Friday, March 16, 2012

ஹிட்லரே அஞ்சி நடுங்கும் ராஜபக்சேவின் கொடூரங்கள் - மக்கள் கருத்து


"ஆசையால் வெற்றி பெற்றவன் அந்தப் போதையால் தவறுகள் செய்து அழிவைத் தேடுவான். ஆனால் தன்னடக்கம் உள்ள மனிதன் அறிவுடன் சிந்தித்து எப்போதுமே இன்பமாக வாழ்ந்திடுவான்." இது சிங்களவர்கள் வணங்கும் புத்தரின் வாக்கு!

'ஒற்றைத் தமிழனையும் விட்டுவிடாதே, தமிழச்சிகள் கருவில் உள்ள குழந்தை கூட நாளை விடுதலைப் புலியாக மாறிவிடும்' என்ற ரத்த வெறிக்கொண்ட இக்கூப்பாடுகள் இறுதிக்கட்ட போர் நடக்கையில் ராணுவத்துக்கு 'மகிந்த ராஜபக்சே'வால் பணிக்கப்பட்ட வேலைகள். இதுவே அன்று சிங்கள ராணுவத்துக்கு வேத வாக்கு!

இலங்கை ராணுவத்தின் ஒவ்வொரு விலங்கு மனிதர்களும் ராஜபக்சேவாக மாறி தமிழ் மழலைகளை முண்டமாக, பிறந்து விழித்திறக்காத குழந்தைகளை பூட்ஸ் கால்களில் நசுக்கி, தமிழச்சிகளின் பிணத்தை கூட முகர்ந்து பார்த்தது உள்ளமே இல்லாத இலங்கை ராணுவத்தின் உடல்.

'தப்பு செய்தவன் ஒரு தடயத்தையாவது விட்டுச் செல்வான்' என்பது துப்பு துலக்குவர்களின் வாக்கு. அந்த வாக்கை போல் 'போரில் வதைப்பட்டவர்கள், தப்பி வந்தவர்கள், ஐ.நா. பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், இவ்வளவு ஏன்.. இப்போர்க்குற்ற காணொளியை கொடுத்த உதவிய சிங்கள ராணுவர் வரை இலங்கையின் இனப்படுகொலைகளுக்கு ஆயிரம் ஆயிரம் சாட்சியங்கள் உண்டு. ஆனால் தண்டணைகள்தான் இல்லை.

இதைத்தான் 'இலங்கையின் கொலைக்களங்கள் - தண்டிக்கபடாத குற்றங்கள்' என்று இரண்டாவது பாகமாக இலங்கை இனப்படுகொலைகள் பற்றிய ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது 'சேனல்-4'.

'இன்று உனக்கு இனிய நாள்' என்ற தோழமையின் குறுஞ்செய்தியுடன் அலைபேசியை ஓரங்கட்டிவிட்டு கணினியின் முன் காலை அமர்ந்தேன். அதுவே 'இலங்கை கொலைக்களங்கள் - தண்டிக்கப்படாத குற்றங்கள்' ஒளிபரப்பட்ட நேரம். கண்ணில் நீர் வற்றிய தருணம் .

அய்யோ! இந்த பச்சப் பிள்ளைய காப்பாத்த இயலையே... என்ற 'சேய்'யை இழந்த ஈழத்தாயின் கதறலே 53:12 நிமிட காட்சியில் கண்ணீரை சொட்ட வைக்கும் முதல் காட்சி.

'தமிழீழம் என்றொரு தேசம் விடிய போராடிய விடுதலைப் புலிகளுக்கு' எதிராக இலங்கை அரசு மேற்கொண்ட போர் பல ஆயிரம் மக்களை காவு வாங்கியதை ரணத்தை ஏற்படுத்தும்  காட்சிகளுடன் வெளியிட்டும் 'சேனல்- 4', ஜெனிவா முதல் நியூயார்க் வரை ஒளிப்பரப்பியும் இதுவரை இம்மக்களுக்கு நீதி கிடைத்ததா தெரியவில்லை.

நீதி கிடைக்காத இன்றைய நிலைமையில் தான் 'தண்டிக்கபடாத போர்க்குற்றங்கள் 'என்ற படத்தை ஓர் ஆவண சான்றாக வெளியிடுகிறோம் என்பதுடன் 'ஐ.நா. மற்றும் கண்டும் காணாது இருந்த சர்வதேச சமூகத்தின் மனசாட்சியற்ற கதவுகளை தன் கேள்விகளால் தட்டுகிறார், ஆவணப் படத் தயாரிப்பாளர் ஜான் ஸ்னோ.  

உலக நாடாளுமன்றங்கள் பலவற்றில் சேனல் 4-ன் முதல் ஆவணப்படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும், முன்னாள் இலங்கை அதிபர் சந்திரிகா பண்டாரநாயகா குமாரதுங்கா இதனால் ஏற்பட்ட விளைவை கூறியதே 'தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதை சிங்களமே ஒப்புக்கொள்கிறது' என்பதற்கான சான்று. அவர் "சேனல்-4 வெளியிட்ட இலங்கை கொலைக்களங்கள் வீடியோவை பார்த்துவிட்டு, "என் 28 வயது மகன் கலங்கிப் போனான், அவன் அதில் காட்டிய சித்தரவதைகளை பார்த்துவிட்டு, நான் சிங்களன், இலங்கையன் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கமாக உள்ளது என்றான்," என்று தெரிவித்துள்ளார்.

2007 முதல் 2010 வரை இங்கிலாந்து வெளியுறவுச் செயலாளர் டேவிட் மில்லிபேன்ட் கருத்துரைத்த பொழுது, நல்லிணக்க அறிக்கையில் போருக்கு அந்த குரூர இனப்படுகொலைக்களுக்கு யார் காரணம் என்பதையே இலங்கை அரசு மறைத்து விட்டது.

"விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் என்று சொல்லிக்கொண்டு தமிழ் மக்களையே முழுவதுமாக அழித்துள்ளனர் கோத்தபயாவும், மகிந்தாவும்" என்று குறிப்பிட்டுள்ளார், மில்லிபேன்ட்.

சிங்கள அரசு அலுவலகங்கள் மீது தற்கொலைப் படை தாக்குதல், ஐ.நா. விதியை மீறி 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை இறுதிக்கட்ட போரில் புலிகள் போரிட பயன்படுத்தினர்  என்று சான்றுகள் முன்வைக்கப்பட்டாலும், ஏன் தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசு செய்த படுகொலைகளுக்கு, போர் விதிகளை மீறி புலிப்போராளிகளுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களுக்கு தண்டனைகள் அளிக்கப்படவில்லை? என்ற கேள்விகள் காட்சிகளுக்கு இடையே எழுப்பப்பட்டது.

மக்கள் மீதே எறியப்பட்ட குண்டுகள்...

பாதுகாப்பு வலயங்களில் (No Fire zone) இருந்த பதுங்கு குழிகள், மக்களை காக்க ஐ.நா அமைத்த பதுங்கு குழிகள் என பதுங்கு குழிகள் எல்லாவற்றி்ன் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடைபெற்றுள்ளது. சரத் பொன்சேகா போரில் எவ்வித வலிமையான ஆயுதங்களும் பயன்படுத்தவில்லை என்று சொல்லிவிட்ட பிறகே, ஐ.நா. பதுங்கு குழிகள் மீது தொடர் தாக்குதல் நடைபெற்றுள்ளது. 

இத்தாக்குதல் நடக்கும்போது பீட்டர் மக்கே என்ற ஐ.நா.வின் ஆஸ்திரேலிய பணியாளரால் இதை நிறுத்தக்கோரி பல அழைப்புகள் கொழும்புக்கு விடப்பட்ட பிறகும், அங்கிருந்து சற்று தள்ளி, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. இப்போரில் ஐ.நா. பதுங்குக்குழிகள் மீது தெரிந்தே தகுதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து இலங்கை அரசு போரின் விதிகளை அப்பட்டமாக மீறியது தெரிகிறது.

உணவுக்கு வழி இல்லை... மருந்தில்லாமல் வலியோடு துடித்தவர்கள்!

அரசுக்கு பணிந்து பாதுகாப்பு வலயங்களுக்குள் வரும் மக்களுக்கு உணவு, மருந்து கொடுப்பது ஐ.நா.விதிப்படி ஒரு ஜனநாயக நாட்டின் கடமை. ஆனால் எந்த கடமையும் இல்லை என்றே இலங்கை ராணுவமும் அரசும் செயல்பட்டுள்ளது என ஆதாரங்களுடன் வருகிறது அடுத்தடுத்த சாட்சியங்கள்.

பாதுக்காப்பு வலயங்களுக்கு உள்ள மருத்துவராக பணியாற்றிய ஒருவரின் பதில் "அவசர சிகிச்சை (ஐசியூ) யூனிட்டில் மருந்து மிகவும் பற்றாக்குறையாக உள்ளது என்று சொல்லியும் அரசு பொருட்படுத்தவே இல்லை, இதனாலே குண்டுகளால் அடிப்பட்டு சிகிச்சையின் பொழுது  ரத்தப்போக்கு  நிற்காமல் இறந்தவர்களே அதிகம்."

இதுகுறித்து இதில் வதைப்பட்டு தமிழ் பெண்மணி கூறியது, "கடைக்கு பொருள் வாங்க போனால் குண்டு எப்ப வந்து விழும் என்றே தெரியாது, விழுந்தால் வியாபாரியும் விழுந்துக்கிடப்பார்.. மக்கள் உணவுக்கு வழியின்றி கீழே சிதறிய பொருட்களை அள்ளிக்கொண்டு இருப்பார்கள். அடுத்த அவர்கள் இருப்பார்களா இல்லையா என்றே தெரியாது" என்று அனுபவித்த கொடுமையை விளக்கினார்.

இதே போல் பல காயங்களுடன் தப்பி வந்த ஆண் ஒருவர் "நாங்கள் பட்ட காயங்களுக்கு எல்லாம் மருந்து இல்லை.. கத்திக்கொண்டே கண்கள் சொருகி விழுந்து விடுவோம் ,அதுவே குண்டடிபட்ட எங்களுக்கு வலிப்போக்கும் மருந்து. அப்படி இல்லாமல்  அடிப்பட்டவர்கள் வலியால் துடித்து கத்துவதைக் கண்டால் இழுத்திப்போட்டு சுட்டுக்கொன்று விடுவார்கள் ராணுவ ஆட்கள்" என்றார்.

முழுமையான திட்ட வகுத்தலுடன் குண்டுவீச்சு!

எந்தவித எச்சரிக்கையும் விடப்படாமலே திட்டுமிட்டு பொது மக்கள் குண்டுகள் வீசி தாக்குதல் நடைபெற்றுள்ளது. அதுவும் மருத்துவமனை என்று அறிந்தும், அதன் மீதே குண்டுகள் வீசப்பட்டுள்ளன. 2009 ஏப்ரல் 22-ம் தேதி இலங்கை அரசு 'வலிமை வாய்ந்த குண்டுகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை, பொதுமக்கள் யாரும் கொல்லப்படவில்லை' என்று சொல்லியதே, அப்படியென்றால் குண்டுவீச்சுத் தாக்குதல் யாரால் நடத்தப்பட்டது? இந்த தாக்குதலுக்கு யார் உத்தரவு கொடுத்தது? என்று வினவியுள்ளது, சேனல் 4.

இவ்வளவு ஏன், ராஜபக்சேவே தன் பேச்சில் "மக்களை எங்கள் பக்கம் கொண்டு வருவதற்காக தாக்குதல்கள் நடைபெறுகின்றன. அதில் 5000 முதல் 10000 பேர் செத்திருக்கலாம்" என்று கொலைவெறிப் பேச்சு இணைக்கப்பட்டுள்ளது.

பத்திரிகை சுதந்திரம் இல்லாத நாடு..

ராஜபக்சே அரசுக்கு எதிராக பத்திரிகை எதாவது எழுதினால் உடனே அவர்  'எல்.டி.டி.ஈ. உதவி பெறுபவர்' என்று முத்திரை குத்தப்பட்டு காணாமல் போவார் என்பது தான் இலங்கையின் பத்திரிகை விதி.

இலங்கையில் போர் நடைபெற்ற காலத்திலும் அதன் பிந்தைய காலக்கட்டத்திலும் பத்திரிகையாளர்கள் நிலைமையை பேசிவருபவர் இலங்கையின் சுதந்திர பத்திரிகையாளர், பாஷன அபயவர்தனே. அவர், "தன் அரசுக்கு எதிராக நடக்கும் பத்திரிகையாளர் யாராக இருந்தாலும் அவர் கொல்லப்படுவார் அல்லது நாட்டைவிட்டு விரட்டப்படுவார் என்றே நிலைமையே இதுவரை தொடர்கிறது. இந்த தருணம் வரையிலும் 60 ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு விரட்டப்பட்டுள்ளனர். 2005-லிருந்து  சிங்களர்கள், தமிழர்கள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர்," என இலங்கையின் பத்திரிகை சுதந்திரமற்ற தன்மையை விளக்கினார். 

பிரபாகரன் மகன் என்பதாலே பாலச்சந்திரன் படுகொலை!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இரண்டாவது மகன் பாலச்சந்திர பிரபாகரன். பிரபாகரன் மகன் என்பதாலே கொடுமைப்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவரருகே ஐந்து பேரின் சடலமும் கைகள் கட்டப்பட்டு நிர்வாண நிலையில் இருக்கின்றன. அவரின் மெய்க்காவலர்களாக இருக்கக்கூடும் என்று இப்படத்தின் தடயவியல் நிபுணர் டெர்ரிக் பவுண்டர் (Derrick Pounder) குறிப்பிட்டுளார்.

பாலச்சந்திரனின் உடம்பில் 5 குண்டுகள் பாய்ந்துள்ளன. பாய்ந்த குண்டுகள் அனைத்தும் சில அடிகள்  தொலைவில் இருந்தே பாய்ந்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது. இதில் உடல் அளவிலான சித்திரவதைகளுக்கு சாட்சியங்கள் இல்லை என்றாலும்  'பிரபாகரன் மகன்' என்பதாலே மனதளவில் மிகவும் துன்புறுத்தப்பட்டிருக்கிறார் என்று அறியப்படுகின்றது. இக்கொலை மே 17, 2009 அன்று நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது.      

சிங்கள அரசு கணக்கின் அடிப்படையில் பிரபாகரன் இதுவரை பத்து முறைக்குமேல் இறந்துள்ளார். சேனல்-4 காட்சிப்படுத்திய இப்படத்திலும், தலை மோசமாக அடிப்பட்டு நைந்து போன நிலையில் கைக்குட்டையால் மூடப்பட்ட தலையுடன்... சிங்கள அரசு, 'இவரே  பிரபாகரன், விடுதலைப் புலிகளின் தலைவர்' என்று ஒரு உடலை காட்டியது. அதுவே  இந்த ஆவணப் படத்திலும் காட்டப்பட்டது.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவுற்றதாக சொல்லப்பட்டபோது சிங்களர்களின் கொண்டாட்ட உற்சவங்களை பார்த்தால் தெரியும் தமிழர்கள் இலங்கையில் பட்டப்பாடினை. இந்த போர் முடிவுற்ற பொழுது இந்தியாவின் சார்பாக கலந்துக்கொண்டு ராஜபக்சேவுக்கு கைக்குலுக்கிய சிவசங்கரன் மேனன் உள்ளிட்ட காட்சிகள் வரை காட்டப்பட்டது.

'2013 காமன்வெல்த் கூட்டம் இலங்கையில் நடக்கவிருக்கும் காலம் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், 40,000 அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை ஐ.நா.வும் சர்வதேசச் சமூகமும் மறந்துவிடக் கூடாது' என்று உள்ள குமுறல்களுடன் இலங்கையின் மனித உரிமை மீறல்களை சேனல்-4 தொடர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டே இருக்கும்' என்று ரத்தக்கறைகள் நெஞ்சில் பதிவதோடு முடிவு பெறுகிறது.

நீதிக்கு இன்னுமா புலப்படவில்லை தண்டிக்கப்பட்டத இக்குற்றங்கள்?


 விகடன் வெளியிட்ட இந்த கட்டுரைக்கு மக்கள் கருத்து


1. ஏ ஆர் சி - நெஞ்சத்தை பதற வைக்கக்கூடிய காட்சிகள். குழந்தைகளையும் கொன்றொழித்த அரக்கத்தனமான செயலை கண்டு மனித இனம் வெட்க்கபடத்தான் வேண்டும்.

எப்படியாயினும், மக்களின் சக்திக்கு தகுந்தாற்போல் தனது போராட்டக்களத்தை அமைத்துக்கொள்ளாத விடுதலைப்புலிகள் தான் இப்பேர்பட்ட இனவெறி தாக்குதலுக்கு முதற்காரணமானவர்கள். விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல்களில் எத்தனை உயிர்களை அந்த மண் இழந்திருக்கிறது என்பதையும் நியாய உணர்வு கொண்டவர்கள் சிந்திக்கட்டும். இருப்பினும், ஒரு அரசை நடத்துபவர்களால் பொதுமக்கள்மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதும் தண்டனைக்குறியதுமாகும்.

வன்முறையால் எதையும் சாதித்துவிடலாம் என்று என்னுபவர்களுக்கு இலங்கை அரசு மற்றும் விடுதலைப்புலிகளுக்கு இடையே நடந்த இந்த யுத்தம் ஒரு படிப்பினையாக இருக்கட்டும். அது ஒன்று மட்டும்தான் உலகிற்கு ஆறுதலான விசயமாக இருக்க முடியும்.


2.அன்பாயன் -ஜ.நா.விதியை மீறி 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை இறுதிக்கட்ட போரில் புலிகள் போரிட பயன்படுத்தினர்..என்கிற வரிகளை படித்த போது, போர் நடந்துகொண்டிருந்தபோது, தன் பணியாள்ர்களை அங்கிருந்து வெளியேறுமாறு அதிக அழுத்தம் கொடுத்தது மட்டுமல்லாது, இவ்வாறான போர் நடக்கும் பொழுது கடைபிடிக்கவேண்டிய சகல விதிகளையும் மீறிய பான்கீ மூனையும், அவர் வழிநடத்தும் ஜ.நா.வையும் தண்டிப்பது யார்? 


3. தமிழன் -அய்யா அப்துல்கலாம் அவர்களே, தமிழனாக அல்ல ஒரு சக மணிதனாக கேட்கிறேன்... இந்த ஆவணத்தை பார்த்திருப்பீர் என்று நம்பி கேட்கிறேன்.. தமிழர்களுக்கு நடந்தேறியுள்ள இந்த பேரழிவை பற்றி ஏதாவது ஒரு வார்த்தை சொல்லுங்களேன்... ராஜபக்ஷேவின் குருதி படிந்த கரங்களை உங்களது தமிழ் கரங்களால் குலுக்கிய உங்களை தான் கேட்கிறேன், வெள்ளையர்களுக்கு இருக்கும் மணிதாபிமானம் ஏன் பாரத மனித்திரு நாட்டிற்கு இல்லாது போனது என்று கேட்கிறேன்.... 

4. தமிழன் -பச்சிளங் குழந்தைகளை எப்படியெல்லாம் கொண்றிருக்கிறார்கள்... சோனியா சர்க்காரே, ராஜபக்ஷேவுடன் இவ்வளவு நெருக்கமாக பழகுகிறீர்களே, கொஞ்சம் கூடவா மணித குருதியின் வாடை, பிய்ந்து தொங்கும் சதைகளின் நாற்றம், வெள்ளெலும்பின் வீச்சம் என்று ஒன்று கூடவா உங்களின் சுவாசத்திற்கு எட்டவில்லை??? சோனியாவின் சர்க்காரே, ஈழத்தில் சிந்திய தமிழனின் ஒவ்வொரு துளி குருதிக்கும், போக்கிய ஒவ்வொரு இன்னுயிருக்கும் நீ தான் பொறுப்பு

5. சிவகுமார்  -புத்தனை வணக்கும் தேசம் கொன்று குவித்தது
புத்தனை ஈன்ற தேசம் உதவி செய்தது ......

இவர்கள் எல்லாம் பரிணாம வளர்ச்சியடைந்த மிருகங்கள் .....இது போல் ஒரு சமுதாயத்தில் வாழ்கிறோம் என்று நினைக்கும் போதே அருவருப்பாக உள்ளது ......இவ்வளவு கொடூரங்கள் நடந்த பிறகு இன்று விசாரணை வைக்கவும், தீர்மானகளுக்கு அதரவு தெரிவிக்கவும் யோசிக்கும் நாடுகளும் தலைவர்களும் மனிதர்களே அல்ல ...இலங்கையை எங்கே சீனாவோ பாகிஸ்தானோ தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுமோ என்ற எண்ணத்தில் இன்று அமெரிக்க இவ்வளவு நாட்களுக்கு பிறகு இலங்கையில் போர் குற்றங்கள் நிகழ்ததாக தீர்மானம் கொண்டு வந்துள்ளது ..... 22 நாடுகள் அதரவு தெரிவித்த பின்பும் ஏன் இந்த காங்கிரஸ் மட்டும் இன்னும் அதரவு தெரிவிக்க வில்லை ...... ஏன் எனில் பிறகு ராஜபக்சே கேட்பார் - நீங்கள் தானே எனக்கு அணைத்து உதவிகளும் செய்திர்கள் என .....நீங்கள் என்ன தீர்மானங்கள் கொண்டு வந்தாலும் அந்த கதறலும் கண்ணீரும் மரணமும் நேர்தது நேர்தது தான் ..... அந்த ஆன்மாக்கள் இந்த மனித சமுதாயத்தை என்றுமே மன்னிக்காது (என்னையும் சேர்த்துதான் - கை நீட்டும் தொலைவில் இருந்தும் எதுவும் செய்யவில்லையே அவர்களுக்கு)

தன் இனத்தை தானே அழிக்கும் இனம் மனித இனம் என்பதற்க்கு இதை விட வேறு எந்த உதாரணமும் தேவை இல்லை ..
கேவலம் ......

10 comments:

UNMAIKAL said...

click to read

..... சிசுக்களின் கோரப் படுகொலை.....

.
.

ketheeswaran said...

இவ்வளவு விடயங்கள் நடந்தும் நிரூபித்தும் ஒரு நடவடிக்கை எடுக்க முடியாதவர்கள் அரசியல் வாதியாகவோ ஏன் மனிதனாக இருக்கவோ முடியாது. அதிலும் இன்று வரை சிறு நகர்வேனும் காட்டாமல் இருக்கிறது இந்திய அரசும், அதைவிட கேவலங்கெட்ட நிலையில் இருந்த/இருக்கின்ற தமிழக அரசுகள். நாட்டில் ஏதேனும் சட்ட மாற்றமோ அல்லது வேறேனும் என்றல் கொடி பிடிக்கும் நம் தமிழர்கள் எங்கே?
தமிழனுக்கும் தமிழுக்கும் அழிவு தமிழனால் அன்றி வேறு எதினாலும் கிடையாது. இதை புரியாமல் இருப்பதே அவனது சாபக்கேடு

சின்ன பிள்ளை தனமான காரணங்களுக்கு எல்லாம் போராட்டம் நடத்தும் அமைப்புகள் எல்லாம் எங்கே ?

நமீதா குட்டபாவாடை பூட்டதட்கு எதிர்ப்பு தெரிவிக்க தெரிஞ்ச இந்து அமைப்புகள் எங்கே? அப்போ அவங்கட கணிப்பின் படி இலங்கையில் நடந்த விடயங்கள் அவளுவு பெரிதாக தெரியவில்லை போலும்.

என்ன உலகமடா? நீங்கள் எல்லாம் ஒரு தமிழன் என்று சொன்னால் நானே காரிதுப்புவேன் உங்கள் முகத்தில்.

உண்மையில் நீகள் தமிழர்களாக இருந்தால் நீங்கள் எடுக்கின்ற நடவடிக்கையில் மத்திய அரசு ஆட வேண்டும். ஒரு வாரம் தமிழகத்தில் ஆறரை கோடி பெரும் சேந்து போராட்டம் பண்ணி பாருங்கள். அவர்களுkumம் பயம் வரும். இங்குதான் ஆளுகொரு கட்சி ஆளுகொரு கொள்கையில் சண்டைபிடிக்கவே நேரம் சரியாய் இருக்கிறது. இந்த killing field பகுதி ௨ வந்தும் சீமான் , ராமதாஸ் ,வைகோ, சத்தத்தையே காணோம்.

பாவம் நேரம் இல்லை போலும் .

கள்ள அரசியல் நடத்தும் தமிழக MP,MLA விட்டு விட்டு , சாதாரண மக்களே நீங்களாகவே வீதியில் இரங்கி போராடுங்கள். மாற்றங்கள் வரும்.

எங்கள் வாழ்வும், எங்கள் வளமும், மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Yoga.S. said...

வணக்கம் சி.பி மற்றும் அனைவருக்கும்!ஒரு விடயம் குறிப்பிட வேண்டும்:போர்?!(இனஅழிப்பு)முடிந்து ஓராண்டான நிலையில் பல நாடுகளின் வற்புறுத்தலால்,ஐ.நா செயலர் அது குறித்து விசாரித்து,தனக்கு ஒரு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரியிருந்தார்.அந்த அறிக்கை வெளியானபோது அதனை மறுதலித்த சிறி-லங்கா அரசு,தானே விசாரணை நடத்துவதாகக் கூறி,ஒரு ஆணைக்குழு அமைத்தது.அந்தக் குழு இடைக்காலத்தில் அறிக்கை(பரிந்துரை)ஒன்றை முன்வைத்தது.அதனைக் கிடப்பில் போட்ட கொடுங்கோலன்,இறுதி அறிக்கைவரை இழுத்தடித்தார்!இறுதி அறிக்கையை பெரும்பாலான உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளாத போதிலும்,சில ஆக்கபூர்வமான பரிந்துரைகள்(ஆலோசனைகள்)காணப்படுவதால் அதனையும் கிடப்பில் வழமைபோல்,கடந்த காலங்களில் செய்ததுபோல் செய்து விடாதிருப்பதை உறுதி செய்யுமுகமாகவே,ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா ஒரு உறுதியான அமைதிக்காக இந்தத் தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறது.தாங்கள் நியமித்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளையே இன்னமும் உதாசீனம் செய்யலாம் என்று சிறி-லங்கா அரசு எண்ணியிருந்தபோது............................இன்னும் வரும்.

ஹேமா said...

எனக்கு இதில் என்ன அதிர்ச்சியும் அதிசயமும் என்றால் இப்படிப் பச்சை இரத்தத்தோடு காட்டியும்...இல்லை நாங்கள் இல்லை என்று அடம் பிடித்துச் சொல்ல எப்படி மனம் வருகிறது.உடுப்புகள் அழகாய்ப் போட்டுக்கொண்டு அடுத்த மனிதர்களுக்கு நடுவில் நின்று வாதாட வெட்கமாயிலையா இந்த சிவப்புச் சட்டைக்காரர்களுக்கு.சாட்சி சொல்ல கூட்டுக்கள்ளரும் !

Marc said...

இவர்களை பற்றி பேசவே வெட்கப்படுகிறேன்

கிஷோகர் said...

..........................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

என்ன பார்கிறீர்கள்? நான் இன்னமும் உயிரோடு இலங்கையில் இருக்கும் தமிழன். ஆகவே மேலே உள்ள இடைவெளிகளை நீங்களே நிரப்பிக் கொள்ளுங்கள்!

UNMAIKAL said...

.
.
எத்தனை குழந்தைகள் துப்பாக்கிகளுக்கும் கூறிய வாள்களுக்கும் இரையாகின.

எத்தனையோ ஒரு வயது , இரண்டு வயது , மூன்று வயது நான்கு வயது பிஞ்சுகள் சற்றும் இறக்கம் இன்றி படுகொலை செய்யப்பட்டனர்.

ஏன் எத்தனை பிறந்து சில மாதங்களே ஆன பிஞ்சுகள் பிச்சு ஏறியப்பட்டனர், நிறை மாத தாயின் கருவறை அறுக்கப்பட்டு சிசு வெளியில் எடுக்கப்பட்டு மரத்தில் அடித்து சிதறடிக்கப்பட்ட கோர சம்பவம் கூட ”சூரியதேவனின்” வரலாற்றில் பதிவாகியுள்ளது

பிஞ்சுகள் பலி எடுக்கப்பட்டார்கள். இதில் பல சிசுகள் ஒரு வாரம் கூட ஆகாத பிஞ்சுகள். .

இதில் மிக வேதனைக்குறிய விடையம்

இளம் கற்பிணி தாய் ஒருவரை வெட்டி கொன்றுவிட்டு அவளின் வயிற்றை கோடரியால் கொத்தி கிழித்து சிசுவை வெளியே எடுத்து அருகில் இருந்த பனை மரத்தில் அடித்து சிசுவின் தலையை சிதறடித்தார்கள் என்பதுதான்

சொடுக்கி >>>>> படுகொலைகளும் அட்டூழியங்களும் - போட்டோ, வீடியோ ஆதாரங்களுடன்... <<<<<< படியுங்கள். SEE PHOTOS , VIDEOS.


.
.

Agarathan said...

இந்தியா ஒளிர்கிறதா?
இந்தியா ஒழிகிறதா?
நன்றாகக் கேட்டுச் சொல்லுங்கள்!
சரியாகக் கேட்கவுமில்லை.
சரியாகத் தோன்றவுமில்லை.

Agarathan said...

நாட்டுக்காகவும்,
நாட்டு மக்களுக்காகவும்,
தங்கள் இன்னுயிரை கொடுப்பேன் என்று
சூளுரைத்து அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள்
தமிழக மீனவர் படுகொலை,
தமிழீழப் படுகொலை,
மூன்று தமிழருக்கு தூக்கு,
முல்லை பெரியாறு,
தண்டகாரன்யப் படுகொலை என்று
எங்கள் உயிரை எடுக்கத் தானே
திட்டமிடுகிறார்கள்?

Yoga.S. said...

கிஷோகர் IN பக்கங்கள் said...

..........................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

என்ன பார்கிறீர்கள்? நான் இன்னமும் உயிரோடு இலங்கையில் இருக்கும் தமிழன். ஆகவே மேலே உள்ள இடைவெளிகளை நீங்களே நிரப்பிக் கொள்ளுங்கள்!////குற்றமில்லை அன்பரே!நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம்.வருங்காலம் தகுந்த பதிலை உங்களுக்குத் தரும்,நம்புங்கள்!