Friday, April 19, 2013

ராஜீவ்காந்திக்கும் டாக்டர் ராம்தாஸ்க்கும் உள்ள பகை


பாட்டாளி சொந்தங்களே!

மஞ்சள் பூ நடவடிக்கை!

மருத்துவர் .ராமதாஸ்

அலெக்சாண்டர் ஆளுநராகப் பொறுப்பேற்றவுடன் வன்னியர்களின் கோரிக்கை, போராட்டங்கள் பற்றி முழு விவரங்களை அதிகாரிகள் மூலமாகத் திரட்டினார். அச்சமயத்தில் தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் ராஜீவ் காந்தியிடம் தமிழகத்தில் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர் சமுதாயம் சமூக, பொருளாதார அளவில் மிகமிகப் பிற்படுத்தப்பட்டு இருப்பதையும் அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான இட ஒதுக்கீட்டைப் பற்றியும் எடுத்துரைத்து இருக்கிறார்


 அதைக் கேட்ட ராஜீவ் காந்தி அவருடைய அமைச்சரவையில் வெளிவிவகாரத்துறை அமைச்சராக இருந்த பி.வி.நரசிம்மராவிடம் வன்னியர் சங்கத்தினுடைய பொறுப்பாளர்களை அழைத்துப் பேசி அவர்களுடைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டுமென்று பொறுப்பை ஒப்படைத்தார்.

அதன் அடிப்படையில் நரசிம்மராவ் சென்னை வந்தபோது ஆளுநர் மாளிகையில் வன்னியர் சங்கப் பொறுப்பாளர்களாகிய எங்களை அழைத்துப் பேசினார். மீண்டும் அவருடன் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தைக்கு ஐதராபாத் வரும்படி எங்களுக்கு மத்திய உளவுத்துறை ஏற்பாடு செய்தது. நாங்கள் ஐதராபாத் செல்வதற்கு அரசே எங்களுக்கு விமானப் பயணச் சீட்டு, தங்குவதற்கு இடம் ஆகியன அளிப்பதாகச் சொல்ல, நாங்கள் அதை மறுத்து எங்களுடைய சொந்தச் செலவிலேதான் செல்வோம் என்று உறுதியாக இருந்தோம்.


 அதேபோன்று ஐதராபாத் சென்று ஆளுநர் மாளிகையில் பி.வி.நரசிம்மராவைச் சந்தித்து ஒரு மணி நேரத்துக்குமேல் பேச்சுவார்த்தை நடத்தினோம். பி.வி.நரசிம்மராவ் மீண்டும் எங்களை தில்லிக்கு வரச் சொன்னார்.  


அங்கும் அரசு செலவில் செல்ல மறுத்து எங்களுடைய சொந்தச் செலவிலே சென்று பி.வி.நரசிம்மராவ் வீட்டில் பேச்சுவார்த்தை நடத்தினோம். எங்களுடைய கோரிக்கைகளை முழுதும் கேட்டறிந்த நரசிம்மராவ், வன்னியர்களுக்குத் தனி ஒதுக்கீடு கொடுக்க ஒப்புக்கொண்ட நிலையில் நாங்கள் மகிழ்ச்சியோடு அவரது வீட்டைவிட்டு வெளியே வந்து கொண்டிருந்த போது, எங்கள் எதிரிலே ஜி.கே. மூப்பனாரும், .சிதம்பரமும் உள்ளே நுழைந்தார்கள். தேர்தல் நேரத்தில் ஒரு சாதிக்கு (வன்னியர்களுக்கு) இட ஒதுக்கீடு கொடுத்தால் பிற சாதியினர் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று இருவரும் நரசிம்மராவிடம் கூறி அவருடைய மனத்தை மாற்றிவிட்டார்கள்.

தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கப்படும் என்றும் உளவுத்துறை மூலம் எங்களுக்குச் சொல்லப்பட்டது. அல்லது வன்னியர் சங்கமே காங்கிரசோடு கூட்டணி வைத்துத் தேர்தலில் நிற்கலாம் என்றும் எங்களுக்கு ஆலோசனை சொல்லப்பட்டது


 அப்போது பெங்களூரு வந்த காங்கிரஸ் தலைவர் பூட்டாசிங் தேர்தலில் நிற்பதற்கு எத்தனை சீட்டுகள் வேண்டும்? தேர்தல் செலவுக்காக எவ்வளவு நோட்டுகள் வேண்டும்? என்றெல்லாம் எங்களிடம் ஆசை வார்த்தைகள் உளவுத் துறை மூலம் சொல்லி அனுப்பப்பட்டு, அவை எங்களுக்குச் சொல்லப்பட்டன.


இதனிடையில் வன்னியர் சங்க அவசர நிர்வாகக் குழுக் கூட்டம் கூட்டப்பட்டு தேர்தலைப் புறக்கணிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது.

1988 டிசம்பர் 12 திங்கட்கிழமை காலையில் சரண்யன் என்ற உளவுத்துறை அதிகாரி வன்னியர் சங்க நிறுவனரான என்னை, கவர்னர் மாளிகைக்கு அழைத்துச் சென்றார். அங்கு கவர்னர் அலெக்சாண்டர் என்னிடம் ஒரு காகிதத்தைக் கொடுத்தார். அதை வாங்கிப் படித்ததும் நான் ஆத்திரத்தின் உச்சிக்கே போய்விட்டேன். இட ஒதுக்கீட்டுப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு ஜாதி வாரியாக ஜனத்தொகையைக் கணக்கெடுக்க பி.வி. வெங்கடகிருஷ்ணன் ..எஸ் தலைமையில் ஒரு கமிஷன் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அந்தக் காகிதத்தில் இருந்தது


 நான் கவர்னர் மாளிகையிலிருந்து உடனே திரும்பி வன்னியர் சங்கத்துடன் ஆலோசனை நடத்தினேன். அன்று மாலையே எல்டாம்ஸ் ரோட்டிலிருந்த வன்னியர் சங்கத் தலைமையகத்தில் தேர்தல் புறக்கணிப்பு நடந்தே தீருமென்று பத்திரிகைகளுக்கு அறிக்கை வெளியிட்டேன்.நான் கவர்னரைச் சந்தித்த அடுத்த நாளே தேர்தலுக்கான தேதியும் குறிக்கப்பட்டுவிட்டது. எங்கள் போராட்டம் உச்சக்கட்டத்தில் இருந்த நேரத்தில்தான் திரிபுராவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் இடதுசாரி இயக்கங்களின் கூட்டு மந்திரிசபை நடந்து வந்தது. அப்போது மலைச்சாதியினர் தனிநாடு கேட்டு வன்முறையில் இறங்கினர். அங்குப் போராடியவர்களுக்கு மறைமுக ஆதரவு தந்தார் ராஜீவ் காந்தி


 மலைச் சாதியினரின் வன்முறையை அடக்குவதாகக் கூறி திரிபுராவுக்குள் ராணுவம் கொண்டுவரப்பட்டது. ராணுவத்தை வைத்துத் தேர்தல் நடத்தி காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளின் இரும்புக் கோட்டையைத் துப்பாக்கி முனையில் பிடித்தது. அதுபோன்றுதான் தமிழகத்தில் வன்னியர் போராட்டத்தை ஒடுக்கி ஆட்சியைப் பிடிக்க துணை ராணுவத்தைக் கொண்டு வந்தார் ராஜீவ் காந்தி. இது குறித்துப் பத்திரிகையாளர்கள் என்னிடம் கேட்டபோது,

நாங்கள் ராணுவத்தைச் சந்திக்கத் தயாராக இருக்கின்றோம். எங்களிடத்தில் 25 லட்சம் இளைஞர்கள் உள்ளனர். அவர்களின் 50 லட்சம் கைகள்தான் எங்கள் ஆயுதம். ஒரு லட்சம் பேர் உயிர் கொடுக்கவும் தயார். சுயமாகச் சிந்திக்கும் மக்கள் ஊழல் ஆட்சிகளைப் புறக்கணிப்பார்கள். வோட்டுச் சாவடிக்குப் போக மாட்டார்கள்என்று கூறினேன்.

தமிழகத்துக்கு வந்த ராணுவத்தினர் மற்றும் போலீசாரால் 1988 டிசம்பர் மாதத்துக்குள்ளாகவே பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வன்னியர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். வன்னியர்கள் மிகுதியாக வாழும் கிராமங்களில் போலீசாரும் ராணுவத்தினரும் அடக்குமுறையில் ஈடுபட்டதாக எண்ணற்ற புகார்கள். வேர்க்கடலை மூட்டைகளைத் திருடுவது முதல், தங்க நகைகளைப் பறிப்பதுவரை சர்வசாதாரணமாக அவர்கள் குற்றங்களைப் புரிந்தனர் என்று பத்திரிகைகள் எழுதின


 தர்மபுரி மாவட்டம் கடத்தூர் மோட்டான்குறிச்சி அருகே பொதக்காடு கிராமத்தில் நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் சுப்பிரமணியம் என்பவர் இறந்து போனார். வன்னியர் சங்கத்தினர் மீது அப்போது காவல்துறையினரும் துணை ராணுவப் படையினரும் கூட்டாக மேற்கொண்ட இந்தத் தாக்குதலுக்கு மஞ்சள் பூ நடவடிக்கை (Yellow Flower operation) என்று பெயர் இட்டிருந்தனர். இதுகுறித்து 21-12-1988 தேதியிட்டஜூனியர் விகடன்பத்திரிகை பின்வருமாறு எழுதியது.

பீதிக்கு உள்ளாக்குஎன்பதுதான் போலீசுக்கும் ராணுவத்துக்கும் அரசு இப்போது கொடுத்திருக்கும் ஆணை. வன்னியர்கள் அதிகமாக உள்ள திண்டிவனம், விழுப்புரம் முதலிய தென் ஆற்காடு நகரங்களில் எங்கு பார்த்தாலும் துப்பாக்கியும் கையுமாக ரிசர்வ் போலீஸ் ரோந்து வந்து கொண்டிருப்பதால் பொது மக்களிடையே மயான அமைதி.

வன்னியர் சங்கம் 15-ம் தேதி வியாழக்கிழமைதான் பந்த் நடத்தப் போவதாக அறிவித்திருந்தது. அதே தேதியில் விவசாயிகள் சங்கமும் பந்த் நடத்தப் போவதாக அறிவித்ததால் பந்த் தேதியை 16-ம் தேதிக்கு மாற்றியது. எனினும் இந்த பந்த் தேதி மாற்றம் பல ஊர்களுக்குச் சென்று அடையாததாலும், போலீசும் ராணுவமும் சேர்ந்து ஏற்படுத்தி இருக்கும் திகிலாலும் வீதிகளில் மக்கள் நடமாட்டம் 15-ம் தேதியன்றே குறைந்துவிட்டது.

இது ஒருபுறம் இருக்க, ஊர் ஊராக கார்களில் சென்று வன்முறையைத் தூண்டினார்கள் என்று வன்னியர் சங்கத் தலைமை நிலையச் செயலாளர் குருபரன், வீரபத்ர படையாட்சி போன்றோரைக் கைது செய்ததோடு அவர்கள் வந்த டாக்சியையும் கைப்பற்றி, டாக்சி டிரைவர்களையும்கூட போலீஸ் கைது செய்தது. வன்னியர் சங்கப் பிரமுகர்களுக்குப் போராட்ட சமயத்தில் டாக்சி கிடைக்கக் கூடாது என்ற நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

பதற்றமும் திகிலும் சூழ்ந்த நிலையில் போராட்டத்தில் கைதானோரை ஜாமீனில் எடுக்க ஆங்காங்கே வக்கீல் குழுவை அமைக்க போனில் உத்தரவு பிறப்பித்துக் கொண்டே நடுநடுவே கிளினிக்குக்கு வரும் பேஷன்டுகளை டாக்டர் ராமதாஸ் பதற்றம் இல்லாமல் கவனித்துக் கொண்டிருக்கிறார்.

நீங்கள்கூட கைது செய்யப்படப் போகிறீர்கள் என்று செய்தி நிலவுகிற போது நீங்கள் எல்லோர் கண்ணிலும் படும்படி கிளினிக்கில் உட்கார்ந்திருக்கிறீர்களே? என்று ராமதாஸிடம் கேட்டதற்கு, ‘நான் கைதாவதற்கு ஆயத்தமாக இருக்கிறேன். ஜெயிலுக்குப் போக பெட்டி, படுக்கை எல்லாம் கட்டிக்கிட்டு போலீசுக்காக காத்திருக்கிறேன்என்றார் காரில் வைத்திருக்கும் பெட்டி, படுக்கைகளைக் காட்டி" இதுதான்ஜூனியர் விகடன்செய்தி.

தென் ஆற்காடு மாவட்டத்து கிராமங்கள் பலவற்றில் சி.ஆர்.பி. பட்டாளம் பயங்கரமான அடக்கு முறையைக் கட்டவிழ்த்தது. இதனால் மக்கள் ஆத்திரம் அடைந்தார்கள். அதன் காரணமாக பல இடங்களில் தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து 28-12-1988 தேதியிட்டஜூனியர் விகடன்பத்திரிகையில் சுதாங்கன் என்பவர், ‘நூறு தொகுதிகளில் தேர்தல் நடப்பதில் குழப்பங்கள்என்ற தலைப்பிலான கட்டுரையில் பின்வருமாறு எழுதுகிறார்.

வட ஆற்காடு, தென் ஆற்காடு, சேலம், தர்மபுரி, கிழக்குத் தஞ்சை, அரியலூர், ஜெயங்கொண்டம் போன்ற திருச்சி பகுதியிலுள்ள நூறு சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் அமைதியாக நடக்குமா, நடக்க விடப்படுமா என்பது கேள்விக்குறி.

இங்கெல்லாம் கிராமங்களில் அரசியல் தலைவர்கள் வோட்டு கேட்கவே போக இயலாது என்கிறார்கள். அவ்வளவு ஆத்திரமுடன் இருக்கிறார்கள் மக்கள்! அவர்கள் தேர்தலுக்கே தயாராக இல்லை. வோட்டுப் போடக் கட்டாயப்படுத்தினால் கலவரங்கள் நடக்கலாம். தேர்தல் புறக்கணிப்பு மட்டுமின்றி ஏதேனும் தந்திரமான முறையில் இப்பகுதிகளில் தேர்தல் நடக்க விடாமல் நிறுத்தப்படலாம்" என்பது அப்பத்திரிகை செய்தியாகும்.


துணை ராணுவமும் ஆயுதப்படை போலீசாரும் தோளில் சுமந்த துப்பாக்கிகளோடு தமிழகத் தேர்தலை நடத்தி முடித்தனர். எம்மக்களின் தேர்தல் புறக்கணிப்புகள் பல இடங்களில் காவல்துறை வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டிருந்தது. பல இடங்களில் தேர்தல் புறக்கணிப்பு திட்டமிட்டது போலவே நடந்தேறியது. சில இடங்களில் வன்னியருக்கு ஆதரவாகப் பிற சமூகத்தினரும் தேர்தலைப் புறக்கணித்தனர். இந்தத் தேர்தல் புறக்கணிப்பால் தி.மு..வினர் ஆதாயம் அடைந்தனர். இதுகுறித்து பெ.இரவிச்சந்திரன் என்பவர், ‘வன்னியர் புறக்கணிப்பு தி.மு..வுக்குத்தான் ஆதாயம்என்ற தலைப்பில் 3-2-1989 தேதியிட்ட தராசு பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரையின் ஒரு பகுதியை இங்கு எடுத்துக் காட்டுவது பொருத்தமாக அமையும்.


வந்தவாசி தொகுதியில் 50 சதவிகித வாக்குகளே பதிவாயின. தெள்ளாறு ஒன்றியம் கொண்டையான் குப்பம் கிராம வாக்குச் சாவடியில் ஒரு வாக்கு மட்டுமே பதிவானது. இவ்வூரில் வன்னியர் அல்லாதோரும் வன்னியருக்கு ஆதரவாகத் தேர்தலைப் புறக்கணித்தனர்.

ராணிப்பேட்டைத் தொகுதியில் உள்ள புளியந்தாங்களில் 103 வோட்டுகளே பதிவாயின. அணைக்கட்டு தொகுதியில் இலவம்பாடி வாக்குச் சாவடியின் எதிரே கும்பல் கும்பலாகதண்ணீர் தண்ணீர்ஸ்டைலில் வன்னியர்கள் கூடி இருந்தனர். ஆனால் ஒருவர்கூட பகல் 12 மணிவரை வாக்களிக்கவில்லை. வாக்களிக்கச் சென்ற ஒரு பெண்ணை அவளின் கணவன் முடியைப் பிடித்து இழுத்துச் சென்றார் திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் கும்பலாக வந்தனர். வாக்களித்துவிட்டு வெளியே வந்த அவர்களைச் சந்தித்தோம். வன்னியர்கள் அதிகம் இல்லாத நகர்ப் புறங்களில் வன்னியர் சங்கத்தினர் செல்லாத வாக்களிப்பது என முடிவெடுத்தோம். அதன்படி நடந்து கொண்டோம்" என்றனர் அவர்கள்.

தென் ஆற்காட்டில் வானூர் தொகுதியில்தான் வாக்குப்பதிவு குறைவாக இருந்தது. 35 சதவிகித வாக்குகளே அங்கு பதிவாயின. அந்தத் தொகுதியில் ஒரு சில இடங்களில் மோதல்கள் ஏற்பட்டன.

மேல்மலையனூர், செஞ்சி, திண்டிவனம், நெல்லிக்குப்பம், முகையூர், விருத்தாசலம், புவனகிரி, மங்களூர், குறிஞ்சிப்பாடி போன்ற தொகுதிகளில் பல இடங்களில் வாக்குப்பதிவு 25 சதவிகிதம் மட்டுமே நான் சென்ற சமயத்தில் நடந்திருந்தது.

இந்தத் தேர்தலில் வன்னியரின் தேர்தல் புறக்கணிப்பு கள்ள வோட்டுக்கு அதிகமாக இடம் கொடுத்து உள்ளது. பெரும்பான்மையான இடங்களில் அதிகாரிகளுக்குத் தெரிந்தே தி.மு..வினர் கள்ள வோட்டுப் போட்டனர். 16, 17 வயது இளைஞர்கள் எல்லாம் வாக்களித்த கொடுமை திருவண்ணாமலை போன்ற நகரங்களில் நடந்தது.

எது எப்படி இருப்பினும் இந்தத் தேர்தல் புறக்கணிப்பு வன்னியரைப் பொறுத்தவரை வெற்றியே என்றாலும் அதனால் தி.மு..வே ஆதாயம் அடைந்தது" என்பது அப்பத்திரிகை தரும் கணிப்பாகும். இதே நிலைதான் 1989 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வட மாவட்டங்கள் முழுவதிலும் காணப்பட்டது. எங்களைப் பொறுத்தவரை வன்னியர் சங்கத்தின் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டம் வெற்றிப் போராட்டமாக அமைந்தது.

(அனுபவம் தொடரும்...)


நன்றி - கல்கி

0 comments: