Thursday, November 07, 2013

ஆனந்த விகடன் - தீபாவளிப்படங்கள் - விமர்சனம்

பாண்டிய நாடு - சினிமா விமர்சனம் -

'மதுர’ சினிமா! அண்ணனைக் கொன்றவனைப் பழிவாங்கும், 'பதுங்கும் எலி... பின், பாயும் புலி’ கதை. அதை நேர்த்தியான பேக்கேஜில் ரசிக்கும் படி தந்திருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன். விஷாலும் வில்லனும் நேருக்குநேர் மோதிக்கொள்வது, க்ளைமாக்ஸ் சண்டையில் மட்டும்தான். ஆனால், அதுவரையுமே 'திக்... திடுக்...’ டெம்போவை ஏற்றிக்கொண்டே சென்ற விதத்தில்... சபாஷ்!
அட, விஷாலா இது!? கோபத்தில் முறுக்கிக் கொள்ளாத அந்த 'ஷோல்டரை’ கட்டியணைத்துப் பாராட்டலாம். வெளியூருக்கு பஸ் ஏறாமல், மிரட்டல் வில்லன்களுக்கு சவால் விடாமல், பயமும் பதட்டமுமாக ஆயுதத்தைக் கையில் எடுக்கும் அண்டர்ப்ளே நடிப்பில் வெரைட்டி விருந்து படைக்கிறார். நண்பன் அடிவாங்குவதைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு, 'அடிடா அவனை’ என்று உதார் சவுண்ட் கொடுக்கும் அந்த இடத்தில், 'வின்னிங் ஃபார்முலா’வைப் பிடித்துவிட்டீர்கள் விஷால்!
அடக்கஒடுக்க அழகு லட்சுமிமேனன். ஸ்கூல் மிஸ் கெட்டப்பில் பாந்த உலா வருபவர், 'ஃபை ஃபை ஃபை’ பாடலில் கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார். இப்படியான 'அப்பா’ கேரக்டர்களை நிறையப் பார்த்திருந்தாலும், தன் குரல், உடல் மொழியில் பரிதவிக்கவைக்கிறார் பாரதிராஜா. அதிலும் க்ளைமாக்ஸில், உண்மை தெரிந்து விஷாலை கம்பீரமும் நன்றியுமாகப் பார்த்து கண்கலங்கும் இடத்தில், க்ளாஸ்! ஆட்கள் சுற்றிவளைத்த பின்னரும் அசராமல் வேட்டியை மடித்துக்கட்டி வில்லன் ஷரத் லோஹிதஸ்வா தெனாவட்டாக விளையாடும் இடம்... மிரட்டல்!
'பிரதருக்கு புதருக்குள்ள என்னடா வேலை?’ என்று லந்து நண்பனாக வந்தாலும், கதையை நகர்த்தவும் உதவுகிறார் சூரி.
அறிந்த கதை, தெரிந்த திருப்பங்கள் என்று பயணிக்கும் திரைக்கதையை அலுப்பு இல்லாமல் நகர்த்த உதவுகிறது சுசீந்திரன்-பாஸ்கர் சக்தியின் இயல்பான வசனங்கள். 'நான் கூப்பிட்ட உடனே நீங்க வந்துட்டீங்களே.. யார் கூப்பிட்டாலும் இப்படிப் போய்டுவீங்களா?’ 'ஒரு பொண்ணை பிக்கப் பண்றதுக்கு முன்னாடியே டிராப் பண்ற பாக்கியம் யாருக்குக் கிடைக்கும்? இன்னைக்கு டிராப் பண்ற இடத்துல வந்து நாளைக்கு பிக்கப் பண்ணிக்கவா?’ - பளிச் சாம்பிள்கள்.
'டையரே...’ பாடல் அத்தனை கலர்ஃபுல்லாக இருந்தாலும், படத்தை அந்த இழவுப் பாடலில் ஓப்பன் செய்திருக்கும் தைரியம்... ஆச்சர்யம். வைரமுத்து - மதன் கார்க்கி காம்பினேஷனில் 'டையரே...’, 'ஒத்தக்கடை மச்சான்...’, 'ஃபை ஃபை கலாய்ச்சி ஃபை...’ பாடல்களில் தாளம் போட வைக்கும் இமான், ஆக்ஷன் காட்சிகளின் பின்னணியில் மிரளவைக்கிறார். இருளும் ஒளியுமான மதுரையை இயல்பு மாறாமல் படம் பிடித்திருக்கிறது மதியின் ஒளிப்பதிவு.
அவ்வளவு பரந்த நெட்வொர்க் வைத்திருக்கும் வில்லன் குரூப், சூரி கொடுத்த செல்போனை நம்பிப் பயன்படுத்துவதும், அத்தனை ஷார்ப்பான வில்லன் ஆட்கள் ஒரு வருடமாக விஷாலை சந்தேகிக்காமலே இருப்பதும், 'எட்டு மணி மாட்டுத்தாவணி சந்திப்பு’ என்று பிரமாத பில்ட்-அப் வைத்த இடத்தில் 'ஃபை ஃபை ஃபை கலாய்ச்சி ஃபை’ பாடலைத் திணித்திருப்பதும்... வொய் கலாய்ச்சிஃபை?
'மதுரை என்றாலே ரத்தம் சத்தம் யுத்தம்’ என பழகிய ஃபார்முலாவானாலும், பளிச் கதாபாத்திரங்களுக்காகவும், 'குவாரி மோசடி’ என்று டாபிக்கல் சுவாரஸ்யம் சேர்த்ததற்காகவும், இந்தப் பாண்டிய நாட்டுக்கு ஒரு டிரிப் அடிக்கலாம்!

 ஆரம்பம் - சினிமா விமர்சனம்

அரசின் ஊழல் பெருச்சாளிகளை வேட்டையாடும் போலீஸ் அஜித். அப்புறமென்ன அடி தூள் ஆரம்பம்தானே!



தரமற்ற புல்லட் புரூஃப் உடை காரணமாக உயிரிழக்கிறார் அஜித்தின் போலீஸ் நண்பன் ராணா. அந்த பேரத்தை முடித்த அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் பழிவாங்கக் கிளம்புகிறார் அஜித். ஆனால், அவர் மீதே கொலைப் பழி சுமத்தி, கொலை செய்கிறார்கள் வில்லன்கள். ஃபீனிக்ஸ் பறவையாக 'தல’யெடுத்து அஜித் வில்லன்களை துவம்சம் செய்யும் கதை!
மும்பை தாஜ் ஹோட்டல் தீவிரவாதிகள் தாக்குதலில், தரமற்ற புல்லட் புரூஃப் ஆடை அணிந்திருந்ததால் உயிரிழந்த போலீஸ் அதிகாரி ஹேமந்த் கார்கரேவின் கதையை அஜித் ரசிகர்களுக்கு ஏற்ப சஸ்பென்ஸ் த்ரில்லராகப் பின்னியதில் ஸ்கோர் செய்திருக்கிறார் இயக்குநர் விஷ்ணுவர்தன்.
சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அஜித் செம ஸ்டைல். 'பில்லா’ பாணியில் நடக்கிறார், கூலர்ஸ் அணிகிறார்; நடக்கிறார்... கூலர்ஸ் அணிகிறார். இது அஜித் ரசிகர்களைக் குஷிப்படுத்தினாலும், வில்லனை மிரட்ட குழந்தையின் மீது சூடான அயர்ன் பாக்ஸை வைத்துவிடுவதாக மிரட்டும் இடத்திலும், நயன்தாராவுடன் எந்தக் 'கசமுசா’வும் நிகழ்த்தாமல், கடமையே கண்ணாக அஜித் செயல்படுவதும்... குட் ஷோ!
ஆர்யா அதிசயமாக மெனக்கெட்டு மேக்கப்புடன் 'குண்டு பையனாக’ நடிக்கவும் செய்திருக்கிறார். கேங்ஸ்டர் கேர்ளாக 'பில்லா’வில் செய்ததை இதிலும் டிட்டோ அடித்திருக்கிறார் நயன். அச்சுபிச்சு கேரக்டராக இருந்தாலும், 'ஹவ் ஸ்வீட்ட்ட்ட்’ டாப்ஸி! ஊழல் அமைச்சர் மகேஷ் மஞ்ச்ரேக்கர், 'டே போலீஸ் ஆபீஸர்... என் மூஞ்சியை எதுக்குடா பார்க்குறே..? வயரை பார்த்து கட் பண்றா!’ என்று சலம்பித்தள்ளும் க்ளைமாக்ஸில் பட்டாசு கொளுத்துகிறார்.
'மேக் இட் சிம்பிள்’ என்று பன்ச் பிடித்தது முதல் சிம்பிள் வசனங்களாலேயே காட்சிகளை நகர்த்துகிறது சுபாவின் திரைக்கதை ப்ளஸ் வசனம்.
'அஜித் யார்?, ஏன் இவ்வளவு கலாட்டா செய்கிறார்?’ என்று யோசிக்கவைக்கும் முன்பாதி ஜிவ்வென்று டேக்-ஆஃப் ஆகிறது. ஆனால், நீள ஃப்ளாஷ்பேக் 'சொய்ய்ய்ங்’ என்று அந்த டெம்போவை தரை இறக்கிவிடுகிறது. அஜித் போலீஸுடன் மல்லுக்கட்டுவதைவிட ஆர்யாவுடன்தான் அதிகம் மல்லுக்கட்டுகிறார். நேர்மை ப்ளஸ் திறமையான போலீஸ் கிஷோருக்கு, அஜித்தைப் பற்றி எந்தத் தகவலும் தெரிந்திருக்காதா? அத்தனை பாதுகாப்பு அம்சங்கள்கொண்ட வங்கியில் அஜித் அண்ட் கோ திருவிழாவில் குருவி ரொட்டி வாங்குவது கணக்காக லூட்டி அடிப்பதெல்லாம், உல்லுல்லாயி!
'ஆரம்பித்த’ ஜோரில் முடிக்காமல், ஜவ்வாக இழுத்திருக்கிறார்கள். ஆனால், அஜித் ரசிகர்களையும் திருப்திபடுத்தி, ஓர் ஆக்ஷன் த்ரில்லராகவும் பேலன்ஸ் செய்த வகையில் இயக்குநருக்கு இந்த ஆபரேஷன் சக்சஸ்தான்!


 ஆல் இன் ஆல் அழகுராஜா - சினிமா விமர்சனம்


'வெட்டி பந்தா’ வேலையில் ஹீரோ, கல்யாண மண்டபத்தில் ஹீரோ-ஹீரோயின் சந்திப்பு, ஹீரோ அல்லது ஹீரோயினின் பெற்றோர்களுக்கு ஒரு பிரச்னை ஃப்ளாஷ்பேக், இந்த சம்பவங்களுக்கு நடுநடுவே சந்தானத்தை வைத்து 'மானே தேனே’ போட்டு கலாய் காமெடி... இதுதானே ராஜேஷ் படங்களின் ஃபார்முலா. அதேதான் 'அழகுராஜா’விலும். ஆனால், இந்த ஆட்டம் 'ஆல் இன் ஆல்’ போங்கு ராஜேஷ்!



ஒரு லோக்கல் சேனலை செம லோக்கலாக நடத்தி வருகிறார்கள் கார்த்தியும் சந்தானமும். அந்தச் சேனலை 'நம்பர் 1’ ஆக்கிவிட்டுத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்ற கார்த்தியின் லட்சியத்தில் இடி இறக்குகிறது காஜலின் அழகு. ஆனால், கார்த்தியின் அப்பா பிரபுவுக்கு, காஜல் குடும்பத்துடன் ஒரு முட்டல் ஃப்ளாஷ்பேக். காதல், மோதல், குடும்பப் பஞ்சாயத்துகளுக்குப் பிறகு என்ன நடக்கவேண்டுமோ, அதுவே நடக்கிறது!
அறிமுக நாயகனை வைத்து சரவெடி ஹிட் அடித்த ராஜேஷ், கார்த்தி-சந்தானத்தை வைத்து இப்படி ஒரு ஷோ காட்டுவாரா? நம்ம்ம்ப முடியவில்லை! ஃப்ளாஷ்பேக்கில் கார்த்தியை பிரபுவாக நடிக்க வைத்தது, சீனியர் சந்தானத்தின் பாடிலாங்வேஜ், எம்.எஸ்.பாஸ்கரின் நடன வகுப்பு என ஒரு சில ஐடியாக்கள் மட்டுமே அழகு ராஜா.
ஒரு ஃப்ரேம்கூட மிச்சம் வைக்காமல் துறுதுறுவென நடிக்கிறார், காதல் ரசம் பொங்க பார்க்கிறார், அந்தக் கால பிரபுவின் உடல், குரல்மொழி என படத்தில் கார்த்தி எல்லாம் செய்கிறார். ஆனாலும், என்ன செய்வார் பாவம்..? 'ஓஹோன்னனான்’ என்று காலரைத் தூக்கிவிட்டு காற்று ஊதும் இன்றைய கல்யாணம், வாய் நிறையக் குதப்பிக்கொண்டு 'டம்பி முட்டு’ என்று பேசும் அன்றைய காளியண்ணன் என இரண்டு கேரக்டர்களுக்கும் ஏக வித்தியாசம் காட்டுகிறார் சந்தானம். ஆனால், வெற்று வசனங்கள் கிச்சுகிச்சு மூட்டுவேனா என்கிறது!
கலைத் தாகத்துடன் சாதிக்கத் துடிக்கும் கேரக்டரில் காஜலுக்கு நடிக்க ஸ்கோப் கொஞ்சம் அதிகம்தான். அழகி, நடிக்கவும் செய்திருக்கிறார். ஆனாலும், 'இத்தனை லூஸுப் பெண்ணாக ஒரு ஹீரோயினா?’ என்ற நினைப்பு காஜலின் சேட்டைகளை ரசிக்கவிடாமல் நந்தியாக நிற்கிறது!
இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக சோதித்த பிறகு, கார்த்தி, நரேன் சொல்லும் அடாசு கவிதையும், அட்டு ஃப்ளாஷ்பேக்கும் ஆறுதல் அத்தியாயங்கள். ஃப்ளாஷ்பேக் ராதிகா ஆப்தேவுக்கு என்ன ஆச்சு பாஸ்?



த்ரில்லர், சஸ்பென்ஸ் படங்களில் யூகிக்கக் முடிந்த திருப்பங்களைப் பார்த்திருப்போம். அட, காமெடி காட்சிகளில் 'யூகிக்க முடிந்த திருப்பங்களை’ அழகுராஜா காட்டுகிறான். அதிலும் மிகப் பலவீனமான ஜோக்குகளுக்கு அத்தனை நீள பில்ட்-அப் ஏன்?


ரெட்ரோ பாடலாக ஒலிக்கும் 'உன்னைப் பார்த்த நேரம்’ வசீகரம். அந்தப் பாடலுக்கான மேக்கிங் மெனக்கெடலை படம் முழுக்கவே காட்டியிருக்கலாம்.
ஹிட் இயக்குநர்கள் தங்கள் அடுத்தகட்டப் பாய்ச்சலுக்கு அப்டேட் செய்துகொள்ள, ஓர் இடைவெளி தேவைப்படும். இயக்குநர் ராஜேஷ§க்கு இப்போது தேவை அந்த பிரேக்!


விகடன் விமர்சனக் குழு

 நன்றி - விகடன்

0 comments: