Wednesday, March 04, 2015

பட்ஜெட் 2015: சாமான்யன் என்ன நினைக்கிறான்?

மோடி தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட் இது. இந்த பட்ஜெட் குறித்து மக்களுக்கு நிறையவே எதிர்பார்ப்பு இருந்தது. அது நிறைவேறியதா? ஏமாற்றமளித்துள்ளதா? பட்ஜெட் குறித்து மக்களின் மனநிலை என்ன என்பதை உணர்த்தும்
‘தி இந்து’ தமிழ் இணையதள வாசகர்களின் கருத்துகள் தொகுப்பு...
கீழை ஜஹாங்கீர்
அதானி, அம்பானி போன்ற ஏழை எளிய (?) மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான திட்டமிடல் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.
கண்ணன்
பெரு நிறுவனங்களுக்கான வரிக்குறைப்பு சாதகமான விஷயம். வரிக் குறைப்பின் மூலம் பெரு நிறுவனங்கள் தொழிலை விரிவாக்கம் செய்ய சாத்தியம் உருவாகும். இதன் மூலம் தனியார் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.
நடப்பாண்டு வரி வருவாய் குறைந்ததற்கு காரணம் சென்ற ஆண்டு நஷ்டத்தை நிறுவனங்கள் இந்த ஆண்டு நேர் செய்வதுதான். இதனால் அடுத்த ஆண்டு வரிவருவாய் அதிகரிக்கும்.
எம். பார்த்தசாரதி
காதில் பூ சுற்றுகிறார்களா அல்லது நிதானப் போக்கை கடைபிடிக்கிறார்களா என புரியவில்லை. தூரத்தில் வெளிச்சம் தெரிவது போல் இருக்கிறது. ஆனால் அதையும் முழு நம்பிக்கையோடு சொல்ல முடியவில்லை. கடந்த 4 ஆண்டுகளில் 8 லட்சம் ஹெக்டேர் விளை நிலங்கள் கட்டிடம் ஆகியுள்ளன. விவசாய நிலங்கள் இப்படி மாறுவதை தடுக்க என்ன வழி என இந்த பட்ஜெட்டில் சொல்லவில்லை.
கறுப்பு பண பரிமாற்றத்தைத் தடுக்க 10 ஆண்டுகள் சிறை தண்டனை, அபராதம் என்பது சரியான நடவடிக்கைதான். நாட்டின் வளர்ச்சிக்கு கல்வியும், விவசாயமும் தேவை என்பதை உணர்ந்து முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். ஆனால் தொலைநோக்கு பார்வைதான் உள்ளது.
ஆலமரம்
யாரும் கவலைப்பட வேண்டாம். பேஸ் மேக்கேர் விலை குறைந்துள்ளது. மக்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் என்று கணித்து பேஸ் மேக்கர் விலையை குறைத்த மோடி அண்ட் குழுவினருக்கு கோடான கோடி நன்றி
ஹூசைன்
ஏழைகளுக்கு மருத்துவச் செலவு எட்டாக்கனியாகி விட்டது. மருத்துவர்கள் பிணத்துக்கு சிகிச்சை அளித்து கொள்ளையடிக்கிறார்கள் என்றால், அரசாங்கம் மருந்துக்கு வரி போட்டு மக்களை மொட்டை அடிக்க உள்ளது.
இந்திய மக்கள் என்றும் நோயாளிகளாகவே இருக்க வேண்டும் என அரசு நினைத்து விட்டது. மக்கள் கையில் சேமிப்பு எதுவும் இருக்க கூடாது. இதுதான் பிஜேபி அரசின் " கிளீன் இந்தியா" திட்டம்.
சசிபாலன்
ஒரு லட்சத்துக்கும் அதிகமான பண பரிவர்த்தனைகளுக்கு பான் எண் காட்ட வேண்டும் என்பது வரவேற்கத்தக்கது. அதுபோல பினாமி பரிவர்த்தனை தடுப்பு மசோதா கொண்டுவரப்படும் என்பதும் வரவேற்கத்தக்கது. இதன் மூலம் அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோர் பினாமி பெயர்களில் முதலீடு செய்யும் மோசடி செயல்கள் குறையும்.
ஆர்.எம். மனோகரன்
இந்த பட்ஜெட் பண முதலைகளுக்கு பிஜேபி வழங்கியுள்ள பரிசு. அவர்கள்தான் இந்த வெங்காய பட்ஜெட்டை சூப்பர் பட்ஜெட் என்று சொல்கிறார்கள். வருமான வரி செலுத்தும் தனி நபர்களுக்கு நாமம் போட்டுவிட்டு, பிரபலமில்லாத இனங்களுக்கு சில சலுகைகள் அளித்துவிட்டு, தனி நபர் வருமான வரி செலுத்துவோருக்கு நாமம் போட்டுவிட்டனர்.
வருடத்துக்கு ரூபாய் 4,44,200 வருமானவரி சலுகை பெறலாம் என்று அண்டப்புழுகு புழுகி ஏமாற்றி இருப்பதுதான் இந்த சூப்பர் பட்ஜெட்டின் சாதனை. இந்த பட்ஜெட் ஒரு காலி பெருங்காய டப்பா.
டி.கே.நிதி
சமூகத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று உணவு உற்பத்தி செய்யும் சமூகம். மற்றொன்று உணவை உற்பத்தி செய்யாது உண்ணும் சமூகம். அதாவது வேட்டைச் சமூகம். இந்திய அரசு இன்றுவரை வேட்டை சமூகத்தின் கையில் உள்ளது.
சட்டம் ஒழுங்கு, வளர்ச்சி, விலைவாசி கட்டுப்படுத்துதல் எல்லாம் வேட்டை சமூகத்தின் நலன் சார்ந்தது. இந்த கூட்டம்தான் விவசாயி உற்பத்தி செய்த பொருட்களை வேட்டையாடி உண்டு ஏப்பம் விட்டுக் கொண்டு ஆட்டம் போடுகிறது. பட்ஜெட்டாம் அதற்கு ஒரு விவாதமாம்.
விக்னேஷ்வரன்
அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று பழமொழி போல உள்ளது இங்கே பலரது கருத்துகள். பட்ஜெட்டை முழுமையாக படித்தவர்கள் கண்டிப்பாக கூச்சல் போடமாட்டார்கள்.
வருமான வரி விலக்கு (2 லட்சத்தில் இருந்து 2.5 லட்சமாக இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது) அறிவித்து 6 மாதம் மட்டுமே நிறைவடைந்துள்ள நிலையில் மீண்டும் சலுகைகள் அறிவிக்க வேண்டும் எனக் கருதுவது சரியில்லை. போக்குவரத்துக்கு படி ரூ.800 ல் இருந்து ரூ.1.600 உயர்த்தப்பட்டுள்ளதன் அருமை பலருக்கு தெரியும்.
கார்ப்பரேட் வரி குறைப்பு பலருக்கு வயிறு எரிகிறது. நான்கு ஆண்டுகளில் 5%தான் குறைக்கப்பட்டுள்ளது. வேலை வேண்டும், சம்பள உயர்வு வேண்டும் ஆனால் தான் வேலை பார்க்கும் நிறுவனத்துக்கு வரி குறைப்பது தவறு என நினைப்பது என்ன மனநிலை? கார்ப்பரேட் என்றாலே எதிரிகள் என்று நினைக்க தொடங்கும் மனநிலையில் மாற்றம் வேண்டும்.
முருகசாமி
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு நன்றி. அதையும் சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்காமல் இரண்டாம் நிலை நகரங்கள் அல்லது பின்தங்கிய மாவட்டங்களில் அமைத்தால் தான் நல்லது. ஏன் என்றால் தமிழகம் என்பது சென்னை தான் என்பது திராவிட கட்சிகளின் கொள்கையாகவே மாறிவிட்டது, அதை மத்திய அரசும் கடைபிடிக்க வேண்டாம்.
ஜி.ராமச்சந்திரன்
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பண பரிவர்த்தனைகளுக்கு பான் எண் கட்டாயம் என்பது வரவேற்கத்தக்கது. பண வரவுக்கான ஆதாரம் கேட்பதன் மூலம் மூலம் கறுப்பு பண நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முடியும்


நன்றி - த இந்து

0 comments: