Thursday, July 26, 2012

நிபந்தனை - சுஜாதா - சிறுகதை -சைக்கலாஜிக்கல் த்ரில்லர்

ஒன்பது மணிக்கே வெயில் கொளுத்திற்று. கசகசவென்று வியர்வை முதுகுக்குள், மார்பில் எல்லாம் சின்னச் சின்ன ஊசிகளாகக் குத்தியது. ஈஸ்வரிக்குப் பட்டுப்புடவை ஏன் உடுத்திக்கொண்டு வந்தோம் என்றிருந்தது.


பெரிய யானை ஒன்று முனிசிபாலிட்டி குழாயில் சமர்த்தாகத் தண்ணீர் பிடித்து முதுகில் ஆரவாரமாக வாரி இறைத்துக்கொண்டு இருந்தது. யானைப்பாகன் பீடி குடித்துக்கொண்டு இருந்தான். எதிரே கட்டை குட்டையாகக் கோபுரம் தெரிந்தது. அருகே தெப்பக்குளம். அதற்கு எதிர்ப்புறத்தில் பழங்காலத்து மரக் கட்டடத்தின் உச்சாணியில் இருந்த விநோத கடிகாரத்தையே பார்த்துக்கொண்டு பத்துப் பதினைந்து பேர் ஒன்பது அடிக்கக் காத்திருந்தார்கள். மணியடிக்கும்போது இரண்டு பொம்மை ஆடுகள் ஒன்றை ஒன்று முட்டிக்கொள்ளுமாம். மஹாராஜா செயலாக இருந்தபோது வாங்கிப் போட்ட கடிகாரம். இப்போது மஹாராஜாவே அந்தப் பதினைந்து பேரில் ஒருவராக இருந்தால் ஆச்சர்யப்படக் கூடாது என்று சோமசுந்தரம் எண்ணினான்.


”கோயிலுக்குப் போயிரலாமே முதல்ல” என்றாள் ஈஸ்வரி.

”இத பார்… எனக்குப் பசிக்குது. காலைல எழுந்து ஒரு காபி சாப்பிட்டது. ஒண்ணு ரெண்டு பிளேட் இட்லி தின்னாத்தான் வண்டி ஓடும்.”


”எங்க வந்தாலும் சாப்பாடுதான் உங்களுக்கு.”

”என்ன செய்யறது. வேளைக்கு வேளை செய்து போட்டு என்னைக் கெடுத்துவெச்சிருக்க.”

சோமசுந்தரம் காரை அந்தக் கட்டட நிழலில் நிறுத்தினான். மூஞ்சியைப் பார்த்து சுமார் என்று சொல்லக்கூடிய ஓர் ஓட்டலில் நுழைந்தார்கள். கல்லாவில் ஊதுபத்திப் பட்டைகள் அடுக்கியிருந்தன. பத்திரிகைகளின் இந்த வார அட்டைப் படப் பெண்மணி கேரளத்துத் தேங்காய்களை நினைவுபடுத்தினாள். குலைகுலையாகச் செக்கச் சிவந்த வாழைப் பழங்கள் தொங்கின. மரவள்ளியும் பலாவும் வறுவலாகப் பாலிதீன் பைகளில் அடங்கியிருந்தன. கமல்ஹாசனுக்குக் கீழே மலையாளத்தில் நண்டு நண்டாக ஏதோ எழுதியிருந்தது.


”எந்தா வேண்ட?” என்றான். காதில் பென்சில்.

”எனக்கு மலையாளம் தெரியாது. தமிழ்தான்.”

”சாரமில்லா… பரயு…”

”என்னத்தைப் பரயறது. ஈஸ்வரி, நீ என்ன சாப்பிடற?”

”எனக்கு ஒண்ணும் வேண்டாம். சாமி கும்பிட்டுட்டு அப்புறம் சாப்பிடலாம்னு இருக்கேன்.”

”சரியாப்போச்சு, மறுபடி ஓட்டலுக்கு வரணுமா?”

”ஏன்? வந்தா என்ன?” என்றாள் சற்று அழுத்தமாக.

”ஓ.கே! ஓ.கே!”

”சின்னப் புள்ளைலேர்ந்து எங்க அப்பாம்மா கத்துக்கொடுத்திருக்காங்க, சாமி கும்பிட்டுட்டுச் சாப்பிடணும்னு. உங்களுக்கு அது மூடநம்பிக்கையா இருக்கலாம். வேணா…”

”சேச்சே. இந்தச் சின்ன விஷயத்துக்குச் சண்டையைத் துவங்காதே. சரி… ஏம்ப்பா எனக்கு முதல்ல மூணு இட்லி, வடை. அப்புறம் பச்சைத்தண்ணி; பச்சைவெள்ளம். சுக்கைப் போட்டுக் காய்ச்சி மஞ்சளா ஒரு வெள்ளம் கொண்டுவெப்பிங்களே… அது வேண்டா. கேட்டோ?” என்றான்.

கணவனின் மலையாள முயற்சிகளில் சிரிப்பு வந்தது ஈஸ்வரிக்கு. கோபம் போய்விட்டது.

”முணக்குன்னா கோபமா?” என்றான்.

”பின்ன என்னவாம். நான் எது சொன்னாலும் அதுக்கு எதிராச் சொன்னா?”

”சரி! இன்னிக்கு ஒரு பிராமிஸ். நீ என்ன சொன்னாலும் சரி சரி. மறுப்பே தெரிவிக்க மாட்டேன். வெளியூர்ல ஓட்டல்ல வந்து எதுக்காகச் சண்டை போடணும்?”

சாப்பிட்டுவிட்டு வெளியே வரும்போது, ஈஸ்வரி அந்த அம்மாளைப் பார்த்தாள். பிராமண மாது. நாற்பது இருக்கலாம். கிழிந்த நார்ப்பட்டில் ஜாதிக்கட்டு; ரவிக்கையில் ஒட்டு; நெற்றியில் வெறுமை. நரை இழையோடிய தலை ஒரு சின்னத் தேங்காய் போல இருந்தது. அவர்களை அணுகி சன்னமாகப் பிச்சை எடுத்தாள். தயக்கமாகக் கை நீட்டி ஹாஸ்யமில்லாமல் சிரித்து மெல்லிய குரலில், ”அம்மா மஹாலட்சுமி, ஏதாவது காசு தாய
ேன்” என்றாள். பற்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சோழிகள்.

அவள் ஒரு காலத்தில் செல்வாக்காக இருந்து நொடித்துப்போய் பிச்சை எடுக்க வந்திருக்க வேண்டும் என்பது அவள் தோற்றத்திலும் கூசிக் குறுகிய தயக்கத்திலும் வெளிப்பட்டது.

சோமசுந்தரம் அவளுக்கு நாலணா கொடுத்தான்.
அவள் அதை வாங்கிப் பார்த்து, ”நாலணா போறாதுப்பா. குழந்தை பசியாக் கிடக்கிறாள். நானும் பட்டினி” என்றாள்.

”எவ்வளவு தரணும்கறிங்க பாட்டி?” ‘பாட்டி’ என்று அழைத்தது அசம்பாவிதமாக இருந்தாலும் ‘மாமி’ என்று அழைத்துத் தனக்கு ஒரு அவசியமில்லாத பிராமணத்தன்மையை வரவழைத்துக்கொள்ள சோமசுந்தரம் விரும்பவில்லை.

”ஒரு ரூபா கொடுத்தா எதிர்த்தாப்ல காபி கிளப்பில் ஒரு முழுச் சாப்பாடு கிடைக்கும். நானும் என் பெண்ணும் சாப்பிடலாமாக்கும்” அவள் தமிழில் மலையாள உச்சரிப்புத் தென்பட்டது. பாலக்காடாக இருக்கலாம்.


”இத பாருங்க… உங்களுக்கு ஒரு ரூபா கொடுத்தா உங்க வாழ்க்கைப் பிரச்னை தீர்ந்துபோயிடப் போறதில்லை. கொடுக்கிறத வாங்கிட்டுப் போங்க பெரியம்மா! வேற மூணு நாலு ஆளுங்ககிட்ட கேட்டா ஒரு ரூபா. அவ்வளவுதான்!” என்று சோமசுந்தரம் நடந்தான். ஈஸ்வரி சற்றுத் தயங்கினாள்.

”அம்மா மகாலட்சுமி; ஜகதீஸ்வரி; பூவும் பொட்டுமா அழகாத் தங்கமாட்டமா இருக்கியே. உனக்குத் தங்க விக்கிரகம் மாதிரி ஒரு புள்ளை பொறந்து எல்லாரும் செழிப்பா இருப்பீங்க. ஒரு ரூபா கொடுத்துட்டுப் போம்மா ராஜாத்தி.”

கணவன் அங்கிருந்து, ”அவகூட என்ன பேச்சு? வா வா!” என்று அவசரப்படுத்தினான். ஒரு கடைக்குள் நுழைந்தான். ”தொந்தரவு பண்ணாதிங்கம்மா, போங்க!” என்று ஈஸ்வரி நடக்க, அந்தப் பெண்மணி தொடர்ந்து கடைவாசல் வரைக்கும் நீட்டிய கையுடன் வந்தாள்.

கடைக்குள் ஆயிரம் உதவாக்கரை சாமான்கள் இருந்தன. எத்தனைவிதமான மர யானைகள். மரம் இழுக்கும் யானை, சேவிக்கும் யானை, ஏன்… யானை மேல் யானையைக்கூட விட்டுவைக்கவில்லை.

”என்ன, போனாளா?”

”இல்லீங்க. பாவம் அய்யர் சாதி.”

”ஆமா! அய்யர் சாதிதான். அதுக்குன்னு ஜாஸ்தி பணம் குடுக்கணும்கறியா? பிச்சைலேகூட வர்ணாச்சரம தர்மமா? இந்த யானை என்ன விலைங்க?”

”சட், அது வேண்டாங்க. புத்தி போவுது பாரு!”

”விலை கேட்டேன்! திருவனந்தபுரத்துக்கு வந்ததுக்கு ஞாபகமா யானை வாங்கிட்டுப் போக வேண்டாமா?”

”அது நல்லா இருக்குதில்ல?” என்று நீண்ட சதுரப்பாயின் மேல் தத்ரூபமாக ஒரு யானை வரையப்பட்டிருந்ததைக் காட்டினாள். ”ஹாலில் அலங்காரமா தொங்கவிடலாம். என்னப்பா விலை?”

பதினெட்டு ரூபாய் கொடுத்து அதை வாங்கிச் சுருட்டிக்கொண்டு கடைக்கு வெளியே வரும்போது, அந்த அம்மாள் இன்னும் நின்றிருந்தாள். அதே அரைக்கை நீட்டல். அதே அசட்டுச் சிரிப்பு. ஏழ்மையின் தங்க மெடல்கள். ஈஸ்வரிக்குக் குற்ற உணர்வு உறுத்தியது. ‘பதினெட்டு ரூபாய் கொடுத்து அலங்கார சாமான் வாங்குகிறாய். எனக்கு நாலணாவுக்குக் கணக்குப் பார்க்கிறாய்!’ என்று அவள் பார்வையே கேட்பது போல் தோன்றியது.

கணவன் கவனிக்காமல் காரை நோக்கி நடந்துகொண்டு இருக்க, ஈஸ்வரி இரண்டாம் முறை தயங்கி யோசித்தாள்.

”பாட்டி, உங்க பேர் என்ன?”

”அலமேலும்மா.”
”எந்த ஊர் நீங்க?”
”வடக்கே திருச்சூர்.”

”ஏன் இப்படிப் பிச்சை எடுத்துப் பிழைக்கும்படியா ஆய்டுச்சு?”

”அதை ஏண்டிம்மா கேக்கறே. எங்க தாத்தா சப்ரிஜிஸ்திராரா இருந்தார். ஆத்துல நாலு சேவகா இருந்தா. தென்னந்தோப்பும் துரவுமா காய் காய்ச்சு தாழ்வாரம் பூரா கொட்டியிருக்கும்.”

”அது சரி… இப்ப ஏன் இப்படி ஆய்டுச்சு?”

”எங்கப்பன் சொத்தையெல்லாம் அழிச்சுட்டு எங்கள நடுத்தெருவில் நிக்கவெச்சுட்டுப் போயிட்டான். சமையல்காரனுக்கு வாக்கப்பட்டேன். அவரும்
போய்ட்டார். நானும் என் பெண்ணும் மட்டும் தனியா.”

”கூடப் பிறந்தவங்க யாரும் இல்லையா?”

”இருக்கான். தம்பிக்காரன் திருச்சூர்ல வாத்தியாரா இருக்கான். ஆம்படையா பேச்சைக் கேட்டுண்டு துரத்திவிட்டுட்டான்.”

”வீட்டு வேலை ஏதாவது செஞ்சு பிழைக்கிறதுதானே?”

”பிழைக்கலாம். யாராவது வேலை குடுத்தாத்தானே? அதுக்குக்கூட சிபாரிசு தேவையா இருக்கு. இல்லைன்னா, திருடிப்பிடுவேனாம். இப்பகூட ஒரு நம்பூதிரி வீட்ல கூப்ட்டிருந்தா. போறதுக்குள்ள வேற பொம்மனாட்டி வந்துட்டா. என் மூஞ்சியப் பார்த்தா திருடற மாதிரியா இருக்கு. சொல்லும்மா. ஒரே ஒரு பொண்ணு. ஸ்கூலுக்குப் போயிண்டிருக்கு. மத்யானச் சாப்பாடு ஒரு சத்திரத்துல கிடைக்கும். இன்னிக்கெல்லாம் என்ன வயசுங்கறே எனக்கு? நாப்பத்திரண்டு. பசிச்சுப் பசிச்சு அறுபது வயசாட்டம் இருக்கேன். ‘பாட்டி’ங்கறே!”


”வீட்டு வேலை எல்லாம் செய்வீங்களா?”

”பேஷா! சமைப்பேன். பத்துப்பாத்திரம் தேய்ப்பேன். மாடு கறப்பேன். இட்லி தோசைக்கு அரைப்பேன். கைக்குழந்தைக்கு எண்ணெய் தேய்ச்சுவிடுவேன். வேண்டப்பட்ட காரியம் செய்வனாக்கம், எட்டூருக்கு வேலை செய்வேன்.”

சோமசுந்தரம் கார் வரை சென்று காத்திருந்து பொறுமையிழந்து திரும்பி வந்தான். ”என்ன ஈஸ்வரி… இங்கேயே நின்னுட்டே? இத பாருங்க அய்யர் வீட்டு அம்மா, காசு கொடுத்தாச்சில்ல? பேசாம போயிட வேண்டியதுதானே?”

ஈஸ்வரி அவனைக் கவனிக்காமல், ”இப்ப எங்ககூட வர்றீங் களாம்மா?” என்றாள்.

”எங்கே?”

”மெட்ராசுக்கு. வீட்டு வேலை செய்யறதுக்கு எனக்கு ஒரு ஆள் தேவையா இருக்கு.”

”வெயிட் எ மினிட், வெயிட் எ மினிட். என்ன ஈஸ்வரி… உடனே அப்பாய்ன்ட்மென்ட் ஆர்டர் கொடுத்துர்றதா?”

”சும்மா இருங்க! பாட்டி. பெரியம்மா! உங்களால மெட்ராஸ் வர முடியுமா, சொல்லுங்க!”

அம்மாள் கண்களில் முதல் தடவையாகப் பிரகாசம் ஏற்பட்டது. ”என்னம்மா இப்படிக் கேட்டுட்டே! உடனே புறப்பட்டு வரேம்மா! கடல் தாண்டிவேணும் னாலும் வரேன்!”

”கொஞ்சம் இரு ஈஸ்வரி!”

”இன்னிக்கு மத்யானம் நாங்க கார்ல இந்த ஊரைவிட்டுக் கிளம்பி நாகர்கோவில் போறம்.”

”இன்னிக்கே வந்துர்றேம்மா!” அவள் முகம் பூரா இப்போது அந்தப் பிரகாசம் பரவியிருந்தது. ”ஆனா கோமதி?”

”கோமதி யாரு?”

”எம் பொண்ணு. பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்கா.”

”எப்பத் திரும்பி வரும்?”

”ஒரு மணிக்கு.”

”நாங்க ரெண்டு மணிக்குக் கிளம்பறம். உங்க பொண்ணையும் அழைச்சுக்கிட்டு வந்திருங்க. பொட்டி படுக்கையெல்லாம் கொண்டுட்டு வந்துருங்க.”

”பொட்டியுமில்ல… படுக்கையுமில்ல. ஒத்தக் கடையில ஒண்ணு ரெண்டு பை! பிளாட்ஃபாரத்திலாக்கும் படுத்துக்கறது” கண்களைத் துடைத்துக்கொண்டாள். ”மஹாலட்சுமி மாதிரிதாம்மா வந்து சேர்ந்தே நீ! நான் நாயா உழைக்கிறேன்! உடம்பைச் செருப்பா தேய்ச்சுப் போடறேன்

.”
”சரி, சீக்கிரம் போய்ட்டு வாங்க!”

”இதோ…” ஓடினாள்.

சோமசுந்தரம் மௌனமாகத் தன் மனைவியையே பார்த்துக்கொண்டு இருந்தான்.

”என்ன பாக்கறீங்க! வாங்க கோயிலுக்குப் போகலாம்!”

”நீ செய்றது சரிதானா? இது உனக்கே நல்லா இருக்கா? முன்னப்பின்னத் தெரியாத தேசத்துல முன்னப்பின்னத் தெரியாத பொம்பளைய கார்ல கூப்பிட்டு மெட்றாசுக்கு அழைச்சுட்டுப் போறதா?”

”காலைல என்ன சொன்னீங்க?”

”விசாரிக்க வேண்டாமா?”

”காலைல ஓட்டல்ல என்ன சொன்னிங்க?”

”மெட்ராஸ்ல கிடைக்காத பொம்பளைங்களா?”

”காலைல நீ என்ன சொன்னாலும் மறுப்பே தெரிவிக்க மாட்டேன்னு சொல்லல நீங்க?”

”அது சரி, ஆனா இந்த விஷயம்…”
”நடங்க கோயிலுக்கு.”
சட்டையைக் கழற்றி பேன்ட்டை மடக்கி அதன் மேல் வாடகை வேஷ்டி சுற்றிக்கொண்டு சோமசுந்தரம் வர, இருவரும் கோயிலுக்கு
ள் நுழைந்தார்கள்.
”ஆம்பளைங்களுக்கு மட்டும் சட்டையைக் கழட்டணும்னு என்ன ரூல் இது?” என்ற அவன் ஹாஸ்யத்தை அவள் கவனிக்கவில்லை.

”எவ்வளவோ தடவை சாமி கும்பிடறோம். என்ன பிரயோசனம்? நடைமுறையில் ஏதாவது நல்ல காரியம் செய்ய வேண்டாம்? இந்த ட்ரிப்புக்கு இதுவரை எவ்வளவு ரூபா செலவழிச்சிருக்கம்? எத்தனை பெட்ரோல், எத்தனை சினிமா, எத்தனை ஐஸ்க்ரீம், எத்தனை கண்டாமுண்டா சாமான்கள்? ஓர் ஏழைப் பொம்பளைக்கு நாலணா குடுக்க மூக்கால அழறோம். நாம எல்லாம் மனுசங்க இல்லியா? இரக்கம் கிடையாது. வேற யாராவது பார்த்துப்பாங்கன்னு எல்லாருமே விட்டுட்டா, யார் அந்த வேறு யாராவது? கோயிலுக்குக்கூடப் போக வேண்டாங்க. இந்த மாதிரி ஒரு நல்ல காரியம் செஞ்சா அதுவே பெரிய தபஸ்!”

சோமசுந்தரம் நடந்துகொண்டே கை தட்டினான்.
இருவரும் சந்நிதிக்குள் நுழைந்தார்கள்.
கோயிலைவிட்டு வெளியே சட்டை அணிந்துகொண்டு காசு கொடுத்துவிட்டு வெளியில் இறங்கியபோது, தாடிவைத்த ஆசாமி ஒருவன் சைக்கிளில் வந்து அவர்கள் அருகில் நிறுத்தி இறங்கினான். அவனைச் சமீபத்தில் பார்த்த மாதிரி இருந்தது.

”சார், ஒரு விஷயம்.”

”ஒண்ணும் வேண்டாம்ப்பா.”

”நான் ஏதும் விக்கறதுக்கு வரலையாக்கம். எதுத்தாப்பல கடைக்காரன்தான். அம்மாவும் அந்த அலமேலுவும் கொஞ்ச நேரம் முன்னாடி என் கடை வாசல்ல பேசிட்டிருந்ததைக் கவனிச்சேன். அம்மா அவளை மெட்ராசுக்கு அழைச்சுட்டுப் போறதா சொன்னது.”

”ஆமாம். என்ன இப்ப?”

”கோவிக்க வேண்டாம். அந்தப் பொம்பளைய நீங்க கூட்டிப் போகக் கூடாது.”
”ஏன்?”

”அது செரியில்ல.”

”சரியில்லைன்னா?”

”உங்ககிட்ட பொய் சொல்லியிருக்கு. எனக்குச் செரியா காதுல விழல. கேவலமானா பொம்பள. பதினாலு வயசுல ஒரு பொண்ணு. அதைத் தெருவுல அலையவிட்டு அதை வெச்சுச் சம்பாதிக்கிறவளாக்கம் அவ!”

”மை காட்! பொண்ணு ஸ்கூலுக்குப் போறதா சொன்னாளே?”

”பொய்! ஸ்கூலாவது ஒண்ணாவது. சுத்தப் பொய். இவளுக்கு ஏகப்பட்ட கடனாக்கும். திருச்சூர்ல தம்பி இருக்கான். அவன்கூட சரியா இருக்க முடியாம ஓடி வந்தாச்சு. எங்கிட்ட இருந்தே நூத்தம்பது ரூபா கடன் வாங்கியிருக்கு. வீட்டு வேலை ஒண்ணும் தெரியாது. வெறும் கச்சடை. உடம்பெல்லாம் பொய்யி. நான் சொல்றதைச் சொல்லிட்டேன்.”

சோமசுந்தரம் மனைவியைப் பார்த்தான். ஈஸ்வரியின் முகத்தில் தீர்மானமின்மை தெரிந்தது. ”என்னங்க இப்படிச் சொல்றான்?” என்றாள்.

அப்போது அலமேலு அம்மாளும் அவள் பெண் கோமதியும் ஒரு துணி மூட்டை, கோணிப்பை, தகரப் பெட்டி சகிதம் அவர்களை நோக்கி ஆர்வத்துடன் வந்துகொண்டு இருந்தார்கள்.

”இப்ப என்னங்க செய்யறது?” என்றாள் ஈஸ்வரி. சைக்கிள்காரனைப் பார்த்ததும் அம்மாவும் பெண்ணும் பிரேக் போட்டாற்போல் நின்றார்கள்.

”வாங்க அலமேலு அம்மா! வெளியூர் கிளம்பிட்டாப்பல?” என்றான். அவள் பார்வை சரிந்தது.

சோமசுந்தரம் அந்த கோமதியைப் பார்த்தான். வளர்த்தியான பெண். பதினாலு வயசுதான் இருக்கும். குழந்தை முகம். சாயம்போன பாவாடை. சாயம்போன தாவணி. பிளாஸ்டிக் மாலை ஒன்றைக் கடித்துக்கொண்டு இருந்தாள். கன்னங்கரேல் என்று தலைமயிர். கண்கள், கொஞ்சம் கொஞ்சம் தீபா.

”என்னம்மா, இந்த ஆளு உங்களைப் பத்தி வேற மாதிரி இல்ல சொல்றார்?”

”அய்யா! அவர் சொல்றதை நம்பாதீங்க! அவருக்கு நான் பணம் கொடுக்கணும்னு என்ன என்னவோ பொய் சொல்வார். எல்லாம் பொய்! அப்படி எல்லாம் இல்ல!”

”ஏய் மூதேவி! நீ எனக்கு ஒண்ணும் பணத்தை திருப்பித் தர வேண்டாம். வெளியூர்க்காரங்களை ஏமாத்தாதே!”
”அப்ப இவர் சொல்றது நிஜமா பெரியம்மா?”
”பொய்! எல்லாம் பொய்! நான் ஏழை. ஏழை சொல் அம்பலம் ஏறாதும்பா. எல்லாரும் சேர்ந்துண்டு அழிச்சாட்டியம் பண்ணி…”
ஈஸ்வரி, கோமதியைப��� பார்த்துக்கொண்டே இருந்தாள். அந்தப் பெண் பூமியைப் பார்த்துக்கொண்டு கால் கட்டை விரலால் வட்டங்கள் வரைந்துகொண்டு இருந்தது.

ஈஸ்வரி, ”வாங்க போகலாம்” என்றாள்.

”இரு ஈஸ்வரி. இதைச் சரியா விசாரிச்சுரலாம். யார் பொய் சொல்றான்னு பார்த்துறலாம்!” என்றான் சோமசுந்தரம்.

”யார் பொய் சொன்னாலும், யார் நிஜம் சொன்னாலும் இந்த அம்மா நமக்கு வேண்டாம்!” என்றாள் தெளிவாக.

”அப்படி பட்டுனு சொல்லிட்டா எப்படி? உனக்கு உதவிக்கு வேணும்னுட்டுதானே…”

”மெட்ராஸ்லே கிடைக்காத பொம்பளைங்களா?”

”இந்த ஆள் சொல்றது எவ்வளவு தூரம் நிஜம்னு யாருக்குத் தெரியும்?”

ஈஸ்வரி கோபத்தில் வெடித்தாள். ”இப்ப நீங்க கிளம்பறீங்களா இல்லையா?”

சோமசுந்தரம் மௌனமாக காரை ஸ்டார்ட் செய்தான். மெதுவாக நகர்ந்தான். அந்த அம்மாள் அந்தப் பொண்ணுடன் கூட ஓடி வந்தாள். ”அய்யா! அம்மா! அம்மாடி! எனக்கு ஒரு வழி பண்ணிக் குடுப்பேன்னு நினைச்சேன்! ஏதோ பசிக் கொடுமையினால, அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கு இல்லாத கொடுமையில தவறுதலா நேர்ந்திருக்கலாம். நீங்க மன்னிக்கக் கூடாதா? என்னை உங்காத்துல சேர்த்துக்க வேண்டாம். பட்டணத்தில் அழைச்சுண்டுப் போய் ஏதாவது ஒரு ஆசிரமத்துல ரெண்டு பேரையும் சேர்த்துடுங்கோ. புண்ணியம் உண்டு! இந்த இடத்திலிருந்து எனக்கு விடுதலை கொடுங்கோ.” தாடிக்காரனைக் காட்டி, ”இவாதான் என்னை அந்த மாதிரி பண்ணா! இவாதான் சொல்லிக்கொடுத்தா! இவாதான் சொல்லிக்கொடுத்தா!”


”ஸாரி பெரியம்மா. உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியாத நிலையில் இருக்கேன்!” சோமசுந்தரம் கியர் மாற்ற கார் வேகம் பிடித்தது.

அதன் கண்ணாடி வழியாக மூவரும் நிற்பதைப் பார்த்தாள் ஈஸ்வரி. புடவைத் தலைப்பில் அழுதுகொண்டு அலமேலு; சங்கிலியைக் கடித்துக்கொண்டு காலால் தரையில் கோடிட்டுக்கொண்டு கோமதி; சற்று தூரத்தில் அவர்களை வா என்று கூப்பிடும் அந்த சைக்கிள் தாடி.

கருணைக்கும் சில நிபந்தனைகள் உண்டு!



 நன்றி - சுஜாதா , உயிர் மெய், சிறுகதைகள்

1 comments:

”தளிர் சுரேஷ்” said...

கருணைக்கும் சில நிபந்தனைகள் உண்டு ! நிஜம்தான்!