Friday, October 26, 2012

சாருநிவேதிதா சின்மயி புகார் பற்றி சொன்ன கருத்து


கருத்துச் சுதந்திரத்தை மிகப் பெரிதும் மதிப்பவன் நான்.  ஆனால் நம்முடைய சுதந்திரம் என்பது மற்றவர்களின் மூக்கை உடைப்பதாக இருக்கக் கூடாது.  நீங்கள் புகை பிடிப்பவராக இருக்கலாம்.  ஆனால் மற்றவரின் முன்னே புகை பிடிப்பது அவரைத் துன்புறுத்தும் செயல் அல்லவா?  இவ்வளவு சின்ன விஷயத்துக்குக் கூட இத்தனை யோசிக்கும் நாம் கருத்துத் தளத்தில் எப்படி இருக்கிறோம்?  ஒருவர் ஒரு கருத்தைச் சொன்னால் அதற்காக அவரை வாயில் வந்தபடியெல்லாம் ஏசுகிறார்கள். அதுவும் அவர் ஒரு பெண்ணாக இருந்தால் கதை கந்தல். மீனா கந்தசாமி விவகாரத்தில் நடந்தது நம் அனைவருக்கும் தெரியும்.  ”நடுத்தெருவில் வைத்து உன்னை ரேப் பண்ண வேண்டும்” என்றெல்லாம் சில பொறுக்கிகள் எழுதினார்கள்.   அவர்கள் கைது செய்யப்பட்டார்களா என்று எனக்குத் தெரியவில்லை.என் மீது பகைமை கொண்டவர்கள் அதிகம் என்பதால் அதிக அளவில் பாதிக்கப்பட்டவன் நான்.  எனக்கு வரும் வசைக் கடிதங்களைப் படிப்பதிலிருந்துதான் என் நாளே துவங்குகிறது.  முதல் வார்த்தையைப் படித்ததுமே delete செய்து விடுவேன் என்றாலும் இவ்வளவு நீளமான கடிதத்தை கஷ்டப்பட்டு டைப் செய்திருக்கிறார்களே என்ற ஆச்சரியம் மட்டுமே எஞ்சும் எனக்கு.  இவர்கள் என் மீது ஏன் இத்தனை கோபம் கொண்டு அசிங்கமாகத் திட்டுகிறார்கள் என்றும் புரியாது.  என் அம்மாவிலிருந்து ஆரம்பித்து என் மனைவி, என் பிறப்புறுப்பு வரை திட்டுவார்கள்.  பரிதாப உணர்ச்சியே மிகும்.ஆனால் ஒரு கட்டத்தில் இது வசைக் கடிதங்கள் என்பதிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்து வேறொரு கிரிமினல் தன்மையை அடைந்தது.  எனது நண்பர்களின் அலுவலகங்களுக்குக் கடிதம் எழுதி அவர்களைப் போட்டுக் கொடுக்க ஆரம்பித்தார்கள்.  அவர்களுக்கு வேலை போய் நடுத்தெருவில் நிற்க வேண்டும் என்பது அந்த நலம் விரும்பிகளின் விருப்பம்.  எனது வாசகர் வட்டத்தைச் சேர்ந்த சில பெண்களின் கணவர்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.  (உங்கள் மனைவியை இந்த வாசகர் வட்டத்திலிருந்து விலகச் சொல்லுங்கள், அவர்களெல்லாம் கெட்டப் பசங்கள்… இன்னும் நீங்கள் யாரும் கற்பனையே செய்ய முடியாத பயங்கரங்களையெல்லாம் எழுதியிருக்கிறார்கள்).  இது எத்தனை பெரிய அயோக்கியத்தனம்? அந்தப் பெண்களின் குடும்ப வாழ்க்கை இதனால் பாதிக்கப்பட்டால் அதற்கு யார் காரணம்?  இதற்கெல்லாம் நான் சும்மாவே இருந்தேன்.  ஏனென்றால், என்னுடைய புகார்ப் பெட்டி, கடவுள் மட்டுமே.


சுமார் ஒரு பத்து ப்ளாகர்கள் இருப்பார்கள்.  நான் என்ன எழுதினாலும் அதை அப்படியே நகல் எடுத்து வரிக்கு வரி என்னைத் திட்டி, அவமானப்படுத்தி, கொச்சைப்படுத்தி தன் ப்ளாகில் எழுதி விடுவார்கள்.  இதற்காக அவர்கள் மணிக் கணக்கில் செலவிட்டதுதான் எனக்குப் பெரும் ஆச்சரியம்.  இப்படித் தனக்குப் பிடிக்கவே பிடிக்காத ஒரு எழுத்தாளனைப் படித்து, அவனைத் திட்டி பக்கம் பக்கமாக தன் ப்ளாகில் எழுதுவதற்கு எடுத்துக் கொண்ட நேரத்தை அவர்கள் தங்கள் குழந்தையையோ மனைவியையோ கொஞ்சுவதற்கு எடுத்துக் கொண்டிருந்தால் இப்படி ஸைக்கோவாக மாறி இருக்க மாட்டார்கள்.  இவர்களின் எழுத்தைப் படித்தால் இவர்கள் கிரிமினல்கள் மட்டும் அல்ல, ஸைக்கோக்கள் என்றே முடிவுக்கு வர வேண்டியுள்ளது.


நேர் வாழ்க்கையிலோ அல்லது அச்சு ஊடகத்திலோ இவர்கள் இப்படி ஸைக்கோ வேலைகள் செய்ய முடியாது.  உடனடியாகத் தூக்கி உள்ளே தள்ளி விடுவார்கள்.  இணைய வெளி கொடுக்கும் எல்லையில்லாத சுதந்திரமே இவர்களை இப்படி ஸைக்கோக்களாக்கி விடுகிறது.  தகுதியில்லாதவர்களிடம் சுதந்திரம் கிடைத்தால் இப்படித்தான் ஆகும்.  அதனால்தான் நான் எப்போதும் சுதந்திரம் பற்றிப் பேசும்போதெல்லாம் பொறுப்பு (responsibility) பற்றியும் பேசி வருகிறேன்.  பொறுப்பற்ற சுதந்திரம் இப்படித்தான் பொறுக்கித்தனமாக வெளிப்படும்.ஊடக வெளி தரும் எல்லையற்ற சுதந்திரத்தினால் ஒரு அரசு அலுவலகத்தில் குமாஸ்தாவாக இருப்பவன் கூடத் தன்னை சே குவேராக நினைத்துக் கொள்ள ஆரம்பித்து விடுகிறான்.  இலங்கைத் தமிழர் ஆதரவு, கருணாநிதி-ஜெயலலிதா எதிர்ப்பு, தலித் ஆதரவு, பிராமண எதிர்ப்பு (பிராமண என்று எழுதக் கூடாது; பார்ப்பன என்று எழுத வேண்டும்), தமிழ்ப் பாசம் போன்ற templates-ஐ நெற்றியில் ஒட்டிக் கொண்டால் முடிந்தது கதை – நீங்கள் ஒரு சே குவேரா.  எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம்; யாரையும் திட்டலாம்; என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.  கேட்க நாதி இல்லை.  இல்லாவிட்டால் ஒரு பெண்ணைப் பார்த்து ஒருவன் “உன்னை நடுத்தெருவில் வைத்து ரேப் பண்ண வேண்டும்” என்று சொல்லத் துணிவானா?இந்தப் பொறுக்கித்தனத்துக்கு எப்போது தீர்வு வரும் என்று காத்துக் கொண்டே இருந்தேன்.  இன்று சின்மயி அதை ஆரம்பித்து வைத்திருக்கிறார்.  நான் சின்மயி ஆதரவாளன் அல்ல.  நேற்று வரை அவர் பெயர் கூட எனக்குத் தெரியாது.  நான் தமிழ் சினிமாப் பாடல் கேட்பவன் அல்ல.  ஆனால் அவருடைய கருத்துக்களுக்காக அவரை உளவியல் சித்ரவதை செய்த பொறுக்கிகள் தண்டிக்கப் பட வேண்டும்.  சின்மயி சொன்னது என்ன?  சின்மயி என்ன அருந்ததி ராயா?  அருந்ததி ராயைப் போலவே எல்லாப் பெண்களும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் அப்படி இல்லாவிட்டால் பொறுக்கித்தனம் செய்வதும் ஃபாஸிஸம் அல்லவா?மேலும், இப்படி இணையத்தில் சே குவேரா வேஷம் போடுபவர்கள் நிஜ வாழ்க்கையில் ஏன் எலிக்குஞ்சாக இருக்கிறார்கள்?  போலீஸ் என்றதுமே தன் ஒரு வயதுக் குழந்தையைக் காட்டி, “என் குழந்தைக்காக என்னை மன்னித்து விடுங்கள்” என்று காலில் விழுகிறார்களே, இவர்களெல்லாம் எங்கிருந்து வருகிறார்கள்?


என்னை இந்தப் பொறுக்கிகள் எப்படியெல்லாம் டார்ச்சர் செய்கிறார்கள் தெரியுமா? நான் ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு எழுதினால் அந்தப் பத்திரிகைக்கு நூறு பெயர்களில் என்னைப் பற்றி அவதூறாகக் கடிதம் எழுதுகிறார்கள்.  என் மொழிபெயர்ப்பாளர்களை அச்சுறுத்துகிறார்கள்.  என்னுடைய மொழிபெயர்ப்பாளர் ஒருவருக்கு ஒரு வாரம் முன்னால் குழந்தை பிறந்திருக்கிறது.  அந்தக் குழந்தையைத் திட்டி ட்வீட் போட்டிருக்கிறான் ஒரு பொறுக்கி.  அவனும் ஃபேஸ்புக்கில் ஒரு ஹீரோ தான்.  அவனையும் 5000 பேர் ஃபாலோ செய்கிறார்கள்.  என்னை இவர்கள் செய்யும் டார்ச்சருக்கு வேறு வேறு ஆளாக இருந்தால் தற்கொலைதான் செய்து கொள்வான். அல்லது, பைத்தியம் பிடித்திருக்கும்.   நானோ வெளியில் கூட சொல்லிக் கொள்வதில்லை.  ஏனென்றால், இவர்களின் செயல்களை நான் பொருட்படுத்துவதே இல்லை. கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற ஒரே நம்பிக்கைதான் காரணம்.இன்னொரு பெரிய வேடிக்கை என்னவென்றால், என் மீது பொறுக்கித்தனமான அவதூறுகளை எழுதிய ஒரு இணைய ”சே குவேரா”  இன்று போலீஸிடம் மாட்டிக் கொண்டவர்களை பொறுக்கிகள் என்று எழுதியிருக்கிறார்.  சக பதிவரை ஒருமுறை கொலை செய்ய முயன்றவர் இவர்.  இவர் போலீஸிடம் மாட்டவில்லை.  அதனால் இவர் சே குவேரா.  மாட்டிக் கொண்டவர்கள் மாட்டிக் கொண்டு விட்டதால் பொறுக்கிகள்.  இல்லை?


சமூகப் பொதுவெளியில் நாம் நாகரீகம் தவறினால் அடுத்த கணமே பொளேர் பொளேர் என்று தர்ம அடி கிடைக்கும்.  போலீஸ் வரும் வரையெல்லாம் பொதுமக்கள் காத்திருக்க மாட்டார்கள்.  இணைய வெளியில் போலீஸ் வரும் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது.


பொதுவாக, இந்தியா பெண்கள் பாதுகாப்பாக வாழக் கூடிய தேசம் அல்ல.  தினந்தோறும் வரும் கற்பழிப்புச் சம்பவங்களைப் பார்த்தாலே அது தெரியும்.  நம் தமிழ் சினிமாவும் ஆண் வர்க்கப் பொறுக்கித்தனத்தையே பிரதானப் படுத்தி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறது.  இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஒன்றிரண்டு பேர் தான் பங்கேற்க முன்வருகிறார்கள்.  அவர்களுக்கும் இந்த நிலைதான் என்றால் இந்தச் சமூகத்தில் ஆணாதிக்கம் என்பது எவ்வளவு கொடூரமாக செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இதையும் மீறி இத்தளங்களில் செயல்படும் ஒருசில பெண்கள் இந்த இணைய தாதாக்களிடம் சமரசம் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.  தாதாக்களுக்கு மாமூல் கொடுப்போம் இல்லையா, அது போல இந்த இணைய தாதாக்களுக்கு லைக் போடுவது, retweet போடுவது, follow செய்வது இதெல்லாம்தான் மாமூல்.  இந்த மாமூலைக் கொடுத்தால்தான் அந்தப் பெண்களைப் பற்றி இணைய தாதாக்கள் அசிங்கமாக எழுத மாட்டார்கள்.  இந்த மாமூலை சின்மயி கொடுக்கத் தவறி விட்டார்.  அதனால்தான் அவர் இரண்டு ஆண்டுகளாக அனுபவித்த சித்ரவதை.சுதந்திரம் என்பது பொறுக்கித்தனம் இல்லை;  பொறுப்புணர்வு என்பதை இணைய தாதாக்கள் இனிமேலாவது புரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வெறும் தமிழ் சினிமா பார்த்து விட்டு ப்ளாகில் எழுதி, எழுத்தாளன் என்று பேர் சூட்டிக் கொள்ளும் இந்த தாதாக்கள் இப்படித்தான் சீரழிய வேண்டியிருக்கும்.  தன் குழந்தையைக் காட்டி மன்னிப்புக் கேட்டால், இந்தியாவில் இருக்கும் அத்தனை சிறைக் கைதிகளுக்கும் கூட மன்னிப்பு வழங்கி விடலாம்.  ஏனென்றால், அவர்கள் எல்லோருக்குமே குழந்தைகள் இருப்பார்கள்.  இந்தியாவில் மிகச் சுலபமாக உற்பத்தியாவது குழந்தைகள்தானே?

நன்றி - சாரு ஆன் லைன்டிஸ்கி - 1 - சின்மயி போலீசில் புகார் - http://www.adrasaka.com/2012/10/blog-post_3736.htmlடிஸ்கி 2 - சமாதான முயற்சிகள் , சின்மயி தரப்பு விளக்கங்கள் | அட்ரா சக்க


http://www.adrasaka.com/2012/10/blog-post_24.html

டிஸ்கி 3 -  ஆனந்த விகடனில் சின்மயி சர்ச்சை | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_25.html


டிஸ்கி 4  -சின்மயி - புதிய தலைமுறை - நேர்படப்பேசு - விவாதங்கள் | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_7117.html

டிஸ்கி 6. - ஜெயமோகன் கருத்து - சின்மயி புகார் பற்றி | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_27.html

டிஸ்கி 7. -லீனா மணிமேகலையின் ஃபேஸ்புக்கில் நிகழ்ந்த சின்மயி சர்ச்சை விவாதங்கள்

http://www.adrasaka.com/2012/10/blog-post_4186.html


4 comments:

நம்பள்கி said...

இது ஆருன கஞ்சி!

mpmani said...

வசதியா நீங்க பண்ண பொருக்கி தனத்த உட்டுடிங்கள ?. "உன் யோன்னி பருப்பை நாவால் வருடி " எங்கயோ பார்த்த மாதுரி இருக்க .எல்லாம் உங்க சாத்தான் mr சாரு.

Vadakkupatti Raamsami said...

இதையும் செத்த படிங்கோ சாருவின் இரட்டை வேடம்

http://jaba2008.blogspot.in/2012/10/251012.html

silviamary.blogspot.in said...

சாருக்கு பெண்கள் மேல் என்றைக்குமே மரியாதையோ மனிதக் கரிசனமோ இருந்ததில்லை; இதை அவருடைய பிளாக்கைத் தொடர்ந்து படித்தாலே தெரிந்து கொள்ளலாம். தன்னுடைய வாசகியையே அவர் அசிங்க அசிங்கமாகப் பேசியது தான் கொஞ்ச காலத்திற்கு முன்னால் சந்தி சிரித்ததே! சாத்தான் வேதம் ஓதுகிறது என்பதற்கான மிகச் சரியான உதாரணம் சாருவும் அவரின் இந்தக் கட்டுரையும் தான்; சாருவுக்கெல்லாம் இதைப் பற்றிக் கருத்துச் சொல்ல எந்த அருகதையும் இல்லை; அதற்கான தகுதியும் அவருக்கு இல்லை! அவரின் அல்பத்தனமான இந்தக் கட்டுரையை உங்கள் தளத்தில் வெளியிடுவதில் உள்ள உள்குத்து என்ன என்றுதான் புரியவில்லை.....