Saturday, September 01, 2012

நாடக தினம் -அசோகமித்திரன் - சிறுகதை,

சண்முக சுந்தரம் அதிகாலையிலேயே எழுந்து முகச்சவரம் செய்துகொண்டார்.குளித்து உலர்ந்த வேட்டியை உடுத்திக் கொண்டு சுவரில் மாட்டியிருந்தமுருகன் படம் முன்பு நின்று பிரார்த்தனை செய்தார். அன்று அவருடைய புதுநாடகம் எட்டாம்முறை சென்னையில் நடக்கவிருந்தது. ஏழுமுறை நல்லபடியாக நடந்து முடிந்ததுபோல இதுவும் நடந்து முடியக் கடவுளை வேண்டிக்கொண்டார். தலையில் எங்கோ ஒரு மூலையில் சுளீரென்று ஒரு வலி தோன்றி மறைந்தது.

“அண்ணே, அந்தப் பொண்ணு நம்மை ஒழிச்சுடப் போறாண்ணே” என்று சிங்காரம் கவலையோடு ஓடிவந்து சொன்னார். சிங்காரம் அந்த நாடகக் குழுவின் தையற்காரர்.

“யாரு? என்னப்பா சொல்லறே?”

“நீங்க தலைமேலே தூக்கி வைச்சுண்டீங்களே, அந்த ஹீரோயினிதான்.”

“ஏன், என்னாச்சு?”

“அந்த வழியா வந்த என்னைச் செண்பகத்தோட அம்மா கூப்பிட்டு இன்னிக்குப்
பொண்ணு நாடகத்துக்கு வராதுன்னு சொல்லச் சொன்னா.”

“என்ன? என்ன?”

“ஆமாங்க. இன்னிக்கு அது வராதாம்.”

சண்முக சுந்தரத்துக்கு இன்னும் விஷயம் விளங்கவில்லை. அந்த நாடகத்தின் கதாநாயகி செண்பகந்தான். ஆட்டத்துக்கு ஆட்டம் அவள் நன்றாகவே செய்தாள்  என்று ஊரெல்லாம் நல்ல பெயர். பழைய நடிகைகளுக்கே நாடகத்துக்கு இருபது  ரூபாய் கொடுத்தபோது இந்தப் பெண்ணுக்கு முப்பது ரூபாய் என்ன ஆயிற்று?

“ஏன், அம்மை, கிம்மை ஏதாவது போட்டிருக்கா?” அப்போது ஊரெல்லாம் அம்மையாக இருந்தது.

“இல்லீங்க. நன்னாக் கொழக்கட்டையாகத்தான் இருக்கு. தாய்க்காரி ஒண்ணுமே சொல்லமாட்டேங்கறா.”

சண்முக சுந்தரம் ஒரு கணம் திகைத்து நின்றார். சிங்காரத்திடம், “உடனே வேலுவை வரச்சொல்லு” என்றார். வேலு அவருக்கு வழக்கமாக வரும் ரிக்ஷாக்காரன்.ரிக்ஷா வந்துவிட்டது. சண்முக சுந்தரம் சிங்காரத்தைக் கேட்டார், “நீயும் வரயா?”

“வேண்டாங்க. பிடிவாதமா வரமாட்டேன்னு சொல்லிடும். நீங்க தனியாப் போய்ச் சத்தம் போட்டுட்டு வாங்க.”

நாலு சந்து தாண்டிச் செண்பகத்தின் வீடு. நடந்தே போய்விடலாம்.  ஆனால் வீட்டு வாசலில் வண்டி நின்றால்தான் அந்தப் பெண்பிள்ளைகள் மதிப்பார்கள்.

இவ்வளவு சீக்கிரமாக அவரைச் செண்பகத்தின் அம்மா எதிர்பார்க்கவில்லை.
அவசரமாகத் தலையை முடிந்துகொண்டு “வாங்க” என்றாள்.

“பாப்பா ஏதோ வராதுன்னு சொல்லியனுப்பிச்சயாமே?”

“ஆமாங்க. இன்னிக்கு ஒரு நாளைக்கு வேறே ஏற்பாடு பண்ணிக்குங்க.”

“என்ன உளர்றே? ஆறு மணிக்கு நாடகம். இப்போ போய் வரமாட்டேன்னா?”

“என்னங்க செய்யறது? சினிமாச் சான்ஸு திடீர்னு வந்தது.”

சண்முக சுந்தரம் தான் அப்போதே தோற்கடிக்கப்பட்டதை உணர்ந்தார்.

“நாடகத்தை முடிச்சிட்டுப் போறது.”

“சேலம் போகணும். இன்னிக்கு மத்தியானமே கிளம்பனும்.”

“மத்தியானமா? சேலத்துக்கு மத்தியானம் ரயில் கிடையாதே?”

“ரயிலு இல்லீங்க. பிளஷர்லே அழச்சிட்டுப் போறாங்க. நானும் போறேன்.”

சண்முக சுந்தரம் நாக்கு நுனிக்கு வந்த வசவை அடக்கிக்கொண்டார்.

“செம்பகம் எங்கே?”

“கடைக்குப் போயிருக்குங்க. புதுசா சோப்பு சீப்பெல்லாம் வாங்கணுமில்லியா?”

அவளைத் திரும்பிப் பார்க்காதபடி சண்முக சுந்தரம் விடுக்கென்று தெருவுக்கு
வந்தார். “ஐயா,” என்று வேலு குரல் கொடுத்த பிறகுதான் அவர் ரிக்ஷாவில் வந்தது ஞாபகத்துக்கு வந்தது. சண்முக சுந்தரம் ரிக்ஷாவில் ஏறிக்கொண்டார்.

“ஐயா, வீட்டுக்குத்தானே?”

“ஆமாம்.”

அந்தத் தெருவைத் தாண்டு வதற்குள் சண்முக சுந்தரம், “பாக்கியம் வீட்டுக்குப் போ,” என்றார்.

வேலுவின் நடை தடைபட்டது. “அது எங்கேங்க இருக்கு?”

“உனக்குப் பாக்கியம் வீடு தெரியாது?”

“தெரியாதுங்களே.”

இரண்டு வருஷமாகத்தான் வேலு அவருக்கு வாகனம். பாக்கியத்தின் தொடர்புவிட்டு ஐந்து வருஷங்கள் ஆகின்றன.

“இந்தத் தெருவிலேயே நேரே போய் வலது பக்கம் திரும்பினா அங்கே குட்டிக்
குட்டி வீடா இருக்கும். அங்கே போ.”

ஒரு காலத்தில் பாக்கியம் அவருடைய நாடகக் குழுவின் கதாநாயகியாக இருந்தாள்.  மாதம் இரண்டு முறை நான்குமுறை இருபது இருபது ரூபாய் வாங்கி எப்படி அவளும் அவள் அம்மாவும் காலம் தள்ளுவது? அவள் ஒரு நகைக் கடைக்காரர் வீட்டில் சமையல் செய்துவிட்டு வர ஆரம்பித்தாள். சீரான, கௌரவமான தொழில் அவளைச் சதைபோட வைத்திருந்தது. சண்முக சுந்தரத்தைப் பார்த்ததும்,

மகிழ்ச்சி பொங்க,

 “வாங்க, வாங்க” என்றாள்.

சண்முக சுந்தரம் விஷயத்தை எப்படிச் சொல்வது என்று யோசித்தார்.

“பாக்கியம், இன்னிக்கு நீ நாடகத்திலே நடிக்கிறே.”

பாக்கியம் புன்னகை புரிந்தாள். “இந்த உடம்பை வைச்சுண்டா? காமெடிக்குத்தான் சரி.”

“நீதான் கதாநாயகி.”

“ஹீரோயினியா?”

“ஆமாம்.” அவருக்கு வாழ்க்கையில் பிடிக்காதது இந்த ஹீரோயினி, ஹீரோயினி என்று சொல்வது. ஆனால் நாடகத் துறையில் இருந்தவர்கள் எல்லாருமே அப்படித்தான் சொன்னார்கள்.

“நீங்க சொல்லலாம். ஆனாப் பாக்கறவங்க ஒத்துக்கணுமில்லையா?”

“பாக்கியம், முதல்லே ஒரு நிமிஷம்தான் உடம்பு. அதுக்கப்புறம் நடிப்புதான்
பாக்கறவன் மனசிலே உரைக்கும்.”

“எதுக்கும் வயது இல்லீங்களா?”

“எனக்கு அம்பது வயது. நான்தான் கதாநாயகன்.”

“ஆம்பளைங்க சரீங்க. பொம்பளைங்களை ஏத்துக்கமாட்டாங்க.”

சண்முக சுந்தரம் சடாரென்று அவள் காலில் விழுந்தார். “என் மானத்தைக் காப்பாத்து, பாக்கியம்.”

“ஐயோ, இதென்னங்க? என்ன பாவம் பண்ணினேன்? சும்மாச் சொன்னாப் போதாதா?”

சண்முக சுந்தரம் பேச்சே எழாமல் நின்றார். “சரி, நான் வரேங்க. உங்க நாடகத்தை நான் பாத்தது கூட இல்லை.”

“என்னை மன்னிச்சுக்கோ, பாக்கியம். எவன் எவன் காலிலையோ விழுந்து நாடகத்துக்குக் கூப்பிட்டேன். உன்னைக் கூப்பிடலே.”

“இப்படிப் பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க. சரி, பாடம் எங்கேங்க?”

சண்முக சுந்தரம் நாக்கைக் கடித்துக்கொண்டார். வாசலில் எட்டிப்பார்த்து,
“வேலு!” என்று அழைத்தார்.

“என்னங்க?”

“இப்போ நாம போனோமே, அந்த வீட்டுக்குப் போய்ப் பாடத்தை வாங்கிட்டு வாங்க.”

“என்னங்க அது?”

“தாள் தாளாக இருக்கும். ஜாக்கிரதையாக் கொண்டா.”

ஐந்து நிமிஷத்துக்கு அந்த வீட்டில் மௌனம் நிலவியது. பாக்கியத்தின் அம்மா
உள்ளிலிருந்து இருமினாள். இன்னும் அதிக நாட்கள் தாங்காது என்று சண்முக
சுந்தரம் நினைத்துக் கொண்டார்.

வேலு கசங்கிய காகிதக் கொத்தை எடுத்துவந்தார். சண்முக சுந்தரம் பக்கங்கள்
சரிபார்த்து அடுக்கி வைத்துப் பாக்கியத்திடம் கொடுத்தார். “இந்த நாடகம் எப்படியிருக்கும்னுகூட எனக்குத் தெரியாது” என்று பாக்கியம் சொன்னாள்.

“நீ சரியாப் பண்ணிடுவே, பாக்கியம். உன் டயலாக்கை எடுத்துக்கொடுக்க, இந்தப் பக்கம் அந்தப் பக்கம் இரண்டு பையன்களை வைச்சுடறேன். உனக்கு என்னிக்குமே யாரும் சொல்லித் தரத் தேவை இருந்ததில்லை.”

“அதெல்லாம் அஞ்சு பத்து வருஷம் முன்னாலே, எந்த மண்டபங்க? நாலு மணிக்கு வந்தாச் சரியாயிருக்குமா?”

“ராமராயர் ஹால்” நாலு நாலரைக்கு வந்தாக்கூடப் போதும். உனக்குச் சரியா
இப்பவே டிரஸ் எடுத்து வைக்கச் சொல்லிடறேன்.”

“நீங்க கிளம்புங்க. எவ்வளவோ ஜோலியிருக்கும். நான் அரை மணியிலே அந்த
வீட்டுச் சமையலை முடிச்சிட்டுப் பாடத்தைப் படிச்சுக்கறேன்.”

வீட்டில் இறங்கும்போது சண்முக சுந்தரம், “மூணு மணிக்கு அந்த அம்மா
வீட்டுக்குப் போய் அவுங்களை அழைச்சிண்டு வந்துரு.” என்று வேலுவிடம்
சொன்னார்.



 சுவரிலிருந்த முருகன் அவரைப் பார்த்துப் புருவத்தை
உயர்த்தியது போலிருந்தது.

1 comments:

ராஜி said...

முன்னலாம் திருவிழாவுல நாடகம் போடுவாங்க. இப்போலாம் நாடகம் நடக்குதா?!