Sunday, October 04, 2015

பங்கு கொடுத்தால் பங்காளி, இல்லையென்றால் ஆள் காலி! - (காஞ்சி கொலைகள்: தொடர்- 8)

ஏன் இந்த கொலைகள்!
காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை அரசியல் கொலைகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. அரசியல் போட்டி, தொழில் போட்டி, அதீத வன்மம், பேராசை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றுதான் ஒருவரின் உயிரை எடுக்கும் துணிவை கொடுக்கின்றது! 

மண்ணாசை 

காஞ்சிபுரம் மாவட்டங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் வந்த பிறகு, தொழிற்சாலைகள் பெருகத் தொடங்கின. முப்போகம் கண்ட விவசாய நிலங்கள் எல்லாம், வண்ண வண்ண கல்லும், கொடியும் நட்டு கான்கிரீட் காடுகளாக மாறத்தொடங்கியது. வேலையில்லாமல் சுற்றித் திரிந்தவர்கள் கைகளில் ரியல் எஸ்டேட் பிரதிகள் ஆக்கிரமித்துக் கொண்டன. ‘இப்பதான் பேப்பர் வாங்கி வந்திருக்கின்றேன். ரெண்டு சிட்டிங் முடிந்துவிட்டது. பைனல் சிட்டிங்கில் பார்ட்டி ஓகே பண்ணிடும்… ரிஜிஸ்ட்ரேஷன் முடிந்ததும், லம்ப்பா ஒரு அமௌண்ட் கிடைச்சிடும்’ என கண்ணில் தென்படுபவர்களிடமெல்லாம் சொல்லித்திரியும் சாமான்ய மனிதர்களின் கனவுப்பட்டறையாக ரியல் எஸ்டேட் வளர்ந்தது. 

அற்ப கனவுகளோடு சுற்றித்திரிபவர்களின் எதிரில் இருப்பவர்களின் கையிலும், அதே இடத்தின் வரைபடம்தான் இருக்கும். சாமான்யன்கள் எல்லோரும் தொழிலில் இறங்கினாலும், பணமும், அதிகாரமும் ஒருங்கே பெற்றவனால்தான் தொழிலில் தடம் பதிக்க முடியும். அதற்கு உள்ளாட்சி பதவி முக்கியம். கண்ணில் பட்ட புறம்போக்கு நிலங்களையெல்லாம் ஆக்கிரமித்து, விற்பனை செய்ய ஆரம்பித்தனர்.

எதிர் தரப்பினருக்கு பங்கு கொடுத்தால் பங்காளி. இல்லையென்றால் ஆள் காலி.  அதுபோல், பன்னாட்டு நிறுவனங்களுக்கு தேவையான மணல், செங்கல், ஜல்லி, சவுடு மண் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை சப்ளை செய்பவர்கள், சில வருடங்களில் கோடீஸ்வரர்களாக மாறத் தொடங்கினார்கள். நேற்றுவரை தன்னுடன் ஓசி டீ குடித்துக் கொண்டிருந்தவன், ஒருநாள்  பளபள காரில் வந்து இறங்கினால் எப்படி இருக்கும். பணத்தின் மீது ஏற்படும் மோகம் கையில் ஆயுதத்தை திணித்துவிடும். 

பதவி 

எந்த ஒரு காரியத்தை செய்வதற்கும் அதிகாரம் தேவை. அந்த அதிகாரத்தை கொடுப்பது பதவி. எண்ணதான் பணம் இருந்தாலும், பதவி இருப்பவர்களுக்கே மரியாதையும், மாலையும் கிடைக்கும். பணத்தை விட பதவிதான் உயர்ந்தது என்பது அதிகார வர்க்கங்களுக்கு தெரியும். தன் பதவிக்கு போட்டியாக இருக்கும் நபரை தகர்த்தால் மட்டுமே இலக்கை அடையமுடியும் என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள்.

உள்ளாட்சி பதவிதான், ஒருவரை மந்திரி பதவி வரை உயர்த்தும் என்பது அரசியலின் ஆரம்ப காலத்தில் இருப்பவருக்கே தெரிந்த ரகசியம். எதிர்க்கட்சி எதிரிகள், சொந்தக்கட்சி எதிரிகள் என யாராக இருந்தாலும் தனது பதவிக்கு போட்டி என்று வந்துவிட்டால் கணக்கு தீர்த்தால் மட்டுமே இலக்கை அடைய முடியும். பதவியின் மீது ஏற்படும் மோகமும் கொலைக்கு முக்கிய காரணம். தாமும் செல்வந்தனாக வலம் வர வேண்டும் என்றால், ஒன்று மிரட்டி பணம் பறிக்க வேண்டும், இல்லையென்றால் அவருக்கு போட்டியாக இருக்கக் கூடிய ஆட்களிடம் பேரம் பேசி கதையை முடிக்க வேண்டும்.

குவியும் கூலிப்படை 

மதுரை, தூத்துக்குடி போன்ற ஏரியாக்களில் இருந்து வரும் கூலிப்படையினர்தான் பெரும்பாலான அரசியல் கொலைகளை செய்கின்றனர். கண்ணிமைக்கும் நேரத்தில்  அரங்கேறும் இந்த கொலைகளுக்கு, மாதக்கணக்கில் வேவு பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். தினசரி பழக்க வழக்கங்களை நோட்டமிடுவார்கள். எத்தனை மணிக்கு எழுவார்… யாரையெல்லாம் சந்திக்க செல்வார்… எப்போது தனியாக இருப்பார், எந்த விஷயத்தில் அவர் வீக் என்பது உள்ளிட்ட டேட்டாக்களை சேகரித்த பின்புதான் கொலைத்திட்டம் ரெடியாகும். 

ஒரு பெரிய படையோடு தெருவில் ஆங்காங்கே தனித்தனியாக நின்றிருப்பார்கள். இறையைத்தேடும் புலியின் வேகத்தில் அந்த நபர் வேட்டையாடப்படுவார். நிறுத்தி வைக்கப்பட்ட கூலிப்படையினரெல்லாம் தேவைப்பட்டால் மட்டுமே களத்தில இறங்க வேண்டும். எத்தனை ஆட்கள் நேரடியாக சம்பவத்தில் ஈடுபடுகின்றார்களோ, அதற்கு ஈடாக வேறுநபர்களை சில மணி நேரங்களில் விழுப்புரம், கடலூர், எழும்பூர், திருவள்ளூர் போன்ற ஏதாவது வெளிமாவட்ட நீதிமன்றங்களில் சரண் அடைவார்கள். அரசியல் பின்னணி உள்ள வழக்கு என்பதால் வழக்கும் கொஞ்ச நாளில் வழுவழுக்கும். இவர்கள் ஜாமீனில் வெளிவந்தால் எரியா மீண்டும் பரபரப்பு ஆகிவிடும். 

உளவுத்துறை செய்வது என்ன?

சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள முக்கிய ரவுடிகளின் உறைவிடம் காஞ்சிபுரம் மாவட்டம். வேலை இல்லாத நேரங்களில்  லோக்கல் புள்ளிகளிடம் அசைன்மென்ட்களை வாங்கிக்கொள்வார்கள். இதனால் கொலை செய்த நபர்களை பிடிப்பதில் காவல்துறையினர் குழம்பிப் போய்விடுவார்கள். குற்றவாளிகள் மீது உளவுத்துறையின் கண்காணிப்பு குறைந்து வருவதும் கொலைகளுக்கு காரணம். 

இதுவரை நடந்த கொலைகளில் பெரும்பாலான கொலைகள் உளவுத்துறைக்கு தெரிந்ததுதான். ஒரு சில அதிகாரிகள்,  கொலைசெய்யப்படும் நபருக்கு யார் மூலம் அச்சுறுத்தல் இருக்கின்றது என எச்சரித்து, அவர்களிடம் இருந்து பெரும் தொகையை கறந்துவிடுகின்றார்கள். இருதரப்பினரையும் அழைத்து கட்டப்பஞ்சாயத்து செய்வது காவல்நிலையங்களில் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. சரியான காரணத்தை உளவுத்துறை,  மேலிடங்களுக்கு தெரிவிப்பதில்லை.

ஸ்பெஷல் டீம்

குற்றங்களை குறைக்கும் நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்டது ஸ்பெஷல் டீம். ஆனால் அந்த டீமில் இருப்பவர்கள் குற்றங்கள் நடக்கும் இடங்களில் மாமூல் வாங்கியும், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டும் வருகின்றனர். இதனால் குற்றங்கள் குறைவதே இல்லை. மணல் குவாரிகளில் பஞ்சாயத்து செய்வது, ரியல் எஸ்டேட் தகராறு தீர்ப்பது எல்லாமே இவர்கள்தான். மாவட்டத்தில் உள்ள இன்ஸ்பெக்டர்கள் பெரும்பாலும் ரவுடிகளிடம் கட்டப்பஞ்சாயத்து செய்வதும், குற்றவாளிகளிடம் கைகோர்த்துக் கொண்டு மாமூல் பெறுவதிலுமே குறியாக இருக்கின்றனர். 

அரசியல் அடைக்கலம்.

சமூக விரோதிகளின் கூடாரம் அரசியல். குற்றவாளிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், பணம் சம்பாதிக்கவும், சம்பாதித்த பணத்தை பாதுகாக்கவும்  அரசியலில் நுழைந்து எதாவது ஒரு பதவியை கைப்பற்றிக் கொள்கின்றார்கள்.  அப்படிப்பட்ட  ரவுடிகள் ஒவ்வொருவரும் கொல்லப்படும் போது உள்ளாட்சி பிரமுகர்கள் கொல்லப்படுவது போன்று  செய்திகள் வெளியாகின்றன.

கட்சிகளும் அவர்களுக்கு ஆதரவாக போராடுகின்றன. அரசியல் கட்சியில் இருக்கும் ஒரு நபரின் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்தால், அரசியல் ரீதியாக குற்றவாளிகள் அதை எதிர்கொள்கின்றார்கள். ஆளும் கட்சி குற்றவாளிகளை கைது செய்யவோ, அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கவோ காவல்துறையினரால் சுதந்திரமாக செயல்பட முடியாது. நேர்மையாக நடக்க நினைக்கும் அதிகாரிகளும், அரசியல் அதிகார வரம்பிற்கு கட்டுப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

காவலர்கள் பற்றாக்குறை!

குற்றவாளிகள் பெரும்பாலும் நவீன யுகத்திற்கு மாறிவிட்டனர்.  காவல்துறையும் அதற்கு ஒரு படி மேல் இருந்தால்தான் மட்டுமே குற்றவாளிகளை பிடிக்க முடியும் என்ற நிலை வந்துவிட்டது. ஆனால் மாவட்டம் முழுவதிலும் காவல் நிலையங்களில் காவலர்கள் பற்றாக்குறைகள் இருக்கின்றது. போதிய தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தும் அளவிற்கு காவல்துறையினருக்கு பயிற்சிகள் அளிக்கப்படுவதில்லை. காவல் துறையில் உள்ள கருப்பு ஆடுகளையும் களையெடுத்தால்தான் ஓரளவாவது குற்றங்களை கட்டுப்படுத்த முடியும்.

-பா.ஜெயவேல்

thanx-vigatan

0 comments: