Wednesday, December 16, 2015

மகதீரா (2015)-சினிமா விமர்சனம்

நடிகர் : ராம்சரண்
நடிகை :ஸ்ருதி ஹாசன்
இயக்குனர் :வம்சி பெய்டிபல்லி
இசை :தேவி ஸ்ரீ பிரசாத்
ஓளிப்பதிவு :ராம் பிரசாத்
மிகப்பெரிய தாதாவான ராகுல் தேவ், காஜல் அகர்வாலை அடைய முயற்சி செய்கிறார். இதனால், தனது காதலன் அல்லு அர்ஜூனுடன் ஊரைவிட்டு செல்கிறார். அப்போது, ராகுல்தேவின் அடியாட்கள் இவர்கள் செல்லும் பஸ்சை வழிமறித்து, காதலர்களை கொலை செய்துவிட்டு, அந்த பஸ்சுடன் சேர்த்து எரித்து விடுகிறார்கள். இதில், காஜல் அகர்வால் இறந்துபோக, அல்லு அர்ஜூன் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைக்கிறார். அவரது முகம் ஒரு பாதி முழுக்க எரிந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறார். 

இது ஒருபுறமிருக்க... இதே பஸ்சை மையப்படுத்தி மற்றொரு சம்பவம் இணைகிறது. 

டாக்டரான ஜெயசுதாவின் ஒரே மகன் ராம்சரண். கல்லூரியில் படித்து வரும் இவர் ஊரில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கும் எழுச்சிகரமான இளைஞர். இவர் நண்பர் வசிக்கும் பகுதியில் ரவுடி சாய் குமாரின் ஆட்கள் புகுந்து அந்த இடத்தில் வசிப்பவர்களை காலி செய்து போகும்படி வற்புறுத்துகிறார்கள். இந்த பிரச்சினையில் ராம்சரண் தலையிட்டு, ரவுடியின் ஆட்களை துவம்சம் செய்கிறார். 

பின்னர், அந்த மக்களுக்கு ரவுடியின் மீதுள்ள பயத்தை போக்கி, அவர்களுக்கு எதிராக போராட தைரியத்தை ஊட்டுகிறார். இதனால், வெகுண்டெழுந்த மக்கள் ரவுடிக்கு எதிராக களமிறங்குகிறார்கள். இதனால் கோபமடைந்த சாய் குமார், ராம்சரணை தீர்த்துக்கட்ட முடிவெடுக்கிறார். ராம்சரண் வெளியூர் செல்வதற்காக பஸ்சில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது, தனது அடியாட்களை அனுப்பி ராம்சரணை கொன்றுவிடுகிறார்.

ராம்சரண் உடல் ஜெயசுதா பணிபுரியும் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகிறது. அதேசமயம், அல்லு அர்ஜூன் முகம் சிதைந்த நிலையில் சிகிச்சைக்காக அங்கு கொண்டு வரப்படுகிறார். ராம்சரணை பிணமாக பார்த்த ஜெயசுதா, மிகுந்த வருத்தமடைகிறார். ராம்சரணால் அந்த பகுதி மக்கள் இதுவரை நிம்மதியுடன் இருப்பது இனி நிலைக்காது என நினைக்கும் ஜெயசுதா, பாதி எரிந்த நிலையில் இருக்கும் அல்லு அர்ஜூனின் முகத்தை ஃபேஸ் டிரான்ஸ்பிளான்ட் என்ற சிகிச்சை மூலம் முழுமையாக ராம்சரணாகவே மாற்றுகிறார். 

சிகிச்சை முடிந்து நினைவு திரும்பும் ராம்சரண் தோற்றத்தில் இருக்கும் அல்லு அர்ஜூன், தனது காதலியை கொன்றவர்களை தீர்த்துக்கட்ட புறப்படுகிறார். இறுதியில், அவர்களை பழிவாங்கினாரா? ராம்சரண் முகத்தோற்றத்தோடு இருக்கும் அல்லு அர்ஜூனுக்கு ராம்சரண் எதிரிகளால் என்னென்ன பிரச்சினை எழுந்தது? அதிலிருந்து அவர் மீண்டாரா? அவர்களையும் பழிதீர்த்தாரா? என்பதே மீதிக்கதை. 

படத்தின் நாயகன் ராம்சரண், வழக்கமான தெலுங்கு மசாலா கலந்த பாணியில் அதிரடி ஆக்‌ஷன் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளில் அழகாக நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் அனல் தெறிக்க விட்டிருக்கிறார். பாடல் காட்சிகளில் அதிவேகமாக நடனமாடி மெய்சிலிர்க்க வைக்கிறார். அல்லு அர்ஜூன் நட்புக்காக ஒரு சிறு கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்திருக்கிறார். இவருக்காக படத்தில் ஒரு ஆக்‌ஷன் காட்சி உண்டு. அந்த காட்சியில் அசால்ட்டாக நடித்து கைதட்டலை அள்ளுகிறார்.

நட்புக்காக நடித்திருக்கும் காஜல் அகர்வால் படத்தில் ஒருசில காட்சிகளே வந்தாலும் மனதில் பதிகிறார். அதேபோல், எமி ஜாக்சன் துறுதுறு கதாபாத்திரத்தில் ரசிக்க வைத்திருக்கிறார். ஒரு பாடல் காட்சியில் கவர்ச்சி நடனம் ஆடி, ரசிகர்களை கிறங்கடித்திருக்கிறார். ஸ்ருதிஹாசனுக்கும் படத்தில் பெரிய அளவில் காட்சிகள் இல்லை. இவரும் எமி ஜாக்சனுக்கு போட்டியாக ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார். 

சாய்குமார் வழக்கம்போல் அதிரடி வில்லன் கதாபாத்திரத்தில் அனைவரையும் மிரட்டியிருக்கிறார். முதல் பாதியில் ராகுல்தேவ் சாந்தமான வில்லனாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார். வித்தியாசமான, குழப்பமான ஒரு கதையை எல்லா தரப்பு மக்களும் ரசிக்கும்படி அழகான திரைக்கதை அமைத்து உருவாக்கியிருக்கிறார் வம்சி பைடிபள்ளி. படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருப்பதால், படம் முழுக்க சண்டைக் காட்சிகளே அதிகம் இருப்பதுபோல் இருக்கிறது. இருப்பினும், அதுவும் ரசிக்கத்தான் வைக்கிறது. படத்தில் ஏகப்பட்ட முன்னணி நட்சத்திரங்களை வைத்து அவர்களை திறமையாக கையாண்டிருக்கிறார்.

தேவிஸ்ரீபிரசாத் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசை அதிரடி காட்டுகிறது. சோட்டா கே.நாயுடுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது. 

மொத்தத்தில் ‘மகதீரா’ மாஸ்.

http://cinema.maalaimalar.com/2015/12/15191418/Magadheera-movie-review.html


-

0 comments: