Saturday, April 14, 2012

கூடங்குளம் உதயகுமார் நல்லவரா? கெட்டவரா? ஓ பக்கங்கள் ஞானி பேட்டி - சூர்யக்கதிர்


1. பாகிஸ்தான் தீவிரவாதி கசாப்புக்கு உள்ள உரிமையைக் கூட எனக்குத் தரவில்லை என்று மமதா பானர்ஜியின் பிடிவாதப் போக்கால் ரயில்வே அமைச்சர் பதவியை இழந்துள்ள தினேஷ் திரிவேதி குமுறியிருக்கிறாரே?நியாயமான குமுறல். ஆனால் மம்தாவின் பிடிவாத அரசியல் பற்றியெல்லாம் அவருக்கு மநதிரி பதவியை மம்தா தரும்போதே தெரியாதா என்ன ?


2. விலைவாசி உயர்வும், மட்டமான வேட்பாளர்கள் தேர்வுமே உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் தோல்விக்குக் காரணம் என்கிறாரே சோனியா காந்தி?


உடனடியான காரணங்கள் அவை என்பது உண்மைதான். ஆனால் நீண்ட காலக் காரணங்களில் முக்கியமானது மாநில அள்வில் அங்கே காங்கிரசுக்கு சரியான தலைவர்கள் இல்லை என்பதுதான். அப்படி இல்லமல் போனதற்கு காங்கிரசின் டெல்லித் தலைமைதான் காரணம். தி.மு.க, அ.தி.மு.க இரண்டும் வேண்டாம் என்று தமிழகத்தில் ராகுலும் சோனியாவும் நாளை வந்து கடும் பிரசாரம் செய்தால் மக்கள் என்ன கேட்பார்கள் ?


 வேண்டாம் என்பது சரி. பதிலுக்கு யார் ? அதற்கு சோனியாவும் ராகுலும் இதோ தங்கபாலு, இதோ வாசன் என்றால் தமிழக மக்கள் சிரிக்கமாட்டார்களா? அதே நிலைதான் உ.பியிலும். குறைந்தப்ட்சம் ராகுல் காந்தி தன்னையே உ.பி முதல்வர் பதவிக்கான போட்டியில் இருப்பதாக அறிவித்து எம்.எல்.ஏ தேர்தலில் நின்றிருந்தால், குறைந்தப்ட்சம் அவர் அங்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வரையிலுமாவது வந்திருக்க முடியும்.


3. தனி ஈழத்துக்கான பிரபாகரன் போராட்டம் தவறானது என்று கூறும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை. அவர் போராட்டம் சரியானதே. ஆனால் சகோதரச் சண்டைதான் தமிழ் ஈழம் அமைவதைக் கெடுத்தது என்கிறாரே கருணாநிதி?


கருணாநிதி முதலமைச்சராக இருக்கும்போது தனி ஈழம் பற்றி பேசமாட்டார். பதவி பறி போன காலங்களில் மட்டுமே பேசுவார். ஈழத்தமிழர் பிரச்சினையை நீண்ட நாட்களாகக் கெடுத்து வருவதில் அவரது பங்கு கணிசமானது.


4. அன்னா ஹசாரே தனிக்கட்சி ஆரம்பித்தால் தாக்குப் பிடிப்பாரா?


அதை விட பி.ஜே.பியிலேயே சேர்ந்துவிடலாம். என்றைக்காவது பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தால், ஜனாதிபதி பதவியும் பாரத ரத்னா விருதும் கொடுப்பார்கள். தனிக் கட்சி ஆரம்பித்தால் அவர்களே அவரைத் தொலைத்துக் கட்டிவிடுவார்கள்.


5. ஒரு அரசியல்வாதி மக்களுக்காக வருத்தப்படுவது எப்போது?


தன்னிடம் ஓட்டுக்கு பணம், வாங்கியவர் வாக்குப்பதிவுக்கு முன்பு செத்துப் போய்விட்டால் மட்டுமே வருத்தப்படுவார் என்பதுதான இன்றைய நிலை. உண்மையான அரசியல்வாதி எனபவர் எப்போதுமே மக்களுக்கக வருத்தப்படுபவர். அந்த அடிப்படையிலேயே வேலை செய்பவராக இருப்பார்.6. தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இதற்காகவே அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்தது இந்தியா. அதேசமயம், நாங்கள் இலங்கையின் இறையாண்மையில் தலையிட மாட்டோம், அதற்கு குந்தகம் விளைவிக்க மாட்டோம் என்று சொல்லியிருக்கிறாரே பிரதமர் மன்மோகன் சிங்?


யாரும் அவரை எந்த இறையாண்மையிலும் தலையிடச் சொல்லவில்லை. தமிழர்களுக்கு நீதி கிடைக்க உதவுங்கள் என்றுதான் சொல்கிறார்கள். அதை எப்போது எப்படி இந்தியா பெற்றுத்தரும் என்பதைத் தவிர மீதியெல்லாம் பேசுகிறார் அவர்.

 
7. தற்போது வெளியாகும் திரைப்படங்களின் டைட்டில் எல்லாம் சொதப்பலாகி வருவதை கவனித்தீர்களா?


டைட்டிலை சொதப்பினாலும் பரவாயில்லை. படத்தையே சொதப்பிவிடுகிறார்களே…8. பெங்களூரு நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் மீது வக்கீல்கள் பயங்கரமான தாக்கி இருக்கிறார்களே இது சரியா?


நிச்சயம் சரியல்ல. இதற்கான அடிப்படைக் காரணம் பத்திரிகைத்தொழிலுக்குள் சில சமூக விரோதிகள் நுழைவது போல வக்கீல் தொழிலிலும் சமூக விரோதிகளின் எண்ணிக்கை கூடி வருகிறது. வக்கீல் தொழிலே மிகவும் கவலைக்கிடமான் நிலையில் எங்கேயும் இருக்கிறது. மருத்துவம், பொறியியல் போல சட்டப்படிப்பு படிக்கவும் எந்தெந்த பாடங்களில் கட் ஆஃப் மார்க் எவ்வளவு இருக்க வேண்டும் என்ற நிலையை விதிகளை ஏற்படுத்தினால்தான் தொழிலை காப்பாற்றமுடியும்.


 
9. குஜராத் பேரவையில் எம்.எல்.ஏக்கள் சீன் படம் பார்க்கவில்லை என்று தடயவியல் துறை விளக்கம் அளித்துள்ளதே? 


சட்டப்பேரவை என்பது எம்.எல்.ஏக்களுக்கு அலுவலக வேலை என்ற பார்வை முதலில் வரவேண்டும். அலுவலகத்தில் வேலை நேரத்தின்போது எப்படி நடக்க் வேண்டும் என்று ஒவ்வொரு துறை ஊழியருக்கும் நடத்தை விதிகள் இருப்பது போல எம்.எல்.ஏக்கள் எம்.பிகளுக்கும் தேவைப்படுகிறது. வீட்டுக்கு போய் என்ன பார்க்கிறார்கள் என்பது நமக்கு முதன்மையான பிரச்சினை அல்ல – அது அவர்கள் வேலையில் பாதிப்பு ஏற்படுத்தாதவரையில்.


10. கூடங்குளத்தில் இயல்பு நிலை திரும்ப முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன் கேட்டுக்கொண்டுள்ளாரே?


தா. பா பிள்ளையைம் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் கபட நாடகம் ஆடுபவர். கூடங்குளத்தை திறக்கவேண்டுமென்று இந்திய-ரஷ்ய முதலாளிகள் விஸ்வாசத்தில் கூவிக் கொண்டிருந்தவர். அகிம்சை வழியில் போராடும் மக்களுக்கு பயந்துகொண்டு போலீசை அரசு குவித்ததும் இயல்பு நிலை என்று அறிக்கை நாடகம் ஆடுகிறார் பாண்டியன். தமிழ்க இடதுசாரிக் கட்சிகள் பேசாமல் கட்சியைக் கலைத்துவிட்டு தி.மு.கவிலோ .அதி.முகவிலோ ஐக்கியமாகிவிடலாம். தா.பாவுக்கு ஏற்ற இடம் தமிழகக் காங்கிரஸ்

.

11. நாடாளுமன்றத்துக்கு இடைத் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதால் சமாஜ்வாதி கட்சியினர் தயாராக இருக்க வேண்டும் என்று அக்கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் தெரிவித்துள்ளாரே?


அதுதான் கடந்த ஒரு வருடமகவே பி.ஜே.பியின் ஆசை, முயற்சி எல்லாம். ஆனால், காங்கிரசுக்கு மாற்று அணி பலமாக இல்லாதவரையில் காங்கிரசின் கூட்டாளிகள் அதைக் கவிழ்க்க மாட்டார்கள். இப்போது பி.ஜே.பியும் பலமாக இல்லை. காங்கிரசும் பலமாக இல்லை. எனவே மூன்றாவது அணி ஆசை முலாயமுக்கு வந்திருக்கிறது. மாநிலத்தில் முதல்வராக மகன் அகிலேஷ், மத்தியில் பிரதமராக தான் என்பது அவர் கனவு. மூன்றாவது அணி வாய்ப்பும் பலவீனமாகத்தானிருக்கிறது.


12. ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றிருந்தாலும் அதனை செயல்படுத்த இலங்கை மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்று இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச கொக்கரித்துள்ளாரே?13. ஜெனிவா தீர்மானத்தால் ராஜபக்‌ஷேவுக்கு அப்படி ஒன்றும் ஆபத்து வந்துவிடாது என்கிறார்களே? 


அந்தத் தீர்மானமே ஒரு டுபாக்கூர் தீர்மானம். இலங்கைப் போர்க் குற்றங்கள் பற்றி சுயேச்சையான சர்வதேச விசாரணை கோராமல், இலங்கை நியமித்த விசாரன கமிஷனின் அறிக்கையையே தயவுசெய்து இலங்கை நிறைவேற்றவேண்டுமென்று விண்னப்பிக்கும் தீர்மானம் அது. நீ அடிக்கிற மாதிரி நடி. நான் அழுகிற மாதிரி நடிக்கிறேன் என்று அமெரிக்காவும் இலங்கையும் கூட இந்தியாவும் நாடகம் ஆடியிருக்கின்றன. தங்கள் நாட்டு அறிக்கையையே நிறைவேற்றமாட்டோம் என்று சொல்லுகிற அரசை என்ன செய்வது ?14. இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளதாலும், அந்தத் தீர்மானம் வெற்றி பெற்றுள்ளதாலும், இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் மீது சிங்களர்கள் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளது என்கிறாரே கருணாநிதி?15. அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பதால் இலங்கையில் வசிக்கும் மீதமுள்ள தமிழர்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கனிமொழி தெரிவித்துள்ளாரே?


இவர்களே அவர்களுக்கு ஐடியா கொடுக்கிறமாதிரி இருக்கிறது. அப்படி ஓர் அபாயம் இருக்கிறதென்றால் ஏன் இவர்கள் மத்திய அரசை தீர்மானத்தை ஆதரிக்கச் சொன்னார்கள் ? முரண்பாடுகளின் மூட்டைகள் அப்பாவும் மகளும்..


16. மத்திய ரயில்வே பட்ஜெட்டில் முன்னாள் அமைச்சர் தினேஷ் திரிவேதி அறிவித்த பயணிகள் கட்டண உயர்வை வாபஸ் பெறுவதாக புதிய ரயில்வே அமைச்சரான முகுல் ராய் நாடாளுமன்றத்தில் அறிவித்துவிட்டாரே?


தவறான முடிவு. பத்தாண்டுகளாக கட்டணத்தை உயர்த்தாமல் இருந்ததும் தவறு. படிப்படியாக சிறிய அளவில் ஏற்றி வந்திருந்தால் சிக்கல் இருந்திராது. இப்போதும் ஏற்றிய விகிதத்தை மட்டும் கொஞ்சம் குறைத்திருக்கலாம். கட்டணத்தை உயர்த்தியபிறகும் கூட பஸ் கட்டணத்தை விட ரயில் குறைவாகவே உள்ளது. ரயில் சேவையைத்தான் ஒரு நாடு அதிகரிக்க வேண்டும். தொலை நோக்கில அதுவே விலை மலிவானதும் செலவு குறைவானதுமாகும். திரிவேதி- முகேஷ் மாற்றங்கள் மம்தா- காங்கிரஸ் கூட்டணி தர்மத்தின் கோளாறு. கூட்டணி தர்மத்தின் கோளாறில்தான் ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்தது.

 
17. தவறாக சிக்க வைக்கப்பட்டுள்ளேன்… 2 ஜி வழக்கிலிருந்து விடுவியுங்கள் என்கிறாரே கனிமொழி?


அதை நீதிமன்றத்தில் வாதாடி அரசு வைக்கும் சாட்சியங்கள் பொய் என்று நிரூபித்து வெளியே வர முயற்சிப்பதை விட்டுவிட்டு இப்படி புலம்புவது அனுதாபம் சம்பாதிக்கத்தான்.


18. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தயங்கித் தயங்கி ஆதரித்தாலும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்திருக்கிறாரே ஜெயலலிதா?


இப்போது அவருக்கு மத்திய அரசுடன் நல்லுறவுக் காற்று அடிக்கிறது. நன்றி: கூடங்குளம். எந்தக் காற்று எப்போது திசை மாறிஅ டிக்கும் என்பது பின்னர்தான் தெரியும்.


19. உங்களுக்கு இந்த வார மகிழ்ச்சி என்ன ? இந்த வார வருத்தம் என்ன
?

தமிழக அரசு பட்ஜெட்டில் சூரியசக்தி மின் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதுதான் இந்த வார மகிழ்ச்சி. அதற்காகக் குரல் எழுப்பி ஆபத்தான அணு மின்சாரம் வேண்டாம் என்று வரலாறு காணாத விதத்தில் காந்திய அறவழியில் எட்டு மாத காலமாக அமைதியாகப் போராடிவந்த கூடங்குளம் மக்களின் கோரிக்கையை நிராகரித்துவிட்டு அவ்ர்களை ஒடுக்க போலீசையும் ராணுவத்தையும் மத்திய மாநில அரசுகள் ஏவிவிட்டிருப்பதுதான் இந்த வார…..அல்ல இந்த வருடத்தின் வருத்தம்.


20. கூடங்குளம் உதயகுமார் நல்லவரா? கெட்டவரா?


எனக்கு இதில் சந்தேகமே இல்லை. அவர் நல்லவர்தான். ஒரு சிறு பிரச்சினையில் கூட உணர்ச்சிவசப்பட்டு கையை ஓங்கிவிடக்கூடிய மரபில் வந்திருக்கும் கிராம மக்களை எட்டு மாத காலமாக அரசுகள் எவ்வளவு எரிச்சலூட்டியபோதும், அமைதியாகவே போராட வைத்ததுஎன்பது சாதாரண விஷயம் அல்ல.

அவருக்கு காந்தி அமைதிப் பரிசோ பாரத ரத்னாவோ தரலாம். தொடர்ந்து அவருக்கும் அவர் குழுவினருக்கும் எதிராக எவ்வலவோ அவதூறுகளை அரசுகள் செய்தன.

 வெளிநாட்டு பணத்தை தொண்டு நிறுவனம் மூலம் போராட்டத்தில் பயன்படுத்துவதாக டி.வி டி.வியாக முழங்கிய நாராயணசாமி நாடாளுமன்றத்தில் அந்தக் குற்றச்சாட்டுக்கு இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று வெட்கமில்லாமல் ஒப்புக் கொண்டிருக்கிறார்.


 இந்த மண்ணுக்காக உயிரையே கொடுப்பேன் என்று தேர்தல் நேரத்தில் பேசிவிட்டு பிரசாரம் முடிந்ததும் பதினைந்து நாள் வெளிநாடுகளுக்கு சொகுசுப்பயணம் போய்விடுகிற அரைச்யல் பிரமுகர்கள் நிறைந்திருக்கும் தமிழ்நாட்டில், வெளிநாட்டில் பத்து வ்ருடத்துக்கு மேல் பார்த்த வேலையை உதறிவிட்டு தாயகம் திரும்பி, சேர்த்துவைத்த சொந்தப்பணத்தில் பள்ளிக்கூடம் நடத்துபவர் நல்லவரில்லாமல் வேறென்ன ?


 அணு உலை எதிர்ப்புப் போராட்டத்திற்காக இங்கே வெயிலில் அலைந்து திரிந்து வாடி உழைக்காமல், அமெரிக்காவிலேயே தொடர்ந்து வேலை செய்துகொண்டு வசதியாக வாழ்ந்துகொண்டிருந்தால், யார் அவரை என்ன சொல்ல முடியும் ?21. ஜெயலலிதாவின் விஷன் 2023 திட்டத்துக்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறதே?

அரசு பணம் ஒதுக்குவது மட்டும் போதாது. 2023க்குள் 2 கோடி இளைஞர்களை ஸ்கில்ட் ஒர்க்கராக ஆக்குவோம் என்று முதலமைச்சர் சொல்லியிருக்கிறார்.நல்ல லட்சியம். ஆனால் டாஸ்மாக் கடைகளை மூடாமல் 2 லட்சம் பேரைக் கூட தயார் செய்யமுடியாது.


சூரியகதிர் 1.4.2012 - நன்றி

7 comments:

கூடல் பாலா said...

எளிதில் உணர்ச்சி வசப் படக்கூடிய கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடும் கடலோர கிராம மக்களை இது வரை ஒரு கடுகளவு வன்முறையை கூட செய்யவிடாமல் செய்தது உதயகுமார் அவர்களின் சாதனைதான் ....

கூடல் பாலா said...

மீடியாக்கள் உதயகுமாருக்கு கொடுத்த அதிக முக்கியத்துவம் போராடும் மண்ணின் மைந்தர்களின் தியாகங்களை மக்களிடமிருந்து சற்றே மறைத்துவிட்டது ....இது போராட்டத்தில் ஒரு சிறிய மைனஸ் !

ராஜி said...

உதயகுமார் பற்றி ஞானி சொன்ன அத்தனை வார்த்தைகளும் ஏற்றுக்கொள்ளக்கூடியவையே

சதீஷ் செல்லதுரை said...

காப்பி பேஸ்ட் னு இதைதான் சொல்றாங்களா?நல்ல பதிவு ..???

Unknown said...

ஆம் நண்பரே.எதற்கெடுத்தாலஉம் உணர்ச்சிவசப்படக்கூடிய இடிந்தகரை,கூத்தங்குழி போன்ற கிராமமக்களை ஒரு அடிதடிக்கு கூட போக விடாமல் பார்த்திருக்கிறார்.
கூடங்குளம்,இடிந்தகரை,கூத்தங்குழி போன்ற கிராமமக்கள் உதயகுமார் பேச்சுக்கு கட்டுப்பட்டு தான் அடிதடிக்கு போகவில்லை என்பதை நான் உறுதியாக சொல்வேன்

Jk said...

அடிதடிக்குப் போனால் அரசுக்குத்தான் சாதகம். எனவே அடக்கி வாசிக்கிறார் நண்பர்.

Jk said...

அடிதடிக்குப் போனால் அரசுக்குத்தான் சாதகம். எனவே அடக்கி வாசிக்கிறார் நண்பர்.