Wednesday, October 17, 2012

ஆண்களின் படித்துறை – ஜே. பி. சாணக்யா - சிறுகதை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9tvbrDjkDBIm2Dnq59HknH1-9WTUzt3fX1CDBpUz3PEMRnwE4UZD5DIXcWQ-oxaDBy7vOnuMnnqiOb7tB3iU_YcGAUtwqOvh3t1HFlLZv-3Y0Ieero7pH4sq0waElQoYyIhoCntoFQyhc/s1600/Chanakya.JPG

அன்னம்மாள் ஆண்களின் படித்துறையில் அமர்ந்து நீராடிக்கொண்டிருக்கிறாள்.
படித்துறைக்குக் குளிக்க வரும் ஆண்களின் எண்ணிக்கை அந்நேரங்களில் அதிகரித்துக்
கொண்டிருக்கிறது. மத்திய வயது முழுவதையும் அவள் தாண்டிவிட்ட பின்னரும் அவளுடல்
இன்னும் வரிசை குலையாமல் இருக்கிறது. தொய்வடையாத முலைகளும் மடிப்பு விழாத
இடுப்பும் கொழுத்த குதிரைபோல் பின்பக்கமும் வாலிபர்கள் முதல் வயசாளிகள்வரை
சுண்டிப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. அது அவளுக்கு மிக நன்றாகத் தெரியும்.
ஊருக்குப் புதிதாய் வரும் ஆண்களிலிருந்து பாராமுகமாய்ச் செல்லும் கிறுக்குப்
பிடித்த ஆண்கள் வரை அவள் படித்துதான் வைத்திருக்கிறாள். ஆண்கள் பற்றி அவள்
வைத்திருக்கும் கணிதம் எதுவும் இன்றுவரை தோற்றுபோனதில்லை.
பல் துலக்கியபடியும் துணி துவைத்தபடியும் வெறுமனே உடலைத் தேய்த்துத் தேய்த்து
முங்கிக் குளித்தபடியும் பிரயோசனமற்ற கதையளந்தபடியும் ஆண்களின் படித்துறை அவளை
வெறுத்துக்கொண்டிருக்கிறது. அவள் தன் நீராடலைக் காட்சிப்படுத்துவதனூடாகவே அதைத்
தட்டி வீழ்த்துவதான தொனியில் நீராடிக்கொண்டிருக்கிறாள்.
படித்துறை அவள் வீட்டுக்குமுன் வந்தபோது அவள் கணவன் சர்ப்பம் தீண்டி
இறந்துபோனான். அவள் வீட்டை ஒட்டி ஓடும் வாய்க்காலை முன்னிட்டுப் பஞ்சாயத்து
அப்படித்துறையை அவள் வீட்டு வாசலுக்குக் கொண்டுவந்தபோது அனைவரும் அவள்
நீராடுவதைப் பார்ப்பார்கள் என்றோ அனைவரும் அவள் வீட்டின் முகப்பில்
நீராடுவார்கள் என்றோ யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அகன்ற வாய்க்கால் பஞ்ச
காலத்தில் தூர் வாரப்பட்டது. ஊர் மக்கள் அனைவரும் மூன்று வேளை சோற்றுக்கும்
படிப்பணத்திற்குமாக வாய்க்காலை மேலும் ஆழப்படுத்தி, சீர்ப்படுத்திவிட்டுப்
போனார்கள். அன்னத்தின் வீட்டின் முன், நீளமும் அகலமுமான சிமிண்டு
படிக்கட்டுகளுடன் படித்துறை வந்து விழுந்தது. முதலில் அவர்கள் நீராடுவதை
வீட்டிலிருந்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு அவளும் அந்த படித்துறையை
விரும்பினாள். துணி துவைப்பதிலிருந்து குளிப்பதிலிருந்து பாத்திரம் அலம்புவது
வரை எல்லாமும் அவளுக்கு மிகவும் எளிமையாகிவிட்டது. லலிதாவுக்கு அப்படித்துறை
தன் வீட்டைச் சுற்றி இருப்பது பிடிக்காமல் போய்விட்டது. அவள் அம்மா அங்கு
அனைவருக்காகவும் நீராடுவதுபோல் சென்று குளிப்பது சற்றும் பிடிக்கவில்லை. திருமண
வயதில் தன்னை வைத்துக்கொண்டு படித்துறையில் பல்லிளித்துக்கொண்டிருப்பதாக அவளைக்
குற்றம் சாட்டிக்கொண்டிருந்தாள்.
மெயின் ரஸ்தாவை ஒட்டி இறங்கும் மரப்பாலம்தான் கிழக்கே ஒதுங்கிக் கிடக்கும்
வீடுகளைப் பிணைத்துக் கொண்டிருக்கிறது. அன்னம் படித்துறையில் நீராடும் நேரம்
அதிகபட்ச ஆண்களுகு அத்துப்படியாகியிருக்கிறது. அவர்கள் அவளுக்காகவே
காத்திருக்கிறார்கள். வெவ்வேறு நேரங்களில், வெவ்வேறு முகங்களில். பாத்திரம்
அலம்பவோ துணி துவைக்கவோ அவள் புடவையை மழித்து அமர்ந்துகொள்ளும் போது
வழுவழுப்பான தொடைகள் பிதுக்கத்துடன் மினுக்க, ஆண்கள் பல் துலக்குகிறார்கள்.
பெருமூச்சுவிடுகிறார்கள். அதன் பின் அவள் சிறிது நேரம் கழித்து நீராட
வருகிறாள். லலிதா அரைப் புடவை கட்டிக்கொண்டு தையல் பள்ளிக்குப் புறப்பட்டுப்
போகிறாள். ஆண்களின் சைக்கிளில் அவள் உந்தி ஏறும்போது எதிர் வீட்டுக் கிழவன்
தினமும் பார்த்துக்கொண்டிருக்கிறான். அவளது முன்தொடை அந்நேரத்தில் பளிச்சிடுவதை
அவன் அதீத விருப்பத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறான். லலிதா பெண்கள் ஓட்டும்
சைக்கிள் வாங்கிவிட வேண்டுமென்றுதான் ஆசைப்பட்டாள். அது முடியாமல் குறைந்த
விலைக்குக் கிடைக்கிறதென்றூ அன்னம்தான் இந்த சைக்கிளை வாங்கிப் போட்டாள். அது
தன் அம்மாவுக்காகத்தான் அவ்விலைக்குக் கிடைத்திருக்கிறதென்று அவளுக்குத்
தெரியும்.
அவ்ள் கிளம்பிச் செல்லும்போது அப்படித்துறையை வெறுப்புடன்தான் பார்த்தபடி
போகிறாள். அவர்களைச் சொல்லி என்ன இருக்கிறது, அம்மா சரியில்லை என்று
நினைத்துக்கொண்டாள். இன்னும் சிறிது காலத்தில் சாகக் கிடக்கும் அக்கிழவனின்
நடத்தை அவளுக்கு ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. பல சமயங்களில் அவள் சைக்கிளில்
ஏறுமுன் அவன் இருக்கும் பக்கம் பார்த்துக் காறித் துப்பியிருக்கிறாள். அவன் சில
நாட்கள் கம்மென்றிருந்துவிட்டு மீண்டும் பார்க்கத் தொடங்கிவிடுவான்.
அவனுக்காகவே அவள் அவன் பார்வைபடாத மற்றும் எதிரில் ஆண்கள் வராத நேரமாய்
சைக்கிளில் ஏற, ஏதோ சைக்கிளைத் துடைத்துச் சரிசெய்வது போலச் சாலையில்
நின்றுகொண்டிருப்பாள். கிழவன் ஒரு நாள் வீட்டின் பின்புறம் வந்து நின்றுகொண்டு
அவளைப் பார்த்தான். அவளுக்கு எரிச்சலாக இருந்தது. பல சமயம் அவனைச்
சாடைமாடையாகத் திட்டவும் செய்திருக்கிறாள். அவள் அம்மாவிடம் கூறியபோது அவளும்
கிழவனைத் திட்டிவிட்டு மேற்கொண்டு காரியம் பார்க்கத் தொடங்கிவிட்டாள். இத்தனை
இளக்காரத்திற்கும் தன் அம்மாவையே லலிதா மீண்டும் மீண்டும்
சாடிக்கொண்டிருந்தாள். அவளும் லலிதாவின் மனம் கோணாதபடி நடப்பதற்கு முயற்சி
செய்துகொண்டுதானிருக்கிறாள். ஆண்கள் வராத நேரத்தில் நீராடச் சொன்னாள். அவளும்
செய்தாள். ஆனாலும் அவள் நீராடும் செய்தி எப்படியோ காற்றின் வழி பரவிவிடுகிறது.
சர்க்கஸ் வினோததத்தைப் பார்க்கும் கூட்டம்போல் சிறிது நேரத்தில் வேளை கெட்ட
வெளையில் கூட்டம் கூடிவிடுகிறது.
அன்னத்திற்கு எல்லோரையும் தெரியும். படித்துறையில் பல ஆண்களுடன் அவள்
நீராடியிருக்கிறாள். அவர்கள் அனைவரும் தன்னை ஒரே மாதிரிதான் பார்க்கிறார்கள்,
ஒரே புள்ளியில்தான் நடத்துகிறார்கள் என்பதை அவள் அறிவாள். ஆனால் ஆண்களின்
பார்வை தன் மகளையும் அப்படியே பாவிக்கும் என்பதைத்தான் ஏற்றுக்கொள்ள
முடியாமலிருக்கிறது. முடிந்தவரை தனது நீராடலைப் பிள்ளைக்குத் தெரியாமல்தான்
பார்த்துக்கொண்டாள். அவளுக்கான பருவங்கள் விளையத் தொடங்கியதுமே கண்ணாடித்
திரைபோல் காட்டிக் கொடுத்துவிட்டது. சில மாதங்களில் தன் மகளுக்கு மாதவிடாய்
தள்ளிப்போகும் நாள்களில்கூடப் பதற்றத்துடன் எள்ளும் எள் பண்டங்களும் சூட்டுப்
பழங்களும் தின்னத் தருவதை லலிதாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அது
மறைமுகமாகத் தன் அம்மாவைப் போலவே தன்னையும் ஆக்கிவிடுவதற்கான வற்புறுத்தலோ
என்று குழம்புகிறாள். சில சமயம் அத்தருணங்களில் அன்னத்தை அதற்காகத் திட்டவும்
முறைத்துவிடவும் செய்திருக்கிறாள். மறுநாளும் மறுநாளுமான அதிகாலைக் குளியலின்
மூலமாய்த் தன் புத்துயிர்ப்பையும் சேதாரமின்மையையும் அதிகாரத்துடன்
உணர்த்துவாள். அப்போது லலிதாவின் கோபத்தை அன்னம் பொருட்படுத்துவதில்லை. மாறாக
மிகவும் சந்தோஷப்படுவாள். அவளுக்கு அவளே வேலி என மனதில் முணுமுணுத்துக்
கொள்வாள்.
*********
அன்னம் வடக்கு வெளிக்குச் சாக்கு மடித்து எடுத்துக்கொண்டு கூலி வாங்கப்
போகிறாள். அவள் செல்லும் திசையில் தட்டுப்படும் அனைத்து ஆண்களும் அவளுடன்
இருந்தவர்கள் கூட, விழிகளால் புணர்ந்து தீர்த்துக்கொள்கிறார்கள். அவள்
குனிந்தபடியும் எங்கோ பார்த்தபடியும் இருபுறமும் கரும்பு வயல்களும் கருவேல
மரங்களும் கிளைத்த வண்டிப்பாதையில் இயல்பாக நடந்துபோகிறாள். யாருமற்ற
அவ்வேளைகளில்தான் அவளுக்கு இயல்புநடை கூடிவருகிறது. வானச் சரிவு தூரத்தில்
பாதையின் முகத் திருப்பல்கள் மறைந்த நீட்சியைக் கற்பனைக்குள் கொண்டு வருகின்றன.
சில வயல்களும் அதன் மறைவிடங்களும் சில புணர்ச்சிச் சம்பவங்களை நினைவில்
தட்டிவிட்டு மறைகின்றன. வெவ்வேறு விதமான பகல் பொழுதுகள், வேளைகள், புணர்ச்சி
முகங்கள். அவை வெவ்வேறு முகங்களே ஒழிய அதன் தவிப்பிலும் வெளிப்பாட்டிலும்
பெரிதான மாற்றங்கள் எதுவும் இல்லை. எதனாலும் எதுவும் மிஞ்சிவிடவில்லை என்று
அவள் அனுபவம் சொல்லிச் செல்கிறது.
அவள் செடிகளுக்கும் கரும்பு வயல்களுக்கும் நடுவில் தனித்துப் போவதை எரிமேட்டின்
தொலைவிலிருந்து டிங்கு பார்த்தான். மனம் பரபரக்க ஓரமாக சைக்கிளை நிறுத்திப்
பூட்டிவிட்டுக் குறுக்கே ஓடிவரத் தொடங்கினான். டிங்கை எல்லோரும் ‘லூஸு’
என்றார்கள். இளம் வாலிப மீசையும் மெல்லிய குறுந்தாடிப் படர்வும் நீளவாகு
முகமுமாக, சிவப்பாக இருந்தான். கழுத்தோரத்தில் பச்சை நரம்புகள் இலை
நரம்புகள்போல் படர்ந்து இறங்கியிருக்கும். வாயைத் திறந்தால்தான் அவன்
திக்குவாயால் குளறுவது தெரியும்.
புழுதி வயல்களில் அவன் கால்கள் தறிகெட்டு ஓடி வந்தன. அவன் நினைப்பில்
அன்னத்தின் கட்டியணைப்புகள் தெரிந்தன. மூச்சும் வியர்வையும் பெருகின. குறி
குறுகுறுப்புடன் மிதக்கத் தொடங்கிவிட்டது. அவள் கூலி வாங்கத்தான் அங்கு
போகிறாள் என்று யூகித்துக்கொண்டான். ஆட்கள் எதுவும் தட்டுப்படாத பட்சத்தில்
அவளைக் கட்டிப் பிடித்து முத்தமிட வேண்டும் என்று நினைத்தான். இத்தனை நாளும்
அவன் அப்படி நடந்துகொண்டதில்லை. ஆனால் அவனால் இனிமேலும் அதை மறைக்க முடியாது
என்று எண்ணியிருந்தான். அவள் வீட்டுப் பக்கம் செல்ல மிகுந்த கூச்சமாக இருந்தது.
அதோடு ஊரில் அவனைக் கிண்டலடித்தே சாகடித்துவிடுவார்கள் என்று காரணம்
வைத்திருந்தான்.
அன்னத்திற்கு அசைபோட நினைவுகள் நிறைய இருக்கின்றன. எதையோ தனக்குள்
முணுமுணுத்தபடி நடந்தாள். அவன் மறுதெம்பு(1) வயல்களில் புகுந்து மேடேறி அவளைப்
பார்த்தான். நா வறட்சியும் பயமும் கூடிக்கொண்டன. அவளும் அவனைப் பார்த்தாள்.
கட்டுப்படுத்தப்படும் மூச்சிரைப்பும் வெளியேறும் வியர்வையும் அவன் ஓடி
வந்திருக்கிறான் என்பதை எளிதாக உணர்த்தின. “என்ன இந்தப் பக்கம்” என்று
விசாரித்தபடி கடக்க முனைந்தான். அவன் பல்லிளித்துக் கொண்டு நின்றான். ஒல்லிக்
குச்சான கால்கள் தான் அவள் கண்களில் பட்டன.
”வறியா?” என்றான்.
சட்டென அவளுக்குத் தன் இளக்காரம் தெரிந்து கோபம்தான் வந்தது. அவனை அளந்தபடியும்
முறைத்தபடியும் நடக்கத் தொடங்கினாள்.
“ஒரே ஒரு வாட்டிதான்” என்றான்.
அவள் ஒட்டுமொத்தமாக அவ்வூர் ஆண்களை நினைத்துக்கொண்டாள். அதில் இவனும்
சேர்க்கப்பட்டுவிட்டான். அவள் திரும்பிப் பார்த்து, தான் கூலி வாங்கப்
போவதாகவும் நாளைக்கு வீட்டுக்கு வரும்படியும் கூறினாள். அது ஒன்றும் பிரச்சினை
இருக்காது என்று நினைத்தாள். அவன் மனத்தை முறிக்க இடமில்லாதவள்போலப் பேசினாள்.
அவன் வயதும் ஓடி வந்திருக்கும் தவிப்பும் அவளுக்கு இசைவாகவும் இருந்தன. அவன்
பரிதாபமாக நின்றுகொண்டிருந்தான். அவளும் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவள்
கடைத்தெருவில் கூட்டுறவு அங்காடியில் பொருள் வாங்கச் சென்ற போதெல்லாம் அவன்
சமீபமாக நடந்துகொண்டிருந்த முறையில் அத்தனையிலும் காமம் ஒளிந்திருந்ததைச்
சட்டெனத் தற்போது யூகிக்க முடிந்தது. அவள் பாதையின் இரு பக்கங்களிலும் அரவம்
பார்த்தாள். வெயிலில் வயல்வெளி தனிமையின்  ஆங்காரத்தோடு பூத்துக் கிடந்தது.
அவன் யாருக்கும் முகம் தெரியாதபடி கரும்பு வயலின் நுனியில்
நின்றுகொண்டிருந்தான். அவள் சட்டென முடிவெடுத்தவளாய் அவன் நிற்கும் பக்கம்
பார்த்தபடி நடந்தாள். அவன் உடலும் மனமும் சந்தோஷத்தில் பதைக்கத் தொடங்கின.
அவ்விஷயத்தில் அவளுக்குப் படிந்துபோயிருந்த அனுபவம் அவனைப் பார்த்து
எடைபோட்டுக்கொண்டிருந்தது. வெப்பமுற்ற வயலில் அவளால் அதிக நேரம் இருக்க
முடியாது என்பதை உணர்த்துபவளாய்ப் பேசி உடனே அவன் உடலுறவு முடிய வழி கொடுக்கத்
தொடங்கினாள். அவன் அதைத் தாண்டி அவளது உடலைப் பார்க்கும் ஆவல் பெருகியவனாய்த்
தீவிரம் தெறிக்கும் முகத்துடன் வியர்வை சொட்டப் பொத்தான்களை விடுவித்து அவள்
மார்புகளைப் பார்த்தான். அவள் அவன் குறியைப் பிடித்துத் தனக்குள் சேர்த்தபோது
பொருட்படுத்தாதவனாய் அவள் மார்புகளைத் தடவிப் பார்த்தான். நினைவில் பதிய
வைத்துக்கொள்வதுபோல் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். ஏற்றம் குறையாத
மார்புகளின் ஒரு கரத்தில் அடங்காத வளமை அவன் காமத்தைப் பெருக்கியது. மாமிசம்
கவ்வும் விலங்கைப்போலச் சட்டெனக் குனிந்து சுவைத்தான்.
அவன் கட்டுப்படுத்த முடியாதவனாய் இயங்க ஆரம்பித்தான். எல்லாமும் அவன் பெண்ணுடலை
அறிந்துகொள்ளும் மனப்பதிவின் தோரணையிலேயே இருப்பதை உணர்ந்தாள். அவன் அப்படி
உற்றுப் பார்ப்பது அறிதலுக்காகத்தான் எனும்போது அவன்மேல் சில எண்ணங்கள் ஓடின.
அதைக் கேட்க வேண்டாம். ஆண்களுக்குப் புதிதா என்ன என்று
கம்மென்றிருந்துவிட்டாள். அவனே பொருத்திக் கொண்டு இயங்கத் தொடங்கினான். குறி
இறுக்கத்தை விரும்பித் தளர்வாக அணுக விடாமல் லேசாகத் தொடைகளை இணைத்து அவள்
இறுக்கம் காட்டினாள். அவன் குறி அழுத்தத்துடனும் இறுக்கத்துடனும் செல்வதை
இருவரும் உணர்ந்தார்கள். அவன் அவள் மார்புகளைப் பார்த்தவாறே இயங்கினான்.
நான்கைந்து உந்தல்களிலேயே உச்சம் வந்தவனாய்த் தடுமாறி அவள் மேல் கவிழ்ந்தான்.
அவள் யூகித்தது சரிதான் என்றாலும், “இதுதான் முதல் தடவையா?” என்றாள். அவன்
சிரித்துக் கொண்டே இசைவாய்த் தலையாட்டினான். “பொய் சொல்லாதே” என்றாள். அவள்
தலையில் அடித்துச் சத்தியம் செய்தான். “இன்னொரு முறை வேண்டுமானால் செய்துகொள்.
இனிமேல் வரக் கூடாது” என்றாள். அவன் போதும் என்று கூறிக் கூச்சத்துடன்
நெளிந்தான். சில வினாடிகளில் அவனைச் சட்டென மேலேற்றி இயங்கக் கூட்டினாள்.
ஆவேசப்பட்ட இயக்கத்தில் உற்சாகமாய் இயங்கினான். அவள் அவன் உடலைப் பிடித்து
நிதானமாக இயக்கத்தைச் சீராக்கினாள். அவனும் அவ்வாறே இயங்கினான். இருவருக்குமான
திருப்தியில் இருவரும் கட்டிப் பிடித்துக்கொண்டார்கள். டிங்கு பாவம்.
அவனுக்குத் திருமணம் ஆகும்வரை வேறு எந்தப் பெண்தான் அவனை விரும்பிப்
புணர்ச்சியில் சேர்த்துக் கொள்வாள் என்று நினைத்தாள். இதை அவனும் இரண்டாம்
உடலுறவின் போது உணர்ந்திருந்தான்.
அவனும் அவளுடன் கூலி வாங்க வருவதாகக் கெஞ்சினான். அவன் வரும்போது யாரும்
பெரிதாக எடுத்துக்கொள்ளப்போவதில்லை என்று நினைத்தாள். அம்மா இல்லாத பிள்ளை
என்று வேறு பரிதாபம் பார்த்தாள்.
அவள் கூலிக்காக அவனுடன் சென்று களத்தில் காத்திருந்தபோது ஆண்கள் அவளிடம்
மாறிமாறிப் பேச்சுக் கொடுத்தார்கள். எல்லோருமே அவளைப் புணர்வது பற்றியோ அல்லது
மற்றவர்களைப் புணர்ச்சிக்கு ஏற்றுக்கொள்வது பற்றியோ அல்லது பொதுவான புணர்ச்சி
பற்றியோதான் மறைமுகமாகப் பேசி முடித்தார்கள். அன்னத்திற்கு அவர்களது பேச்சின்
சாரம் தெரியும். அவள் நேர்க்கோட்டில் நின்றுதான் பார்த்தாள்; பேசினாள்.
அவர்களுடன் இங்கேயே படுத்துக் கொண்டால் அவர்களுக்குப் பரம சந்தோஷம். மேலும்
இந்த வெட்டி நியாயம் எதுவும் பிறகு பேசப்படப்போவதில்லை என்று நினைத்தவுடனேயே
அவளுக்குத் தன் நடத்தை மீதான ஆசுவாசமும் விடுதலையுணர்வும் ஏற்பட்டன.
*2*
லலிதா மரப்பாலத்தின் வழி சைக்கிளை விட்டு இறங்கி நெட்டிக்கொண்டு வருகிறாள்.
மரப்பாலம் சைக்கிளையும் அவளையும் தாங்கித் திமிர் முறித்துக்கொள்கிறது
முனகியபடி. படித்துறைப் படிக்கட்டுகள் யாருமற்று அவளைப் பார்த்துக்
கொண்டிருக்கின்றன. அப்படிக்கட்டு நீர்நிலையிலிருந்து அவள் வீட்டுக்கு ஏறிவரும்
வழிபோலவே இருக்கிறது. பல்வேறு முகச் சாயலும் அசட்டுச் சிரிப்புமாய் அவளைப்
பற்றி இழுத்துத்தான் பார்க்கிறது.
சைக்கிளை நிறுத்திவிட்டுப் பூட்டிக் கிடக்கும் வீட்டைத் திறக்கின்றாள்.
கிழவனின் ஞாபகம் வந்து திரும்பிப் பார்க்கிறாள். அவன் எழுந்து உட்கார்ந்து
பார்த்துக்கொண்டிருக்கிறான்.
அவளை அறியாமலேயே அவன் இருப்பு அவளைப் பரிசோதிப்பதுபோலவே அவன் நினைவு அவ்விடத்தை
நிரப்பிக் கொண்டு நிற்கிறது. அவனால்தான் அவள் சைக்கிளில் வீடுவந்து இறங்காமல்
பாலத்தின் அம்முனையிலேயே இறங்கிக் கொள்கிறாள். திறந்த வீட்டின் வெறுமை அம்மாவை
நினைவுக்குக் கொண்டுவந்து அலுப்பேற்றுகிறது. கதவைத் திறந்து போட்டுச் சிறிது
நேரம் படிக்கட்டிலேயே உட்கார்ந்திருக்கிறாள். ரோட்டில் ஒரு புல்லட்டில் நான்கு
பேர் நெருக்கியடித்துச் செல்கிறார்கள் படபடக்கும் சப்தத்துடன். அவளுக்குச்
செல்வத்தின் ஞாபகம் வருகிறது. செல்வத்தின் புல்லட் நிறம் கறுப்பு. அருகிலுள்ள
டவுனில் எலக்ட்ரிக்கல் கடை வைத்திருக்கிறான். அவளைப் பார்க்க அடிக்கடி
பகிரங்கமாக வீட்டுக்கு வந்துபோய்க்கொண்டிருக்கிறான். அவன் தன்னைத் திருமணம்
செய்துகொள்ளும் கற்பனைக்குள் அவளை வளர்த்துவிட்டிருக்கிறான். பூசிய முகமும்
வடிவமான உடலும் ஆண் துணையற்ற வீடும் அவனது ‘காதலை’ப்
பெருக்கிக்கொண்டிருக்கின்றன. அன்னம் எச்சரிக்கவும் இல்லை.
ஊக்கப்படுத்தவுமில்லை. அவ்விஷயம் அதன் போக்கின் போய்ச்சேரட்டுமென
விட்டுவிட்டாள். இவ்விஷயத்தில் முடிவுகள் விருப்பமான கற்பனைகளில் மோதிச்
சுழலும்போதெல்லாம் கடைசியாக அவளது சாமர்த்தியம் என்று விட்டுவிடுகிறாள்.
லலிதா தையல் பள்ளிக்குப் போகும் வழியில் அவனது கடை இருக்கிறது. கடைத்தெருவை அலற
வைத்தபடி சினிமாப்பாட்டு ஒலித்துக்கொண்டிருப்பது அவன் இருப்பு. புகை பிடித்தபடி
அவள் வரும் நேரத்தில் ஒருக்களித்து நிற்கும் புல்லட்டில் சாய்ந்துகொண்டு
பார்த்துச் சிரிப்பான். அவளுக்கு அவனைப் பிடித்திருக்கிறது. ஆனால் தன்
அம்மாவின் நடத்தைகளாலேயே தன்னை அவனிடம் ஒப்புவிக்கத் தயங்கிக்
கொண்டிருக்கிறாள். ஆண்கள், அந்த விஷயம் மட்டும் நடந்துவிட்டால் இடத்தைக் காலி
செய்துவிடுவார்கள் என்று முழுமையாக நம்பிக்கொண்டிருக்கிறாள். அதுவும் தனது
குடும்பப் பிராது இவ்வூரில் அம்பலம் ஏறாது எனவும் தெரிந்து வைத்திருக்கிறாள்.
அவன் பேச்சையும் போக்கையும் அவளால் முழுதாகப் புரிந்துகொள்ள முடியவில்லை என
நெருக்கமான தோழிகளிடம் கூறிவருகிறாள். ஒரு நேரம் அவளுக்காகவே காத்திருப்பது
போலவும் சில சமயம் வேற்றாள்போல் பேசிவிடுவதாகவும் கூறுகிறாள். அக்குழப்பங்களைப்
பற்றி அவனிடம் பேசிவிடத் தைரியம் எதுவும் வரவில்லை. அவன் தன்னைப் பார்க்க
வருவதே பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது அவளுக்கு. புல்லட் வரும் சப்தம்
தெருவுக்கு லலிதாவின் ஞாபகத்தைத்தான் எழுப்பிவிடுகிறது. செல்வம்
சாலாக்குக்காரன் என்றார்கள் சில பொம்பிளைகள். கல்யாணத்திற்கு முன்பு எங்கு
சுற்றி வந்தால் என்ன, குடும்பம் என்று ஆனபின்பு ஊர் மேயாமல் இருந்தால் சரிதான்
என்கிறாள் லலிதா. அவளுக்கும் ஆணுலகம் பற்றி அவள் அம்மாவைப் போலச் சில கணக்குகள்
இருக்கின்றன. அக்கணக்குகளின்படி அவள் இயற்றிக்கொண்ட சட்டங்கள் தாம் தையலை
ஒழுங்காகவும் தீவிரமாகவும் கற்றுக்கொள்வதற்கும் ஆண்களிடம் எல்லையோடு தன் பேச்சை
வகுத்துக்கொள்வதற்கும் துணை புரிகின்றன. ஒருமுறைகூட அவனுடன் அவன் வருந்தி
அழைத்த பிறகும்கூடத் தனியாக சினிமாவுக்குச் சென்றதில்லை. பெண்கள் கூட்டம்
கிளம்பும் பேச்சுத் தட்டுப்படும் நாளிலிருந்து தேதி அறிவித்து அவனை அங்கு
வரவழைப்பாள். அவனும் வேறு வழியின்றித் தன் நண்பர்களுடனோ தனியாகவோ வருவான்.
டிக்கெட் எடுத்துத் தரும் வேலைகள் முடிந்து உள்ளே சென்றதும் அவள் பெண்களுடனும்
அவன் ஆண்களுடனும்தான் அமர முடியும். இப்படி அவன் வருகையையும் தன் நடத்தையையும்
பகிரங்கப்படுத்துவதன் மூலமாகவே அனைவருக்கும் அவள் தெரிவிப்பது அவள் அம்மாவின்
நடத்தைகளைத் தன்னோடு ஒப்பிட்டுப் பார்க்க வைப்பதும் அனைவரையும் தங்கள் காதலின்
சாட்சியங்களாக ஆக்கிக்கொண்டிருப்பதும்தான்.
வயல்வேலைகளுக்குச் சென்றிருக்கும் அன்னத்திற்குச் சோறு எடுத்துக்கொண்டு
செல்லும் வடக்குவெளிக் காட்டுப்பாதையில் செல்வம் எத்தனையோ முறை மறித்தும்
சிரித்தும் பேசியிருக்கிறான். அவள் அந்நேரத்தில் இப்படி நடந்துகொள்வதற்காக அவனை
வெறுத்துவிடவில்லை. மிகவும் விரும்புகிறாள். தன் உடல் பற்றியும் அழகு பற்றியும்
அப்போதைய பிரக்ஞை அவளுக்குத் திமிறிய சந்தோஷத்தைத் தருகிறது. ஆனாலும்
சிரித்தபடியே மறுத்துக் கடக்கிறாள். பலமுறை திரும்பிப் பார்த்துச் செல்கிறாள்.
அப்போது அவள் விழிகளில் மின்னும் காமம் சொல்லிச் செல்வதெல்லாம் அவள் அவளையே
பொக்கிஷமாக வைத்திருப்பது போலவும் அது அவனுக்காக மட்டுமே என்பது போலவும்தான்
இருக்கிறது.
லலிதாவை அன்னத்தோடு ஒப்பிட்டுப் பார்த்துப் புகந்து கொண்டுதானிருக்கிறார்கள்.
அதே சமயம் அன்னத்தை யாரும் கீழ்த்தரமாக நடத்திவிடவில்லை. ‘ரெண்டாளம் கெட்டவள்’
என்றுதான் வகைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். “அடிச்சிட்டு அள்ளிக் குடுத்தா
வாங்கித் திம்பா” என்கிறாள் பிச்சையம்மாள். அவள் எந்தப் புருஷன்மாரைப்
பற்றியும் எந்தப் பெண்களிடமும் துப்புக் கொடுத்தது கிடையாது என்கிறார்கள்
விவரம் தெரிந்த பெண்கள். அவள் நடத்தைகளை விவரிக்கும் போதே பெண்ணுலகத்தின்
சிரிப்புக் கதைகளின் வகைகளில்தான் அவை வெளிவருகின்றன. ஆனால் அவள் ஆன்களிடம்
பலரது கதைகளைப் புட்டுப் புட்டு வைக்கிறாள். ஆண்கள் சிரித்துக்கொள்கிறார்கள்.
விருதாங்க நல்லூரிலிருந்து செட்டியாரின் வேலைக்காரன் ஒருவன் அவரது நிலத்தைப்
பார்த்துக்கொள்ள வந்துபோய்க்கொண்டிருந்தான். அவன் கொஞ்ச நஞ்சமல்ல நிறையவே கூச்ச
சுபாவியாக இருந்தான். அவளே அவனிடம் சாடைமாடையாகவும் பிறகு நேரிடையாகவும்
பேசியும் அவன் வராது சலித்துத்தான் போனாள். இதோடு தொலையட்டும் என்று அவளும்
அப்படிப் பேசுவதை ஓர் எல்லையோடு நிறுத்திக்கொண்டு பொது உரையாடல்களைத்
தொடங்குவாள். அவன் விடாமல் காமம் சொட்டப் பார்க்கத் தொடங்குவான். அது அவளுக்கு
ஆரம்பத்தில் எரிச்சலாக இருந்தது. ‘இந்த கேஸ் இப்படித்தான்’ என்று ‘சொல்’
கொடுத்துவிட்டுச் சிரிக்கத் தொடங்கிவிட்டாள். காமம் சொட்ட நான்கு பார்வைகள்;
காதலிப்பதுபோல் சில பேச்சும் பார்வைகளும் சில அசட்டுச் சிரிப்புகளும்;
தூரத்தில் மறையும்போது ஒரு சில திரும்பிப் பார்த்தல்கள். அவ்வளவுதான் அவனது
தொடர் நடவடிக்கைகள். இது ஒருவகை என்று அவளும் அவனுக்குத் தோதாகத் திரும்பச்
செய்துகொண்டிருந்தாள்.
ஒருநாள் வயலில் அவள் செட்டியாருக்காகக் காத்துக் கொண்டிருந்தபோது திடுமென
அவள்முன் வந்து நின்றான். அவனைப் பிறகு வரும்படி கூறினால் அதோடு முடிந்தது கதை.
செட்டியார் வருவதற்குள் அவனை அனுப்பிவிட முடியுமென்று அவனுடன் இருக்கத்
தொடங்கினாள். அவன் செய்கைகள் அனைத்தும் குழந்தையின் சேட்டைகள் போலவே இருந்தன.
செட்டியார் குறிப்பிட்ட நேரத்திற்கு முந்தியே வருவார் என்று அவள்
எதிர்பார்த்திருக்கவில்லை. அக்கோலத்தில் அவனைப் பார்த்ததும் அவர் திரும்பி
நடக்க ஆரம்பித்து விட்டார். அவளுக்குச் சிரிப்புதான் வந்தது. அவன் உடைகளைச்
சரிசெய்துகொண்டு பள்ளிக்கூடப் பிள்ளை பிராது கூறி அழுவதுபோல், “இதுக்குதான்
நான் வர்லேன்னது” என்று அழுதான். அவள் வாய்விட்டுச் சிரித்துக்கொண்டிருந்தாள்.
*3*
அன்னம் தன் மகள் உறங்குவதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறாள். லலிதா புரண்டு
படுப்பதும் உறங்காதிருக்கும் அம்மாவைப் புரிந்துகொண்டு உறங்காமலிருக்க
முயற்சிப்பதுமாய் இருக்கிறாள். விளக்குகள் அணைந்து தெருவே தூக்கத்தில் மிதக்கத்
தொடங்கிவிட்டதை அறிந்து அன்னத்தின் மனம் லேசாகப் பதைத்துக்கொண்டிருந்தது.
லலிதாவின் உறக்கம் அல்லது உறங்குவதுபோன்ற ஒரு நடிப்பையாவது
எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள். லலிதா தனது தூக்கமின்மையால் மட்டுமே அம்மாவைப்
பிடித்து நிறுத்த முடியுமென்று நினைத்துப் பிடிவாதமாகத் தூக்கமின்மையை
நாசுக்காகத் தெரிவித்துக்கொண்டிருக்கிறாள். ‘அவர்’ அவளைக் கூப்பிடுவார் என்று
அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. ஊரில் வசதியான குடும்பங்களின் வரிசையில்
முக்கியமான மற்றும் மிக கௌரவமான நடத்தையுள்ள மனிதராக மதிக்கப்படுகிறவர்களில்
அவரும் ஒருவர். மதிய வெயிலில் அன்னம் கடைத் தெருப்பக்கம் போனபோது அவர்
கறிக்கடையில் உட்கார்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தார். “ஒரு விஷயம்
கேட்டுப் போ” என்றுதான் கூப்பிட்டார். சிறிய கடைத்தெரு மதிய வெயில் மயக்கத்தில்
குட்டை நிழல்களுடன் காற்றோடிக் கிடந்தது. வாசல் பக்கம் சென்று பவ்யமாய் ஒதுங்கி
நின்றாள். அவர் உள்ளே கூப்பிட்டார். எதுவோ தன்மீது பஞ்சாயத்து என்றுதான் உடனே
அவள் மனம் கற்பனை செய்தது. எதுவாயிருந்தாலும் அவரிடமே சரி செய்யச் சொல்லிக்
காலில் விழுந்துவிடவும் தயாராக இருந்தது மனம். அவர், கடையில் சரக்கு வாங்கும்
தோரணையில், “விசாலம் ஊருக்குப் போயி ரெண்டு வாரமாவுது. ராத்திரி வூட்டுக்கு
வந்துட்டுப் போ” என்றார். அவளுக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.
அச்சிரிப்புக் கூட உடன் எழுந்த சந்தோஷத்தினால் உண்டானதுதான். இவள் சம்மதமாய்த்
தலையாட்டினாள். கடை உள்ளே சுற்றும் முற்றும் பார்த்தாள். “யாருமில்லை” என்றார்
அவர். சிரித்தபடி திரும்பினாள். “தலை குளிச்சிட்டு வா” என்றார். அவள்
திரும்பிப் பார்த்துச் சிரித்தாள். செட்டியார் கடையில் வேண்டுமட்டும் மளிகைச்
சாமான்கள் வாங்கிக்கொள்ளச் சொன்னார். அவளுக்கு ஒரு பழக்கம் இருந்தது. அவளுடன்
இருப்பதற்கான கூலியாய் எதையும் பெறாமல் நிராகரித்து விடுவது அவர்களின் பகல்
நேரப் பார்வைகளின் முன் தன் நடையைக் கம்பீரமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இதே
உதவியை அவள் கேட்டிருந்தாலோ அவர் வேறு நேரத்தில் கூறியிருந்தாலோ கும்பிடு
போட்டு வாங்கியிருப்பாள். அவள் சிரித்தபடியே சென்றுவிட்டாள்.
நடுநிசிக்குமேல் நாய்க்குரைப்புச் சப்தத்துடனும் முக்காட்டுடனுடம் அவர்
வீட்டுக்குச் சென்றாள். அவர் ஏதோ முதலிரவைக் கொண்டாடுவதுபோல் பழங்களும்
மலர்களும் சூழ ஊதிவத்திப் புகையுடனும் கைப் பனியனுடனும்
உட்கார்ந்திருந்தார்.அந்தத் தோரணை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.
கதவடைக்கப்பட்டவுடன் அவர் கட்டியணைத்தபடி பேசிய வார்த்தைகள் அவள் வாழ்வில்
மறக்க முடியாதவை. ஆசை நாயகிபோல் அவள் அவரிடம் நடந்து கொண்டாள். அது அவள்
பருவத்தையும் பழசையும் மறக்கடித்துக்கொண்டிருந்தது. அவருக்கு அவள் மீதிருந்த
ஏக்கங்களையெல்லாம் கடந்த காலத்திலிருந்து எடுத்துப் பேசிக் கொண்டிருந்தார்.
அவளது மார்புகளைக் காண்பிக்கச் சொன்னார். அவள் மனம் திறந்த புன்னகையுடன்
காண்பித்து அவர் ரசிப்பதை ரசித்தாள். ஆசையுடன் தடவிப் பிடித்தார். அவர்
கடக்கும்போதெல்லாம் அவள் அண்ணாந்து தலை சிலுப்பிக் கேசத்தைக்
கோதிக்கொள்வதுபோலவோ எதன் பொருட்டோ கைகளை எப்படியாவது தலைப்பக்கம் செலுத்தியோ
தனது முலைகளின் நிலைத்தன்மையைக் காட்டிக் கொண்டிருப்பதாக அவர் கூறினார். அவள்
சிரித்தபடி ஆமாம் என்றாள். “எல்லோரும் பார்க்கிறார்கள். நீங்கள் மட்டுமென்ன?”
என்றாள். அவர் வெகு நேரம் சிரித்துக் கொண்டிருந்தார். குறும்பு செய்த
பெண்ணைப்போல் உட்கார்ந்திருந்தாள். அவள் மளிகைச் சாமான்கள் எதையும்
வாங்கிக்கொள்ளவில்லை என்பதை இரண்டு நாள் கழித்துத்தான் தெரிந்துகொண்டார்.
அவளைக் கூப்பிட்டுப் பணம் கொடுத்தார். கைப்பிடியில் நூறு ரூபாய்த் தாள்கள்
சுருட்டிக்கொண்டு நின்றன. அவள் நெல் அரைப்பதற்கு ஐந்து ரூபாய் சில்லறை
கேட்டாள். அவர் வேறு சில்லறை இல்லையென்று நூறு ரூபாயாவது எடுத்துக்கொள்
என்றார். அவள் பிடிவாதமாக நின்று ஐந்து ரூபாய்ச் சில்லறை வாங்கிக்கொண்டு காதல்
பார்வை பார்த்துக்கொண்டு சென்றாள்.
லலிதா அன்னத்திற்குச் சோறு கொடுத்துவிட்டு கனமற்ற வாளியோடு வீடு
திரும்பிக்கொண்டிருக்கும் ஒற்றை நடையைப் பார்த்துக்கொண்டிருக்கிறது காடு.
எப்படியும் தனது பிழைப்பிற்குள் குடும்பத்தைக் கொண்டுவந்துவிட வேண்டுமென்று
துடியாய் நினைத்துக்கொண்டு நடக்கிறாள் லலிதா. காட்டுப்பாதையின் தனிமையும் அவள்
நினைப்பும் அவ்வழிதோறும் ஒன்றுசேர்ந்துகொள்கின்றன. அவள் அப்படியான தனிமையில்
இக்காட்டுப்பாதையில் நடந்து வரும்போதெல்லாம் சட்டென இந்நினைவு
ஆக்ரமித்துக்கொள்வதை இன்று நினைத்துக்கொள்கிறாள். அவள் ஆடைகள் நடை சரசரப்பில்
பேசிக்கொள்வதையும் கொலுசொலி ‘உச்சு’க் கொட்டுவதையும் கேட்டு வருகிறாள். அந்தச்
சூழல் அவளுக்குப் பிடித்திருக்கிறது. பயமும் குறுகுறுப்புமாய். இப்படி இந்தக்
காட்டில் ஒரு குச்சு வீடு கட்டிக்கொண்டால் என்ன என்று நினைக்கிறாள். ஒவ்வொரு
முறையும் அது சந்தோஷத்தைத் தருகிறது. அக்கற்பனையில் அவளுக்குச் சினேகமான
தோழிகளும் திருமணமாகி அக்கம் பக்கத்து வீடுகளில் வசித்தார்கள். முக்கியமாக,
வெள்ளை நிற நாய்க்குட்டி ஒன்று அவளுடன் ஓடிவருகிறது. அதன் உடல் தன்மையும்
மெல்லிய குரைப்பும் இன்பம் தருவதாக இருக்கின்றன. அது அவளிடம் மட்டும் அன்பாக
இருக்கிறது. அதைப் பொருட்படுத்தாது விலகி வீட்டினுள் செல்கிறாள். அது அவளை
முகர்ந்துகொண்டு அவள் செல்லுமிடமெல்லாம் விளையாடிக் கொஞ்சியபடி அவளுடனே
வருகிறது. அந் நாய்க்குட்டி தொடர்ந்து வருவதிலும், தான் அதன் அன்பை பெயருக்குப்
புறக்கணித்தபடியே விரும்பி வருவதிலும்தான் அவளது ஆனந்தம் ஒளிந்து கிடக்கிறது.
பல சமயங்களில் அதைத் தன்னுடனேயே கட்டிக்கொண்டு உறங்கியும் போய்விடுகிறாள்.
அப்போது அந் நாய்க்குட்டியும் அவளுக்கு இணையான உறக்கத்தைக்கொண்டிருக்கிறது.
ஒற்றைப் பனைமர வளைவிலிருந்து தூரத்தில் தெரியும் வீடுகளின் கூட்டம் அவளது
வீட்டை அவளுக்கு ஞாபகப்படுத்துகிறது. வீட்டை மெழுக வேண்டும். அழுக்குத் துணிகள்
சேர்ந்துவிட்டன. இன்று எல்லாவற்றையும் துவைத்துப்போட்டு விட வேண்டும்.
வெண்ணிறத்தில் சாம்பல் புள்ளிகளும் கறுப்பு பார்டருமான சேலையை மட்டும் இஸ்திரி
செய்து வைத்துக்கொள்ள வேண்டும். விசேஷ ஆடை அது மட்டும்தான். செல்வம் வாங்கிக்
கொடுத்தது. அவ்வாடை வாங்கியளித்த தினமும் செல்வத்தின் சிரிப்பும் அவளுக்குச்
சந்தோஷத்தைத் தருகின்றன. எப்போதும் அந்நினைவு அவளது திருமணத்தில் சென்று மோதி
நிற்கிறது. அவன் அந்த வெண்ணிற நாய்க்குட்டி போலவே அவளைப் பின்பற்றிக் கொஞ்சி
விளையாடியபடி வந்துகொண்டிருக்கிறான். பழைய தையல் மிஷின் ஒன்று விலைக்கு வருவதை
இன்றாவது செல்வத்திடம் சொல்லிவிட வேண்டும். அது மட்டும் அவன் வாங்கிக்
கொடுத்தால் போதும். ‘ஓவர்லாக்’ மிஷினைத் தானே சம்பாதித்து வாங்கிக் கொள்ள
முடியுமென்று நினைக்கிறாள். அம்மா எதுவும் பேசாது வீட்டுவேலை பார்த்துக்கொண்டு
தனக்கு உதவியாய் இருந்தால் போதும்.
அவள் நினைத்ததுபோலும் எதிர்பார்க்காததுபோலும் செல்வம் எதிரில்
வந்துகொண்டிருக்கிறான். அவள் நின்றுவிட்டாள். அவன் சிரித்தபடி
வந்துகொண்டிருக்கிறான். அவள் முன்னும் பின்னுமாய் மனித அரவம் தென்படுகிறதாவெனக்
கவனித்துக்கொண்டு சிரிக்கிறாள். அவன் அருகிலுள்ள சிறு பாதையில் உள்ளே
நுழைந்தபடி உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டுமென்று கூறுகிறான்.
அவளும் என்றும் போலில்லாது எதுவும் பேசாது உள்ளே நுழைகிறாள். அவன் அவள் அண்மையை
ரசித்துச் சிரிக்கிறான். அவள் காரணம் கேட்டாள். அவன் அவளது வனப்பில் திணறும்
சுவாசத்துடன் அவளைக் கட்டிக்கொண்டான். அவள் பெயருக்குத் திமிறுகிறாள். அவன்
குழந்தையைக் கொஞ்சுவதுபோல் முகத்தை வைத்துக்கொண்டு சிணுங்குகிறான். அவளுக்கு
ஆசையாகவும் பயமாகவும் இருக்கிறது. அவள் மௌனமாயிருக்க, உடல் சேர்த்துத்
தழுவுகிறான். அவளது மென்மையும் சரும மணமும் அவனைக் கிளர்த்துகின்றன. எப்படிச்
சட்டென ஒத்துக் கொண்டாள் என்று நினைத்தபடியே அடுத்த நகர்வுக்குச் சென்றபோதுதான்
வெறுமனே கட்டித் தழுவ மட்டுமே முடியும் என்ற முடிவுக்கு வந்தான். அவன்
அசைவுகளைக் கரம் பிடித்து நிறுத்தினாள். சில வினாடிகள் கம்மென்றிருந்தாள்.
எல்லாமும் நின்று செயல்கள் துடிக்கும் மௌனம் கரைகிறது அவ்விடத்தில். அவன்
கரத்தைத் தன் மார்பிலிருந்து விலக்கிப் பின்னால் தள்ளுகிறாள். அவன் முரண்டு
பிடித்தான். என் மீது நம்பிக்கை இல்லையா என்றான். “எல்லாம்
கல்யாணத்துக்கப்புறம்தான்” என்றாள். “அப்போன்னா எம்மேல நம்பிக்கையில்ல”
என்றான். “யாருக்கும் தெரிலன்னாலும் பரவால்ல. ஒரு மஞ்சக் கயித்தக் கட்டிட்டு நீ
என்ன வேணா செஞ்சிக்க.” அழும் குரலில் உடைந்தாள். அவள் விசும்பலில் அவன்
செய்கைகள் நின்று போயின.  “எப்போ என்னைக் கல்யாணம் பண்ணிப்ப” என்றாள். அவன்
அவள் முகத்தைப் பார்க்கத் திராணியற்று அவளைக் கட்டியணைக்கிறான். கரம் பிடித்து
இழுக்கிறான். அவள் சிம்பித் தள்ளிவிட்டுப் புறமுதுகு காட்டி நிற்கிறாள்.
கழுத்தை முத்தி மார்பைப் பற்றுகிறான். அவள் கரங்களை விலக்கிப் பின்னே
தள்ளுகிறாள். தையல் மிஷின் விலைக்கு வருவதைச் சொல்லலாமா வேண்டாமா என்ற குழப்பம்
வருகிறது. வேறு நேரத்தில்தான் சொல்ல வேண்டுமென்று நினைத்துக்கொண்டாள். அவளைப்
பின்புறமாகச் சேர்த்து அணைத்து, “இந்த மாசத்தில எங்க வீட்ல சொல்லி ஏற்பாடு
பண்றேன்” என்கிறான். அவள் திரும்பி அவ்ன் கண்களைத் தேடிப் பார்க்கிறாள். அவன்
சிரிக்கிறான். அவனைக் கட்டிக் கொள்கிறாள். அவளைத் தீண்டியபடி அவன் உடல்
உறுப்புகள் உயிர் முளைத்து அலைந்தபடி பரபரக்கின்றன. அவளுக்கு அதன் தீவிரம்
தெரிகிறது. அவள் உடல் பதறுவதை அறிகிறாள். ஆண் பிடி. துவள்கிறது உடல்.
விட்டுவிடுவானென உடல் குறுக்கிக்கொள்கிறான். மிருகம் விழித்தது போல் அவன்
செயலில் மீண்டும் மூர்க்கம் கூடுகிறது. சதையைப் பற்றிப் பிசையும் அழுத்தத்தில்
வலி ஏறுகிறது. அவள் கண்களாலும் கரங்களாலும் தடுத்துக் கெஞ்சுகிறாள். அவன்
எதையும் பொருட்படுத்தாது திறக்க முடியாமல் மூடியிருக்கும் பண்டத்தைப்
பிரித்துத் தின்னும் மூர்க்கத்தில் அவளைப் புரட்டுகிறான். காட்டுச் செடிகளும்
தனிமையும் அவர்கள் போராட்டத்தைப் பார்த்துக்கொண்டிருக்கின்றன. அவள் திமிறி
வெளியேற நினைக்கிறாள். ஆண் பலம். வெளியேற முடியாத வளையத்துக்குள்
நுழைந்துவிட்டதுபோல அவள் உடல் திமிறுகிறது மீண்டும் மீண்டும். சட்டென முளைத்த
தீவிரம் அவளை அவனிடமிருந்து பிரித்துவிடுகிறது. உதறித் தள்ளி விலகிப் பாதையில்
ஓடி நின்றுகொள்கிறாள், உடைகளைச் சரி செய்தபடி. அவன் அவளைக் காட்டினுள்
அழைக்கிறான். அவள் உருண்டு கிடக்கும் சோற்று வாளியைக் கேட்கிறாள். அவன் எடுத்து
வைத்துக்கொண்டு அவளைக் கெஞ்சுகிறான். அவள் பாதையை முன்னும் பின்னும் பார்த்து
மனித அரவத்திற்கு அஞ்சிக் கேட்கிறாள். அவன் பிடிவாதமாகக் காட்டினுள்
அழைத்தபடியே இருக்க அவள் அலுத்து நடக்கத் தொடங்கினாள். அவன் வாளியைக்
கொடுப்பதாக மீண்டும் மீண்டும் கூப்பிடுகிறான். திரும்பிப் பார்த்தால் ஒரே
ஒருமுறையெனக் கெஞ்சுகிறான்.
அவள் தீர்மானமாக வீட்டை நோக்கி நடையைக் கட்டும்போது அவள் முதுகுப் பக்கம் அவளது
தூக்குப் பாத்திரம் விழுந்து உருளும் ஓசையில் திரும்பிப் பார்த்தாள். திறந்து
கொண்ட வாளி சப்தமெழுப்பி உடலை உருட்டிக் கொண்டு காட்டுப் பாதையில் கிடக்க,
எதிர்ப்பக்கம்  சென்று கொண்டிருந்தான் அவன். அழுகை எழும்பி வர அடக்கிக்கொண்டபடி
வாளியைச் சேர்த்துக்கொண்டு அவன் திரும்பிப் பார்ப்பானென அப்பாதை முடியும்வரை
திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு நடந்துவந்தாள்.
சாயங்காலம் மௌனமாய் ஊருக்கு மேல் எட்டிப் பார்கிறது. லலிதா வாசற்படியில்
நிலைக்கல்போல் யோசனையில் உட்கார்ந்திருக்கிறாள். ஏதேதோ நினைவுகள் முளைத்து
வளர்ந்து சோற்று வாளி பாதையில் பிளந்து கிடந்ததில் வந்து
முடிந்துகொண்டிருந்தது. தன்னை எப்படியாவது தேற்றிக்கொள்ள வேண்டுமென்றும் தனக்கு
இன்னும் மனத் தைரியம் வேண்டுமென்றும் நினைத்துக்கொண்டாள். பயம்
வந்துகொண்டிருந்தது. எதை நினைத்து என்றறியாதபடி ஆழத்தில்
சிக்கிக்கொண்டிருந்தது. பிடிமானம் நழுவியது போலும் பற்றுக்கோல்கள் அற்றபடியும்
தத்தளிப்பாக இருக்கிறது மனம்.
அன்னம் செல்வத்தோடு பேசியபடி வீடு வருவதைப் பார்க்கிறாள் லலிதா. அவன்
சிரிப்பான் என்று எதிர்பார்த்தாள். காதலோடும் குறும்போடும் அவனைப் பார்த்தாள்.
அவன் அவள் அங்கு இருப்பதாகவே கண்டுகொள்ளாமல் நின்றுகொண்டிருந்தான். அன்னம் அவனை
வீட்டுக்குள் அழைத்தாள். லலிதா எழுந்து வழிவிட, செல்வம் உள்ளே சென்று ஸ்டூலில்
உட்கார்ந்துகொண்டான். லலிதாவுக்குத் தன் கோபத்தைக் காட்ட வேண்டும் போலிருந்தது.
உள்ளே சென்று துணிகளை வாரிக்கொண்டு படித்துறைக்கு வந்து விட்டாள்.
துணிகளை நனைத்து வாரிப் போட்டுக்கொண்டு துவைக்கத் தொடங்கினாள். நினைவு
தறிகெட்டு ஓடிக்கொண்டிருந்தது. அவனது கோபம் அவளுக்குப் பிடித்திருந்தது. அவளைப்
பார்த்து முறைத்திருந்தால் அவள் ஏதாவது பழிப்புக்காட்டியிருப்பாள். துண்டடியான
அக்கோபத்தை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கிழவனின் இருமல் சப்தம்
கேட்டது.  ஆடை சரியாக இருக்கிறதாவென ஒரு தரம் பார்த்துக்கொண்டு அவன் இருக்கும்
திசையைப் பார்த்தாள். கொட்டகையில் இருட்டில் எதுவும் தெரியவில்லை.
சிறிது நேரத்திற்குப்பின் அவளுக்குச் சட்டெனக் குறுகுறுப்பாக இருக்க, துவைப்பதை
நிறுத்தி நீரள்ளித் துணிகளின் மேல் தெளித்தபடி யோசனையை நீட்டித்தாள். சட்டென
வேகம் வந்தவளாய் மெதுவாக எழுந்து வீட்டினுள் சென்றாள். அவள் அம்மா மருகிப்
பின்னுக்கு விலகவும் அவன் நெருங்கிப் பிடித்துச் சேர்த்து அணைக்கவும்
இருந்ததைப் பார்க்க முடிந்தது. அவள் ஏதோ ஒருவகையில் எதிர்பார்த்ததுதான். இந்த
அம்மாவுக்கும் ஆண்களுக்கும் விவஸ்தையே இல்லை. அவனை வெளியே துரத்த வேண்டும்
போலிருந்தது. இனி உனக்கும் எனக்கும் எந்த உறவும் கிடையாது; என்னைத்
தேடிக்கொண்டு இங்கே வரவே கூடாது என்று சொல்லிவிட வேண்டும் என்று நினைத்தாள்.
வெளியே வரட்டும். அவன் உடனே வந்துவிடுவான் என்றுதான் நினைத்தாள். அவன்
எல்லாவற்றையும் திட்டமிட்டுத்தான் செய்வதாக எண்ணினாள். சக்தியற்றவள்போல்
துணிகளை வாரிப் போட்டுக் கும்மத் தொடங்கினாள். அழுகை புரட்டிக்கொண்டு எழுகிறது.
வடியும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவன் மூஞ்சும் முகரக் கட்டையும்.
இவள் ஒரு விவஸ்தை கெட்டவள். இவளெல்லாம் ஏன் உயிரோடிருக்க வேண்டும். பஸ்ஸிலோ
லாரியிலோ யார் யாரோ அடிபட்டுச் சாகிறார்கள் என்ற நினைப்பு அன்னத்தை நேருக்கு
நேராய்த் திட்டும் ஆசுவாசத்தைத் தந்துகொண்டிருந்தது. அவன் வெளியே வந்து நின்று
வேறு பக்கம் பார்த்தபடி நிதானமாக மரப்பாலத்தைக் கடந்து போகிறான். அவள் அவனைக்
கவனியாது கவனிக்கிறாள். அவன் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.
அன்னம் படித்துறைக்கு இறங்கி வருகிறாள். எந்த முகபாவத்தையும் காட்டிவிடக் கூடாத
பரபரப்பு லலிதாவுக்குத் தொற்றிக்கொள்கிறது. அன்னம் நீரில் இறங்கி முகம் கைகால்
அலம்பியபடி, “இந்த மாசக் கடேசில அவுங்க வூட்ல சொல்லிப் பேசறேன்னு சொல்லிருக்கு”
என்றாள் அன்னம். தன் மீதான அவனது தொடுகையில் மகளின் திருமண ஒப்பந்தமும்
ஒப்பேற்றப்பட்டிருக்கிறது என்பது மகளிடம் கூறிவிட முடியாத தடையாக
நின்றுகொண்டிருந்தது. இவள் எதுவும் பேசாது துணி அலசிக்கொண்டிருந்தாள். அவள்
படிக்கட்டு ஏறி வீட்டுக்குள் சென்றுவிட்டாள்.
துணிகளை உதறிக் காயவைக்கும்போது அன்னம் விளக்கைப் போட்டுவிட்டுக் கடைத்தெருப்
பக்கம் சென்றுவருவதாகக் கூறிச் சென்றாள். இருள் கூடிக்கொண்டு வந்தது. பெயர்ந்து
கிடக்கும் மண்தரை. எரிச்சலாக வருகிறது லலிதாவுக்கு. நாளை மெழுகிக்கொள்ளலாம்
என்ற எண்ணம் தரும் சமாதானம் போதுமானதாக இல்லை. வாசற்படியிலேயே அமர்ந்திருக்கும்
அவளது நிழல் படித்துறைக் கற்களில் நீண்டு துண்டு துண்டாய் மடிந்து இறங்கி
மறைகிறது.
எல்லோரும் விளக்கு வைத்து வீட்டுக்குள் சென்று கதவடைத்துக் கொண்டதுபோல் மூடிக்
கிடந்தது தெரு. யாரிடமாவது சொல்ல வேண்டும் போலிருந்தது அவளுக்கு. ஆத்திரத்துடன்
ஆனால் நிதானமான நடத்தைபோல் கதவடைத்து வெறும் தரையில் சுருண்டுகொண்டாள்.
எல்லாவற்றையும் அழுது தீர்த்துவிடுபவள்போல் துடைக்காமல் கொள்ளாமல்
அழுதுகொண்டிருந்தாள். நெருக்கமான தோழிகள் முகம் நினைவுக்கு வரக் கிளம்பிச்
சென்று தங்கிவிட வேண்டுமென்று நினைத்துச் சிறிது யோசித்தாள். அவளுக்குள் கலைந்த
அடுக்குகளில் நினைவுகள் குழறி ஓடின. கிழவனும் அம்மாவும் செல்வமும்
அருகிலுள்ளவர்களும். யார் யாரோ தடுக்கிப் பேசிச் சென்றார்கள். கவிழ்ந்து
படுத்துக்கொண்டாள். செல்வம் நடந்துகொண்டது நினைவுக்கு வந்து அழுத்தம் தந்தது.
படித்துறையில் யாரோ துணி தப்பும் ஓசையும் காறிச் சளி துப்பும் ஓசையும் மாறி
மாறிக் கேட்கின்றன. நீரில் குதித்தெழும்பும் நீரடிப்புச் சத்தம் வீட்டை
நிரப்புவதுபோல் வந்துகொண்டிருந்தது. மெல்ல எழுந்து படித்துறைச் சத்தங்களுக்கு
நடுவே அம்மாவின் பழஞ்சேலை ஒன்றை எடுத்து ஸ்டூல் மேல் ஏறி கழியில்
சுருக்கிட்டாள். ஆண் துணையற்ற அவ்வீட்டின் தனிமையை உடைப்பதாகவோ
மறந்துவிடுவதாகவோ தன்னை ஏதோ ஒரு புள்ளியில் அலட்சியமாக சமன்செய்துகொண்டாள்.
அவ்வூர் ஏதோ ஓர் ஓரவஞ்சனை நீதியைப் புகட்டுவதான எண்ணம் அவள் செயலைத்
தீவிரப்படுத்தியது. கழுத்தைச் சுருக்கில் நுழைத்து உடல் எடையைச் சேலை
முடிப்புக்குள் மெல்லத் தக்கவைத்துத் தொங்கிப் பார்த்தாள். சில வினாடிகள்
ஸ்டூலில் ஆதரவாகக் கண் மூடி நின்றுகொண்டிருந்தாள். கடந்துகொண்டிருந்த
வினாடிகளில் ஒன்றில் சட்டென ஸ்டூலைக் கால்களால் தள்ளிவிட்டாள். சாவின் கணத்தை
உணர்ந்தவளாய் அவள் கைகள் மேலே செல்லப் பரபரத்தன. அவள் கழுத்து இறுகுமுன் யாரோ
கதவு திறந்து கத்திக் கூப்பாடு போடுவதுபோலும் அவள் கால்கள் பிடித்து
உயர்த்தப்பட்டுக் காப்பாற்றப்பட்டு விடுவது போலும் தாமதமான எண்ணங்கள்
வந்துபோயின. இன்னும் சில வினாடிகளில் கதவு தட்டப்படப்போகிறது என்று தீர்மானமாக
நம்பிக்கொண்டு சமனமில்லாமல் தொங்கிச் சுழன்றுகொண்டிருந்தாள். கண்கள் மிரள் நீர்
கோர்த்துக்கொண்டது. வாழ்நாளில் அனுபவித்திராத இருமல் எழும்பித் தொண்டையை
அடைத்தது. தனக்குள் எழும் குறட்டைச் சத்தம்போல் தெரியும் குரல் குழறியது. அவளது
மங்கலான கற்பனையில் எல்லோரும் அவளுக்காக அழுது கொண்டிருந்தார்கள். அன்னத்தைக்
கரித்துக்கொட்டினார்கள். செல்வம் மூலையில் நின்று அழுதுகொண்டிருந்தான்.
கறுப்பேறிய கூரை அவள் விழிகளையும் துருத்தி வெளிவரும் நாவையும் பார்த்துக்
கொண்டிருந்தது. கடைசியாக கூரையிலிருந்து கீழே விழுந்து கிடக்கும் ஸ்டூலைப்
பார்க்க முயற்சித்தாள். மீண்டும் கைகளை மேலுயர்த்திப் பிடி தளர்த்திக் கொண்டுவர
எண்ணியபோது ஏதோ ஓர் அடையாளமற்ற கௌரவம் அவளைத் தடுத்துக்கொண்டிருந்தது.
யாருமற்ற அவள் வீட்டு வாசலில் சாவைப் பற்றி நினைத்திராத சமயத்தில் துவைத்துக்
காயவைத்த ஆடைகள் ஈரத்துடன் காற்றில் படபடத்துக்கொண்டிருந்தன.
எப்படியும் இந்த மாதக் கடைசியில் செல்வம் லலிதாவைப் பெண்கேட்டு வரப்போகும்
செய்தியைத் தெரு முழுக்கப் பரவவிட்டுத்தான் அன்னம் வீட்டுக்கு வருவாள்.
அவளுக்கு இதைவிடப் பெரிதான் சந்தோஷம் வேறு என்ன இருக்க முடியும்?
________________
*
(1) ஒரு போகம் முடிந்த கரும்பு வயல்கள் அடுத்த முறை தாமாகவே முளைப்பது.*
===========
*காலச்சுவடு 51,  ஜன – பிப் 2004*

நன்றி - காலச்சுவடு, தமிழ்தொகுப்புகள். எஸ் ரா 


http://3.bp.blogspot.com/_jytHinqCpAE/S6IVzI3BB1I/AAAAAAAAAZA/cLevBgzlHAQ/s1600/W_Chanakkiya.jpg

0 comments: