Wednesday, July 01, 2015

பாகுபலி’ -கிராஃபிக்ஸ் மேற்பார்வை கலைஞரான ஸ்ரீனிவாஸ் மோகன் நேர்காணல்

‘பாகுபலி’ படத்தில் இயக்குநர் ராஜமெளலியின் எண்ணங்களுக்கு கிராஃபிக்ஸ் காட்சிகளால் உயிர் கொடுத்திருப்பவர் அப்படத்தின் கிராஃபிக்ஸ் மேற்பார்வை கலைஞரான ஸ்ரீனிவாஸ் மோகன். ‘சிவாஜி’, ‘எந்திரன்’, ‘ஐ’ என ஷங்கருடன் பணியாற்றிவிட்டு, இப்போது இயக்குநர் ராஜமெளலியுடன் அவர் கைகோத்திருக்கிறார். ‘பாகுபலி’யின் இறுதிகட்டப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த அவரிடம் பேசினோம்.
இயக்குநர் ராஜமெளலியுடன் உங்களுக்கு எப்படி அறிமுகம் கிடைத்தது?
இயக்குநர் ராஜமெளலியோடு நான் பணியாற்றிய முதல் படம் ‘நான் ஈ’. அப்படத்தின் இறுதி காட்சியில் வரும் கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கு நான் உதவி செய்தேன். அப்போதுதான் எங்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
மூன்று வருடங்களுக்கு முன்பு அவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் பெரிய அளவில் ஒரு படத்தை செய்யப்போவதாக கூறினார். அந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியாக என்னிடம் விளக்கினார். அப்போதுதான் இப்படத்தை எவ்வளவு பெரிதாக உருவாக்க அவர் எண்ணியிருக்கிறார் என்பதை தெரிந்துகொண்டேன். எனக்கும் ஒரு ப்ரீயட் படம் பண்ண வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்தது. அதனால் ஒப்புக்கொண்டேன். என்னுடைய ஆசை இந்தப் படம் மூலம் நிறைவேறி இருக்கிறது.
‘பாகுபலி’யில் கிராஃபிக்ஸ் காட்சிகள் எந்த அளவுக்கு இருக்கும்?
இப்படத்தின் காட்சிகளில் இந்திய சினிமாவில் இதுவரை நீங்கள் பார்க்காத பிரம்மாண்டம் இருக்கும். இப்படத்தில் நீங்கள் பார்க்கும் பல பிரமாண்டமான காட்சிகளில், நடிகர்கள் நின்று பேசுவது மட்டும்தான் உண்மையானது, அதற்கு மேல் இருக்கும் அத்தனை விஷயங்களும் கிராஃபிக்ஸ் உறுதுணையுடன் உருவாக்கப்பட்டவைதான். அதே நேரத்தில் கிராஃபிக்ஸ் எது, செட் எது என்று உங்களால் கண்டுபிடிக்க முடியாது.
ஷங்கர் - ராஜமெளலி இருவரையும் ஒப்பிடுங்கள்...
ராஜமெளலியின் மிகப்பெரிய பலம் அவருடைய பெரிய அளவிலான எண்ணம். அந்த எண்ணத்தில் என்ன இருக்கிறதோ, அது அப்படியே திரையில் வரும் வரை விடமாட்டார். ஷங்கர் சார், ராஜமெளலி சார் இருவரிடமும் நான் பணியாற்றி இருக்கிறேன் என்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. இருவருடைய படங்களின் பிரம்மாண்டமும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. ஆனால், உருவாக்கும் விதத்தில் மட்டும்தான் வேறுபாடு இருக்கும்.
கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தில் இந்திய சினிமா தற்போது எந்த நிலையில் இருக்கிறது?
படத்தை உருவாக்குவதில் 24 கலைகள் இருக்கிறது. அதில் இப்போது கிராஃபிக்ஸ் தொழில்நுட்பமும் இணைந்துவிட்டது. கிராஃபிக்ஸ் காட்சிகள் இல்லாமல் இனி படமெடுக்க முடியாது என்ற நிலை வந்துவிட்டது. ஒரு படத்துக்கு இசை எப்படி முக்கியமோ, அதேபோலத்தான் கிராபிக்ஸும் முக்கியம் என்ற நிலை வந்துவிட்டது. இன்னும் 5 வருடங்களில் கிராஃபிக்ஸ் காட்சிகளை முன்னிலைப்படுத்தி ஆங்கிலப் படங்கள் வருவது போல இங்கேயும் படங்கள் வரும். ‘மஹாதீரா’, ‘எந்திரன்’, ‘பாகுபலி’, ‘ஐ’ போன்ற படங்கள் மூலம் இயக்குநர்களுக்கு கிராஃபிக்ஸ் பற்றிய விழிப்புணர்வு கிடைத்திருக்கிறது.
நாமும் இந்த மாதிரி படங்கள் பண்ணலாம் என்று அவர்கள் முன்வருவார்கள். இந்த மாதிரியான பிரம்மாண்ட படங்கள் வரும் போதுதான், மக்களுக்கும் திரையரங்குக்கு வந்து படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். ‘பாகுபலி’ படத்தில் உள்ள காட்சிகளை எல்லாம் நீங்கள் கிராஃபிக்ஸ் இல்லாமல் எடுக்கலாம். ஆனால் அதற்கு அதிக பணம் செலவாகும். கிராஃபிக்ஸ் என்று வந்துவிட்டால் பணம் கம்மி. அவ்வளவு தான்.
உங்களுக்கு படம் இயக்கும் எண்ணம் இருக்கிறதா?
இப்போதைக்கு இல்லை. படம் பண்ணுவதற்கு நிறைய இயக்குநர்கள் இருக்கிறார்கள். ஆனால் கிராஃபிக்ஸ் காட்சிகளை உருவாக்க குறைவான ஆட்களே இருக்கிறார்கள். கிராஃபிக்ஸ் காட்சிகளில் பணியாற்ற நிறைய ஆட்கள் வரும்போது நான் படம் இயக்கலாம். இப்போது என்னுடைய எண்ணத்தில் படம் இயக்கும் திட்டம் எதுவும் இல்லை.
எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் தனியாக ஒரு கிராஃபிக்ஸ் படிப்பு ஆரம்பிக்க வேண்டும் என கேட்டார்கள். இதைத் தொடர்ந்து நான் உருவாக்கி கொடுத்த படிப்புக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. இந்தியாவிலேயே எந்த ஒரு அரசும் இந்த மாதிரி கிராஃபிக்ஸ் படிப்புக்கு ஒப்புதல் அளித்ததில்லை. 3 வருட படிப்பில் இப்போது இரண்டாவது ஆண்டாக மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள்.
உங்கள் வேலைப் பளுவுக்கு நடுவில் குடும்பத்தை கவனிக்க நேரம் கிடைக்கிறதா?
கடந்த 3 வருடங்களாக ஹைதராபாத்தில் இருக்க வேண்டிய சூழல். இதனால் என்னுடைய மனைவி மற்றும் மகன் இருவரையுமே ரொம்ப மிஸ் பண்றேன். அவர்களுடன் நேரம் செலவழிக்க முடியவில்லையே என்று நினைத்து வருந்துவேன். ஆனால் வேலைதானே முக்கியம். ‘பாகுபலி’ வெளியானவுடன் கொஞ்ச நாள் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க திட்டமிட்டு இருக்கிறேன்.
ஸ்ரீனிவாஸ் மோகன்


நன்றி - த இந்து


0 comments: