Wednesday, December 16, 2015

திருட்டு ரயில் (2015)-சினிமா விமர்சனம்

நடிகர் : ரக்சன்
நடிகை :கேத்தி
இயக்குனர் :திருப்பதி
இசை :சகாய செல்வதாஸ் ஜெயப்பிரகாஷ்
ஓளிப்பதிவு :விஜய் வல்சன்
தூத்துக்குடியில் வசிக்கும் நாயகன் ரக்சன் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து பார் ஒன்றில் மது அருந்திக் கொண்டிருக்கிறார். அப்போது நண்பர்கள் அங்கு ஒருவரிடம் தகராறு செய்து கைகலப்பில் முடிகிறது. இறுதியில், தாங்கள் தாக்கியது ஒரு போலீஸ் அதிகாரி என்பதை அறிந்த நண்பர்கள், தப்பிப்பதற்காக சென்னை செல்லும் ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் திருட்டுத்தனமாக ஏறுகிறார்கள்.

சென்னை நோக்கி செல்லும் ரெயிலில் நாயகி கேத்தியை பார்க்கிறார் நாயகன். பார்த்ததும் அவள்மீது காதல் வயப்படுகிறார். டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் நாயகன் மற்றும் அவரது நண்பர்களுக்கு நாயகி உதவி செய்கிறாள். இதனால், அவள் மீதான நாயகனின் காதல் அதிகமாகிறது. சென்னை வந்த நண்பர்களுக்கு ஒரு நல்ல இடத்தில் நாயகி வேலையும் வாங்கிக் கொடுக்கிறாள். ஒருகட்டத்தில் அவளும் நாயகனை காதலிக்க தொடங்குகிறாள்.

இதற்கிடையில், அரசியல்வாதியான சண்முகராஜனின் வலதுகையாக செயல்பட்டு வரும் பெரிய ரவுடியான சரண் செல்வத்தை போலீஸ் என்கவுன்ட்டரில் போட்டுத் தள்ள முடிவெடுக்கிறது. இதில் இருந்து எப்படி தப்பிப்பது என்று யோசித்து வரும் வேளையில், நாயகனின் நண்பர்களில் ஒருவன் தன்னைப் போன்றே இருப்பதால், அவனை என்கவுன்ட்டரில் மாட்டிவிட்டு தப்பித்துவிட நினைக்கிறார் சரண் செல்வம்.

அதன்படி, போலீசும் சரண் செல்வம் போன்றே இருக்கும் நாயகனின் நண்பனை என்கவுன்ட்டர் செய்துவிடுகிறது. இதன்பின்னர், ரவுடியான சரண் செல்வம் தான் உயிரோடு இருக்கும் விஷயம் யார், யாருக்கு தெரியுமோ அவர்களையெல்லாம் தேடிப் போய் கொலை செய்கிறார். கடைசியில், சரண் செல்வம் உயிரோடு இருக்கும் விஷயம் நாயகன் மற்றும் அவரது நண்பர்களுக்கும் தெரிய வருகிறது. அவர்களையும் கொலை செய்ய சரண் செல்வம் முடிவெடுக்கிறார். அதேபோல், தனது நண்பனை போலி என்கவுன்டரில் மாட்டிவிட்ட சரண் செல்வத்தை நாயகன் மற்றும் அவரது நண்பர்கள் கொல்ல முடிவெடுக்கிறார்கள். 

இறுதியில், யார் வென்றார்கள்? என்பதே மீதிக்கதை. 

படத்தின் நாயகனான ரக்சனுக்கு இதுதான் முதல் படம். பார்க்க நாயகனுக்குண்டான தோற்றத்துடன் இருந்தாலும் நடிப்பில் இன்னும் கொஞ்சம் தேறவேண்டும். அதை இயக்குனர் நன்றாக புரிந்துகொண்டு இவருக்கு நாயகியுடன் டூயட் பாடுவது, அவரை சுற்றி சுற்றி லவ் பண்ணுவது மட்டுமே கொடுத்திருக்கிறார். அதிக வசனங்களும் கொடுக்கவில்லை. 

நாயகி கேத்தியும் திரையில் பார்க்க அழகாக இருக்கிறார். நடிப்பையும் அழகாக செய்திருக்கிறார். இரண்டு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரண் செல்வம் சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தின் முழு கதையும் இவரை சுற்றியே நகர்வதால், தனது கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து திறமையாக நடித்திருக்கிறார். 

சென்ட்ராயன், இமான் அண்ணாச்சி, மயில்சாமி, பிளாக் பாண்டி ஆகியோர் காமெடிக்காக திணிக்கப்பட்டிருந்தாலும், காமெடியில் பளிச்சிடாமல் குணச்சித்திர கதாபாத்திரமாக பளிச்சிடுகிறார்கள். அரசியல்வாதியாக வரும் சண்முகராஜனும், போலீசாக வரும் பசங்க சிவகுமாரும் அனுபவ நடிப்பில் கவர்கிறார்கள்.

மாறுபட்ட கதையை வித்தியாசமான கோணத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் திருப்பதி. திரைக்கதையில் விறுவிறுப்பு கூட்டி ரசிக்க வைத்திருக்கிறார். விஜய் வல்சன் ஒளிப்பதிவு அருமையாக இருக்கிறது. பாடல் காட்சிகளில் இவரது ஒளிப்பதிவு பலே சொல்ல வைக்கிறது. சகாய செல்வதாஸ் ஜெயப்பிரகாஷின் இசையில் பாடல்களும் அருமையாக இருக்கிறது. முதல் பாதியில் வரும் இரண்டு மெலோடி பாடல்களும் முணுமுணுக்க வைக்கிறது.

மொத்தத்தில் ‘திருட்டு ரயில்’ அழகான பயணம்.]

http://cinema.maalaimalar.com/2015/12/14191231/Thiruttu-Rail-cinema-review.html

0 comments: