Tuesday, November 12, 2013

உலக சாதனை - 1200 + படங்களில் ஸ்டண்ட் மாஸ்டர் -ஜூடோ ரத்தினம் பேட்டி @ சினிமா எக்ஸ்பிரஸ்


எப்படி இருக்கீங்க? ஆயிரத்து இருநூறு படங்கள் பணியாற்றியிருக்கிறேன்! -ஜூடோ ரத்தினம்
திரைப்பட டைட்டில் காட்சிகளில் ஸ்டண்ட் மாஸ்டர் என்று பெயரைக் காட்டும்போதே ரசிகர்களின் கைதட்டல்களைப் பெற்றவர் ஜூடோ ரத்தினம். ஆயிரத்து இருநூறு படங்களுக்கு மேல் பணியாற்றி உலகிலேயே மிக அதிக படங்களில் பணியாற்றிய ஸ்டண்ட் மாஸ்டர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார். ""வேலூர் மாவட்டம் குடியாத்தம்தான் என் சொந்த ஊர். லுங்கி துணியை கை நெசவு செய்யும் சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன் நான். என் தாயார் பெயர் கண்ணம்மாள். தந்தையார் கிராமணி குள்ளப்ப முதலியார். சுற்று வட்டாரத்தில் உள்ள பத்து ஊர்களுக்கும் என் தந்தைதான் தலைவர். "பேரு பெத்த பேரு தாக நீலு லேது' என்பதுபோல் தலைவர் வீடு என்று பெயர்தானே தவிர, வறுமையில் கஷ்டப்பட்ட குடும்பம். அன்றாடம் நெசவு நெய்து கூலி வாங்கினால்தான் வீட்டில் அடுப்பு எரியும். நெல்லூர்பேட்டையில் ஒட்டர் பள்ளியில் என்னை சேர்த்து விட்டார்கள். இந்தப் பள்ளியில் ஒட்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்களே நிறைய படித்ததால் ஒட்டர் ஸ்கூல் என்றே இந்தப் பள்ளிக்கு பெயர் வந்துவிட்டது. குடும்பத்தில் உள்ள வறுமை காரணமாக இரண்டாம் வகுப்புக்குமேல் பள்ளிக்குகூட என்னால் போக முடியவில்லை. எங்கள் பகுதியில் உள்ள திருமகள் நூற்பாலை மிகவும் புகழ் பெற்றது. இங்கு பணியாற்றிய நிறைய தொழிலாளர்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தீவிர ஈடுபாடு உடையவர்கள். ஆனால் நூற்பாலை உரிமையாளர் சண்முக முதலியார் காங்கிரஸ்காரர். எனவே காங்கிரஸ் ஆதரவு ஆட்களைத்தான் இங்கு வேலையில் சேர்த்துக் கொள்வார்கள். கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர் என்றால் வேலையே கொடுக்க மாட்டார்கள். 1948ஆம் ஆண்டு இந்த நூற்பாலை வேலைக்கு முப்பத்திரெண்டு ஆட்களை அனுப்பினார் என் தந்தை. நூற்பாலை மேலாளராக கேரளாவைச் சேர்ந்த வர்கீஸ் என்பவர் பணியாற்றி வந்தார். முப்பத்தியொரு ஆட்களை வேலையில் சேர்த்துக் கொண்ட அவர் ஒரே ஒரு ஆளை மட்டும் வேலை இல்லை என்று சொல்லி நிறுத்தி விட்டார். வேலை இல்லை என்று நிறுத்தப்பட்ட ஆள் நான்தான். காரணம், நான் எலும்பும் தோலுமாக மிகவும் ஒல்லியாக இருந்ததால் கடினமான மில் வேலைக்கு நான் தகுதியாக இருக்க மாட்டேன் என்று சொல்லி என்னை நிறுத்தி வைத்து விட்டார். மேலாளரின் காலில் விழுந்து "என்னை எப்படியாவது வேலையில் சேர்த்துக் கொள்ளுங்கள். உடற்பயிற்சி செய்து நன்கு சாப்பிட்டு என் உடம்பை தேற்றிக் கொண்டு விடுவேன்' என்று கெஞ்சிக் கூத்தாடி வேலையில் சேர்ந்து விட்டேன். அதன் பிறகு "மகாபாரதம்' மாசிலாமணி வாத்தியார் என்பவர் நடத்தி வந்த உடற்பயிற்சிக் கூடத்தில் சேர்ந்து பயிற்சிகள் மேற்கொண்டு உடலைத் தேற்ற ஆரம்பித்தேன். அவரிடமே சிலம்பமும் பயின்றேன். என்னுடன் வேலையில் சேர்ந்த முப்பத்திரெண்டு பேரும் காங்கிரஸ் ஆதரவாளர்கள் என்று நினைத்துதான் மில் நிர்வாகம் எல்லோரையும் வேலைக்கு எடுத்தது. ஆனால் உண்மையில் அவர்களில் பலர் கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களாகவும், தொழிற்சங்க இயக்கங்களில் தீவிர ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருந்தனர். அந்த காலத்தில் "பாம்' முனுசாமி என்ற கம்யூனிஸ்ட் தலைவர் பிரபலமாக இருந்தார். போலீசார் இவரைப் பிடிக்கச் சென்றால் "பாம்' வீசிவிட்டு அவர்கள் கையில் பிடிபடாமல் தப்பிச் சென்று விடுவதால் "பாம்' முனுசாமி என்று அழைக்கப்பட்டார். எங்கள் ஊருக்கு அருகிலுள்ள குரங்குத் தோப்பு என்ற காட்டுப் பகுதியில் இவர், நூற்பாலை தொழிலாளர்களுக்கு மார்க்ஸீய தத்துவங்களை சொல்லிக் கொடுத்து அரசியல் வகுப்புகளை நடத்துவார்.


 ஒரு நாள் இரவு இவரது வகுப்புக்குச் சென்றுவிட்டுத் திரும்பும்போது ஆற்றங்கரையில் போலீசிடம் சிக்கிக் கொண்டேன். சப் இன்ஸ்பெக்டர் ரோட்டில் வைத்தே என்னை லத்தியில் அடித்தும், லாடம் வைத்த பூட்ஸ் காலில் உதைத்தும் கம்யூனிஸ்ட் இயக்கம் பற்றியும் தோழர்களைப் பற்றியும் விசாரித்தார். படுகாயங்களுடன் ரத்தம் சொட்டும் நிலையிலும் நான் எந்த உண்மையையும் சொல்லவில்லை. அடுத்த நாள் எங்கள் ஊரைச் சேர்ந்தவர்கள் வந்து ஜாமீன் கொடுத்து என்னை போலீஸ் நிலையத்திலிருந்து மீட்டுச் செனறார்கள். இதன் பிறகு நான் தீவிரமாக தொழிற் சங்க இயக்கத்தில் ஈடுபாடு காட்டத் தொடங்கியதுடன், பகிரங்கமாக தொழிலாளர்களிடம் சந்தா வசூலிக்கவும் ஆரம்பித்தேன். அதாவது முன்னர் பயந்து பயந்து செய்த தொழிற்சங்க வேலைகளை இப்போது தைரியமாகச் செய்ய ஆரம்பித்தேன்.


 தீப்பெட்டித் தொழிலாளர்கள், பீடி சுற்றும் தொழிலாளர்கள், நெசவுத் தொழிலாளர்கள் என்று தொழிலாளர்கள் அதிகம் வசித்த எங்கள் குடியாத்தம் தொகுதி அப்போதும் இப்போதும் கம்யூனிஸ்ட் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதி. 1952ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் தியாகி ஏ.ஜே.அருணாசலமும், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டாக்டர் கண்ணபிரானும் போட்டியிட்டனர். இதில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் அருணாசலம் வெற்றி பெற்றார்.


 அரசாங்கத்துக்கு நூல் சப்ளை செய்யும் உரிமை பெற்றிருந்த அருணாசலத்தின் வெற்றி செல்லாது என்று அறிவிக்கக்க கோரி கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அருணாசலத்தின் வெற்றி செல்லாது என்று தீர்ப்பளித்தது.


 இதைத் தொடர்ந்து 1954ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பெருந்தலைவர் காமராஜ் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக திருமகள் நூற்பாலை உரிமையாளர் சண்முகம் முதலியார் போன்ற பெரும் தனவந்தர்கள் வேலை செய்ய, கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தோழர் வி.கே.கோதண்ட ராமன் போட்டியிட்டார். நாங்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றிக்கு கடுமையாக உழைத்தோம். ஆனால் இந்த முறையும் பணபலமே வெற்றி பெற்றது.


 திருமகள் நூற்பாலையில் பணியாற்றும் எழுநூறு தொழிலாளர்களுக்காக நடத்தப்பட்ட கேன்டீனில் உணவுப் பொருட்களின் தரம் குறைவாகவும், விலை அதிகமாகவும் இருந்தது. தொழிலாளர்களுக்காக நடத்தப்படும் கேன்டீன்கள் லாப நோக்கத்தில் இயங்கக்கூடாது என்ற விதியை காற்றில் பறக்க விட்டுவிட்டு, பஸ் ஸ்டாண்டுகளில் இருக்கும் ஓட்டல்களைப் போல இந்த கேன்டீன் நடத்தப்படுவதைக் கண்டித்து தொழிலாளர்களைத் திரட்டி நான் பல போராட்டங்களை நடத்தினேன்.


 இதன் பிறகு அரசாங்கம் தலையிட்டு கேன்டீன் நிர்வாகத்துக்கு தேர்தல் நடத்தியது. எழுநூறு தொழிலாளர்களில் அறுநூற்று ஐம்பது பேர் எனக்கு ஓட்டு போட்டு என்னை செயலாளராகத் தேர்ந்தெடுத்தார்கள். நான் நிர்வாகப் பொறுப்புக்கு வந்த பிறகு, காலணாவுக்கு ஒரு இட்லி, அரையணாவுக்கு ஒரு மெது வடை, அல்லது தயிர் வடை என்று குறைந்த விலையில் தரமான உணவுப் பொருளை கொடுத்துமே கணிசமான லாபம் வந்தது. அப்படியானால் அதிக விலையில் நிர்வாகம் விற்ற பொருட்கள் மூலம் எவ்வளவு சம்பாதித்திருப்பார்கள் என்று தெரிந்து கொள்ள கேன்டீன் ஆரம்பித்த காலத்திலிருந்து உள்ள கணக்குகளைக் கேட்டோம். நிர்வாகம் இதைத் தர மறுத்ததுடன், என் மீது பொய் குற்றச் சாட்டுகளை சுமத்தி என்னை பணி நீக்கம் செய்தது. இதன் பிறகு மீண்டும் வறுமை தலை தூக்க ஆரம்பித்தது. இந்த சமயத்தில் தோழர் வி.கே.கோதண்டராமன் என்னை சென்னைக்கு அழைத்து வந்து கம்யூனிஸ்ட் தலைவர் முகவை ராஜமாணிக்கத்திடம் அறிமுகப் படுத்தினார். இருவரும் சினிமாவில் எனக்கு ஏதேனும் சந்தர்ப்பம் வாங்கித் தருவதற்காக தங்களுக்குத் தெரிந்த தயாரிப்பாளர்களிடமும், இயக்குநர்களிடமும் முயற்சித்தனர். இந்த கால கட்டத்தில் நான் தென்னிந்திய பாக்ஸிங் சாம்பியன் பரமசிவ நாடாரிடம் பாக்ஸிங் பயிற்சி பெற்றேன். இவர் பி.யூ.சின்னப்பாவுடன் "ஜெகதலப்பிரதாபன்' படத்தில் நடித்தவர். மைசூர் ஆணழகன் பட்டம் வென்ற கணேசனிடம் வெயிட் லிப்டிங் பழகினேன். அத்துடன் டாக்டர் தங்கவேலு என்ற மாஸ்டரிடம் யோகாவும் கற்றுக் கொண்டேன். நான் கற்றுக் கொண்ட இந்த வித்தைகளை எல்லாம் பொதுக் கூட்டங்களிலும், சில கலை விழா நிகழ்ச்சிகளிலும் செய்து காட்ட ஆரம்பித்தேன். துவக்க காலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கங்களில் பணியாற்றி பின்னர் திரைப்படத்துறையில் நுழைந்து இயக்குநரான முக்தா சீனிவாசனிடம், தோழர்கள் முகவை ராஜமாணிக்கமும் கோதண்ட ராமனும் அறிமுகப்படுத்தி சினிமாவில் வாய்ப்பு தரும்படி கேட்டுக் கொணடனர். முக்தா சீனிவாசன் அப்போது இயக்கவிருந்த "தாமரைக் குளம்' படத்தில் நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் வலது கரம்போல் உடனிருந்து வில்லத்தனமான வேலைகள் செய்யும் அடியாள் வேடத்தில் என்னை நடிக்க வைத்தார். 1959ஆம் ஆண்டு வெளியான "தாமரைக்குளம்'தான் நான் நடித்த முதல் திரைப்படம். இந்தப் படத்தில் இடம் பெற்ற ஒரு சின்ன சண்டைக் காட்சியையும் நானே அமைத்தேன்.
 இதைத் தொடர்ந்து விட்டலாச்சாரியா இயக்கத்தில் உருவான ஒரு தெலுங்குப் படத்தில் கதாநாயகன் காந்தாராவுக்கு "டூப்' போட்டேன். பின்னர் என்.டி.ராமாராவ் நடித்த தெலுங்குப் படத்தில் சிலம்ப சண்டைக் காட்சியில் அவருக்கு "டூப்' போட்டேன். அடுத்ததாக நாகேஸ்வரராவுக்கும் சண்டைக் காட்சியில் "டூப்' போட்டேன். சினிமாவில் நுழைந்த ஆரம்ப காலத்தில் இப்படி பல முன்னணி கதாநாயகர்களுக்காவும், வில்லன் நடிகர்களுக்காகவும் ஆபத்தான காட்சிகளில் "டூப்' ஆக நடித்திருக்கிறேன். சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் இயக்கத்தில் நம்பியார் கதாநாயகனாக நடித்த "கவிதா' என்ற படத்துக்காக சுமார் நாற்பது அடி உயரத்தில் மலைபோல் குவிக்கப்பட்டிருந்த சுண்ணாம்புக்கல் குவியலில் சண்டைக் காட்சியில் நடித்தபோது, தவறி விழுந்தேன். பாதுகாப்பு ஏற்பாட்டுக்காக இருந்த வலையில் விழுந்தபோது எதிர்பாராமல் வலையும் அறுந்துவிடவே, தரையில் விழுந்தேன். என் கால் உடைந்தது. சேலம் குகை பகுதியில் இருந்த மருத்துவமனை ஒன்றில் எனக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார் சுந்தரம். என்னை ஸ்டண்ட் மாஸ்டராக அறிமுகப்படுத்தியதும் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம்தான். 1963ஆம் ஆண்டு "கொஞ்சும் குமரி' படத்தில் கதாநாயகி மனோரமாவின் சகோதரன் வேடத்தில் என்னை நடிக்க வைத்ததுடன் அப்படத்தில் இடம் பெற்ற சண்டைக் காட்சிகளையும் என்னையே அமைக்கும்படி சொல்லி என்னை ஸ்டண்ட் மாஸ்டராக்கினார். அதுவரை ஸ்டண்ட் நடிகராகவும், பிரபல நடிகர்களுக்கு "டூப்' போடுவதிலுமே சென்று கொண்டிருந்த என் வாழ்க்கையில், "கொஞ்சும் குமரி' திரைப்படம் ஸ்டண்ட் மாஸ்டர் என்ற புதிய அந்தஸ்த்தை எனக்குக் கொடுத்தது. டி.ஆர்.சுந்தரம் மறைந்த பிறகு அவரது மகன் ராமசுந்தரம், தான் தயாரித்து இயக்கிய "வல்லவன் ஒருவன்' படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராகப் பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்தார். இதில் இடம் பெற்ற புதுமையான சண்டைக் காட்சிகள் படத்தின் வெற்றிக்கு வெகுவாகத் துணை நின்றன. தொடர்ந்து இதே பாணியில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த "வல்லவன் ஒருவன்', "இரு வல்லவர்கள்' போன்ற படங்களின் சண்டைக் காட்சிகளும் சிறப்பாக அமைந்து எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. ஜெய் சங்கர், ஆனந்தன், அசோகன் போன்ற நட்சத்திரங்கள் கலந்த கொண்ட விழா ஒன்றில் எனது மாணவர்கள் முப்பது பேரை வைத்து விதம் விதமான ஜூடோ மற்றும் கராத்தே சண்டைக் காட்சிகளை நிகழ்த்திக் காட்டினேன். இந்த விழாவுக்கு தலைமை வகித்த பத்திரிகையாளர்கள் சங்கத் தலைவர் கரீம் பாய் "ஜூடோ' என்ற பட்டத்தை எனக்கு வழங்கினார். அதுவரை கே.கே.ரத்தினமாக இருந்த என்னை இதன் பிறகு எல்லோரும் "ஜூடோ' ரத்தினம் என்று அழைக்க ஆரம்பித்தார்கள். நாகம் எப்படி படமெடுத்து ஆடி எதிரிகளைத் தாக்குமோ அதைப்போலவே சண்டைக் காட்சியை அமைத்தேன். இதனைப் பாராட்டி 1973ஆம் ஆண்டு பத்திரிகையாளர் பிலிம் நியூஸ் ஆனந்தன் "ருத்ரநாகம்' என்ற பட்டத்தை எனக்கு வழங்கினார்.


 சிவாஜி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர், ஏவி.எம்.ராஜன், ரவிசந்தரன், ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய்காந்த், பிரபு சத்தியராஜ் என்று முன்னணி நட்சத்திரங்கள் அனைவருக்கும் நான் சண்டைக் காட்சிகள் அமைத்திருக்கிறேன்.


 எம்.ஜி.ஆர். தனது படங்களுக்கு எப்போதும் ஷ்யாம் சுந்தர் மாஸ்டரைதான் சண்டைக் காட்சிகள் அமைக்க பயன்படுத்திக் கொள்வார் என்பதால் அவர் படத்தில் மட்டும் சண்டைக் காட்சி அமைக்கும் வாய்ப்பு எனக்கு அமையாமல் போய்விட்டது. ஆனால் ஷ்யாம் சுந்தர் மாஸ்டரிடமே என்னைப் பற்றிக் விசாரித்து தெரிந்து கொண்ட எம்.ஜி.ஆர். "பறக்கும் பாவை' படத்துக்காக வாஹினி ஸ்டுடியோவில் இருந்தபோது, பக்கத்து செட்டில் இருந்த என்னை வரச் சொல்லி நான் சண்டைக் காட்சிகள் அமைக்கும் விதத்தை வெகுவாகப் பாராட்டியதுடன், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஜாக்கிரதையாகப் பணியாற்ற அறிவுரையும் சொல்லி என்னை வாழ்த்தினார். எம்.ஜி,ஆர். இப்படி ஜாக்கிரதையாக பணியாற்றச் சொல்லி அறிவரை சொன்ன காரணம், பக்கத்து செட்டில் என்ன படப்பிடிப்பு என்று என்னை விசாரித்தபோது, "சோபன் பாபுவும் கிருஷ்ணாவும் கலந்து கொள்ளும் ஒரு தெலுங்குப் படத்துக்காக கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு குதிக்கும் சண்டைக் காட்சியை எடுத்துக் கொண்டிருக்கிறேன்' என்று நான் சொன்னதால்தான் அன்புடன் இந்த அறிவுரையை சொன்னார். ஸ்டண்ட் நடிகர்கள் காயம் படாமல் ஜாக்கிரதையாக படப்பிடிப்பில் நடிக்க வேண்டும் என்பதில் எப்போதுமே அதிக அக்கறை காட்டுவார் எம்.ஜி.ஆர். ஆனால் என்னைப் போன்ற ஸ்டண்ட் கலைஞர்களுக்கு உடலெங்கும் விழுப்புண்கள் இருப்பது சர்வ சாதாரணம். எனக்கு தலையில் இருந்து கால்வரை உடலில் காயம் படாத இடமே இல்லை. கால்கள் இரண்டும் உடைந்துபோய் இரண்டிலுமே ஸ்டீல் பிளேட்தான் வைத்து தைக்கப்பட்டிருக்கிறது. உயிர் போகும் அளவுக்கு மிகப் பெரிய ஆபத்தில் சிக்கி பலமுறை தப்பித்திருக்கிறேன். "கைதி கண்ணாயிரம்' படம் தெலுங்கில் தயாரிக்கப்பட்டபோது ஓக்னேகல் பெரிய நீர்வீழ்ச்சியின் மீது அமைக்கப்பட்ட பாலத்தில் குழந்தையை முதுகில் சுமந்து கொண்டு செல்வது போன்ற காட்சி எடுக்கப்பட்டது. அப்போது எதிர்பாராமல் பாலம் அறுந்து சுழன்றோடும் நீர்வீழ்ச்சியில் விழுந்துவிட்டேன். நல்ல வேளையாக என் முதுகில் குழந்தைககுப் பதில் "டம்மி' பொம்மைதான் இருந்தது. கோவிந்தன் மாதவன் என்ற இரண்டு பரிசல்காரர்கள்தான் அன்று என் உயிரைக் காப்பாற்றினார்கள். இதேபோல சுதர்சன் கதாநாயகனாக நடித்த "காடின ரகசியம்' என்ற கன்னடப் படத்தின் படப்பிடிப்பில் இரண்டு விரல்கள் அடிபட்டு எலும்புகள் முறிந்தன. என்னதான் சிறப்பான முறையில் சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் அடிபட்ட இந்த இரண்டு விரல்களையும் இப்போதும் என்னால் மற்றவர்களைப்போல் மடக்க முடியாது. எனக்கு மட்டுமல்ல என்னைப் போன்ற ஸ்டண்ட் கலைஞர்கள் பலருக்கும் இது போன்ற காயம் பட்ட கதைகள் நிறையவே இருக்கும். எல்லோருமே மரணத்தின் வாசல்வரை சென்று மீண்டு(ம்) வந்தவர்களாகத்தான் இருப்பார்கள். திரைப்படங்களில் கதாநாயகனுக்காக புலி சிங்கம் போன்ற வன விலங்குகளுடன் சண்டை போடுவதில் வல்லவர் புருஷோத்தமன் என்ற ஸ்டண்ட் கலைஞர். இவரது சொநதப் பெயர் இவருக்கே மறந்து போகும் அளவுக்கு "புலிக்கேசி' என்றுதான் இவரை எல்லோரும் கூப்பிடுவார்கள். அந்த அளவுக்கு இவர் புலியுடன் சண்டை போடும் காட்சியில் நடிப்பதில் வல்லவர்.


 1966ஆம் ஆண்டு "காட்டு மல்லிகா' என்ற மலையாளப்படத்துக்காக புலியுடன் சண்டை போட்டபோது புலி தாக்கிவிட்டது. சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அன்று இவரை தகனம் செய்த மயானத்திலேயே ஸ்டண்ட் கலைஞர்கள் எல்லோரும் என் தலைமையில்கூடி நமக்கென ஒரு சங்கத்தை உருவாக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். பெரும் போராட்டங்களுக்கிடையில் எங்கள் சங்கம் படிப்படியாக வளர்ந்தது. அறுபதாம் ஆண்டுகளில் ஒரு சண்டைக் காட்சியில் நடிக்கும் நடிகருக்கு பதினைந்து ரூபாய், இருபது ரூபாய்தான் சம்பளமாகக் கிடைக்கும். சங்கம் உருவான பிறகு ஒரு நாள் சண்டைக் காட்சியில் நடிக்க நூற்று ஐம்பது ரூபாய் சம்பளம் என்றும், அந்த சண்டைக் காட்சி அடுத்த நாள் தொடர்ந்தால் ஐம்பது ரூபாய் அதிகரித்துத் தர வேண்டும் என்றும், மூன்றாம் நாளும் தொடர்ந்தால் மேலும் ஐம்பது ரூபாய் அதிகரித்துத் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தி வெற்றி பெற்றோம். தொழிலாளர்களின் நல்வாழ்வில் அக்கறையும், தொழிற்சங்க இயக்கங்களில் தீவிர ஈடுபாடும் கொண்ட இசையமைப்பாளர் எம்.பி.சீனிவாசன், வங்காளத்தைச் சேர்ந்த பிரபல ஒளிப்பதிவுக் கலைஞர் நிமாய் கோஷ் ஆகியோர் எடுத்த தீவிர முயற்சிகளால் திரைப்படத் தொழிலாளர்கள் சங்கங்கள் ஒன்றிணைந்த பெப்சி அமைப்பு உருவானது.


 ஒவ்வொரு சினிமா சங்கமும் உருவாகும்போதும், அதை பெப்சியுடன் இணைக்கும்போதும் பெரும் போராட்டங்களை சந்திக்க வேண்டியிருந்தது. சினி டிரைவர்களுக்கான சங்கத்தைத் தொடங்கியபோது, டிரைவர்களுக்கு எதற்கு சங்கம் என்று மிகக் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது. கோடம்பாக்கத்திலுள்ள அம்பேத்கார் சிலை அருகே மீட்டிங் போட்டு டிரைவர்ஸ் யூனியன் ஆரம்பிக்க வேண்டிய அவசியத்தை வலுயுறுத்திப் பேசினேன். விளைவு? டிரைவர்ஸ் யூனியன் துவங்க தீவிர ஆர்வம் காட்டிய காரணத்துக்காக சினிமா தயாரிப்பாளர்கள் எனக்கு ஆறு மாதங்கள் வேலையே கொடுக்காமல், வருமானம் இல்லாமல் செய்தார்கள். ஆனால் இதற்கெல்லாம் கவலைப்படுபவன் நானில்லை. போராட்ட குணம் என்பது சிறு வயதிலிருந்தே எனக்கு இருந்ததால் இவற்றையெல்லாம் சமாளித்தேன்.
 இதுவரை ஆயிரத்து இருநூறு படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராகப் பணியாற்றியிருக்கிறேன். உலகத்திலேயே யாரும் செய்யாத சாதனை இது. கன்னட நடிகர் ராஜ்குமார் நடித்த நாற்பத்தொன்பது படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராகப் பணியாற்றியிருக்கிறேன். ராஜ்குமார் நடித்த இதிகாசப் படங்களில் ஆரம்பித்த எனது பணி, அவர் நடித்த சரித்திரப்படங்களிலும் தொடர்ந்து, பின்னர் சமூகப்படங்களுக்கும் வந்து, கடைசியாக ராஜ்குமார் நடித்த "ஜேம்ஸ்பாண்ட்' பாணியிலான படங்கள்வரை பணியாற்றியதை மிகப் பெருமையாகக் கருதுகிறேன். ராஜ்குமார் மகன் சிவராஜ்குமார் நடித்த பனிரெண்டு படங்களுக்கும் சண்டைக் காட்சிகள் அமைத்திருக்கிறேன்.
 மற்றும் கன்னடப் படவுலகின் முன்னணி நட்சத்திரங்கள் விஷ்ணுவர்த்தன், அம்ப்ரிஷ், ஸ்ரீநாத் போன்றவர்களின் படங்களுக்கும், மலையாளப் படவுலகின் முன்னணி நட்சத்திரங்கள் சத்யன், பிரேம் நஸீர், மது, மம்மூட்டி, மோகன்லால் ஆகியோர் படங்களுக்கும் பணியாற்றியிருக்கிறேன். இதேபோல் தெலுங்கில் என்.டி.ராமாராவ், நாகேஸ்வர்ராவ், கிருஷ்ணம்ராஜூ, மோகன் பாபு, வெங்கடேஷ், என்.டி.ஆர்.பாலகிருஷ்ணா என்று தென்னிந்தியாவின் அத்தனை முன்னணி நட்சத்திரங்களுக்கும் சண்டைக் காட்சிகள் அமைத்திருக்கிறேன். அமிதாப் பச்சன், தர்மேந்திரா, ஜிதேந்திரா, அனில் கபூர், மிதுன் சக்ரவர்த்தி, கோவிந்தா, போன்ற முன்னணி இந்தி நட்சத்திரங்களின் படங்களுக்கும் சண்டைக் காட்சிகள் அமைத்ருக்கிறேன்.
 ரஜினி காந்த் நடித்த நாற்பத்தாறு படங்களுக்கு சண்டைக் காட்சிகள் அமைத்திருக்கின்றேன். எஸ்பி.முத்துராமன் இயக்கத்தில் மட்டும் நான் பணியாற்றிய படங்களின் எண்ணிக்கை எழுபது. ஏவி.எம். தயாரித்த ஐம்பத்தேழு படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராகப் பணியாற்றியிருக்கிறேன்.
 என் மனைவி பெயர் கோவிந்தம்மாள். எங்களுக்கு எட்டு குழந்தைகள். ஐந்து பெண்கள். மூன்று ஆண்கள். எனது மகன் "ஜூடோ' ராமு என்னைப் போலவே ஸ்டண்ட் மாஸ்டராக திரையுலகில் பணியாற்றுகிறார். அதிகமாக வங்கப் படங்களுக்கும் ஒரியா படங்களுக்குமே பணியாற்றுவதால் இவர் சென்னையில் இருக்கும் நாட்கள் குறைவு. மற்றொரு மகன் கோபிநாத் பி.காம் முதல் வகுப்பில் பாஸ் செய்திருக்கிறார் என்றாலும் ஆர்வம் காரணமாக பல படங்களில் பணியாற்றிவிட்டு இப்போது பிரியங்கா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் என்ற சொந்த கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். மற்றொரு மகன் பகத்சிங் ஒளிப்பதிவாளர் ராஜராஜனிடம் உதவியாளராகப் பாணியாற்றி கேமரா தொழில் நுட்பங்களைக் கற்றுத் தேறி இப்போது ஒரியா படங்களுக்கு கேமராமேனாகப் பணியாற்றி வருகிறார். ஐந்து பெண்களுக்கும் திருமணம் செய்து கொடுத்து விட்டேன். மொத்தம் பதினேழு பேரக் குழந்தைகள் இருக்கிறார்கள்.


 இன்று திரைப்படத் துறையில் ஸ்டண்ட் மாஸ்டர்களாகப் புகழ் பெற்றிருக்கும் ஆம்பூர் பாபு, சூப்பர் சுப்பராயன், மாரி கணேசன், பெப்சி வஜயன், விக்ரம் தர்மா, விக்கி, ராம்போ ராஜ்குமார், சாகுல் அமீது, ஜாக்குவார் தங்கம் போன்ற பலரும் எனக்கு உதவியாளர்களாக இருந்தவர்கள்தான். நான் இந்த அளவுக்கு புகழ் பெற்றதற்குக் காரணமே எனது உதவியாளர்கள்தான் என்பதை இந்த சந்தர்பத்தில் நன்றியுடன் கூறிக்கொள்ள நான் கடமைப் பட்டிருக்கிறேன். 1930ஆம் ஆண்டு நான் பிறந்தேன். இப்போது எனக்கு எண்பத்தி நான்கு வயதாகிறது. இவ்வளவு காலம் சினிமாவில் பணியாற்றியது போதும் இனிமேல் ஓய்வெடுப்போம் என்ற எண்ணத்தில்தான் எனது சொந்த ஊரான குடியாத்தம் சென்றேன். ஆனால் இயக்குநர் சுந்தர் சி. தான் முதன் முதலாக கதாநாயகனாக நடிக்கும் "தலைநகரம்' படத்தில் வரும் வித்தியாசமான வில்லன் வேடத்தை நான்தான் செய்ய வேண்டும் என்று கேட்டதால் அந்தப் படத்தில் நடித்தேன். இந்தப் படத்தில் எனது நடிப்பும் வெகுவாக பாராட்டப் பட்டது எனக்கு மிகவும் ஆத்ம திருப்தியைத் தந்தது'' என்று மன நிறைவுடன் கூறுகிறார் "ஜூடோ' ரத்தினம்.


 ராஜா. செந்தில் நாதன்.


thanx - cinema express


0 comments: