணியாற்றவேண்டும். இத்தனை சமரசங்களோடு ஒன்றைச் செய்யவேண்டுமா? என்று கேட்டால் அது தனிப்பட்ட விருப்பம். திரைசார்ந்து சிறுவயதிலிருந்து ஒரு விருப்பம் இருந்து வந்திருக்கிறது. சினிமா பார்க்கிற ஆளாகத்தான் நான் இருந்திருக்கிறேன். அதனால் எனக்கு அதில் ஈடுபடவேண்டும் என்ற விருப்பம் இருந்தது. எல்லோரும் அப்படி ஈடுபடவேண்டுமா என்று கேட்டால் அது அவர்களுடைய விருப்பம் என்றுதான் சொல்வேன்.நீங்கள், ஜெயமோகன் போன்றோர் தமிழ் சினிமாவில் நுழைந்த பிறகும் இயக்குநர்களின் கதைக்குத்தான் நீங்கள் வேலை செய்யும் நிலைமை உள்ளது. உங்களது கதைகள் சினிமாவாக உருவாகாமல் இருப்பதற்கு காரணம் என்ன?முக்கியமாக அவர்கள் எங்களை ஒரு பணிக்காகத்தானே அழைக்கிறார்கள். என¢னை ஓர் இயக்குநர் அழைக்கும்போதே, நீங்கள் ஒரு நாவல் எழுதியிருக்கிறீர்கள். அதை நான் படமாக்குகிறேன் என்று சொல்வதில்லை. நான் ஒரு திரைப்படத்தை உருவாக்க விரும்புகிறேன். அதன் ஒரு குறிப்பிட்ட பகுதியில் என்னோடு சேர்ந்து பணியாற்றமுடியுமா என்று கேட்கிறார். முதலிலேயே ஒரு வரையறை வந்துவிடுகிறது. நாம் அவர்களுடைய ஒரு பணியைப் பகிர்ந்துகொள்ளப்போகிறோம். எனக்கு விருப்பம் இருந்தால் பகிர்ந்துகொள்ளலாம். இல்லையென்றால் மறுத்துவிடலாம். நான் ஒரு எழுத்தாளன். என் கதைகள் இருக்கின்றன என்று அந்த இயக்குநருக்குத் தெரியும். என் படைப்புகளில் ஒன்றை படமாக்க விரும்பினால்கூட அது எளிதில்லை என்று தெரியும். அதற்கு பொருளாதாரப் பின்புலம் வேண்டும். நல்ல இயக்குநர் வேண்டும். நடிகர்கள் நடிக்க சம்மதிக்க வேண்டும்.

இன்று தமிழில் நல்ல நாவல்கள் இருக்கின்றன. என்னுடைய நாவல்கள், ஜெயமோகனின் நாவல்கள் மட்டும் சொல்லமாட்டேன். படமாக்கப்பட வேண்டிய நாவல்கள் என்று 50 நாவல்கள் இருக்கின்றன. அவை படமாகாமல் போவதற்குக் காரணம் அந்தச் சவாலை யார் ஏற்றுக்கொள்வது? ஒரு நாவல் படமாக்கப்பட்டு வெற்றியடையும்போது அதைத் தொடர்ந்து பல நாவல்கள் படமாக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. அந்த முன்மாதிரி நடக்கவில்லை. நடந்தால் அந்த நாவலுடன் நின்றுபோய்விடும். இலக்கிய நாவல்களை விட்டுவிடுங்கள். பாப்புலர் பிக்ஷன்கூட இன்னும் படமாக்கப்படவில்லை. இங்கே திரைப்படத்துக்குத் தேவை ஒரு பிரதி. ஹாலிவுட்டில்கூட இலக்கியம் படமாக்கப்படவில்லை. பாக்னர், ஹெமிங்வேயின் முக்கியமான படைப்புகள் படமாக வரவில்லை. நோபல் பரிசு வாங்கிய கதைகளை உலகில் எங்கேயும் படமாக்கிவிடவில்லை. ஒரு நாடோ ஓர் இயக்கமோ சேர்ந்து நல்ல படங்களைத் தந்திருக்கிறார்கள். குந்தர்கிராஸின் டின்ட்ரம் படமாக வந்திருக்கிறது. அது நாவல் தந்த எழுச்சியைவிட அதிகமாக இருந்தது. இங்கே அந்தச் சூழல் இல்லை. கதை என்பது உருவாக்கப்படுகிறது. காரணம் வணிகம் சார்ந்து இயங்குகிறது. ஆனால் ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் புதிய கதைக்களனைக் கொண்ட தொழில்முறை நடிகர்கள் அல்லாத படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. நிறைய சிறிய படங்கள் வந்துள்ளன. எதார்த்தமான நிஜ சூழலில் படமெடுக்க நினைக்கிற ஓர் இயக்குநர் எதார்த்தமான கதையை மட்டுமே கையில் எடுப்பதில்லை. இந்த முன¢முயற்சிகளை எடுப்பதற்கு அந்தப் பண்பாடும் தயாராக இருக்கவேண்டும். இத்தனை படங்கள் ஓடுகின்றன. ஆனால் இந்தியாவிலேயே உலகப்படங்கள் போடக்கூடிய ஒரு திரையரங்கம் இருக்கிறதா?
திரைப்படம் ஒன்றை இயக்கவேண்டும் என்ற ஆசை உள்ளதா?


திரைப்படத்துறையின் அதன் அடிப்படைகளைத்தான் நான் முதலில் கற்றுக்கொண்டிருக்கிறேன். அதற்கு இரு வழிகள் இருக்கின்றன. ஒன்று அதன் திரைக்கதையாசிரியனாக உருவாக்கிக்கொள்வதற்கான பயிற்சி. இப்போது என்னால் ஒரு திரைக்கதையை எழுதமுடியும். அதன் பல்வேறு சாத்தியங்களை என்னால் உருவாக்கிக்காட்டமுடியும். பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள். முக்கியமான இயக்குநர்களிடம் பணியாற்றிய அனுபவம் அதைத் தந்திருக்கிறது. நான் ஒரு திரைப்படத்தை இயக்குவது என்பது பொருளாதாரம் சார்ந்த ஒரு கூட்டுழைப்பைச் சேர்ந்தது. இந்தக் கலையை ஆழ்ந்து கற்றுக்கொள்வதன் அடுத்த நிலையாக கருதுவது.


.. நான் விரும்புகிற கதையை, விரும்புகிற வாழ்க்கையை திரையில் சொல்வதுதான். ஏனெனில் ஒரு நாவலை எழுதுவதுபோலத்தான் திரைப்படத்தை உருவாக்கவேண்டும் என்று நினைக்கிறேன். நாவலை எழுதுவதற்காக திட்டமிடுகிறேன். திருத்தம் செய்கிறேன. மிக பொறுமையாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என் வேலையை முடித்துவிட்டு கடைசியாகத்தான் அதைச் சொல்கிறேன். நாவல் வெளியாகிற நேரங்களில்தான் இப்படியொரு நாவலை நான் எழுதினேன் என்று தெரியவரும். அப்படித்தான் ஒரு திரைப்படத்தையும் உருவாக்க விரும்புகிறேன். அது நாளையே உருவாகுமா? அல்லது நாளாகுமா என்று தெரியாது. நிச்சயம் நான் விரும்புகிற ஒரு திரைப்படத்தை உருவாக்குவேன். 

நன்றி - த சண்டே இந்தியன்

0 comments: