Wednesday, November 13, 2013

எட்டுத்திக்கும் மதயானை -ராட்டினம்' தயாரிப்பாளர் கே.எஸ்.தங்கசாமி பேட்டி


காத்திருக்கும் பிரச்னைகளிகே.எஸ்.தங்கசாமி


"தயாரிப்பாளராக எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது "ராட்டினம்'. அது தந்த நம்பிக்கைதான் என்னை "எட்டுத்திக்கும் மதயானை' படத்தை இயக்கி, தயாரிக்கும் தைரியத்தைக் கொடுத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, வித்தியாசமான முயற்சிகளைத் தமிழ் ரசிகர்கள் கைவிடமாட்டார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது'' ரொம்பவும் தெளிவாக தன் பேச்சை ஆரம்பிக்கிறார் "எட்டுத்திக்கும் மதயானை'யைத் தயாரித்து இயக்கிவரும் கே.எஸ்.தங்கசாமி. தொடர்ந்து யானைகள் தலைப்பாக வருகிறதே...?


 நான்தான் இந்தத் தலைப்பை முதலில் வைத்தது. அதன்பின் வைத்தவர்கள் எல்லாம் என்னைக்கேட்டுதான் வைத்தார்கள்.அதுமட்டுமல்ல, இது யானைகள் சம்பந்தப்பட்ட கதை அல்ல. ஒரு சாமனிய மனிதன் எட்டுத்திக்கிலிருந்தும் பிரச்னைகள் வந்தால் என்ன செய்வான் மதயானை போல அந்தப் பிரச்னைகளை உடைத்தெறிவான். இந்தச் சமூக அமைப்பைக் கேள்விக்குள்ளாக்குவான். அந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு தேடுவான். இதுதான் கதை.

 அப்படியென்றால் இது ஆக்ஷன் படமா?


 எமோஷனல் மூவி. காதல், காமெடி என்று போகிற கதையில் திடீரென்று பிரச்னைகள் வந்தால்... அப்படி ஒருத்தன் வாழ்க்கையில் நடக்குதது. அதை அவன் எதிர்க்க மேலும் மேலும் சிக்கல். அப்பதான் இந்தச் சமூகத்தைப் புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறான். எவியான கதை. எல்லோருக்கும் பிடிக்கும்.

 பிரச்னை, பிரச்னை என்கிறீர்களே அப்படி என்னதான் கதை?


 நீங்க பைக்கிள போய்க்கிட்டிருக்கீங்க. அதுவரை எந்தப் பிரச்னையும் இல்லை. ஒருத்தர் மேல மோதிட்டா பிரச்னை ஆரம்பிக்கும். போலீஸ் ஸ்டேசன் போன, வாங்க சார் உட்காருங்க, டீ சாப்பிடுறீங்களா, கையெழுத்துப் போட்டுட்டுப்போங்கன்னு போலீஸ் ஸ்டேசன்ல சொல்லமாட்டாங்க. ஒவ்வொரு சம்பவமும் சிக்கலாகத்தான் போகும். இது நமக்கே நமக்காக காத்திருக்கும் பிரச்னைகளின் கதை. எல்லோருமே இதைக் கடந்து வந்திருப்போம். இல்லை கடக்க காத்திருப்போம். பெரிய சம்பவங்கள் எதுவும் கிடையாது. நம்ம தெருவுல நடந்துபோகுற மாதிரிதான் இருக்கும்.


 படப்பிடிப்புகள் திருநெல்வேலியில் நடத்திருக்கீங்க, எப்படியிருந்தது?


 என்னைக் கேட்டால் சென்னையிலேயே கூட ஈஸியாக படப்பிடிப்பு நடத்திடலாம். அங்க அப்படியில்லை. பர்மிஸன் வாங்கியிருந்தாலும் ரூல்ஸ் தெரியாம அங்க இருக்கிற ஏரியா போலீஸ்காரங்க திடீர் திடீர்னு படப்பிடிப்பை நிறுத்தச் சொல்வாங்க. அப்புறம் பேசி ஒருவழியாக படப்பிடிப்ப நடத்தினால் அரை நாள் போயிருக்கும். அதுமட்டுமில்லை, திடீர் திடீர் கொலை சம்பவங்கள் நடக்கும். எதுக்கு, ஏன்னு ஒன்னும் புரியாது. படப்பிடிப்பு ரத்தாகும். அந்த ஏரியாவை புரிந்துகொள்வதற்கே தனியாகப் படிக்கணும்.


 படத்தில் யார் யார் நடிக்கிறார்கள்?


 ஆர்யாவின் தம்பி சத்யாதான் ஹீரோ. ஸ்ரீமுகி என்ற புதுமுகம் ஹீரோயினாக அறிமுகம் ஆகுறாங்க. "ராட்டினம்" படத்தில் நடித்த லகுபரன் இதில் முக்கிய ரோல் பண்றார். "மதுபானக்கடை' துர்காவும் இருக்கிறார். நானும் இந்தப்படத்தில் நடித்திருகிறேன். இசை, "ராட்டினம்" மனு ரமேஷ். ஒளிப்பதிவு, ஆர்.ஜே.ஜெய். கலை, மணி கார்த்திக்.

 
 லகுபரன் படத்தின் இன்னொரு ஹீரோவா?


 இல்லை. ஆனால் படம் அவர் மூலம்தான் தொடங்கும். அவர் மூலம்தான் முடியும்.

 இந்தப் படத்தை நீங்கள் தயாரிக்க என்ன காரணம்?


 நான் ஏற்கெனவே "ராட்டினம்" படத்தைத் தயாரித்திருக்கிறேன். அதில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. அதுமட்டுமில்லாமல் ஒரு தயாரிப்பாளரைத் தேடி என்னுடைய கதையை ஒரு அவரிடம் சொல்லி, அவருக்குப் பிடித்த மாதிரி சமரசம் செய்துகொண்டு எடுக்க என்னால் முடியாது. "எட்டுத்திக்கும் மதயானை" சமரசம் செய்துகொள்ள முடியாத படம். அதனால்தான் நானே இப்படத்தைத் தயாரிக்கிறேன்.

 அதனால்தான் குறைந்த பட்ஜெட்டில் புதுமுகங்களை வைத்து எடுக்கிறீர்களா?


 ஒரு படத்துக்குக் கதையும் களமும்தான் முக்கியம். பட்ஜெட்கூட இரண்டாம் பட்சம்தான். பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு சிறந்த படம் தந்துவிடமுடியாது. இந்தக் கதைக்குப் புதுமுகங்கள்தான் தேவைப்பட்டார்கள் என்றும் சொல்லமாட்டேன். என்னால் இவர்களை வைத்துக்கொண்டும் நல்ல படம் தரமுடியும். அதற்கான முயற்சிதான் இந்தப்படம்.

 புதுமுக இயக்குநர்களுக்கு தயாரிப்பாளர் கிடைப்பது கஷ்டம் தானே?


 அப்படிச் சொல்ல முடியாது. ஈஸியான சப்ஜெக்டை சொன்னால் ஈஸியாக தயாரிப்பாளர் கிடைத்து விடுவார்கள்.
 ஈஸியான சப்ஜெக்ட் என்றால்..

.
 ஜாலியாக சொல்றது. ரசிகர்கள் ஏன், எதற்கு என்று எந்தக் கேள்வியும் கேட்காமல் பார்த்துவிட்டுப் போவது போன்ற காமெடி சப்ஜெக்ட்டுக்கு மார்கெட்டில் கிராக்கி அதிகம். எவி சப்ஜெக்ட் என்றால் யாரும் ரிஸ்க் எடுக்க தயாராக இல்லை.

 அப்ப நீங்க ஏன் இந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்கணும்?


 ஏன் எல்லோரும் ஒரே மாதிரிதான் இருக்கணுமா. நான் வேற மாதிரி எடுக்க நினைக்கிறேன். எத்தனை சிரிப்பு படத்தை உங்களுக்கு ஞாபகம் இருக்கு. தியேட்டரை விட்டு வந்தவுடனே அந்த மாதிரி படங்களை டிக்கெட்டை கீழே போட்டுவிட்டுப் போவதுபோல மனதில் இருந்து கழற்றி எறிந்துவிட்டுத்தான் போவார்கள். நல்ல படங்கள் மட்டுமே காலத்துக்கும் நிற்கும். அதுமாதிரி இரண்டு மூன்று படம் பண்ணாப்போதும்னுதான் நான் சினிமாவுக்கு வந்தேன்.


 சினிமா இன்று... இன்னைக்கு தயாரிப்பாளர்கள் கிட்டையோ, இயக்குநர்கள் கிட்டையோ சினிமா இல்லை. ஒரு சிலரிடம்தான் இருக்கிறது. அவர்களுக்கு என்ன பிடிக்குமோ, அவர்கள் என்ன விரும்புகிறார்களோ அதைத்தான் சினிமாவாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் ஒரு படம் வெற்றி பெற்றால, அதுபோலவே ஒன்பது படம் வருகிறது. இதை ட்ரெண்ட் என்கிறார்கள். ரசிகர் விருப்பம் என்கிறார்கள். வியாபாரத்துக்கு சினிமாவில் பல பெயர்கள்.

 ராட்டினம் பிக்சர்ஸ் மூலம் தொடர்ந்து படங்கள் தயாரிப்பீர்களா?


 இந்தப்படம் வெற்றி பெற்றால்தான் தொடர்ந்து படங்கள் தயாரிப்பேன் என்று சொல்லமாட்டேன். நல்ல படங்களை, மக்கள் விரும்பும் வண்ணம் தொடர்ந்து தயாரிப்பேன். ஏனென்றால், நான் சினிமாவை ரொம்ப ரொம்ப காதலிக்கிறேன்


நன்றி - தினமணி.

0 comments: