Tuesday, August 13, 2013

சிம்மாசன சீக்ரெட் -வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ்.(லீடர்ஷிப் உத்திகள்)



லீடர்ஷிப் உத்திகள்

புத்தம் புதுசு!

சிம்மாசன சீக்ரெட்!

வெ. இறையன்பு ..எஸ்.

1. வந்தான் தலைவன்


மனிதன் காடுகளில் வேட்டையாடித் திரிந்தபோது குழுவாக இயங்கினான். கூட்டமாக வாழ்ந்தான். அப்போது அவர்களுக்கு தலைவன் யாருமில்லை. தலைவியே இருந்தாள். தாய் வழிச் சமூகமே. பனியுகம் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முடிந்தபோது ஒரு மகத்தான மாற்றம் மனித இனத்துக்கு ஏற்பட்டது.


ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய மூன்று கண்டங்கள் சங்கமிக்கும் ஓர் இடத்தில் மனிதன் உண்ணும் முறையில் மாற்றம் தோன்றியது. இரண்டு கால்களில் நின்ற அவன் நான்கு கால் பாய்ச்சலில் முன்னேற்றத்தை முடுக்கிவிட்டான். காட்டு கோதுமையும், காட்டு பார்லியும் இயல்பாய் வளரும் இடத்தில் அவனுடைய தேர்ந்தெடுக்கும் முயற்சியால் செரிக்கும் கோதுமையும், பார்லியும் உண்டானது. காட்டு மிருகங்கள் வீட்டு மிருகங்கள் ஆயின.


இப்போது முழுநேரமும் உணவின் மீதே அவன் கவனம் இருக்கவில்லை. சேமித்துக் கொள்ளும் வசதி கிடைத்தது. எனவே பல்கிப் பெருகினான். ஒரு கூட்டத்தில் இருக்கின்ற அனைவருக்கும் பரஸ்பரம் தெரியும் என்கிற நிலைமை மாறியது. தெரியாத சமூகம் மக்கள் தொகைப் பெருக்கத்தால் உண்டாகத் தொடங்கியது. நகரங்கள் ஏற்பட்டன.



மனிதர்கள் தங்களுக்குள் வேறுபடுத்தத் தொடங்கினர். திருமண முறைகளில் ஈமச்சடங்குகள், கொண்டாட்டங்கள், ஊர்வலங்களில், பண்டிகைகளில் அவர்கள் கடைபிடிக்கும் நெறிமுறைகளைப் பொறுத்து உணவும், உடையும், அலங்காரமும், ஆடம்பரமும் அவர்களைப் பாகுபடுத்தியது.


மொழி பிணைப்பதாக உருவானது. அதுவே பிணக்கு ஏற்படுத்துவதாகவும் மாறியது. ஒரே மொழி பேசுபவர்கள் ஒன்று சேர்ந்தார்கள், ஒரே உருவத்தை வழிபடுபவர்கள் பாதுகாப்பாக உணர்ந்தார்கள். அவர்களின் பயத்தை உருவாக்க அவர்களிலிருந்து ஒருவனுக்கு, கட்டுப்படுத்தும் அதிகாரம் வழங்கப்பட்டது. தன் இனத்தைச் சார்ந்தவனைக் காப்பாற்றுவதே அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் வழியாக அந்தக் குறுநிலத் தலைவனுக்குத் தெரிந்தது.


இப்போது அளவுக்கதிகமாக வளர்ந்த நகரங்களில் ஆதிக்க மனப்பான்மை தோன்ற ஆரம்பித்தது. சிலர் தங்களைக் கூடுதல் தகுதியுடையவர்களாகக் கருதிக் கொண்டனர். உடலின் வலிமையால் மற்றவர்கள் செய்கைகளைக் கட்டுப்படுத்தினார்கள். அடுத்த குடிகளையும், குடியிருப்புகளையும் கட்டுப்படுத்த முனைந்தனர்.


விலங்குகளை வேட்டையாடியவன் அதை வேறு விதத்தில் தொடர்ந்தான். அதுவே மோதலாக, சண்டையாக, போராக உருவானது. போரின் மாறுபட்ட வடிவமே தேர்தல். மனித இனம் இனி உலகம் முழுவதும் ஒரே குடைக்குள் வருவதற்கு வாய்ப்புகளே இல்லை. எங்கேனும் வேறு கிரகத்திலிருந்து படையெடுப்பு நடந்தால்தான் அது சாத்தியமாகும்.



ஒவ்வொரு தனி மனிதனும் ஆளுகை செலுத்த அவன் மனைவியும் மக்களும் அகப்பட்டனர். அடிமையாக இருப்பவனும் அடிமைகளை வைத்துக் கொள்ள ஆசைப்பட்டான். அவனுக்கான சொத்தைப் பாதுகாக்க அமைப்பு தேவைப்பட்டது. அதுவே அரசாங்கமாக ஆனது. பலவீனமானவர்களை பலம் வாய்ந்தவர்கள் பாதுகாப்பது போன்ற பாசாங்கே அரச பதவிகளை ஆயத்தம் செய்தது


வெளியிலிருந்து வருபவர்கள் ஏதேனும் ஒரு காரணத்தைக் காட்டி அடுத்தவர்களை விலங்குகளைப்போல நடத்துவது சரித்திரத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. அடிமைகள் என்பது அங்கீகரிக்கப்பட்ட சமூகங்களில் இருந்தனர்.


சூப்பர் குடியினர் உருவாயினர். சூப்பர் அடிமைகளும் உருவாகத் தொடங்கினர். அப்போது மிகப்பெரிய கட்டடங்கள் கட்டப்பட்டன.அரண்மனைகள் சிலரின் ஆளுகைக்காக உருவாயின. செத்த பிறகும் பிரமிடுகள் 4,993,000 டன்கள் கல்களை நகர்த்தி உருவாயின.


அப்போதும், இப்போதும் வெளியிலிருந்து ஓர் எதிரியை உருவாக்கினால்தான் தலைமையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்கிற உத்தி மட்டும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. குழுவைச் சார்ந்தவர்களை எப்போதும் பயத்தின் பிடியில் வைத்திருப்பது தான் அவர்களைப் பணிவுள்ளவர்களாக ஆக்கும் பாணி. எதிரி எப்போது வேண்டுமானால் படை எடுக்கலாம் என்ற எண்ணத்தை உருவாக்கினால்தான் தலைமை தக்க வைக்கப்படும்.
 

மனிதன் நகர்ப்புறங்களில் நெருக்கமாக வாழ்ந்த போது, உயிரையும், வாழ்வையும் கக்கத்தில் கெட்டியாகத் தக்க வைத்துக் கொள்வதற்காக, புதிய புதிய கண்டுபிடிப்புகளும் அவனிடம் உதயமாயின. எவனிடம் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் இருக்கின்றனவோ அவனே மற்றவர்களை வீழ்த்த முடியும், குழுவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருக்க முடியும்.


காலப்போக்கில் பரிணாம வளர்ச்சி உடலில் மட்டும் நடக்காமல் உள்ளங்களிலும் நடந்தது. உடலின் வலிமையைக் காட்டிலும் மக்களின் சக்தி முக்கியத்துவம் வாய்ந்தது என்று தங்களுக்கான முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை யாரிடம் வழங்குவது என்று மக்களே தேர்ந்தெடுத்தார்கள். அவர்களைத் தேவைப்பட்டால் தூக்கியடிக்கும் கடிவாளத்தைக் கைகளில் வைத்துக் கொண்டார்கள். இன்று இந்த அமைப்புதான் பல்வேறு வடிவங்களில் வளர்ந்தும், தேய்ந்தும் வாழ்ந்து வருகிறது.


பிறப்பினால் மட்டுமே தலைமைப் பண்பு என்ற நிலை, கடந்த நான்கு நூற்றாண்டுகளாக மாற ஆரம்பித்தது.

எல்லா நிலைகளிலிருந்தும் அயராத உழைப்பும், தன்னலமற்ற தன்மையும், துணிவும், முயற்சியும், அர்ப்பணிப்பும் இருப்பவர்கள் வைராக்கியத்துடன் போராடினால் தலைமைப் பதவியை அடைய முடியும் என்பது இன்று அறிவியல்ரீதியாக உணரப்பட்டு விட்டது.


அலெக்சாண்டரின் தளபதி செல்யூகஸ் நிகேடர் தலைமையிலான கிரேக்கப் படையை துவம்சம் செய்தவர் வேளாண் குடியில் பிறந்து அரசனாக ஆகிய, சந்திரகுப்த மௌரியர். அவருடைய பேரன் அசோகரே இன்றும் உலக மக்களால் ஒப்பற்ற மன்னராகக் கருதப்படும் ஒருங்கிணைந்த இந்தியாவின் சக்கரவர்த்தி.
பராக்கிரமம் மிக்க பாபரது மகன் ஹுமாயுனோ தடுக்கி விழுந்து மரணத்தைத் தழுவியவர்.
வெறும் சிப்பாயாகச் சுடரும் கண்களுடன் இருந்த ஆஃப்கான் வீரர் ஷெர்கான், முகலாய சாம்ராஜ்யத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துப் பார்த்தவர். அவரே ஷெர்ஷா என்ற பெயரில் கொடி கட்டிப் பறந்தவர்.

ஔரங்கசீப்பின் விழிகளுக்குள் விரல்களை விட்டு ஆட்டிய வீர சிவாஜி அரசக்குடியில் பிறந்தவர் அல்ல.

ஃபிரான்ஸின் குடிமகன் கூட அல்ல, ஆனால் அதன் சக்கரவர்த்தியாக தன் கையாலேயே முடி சூட்டிக் கொண்டு உலக நாடுகளையெல்லாம் ஒரு கை பார்க்க முனைந்தவர் நெப்போலியன். ஹிட்லர் ராஜவம்சத்தில் பிறந்தவரல்லர். சாமானியக் குடும்பத்தில் அறிவுச்சுடராய் அவதரித்தவர் லெனின். கடைநிலைத் தொழில் செய்யும் சமூகத்திலிருந்து கடைந்தெடுத்த வெண்ணெய்யாக வந்து காலத்தின் கன்னத்தில் களங்கமில்லா அழகை அலங்கரித்தவர் ஆபிரகாம் லிங்கன்.


சொந்த நாட்டை மட்டுமல்ல, சுதந்திர வேட்கை உள்ள எத்தனையோ பேருக்கு ஆதர்ச புருஷரா இன்றும் இருக்கும் மகாத்மா காந்தி, சத்திரிய வம்சத்தில் பிறக்கவில்லை. மூன்று டாக்டர் பட்டம் பெற்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்து, தொடர்ந்த உரையாடலின் மூலம் காந்தியடிகளின் மனத்திலும் சாதி ஒழிய வேண்டும் என்கின்ற பாதிப்பை ஏற்படுத்திய அண்ணல் அம்பேத்கர் மேட்டுக்குடியில் பிறந்தவரல்லர்.
1954 முதல் 1963 வரை ஒன்பது ஆண்டுகள் தொடர்ந்து முதலமைச்சராகப் பணியாற்றிய பெருந்தலைவர் காமராஜர் தலைவர்கள் பிறந்த பரம்பரையில் பிறக்கவில்லை.
காஞ்சிபுரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து அங்கேயே பச்சையப்பன் பள்ளியில் படித்து, பின்னாளில் ஆங்கிலத்திலும், தமிழிலும் அசைக்க முடியாத உரைகளையாற்றி, தமிழக மக்களால் அன்புடன்அண்ணாஎன்று அழைக்கப்பட்ட சி.என். அண்ணா துரை தலைமைப் பண்பு, தகுதியால் வருவதே என்பதற்கு ஓர் அடையாளம்.


ஒரு காலத்தில் உலகமெங்கும் இளைஞர்களின் இதயத்தில் அணையாத அக்னி சுடர் விட்டுக் கொண்டிருந்தது. அநியாயங்களைக் கண்டு கொதிப்பதும், அன்னிய சக்திகளை எதிர்ப்பதும் அடையாளங்களை இழக்காமல் தக்க வைத்துக் கொள்வதும் அவர்களுக்கு சர்க்கரைப் பொங்கல் சாப்பிடுவதைப் போல இனிப்பாக இருந்தது. சுயநலம் கலக்காமல் வாழ்வதே இளமைப்பருவம் என்று எல்லோரும் பாராட்டும்படியாக இந்திய இளைஞர்கள் இருந்தார்கள்.



இன்று இளைஞர்கள் முப்பது வயதுக்குள் அத்தனை வசதிகளையும் மொத்தமாகப் பெறவேண்டும், நாற்பது வயதுக்குள் பிரச்னையில்லாத எதிர் காலத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்று பலர் எண்ணுகிறார்கள்.


இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு பேசும் படம் என்கின்ற பேசாத படம் ஒன்று வெளியானது. அந்தப் படத்தின் நாயகன் வீதியில் செல்லுகிறபோது சச்சரவு ஒன்று நடந்து கொண்டிருக்கும், அந்தக் கலவரத்தின் சின்னத்துகள்கூட தன் புலன்களில் எங்கேயும் படிந்து விடக்கூடாது என்று அவற்றிலிருந்து தீவிரமாக ஒதுங்கிச் செல்லும் மாநகரப்போக்கு ஒரு காட்சியில் வரும். இன்று பல இளைஞர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள் என்பது வேதனையான வெளிப்பாடு.
 
எதற்குப் பிரச்னை என்று நினைப்பவர்கள் மத்தியில் தலைமைப் பண்பைப் பற்றிய விழிப்புணர்வையும், அதன் அம்சங்களைப் பற்றிய தெளிவையும் ஏற்படுத்தவே இத்தொடரின் நோக்கம்.


Thanks-Kalki

2 comments:

Unknown said...

கட்டுரை மிக அருமை தங்களின் பதிவுகள் சிறப்பானவை

'பரிவை' சே.குமார் said...

நல்லதொரு கட்டுரைப் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்...