Sunday, September 02, 2012

926 ஃபவுன்டன் கேட்! - சங்கரி அப்பன் - சிறுகதை

926 ஃபவுன்டன் கேட்!


சங்கரி அப்பன்


காலைக் காற்றில் குளிர் இருந்தது. வின்டர் சீஸன் ஆரம்பமாகிவிட்டது. சரியாக 8.15க்கு 926 ஃபவுன்டன் கேட் பஸ் வந்து நின்றது. காலியான பஸ்ஸில் பள்ளி மாணவர்களுடன் நானும் ஏறினேன். அரக்கப் பரக்க ஓடி வந்து ஏறிக் கொண்டாள் என் சைனீஸ் பஸ் ஸ்டாப் தோழி. மை கீ கார்டைத் தேய்த்துவிட்டு ஸீட்டில் உட்கார்ந்தேன். இமயமலை மனசுக்குள் டென்ட்டடித் திருப்பது மாதிரி பாரமாக உணர்ந்தேன். தினமும் இப்படித்தான் ஒடிந்த மனசுடன் ஏறுகிறேன். எந்த நாட்டில் எத்தனை எத்தனை சௌகர்யங்களுடன் வாழ்ந்தால் என்ன! பெண் மனம் எதிர்பார்ப்பது கணவனின் அன்பைத்தானே!



திங்கட்கிழமை வாரத்தின் முதல் நாள் இப்படியா அமையவேண்டும்! மைக்ரோவேவ் அவனில் சூடாக்கிய பாலில், கார்ன் ஃப்ளேக்ஸ் போட்டு டேபிளில் வைத்து, குடிக்கத் தண்ணீரும் வைத்தாயிற்று. இப்பவெல்லாம் உங்களுக்கு வேலை ரொம்ப ஈஸி. அப்படியிருந்தும் நாலு நாளா என் பேன்ட்ஷர்ட் துவைக்காம போட்டிருக்கே. வாஷிங் மிஷினைத் தட்டிவிடக் கூட வலிக்குதா? சோம்பேறித் தனம் அதிகமாகிவிட்டது..." சொகுசான வாழ்க்கை முறைக்கு மாறின பிறகு இடுப்பொடிய மனைவி வேலை செய்தால்தான் திருப்தியாக இருக்குமா? என்ன உள் மனச் சிக்கலோ புரியலை. இப்படித்தான் சுப்ரபாதத்தை ஆரம்பித்து வைப்பார் என் கணவர் பாபு.



இத பாருங்க மூணு நாளா தூறிட்டிருக்கு. நான் துவைச்சுக் காயப்போட்டுட்டு வேலைக்குப் போயிட்டா... பெரு மழை பெய்து முழுக்க நனைஞ்சுட்டா துணிகளில் துர்வாடை வரும்... அதான்"- காரணம் சொன்னேன். நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு..." ஒவ்வொரு நாள் ஒவ்வொரு இடி சொல். நல்ல சொற்களே தமிழில் இல்லையோ என்று நினைக்கும் அளவுக்கு இங்கு வந்ததிலிருந்து கெட்ட வார்த்தைகளால் அர்ச்சிக்கிறார். நாலு ப்ரட்டை சாண்ட் விச் பண்ணி ஆறு வயது மகன் சூரியாவுக்கு லஞ்ச் கட்டிக் கொடுத்து நானும் கட்டிக் கொண்டேன்.




சூரி ஸ்கூல் பேக் எடுத்துக்க..." ஓடி வந்த குழந்தையின் கைபிடித்துத் தெருவில் இறங்கியபோது ஏதோ மத்தியச் சிறையிலிருந்து விடுபட்ட மாதிரி இருந்தது. பத்து நிமிட நடை... மகனை பள்ளியில் விட்டுவிட்டு எதிரே உள்ள பஸ் ஸ்டாப்பில் என் அலுவலகம் செல்ல நான் வந்து நிற்கிறபோது மணி சரியாக எட்டு பத்தாகிவிடும். எட்டு பதினைந்துக்கு டான் என்று வந்து நிற்கும் பஸ். அலுங்காமல்... இடிபடாமல்... கசகசவேர்வை இல்லாமல் சுகமாகப் பிரயாணித்தும் மனசு என்னவோ குலுங்கி இடிபட்டு வெலவெலத்து அலறிற்று.



யூ ஆல் ரைட்?" சைனீஸ் தோழி சங்மிங் கேட்டாள். மனசை அவசரமாக மூடி சமன் செய்துவிட்டுப் புன்னகைத்தேன்.


நல்லாயிருக்கேன்... நீங்க எங்கே வேலை பார்க்கறீங்க?"


ஒரு சைனீஸ் ப்யூட்டி பார்லரில் மசாஜ் செய்யும் வேலை. ரொம்ப கஷ்டமாயிருக்கு. எனக்கு சரியா ஆங்கிலம் பேச வராததால் இந்த வேலை. இங்கு வந்து எட்டு வருஷமாச்சு."



அவள் இங்குள்ள ஆஸ்திரேலியரான டான் என்பவரை கல்யாணம் பண்ணி இருக்காளாம். சைனாவில் அவள் மணந்த சைனீஸ் புருஷன் விவாகரத்துப் பண்ணித் துரத்திவிட்டானாம். ஒரே மகனுடன் இங்கு வந்து டானைக் கல்யாணம் பண்ணி செட்டிலாயிட்டாளாம். இரண்டாவது கணவன் அன்பாக இருக்கிறாராம். ஆனால் முதல் கணவன் அவள் பத்து வயது மகனுக்கு ஃபோன் செய்து அம்மாவை விட்டு விட்டு அப்பாவிடம் வந்து விடு என்று கூறிக் கூறி குழந்தையை ப்ரெயின் வாஷ் பண்ணி அவளிடமிருந்து பிரிக்கப் பார்க்கிறானாம். சொல்லும்போதே அவள் கண்கள் கலங்கிவிட்டன. பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் கடல் கடந்தாலும் விட்டபாடில்லை.



அலுவலகத்தில் நுழைந்ததும் ரோஜர் எதிர்பட்டார். ஸ்நேகமுடன் ஹாய் தீபா... ப்ளீஸ் கம் டு மை கேபின்..." என்றார். டெலிவரி செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கையும் அதன் விலைப் பட்டியல் பற்றியும் ஒரு டிராஃப்ட் தயாரிக்கக் கூப்பிட்டிருக்கார்.



அரை மணியில் முடித்துத் தரவேண்டும் ப்ளீஸ்..." என்று வேண்டுகோள் வைத்தார். பிறகு மென்மையாக என்னைப் பார்த்து தீபா... கேன் ஐ சே சம்திங்?" என்றார். அவர் பர்மிஷன் கேட்டது எனக்குப் பிடித்தது.



சொல்லுங்க..." என்றேன்.



யூ லுக் ப்ரிட்டி அண்ட் யங் இன் சாரி" என்றார். மனசிலேதுமில்லாமல் வந்து விழுந்த இந்தப் பாராட்டுக்கு நன்றி சொன்னேன். பௌர்ணமி நிலா மனசுக்குள் பொழிந்தது போல் அந்தப் பாராட்டில் முழுதாக மகிழ்ச்சியில் நனைந்து போனேன். பாராட்ட வேண்டிய கணவர் ஒரு நாளாவது பாராட்டியிருப்பாரா? நான் ப்ரிட்டியா இல்லையா என்கிற கவனமே இல்லாமல் ஏதோ... டீசென்டாக உடை உடுத்தணும் என்ற எண்ணம் மட்டுமே குறியாக இருந்திருக்கிறேன்


. எப்பொழுதாவது ஏதும் அகப்படவில்லை என்றால்தான் புடைவை அணிவேன். மற்றபடி சூடிதார்... பேன்ட் ஷர்ட்தான். நான் புடைவை அணியும்போது - இடுப்பும்... கழுத்தும் ப்ளா என்று தெரிகிறது. அது என்ன முதுகில், மேலே ஒரு கயிறு கட்டி முடிச்சுப் போட்டிருக்கு. குழந்தை பெற்ற உனக்கு இந்த ஸ்டைல் தேவையா?" என்று சாடுவார்.




நான் சூடிதார் அணிந்தால் - துப்பட்டாவை அலட்சியமா தொங்க விடற... சகிக்கலை" என்பார்.



குளிர் காலத்தில் பேன்ட் ஷர்ட் போட்டால் - துப்பட்டாவும் இல்லே, சுத்தம்... ஆஸி ஸ்டைலுக்கு மாறிட்டே" என்பார்.



கண்களில் முட்டி நிற்கும் நீரைக் கட்டுப்படுத்தி, அப்ப என்னதான் உடை உடுத்தணும் நான்?"



பர்தா... முடியுமா உன்னால? வெள்ளைத் தோலையும் கட்டான சிக் உடலமைப்பையும் கடை பரத்தணும் உனக்கு" என்று என் பெண்மையை அவமானப்படுத்துவார். அவர் மேல் இருக்கும் கொஞ்ச நஞ்ச மரியாதையும் எனக்குப் போயிற்று. இதுதானா வாழ்க்கை! மனசுக்குள் இத்தனை கசையடி விழுந்தும் துளிர்க்கப் பார்க்கிறேன்... அடித்த அவரோ சோர்ந்து போகிறார். இந்த முரணில் ஊஞ்சலாடும் பயணம் என்று விபத்துக்குள்ளாகுமோ! பயமாக இருந்தது.



என் ஒரே சந்தோஷம் என் மகன் சூர்யாதான். யூநோ விளையாடுவோம். மோனோப்பலி விளையாடுவோம். பவுலிங் கூட்டிப் போவேன். சேர்ந்து கொலை வெறி டி பாட்டு கேட்போம். அதுக்கு சூப்பராக டான்ஸ் ஆடுவான். வி - கேம்ஸ், கம்ப்யூட்டர் கேம்ஸ் ஆடுவோம். எங்கள் உலகமே தனி. இந்த ஆனந்தத்தைக் கெடுக்க மிஸ்டர் பாபுவால் முடியவேயில்லை. என் மகனின் மினுக்கும் கண்கள். கனிந்த அம்மா என்ற அழைப்பு. துறு துறு தோற்றம். எல்லாம் எனக்குக் கடவுள் தந்த இதங்கள்.



ஏன் உன்னை அப்பா எப்பவும் திட்றார்மா..." என்றான் ஒரு நாள்.



தெரியலைடா..."


ஒரு வேளை நீ ஸ்மார்ட்டா அழகாயிருக்கே. அப்பா குண்டா கறுப்பா இருக்காரே... அதனாலே இருக்குமோ?"


ஆறு வயது குழந்தையின் அப்சர்வேஷன் பவர் என்று வியப்பதா? அதிகப் பிரசங்கி என்று கண்டிப்பதா என்று தெரியவில்லை.


நான் பார்த்த சில பெண்களின் குறைகளைக் கவனிக்கும்போது எனக்கு இன்னும் ஆணாதிக்க நூற்றாண்டுகளின் சொச்சம் இருப்பதாகவே தோன்றுகிறது. என் மலையாளத் தோழி யாமினி சொன்னாள் -



தீபா... நல்ல வேலையை விட்டுட்டார். இங்கே இந்த புலாரா அத்வான இடத்தில் மூன்று ஏக்கர் நிலம் வாங்கிப் போட்டு நாய்களை வளர்க்கிறார். இங்குதான் ஆஸ்திரேலியர்களுக்கு நாய் என்றால் கொள்ளை ப்ரியமே... ஒரு குடும்பத்திலேயே இரண்டு மூன்று நாய்கள் வளர்க்கிறார்களே! உயர் ஜாதி நாய்கள் எண்ணூறு டாலர் வரை விற்பனையாகிறது. வருமானம் நல்லாத்தான் இருக்கு... ஆனா..."



ஏன் யாமினி... என்ன பிரச்னை?"


கேட்டால் திடுகிட்டுப் போவே. இரவில் பாம்புகள் வருது. எப்பவாவது நரி கூட வருது. சுத்தி ரெண்டு கிலோ மீட்டருக்கு ஆளே கிடையாது. சதா நாய் குரைக்கும் சத்தம்... என்ன வாழ்க்கை சொல்லு! ஆஃபீசர்ஸ் காலனியில் டீச்சர் வேலை பார்த்திட்டிருந்தேன். என் நாலு வயது பையனும் என் பள்ளியிலேயே படித்துக் கொண்டிருந்தான். நான் இங்கேயே இருக்கேன். என் பையனுடன் நீங்க வாரம் வாரம் வந்திட்டுப் போலாமேன்னு சொன்னேன்.


 ராமன் இருக்கும் இடத்துக்கு சீதை வருவதுதான் நம் பண்பாடாம். வியாக்கியானம் வேறு. என்ன பண்றது? அசோகவனத்து சீதா போல் இங்கு மாட்டிக்கிட்டேன். இந்தச் சூழலுக்குப் பழகிட்டிருக்கேன்" என்று முடித்தாள். உண்மையில் அதிர்ச்சியில் எச்சில் விழுங்க மறந்தேன். மனைவியைக் கண்ணுக்குள் வச்சுக் காப்பாத்தற எழுபது சத ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். முப்பது சதவிகித கோட்டாவில் நான், யாமினி, டேய்ஸி, மினி, சங்கீதா என்று ஒரு குட்டி லிஸ்ட்டே இருக்கு. அவர்களின் உள்கதை - கந்தல்கள், ஆழ்கடல் மனவலிகள். இதையெல்லாம் பார்க்கும் பொழுது, ‘நம்ம நிலை தேவலையப்பா’ என்ற எண்ணம் வரத்தான் செய்கிறது.



லஞ்ச் பாக்ஸ் திறந்து சாப்பிடும்போது டயானா வந்தாள். இந்த ஊர்க்காரி. எனக்கு அவளைப் பிடிக்கும். வெகுளியானவள். மனசில் பட்டதைச் சொல்வாள். நீலக் கண்கள், பொன்நிற முடி, டிபிகல் ஆஸ்திரேலிய வெண்ணெய் நிறம், ரோஸ் உதடுகள், கொஞ்சம் சிகரெட் பிடிப்பாள்.



ஸோ... நீ இன்னும் அந்த ஆள் கூடத் தான் வாழ்கிறாயா?"


என்ன செய்வது? குழந்தை இருக்கே" இவளிடம்தான் மனம் விட்டுப் பேசிக் கொட்டுவேன். யாரிடமும் சொல்ல மாட்டாள்.



தீபா...முட்டாள் மாதிரி பேசாதே. டம்ப் ஹிம். யூ டிசர்வ் எ நைஸ் கெய்" அவள் சொல்வது நிஜம்தான். ஆனால் நைஸ் கையாக என் கணவர் மாறலாம் இல்லையா என்பேன். அவள் இரண்டு பாய் ஃப்ரெண்ட் மாற்றி விட்டாள். தன் வாழ்க்கைக்கு சரியானவனைத் தேர்ந்தெடுப்பதில் ரிஸ்க் எடுக்க மாட்டாளாம்.



முதல் பாய் ஃப்ரெண்ட் அவளைத் துன்புறுத்திய அனுபவம் அவளுக்கு உண்டு. அவன் திருந்தி விடுவான் என்று விட்டுக் கொடுத்து... விட்டுக் கொடுத்து மனம் சிதைந்து பின் வேறு வழியில்லாமல் விட்டாளாம். அதனால் என்னுடைய வலி முழுவதும் புரிந்தவள். சுடு சொற்கள் மனத்தைப் பொத்தலாக்கும் அம்புகள் என்பாள். மனச் சிதைவு நாளாவட்டத்தில் வரும் என்பாள். எதற்கு இந்த வாழ்க்கை? ஜஸ்ட் லீவ் ஹிம். உண்மைதான்.




ஆனால்..."


என்ன ஆனால்? தன்மானம் இழந்து இப்படி ஒரு வாழ்க்கையை எங்களால் வாழ முடியாது தீபா. வொய் ஆர் யூ டேமேஜிங் யுவர் செல்ஃப்?"

ஒரே ஒரு காரணத்துக்காத்தான்" என்றேன்.


எனக்குத் தெரியும். உன்னை மாதிரி பல பெண்கள் வாழ்கிறார்கள் என்கிற நொண்டிச் சமாதானம் தானே."


இல்லே."


பின்னே?" ஒரு நிமிடம் ஆழ்ந்த மௌனத்திலிருந்தேன். பிறகு சொன்னேன்.


குழந்தை. அது ஒரு வரப்பிரசாதம். எந்தத் தவறும் செய்யாத அந்தப் பிஞ்சுக் குழந்தை அப்பா இல்லாமல் வளரும். அல்லது அப்பாவுடன் வளர திணறும். இல்லை அப்பாவுடன் வாரத்தில் இரண்டு நாள் அம்மாவுடன் ஐந்து நாள் என்று பங்கு போடப்பட்டு மனசு ரணப்படும். அதான்...

"

உன்னைப் பார்த்தா எனக்கு பரிதாபமாகத்தான் இருக்கு. இவ்வளவு சென்டிமென்ட்ஸ். ஃபூலா நீ? சரி... நீ செய்ய வேண்டியதை உன் கணவரே செஞ்சிட்டார்..."



என்னது?"


நீ இப்படி உருகறே. அங்கே அவர் ஜாகை மாறப் போறாராம். பின் டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்புவாராம். என் லாயர் தோழி ஜோனிடம் சொல்லியிருக்கார். என்ன இது தீபா? எப்படியாச்சு? வாட்ஸ் ஹப்பனிங்?"


அதிர்ந்து டயனாவைப் பார்த்தேன். நிஜம்தானா இது!


தீபா... நீ என் தோழி. அப்படிப் பார்க்காதே. என்னால் தாங்க முடியலை. உண்மையைச் சொல்லப் போனால், சுதந்திரம் உன்னைத் தேடி வந்திருக்கு. அப்யூஸிவ் கணவனோட வாழ்ந்து நீ அனுபவிச்ச மென்டல் டார்ச்சர் போதும். ஜஸ்ட் ஃபீல் ஹாப்பி... ஸ்மைல்" என்றாள். மென்மையாக அணைத்தாள். தாங்க்ஸ் இந்த நட்புக்கு... நான் வரேன் டயானா." வீட்டுக்கு வரும் வழியெல்லாம் சிந்தித்தேன். இந்த ஊரில் வந்து அவர் கற்றது இதைத்தானா? என் கண்களில் நீரும் என் உதட்டில் ஒரு சின்னப் புன்னகையும் இருந்ததே - அதைப் பார்த்து டயானா என்ன நினைத்திருப்பாள்! என் மனநிலை பிடிபடாமல் அதிசயித்திருப்பாள்.




வீட்டுக்கு வந்தேன். பாபு வர இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது. முகம் கழுவி உடை மாற்றி சூடாக டீ குடித்தேன். என் பொறுமைக்குக் கடைசியில் கிடைத்த பரிசு இதுதானா? எங்கள் வீட்டின் எதிரே ஒரு சின்னக் குளம் இருந்தது. அதைச் சுற்றி சிமென்ட் நடைபாதை உண்டு. சனி, ஞாயிறுகளில் குளத்தைச் சுற்றி வாக்கிங் போவேன். குளத்தைச் சுற்றி இரண்டடிக்கு புல் வளர்ந்திருந்தது. அதில் குட்டிக் குட்டி மஞ்சள் பூக்கள் சிரிக்கும். சின்னப் பறவைகள் குளத்தில்நீர் அருந்திவிட்டு ஒருசேர கும்பலாகக் குபீரென வானம் நோக்கி உயரப் பறக்கும். விடுதலை என்கிற உணர்வும் அப்படித்தான் இருக்கும்.



 என் கணவரின் சுடுசொல்லிலிருந்து சுதந்திரம் கிடைக்கப் போகிறதென்று என் மனசும் இப்படித்தான் விடுதலைக்காய் பறக்கிறது. ஆனால் பறவைகள் உயரவே இருந்து விட முடியுமா? மீண்டும் தரை நோக்கி விர்ரென்று பறந்து வந்தமர்கின்றன. தற்காலிக சுதந்திரம் வாழ்க்கைக்குச் சரியான தீர்வாகுமா? ஒரு சிறையிலிருந்து விடுபட்டு தனிமை எனும் இன்னொரு சிறைக்குள் புகுவதற்குப் பேர் சுதந்திரமா? என்னிடம் மனசு விட்டுப் பேசாமல் இப்படியொரு முடிவை அவர் எடுத்தது எவ்வளவு குழந்தைத் தனமானது! பேசிப் பார்க்கலாம்... பிறகு எந்தச் சிறை பெட்டர் என்று முடிவு பண்ணலாம். என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்ததும் மனசு லேசாயிற்று. கார் ஷெட் திறக்கும் ஷட்டர் சத்தம் கேட்டது. பாபு வந்துட்டார்.



டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பப் போறாராம். ஜாகை மாறப் போறாராம். இதையெல்லாம் தீர்மானித்து விட்டு விடுதலை உணர்வுடன் தெரிகிறாரா என்று அவர் முகத்தை ஆராய்ந்தேன். அதில் இறுக்கம் இருந்தது. மருந்துக்குக் கூட ஓரிடத்திலாவது அப்பாடா உணர்வு இல்லை. சிக்கலைத் தீர்க்கத் தெரியாமல் புது சிக்கலை ஏற்படுத்தியிருப்பதை அவர் உள்ளுணர்வு சொல்கிறதா?


 புரியலை. டி.வி.யை ஆன் பண்ணி விட்டு உட்கார்ந்தார். நான் ரிமோட்டை பிடுங்கி ஆஃப் செய்தேன். வாழ்க்கையை ஆஃப் பண்ணிட்டு டி.வி.யை ஓட விட்டு என்ன பிரயோஜனம்?" என்றேன். கத்தி போல் அது அவர் மனத்தில் இறங்கிற்று. கண்ணீர் எட்டிப் பார்த்து விடாதிருக்க உதடு கடித்தேன். அவர் முதல் முறையாகப் பெயர் சொல்லி நிதானமாகப் பேசறார்.



தீபா... உனக்கும் எனக்கும் இந்த ப்ரேக் தேவைன்னு தோணுச்சு."



அதெப்படி எனக்குத் தேவைன்னு நீங்கள் முடிவு பண்ணலாம்? என் கூட பேசிப் பார்க்கணும்னு உங்களுக்குத் தோணவேயில்லையா?"



என்னைக் கல்யாணம் பண்ண இந்த எட்டு வருஷமா நீ சந்தோஷமாய் இல்லையே!"



அம்பு போன்ற சரமாரியான சொற்களைத் தாங்கிக் கொண்டு சிரிக்க நான் என்ன பீஷ்மரா?"

இத பார் தீபா... நீ என்னை மனசுக்குள் கறுப்பு குண்டுன்னு நகையாடறதை என்னால் புரிஞ்சுக்க முடியுது."



தி கேட் இஸ் அவுட் ஆஃப் த பேக். எட்டு வருஷமா இதையா மனசில் ஊறப் போட்டு வச்சிருக்கார்! தாழ்வு மனப்பான்மை, சுயபச்சாதாபம். இதற்கு மருந்துண்டா? நான் பெரிதாகச் சிரித்தேன். என் பெண்மையின் முழு பலத்துடன் ஆங்காரமாகச் சிரித்தேன். துர்க்கையின் கோபம் போல் இந்தச் சிரிப்பின் மூலம் அவர் அறியாமையைச் சாடினேன். முயல் குட்டி போல் இருந்தவள் மெகா சைஸ் துர்க்கையாக அவதரித்ததைப் பயத்துடன் பார்த்தார். மெல்ல நிதானத்துக்கு வந்தேன். பூரண லட்சுமி கடாட்ச அருள் பார்வையுடன் சொன்னேன்.


 சூல் கொண்ட கறுப்பு மேகங்கள்தான் அழகு. வெறும் வெற்று மேகங்கள் வானத்தில் ஃபான்சி பரேட் செய்யத்தான் லாய்க்கு. பூமின்னு பெண்மையைச் சொல்றாங்க. அதனை கறுப்பு மேகங்களால்தான் மழை பொழிவித்துக் குளிர்வித்துத் தழைக்க வைக்க முடியும். உங்களாலும் முடியும்.அன்புநீர் வர்ஷித்தால் நான் மலர்வேன். அது இல்லாததால்தான் நான் சந்தோஷமாய் இல்லே."



கலங்கிய மனக்குட்டைக்குள் இந்த ஜீவ வார்த்தைகள் தெளிவை ஏற்படுத்தும் என்று நம்பினேன். இதுதான் பிரச்னை என்றால் வலி தீரும். ரொம்ப நேரம் பேசாமல் இருந்தார். என் வாழ்வின் ஒளி இந்தச் சில நிமிடங்களில் நிர்ணயிக்கப்படப்போகிறது. காற்றில் படபடக்கும் தீபம் அணையுமா? இல்லை வெற்றி பெற்று சீராக எரியுமா? சிறிது நேரத்தில் தெரிந்து விடும். பக்கத்து வீட்டு சௌத் ஆப்ரிகன் பெண் நைகிக் என் மகனை வீட்டில் விட்டு விட்டுப் போனாள். ஆன்ட்டி ஹீ ஸேஸ் ஹீ வான்ட்ஸ் மில்க்" பாலை கப்பில் ஊற்றிக் கொண்டிருந்தேன்.

தீபா... நான் தப்பு பண்ணிட்டேன். ஸாரி. தீபா... வந்து... இனி உன்னை அலுவலகத்தில் நானே டிராப் பண்ணிட்டுப் போறேன். நீ என் மனைவியல்லவா? உன் மேல் எனக்கு அக்கறை இருக்கு தீபா..." இரும்புக் கதவு உடைந்தது. அவர் மனசில் இயல்பான காற்று சிலுசிலுவென்று வீசுகிறது. பாலை மகனிடம் கப்பில் கொடுத்தேன். அவர் என் வயிற்றில் பாலை வார்த்தார்.

தாங்க்ஸ் ஸோ மச். ஆன நான் 926 ஃப்வுன்டன் கேட் பஸ்ஸிலேயே போகிறேன். ஏன்னா உங்க அலுவலகம் நேர் எதிர்த்திசையில் அல்லவா இருக்கிறது..." என்றேன். அவர் சிரித்தார்.அதில் ஒரு கவிதையின் அழகு இருந்தது. சிரிக்கும்போது ரொம்ப அழகாய் இருக்கீங்கப்பா" என்றான் சூரியா. இதுவரை அவர் இப்படி உயிர்ப்புடன் சிரித்ததை அவன் பார்த்ததேயில்லை.



டயானாவிடம் இந்த வசந்தத்தைப் பற்றிச் சொன்னேன். சொன்னாள் - யூ ஆர் லக்கி. அவர் உணர்ந்தது ஓர் அபூர்வமான விஷயம். என் பாய் ஃப்ரெண்ட் கடைசி வரை அவன் தவறை உணரவேயில்லை. அதான் இவரும் அப்படித்தான் என்று எண்ணி விலகச் சொன்னேன். ஸாரி..." என்றாள்.



ஐ அண்டர்ஸ்டாண்ட்... யூ வில் கெட் எ நைஸ் கெய்..." என்றேன். இருவரும் புன்னகைத்தோம்.


இப்பொழுது நான் பஸ்ஸில்தான் அலுவலகம் செல்கிறேன். 926 ஃபவுன்டன் கேட் வந்து நின்றது. என் வாழ்வும் ஃபவுன்டன் போல் ஆகிவிட்டதால் அந்த பஸ் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. என் சைனீஸ் தோழி சொன்னாள். டு-டே த ஸ்கை இஸ் க்ளியர்."



வானம் மட்டும்தானா நிர்மலமாக இருந்தது, என் மனசும்தான்.

2 comments:

'பரிவை' சே.குமார் said...

அருமையான கதை.

பகிர்வுக்கு நன்றி.

ராஜி said...

கதை நல்லா இருக்கு எனக்குதான் புரியலை