Sunday, October 04, 2015

வீழ்த்தப்பட்ட ராஜகோபால் ராஜ்ஜியம்; காஞ்சி கொலைகள் தொடர்-9

செங்கல்பட்டின் பிரபல ரவுடி ராஜகோபால். கண்ணில் பட்டதெல்லாம் தனக்கு சொந்தமாக வேண்டும் என்ற பேராசை அவனுக்குள் ஊறிப்போன ஒன்று. ஆசை அளவிற்கு மீறினால் அழிவு நிச்சயம் என்பதற்கு உதாரணம் ராஜகோபால்!

பொக்கு என்ற சாராய வியாபாரியின் மகன்தான் ராஜகோபால். தந்தையைப் போல இவருக்கும் இரண்டு மனைவிகள். ஆரம்பத்தில் திம்மாவரம் முன்னாள் ஊராட்சி மன்ற  தலைவர் ஸ்ரீராம் என்பவரிடம் இருந்து “கொரங்கு” குமாருடன் சேர்ந்து சாராயம் வாங்கி விற்க தொடங்கினான். பின்பு கொஞ்சம் கொஞ்சமாக பேரல்களிலும் டேங்கர் லாரிகளிலும் சாராயம் கடத்தும் அளவுக்கு வியாபாரத்தை விரிவுபடுத்தினான். அப்போது தனியார் மணல் ஒப்பந்தக்காரர் ஒருவருடன் நட்பு ஏற்பட அதில் பசை பார்த்த ராஜகோபால், சாராய வியாபாரத்தை கைவிட்டுவிட்டு லாரிகள் வாங்கி திருட்டு மணல் வியாபாரத்தில் தடம்பதித்தான். 

ஏகப்பட்ட மணல் லாரிகள், ஜேசிபி இயந்திரம் என சொத்துக்கள் குவிந்தது. பாதுகாப்பு காரணத்திற்காக வழக்கம்போல் அப்போதைய ஆளும் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தான். 

லாரி ஏற்றி தாசில்தார் கொலை!

2004-ம் ஆண்டில் செங்கல்பட்டு அருகே மணப்பாக்கம் ஆற்றுப் பகுதியில் மணல் திருடும்போது நடந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கிப்போட்டது. மணப்பாக்கம் ஆற்றுப்பகுதியில் சிலர் மணல் அள்ளுவதாக தனக்கு கிடைத்த தகவலை உறுதிப்படுத்திக்கொண்ட திருக்கழுக்குன்றம் தாசில்தார் வெங்கடேசன், மாவட்ட ஆட்சியருக்கும் தகவலை தெரிவித்தார். லாரிகளை மடக்கி பிடிக்க அதிகாலையிலேயே ஆற்றுப்பகுதிக்கு சென்றார் வெங்கடேசன். தாசில்தாரை பார்த்ததும் லாரியில் மணலை ஏற்றிக் கொண்டிருந்த ராஜகோபாலின் ஆட்கள் வௌவௌத்தனர். கையும் களவுமாக அனைவரையும் பிடித்தார் வெங்கடேசன். 

தப்பிக்க நினைத்த அந்த கும்பல், அதிகாரி என்றுகூட பாராமல் முரட்டுத்தனமாக அவரை கீழே தள்ளி, லாரியை  அவர் மீது ஏற்றி இறக்கியது. சம்பவ இடத்திலேயே இறந்தார் தாசில்தார் வெங்கடேசன். தகவல் அறிந்து வந்த எஸ்.பி. சைலேந்திரபாபு, ராஜகோபால் மற்றும் வெள்ளை அன்பு ஆகிய இருவரை கைது செய்தார். தாசில்தார் ஒருவர் லாரி ஏற்றிக் கொள்ளப்பட்ட சம்பவம், தமிழகத்தையே உலுக்கிவிட்டது.

உள்ளாட்சி அராஜகம்!

ராஜகோபாலின் முதல் மனைவி மேரி என்பவர் நாடார். இவரின் பெயரை ஜெயா என மாற்றி தாழ்த்தப் பட்டவராக போலிச்சான்றிதழ் பெற்று செங்கல்பட்டு நகராட்சி தலைவராக 2006-ல் வெற்றி பெறவைத்தார். ஜெயா போலிச்சான்றிதழ் கொடுத்து பதவி வகித்ததாக செங்கல்பட்டு வர்த்தக சங்க தலைவர் சுப்ரமணி என்பவர் தொடரப்பட்ட வழக்கும் இன்றுவரை நிலுவையில் உள்ளது. 2011- உள்ளாட்சி தேர்தலில் திருமணி ஊராட்சியில் அனைத்து வார்டு உறுப்பினர்களையும் மிரட்டி அவரின் இரண்டாவது மனைவி புவனேஸ்வரியை துணைத்தலைவராக மாற்றிவிட்டார். துணைத்தலைவர் கையெழுத்து போடாததால் அரசின் மிக்சி கிரைண்டர் உட்பட எவ்வித சலுகைகளும் அப்பகுதியினருக்கு கிடைக்கவில்லை. 

அதைத் தொடர்ந்து அவரை எதிர்த்து வெற்றிபெற்ற ஆறுமுகம் ஆதரவாளர் ஒருவர் கொலை செய்யப் பட்டார். இந்த வழக்கிலும் முதல் குற்றவாளி ராஜகோபால். ராஜகோபாலின் அராஜகம் சுற்றுவட்டார தலைவர்களையும் நிம்மதி இழக்க செய்தது.

கரண்சியான புறம்போக்கு நிலங்கள்!

அரசு மருத்துவக் கல்லூரிக்கு சொந்தமான இடங்கள், அரசு சட்டக்கல்லூரிக்கு அருகில் உள்ள இடங்கள் என செங்கல்பட்டில் உள்ள முக்கிய இடங்களில் உள்ள புறம்போக்கு நிலங்கள் அனைத்தையும் ராஜகோபால்   மடக்கி விற்று வந்தான். மற்றவர்களுக்கு சொந்தமான இடங்களையும் மிரட்டி அடிமாட்டு விலைக்கு எழுதிக்கொள்வதினால் பொதுமக்களின் வெறுப்பை சம்மாதித்தான். செங்கல்பட்டு பகுதிகளில் நடக்கும் கட்டுமானப் பொருட்கள் மற்றவர்களை செய்யவிடாமல் மிரட்டி அவன் மட்டுமே செய்துவந்தான். அவனுக்கு கமிஷன் கொடுக்காமல் வீடு விற்கவோ, வாங்கவோ முடியாது.

ஊரைச் சுற்றி பகையை சம்பாதித்த ராஜகோபாலுக்கு உட்கட்சி அரசியல் பகையும் வலுத்தது. மதுராந்தகம் எம்எல்ஏ கணிதாவின் கணவரும், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு தலைவருமான சம்பத்திற்கும் ராஜகோபாலிற்கும் இடையே பகை அதிகரித்தது. இந்த நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ராஜகோபாலின் மகன் செந்தில் குமார் அதிமுகவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் பதவிக்கு விருப்பமனு தாக்கல் செய்திருந்தார். 

அதுபோல் சம்பத்தும் தனது மகனை எம்பியாக்க நினைத்தார். தன்னை சுற்றி பகை ஒருபக்கம், பலமுறை நடந்த கொலை முயற்சி சம்பவங்கள் இவற்றில் இருந்து தப்பித்து ஒடியது ஒருபக்கம் என வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. இதனால் ரவிப்பிரகாஷ், பட்டரைவாக்கம் சிவா, படப்பை குணா உள்ளிட்ட ரவுடிகளுக்கு பணத்தை கொடுத்து உயிரை காப்பாற்றிக் கொண்டிருந்தான்.


உயிரைப் பறித்த அலட்சியம்!

இந்தநிலையில் ராஜகோபாலின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறையினர் அடிக்கடி எச்சரித்தது வந்தனர். ராஜகோபால் அவரின் ஒரு எதிரியான ஆலப்பாக்கம் ஊராட்சி தலைவர் சல்குரு ஆகியோரை காவல்நிலையத்திற்கு வரவழைத்து பேச்சுவார்த்தை மூலம் சமாதானம் செய்தனர். ஆனாலும் பலமுனைகளில் இருந்து ராஜகோபாலுக்கு அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டிருந்தது. 

காவல்துறையின் எச்சரிப்பை அலட்சியப்படுத்திக் கொண்டிருந்தான். 2013 ஜனவரி 28-ம் தேதி இரவு வழக்கம் போல செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரே நின்று கொண்டிருந்தான். அப்போது காரில் வந்தவர்கள் பெட்ரோல் குண்டுகளை ராஜகோபால் மீது வீசினர். ராஜகோபாலின் இருசக்கர வாகனம் பற்றி எறிந்தது. ராஜகோபால் தப்பித்து ஓட முயல தலை சிதைக்கப்பட்டது. காட்டுத்தீயாக செய்தி பரவ வழக்கம் போல கடைகள் அடைக்கப்பட்டது. மறுநாள் முழுக்க கடைகள் அடைக்கப்பட்டு ரவுடிகளின் வசம் வந்தது செங்கல்பட்டு. அதை வேடிக்கை பார்ப்பதற்காக காவல்துறையினர் வரவழைக்கப்பட்டிருந்தனர். 

சம்பத் மீது சந்தேகம்!

மதுராந்தகம் எம்எல்ஏ கணிதாவின் கணவர் சம்பத், அதிமுகவை சேர்ந்த ஆலப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சல்குரு, திருமணி ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம், சார்லஸ், நித்யானந்தம் உட்பட 13 பேர் மீது சந்தேகம் இருப்பதாக ராஜகோபாலின் மகன் செந்தில்குமார் காவல்துறையிடம் அளித்துள்ள புகார் கொடுத்தார். புகாரில் உள்ளவர்கள் எல்லாம் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் யாரும் கைது செய்யப்படவில்லை. முன்ஜாமீன் கிடைக்கும் வரை தலைமறைவாக இருந்தனர்.

ராஜகோபாலின் கொலை ஒரு பக்கம் செங்கல்பட்டு மக்களுக்கு நி்ம்மதி ஏற்படுத்தியது என்றால் அதுவே வேறு வகையில் தொல்லையாக போய்விட்டது. போஸ்ட்மார்டம் முடித்ததும் ராஜகோபாலின் பிணத்தை குண்டூர் பகுதியில் உள்ள அவரின் வீட்டிற்கு கொண்டுவந்தனர். அன்று மாலையே பிணம் அதே வீட்டில் புதைக்கப்பட்டது. 

அனுமதியின்றி மக்கள் நெருக்கம் உள்ள நகராட்சி குடியிருப்பு பகுதியில் பிணம் புதைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை உருவாக்கியது. இதை எதிர்த்து நடவடிக்கை எடுக்க சொல்லி 3ம் தேதி அப்பகுதியினர் சாலைமறியல் செய்தனர். ஆனால் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக சொல்லி, அலட்சியம் காட்டினார்கள். குடியிருப்பு பகுதியில் பிணத்தை புதைப்பதை தடுக்க முடியாமல் அரசு அதிகாரிகள் நடுங்கினார்கள்.

சட்டம் சொல்வது என்ன?

தமிழ்நாடு முனிசிபல் சட்டம் 1920ஆம் ஆண்டு சட்டம் 279 பிரிவின் படி ஒரு தனிநபரை இடுகாடு, சுடுகாடு இல்லாத நகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் புதைக்கக் கூடாது. அவரின் சொந்த நிலத்திலோ அல்லது வோறொருவரின் பராமரிப்பில் உள்ள இடத்திலோ புதைப்பதாக இருந்தால் முனிசிபல் கவுன்சில் ஒப்புதலுடன்தான் புதைக்க வேண்டும்.

அப்படி புதைக்க வேண்டிய இடத்தின் வரைபடத்தையும், இடத்தின் நான்கு புற ஜக்குபந்தியையும், நிலத்தின் உரிமையாளர் பெயரையும் குறிப்பிட்டு அனுமதி வாங்கியிருக்க வேண்டும். முனிசிபல் கவுன்சில் அனுமதி வாங்காமல் மக்கள் வசிக்கும் பகுதியில் புதைத்திருப்பது சட்டப்படி குற்றம். அதிகாரிகள் பொதுநலன் இன்றி செயல்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

போக்கிரி பட்டியலில் முதல் இடத்தில் உள்ள ரவுடி ராஜகோபால் மீது மூன்று கொலை, 9 அடிதடி உட்பட பல வழக்குகள் உட்பட நிறைய புகார்களும்  பதியப்பட்டுள்ளன. எந்த ஒரு ரவுடிக்கும் ஏதாவது ஒரு நல்ல பழக்கமோ, அல்லது தன்னைச் சார்ந்தவர்களிடமாவது ஒரு நல்ல பெயர் இருக்கும். ஆனால் ராஜகோபால் வாழ்க்கை பக்கங்கள் முழுவதுமே சுயநலம் மிக்கதாகவே இருந்தது. ராஜகோபால் வீழ்த்தப்பட்டபோது, நரகாசூரன் வீழ்த்தப்பட்டது போலவே உணர்ந்தனர் செங்கல்பட்டு மக்கள். மண் மண் என மண்ணின் மீது ஆசை கொண்டு பல அக்கிரமங்களை செய்த ராஜகோபால் அந்த மண்ணிலேயே வெட்டி வீழ்த்தப்பட்டான்!

அரிவாள் பேசும்…

-பா.ஜெயவேல்

thanx-vigatan

0 comments: