Sunday, November 10, 2013

LOOSIYA - சினிமா விமர்சனம் ( மாற்றான் தோட்டத்து மல்லிகை - கன்னட சினிமா)


ரசிகர்களுக்காக எடுக்கப்படுகின்ற படம் ஒரு ரகம் என்றால், ரசனைக்காக எடுக்கப்படுகின்ற படம் மற்றொரு ரகம். ரசனைக்காக ரசிகரின் நிதியால் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் ரசிக்க வைக்கத் தவறுமோ!கடந்த பத்து வருடங்களில் கன்னட திரைப்படங்கள் நம் ஊரில் பெரிதாக ரீச் ஆகாமலே இருந்தது. என்னதான் கிரீஷ் காசரவள்ளி போன்ற இயக்குனர்கள் நல்ல நல்ல படங்களை இயக்கினாலும், ஆர்ட் ஹவுசின் பிள்ளைகளாகிய அப்படங்கள் இத்தலைமுறையினரை பெரிதும் ஈர்காமலே போனது. 'சத்யஜித்ரே' துவக்கிய டிராமா வடிவ சாயலிலே அமையப்பட்ட கதைக்களமே இதற்கு ஒரு காரணமாக அமைந்தது.


ஆர்ட் ஹவுஸ் சினிமாவை சாமானியனுக்கும் கொண்டுசேர்த்து, சர்வதேச மேடைக்கும் கொண்டுசேர்த்து, கன்னட சினிமாவை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது சமீபத்தில் வெளியாகியுள்ள 'லூசியா'.


படத்தலைப்பு போடும்பொழுதே 'சர்க்கரையால் இனிப்பு இருக்கிறதா? இல்லை இனிப்பால் சக்கரை இருக்கிறதா? இல்லை இவ்விரண்டும் நாவினால் இருக்கிறதா?', 'பூவினால் நறுமணம் இருக்கிறதா? நறுமணத்தால் பூ இருக்கிறதா? இல்லை இவ்விரண்டும் சுவாசத்தால் இருக்கிறதா?' இப்படி நறுக் நறுக்கென கொட்டும் பல கேள்விகள். படம் தொடங்கும் முன்னரே கவனமாக பாருங்கள் என்று ரசிகர்களை மறைமுகமாக எச்சரிக்கிறார் இயக்குநர். இல்லை, இல்லை இந்த சப்தத்திலிருந்தே படமும் துவங்குகிறது.


'லூசியா' - பெயரைக் கேட்டவுடன் ஏதோ ஒரு பிரெஞ்சு பெண் பற்றிய படமோ என்றால் அதெல்லாம் கிடையாது. 'லூசியா' என்பது ஒரு மருந்து. ஒரு மனிதனை தன் நிலையை மறக்க வைத்து, உறங்க வைக்கும் மாத்திரை. சரி இதில் என்ன விசேஷம்? மனிதனை உறங்க வைக்கின்ற தூக்க மாத்திரையை வைத்து ஒரு கதையா? இது தூக்க மாத்திரை அல்ல ஒருவனை தூக்கும் போதை மாத்திரை! மனிதனைக் கனவில்தான் நினைத்த வாழ்கையை வாழ வைக்கும் லாகிரிவஸ்து.

லூசியா படத்தின் இயக்குனர் பவன் குமார் (படம்: கே.முரளி குமார்)
லூசியா படத்தின் இயக்குனர் பவன் குமார் (படம்: கே.முரளி குமார்)

உரக்கமின்றி தவிக்கும் நாயகன், 'லூசியா'வை எடுத்துக் கொள்கிறான். நிகழ்காலத்தில் தான்விழைந்த வாழ்க்கை கனவில் அவனுக்கு அமைகிறது. நிகழ் காலத்தில் தான் சந்தித்த மனிதர்களும் கனவுலகில் வெவ்வேறு தோற்றத்தில் அமைகின்றனர். நிகழ் காலத்தில் தான் விரும்பிய பெண் கனவில் காதலியாகிறாள்... தனது சாமானிய ஆசை ஜனிக்கும் தருணங்கள்... இப்படி பல ஆசைகள் கனவில் ஈடேருகிறது.


கனவில் தான் நாயகன் வாழ்கிறானா? இல்லை இவன் வாழ்கையே ஓர் கனவா? இப்படி பல கோணங்களில் செல்கிறது திரைக்கதை. இந்த முடிச்சுகளை வைத்து சாதுர்யமாக தொகுக்கப்பட்டுள்ளது இந்தப் படம்.


இதற்கு மேலும் இக்கதையை விவரித்தால், படத்தின் முக்கிய சுவாரஸ்ய அம்சங்கள் கூறப்பட வேண்டும். அப்படிக் கூறினால் படம் பார்க்கையில் விறுவிறுப்பு குறையும் வாய்ப்புள்ளது. எனவே இங்கே இத்துடன் கதைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்.


குழப்பமான கதையை கூடத் தெளிவாக நகர்த்திச் செல்கிறது திரைக்கதை. கவனமாக பார்க்காவிட்டால், தெளிவாக இருப்பவர்கள் கூட இறுதியில் குழம்ப வாய்ப்புள்ளது. கவனச் சிதைவின்றி பார்த்தால் திரைக்கதை எத்தனை சாதுர்யமாக கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை உணர முடியும்.டார்க் டிராமா ஜானரில் முக்கியப் படமாகிய Darren Aronofsky இயக்கிய Requiem For A Dream படத்தின் சாயலில் இப்படம் அமைந்துள்ளது. இயக்குனர் பவன் குமார், தன்னை ஈர்த்த அப்படத்திற்கு மறைமுகமாக கிரெடிட்ஸ் தரும் வகையில் அப்படத்தின் காட்சி ஒன்றை 'லூசியா'வில் இணைத்த்திருப்பார்.
தொழில் நுட்பரீதியாக ' லூசியா ' மைல் கல்லாக விளங்குகிறது - குறிப்பாக படத்தொகுப்பில்.


எல்லாவற்றையும் விட முக்கியமானது, இப்படம் பொதுமக்களிடமிருந்து பணம் பெறப்பட்டு (Crowd Funding) தயாரிக்கப்பட்டது. அதாவது, படத்தின் தயாரிப்பாளர்களே மக்கள் தான்.


இதற்கு முன் இந்தியில் ஜுஹி சாவ்லா, மனிஷா கொய்ராலா, அப்தாப் ஷிவ்தசனி நடித்த 'ஐ ஏம்' என்கிற படம் ரசிகரின் நிதியால் எடுக்கப்பட்டது. அந்தப் படத்தை பொருத்தவரை பல பெரிய நடிகர்கள் நடித்திருந்தனர். மேலும் நடித்த நடிகர்களே கூட தயாரிப்பாளர்கள் ஆகினர். ஆனால், 'லூசியா' படத்தை பொருத்தவரை இதில் நடித்தவர்கள், பெயர் வாங்கிய பெரிய நடிகர்கள் எல்லாம் கிடையாது. இயக்குநருக்கும் இது இரண்டாவது படம்தான்.


ஒரு படத்திற்கு ஒரு தயாரிப்பாளரை பிடிப்பதே சவாலாக இருக்கும் இக்காலத்தில் முகம்தெரியாத ஒரு நபரிடம் தன் படைப்பை எடுத்துச் சென்று, படைப்பாளி மீது நம்பிக்கை வரவழைத்து நிதி திரட்டவது சாதாரண காரியமா? அதுவும் ஒருவர், இருவரல்ல.. 1300 பேரிடமிருந்து நிதி திரட்டி, ரசிகனை தயாரிப்பாளராய் மாற்றி, பொது ஜனங்களை வைத்து விநியோகம் செய்யப்பட்ட 'லூசியா' இந்திய சினிமாவின் மிக முக்கியப் படம் தானே!


படம் பார்க்கையில் Darren Aronofsk இயக்கத்தில் David Lynch திரைக்கதை அமைத்தது போல் தோன்றியது. David Lynch இயக்கிய 'Muloholand Dr', Giuseppe Tornatore இயக்கிய ' Cinema Paradiso' படங்களிலிருந்து சில காட்சிகள் 'லூசியா' திரைக்கதைக்கு உதவியுள்ளது.


படைப்பிற்கும், படைப்பாளிக்கும் தோள் கொடுக்கும் ஒவ்வொரு ரசிகனும் பார்க்க வேண்டிய படம் இது. கன்னட சினிமாவிற்கு மணி மகுடம் அமைத்துத் தந்துள்ளது இந்த 'லூசியா'.


இப்படம் இந்தி, தமிழில் விரைவில் ரீமேக் ஆவது மனதிற்கு நிறைவை தருகின்ற ஒரு செய்தி.


இத்தகைய நல்ல படங்களை வரவேற்போம்.

நன்றி -த தமிழ் ஹிந்து,சினிமா பித்தனின் ஃபேஸ்புக் பக்கம் https://www.facebook.com/CinemaPithan

'லூசியா' படக் காட்சி.


மக்கள் கருத்து 

1. கடந்த பத்து வருடங்களில் கன்னட திரைப்படங்கள் நம் ஊரில் பெரிதாக ரீச் ஆகாமலே இருந்தது" என்ற உங்கள் கருத்து தவறு. காரணம், கடந்த பத்து வருடங்களில் கன்னட திரைப்படங்கள் கர்நாடாகவிலேயே பெரிதாக ரீச் ஆகாமலே இருந்தது. இதற்குக் காரணம், அங்கு நல்ல படங்கள் எடுக்க திறமையான இயக்குனர்கள் இல்லை; கிரீஷ் காசரவள்ளி, கிரீஷ் கர்னாட் போன்ற ஒரு சில இயக்குனர்கள் தவிர, பெரிய அளவில் யாரும் தரமான படங்களை இயக்க முன்வரவில்லை. நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கிய ஒன்றிரண்டு படங்களும் முழுக்க, முழுக்க வணிக ரீதியானவை. பெரும்பாலான கன்னடப் படங்கள் பிறமொழிப் படங்களின் ரீ-மேக் படங்களாகவே அமைந்தன. இயக்குனர்களோ, நடிகர்களோ ரிஸ்க் எடுக்க தயங்கினர்.இந்த சமயத்தில் லூசியாவும், இயக்குனர் பவன் குமாரும் நல்ல வரவுதான்.


2  கன்னட மொழியில் சிறந்த படம் என்றாலும் தமிழகத்தில் நாம் பார்க்க முடியாது. பெங்களூர் சென்றால்தான் பார்க்கமுடியும். பெங்களூரில் நாம் தமிழ் படங்களை பார்ப்பதுபோல சென்னையில் நாம் கன்னட மொழி படங்களை பார்க்க முடியாது என்பது சற்றே வருத்தமான விஷயம்.


இப்பவவுது கன்னட சினிமா பக்கம் கவனம் செலுத்துவதற்கு நன்றி, இந்திய மொழிகளில் அதிகமாக ஞானபிடம் விருந்து வாங்கிய மொழி கன்னட மொழி. புட்டண்ணா, கிரீஸ் காசரவள்ளி, கிரீஸ் கரன்ட், நகாபாறன இவர்களுடைய சினிமா பாருங்கள்.


1 comments:

bond said...

dhunia,sainaid &mungarumazhai also good movies