Saturday, October 03, 2015

காஞ்சி கொலைகள்: விறுவிறு க்ரைம் ஸ்டோரி! (மினி தொடர்: பகுதி 5)

2012ம் ஆண்டில் செங்கல்பட்டு நகராட்சி துணைத்தலைவர் ரவிப்பிரகாஷ் (திமுக), செங்கல்பட்டு  கவுன்சிலர் சுரேஷ் (தேமுதிக), தேமுதிக மாவட்ட பிரதிநிதி கண்ணதாசன், மண்ணிவாக்கம் ஊராட்சி தலைவர் புருஷோத்தமன் (அதிமுக), மறைமலைநகர் ஒன்றிய கவுன்சிலர் வேலு (அதிமுக), பி.வி. களத்தூர் ஊராட்சி தலைவர் விஜயகுமார் (திமுக), ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய தலைவர் பிபிஜி குமரன் (அதிமுக), சேத்துப்பட்டு ஊராட்சி தலைவர் சங்கர்(திமுக), பிவி களத்தூர் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் குப்பன்(அதிமுக), பிவி களத்தூர் ஒன்றிய இளம் பாசறை தலைவர் நித்யானந்தம் (அதிமுக), கூலிப்படைகளால் ரத்தமும் சதையுமாக சிதைக்கப்பட்டனர். 


அரசியல் போட்டியின் காரணமாகத்தான் இந்த படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. அடுத்து இவர்களை கொன்றவர்களுக்கு நிம்மதி இருக்குமா? இவர்களை கொன்றவர்களில் யார் வேண்டுமானாலும், எப்போதும் வேண்டுமானாலும் கொல்லப்படலாம் என்பதுதான் 2013ம் ஆண்டின் 'பய' நிலவரம். உள்ளாட்சி பிரமுகர்களின் தலைக்கு கியாரண்டி கிடையாது. அரசியல் கொலைகளை கட்டுப்படுத்த முடியாமல் போனதால், ஒருகட்டத்தில் 'சர்ச்சைக்குரிய உள்ளூர் அரசியல் பிரமுகர்களை தேவையில்லாமல் அதிகமாக வெளியில் வரவேண்டாம்' என எச்சரித்தது காவல்துறை. இவர்களில் சிலர் தங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வேண்டும் எனக் கூறி காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. மனோகரனிடம் மனு கொடுத்தனர். கொலைகளை விட வதந்திகள் அதிகம் பரவத் தொடங்கியது. காவல்தெய்வமான காவல்துறை!இதனால் அ.தி.மு.க.வை சேர்ந்த மறைமலைநகர் நகராட்சி தலைவர் கோபிகண்ணனுக்கும், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழுத்தலைவரும், மதுராந்தகம் எம்.எல்.ஏ கனிதாவின் கணவருமான சம்பத்குமாருக்கும்  துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அதுபோல் பா.ம.க.வை சேர்ந்த இளந்தோப்பு வாசுவுக்கும் , தேமுதிக மாவட்ட பிரதிநிதி வல்லம் கண்ணதாசன் என்பவருக்கும் காவல்துறையினரால் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அவர்களின் வீடுகளுக்கு சென்று இரவுபகலாக கையெழுத்துப் போட்டு வந்தனர் காவல்துறையினர். ஆனாலும் காவல்துறையினரின் வேலியைத்தாண்டி வேட்டையாடப்பட்டார் கண்ணதாசன். கண்ணதாசன் இறப்பதற்கு இரண்டுநாட்களுக்கு முன்புதான், செங்கல்பட்டு தேமுதிக எம்.எல்.ஏ. அனகை முருகேசனுடன் சென்று காஞ்சிபுரம் எஸ்.பி. மனோகரனை சந்தித்தார். தனக்கு கொலைமிரட்டல் வருகின்றது எனக் கூறி, பாதுகாப்பு அளிக்கும்படி மனு கொடுத்தார். எஸ்.பி.யும் அவருக்கு பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்தார். கண்ணதாசன் கொலை செய்யப்பட்டபோது, எஸ்.பி மனோகரன் 100 அடி தொலைவில் ரோந்து பணியில் இருந்தார். கண்ணதாசன் கொலைக்கு பின்பு, எஸ்.பி. மனோகரன் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று எம்எல்ஏ முருகேசன் கொதித்தார்.

சுயபாதுகாப்பு வேலி…


ஒருசில தலைவர்கள் காவல்துறையினரை நம்பாமல் தங்களுக்குத்தானே பாதுகாப்பு வேலி போட்டுக் கொண்டனர். ஆலப்பாக்கம் ஊராட்சி தலைவர் சல்குரு தனது வீடு மற்றும் அலுவலகங்களுக்கு கண்காணிப்பு கேமராக்களை நிறுவிக்கொண்டார். பொது நிகழ்வுகளில் தலைகாட்டுவது அரிதாகிவிட்டது. அதுபோல மதுராந்தகம் எம்எல்ஏ கனிதாவின் கணவர் சம்பத்குமாருக்கு இன்றளவும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகின்றது. பொதுநிகழ்வுகளில் கலந்து கொள்ளும் போது, அவர் வருவதற்கு முன்பே தனது ஆட்களை பாதுகாப்பிற்கு நிறுத்திவிடுகின்றார். இன்றளவிலும் அவர் வரும் போது இந்த பாதுகாப்பு படை காவல் நிற்கும். வீட்டில் சந்திக்க வருபவர்கள்கூட முழு பரிசோதனைக்குப்பின்புதான் அனுமதிக்கப்படுகின்றார்கள். எம்எல்ஏ கனிதாவை சந்திக்க வரும் அரசு அலுவலர்களைக்கூட சந்தேகக் கண்ணோடுதான் பாதுகாப்பு படை அனுமதிக்கின்றது. இதனால் கனிதாவின் வீட்டிற்கு செல்லும் அரசு அலுவலர்கள் அதிருப்தி அடைந்திருக்கின்றார்கள்.

எடுபடாத எம்எல்ஏ கோரிக்கை!


2013ல் நடந்த மானியக் கோரிக்கையின்போது பேசிய செங்கல்பட்டு தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ அனகை. முருகேசன், " செங்கல்பட்டு நகரம் கொலைநகரமாக இருக்கின்றது. மக்கள் வெளிவரவே அச்சப்படுகின்றார் கள். அரசியல் கொலைகள் அதிகமாக இந்தப் பகுதியில்தான் நடக்கின்றது. காவல்துறையினர் சரியாக நடவடிக்கை எடுப்பதில்லை. போலி குற்றவாளிகள் நீதிமன்றங்களில் சரண் அடைகின்றார்களே தவிர, காவல்துறையினர் இதுவரை நேரடியாக குற்றவாளிகளை பிடித்ததில்லை. காஞ்சிபுரத்தில் மாவட்ட காவல்துறை தலைமையகம் செயல்படுவதை போன்று, செங்கல்பட்டிலும் காவல்துறை அதிகாரியை கொண்டு ஒரு அலுவலகம் செயல்பட வேண்டும். அதுபோல் குற்றப்பின்னணியில் உள்ளவர்கள்தான் பெரும்பாலும் உள்ளாட்சி பிரமுகர்களாக இருக்கின்றனர். ரியல் எஸ்டேட் தகறாறு, மணல் எடுப்பது, கட்டுமானப்பணி இப்படி ஏதாவது ஒன்றுதான் கொலைகளுக்கான பின்னணியாக இருக்ககின்றது. குற்றப் பின்னணி கொண்டவர்கள் அரசியலுக்கு வருவதை தடுக்க வேண்டும். காவல்துறையின் மெத்தனத்தால் கொலைகள் அதிகரிக்கின்றதே தவிர குறைவதில்லை ” என்று கூறினார். ஆனாலும் பதட்டம் நீடித்தது.டாப் ஒன் க்ரைம் ரேட்2006-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி குற்ற எண்ணிக்கையில் மூன்றாம் இடத்தில் இருந்தது காஞ்சிபுரம் மாவட்டம். 2007-ம் ஆண்டு அனைத்து மாவட்டங்களையும் பின்னுக்கு தள்ளி 531.92 புள்ளிகளோடு முதல் இடத்தை பிடித்தது. (புள்ளிகள் என்பது ஒருலட்சம் மக்கள் தொகைக்கு நடந்த குற்றங்களின் எண்ணிக்கையை வைத்து கணக்கிடப்படுகின்றது.) 2008ம் ஆண்டு 504.94 புள்ளிகளோடு முதல் இடத்தை மீண்டும் தக்க வைத்துக் கொண்டது. அதைத் தொடர்ந்து. 2012ம் ஆண்டுகளிலும் நடந்த அரசியல் கொலைகளால் தமிழகத்தை திரும்பி பார்க்கச் செய்தது காஞ்சிபுரம் மாவட்டம். அதுமுதல் குற்ற எண்ணிக்கையை விட அரசியல் கொலைகள்தான் பரபரப்பாக பேசப்பட்டன.தோல்வியில் முடிந்த என்கவுண்ட்டர்

குற்றங்களை குறைக்க என்கவுண்ட்டர்தான் சரியான தீர்வு என்று காவல்துறை வட்டாரம் தீர்மானித்தது. இந்த நிலையில் செங்கல்பட்டு தேமுதிக பிரமுகர் கண்ணதாசன் கொலைவழக்கில், சார்லஸ் மற்றும் சந்தோஷ் என்ற இருவரை செங்கல்பட்டு நகர காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், பழவேலி சுடுகாட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். 


அவர்களை என்கவுண்ட்டர் செய்வதுதான் பாஸ்கரனின் திட்டம். சார்லஸ் துப்பாக்கியால் சுடப்பட்டான். தொடையில் காயங்களுடன் சார்லசும், தனது கையை கீறிக்கொண்ட பாஸ்கரனும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

என்ன செய்தார் எஸ்.பி. மனோகரன்?காவல்துறையினர் மீது நம்பிக்கை வரவேண்டும் என்று எஸ்.பி. மனோகரன் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். செங்கல்பட்டு நகரம் முழுக்க வாரம் ஒரு முறை காவல்துறையினரின் அணிவகுப்பு நடந்தது. வரிசைவரிசையாக சைரன் சத்தத்தை எழுப்பிக்கொண்டு காவல்துறையினரின் வாகனங்கள் தெருக்களில் அணிவகுக்க தொடங்கின. செங்கல்பட்டு நகரத்திற்கு வரும் நுழைவுகளில் எல்லாம் காவல்துறையினர் சாலைகளில் தடுப்புகளையும், சோதனைச்சாவடிகளையும் அமைத்தனர். வெளி மாவட்டங்களில் இருந்து வரும் கார்கள் பரிசோதனை செய்யப்பட்டன.

அதுபோல் அரசியல் புள்ளிகள் மீது வரும் சின்ன சின்ன விரோதங்களை வளரவிடாமல், இருதரப்பினரை யும் காவல்நிலையத்திற்கு அழைந்து  சமரசம் செய்து வைத்தார் எஸ்.பி. மனோகரன். 


ஆனாலும் சிலர் பஞ்சாயத்தில் தலையை ஆட்டிவிட்டு, வெளியில் காய்நகர்த்த ஆரம்பித்தனர். மாவட்டம் முழுவதும் 100 க்கும் மேற்பட்டவர்கள் தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டனர்.  செங்கல்பட்டு பகுதியில் மட்டும் ஏழு பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். ஒரு வழியாக குற்றங்கள் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டாலும் இன்றளவும் பதட்டம் தணியவில்லை.கொலை என்பது ஒரு தனிநபரையோ அல்லது அவர்களை சார்ந்தவர்களையோதான் நிம்மதி இழக்க செய்யும். ஆனால் இன்றளவும் ஒரு ஊரில் நடந்த கொலைகளும், வன்முறையும் அந்த ஊரையே நிம்மதி இழக்க செய்துள்ளது. கொலையும் வன்முறையும் பின்னிப் பிணைந்த அந்த ஊர் ஜாதகத்தோடு அடுத்து சந்திப்போம்.அருவா சீவும்…                                                                                                                                                                            - பா.ஜெயவேல்

thanx-vigadan

0 comments: