Sunday, August 18, 2013

ஆம்புலன்ஸ்க்கு பெண் டிரைவர் ஓக்கேவா? -ஜெனோ வா புஷ்பம்

யாதுமாகி நிற்பாள்

ஓரம்போ... ஓரம்போ...

ஜெனோவா புஷ்பம்

உச்சிவெயில் மண்டையைப் பிளக்க, அன்று ஆலங்குளம் பஸ் நிலையம் எதிரே கூலாக நின்று கூல்ட்ரிங்ஸ் குடித்துக் கொண்டிருந்த என்னை சர்ரென்று கடந்து சென்றது அந்த ஆம்புலன்ஸ். ஒரு கணம் திகைத்துப் போனேன். அரசின் நடமாடும் மருத்துவக் குழு ஆம்புலன்ஸை லாகவமாக ஓட்டிச் சென்றார் ஒரு பெண்.
கண் பொய் பேசாது என்றபோதும் மனதில் எழுந்த சந்தேகத்தைக் கடைக்காரரிடம் கேட்க, ‘அந்த வண்டியை ஓட்டுவது பெண் டிரைவர் தான்என்றவர், ‘விவரம் தெரியணும்னா ஆலங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குப் போங்கஎன்றார்.
மருத்துவமனைக்குள் புகுந்து எதிர்ப்பட்ட ஆய்வகத்திற்குள் நுழைந்தேன். அங்கிருந்தவர் வழிக்காட்ட, திருநெல்வேலி-தென்காசி மெயின் ரோட்டில் இருந்து நாச்சியார்புரம் என்று திசைக்காட்டிய கிராமத்துச் சாலையில் வண்டியை திருப்பினேன். அங்கே நாம் தேடிய வண்டி, அப்பாவியா மரத்தடி நிழலில் குட்டித் தூக்கம் போட்டுக் கொண்டிருந்தது.
வண்டியின் அருகில் கிராம மக்களுக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனர். அங்கிருந்த பெண் டாக்டர் நம்மை மேலும் கீழும் பார்த்து விழிக்க வந்த விவரம் சொன்னதும் சந்தோஷத்தில் நாம் தேடிய நபரை உற்சாகமாய் அழைத்தார். அந்தப் பெண்மணி கண்ணில் மகிழ்ச்சி மின்னல் வெட்டியது. இருந்தாலும் அவர் டாக்டரை கேட்க வேண்டும் என்று தயங்கினார் நாங்க க்ரீன் சிக்னல் வாங்கிட்டு தான் வந்துருக்கோம் என்று சொன்னதும் பெண் டிரைவர் ஜெனோவா புஷ்பம் ஆம்புலன்ஸ் வேகத்தில் பதில் அளித்தார்.

ஆம்புலன்ஸ் ஓட்ட வேண்டும் என்ற ஆர்வம் எப்படி வந்தது?
13வயசிலே பைக் ஓட்ட கத்துக்கிட்டேன். 18வயசிலே கார் ஓட்ட கத்துகிட்டேன். இந்த நேரத்திலே எனக்கு, அத்தை மகன் ஜான்சனுடன் திருமணம் ஆனது. என் கணவர் முறைப்படி கார் ஓட்டுவதற்கு லைசென்ஸ் வாங்கிக் கொடுத்தார். கார் ஓட்டுன எனக்கு பஸ் ஓட்டுறதுக்கு ஆசை வந்துச்சு. அவருகிட்டே சொன்னா கோவப்படுவாறோன்னு நினைச்சேன், இருந்தாலும் பயந்து பயந்து சொன்னேன். உடனே அவர் உன்னோட ஆசைதான் என்னோட ஆசைன்னு திருநெல்வேலி அரசு போக்கு வரத்துகழகத்தின் .ஆர்.டியிலே டிரைவிங் படிக்க வைத்தார். டிரைவிங் முடித்ததும் உடனே வேலை வாய்ப்பு அலுவலகத்திலே பதிவு செய்து வைத்தேன். 2008ம் வருஷம் சீனியாரிட்டி அடிப்படையிலே இந்த ஆம்புலன்ஸ் வேலைக்கான உத்தரவு வந்துச்சு.



 பஸ் ஓட்டுறதுக்கு தான் ஆசைப்பட்டேன். இருந்தாலும் தேடி வரும் வாய்ப்பை விடக்கூடாதுனு இதுல ஜாயின் பண்ணினேன். குடும்ப உறவினர்கள் நிகழ்ச்சிக்குப் போகும்போது, என்னோட பணியை எல்லாரும் பாராட்டுவாங்க; இதை இறைவன் கொடுத்த பரிசா நினைக்கிறேன்."
முதல் அனுபவம் எப்படி இருந்தது?
முதல் நாள் டியூட்டிக்கு வந்த என்னை எல்லோரும் ரொம்ப ஆர்வமா பாத்தாங்க, எனக்கு ஒரு மாதிரியாத்தான் இருந்துச்சு. இருந்தாலும் நான் போன கிராமங்களிலே எல்லாம் எனக்கு நல்ல வரவேற்பு கிடைச்சுது. இன்னைக்கும் வழியிலே சின்னப்புள்ளைக என்னப் பாத்தா , அங்க பாரு பொம்பள டிரைவரு"ன்னு சொல்றது சந்தோஷமா இருக்கு."
ஆம்புலன்ஸ் டிரைவர்ங்கறதால, முதலுதவி எல்லாம் உங்களுக்குத் தெரியுமா?

படிக்கும்போதே கிராமங்களிலே சமூகப்பணி செய்திருக்கேன். இந்த வண்டிக்கு வேலைக்கு வந்தப் பிறகு நர்ஸ் கல்யாணியிடமிருந்து மருத்துவம் தொடர்பான சில முதலுதவிகள் செய்யக் கத்துக்கிட்டேன்.
உங்களை நெகிழ வைத்த சம்பவம் ஏதேனும்...
ஒருநாள் வழக்கம்போல கிராமப்பணிக்கு சென்றுவிட்டு, வண்டியில் திரும்பி வந்து கொண்டிருந்தோம். அப்ப குறிப்பன்குளத்து கிராமமக்கள் என்னோட வண்டியைப் பார்த்ததும் கூட்டமாக ஓடி வந்து மறிச்சுக்கிட்டாங்க. எனக்கு ரொம்ப பயமாயிட்டு. அந்த ஊருலே ஒரு பெரியவருக்கு ஹார்ட் அட்டாக் உடனடியா ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டு போகணும் அதான் வண்டியை மறிச்சோம்னு சொன்னாங்க. நாங்க அந்தப் பெரியவர் வீட்டிற்குப் பறந்தோம். எங்க டாக்டர் அவரை பரிசோதித்துப் பார்த்த போது அவர் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. கிராமமக்கள் திரண்டு வந்து வண்டியை திடீரென்று மறித்தது மறக்கமுடியாத சம்பவம் என்றாலும் அந்தப் பெரியவரைக் காப்பாற்ற முடியாமல் போனது மனதை நெகிழவைத்தது.
ஒரு எமர்ஜென்ஸி கேஸை திடீரென நீங்கள் எடுத்து செல்லும் சூழல் வந்தால் ஒரு பெண்ணாக உங்கள் மனம் எப்படி இருக்கும்?
ஒரு பெண் என்ற நினைப்பைத் தாண்டி, அந்த பேஷன்டை எவ்வளவு சீக்கிரமாகவும் பாதுகாப்பாகவும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியும் என்பதில்தான் என் கவனம் இருக்கும்."
எதிர்கால ஆசை...
மிகப்பெரிய கனரக வாகனங்களை ஓட்டிப் பார்க்கணும். என்னை மாதிரி நிறைய பெண்கள் இதுபோன்ற பணிக்கு வரணும். ரொம்பப் பெரிய ஆசைன்னா நாலரை வருஷமா டெம்பரவரியாக பார்த்துவரும் என்னோட இந்த வேலை நிரந்தரமாகணும்" என்றார் புன்னகையுடன்.
என்ன ஜெனோ சிஸ்டர் அடுத்த ஊருக்குக் கிளம்பலாமா?" என்று கேட்டபடி டாக்டர் வரவே, மரத்தடி நிழலில் உறங்கிக் கொண்டிருந்த ஆம்புலன்ஸ் உறுமிக் கொண்டு புறப்பட்டது.

Thanks - mankayar malar

1 comments:

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு.
ஜெனோ சிஸ்டருக்கு வாழ்த்துக்கள்.