Thursday, April 04, 2013

கேடி பில்லா கில்லாடி ரங்கா - சினிமா விமர்சனம் (விகடன் விமர்சனக் குழு)


கதையை நம்பாமல் காமெடியை மட்டுமே நம்பும் சமீப காலத் தமிழ் சினிமா டிரெண்டின் இந்த வார கோட்டா 'கேடி பில்லா கில்லாடி ரங்கா’!


வேலைவெட்டி இல்லாத விமலுக்கும் சிவ கார்த்திகேயனுக்கும் அரசியல்வாதி ஆக ஆசை. அப்பாக்களே பிரிக்க முடியாத இருவரின் நட்பை, காதல் பிரிக்கிறது. அரசியலிலும் காதலிலும் ஜெயிக்க மீண்டும் கைகோக்கும் நண்பர்கள், இரண்டிலும் ஜெயித்தார்களா என்பது... சற்றே நீளமான காமெடிக் கதை!  


'பசங்க’, 'மெரினா’ படங்களின் இயக்குநர் என்ற எதிர்பார்ப்பைப் படத்தின் ஐந்தாவது நிமிடத்தில் வரும் 'ஒரு பொறம்போக்கு’ பாடலே அடித்துக் காலி செய்துவிடுகிறது. கதை, திரைக்கதைக்கெல்லாம் கொஞ்சமும் அலட் டிக்கொள்ளவில்லை இயக்குநர் பாண்டிராஜ். சிவகார்த்திகேயன், விமல், பரோட்டா சூரி மூவரின் ஸ்டாண்ட்-அப், ரைமிங் டைமிங் காமெடி படத்தைக் காப்பாற்றிவிடும் என்று நம்பியிருக்கிறார்.


குறும்பு பாடி- லாங்குவேஜ், கேலி வசன உச்சரிப்பு, அடிக்கடி மிமிக்ரி என 'பட்டை’ முருகனாகப் பட்டை கிளப்புகிறார் சிவகார்த்திகேயன். 'உங்க அப்பா வர்ற நேரம் வந்திருச்சா... அப்போ நான் கிளம்புற நேரம் வந்திருச்சு’, 'கடத்திட்டுப் போய் அடிச்சா பரவாயில்லை... தலையிலேயே கொட்டுனாங்க’ என்று காதலுக்காக மிரளும் இடமெல்லாம் லகலகக்கவைக்கிறார். பிந்து மாதவியிடம் அடி வாங்கும் அம்மாஞ்சி கைப்புள்ளயாக விமல்.'வெட்டி ஆபீஸர்’களைக் காதலிக்கும் இலக்கணம் மீறாத ஹீரோயின்கள் பிந்து மாதவி, ரெஜினா. திருத்தமான அழகுடன் ஹீரோக்களைத் திருத்த முயற்சிக்கிறார்கள்.


தண்டச்சோறு மருமகனாக சூரி. வில்லன்களிடம் அடிவாங்கும்போது, 'என் பொண்டாட்டியை விடவா நீங்க அடிச்சிரப்போறீங்க?’ என்று கெத்து காட்டுவதும், 'சீரியஸாப் பேசிட்டு இருக்கும்போது நீ மட்டும் குடிக்காதே... நல்லா இல்லை’ என்று நண்பனை வாருவதுமாக இரண்டு ஹீரோக்களுக்கும் ஈடு கொடுத்துக் கலகலக்கிறார்.  

கதைக் களத்தை மீறாமல் திருச்சியின் இயல்பை இயல்பாகப் பதிவுசெய்திருக்கிறது விஜயின் கேமரா. யுவன்ஷங்கர் ராஜா இசையில் 'கொஞ்சும் கிளி...’, 'பொறம்போக்கு...’ பாடல்கள் 'கேட்கலாம்’ ரகம்.இரண்டரை மணி நேரப் படத்தில் கடைசி 15 நிமிடத்தில் கருத்து சொல்லும் படலம். அப்பாக்களின் வலியை டெல்லி கணேஷ் பிரமாதமாகச் சொன்னாலும், அதற்கு முந்தைய காட்சி வரை அவரை காமெடி பீஸாகக் கலாய்த்திருப்பதால், நெகிழவைக்காமல் நெளியவைக்கின்றன அந்த அறிவுரைகள்!


காமெடிக் கேடி கிச்சுகிச்சுக் கில்லாடியை முன்னிலைப்படுத்தியதில், 'இயக்குநர்’ பாண்டிராஜைத்தான் இதில் காணவில்லை!


thanx- விகடன் விமர்சனக் குழு

0 comments: