Wednesday, December 23, 2015

அஜித் - விஜய் ரசிகர்கள் 'சண்டை'யால் யாருக்கு லாபம்?

எம்.ஜி.ஆர். - சிவாஜி, ரஜினி - கமல் ஆகியோரைத் தொடர்ந்து அஜித் - விஜய் என்று சொல்கிறது தமிழ்த் திரையுலகம். முன்னால் உள்ள இரண்டு கூட்டணிக்கும் கிடைக்காத ஒரு பொக்கிஷ வாய்ப்பு அஜித் - விஜய் கூட்டணிக்குக் கிடைத்திருக்கிறது. அதுதான் சமூக வலைதளம். சமூக வலைதளத்தின் வளர்ச்சி இருவரின் வளர்ச்சிக்கும் மிக முக்கியக் களப்பணி ஆற்றி வருகிறது.
மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட திரையுலகில், அஜித் - விஜய் ரசிகர்களைப் போல எந்த நடிகர்களின் ரசிகர்களும் மோதிக் கொள்வதில்லை. மற்றொரு நடிகரின் படம் வெளியாகும்போது, அதற்கு எதிராக மனம் புண்படும் விதமான கருத்துக்களைத் தெரிவிப்பதும் இல்லை!
அஜித் நடித்த படம் வெளியாகும்போது, “படம் நலலாயில்லை” என்று கருத்து தெரிவித்தால்கூட தப்புதான். உடனே நீங்கள் விஜய் ரசிகராகச் சமூக வலைதளத்தில் சித்தரிக்கப்படுவீர்கள். அதோடு, விஜய் ரசிகனாக இருப்பதே எத்தனை கேவலமான ஒரு விஷயம் என்பதாகக் கூட்டம் கூட்டமாக வலை தளத்தில் வாரித் தூற்றுவார்கள் - கூடவே, விஜய்க்கும் அர்ச்சனை நடக்கும். இதேதான் விஜய் படம் நல்லாயில்லை என்று கருத்து கூறுபவன் கதியும். அஜித் ரசிகராக அவரை முடிவு கட்டி... அவருக்கும் அஜித்துக்கும் சேற்று அபிஷேகம் நடத்திவிட்டுத்தான் ஓய்வார்கள் - விஜய்யின் ஆன்லைன் காவலர்கள்!
அஜித் - விஜய் இருவரைப் பற்றிய செய்திகளை வெளியிடுவதற்குக்கூடச் சில விமர்சகர்கள் பயப்படுகிறார்கள். காரணம், ரசிகர்கள் ஒன்றுகூடித் திட்டுவார்களே என்றுதான். இது குறித்துப் பிரபல இணைய விமர்சகர் ஒருவரிடம் பேசியபோது, “என் பெயரை வெளியிடாதீர்கள். கலை என்பது விமர்சனத்துக்கு உட்பட்டது என கமல் தெரிவித்தார். ஆனால், அஜித் - விஜய் படத்தை நீங்கள் விமர்சனம் செய்யவே முடியாது. ஒரு வேளை படம் நல்லாயில்லை என்று தெரிவித்துவிட்டீர்கள் என்றால் முடிந்தது.
எங்கிருந்தாவது உங்களது மொபைல் நம்பரைப் பிடித்து வெளியிட்டுவிடுவார்கள். அன்று முழுவதும் ரசிகர்களிடம் அர்ச்சனை வாங்குவதுதான் உங்களது வேலையாக இருக்கும். அஜித் - விஜய் இருவரது விஷயங்களில் கருத்துரிமை என்பது சுத்தமாக கிடையாது” என்று வருத்தமாகத் தெரிவித்தார்.
ட்விட்டர் தளத்தில் அஜித் - விஜய் ரசிகர்களின் பணிகளைப் பார்க்கும் போது, அவர்கள் இதையொரு தொழில் போலவே பண்ணுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அரசு வருமானத்துக்கு எப்படி மதுவிற்பனையைப் பயன்படுத்துகிறதோ, அதேபோலத்தான் அஜித் - விஜய் தரப்பிலிருந்தே, அவர்களின் புகழுக்காக சமூக வலைதளத்தில் ரசிகர்களை பயன்படுத்தும் வேலையும் நடக்கிறதோ என்று எண்ணத் தோன்றும்! அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்களைப் பரப்பவும், தங்கள் எதிரிக் கட்சிகளை சிக்கலில் மாட்டிவிடவும் தனியார் ஏஜென்சிகளை வைத்து இணையதளத்தில் கொடி பிடிக்கும் பாணியை இந்த வகை ‘மெகா’ போற்றல் மற்றும் தூற்றலில் காணலாம்.
சில காலமாக அஜித் - விஜய் ரசிகர்களுக்குள் சமூக வலைத்தளத்தில் நடைபெற்று வரும் சண்டைகள் கைகலப்பாகவும் மாறி இருக்கிறது. 'வேதாளம்' படம் வெளியானபோது, தூத்துக்குடியில் இரு தரப்பு ரசிகர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டிருக்கிறது. அச்சண்டை குறித்து செய்திகள் வெளியானபோது கூட இரு நடிகர்களிட மிருந்தும் மவுனமே பரிசாகக் கிடைத்தது.
தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சிலர் மனம் விட்டுப் பேசும்போது சொல்லும் தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது சினிமா வட்டாரத்துக்கே வெளிச்சம். அதாவது. நடிகர்களின் ரசிகர்கள் பெயரால் இணையத்திலும், நேரடிக் களத்திலும் அடிதடி உக்கிரம் அடையும்போது இவர்கள் மாஸ் நடிகர்களாகப் பார்க்கப்படுகிறார்கள். இதன் விளைவாக, இவர்களின் சம்பளமும் ஏறிக்கொண்டே போகிறது?!
'திருப்பதி' படத்துக்கு அஜித் வாங்கிய சம்பளத்தையும் 'சிவகாசி' படத்துக்கு விஜய் வாங்கிய சம்பளத்தையும் சுட்டிக்காட்டும் இந்தத் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் “ரசிகர்களின் மோதல் வலுத்துக்கொண்டே செல்லச் செல்ல இவர்களின் சம்பளமும் விஷ வேகத்தில் ஏறிக்கொண்டே போனது” என்று கூறுகிறார்கள்! இவர்கள் இருவரையும் வைத்துப் படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கும் லாப விகிதம் இதே அளவுக்கு உயர்ந்துகொண்டே போனதா என்றால், இல்லை என்பதுதான் பதில் என்று சுட்டிக் காட்டும் இவர்கள்,
“ரசிகர்களின் இந்த வேகத்தையும் பாசத்தையும், தங்கள் பணப் புழக்கத்தையும் தமிழகத்தின் வெள்ள நிவாரணம் போன்ற ஆக்கபூர்வமான விஷயங்களை நோக்கிக் கொஞ்சமாவது திருப்பி விட்டிருந்தால் எத்தனையோ ஏழைகளுக்குப் பலன் கிடைத்திருக்கும்” என்றும் ஆதங்கப்படுகிறார்கள்.
அஜித் - விஜய் இருவருமே கடவுள் அல்ல, தயாரிப்பாளர்களிடம் இருந்து சம்பளம் வாங்கிக் கொண்டு நடிக்கும் நடிப்புக் கலைஞர்கள்... மற்ற எல்லாத் துறைகளிலும் உள்ளது போன்ற திறமையும், உழைப்பும் கொண்ட ‘புரொஃபஷனல்கள்’ என்பதை இந்த ரசிகர்கள் உணரும் வரை இது போன்ற ஆதங்கம் நீடிக்கத்தான் செய்யும்!
பின் குறிப்பு :இந்தக் கட்டுரையில் அஜித் - விஜய் இருவரையும் குறிப்பிடும் விதத்தை வைத்தே இரண்டு ரசிகர்களுக்கும் சண்டைக்கு வருவார்கள், எங்க தலைவர் பெயரை எப்படி பின்னாடி போடலாம் என்று. மேலும் இக்கட்டுரையின் பின்விளைவாக ’ஹேஷ்டேக்’ உருவாக்கி இரு தரப்பு ரசிகர்கள் பெயரிலும் ட்ரெண்ட் செய்யக்கூடும். அதில்கூட யாருக்கு மாஸ் அதிகம் என்று பலப்பரீட்சை நடக்கலாம். ட்விட்டர் தளத்திற்கு வந்தீர்கள் என்றால் அதையும் நீங்கள் பார்த்துவிடலாம்!

-தஹிந்து


0 comments: