Sunday, October 21, 2012

நிஜமாகத் தோன்றிய நிழல்கள்! - ருக்மணி ஜெயராமன் -சிறுகதை

நிஜமாகத் தோன்றிய நிழல்கள்!
ருக்மணி ஜெயராமன்

புறப்பட்டபோது வானம் வெளுப்பாகத்தான் இருந்தது. மழை வருவதற்கான அறிகுறியே இல்லை. லேசான தூறலாக ஆரம்பித்த மழை வலுக்கவே, கையில் குடை கொண்டு வராத நளினா, பக்கத்திலிருந்த ஒரு கடைக்குள் நுழைந்து ஒதுங்கிக் கொண்டாள். புடைவையில் ஒட்டிக் கொண்டிருந்த தண்ணீர்த் துளிகளைப் புறங்கையால் தட்டி விட்டுக் கொண்டே அவள் சுற்றிலும் பார்த்தாள். பலதரப்பட்ட வீடியோக்களை வாடகைக்குக் கொடுக்கும் கடை அது. அவள் தம் நண்பர்களுடன் அடிக்கடி அங்கு வருவாள். நளினா கடையில் சுற்றிப் பார்த்தாள்.
சமூகம், விஞ்ஞானம், அறிவியல், சினிமா என்று பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நூலகத்தை நினைவூட்டும் வகையில் ஒழுங்காக சி.டி.க்களும் டி.வி.டி.களும் அடுக்கப்பட்டிருந்தன. கடையில் கூட்டம் அதிகமில்லை. விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட டி.வி.டி.கள் இருந்த இடத்தில் இரு பெண்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒரு பெண் கையில் ஒரு டி.வி.டி.
உங்கள் வாழ்க்கைக் கதை!’ - தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதே! நீ பார்த்தாயா?"
அதைப் பற்றி என்னை எதுவுமே கேட்காதே! வாங்கிக் கொண்டு போய் பத்து நிமிடங்கள் கூடப் பார்த்திருக்க மாட்டேன். உடம்பில் ஏதோ ஊர்வதைப் போன்ற ஓர் உணர்வு; டி.வி.யை அணைத்து விட்டேன்."
ஏன்?"
அதுதான் முதலிலேயே சொன்னேனே! என்னை எதுவும் கேட்காதே. இது ஒரு சீரிஸ்! 10 டி.வி.டி.கள் வரிசையாகப் பார்க்க வேண்டும்" பேசிக்கொண்டே அவர்கள் நகர்ந்து விட்டார்கள்.
அதில் என்னதான் இருக்கும்? ஏன் அவள் சொல்ல மறுக்கிறாள்? பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது நளினாவுக்கு. அவர்கள் போனவுடன் அங்கு நகர்ந்த நளினா, ஷெல்பில் அவசரமாகத் தேடினாள். கீழ்த்தட்டில் இடதுபக்க ஓரத்தில் 10 சி.டி.கள் கொண்ட ஒரு பெட்டி. முதலாவதாக இருந்த சி.டி.யை எடுத்த நளினா அதன் கவரின் மேலிருந்த தூசியைக் கையால் லேசாகத் துடைத்தாள். ‘உங்கள் வாழ்க்கைக் கதை’ - கறுப்புக் கவரின் மேல் பளிச்சென்று தெரிந்தன அந்த வெள்ளை எழுத்துக்கள்! கீழே சற்றே சிறிய எழுத்துகளில் - ‘உண்மையில் அறிந்துகொள்ள உங்களுக்கு விருப்பமா?’
ஒரே ஒரு சி.டி.யை மட்டும் எடுத்துக்கொண்ட நளினா, கவுண்டரில் அதைக் காட்டினாள். சி.டி.யைத் திருப்பித் திருப்பிப் பார்த்த முதலாளி, பார்கோடை எங்கேயும் காணவில்லையே" என்று கூறிக்கொண்டே நளினாவின் பக்கம் திரும்பி, ஏம்மா! இதை எந்த ஷெல்பிலிருந்து எடுத்தீர்கள்" என்று கேட்டார். கையை நீட்டி, அதோ அந்த விஞ்ஞானப் பிரிவிலிருந்து" - காட்டினாள் நளினா.
அந்த சி.டி.யை மறுபடியும் பார்த்த அவர், ‘உங்கள் வாழ்க்கைக் கதைஇந்த வீடியோவை நான் இது வரை பார்த்ததே இல்லை; கம்ப்யூட்டரிலும் பதிவு இல்லை." ஏதோ யோசனையுடன் அவர் சி.டி.யை அவளிடம் கொடுத்தார்.
எவ்வளவு கொடுக்க வேண்டும் சார்?"
20 ரூபாய்!"
பணத்தை வாங்கிச் சட்டைப் பையில் போட்டுக் கொண்டார்.
திருப்பி எப்போது கொடுக்க வேண்டும்?"
எப்போது வேண்டுமானாலும் கொடுக்கலாம். இதற்கு ரெக்கார்டே கிடையாது" என்றார் புன்சிரிப்புடன்.
நளினா கடையை விட்டுச் சென்றபோது மழை நின்றுவிட்டிருந்தது.
நளினாவை நீங்கள் எப்படி கற்பனை செய்திருப்பீர்களோ தெரியாது. உண்மையான நளினாவின் வயது 23. மனதை வசீகரிக்கும் அபூர்வமான அழகு. சுட்டியான பெண். சென்னையில் ஒரு .டி. கம்பெனியில் வேலை. அப்பா, அம்மா ஒரு கல்யாணத்துக்காக மதுரை போயிருக்கிறார்கள். வர பத்து நாட்கள் ஆகும். அதுவரை நளினா மட்டும்தான் இந்த வீட்டில்! முக்கியமான ஒரு விஷயம். அவள் கம்பெனியில் வேலை பார்க்கும் தேஜு என்ற தேஜஸுக்கும் இவளுக்கும் கல்யாணம் நிச்சயமாகி இருக்கிறது. ஒருவரோடு ஒருவர் ஒரு வருடமாகப் பழகிப் புரிந்துகொண்டு செய்து கொள்ளப் போகும் காதல் திருமணம்! பெயருக்கு ஏற்ற மாதிரி தேஜஸும் நல்ல அழகன். ஜோடிப் பொருத்தம் பற்றிப் பேசாதவர்களே இல்லை. நளினாவுக்கு சுருக்கென்று கோபம் வந்து விடும். கத்துவாள். தேஜஸ் அவளுக்கு நேர்மாறாக மிகப் பொறுமைசாலி.
காஃபி போடுவதற்காக அடுப்பில் ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீரை வைத்த நளினா, வெளியில் வந்து, அங்கிருந்த கம்ப்யூட்டரில் தாம் எடுத்து வந்த சி.டி.யைச் செருகினாள்.
மேலே படிப்பதற்கு முன்னால் வாசகர்களுக்கு ஒரு வார்த்தை, ‘எனக்கு எல்லாம் தெரியும்; எனக்குத் தெரிந்தது மட்டும்தான் உண்மைஎன்று தீர்மானமாக நம்பிக் கொண்டு, தெரியாதது, புரியாதது ஆகியவற்றை ஏமாற்று வித்தை என்று ஒதுக்கித் தள்ளிவிடும் குணம் படைத்தவரா நீங்கள்? அப்படியானால் நீங்கள் விலகிக் கொள்ளலாம். இந்தக் கதையை மேலே படிக்க, கொஞ்சம் திறந்த மனம் வேண்டும். வேர்ட்ஸ்வொர்த் பாஷையில் சொன்னால் 'Willing suspension of disbelief.' நீங்கள் தயாரா? அப்படியானால் வாருங்கள்... மேலே போகலாம்.
சமையலறைக்குச் சென்று காஃபி போட்டு, அதை ஒரு பீங்கான் கோப்பையில் ஊற்றிக் கொண்டு வந்த நளினா, கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்தாள். கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் இன்னும் உயிரில்லாமல் கறுப்பாகவே இருந்தது.
டேப்பில் ஏதாவது கோளாறு இருக்குமோ?" சரிசெய்யலாம் என்று நளினா எழுந்த அதே நேரத்தில் ஸ்க்ரீனில் பளிச் சென்று வெளிச்சம்! கையில் ஒரு குழந்தையுடன் ஒரு பெண். பின்னால் ஓர் ஆண்! இருவரும் சந்தோஷமாக சிரித்துக் கொண்டிருந்தனர். அவ்வப்போது குழந்தையையும் கொஞ்சிக் கொண்டிருந்தனர். குழந்தையை அவர்கள் கூப்பிட்ட பெயர்: நளினாச் செல்லம், நளினாக் கண்ணு, நளினா... நளினா.
தம் கண்களையே நம்ப முடியாத நளினா அருகில் சென்று பார்த்தாள். அவளது சிறு வயது ஃபோட்டோவைப் பார்த்திருக்கிறாள். இது நானேதான். என் ஃபோட்டோதான் இது." அவள் குரல் சற்றே உயர்ந்திருந்தது.
நளினாவின் கையிலிருந்த காஃபி கோப்பை கீழே விழுந்து உடைந்தது. இதைப் பற்றிக் கவலைப்படாத நளினா, அந்த சி.டி. உரையை எடுத்து, விலாசம் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தாள்.
உண்மையில் அறிந்துகொள்ள உங்களுக்கு விருப்பமா?’ என்று கீழே எழுதப்பட்டிருந்த வரிகள் தவிர வேறு எதுவுமே இல்லை. யார் இதை எடுத்திருப்பார்கள்? அந்த சி.டி. எப்படி கடைக்கு வந்தது? எல்லாமே மர்மமாக இருந்தது.
வீடியோ ஓடிக்கொண்டிருந்தது. அதை முழுதும் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் நளினாவுக்கு அதிகமாயிற்று. அவள் தொடர்ந்து பார்த்தாள். அவளது முதல் பிறந்தநாள், முதலில் பேசிய வார்த்தை, முதலில் கையை விட்டு விட்டு நடந்த நேரம் -ஒவ்வொன்றாக அவள் அந்த வீடியோவில் பார்த்து முடித்தபோது அவளுக்கு ஐந்து வயதாகியிருந்தது.
மறுநாள் வேலை முடிந்து வீட்டுக்கு வரும் வழியில் கடைக்குள் நுழைந்து 2,3,4 வது சி.டி.க்களை எடுத்து வந்தாள. இதை எல்லாம் பார்க்கிறேனே, அது எனக்கு நல்லதா? அடிக்கடி இந்தக் கேள்வி நளினாவை பயமுறுத்தும். ஆனால் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற உந்துதல் பார்க்கத் தூண்டியது.
இரண்டாவது சி.டி.யில் குழந்தைப் பருவத்தின் மீதி நாட்கள். மூன்றாவது சி.டி. முழுக்க பள்ளிப் பருவம். பள்ளிக்கூடத்தில் மாம்பழம் பறிக்க மரம் ஏறி மாட்டிக் கொண்டது... சாம்புவுக்குக் காப்பி அடிக்க விடைத்தாளைக் காட்டியது - இதுபோன்ற வெளியில் யாருக்குமே தெரியாத சம்பவங்கள் எல்லாம்... ஒருவேளை இது பேய், பிசாசின் வேலையாக இருக்குமோ? நிச்சயமாக இருக்காது. பேய், பிசாசு என்று எதுவுமே கிடையாது. வெறும் கற்பனைதான்!
நான்காவது சி.டி.யையும் பார்த்து விட்டுத் தூங்கலாம் என்ற முடிவுக்கு வந்த நளினா பார்க்க ஆரம்பித்தாள். இதுவரை பார்த்த சி.டி.க்கள் போலல்லாமல் அது முற்றிலும் மாறுபட்டிருந்தது. நளினா என்ன செய்கிறாளோ அதையே அந்த பிம்பமும் செய்தது. நளினாவுக்குத் தாங்க முடியாத பயம். என்ன செய்வது என்றே புரியவில்லை. கடிகாரத்தின் டிக்... டிக்... ஒலி தவிர வேறு சப்தமே இல்லை.
மரண அமைதி. அவளுக்குத் தன்னையே யாரோ பார்ப்பது போல் தோன்றியது. அவள் அசையாமல் கற்சிலை போலிருந்தாள். 10 நிமிடங்களில் அந்த வீடியோ ஸ்க்ரீனில் ஓர் எச்சரிக்கை!
இனிவரும் டேப்புக்களில் பதிவாகி இருப்பது உங்கள் எதிர்காலம். நீங்கள் விரும்பாத விஷயங்களும் இருக்கலாம். அதில் எதையுமே உங்களால் மாற்ற முடியாது.’
இன்றைய அனுபவத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த நளினா, மீதி வீடியோக்களைப் பார்க்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து தூங்கச் சென்றாள்.
மறுநாள் ஆஃபீஸில் நுழைந்ததும் அவளுக்கு தேஜஸிடமிருந்து ஃபோன் வந்தது. வேலை விஷயமாக ஊருக்குப் போயிருந்த அவன் ஒரு வாரம் கழித்து இன்றுதான் வருகிறான். ரொம்ப போரடிக்கிறது, நளின்... நாளைக்கு நம்ப மீட் பண்ணலாமா?"
கட்டாயமாக! எனக்கும் உன்னிடம் நிறையவே பேசணும்."
நளினாவுக்குக் குழப்பமாக இருந்தது. இந்த சி.டி.விஷயத்தை தேஜுவிடம் சொல்லலாமா? இப்போது சொல்ல வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தாள். இதே யோசனையிலிருந்த நளினாவுக்கு நேரம் போனதே தெரியவில்லை. ஆஃபீஸ் முடிந்து வீட்டுக்குப் போகும் போது அவளை அறியாமல் அவள் கால்கள் வீடியோக் கடையை நோக்கிச் சென்றன.
பாக்கி 5 வீடியோகளையும் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை. 8வது வீடியோ அங்கு இல்லை. யாரோ எடுத்துக் கொண்டு போயிருந்தார்கள். மற்ற 5 வீடியோகளையும் எடுத்துக் கொண்டு வந்தாள்.
வீட்டில் நுழைந்தவுடன் 5-வது சி.டி. யைப் போட்டாள். அதில் பிரபலமான ஒரு ஹோட்டல் திறந்தவெளி புல் தரையில் பூச்செடிகளின் மத்தியில் நூதனமான நாற்காலிகள். அவற்றுக்குப் பொருத்தமாக உயர் ஜாதி மரத்தினால் செய்யப்பட்ட கலைநயம் மிக்க மேஜைகள். இதயத்தை வருடும் சங்கீதம்.
டி.வி.திரையில் நளினாவும், தேஜுவும் உள்ளே நுழைந்தனர். தேஜு - கறுப்பு ஷெர் வாணியில் இருந்தான். அதுபோன்ற உடையில் அவனை நளினா பார்த்ததே இல்லை. ‘அதுவும் அவனுக்கு நன்றாகத்தான் இருக்கிறது.’ ஐஸ்க்ரீம் ஆர்டர் செய்தான். இரு வரும் சிரித்துப் பேசிக் கொண்டே சாப்பிட்டனர். அவள் சற்றும் எதிர்பார்க்காத போது அவன் கீழே குனிந்து, மறைத்து வைத்திருந்த பூச்செண்டை அவளிடம் கொடுத்தான். அவளைக் கட்டிக் கொண்டு, அவள் விரலில் வைர மோதிரத்தைப் போட்டான். அவன் காட்டிய அன்பில் நெகிழ்ந்து போன நளினாவின் கண்கள் குளமாயின. அத்துடன் அந்த வீடியோ முடிந்து விட்டது. மகிழ்ச்சியில் நளினாவுக்கு இரவு தூக்கமே வரவில்லை.
மறுநாளும் அவள் மகிழ்ச்சி தொடர்ந்தது. ஒரு வருடமாகப் பழகியிருந்தும் கூட இப்போதெல்லாம் தேஜுவின் நினைவே மனத்தில் கிளர்ச்சி ஏற்படுத்துவதை உணர்ந்தாள். மாலை 6 மணிக்குச் சற்று முன்பாகவே தயாராகிவிட்ட நளினா, ஹோட்டலுக்குப் புறப்பட்டாள். தேஜு ஏற்கெனவே அங்கு வந்து காத்திருந்தான். அவன் கறுப்பு ஷெர் வாணி அணிந்திருந்தான். ஐஸ்க்ரீம் சாப்பிட்டனர். அப்போது பூச்செண்டு கீழே வைத்திருக்கிறானா என்று பார்க்க நளினா ஸ்பூனைக் கீழே தவறவிட்டாள். வேகமாகக் குனிந்து தேஜஸ் அதை எடுத்துக் கொடுத்தான். பிறகு பூச்செண்டு, பிறகு வைர மோதிரம். எல்லாம் நேற்றுப் பார்த்தது போலவே நடந்தன.
வீட்டுக்குள் நுழைந்த நளினா மகிழ்ச்சியின் எல்லையிலிருந்தாள். 6வது வீடியோவைப் பார்க்க ஆரம்பித்தாள். இதுவரை அவள் பார்த்திராத ஓர் அறை. சுவரில் நளினா, தேஜுவின் திருமண ஃபோட்டோ. இருவரும் புதுமணத் தம்பதியராக சந்தோஷமாக வாழ்க்கை நடத்துகின்றனர். இது முதல் பாதி. வீடியோவின் கடைசிப் பகுதி முழுதும் ஒரே சண்டை. தேஜு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கிறான் என்று நளினா கூற, அவன் மறுக்க, வாக்குவாதம்- வாயிலிருந்து உமிழும் நெருப்புத் துண்டங்கள். தினசரி வாழ்க்கையே போராட்டமாகிக் கொண்டிருந்தது.
நான் உனக்கு ஃபோன் பண்ணியபோது அந்த லிப்ஸ்டிக்தானே ஃபோனை எடுத்தாள். ‘தேஜு மீட்டிங்கில் இருக்கிறார். இப்போது கூப்பிட முடியாதுஎன்று முகத்தில் அடித்தாற்போலச் சொல்கிறாள். துளிக் கூட மரியாதையே கிடையாது. எல்லாம் நீ கொடுக்கும் இடம்தான்."
ஆமாம்! ஆபீஸில் உன்னைப் பற்றிப் பேசுவதைத் தவிர வேறு வேலையே கிடையாது."
சண்டை... சண்டை... சண்டை...
வீடியோ முடிவில் கையில் டைவோர்ஸ் பேப்பர்களுடன் கோர்ட் வாசலில் நளினா!
பார்த்து முடித்த நளினாவுக்குத் தாங்க முடியாத கோபம். தாம் ஏமாற்றப்பட்டதாக நம்பினாள். வீடியோவில் பார்த்தது நடக்காமல் போகலாம் என்று நம்பக்கூட அவள் தயாராக இல்லை. அம்மா அடிக்கடி சொல்லுவாள்நாடி பார்ப்பவர்கள், கைரேகை பார்ப்பவர்கள், ஓலைச்சுவடி பார்த்து ஜோசியம் சொல்லுபவர்கள் - இவர்களில் 80 சதவிகிதத்தினர் நடந்து முடிந்து விட்டதைப் பற்றிப் பேசும்போது, இவர்களுக்கு எப்படி இதெல்லாம் தெரிந்தது என்று நமக்கே மலைப்பாக இருக்கும். ஆனால் இனி நடக்கப் போவதை - எதிர் காலத்தைப் பற்றி அவர்கள் சொல்வது பாதிக்கு மேல் தவறாகவே இருக்கும்.’ அம்மா சொல்வதில் உண்மை இருக்குமோ? ஒரு வினாடி கூட அவள் நிதானமாக யோசிக்காமல் மனம் நிறைய ஆத்திரத்துடன் தேஜு வீட்டுக்குச் சென்றாள்.
இந்த மோதிரத்தைக் கொடுத்து என்னை விலைக்கு வாங்கிவிடலாம் என்று நினைக்கிறாயா? இது எனக்குத் தேவையில்லை. நீயே வைத்துக்கொள்" கையிலிருந்த மோதிரத்தை அவனிடம் வீசி எறிந்தாள்.
உனக்கு என்ன ஆகிவிட்டது நளினா... ஏன் இப்படி எல்லாம் பேசுகிறாய்?"
நீ ஒரு மோசக்காரன். உன்னைக் கலியாணம் செய்து கொள்ள எனக்கு விருப்பமில்லை. நீ பெண்கள் பின்னால் அலைபவன். உனக்கு மனைவியாக இருக்க எனக்கு இஷ்டமில்லை!" கத்திவிட்டு அவள் போய்விட்டாள்.
வீட்டுக்கு வந்தவுடன் 7வது சி.டி.யைப் போட்டாள். தேஜஸுக்கு மற்றொரு பெண்ணுடன் திருமணமாகியிருந்தது. தேஜுவைத் திருமணம் செய்து கொண்டு கஷ்டப்படாமல் நல்லவேளையாகத் தம் வாழ்க்கையை மாற்றிக் கொண்டு தப்பிக்க முடிந்ததே என்று சந்தோஷப்பட்டாள்.
8வது வீடியோ அவளிடம் இல்லை. 9வது சி.டி.யைப் போட்ட அவளுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த வீடியோவில் அவள் இருந்த இடம் ஒரு சிறைச்சாலை. அதாவது ஒரு ஜெயில். எப்படி அவள் ஜெயிலுக்கு வந்தாள், என்ன குற்றம் செய்தாள் என்ற ஒரு விவரமும் அதில் இல்லை. கடைசி வீடியோவையும் பார்த்தாள். அதிலும் அவளுக்குச் சிறை வாசம்தான். நளினாவுக்குப் பயத்தில் நெஞ்சு அடைத்தது. சிறைக்கு வந்ததன் காரணம் 8வது சி.டி. யைப் பார்த்தால் தெரியும். சிறைக்குப் போவதையும் தவிர்க்கலாமே.
வீடியோக் கடையை நோக்கி ஓடினாள். வீடியோ இன்னும் கடைக்குத் திரும்பி வரவில்லை.
எனக்கு உடனே அந்த வீடியோ தேவைப்படுகிறது. வாங்கிக் கொண்டு போனவரது விலாசம் கொடுங்கள்."
விலாசம் யாருக்கும் கொடுக்கக் கூடாது என்பது எங்கள் பாலிஸி. உங்களுக்கு வேண்டுமானால் இந்த ஸ்லிப்பைப் பூர்த்தி செய்து கொடுத்துவிட்டுப் போங்கள். வந்தவுடன் ஃபோன் செய்கிறோம்."
உடனே திருப்பிக் கொடுக்கச் சொல்லி அவருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள்..."
சரி... பார்க்கிறோம்."
அவளுடைய அவசரத்தைச் சற்றும் புரிந்துகொள்ளாமல் அவன் நிதானமாக சூயிங்கம் மென்று கொண்டிருந்தான்.
சி.டி.யைத் திருப்பிக் கொடுக்கும் வரை காத்திருப்பது சாத்தியமில்லை என்று புரிந்தது நளினாவுக்கு. அதில்பார்கோட்கிடையாது. திரும்பி வராவிட்டால் கூட யாருக்கும் தெரியாது. எப்படியாவது அந்த விலாசத்தைக் கண்டுபிடித்தே ஆக வேண்டும். ஒரு ஷெல்ப்பின் பின்புறம் ஒளிந்து கொண்டாள். முதலாளி போனவுடன் கடைப்பையன், வாயில் கதவைப் பூட்டி விட்டுப் புறப்பட்டான். நளினா கம்ப்யூட்டரில், வெகு நேரத் தேடலுக்குப் பிறகு அந்த விலாசத்தைக் கண்டுபிடித்தாள். கீழே கிடந்த ஒரு கசங்கிய காகிதத்தில் அவசர அவசரமாக அந்த விலாசத்தைக் கிறுக்கி எடுத்துக் கொண்டு கடையின் பின்புறம் வழியாக வெளியே ஓடினாள்.
இரவு மணி 10. விலாசம் அவளுக்குத் தெரிந்த இடத்தில் இருந்தது. உடனே போக வேண்டுமென்று முடிவெடுத்தாள். இப்போது இதைத் தடுத்து நிறுத்தியே ஆக வேண்டும். இல்லாவிட்டால்... அவளுக்கு அந்த டிசம்பர் மாதக் குளிரிலும் வியர்த்தது.
யார் அது...? இந்நேரத்தில் மணி அடிப்பது?" உள்ளேயிருந்து ஒரு அதிகாரமான பெண் குரல் கேட்டது.
கதவு லேசாகத் திறந்தது. அச்சிறிய திறந்த பகுதி வழியே பார்த்தாள் நளினா. அவருக்கு 70 வயது இருக்கலாம். முகத்தில் அசாத்திய கோபம் தெரிந்தது.
யார் நீ... இந்த நேரத்தில்... எதற்காக இங்கு மணி அடித்தாய்?" குரலிலிருந்த எரிச்சல் நளினாவை அவசரப்படுத்த, அவள் எந்த முன்னுரையுமில்லாமல், உங்களிடமிருக்கும் வீடியோ டேப்பை வாங்கிக் கொண்டு போக வந்தேன்" என்றாள்.
உங்கள் வாழ்க்கை என்ற அந்த டேப்..." நளினா முடிப்பதற்குள் அதற்கு இதான் நேரமா? இங்கு எதுவும் கிடையாது" கூறிக் கொண்டே அந்த வயதான அம்மாள் கதவைச் சாத்த முற்பட, பொறுமையிழந்த நளினா, வெளிப்பக்கத்திலிருந்து தன்னை நோக்கிக் கதவை இழுத்தாள். அந்த வேகத்தில் மூதாட்டி கீழே விழ, அவள் பின் மண்டை மேஜை விளிம்பில் இடித்து, ரத்தம் கொட்டியது. முதலுதவி செய்யலாமென்று உள்ளே நுழைந்த நளினாவுக்கு, தாம் இங்கு வந்ததன் காரணம் நினைவுக்கு வந்தது. அம்மாளின் உடலில் அசைவே இல்லை. இங்கு இருப்பது ஆபத்து என்பதை உணர்ந்த நளினா வேகமாக வாசலுக்கு வந்தாள். அதே நேரத்தில் அவளை உரசிக் கொண்டு அங்கு வந்து நின்றது ஒரு போலிஸ் ஜீப்!
நன்றி - கல்கி, புலவர் தருமி

0 comments: