Thursday, December 31, 2015

புத்தாண்டு இரவில்..- எச்சரிக்கும் போலீஸ்

ங்கிலப் புத்தாண்டு பண்டிகையை வரவேற்கும் விதமாக,  சாலைகளில் நடக்கும் கொண்டாட்டத்தில் நடந்து முடிகிற அசம்பாவிதங்கள் ஆண்டுதோறும் கூடிக் கொண்டே போகின்றன. அதிலும் தமிழகத் தலைநகர் சென்னையில் இது ஏகத்துக்கும் அதிகரிக்கிறது!

மெரீனா,  ஈ.சி. ஆர். போன்ற கடற்கரைச் சாலைகளில் சீறிப் பாயும் வாகனங்களால் நடக்கும் உயிரிழப்பு விபத்துகள், மெரீனா தொடங்கி மாமல்லபுரம் வரை  கடல் குளியலில் எதிர்பாராமல் நடந்து விடும் மூச்சுத்திணறல் மரணங்களை கடுமையான கண்காணிப்பு, எச்சரிக்கை மூலம் காவல்துறையினர் நினைத்தால் தடுத்து விட முடியும். உச்சக்கட்ட மது விருந்தால் இறக்கிறவர்களை மட்டும்தான் போலீசாரால் தடுக்க முடியாது.

டிசம்பர் 31- நள்ளிரவுக் கொண்டாட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர என்ன மாதிரியான வியூகத்தை  ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்?  என போலீஸ் ஏரியாவில் கேட்டதில் , வந்த தகவல்கள்... 

# புத்தாண்டில்  மது அருந்திவிட்டு பொது இடங்களில் கொண்டாட்டம் என்ற பேரில் ஆடிக் கொண்டிருக்கக் கூடாது. மீறினால் நடவடிக்கைதான்... எல்லாமே அளவோடு இருந்து விட்டால், ஆண்டின் முதல் நாள்தானே என்ற மனித நேயத்தோடு கண்டும் காணாமலும் இருந்து விடுவோம்.

# பெண்களை கிண்டல் செய்வதையோ, அச்சுறுத்துவதையோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. புத்தாண்டாக இருந்தாலும், எந்த நாளாக இருந்தாலும் இந்த விஷயத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
# அதிக சத்தத்தை உண்டாக்கக் கூடிய பட்டாசு போன்றவைகளை பொது இடங்களில் வெடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

# நட்சத்திர ஹோட்டல்களில் நடைபெறுகிற அத்தனை அசம்பாவித சம்பவங்களுக்கும் ஹோட்டலின் மேலாளர், உரிமையாளரே பொறுப்பு. ஹோட்டல்களில் போடப்படுகிற மேடைகளுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அனுமதியை ஹோட்டல் நிர்வாகம் பெற வேண்டும் என்பதை உறுதிப்படுத்தச் சொல்லியிருக்கிறோம்.

# அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி நட்சத்திர ஹோட்டலை திறந்து வைத்து கேளிக்கைகளை தொடர கண்டிப்பாக அனுமதி கிடையாது.  அதேபோன்று மது ஆதிக்கத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களை நீச்சல் குளத்தில் இறங்க ஹோட்டல் நிர்வாகம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

# ஈ.சி.ஆர். பகுதிகளில் இருக்கிற ஒருசிலர் தங்களுக்கு சொந்தமான பண்ணை வீடுகளை "பெஸ்டிவல்-ரென்ட்" என்ற பெயரில் நாளொன்றுக்கு ரூ. 50 ஆயிரம் முதல் பல லட்ச ரூபாய் என்றளவில் வாடகைக்கு விடுவதாக கடந்த ஆண்டே புகார்கள் எழுந்தது. ரகசிய சோதனையில் அந்த வீடுகளை வாடகைக்கு எடுத்து வைத்து சமூக விரோதச் செயல்களில், குறிப்பாய் போதை ஊசி, வரம்பு மீறிய  உல்லாசங்களில் ஈடுபட்டவர்களைப் பிடித்து நடவடிக்கை எடுத்தோம். பண்ணை வீட்டின் அதிபர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தோம்.

# குடித்து விட்டு கார், பைக் போன்ற வாகனங்களை  ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து, வாகனம் பறிமுதல்  என்பதோடு அவர்களுடன் காரிலோ, பைக்கிலோ சேர்ந்து பயணிக்கும் நபர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யலாமா என்றும் திட்டம் ஆலோசனையில்  உள்ளது.

இத்தனைக்  கெடுபிடிகள் இருந்தாலும், மெரீனா கடலில் குளிக்க சென்று இறக்கும் இளைஞர்களின் எண்ணிக்கையும், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போதும்  சாலை விபத்துகளில் இறக்கும் இளைஞர்களின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் கூடிக்கொண்டேதான் போகிறது. புத்தாண்டு சமயம் டிசம்பர் 31- இரவு 11 மணியிலிருந்து 12 மணிவரை கூடுகிற அல்லது வாகனங்களில் சீறிப்பாய்கிற மனிதத் தலைகள் மட்டும் ஐந்து லட்சம் முதல் எட்டு லட்சம் வரை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

அதே வேளையில் மெரீனா, பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர், மாமல்லபுரம் கடற்கரை மணற் பரப்பில் மட்டுமே பத்து லட்சத்தில் தொடங்கி ஐம்பது லட்சம் பேர் உலவுகிறார்கள். இது ஒரு மணிநேரக் கணக்கு மட்டுமே. சாலைகளில் சீறிப் பாயும் வாகனங்கள், நட்சத்திர ஓட்டல், பண்ணை வீடுகள், கடற்கரை மணல் வெளிகள், சுற்றுலா மற்றும்  வழிபாட்டுத் தலங்கள் என்று ஒட்டு மொத்த மக்களையும் பல்வேறு இடங்களில்  பாதுகாப்பு அளிக்க வேண்டிய கூடுதல் கடமை போலீசாருக்கு.

குறிப்பாக வேகமாய் பறக்கும் வாகனங்கள் மூலமும், கடலில் குளித்தல் மூலமும் அதிகபட்சமாய் பறிபோகும் உயிர்களை தடுத்துக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் போலீசாருக்கு இருக்கிறது.

சாலை விபத்துகளுக்கு பிரதான காரணமாக ஒட்டுமொத்த அளவுகோலில் நிற்பது மது அருந்திவிட்டு வானம் ஓட்டுதலே என்பது இறுதி முடிவாக உள்ளது. கடலில் , நீர்நிலைகளில், இன்னபிற கொண்டாட்ட பொழுதுகளில் உயிரிழப்புக்கு காரணமாக  சொல்லப்படுவதும் மது அருந்தி விட்டு இவைகளில் ஈடுபடுதலே என்பதும் இதன் முடிவாக இருக்கிறது.

புத்தாண்டை கொண்டாட பொதுமக்கள் தயார்... உயிர்கள் பறி போகாதபடி அவர்களை காப்பாற்ற போலீஸ் தயாரா ? என்ற கேள்வியைத்தான் (அவர்களின்  ஆள் பற்றாக்குறை சோகம் இருந்தும்) நாம் கேட்க வேண்டியுள்ளது.

2014 மே- இறுதி நிலவரமாக தேசிய குற்ற ஆவணக் காப்பகமும், இதர சமூக ஆர்வல குழுமங்களும் அளித்துள்ள  சாலை விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்த ஒரு விவரம் இங்கே... 

இந்திய அளவில், சாலை விபத்து : 67,255 , காயம் மட்டும் : 77,725, இறப்பு : 15,190. நாட்டின் மொத்த விபத்தில் 14.9% தமிழ்நாட்டில்தான் நடக்கிறது.

2013-ம் ஆண்டை விட 2014-ம் ஆண்டு 1.5%  கூடுதலாய் விபத்துகள் நடந்துள்ளன.
உயிரிழப்பில் உ.பி. முதலிடமும், மகாராஷ்டிரா இரண்டாமிடமும், தமிழகத்துக்கு மூன்றாமிடமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

டூ வீலர் மூலம் ஏற்பட்ட விபத்துகள்  26.4%, லாரி, கனரக வாகனங்கள் மூலம் 20.1%, கார்கள் மூலம் 12.1%,  வாகனங்கள் பழுது காரணமாக 2.8%, மோசமான வானிலை காரணமாக, 5.3%, மதுபோதையில் வாகனத்தை இயக்கியதின் காரணமாக 2.6% என்ற அளவில் விபத்துகள் நடந்திருக்கின்றன.

நகர்ப்புறங்களில் 54.7% அளவும், கிராமப் புறங்களில் 45.3% அளவும் விபத்துகள் நடந்துள்ளன. இதில் தேசிய நெடுஞ்சாலைகளில் 5,189, மாநில சாலைகளில் 5,090, விரைவுச் சாலைகளில் 155, பிற சாலைகளில் 4,756 என்ற கணக்கில் உயிரிழப்பு சம்பவங்கள் 2014- மே மாதம் வரையிலான கணக்கில் வருகின்றன.

உலக மக்கள் தொகையில் 17.5% மக்கள் வாழ்கிற இந்தியாவில் சாலை விபத்து குறித்த விழிப்புணர்வு மட்டுமல்ல... கடலில், நீர் நிலைகளில், இன்னபிற சூழல்களில் கவனக் குறைவாகவும், போதிய வழிகாட்டல் இல்லாமலும் இறக்கிறவர்களின் எண்ணிக்கை 2020-க்குள் முதல் இருபது இடங்களை பிடிக்கக் கூடும் என்ற கவலை சமூகவியலாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

1970-ல் லட்சத்துக்கு 2.7% சதவீதம் (13 பேர்) மட்டுமே  சாலை விபத்தில் உயிரிழந்த நிலை மாறி, 2011-ல் 11.8% உயிரிழப்பும், 42.3% காயமும் என்ற நிலைக்கு சாலை விபத்துகள் எகிறியது. நாட்டிலுள்ள மொத்த வாகனத்தில் 13.9% சதவீதம் தமிழ்நாட்டில்தான் புழக்கத்தில் இருக்கின்றன.

-ந.பா.சேதுராமன் 

vikatan

0 comments: