Wednesday, July 25, 2012

எப்படியும் வாழலாம்! - சுஜாதா - சிறுகதை

”உங்களுக்கு வயசு எத்தனை?”


”செரியாச் சொல்ல முடியாதுய்யா!”


”உங்க அப்பாஅம்மா?”


”அவங்கதான் இல்லியே… பூட்டாங்களே… இருந்தாங்கன்னா விசாரிச்சு எத்தனை வயசுன்னு சொல்லலாம்.”




”உங்க சொந்த ஊரு?”


”கோலாருக்குப் பக்கத்துல கொடுமூர்னு ஒரு கிராமம்.”


”தொழில்?”


” ‘….’ன்னு சொன்னா பத்திரிகைல போடுவாங்களா, போட மாட்டாங்களா?”


”போட மாட்டாங்க!”


”அப்ப இரவு ராணின்னு வெச்சுக்க. என்னைப் பொறுத்தவரையிலும் பகல்லயும் நான் ராணிதான்.”


”அப்படியா?”


”என் பேரே ராணிதானே!”


”எழுதப் படிக்கத் தெரியுமா உங்களுக்கு?”


”அதெல்லாம் நல்லா வராதும்மா… எனக்கு வந்த ஒரே கலை அதைப்பத்திதான்… கொஞ்ச நேரம் களிச்சுச் சொல்லப் போறேனே, இருட்டினதும்! என்ன சிரிக்கிறே?”




”உங்களுக்கு வேற எதுவுமே தெரியாதா? யோசிச்சுப்பாருங்க.”




”இதப் பாரு, உங்களுக்கு கிங்களுக்கு எல்லாம் வேணாம். ஒனக்குன்னு சொல்லேன். இன்னிக்கிருந்தா உனக்கென்ன வயசிருக்கும்? நீ, நான்னு கூப்பிடு, பரவாயில்லை… என்னை நீங்க, போங்கன்னு யாரும் கூப்பிடறதே கிடயாது. கூப்ட்டா ஒரு மாரி… க்குள்ள துருதுருங்குது, வேணாம்.”




”சரி உனக்கு வேற ஏதும் தெரியாதா?”


”சின்னப் புள்ளைல போடைஸ்கூல்ல ஆண்டு விளாவிலே பாரதி பாட்டுக்கு டான்ஸ் பண்ணிருக்கேன். ஊதுவோம் ஒதுவோம்னு வருமே அதான்! காலை மடக்கிட்டு, கை தூக்கிக்கிட்டு, சங்கு மாரி கை வெச்சிக்கிட்டு பக்கவாட்டில உக்காந்துகிட்டு ஆடினப்போ, எல்லோரும் உய்யுன்னு விசிலடிச்சாங்க. அப்ப எதுக்குன்னு புரியலை. இப்பப் புரியுது.”


”என்ன புரிஞ்சுது?”


”எனக்கு அப்பவே இடுப்பு பெரிசு!”


”அப்புறம் நடனம் ஆடலியா?”


”ஆ, அத அப்பவே நிறுத்திட்டு… எல்லாம் மறந்துபோச்சு, அந்தப் பாட்டும் பளசாப்போச்சு, எப்பனாச்சியும் சிலோன்ல வெப்பாங்க, அளுகையா வரும்.”


”ஏன்?”
”அதுவரைக்கும் நான் பூ கணக்கா இருந்தேன். அப்பறம்தான் எல்லாமே தப்பா நடந்துபோச்சு.”


”அப்ப நீங்க…. நீ இந்தத் தொழிலுக்கு வந்ததுக்கு வறுமைதான் காரணம்னு சொல்லலாமா?”


”இல்லை.”


”உங்கப்பாம்மா இறந்துபோயி ஆதரவு இல்லாததாலா?”
”அதுவும் இல்லே. அவங்க எறந்துபோனதே போன வருசந்தானே!”
”பின்ன, என்ன காரணம்?”


”காரணம்னு ஒண்ணு இருக்கணுமா என்ன?”


”அப்படித்தான்!”


”அப்படிப் பாக்கப்போனா, என் திமிர்தான் காரணம்னு சொல்லலாம்.”
”திமிரா?”


”ஆமா, திமிர்தான். அந்தாளைப் பாத்து சிரிச்சிருக்க வேணாமில்ல?”


”எந்த ஆள்?”
”ஏதோ ஆளு! இப்ப அவன் பேர்கூட மறந்துபோச்சு, அப்ப கிணத்தாண்டை வந்து சாது கணக்காப் பார்ப்பான். கோயிலுக்கு விசுவாசமா வருவான். ஏதோ காதல் மாரின்னு வெச்சுக்கயேன்…”




”அதுக்கு உங்கப்பாம்மா எதிர்ப்பு தெரிவிச்சாங்களா?”
”ஒரு ….ம் இல்லை.”
”கல்யாணம் செய்துக்கறதா சத்தியம் பண்ணினானா?”
”அதும் இல்லியே. கல்யாணம் பண்ணிக்கறதா கூட்டிட்டுப் போறதாத்தான் இருந்தான். நாந்தான் அதுக்குள்ள…”
”அதுக்குள்ள?”
”அதுக்குள்ள வேற ஆளைப் பாத்துக்கிட்டேன். ரைஸ் மில் வெச்சிருந்தான். களுத்தில் புலி நகம் போட்டு சங்கிலி தொங்கவிட்டிருந்தான். டூரிங் கொட்டாய் வெச்சிருந்தான். அங்க அளைச்சிக்கிட்டுப் போயி பச்சையா ரூம்பு இருக்கும் பாரு, அங்க தீ பக்கெட்டுக்குப் பக்கத்தில் உக்காத்திவெச்சுருவான். சோடா வாங்கிக் கொடுப்பான். வயக்காட்டுக்குக் கூட்டிட்டுப்போய் நெலா வெளிச்சத்தில் ரீல் போட்டுக் காட்டினதெல்லாத்துக்கும் மாத்தா நோட்டு கொடுப்பான்.”




”அந்த மனிதனுடன் ஸ்திரமா எதும் சினேகிதம் வெச்சிக்க விருப்பமில்லியா உனக்கு?”


”இல்லியே… அவன் பெண்டாட்டி வந்து சத்தமா அளுது. ஜாய்ட்டில இருந்து தாலியை எடுத்துக் காட்டி, ‘என்னைக் காப்பாத்து என் புருசனை எங்கிட்டருந்து பிரிச்சுராத’ன்னு சக்களத்தி மாதிரிப் பேச, இன்னடாதுன்னு ஆயிருச்சு. நம்மால ஒரு குடும்பம் நாசமாவுறது வேண்டான்னு… கோலார்ல டிராமா போட்டாங்க. அதுல, ‘பார்ட்டு எடுத்துக்கறயா?’ன்னு நடராசன்னு ஒரு ஆளு கேட்டாரு. கதை வசனம் எல்லாம் பொம்பாடா எளுதுவாரு. என்னை வெச்சு பாட்டு எளுதி, ஆர்மோனியத்தில் ஙொய் ஙொய்னு பாடிக் காட்டினாரு. ஜார்செட்டில சேலை எடுத்துக் கொடுத்து, ரொம்ப மரியாதையாத்தான் வெச்சுக்கிட்டிருந்தாரு. ஊரூராப் போயி நாடகம் போட்டோம். எனக்கு வில்லி பார்ட்டுதான்கொடுப் பாங்க. வசனம் அவ்வளவு பேச வராதுன்னுட்டு. குலுக்கி ஒரு ஆட்டம் காட்டுவேன். விசில் அடிப்பாங்க.”


”நடராசு என்பவரோடு நீ ஒரு ஸ்திர வாழ்க்கைஅமைச்சுக் கலையா?”


”அதுக்குள்ளதான் அந்தாளு போய்ட்டாரே?”
”எங்க…?”
”செத்துப்போய்ட்டார், ஆஸ்பத்திரில ரெண்டு நாள் மயக்கமா இருந்துட்டு.”
”வருத்தப்பட்டியா?”
”வருத்தப்பட்டு முடிக்கிறதுக்குள்ளே வீரராகவன்னு ஒரு எண்ணெய் மண்டிக்காரரு வந்துட்டாரு!”
”எப்ப பங்களூர் வந்தே?”
”பாத்தியா, உனக்கே கசப்பா இருக்கு, இல்லியா?”
”அப்படி இல்லை. நீ இந்த வாழ்க்கைக்கு வந்த காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாது போல இருக்கு…”
”அதான் சொன்னேனே, திமிர்தான். பேசாம மாமனையோ மச்சானையோ கல்யாணம் கட்டிக்கிட்டு இந்த வருசத்துக்கு எட்டு பெத்துப் போட்டிருக்கலாம். அப்படிச் செய்யலை. ஏதோ தப்புய்யா என்கிட்ட! புத்தி ஒரு நிலை இருக்காது. ஒரு ஓட்டல்ல போனா நாலு பேர் பாக்குறாங்கன்னு ஃபேமிலி ரூமுக்குள்ற நுளைய மாட்டேன். பாக்கட்டுமேன்னு முன்னாலதான், தனியாத்தான் காப்பி சாப்பிடுவேன். ஆம்பிளைங்கள்லாம் பாக்கறப்போ, எனக்கு சிரிப்பாத்தான் வரும். எங்கிட்ட அசட்டுத்தனமா என்னமோ குடிச்ச மாடு மாதிரி வழியாதவங்களே இல்லை. இப்ப நீயே வந்திருக்கில்ல… இப்ப உன்னை, பேனாவைத் தூக்கி எறிஞ்சுப்புட்டு அப்புறம் பாத்துக்கலாம்னு சட்டையைக் களட்டவெக்கட்டுமா?”


”வேண்டாம். என் கேள்விக்கெல்லாம் பதில் சொன்னாப் போதும்!”
”கல்யாணம் ஆயிருச்சாய்யா உனக்கு!”
”பேட்டி உன்னைப்பத்தினது!”
”கல்யாணம் ஆனவங்கதான் ரொம்ப பேர் வராங்க. அது ஏன்யா? பொண்டாட்டிகிட்ட இருக்கறதுதானே எங்கிட்டயும் இருக்குது! அது இன்னா புரியலியே..?”
”வர்றவங்கூட பேசுவியா?”
”நான் ஏன் பேசணும்? அவங்களே பேசுவாங்க. பெரும்பாலும் குடிச்சிருப்பாங்க. தொரதொரன்னு அவங்க வாழ்க்கைய வாந்தி எடுத்துருவாங்க.”
”உன்னைப் பத்தி யாரும் கேட்பாங்களா?”
”கேட்பாங்க. இப்ப நீ கேட்ட பாரு, அந்த மாதிரி ‘ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தே?’னு சில பேர் கேட்பாங்க. பெரும்பாலும் சின்னப் பசங்க. என் தம்பி கணக்கா வர்றாங்களே, தாடி வெச்சிக்கிட்டு சூடண்சுங்க, அவங்கதான் கேட்பாங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கத சொல்வேன். தங்கச்சியைப் படிக்க வெக்கறம்பேன் எங்கப்பாவுக்கு ஒரு கால் விளங்காது. அல்லாங்காட்டி அம்மாளுக்குக் கண்ணு ரெண்டும் குருடு…”


”அப்படின்னா, நீ எங்கிட்ட சொல்லறதுகூட கதைதானா?”
”சேச்சே…. இது பேப்பர்ல போடறதாச்சே! பேப்பர்ல பொய் சொல்வாங்களா? ஏன்யா, போட்டோ உண்டுல்ல?”
”போட்டா போச்சு!”
”போட்டோவைப் பார்த்து ஒரு பணக்காரன், தியாகி என்னைய முளுசா கல்யாணம் பண்ணிக்க வந்துரலாமில்ல? விலாசம் என்ன போடுவே?”
”விலாசம் வேண்டுவோர் எழுதவும்னு போடலாம்.”
”அப்படிப் போடாதே. நிறையப் பேர் எளுதுவாங்க. வேற விசியமுன்னு…. ஆமா நீ இன்னா பேர்ல எளுதறன்னு சொன்ன?”
”சுஜாதா!”
”அட, நான் படிச்சிருக்கன்யா, பொம்பாடா இருக்கும். எல்லாத்திலியும் எளுதுவே போல இருக்கே. அது இனாது நடுப்பகல் ரத்தமா? பொம்பாடு கய்யா அது? மத்தியானம் முளுக்க வேல சோலி ஏதும் கடியாதா? லாட்ஜிலயே அறுத்துக்கிட்டு சும்மனாச்சியும் உக்காந்துகினு இருக்கறபோது தொடர் கதை படிப்பேன். எல்லாத் தொடர்கதையும் எனக்குப் புடிக்கும். அதுல வர்றவங்க கஸ்டப்பட்டா எனக்குப் பேஜாரா இருக்கும். சிரிச்சு சந்தோஷமா இருந்தா, எனக்குப் பொம்பாடா இருக்கும். நிறைய பத்திரிகிங்க இருக்குறதாவல, கொஞ்சம் பாபு யாரு, விமலா யாரு, ரங்கய்யா யாருன்னு கம்ப்யூஸ் ஆயிரும், அதனால பரவால்ல, அங்கங்க அஜிஸ் பண்ணிக்கிடுவேன். தொடர்கதைல வர்றவங்க அத்தினி பெரும் எனக்கு சிநேகிதங்க…. மத்தியான சிநேகிதங்க… வாரா வாரம் திரும்ப வர்ற சினேகிதங்க. அது போல ராத்திரியும் சிநேகிதங்க உண்டு. அவங்களும் சில பேர் வாரா வாரம் வருவாங்க…. எனக்கு கதை சொல்லுவாங்க. அந்த கதைங்கள்லாம் வேற மாதிரி இருக்கும்.”




”உனக்கு இந்தத் தொழில் இஷ்டமா?”
”வேற தொழில் ஒண்ணும் தெரியாதே எனக்கு.”
”கத்துக்கலாமே.”
”எதுக்கு?”
”அப்படிக் கேட்டா… இது வந்து…



”ஒரு நாளிக்கு எவ்ள வர்றது தெரியுமா உனக்கு! லாட்ஜிக்காரரு சும்மா சொல்லக் கூடாது நல்லவரு. காசுல குறைக்க மாட்டாரு. செவ்வாக்கிளமை எண்ணெய், சீக்கா தருவாரு. அப்பப்ப அமிதாப்பச்சன் படம் பாத்துட்டு வரணுமுன்னா பேட்டா தருவாரு. ‘இத பாரும்மா, நாமெல்லாம் ஒரு குடும்பம் போல. எல்லாரும் எனக்கு சமம்தாம்’பாரு… இப்ப சாவித்திரியை எடுத்துக்க, குளந்தை உண்டாயிருச்சு. செரியாப் பார்க்காம லேட்டாயிருச்சு. டாக்டரு ஒண்ணும் செய்ய முடியாதுன்னுட்டாரு, என்ன பண்ணாரு முதலாளி? தொரத்திவிட்டாரா? ‘சாவித்திரிம்மா, நீ பெத்து பொளைச்சு ஒடம்பைத் தேத்திக்கிட்டு வர்ற வரைக்கும் வேலை செய்ய வேண்டாம். நான் ஆஸ்பத்திரி செலவைப் பார்த்துக்கறேன்’னு சொல்லிட்டாரு… தாராள மனசு.”




”குழந்தை பிறந்ததா?”
”ம், பொண்ணு! லாட்ஜில்தான் வளருது, சாவித்திரி வேலைக்குத் திரும்பிச்சில்ல…”
”லாட்ஜிலயா? இங்கயா?”
”ஆமா… எங்க எல்லாருக்கும் குளந்தய்யா அது!”
”அப்பா யாருன்னு…”
”திருப்பதி வெங்கடாசலபதிதான் அப்பா! நல்லா கொளுக்குமுளுக்குன்னு இருக்குது. பாக்கறியா!”
”இப்ப வேண்டாம், பட்…. ராத்திரி வேளைல குழந்தையை…”
”ஒண்ணும் பிரமாதமில்ல, சாவித்திரி வர்ற வரைக்கும் அஞ்சு பத்து நிமிசம் நாங்க யாராவது பாத்துப்போம். பெரும்பாலும் ஏளு மணிக்கு வசதியா தூங்கிப்போயிரும்! அப்பப்ப எளுந்திருச்சி அளுதா, கொஞ்சம் உச்சு உச்சுன்னா அடங்கிப்போயிரும். இல்லை, ஒரு ஸ்பூன் பிராந்தி கொடுத்துருவா. பம்பரம் கணக்கா உறங்கிடும். அவசரத்துக்குக் கட்டிலுக்கு அடிலேயே படுக்கப்போட்டுருவா. சத்தமே வராது…ஏன்யா பேசாம இருக்கே? இதுல ஒரு தமாசு பாரு… போன மாசம்தான் நடந்தது. ஒரு ஆளு டேசன்ல இருந்து நேரா பொட்டி படுக்கையோட இங்க வந்திருக்கான். என்னமோ அவனுக்கு தலைபோற அவசரம்! ரூம்புல தங்கிட்டு பெட்டியை வெச்சுட்டு தலை வாரிக்கிட்டு வர மாட்டானோ? நேரா இங்கதான் தகரப் பொட்டியும் மலாய் செருப்புமா வந்துட்டான். சாவித்திரிதான் போயிருந்தா. குழந்தையைக் கட்டிலுக்கடில படுக்கவெச்சுட்டிருந்தா…”
”பாதில என்ன ஆயிருக்கு. குழந்தை முளிச்சுக்கிட்டுப் பெரிசா அழ ஆரம்பிச்சுருச்சு. அந்தாளு ஒரேடியா பயந்து படக்குன்னு எந்திரிச்சு ஒரே ஓட்டமா ஓடிட்டான். ‘இன்னாடாது, இப்பதானே ஆரம்பிச்சம், அதுக்குள்ள குழந்தையா?’ன்னு ஆயிருச்சோ என்னவோ! ஒத்தக்கால் செருப்பை போட்டுக்காமயே ஓடிப் போய்ட்டான். எப்படி டமாசு! இல்லை, ஒரு வேளை அவன் குளந்தை கியாபகம் வந்துருச்சோ என்னவோ?”




”இந்த இடத்துக்கு ஒரு நாளைக்கு எத்தனை பேர் வருவாங்க!”
”அதெல்லாம் ரயில் டேசன் மாதிரி, கணக்கு  இல்லிய்யா.”
”உங்களுக்குள்ள போட்டி உண்டா?”
”சேச்சே… இருக்கறவங்களே ஆள் பத்தலை. கூட ஆளு போடுங்கன்னு முதலாளிகிட்ட அரிச்சுகிட்டிருக்கோம்.”
”முதல்ல வர்றவங்க எப்படி இங்கே வர முடியும்?”
”நம்ம ஆளுங்க, அங்கங்க சினிமாக் கொட்டாயாண்ட, ஓட்டலாண்ட, அப்புறம் காபரே முடிச்சுட்டு வெளியே வராங்களே, எல்லாத்தையும் ரோந்து சுத்திக்கிட்டு இருப்பாங்க. ஒரு ஆளைப் பாத்தா, பாத்தாலே கஸ்ட்மரா இல்லியான்னு கண்டுபிடிச்சுக் கூட்டியாந்துருவாங்க. உள்ள அனுப்பறதுக்கு முந்தியே கமிசன் வாங்கிடுவாங்க. அடுத்த ஆளைக் கூட்டியாரப் போயிருவாங்க.”
”உங்களை மாதிரி எத்தனை பேர் இந்த ஊர்ல இருக்கீங்க?”
”பத்தாயிரம் பொண்ணுங்க இருக்கோம்னு ஒருமுறை இன்ஸ்பெக்டரம்மா சொன்னாங்க. அட, சொல்ல மறந்துரப்போறேன்…. தற்கொலை செஞ்சுக்கறத்துக்கு முந்தி ஒரு பையன் எங்கிட்ட வந்தான்யா, சின்னப் பையன்தான்.”
”அப்படியா, அவனுக்கு…”
”புத்தி சொன்னியான்னு கேக்கறியா? அதான் இல்லை. போய் பண்ணிக்கடான்னு சொல்லிட்டேன்.”
”அப்புறம் என்ன ஆச்சு?”
”அதும் டமாசு கதை. இதபாரு, இந்த மாலை அவந்தான் கொடுத்தது, எவ்வளவு இருக்கும்?”
”அவன் என்ன ஆனான்..?”
”சொல்றேன், கொஞ்சம் இரு. ஆளு வந்திருச்சு. சித்த நேரத்துக்கு தொடரும் போட்டு வையி…. போய்ட்டு வந்து சொல்றேன்…”
”என்ன அதுக்குள்ள வந்துட்ட..?”
”அந்தாளுக்கு சரசாதான் வேணுமாம்… எங்கேஜா இருக்குது. காத்திருக்கான். என்ன ஒரு மாதிரி ஆயிட்டே?”
”அதிர்ச்சி. நீ உள்ள வர்றபோது கொஞ்சம் நொண்டறதைப் பார்த்தேன். கால்ல என்ன?”
”அதுவா…. ஒருமுறை ‘ரெய்டு’ம்போது கூரை மேல் எகிறிக் குதிச்சு ஓடினனா… அப்ப மடங்கிக்கிச்சு. இன்னும் சரியாகலை. புத்தூர் வைத்தியம் பார்க்கணும்.”
”ரெய்டா..?”
”ஆமா; அப்பப்போ மாமூலா போலீசு பளுப்பா வண்டில ரேடியோ எல்லாம் வெச்சுக்கிட்டு வருவாங்க. பெரும்பாலும் முன்னாடியே தகவல் வந்துரும். சில நாளு தெரியாமப் போயி மாட்டிக்கிடுவோம். வர சமயம் பாத்து பையன் மணி அடிப்பான். போட்டது போட்டபடி பாதி எந்திரிச்சி, எகிறிக் குதிச்சு மொட்டை மாடி ஓடிருவோம்.”
”எப்பவாவது அகப்பட்டிருக்கியா?”
”ஓ, எத்தினியோ வாட்டி.”
”அகப்பட்டா அடிப்பாங்களா.?”
”சேச்சே…. சும்மா சொல்லக் கூடாது. அடிக்கல்லாம் மாட்டாங்க. டமாசா பேசிக்கிட்டே டேசனுக்குக் கூட்டிப் போவாங்க. காலைல கோர்ட்டுக்குக் கூட்டிப் போவாங்க. மேஸ்திரேட்டும் தங்கமான மனுஷன். ‘என்ன ராணி திரியும் வந்துட்டியா?’ன்னு விசாரிப்பாரு. வக்கீலுக்குத் தெண்டம் அளுதா, ஃபைனோட விட்டுருவாங்க. முதலாளிதான் கட்டித் திரியும் அளைச்சுக்கிட்டு வந்துருவாரு.”
”பின்ன ஏன் போலீசுக்குப் பயந்து ஓடணும்.”
”ரெண்டு மூணு நாள் வருமானம் போயிடுதில்ல?”
”ஏதோ ஒரு பையனைப் பத்திச் சொல்லவந்தியே?”




”பாத்தியா, மறந்தே போய்ட்டேன். ஒரு நாள் ராத்திரி என்னாச்சு, மணி எட்ரை இருக்கும். இந்தாளு வரான் திருதிருன்னு முளிச்சிக்கிட்டு. ஆளு புதுசு. பதினேழு பதினெட்டு வயசுதான் இருக்கும். சட்டை கால்சராயெல்லாம் ஒளுங்கா மாட்டிக்கிட்டிருக்கான். நான் நாலஞ்சு பேரு வரிசையா நிக்கிறோம். பேசாமா நிக்கிறான். ‘இன்னா தம்பி, சீக்கிரம் சொல்லு. எங்களுக்கும் வேற வேலை இருக்கு பாரு’ன்னேன். நிமிர்ந்து ஒரு தபாகூடப் பார்க்க மாட்டான். ‘ஊம், எதுக்கு வந்த?’ன்னு கேட்கறேன். ‘எதுக்கு வந்தேன்?னு அவனும் கேக்கறான். டமாசு பாரு, இன்னும் கேளு. பொம்பாடா இருக்கும். ‘சொல்லித் தரவா?’ன்னு கேக்கறோம். சின்னப் பையன் கைல மோதரம். பைல நோட்டுங்க தெரியுது. ‘எத்தினி காசு வெச்சிருக்க?’ன்னு சும்மானாச்சியும் கேட்டுப் பார்த்தேன். நோட்டை எடுத்துக் காட்டறான். அம்மாடின்னு ���யிருச்சு. எண்ணிக்கிட்டே இருக்கான். எல்லாம் பச்சை நோட்டு!


‘அச்சடிக்கிறியா?’ன்னு கேட்டன். சரசு, சாவித்திரி, ராமம்மா மூணு பேரும் உஷாராய்ட்டாங்க. இன்னா வலை போடறாளுக, சாலாக்குப் பண்றாளுக. உதட்டைக் கடிக்கிறா, உச்சுங்கறா, மார் பொடவை பறக்குது. ராமம்மா படக்குனு போயி சட்டை டிராயர் மாத்திக்கிட்டு வந்துருச்சு. அந்தப் பையன் யாரையும் பாக்கல. ‘யாராவது ஒருத்தர் சொல்லுப்பா, சீக்கிரம்’னேன். திடீர்னு என்னைப் பார்த்து, ‘நீ வா!’ன்னான்; மத்தவங்க மூஞ்சியப் பார்க்கணுமே?




நான் அவனைக் கூட்டிட்டு ரெண்டாம் நம்பர் ரூம்பில்ல அதான் கொஞ்சம் டீஜென்ட்டா இருக்கும். அங்க இட்டாந்தேன். அவன் உள்ள வந்து படுக்கை மேல உக்காந்துகிட்டான். நான் கதவைச் சாத்திட்டு தலையை முடிஞ்சுக்கிட்டு, மேலாக்கை உதறிட்டு பக்கத்தில் போய் உக்காந்துகினேன். முகத்தைத் திருப்பினேன்…. பொட்டை மாதிரி அளுதுகிட்டே இருக்கான். ‘எதுனாச்சியும் சாப்பிடறியா? பையனை ஆனுப்பி அரை புட்டி பீட்டர் ஸ்காட்டு வாங்கியாரவா?’ன்னு கேட்டா, வேணாமாம். ‘பின்ன என்னதான் வேணும்?’னேன். ‘சும்மா இருக்கேன், ஒண்ணும் வேணாம்’கறான். ‘இத பாரு இங்க சும்மா ஒண்ணும் வராது’ன்னேன். அவன் உடனே தன் பைல உள்ள அத்தினி பணத்தையும் என் கைல, ‘இந்தா வெச்சிக்க’ன்னு கொடுத்துட்டான். எனக்குப் பயமாயிருச்சு.




‘ஏன்யா?’ன்னேன். ‘எனக்கு உயிர் வாழ்றதுக்கு இஸ்டமில்லை’ன்னான். ‘எனக்கு இஸ்டம்’னேன். ‘எனக்குச் சாவணும். ஏதாவது வழி சொல்லு’ன்னான். ‘இதுல என்ன கஸ்டம்…. வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ்ல போய் தலையைக் கொடு. நேரா மோச்சம்தான்’னேன். டமாசுக்கு சொன்னேன். அவன் நிஜங்காட்டியும்னுட்டு, ‘அந்த எக்ஸ்பிரஸ் எத்தினி மணிக்கு வருது?’ங்கறான். அப்புறம் கொஞ்ச நேரம் சும்மா தன் கையையே பார்த்துக்கிட்டு இருந்தான். ‘நான் வரேன்’னு போய்ட்டான். என்னைத் தொடக்கூட இல்ல. பணம் ஐந்நூறோ என்னவோ இருந்துச்சு. முதலாளிக்கு வேர்த்து வந்து வாங்கிக்கிட்டு போய்ட்டார்.”




”அவன் ஏன் சாக விரும்பினான்னு நீ கேக்கவே இல்லையா?”
”அதையேன் நான் கேக்கணும்? அவனுக்கு என்ன துக்கமோ, என்ன தாளாமையோ…. அதெல்லாம் கஸ்டமருங்ககிட்ட நான் வெச்சுக்கிறதில்லை.”
”அவனைப் பததி அப்புறம் ஏதும் தெரியலையா?”
”ஒருமுறை சூப்பர் கொட்டாயில சிவாஜி படம் பாக்கப் போய்க்கிட்டிருந்தப்ப எதிர்த்தாப்பல மோளம் அடிச்சிக்கிட்டு கூட்டமா வருது…. இன்னாடான்னு ஒதுங்கிப் பாத்தா அசப்புல இந்த ஆளு மாதிரிதான் இருந்தது.”
”சவ ஊர்வலமா?”
”இல்லை, கல்யாணம். வடக்கத்திக்காரன் போல, சேட்டு போல இருக்கு. குதிரை மேல தலைல கும்பாச்சியா வெச்சுக்கிட்டுப் போறான். கல்யாணம்தானய்யா அது. ஏன்னா உயிர் இருந்தது. என்ன சிரிக்கிறே?”
”தேங்க்ஸ்! உன் டயத்தை ரொம்ப எடுத்துக்கிட்டேன்!”
”எனக்குன்னு டயமே கிடையாதுய்யா!”
”நான் வரட்டுமா?”
”இரு.”
”என்ன…”
”இத்தினி நேரம் என்னைய இத்தினி கேள்வி கேட்டியே… நான் உன்னைக் கேக்க வேண்டாமா?”
”கேளு தாராளமா.”
”நான் சொன்னதை எல்லாம் எளுதப் போறியா?”
”ஆமாம். அப்படியே மாத்தாம.”
”அதுக்குப் பணம் கொடுப்பாங்களா?”
”ஆமா. அந்தப் பணத்தை உங்கிட்ட கொண்டு கொடுத்துர்றதா உத்தேசம்.”
”நான் அதுக்குச் சொல்ல வரலை. நீயும் நானும் ஒண்ணுன்னு சொல்ல வரேன். உனக்கு ஒரு தெறமை இருக்கு எளுதுற தெறமை. அதை உபயோகிக்கறே. காசு வாங்கறே. என் தெறமை இது ஒண்ணுதான். நானும் அதைக் காட்டிக் காசு வாங்கறேன். என்ன சொல்றே?”
”அப்படிப் பார்த்தா எல்லா உத்தியோகத்துக்கும் இது பொருந்தும் இல்லையா?”
”இப்ப இந்தப் போட்டி பண்ணியே, இதுக்கு ஏதாவது பலன் உண்டா?”
”போட்டி இல்லை, பேட்..!”
”சரி, பேட்டி.”
”நான் இந்தப் பேட்டிக்கு வந்த காரணம் வேற. அதனோட பர்ப்பஸே வேற. உன் சின்ன வயசுல நடந்த நிகழ்ச்சிகளில் எங்கயோ அந்தக் காரணம் பொதிஞ்சிருக்கு…”
”பொதிஞ்சிருக்குன்னா?”
”மறைஞ்சிருக்கு.”
”என்ன காரணம்?”
”நீ ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தேன்…னு?”
”காசு சம்பாதிக்க.”
”நான் அந்த அர்த்தத்திலே கேக்கலை ராணி… ஆல் ரைட். நீதான் இந்த தர்க்கத்தை ஆரம்பிச்சுக் கொடுத்தே… உன்னைக் கேக்கறேன். நீ பண்றது தப்பான காரியம்னு உனக்கு எப்பவாவது தோணுதா?”
”தப்பா… எனக்குப் புரியலை.”
”பாவம்னு புரியுதா?”
”இப்ப நான் செய்யறது பாவம்கறியா… அப்ப என்னைத் தேடி வர்றவங்க செய்யறது!”
”தேடி வரும்படியான சூழ்நிலையை ஏன் உருவ… ராணி! எனக்கு இதைச் சரியா உனக்குப் புரியும்படியா கேக்கத் தெரியலை. இத பாரு? வாழறதுக்கு எத்தனையோ வழி இருக்கு இல்லையா? உன்னை மாதிரி பெண்கள் இப்பல்லாம் எத்தனையோ நவீனமான காரியங்கள் பண்றாங்க. ஏரோப்ளேன்கூட ஓட்டறாங்க. கம்ப்யூட்டர்னு ஒண்ணு இருக்கு. அது எல்லா கணக்கும் போடும். அதை எல்லாம் இயக்கறாங்க!”
”ஆ! அடி ஆத்தே!”
”இது நீ வியக்கறதுக்காகச் சொல்லலை ராணி… இப்ப உன்னை ‘ரெய்டு’ பண்ணி அரஸ்ட் பண்ணாங்களே போலீஸ் ஆபீஸர்…”
”அவங்ககூட பொண்ணுதான். நீ இன்னாங்கறே? எனக்குப் புரியலியே.”
”ராணி! ஒழுங்கா வாழறதுக்கு எத்தனையோ வழிகள் இருக்கறப்போ. உலகத்தில் மிகப் புராதனமான தீமை இந்த ப்ராஸ்டிட்யூஷன். இதில் போய் மாட்டிக் கிட்டு…”
”எனக்கு இதான்யா தெரியும். வேற எதும் தெரியாதே. நானும் காதல் பண்ணிப் பார்த்தேன். டிராமா ஆடிப் பார்த்தேன். எங்க பார்த்தாலும் போட்டி! எங்கயும் எனக்கு செரிப்படலை. இங்கயும் போட்டிதான். ஆனா டிமாண்டு இருந்துகிட்டே இருக்கு. இப்ப நீ என்ன செய்யணும்கறே? இதெல்லாத்தையும் விட்டுட்டு ஏதாவது கவுரதையா தொழில் செய்யணும்கறியா?”
”ஆமா.”
”எனக்கு ஏதாவது அந்த மாதிரி ஏற்பாடு செய்து தர்றியா?”
”அதுக்குன்னு சில மறுவாழ்வு ஸ்தாபனங்கள்லாம் இருக்கு.”
”மறு வாள்வா. பாருய்யா, அதையும் நான் பாத்துட்டு ஆறு மாசம் இருந்துட்டு வந்திருக்கேன்! சுவர் எத்தினி அடி உசரம் தெரியுமா? பத்தடி. உள்ள தைய ஊசி கொடுத்து கிளிஞ்ச துணியையே திருப்பித் திருப்பித் தெக்கச் சொல்வாங்க. அரை வயித்துக்குச் சோறு. ஏஜென்ட்டுகளுக்கும் அட்டண்டர்களுக்கும் கனிக்ஷன். கொடுத்த காசை அவங்களே சாப்பிட்டுக்கிட்டு யாராவது பெரிய மனுசங்க வர்றப்போ மட்டும் புதுசா துணி குடுத்து உடுத்துக்கச் சொல்லி, ரொம்ப பித்தலாட்டம்யா… அப்புறம் அதுல நடக்கிற வேற ஒரு கூத்தைச் சொல்லட்டுமா? எளுதுவியா?” ”வேண்டாம்.”
”மறு வாள்வு, மறு வாள்வுகங்கறியே இன்னாய்யா அது?”
”இத பார் ராணி. நீ இந்தப் பேட்டியுடைய ஆரம்பத்தில் சொன்னது ஞாபகம் இருக்கா? நீ இந்தத் தொழிலுக்கு வந்ததுக்குக் காரணம் ஏழ்மை இல்லைன்னு…”
”இப்பவும் சொல்றேன் திமிருதான் காரணம்னு.”
”காரணம் அதில்லை. சூழ்நிலைதான்…. சமூகச் சூழ்நிலை. இந்தப் பாவத்தை அனுமதிக்கிற நம் சட்டங்கள்ல இருக்கிற ஏராளமான ஓட்டைகள். உன்னை ‘ரெய்டு’ பண்ணிப் புடிச்சா, எப்படி மூணாவது நாள்ள திருப்பி இந்த வேலைக்கு வந்துர முடியுது உன்னால? சட்டம் போதாது. இதனால கம்யூனிஸ்ட் நாடுகளில் ப்ராஸ்டிட்யூஷன் கிடையாது தெரியுமா?
”அது என்ன மிஷினி?”
”சரிதான்! நான் வரட்டுமா?”
”இருய்யா, ஒரே ஒரு சின்ன விசயம் பாக்கி இருக்குது.”
”சொல்லு!”
”இதுவரைக்கும் மறுவாள்வு அது இதுன்னு பெரிசா பேசறல்ல பிரமாதமா… என்னைக் கல்யாணம் பண்ணிக்குவியாய்யா..?”
”எனக்குக் கல்யாணம் ஆய்டுச்சே…”
”இப்ப கல்யாணம் ஆவலைன்னு வெச்சுக்க.”
”….”
”ஏன் பேசாம இருக்கே? பதில் சொல்லத் தெரியலை. அப்ப என்னைப்பத்தி பத்திரிகையிலே எழுதப் போறல்ல, இதையும் எளுது. மகா சனங்களே! ஆமா, நான் செய்யறது பாவந்தான். தப்புதான். இவுரே சொல்லிட்டாரு. அதுக்கெல்லாம் காரணம் நான் வளர்ந்த சூழ்நிலைதான்னுட்டு. ஏதோ சந்தர்ப்பவசத்தால நான் இந்த தொழில்ல வந்து மாட்டிக்கிட்டேன். என்னை இதுல இருந்து விடுவிச்சு கூட்டிட்டுப் போக உங்கள்ல என் கதையைப் படிக்கிறவங்க இருந்தாங் கன்னா பெங்களூர் கிக்பேட்டை விஜயலட்சுமி கொட்டா யண்ட வந்து, பக்கத்துல சந்து இருக்குது. அதுல நுளைஞ்சா செட்டுக்கு மாடில இருக்குது லாட்ஜு. அங்க வந்து யாரை வேணா ராணின்னு கேட்டா போதும். உடனே என்னைக் கூப்பிடுவாங்க. பகல் வேளைல வாங்க. சாயங்காலம் அஞ்சரைக்கு மேல கொஞ்சம் பிஸியா இருப்பேன்… வாங்க நான் காத்துக்கிட்டு இருக்கேன். மறுவாழ்வு தாங்க இத இப்படியே போடுய்யா.”
”சரி.”

2 comments:

N.Manivannan said...

எப்படியும் பதிவு போடலாம்

”தளிர் சுரேஷ்” said...

கடைசி வரிகள் நச்! சிறப்பான கதை! நன்றி!