Tuesday, April 30, 2013

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 8


ஆண்டனி ராஜ்
  படங்கள்: ஏ.சிதம்பரம்  

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிரான சட்ட போராட்டம் என்பது நீண்ட வரலாறு கொண்டது. ஏற்கெனவே குறிப்பிட்டது போல, ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் 1996 நவம்பர் 7-ம் தேதி முதன் முதலில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

அதில் 2010 செப்டம்பர் 28-ல் நல்ல தீர்ப்பு கிடைத்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி திலிப்பி தர்மாராவ், இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தீர்ப்பை அளித்தார்.  அதனை எதிர்த்து உச்ச நீதிமன்ற சென்ற ஆலை நிர்வாகம், உயர் நீதிமன்ர தீர்ப்புக்கு எதிராக இடைக்கால தடையை பெற்று விட்டது. அதனால் தற்போது வரையிலும் ஆலைக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

வழக்குகள் ஒருபுறம் இருந்தாலும், நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஆய்வுக் குழுக்கள் அல்லது கண்காணிப்பு குழுக்கள் ஆலையின் தரத்தை பரிசோதனை செய்து அறிக்கைகள் கொடுக்கும் நிகழ்வுகள் வாடிக்கையாக நடந்து வருகின்றன். ஆனால் அந்த அறிக்கைகளும்  பெரும்பாலும் ஆலை நிர்வாகத்துக்கு சாதகமானதாக இருப்பதுதான் வேதனைக்கு உரியது. சில அறிக்கைகள் ஆலை நிர்வாகத்துக்கு ஆலோசனைகளை வழங்கினாலும் அவையும் நிறைவேற்றப்படுவது இல்லை என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கவலையாக இருக்கிறது.

உச்ச நீதிமன்ற கண்காணிப்புக் குழு

தமிழகத்தில் உள்ள ஆலைகள் பலவும் விதிமுறைகளை மீறி செயல்பட்டு சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தாக திகழ்வதாக எழுந்த புகாரை விசாரித்து அறிக்கை தருமாறு உச்சநீதிமன்றம் ஒரு கண்காணிப்பு குழுவை அமைத்தது. டாக்டர் தியாகராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட அந்த குழுவில் 5 பேர் இடம்பெற்று இருந்தனர். இந்த குழுவுடன் இணைந்து மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை சார்பில் உஷா சுப்பிரமணியன் இடம் பெற்று இருந்தார். 


தமிழக சுற்றுச்சூழல் துறை சார்பில் மூவரும், தமிழக அரசின் சார்பில் மூவரும் குழுவில் இடம் பெற்று இருந்தனர். மக்கள் சார்பில் கடலோர மக்கள்கூட்டமைப்பின் அமைப்பாளரான புஷ்பராயன் உள்ளிட்ட சிலர் அந்த குழுவிடம் மனு கொடுத்து ஆலையில் அத்துமீறல்களை தெரிவித்தனர்.

2004 செப்டம்பர் 20 முதல் 22 வரையிலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள தொழிற்சாலைகளை ஆய்வு செய்த அந்த குழுவானது, 21-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தியது. ஆலைக்குள் நச்சுக் கலந்த கழிவுப் பொருட்கள் குவித்து வைக்கபப்ட்டு இருந்ததை அக்குழு நேரில் பார்வையிட்டது. காற்றில் அளவுக்கு அதிகமாக சல்ஃபர் கலந்த புகை பரவுவதையும் கவனமாக குறித்துக் கொண்டனர்.

ஆலை நிர்வாகம் மூன்றுமுறை விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு உற்பத்தியை அதிகரித்து இருந்த போதிலும் அதற்கான அனுமதி முறைப்படி பெறப்படவில்லை. ஆலை செயல்பட தொடங்கிய நிலையில் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், மத்திய சுற்றுச்சூழல் துறையும் முன்தேதியிட்டு அனுமதிகடிதங்களை கொடுத்ததற்கான ஆவணங்களை பார்த்துது அக்குழுவினரே அதிர்ந்தனர். ஆலை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், திரவ கழிவுகளையும் திடக் கழிவுகளையும் கையாள தேவையான எந்திரங்கள் இல்லாதது பற்றியும் இக்குழு கவலை தெரிவித்தது.

 
ஆலையை உடனடியாக தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சோதனை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்ற கண்காணிப்புக் குழு உத்தரவிட்டது. அப்போது அனுமதி இல்லாமல் விரிவாக்கம் செய்யப்பட்டது உறுதியானாலோ அல்லது கழிவுகளை கையாள்வதில் மெத்தனம் காட்டப்பட்டாலோ காசு மாசுபடுவதை தடுக்கும் சட்டம் (1981), நீரை மாசுபடுத்துவதற்கு எதிரான சட்டம் (1974), ஆபத்தை விளைவிக்கும் கழிவுப்பொருட்களுக்கான சட்டம் (2003) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்து ஆலையின் லைசென்ஸை ரத்து செய்ய வேண்டும்.


 ஆலையின் எந்திரங்கள், உற்பத்தி அளவு ஆகியவற்றை முழுமையாக ஆய்வு செய்து அதன் அறிக்கையை 15 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இது போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டாலும் ஆலை நிர்வாகம் எதையும் பின்பற்றுவது கிடையாது என பொருமுகிறார்கள், உள்ளூர் மக்கள்.

ம.தி.மு.க-வின் பங்களிப்பு

உயர்நீதி மன்றம் இந்த ஆலையை மூட உத்தரவிட்டு அதை எதிர்த்து ஆலை நிர்வாகம் மேல் முறையீடு செய்து இடைக்கால ஆணை பெற்று இருந்தாலும், உச்ச நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு நெருங்கி விட்டதாகவே போராடும் மக்கள் கருதுகிறார்கள். இருப்பினும் இதுவரையிலும் நடந்த சட்ட போராங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்துக்காக தேசிய தூய சுற்றுச்சூழல் அறக்கட்டளை வழக்கு தொடர்ந்த பின்னர் அதில், ம.தி.மு.க பொது செயளாளர் வைகோ, தூத்துக்குடி மாவட்ட சி.ஐ.டி.யூவை சேர்த கனகராஜ், தூத்துக்குடி மாவட்ட இந்திய கம்யூனிஸ் ஆகியவையும் தங்களை இணைத்துக் கொண்டு சட்ட போராட்டம் நடத்தின. தொடக்கத்தில் அனைத்து கட்சிகளும் பாரபரட்சம் இல்லாமல் ஸ்டெர்லைட் எதிர்ப்பை கடைபிடித்த போதிலும், பின்னர் பல் கட்சிகள் பின் வாங்கிக் கொண்டன.

ம.தி.மு.க சார்பில் 1996 மார்ச் 5-ம் தேதி தூத்துக்குடியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. அடுத்த வாரத்தில் கடையடைப்பு போராட்டமும் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டமும் ம.தி.மு.க சார்பில் நடத்தப்பட்டது. ஏப்ரல் முதல்நாளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு பேரணி நடந்தது. டிசம்பர் மாதத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி ஸ்டெர்லைட் ஆலைக்கு மக்களிடம் இருக்கும் எதிர்ப்பு உணர்வை அதிகாரிகளுக்கு புரிய வைத்தனர்.

1997 மார்ச் 24-ல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் கட்சியினர் மட்டும் அல்லாமல் உள்ளூரை சேர்ந்த பொது மக்களும் பெருமளவில் கலந்து கொண்டதால் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் போலீஸார் திணறினார்கள். ஆயிரக்கணக்கான மக்களை கைது செய்ய வழி தெரியாமல் போலீஸார் விழி பிதுங்கினார்கள். 


பின்னர் ஒருவழியாக அனைவரையும் வாகனத்தில் ஏற்றி கல்யாண மண்டபங்களில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர். ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான கிராமங்கள் வழியாக ம.தி.மு.க-வினர் நடைப்பயணமாக சென்று ஆலையின் தீமையை விளக்கி சொன்னார்கள். இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான நெருப்பு மாவட்ட முழுவதும் பற்றி எரிய ஆரம்பித்தது.

ஆலையில் நடந்த விபத்துக்கு விடுதலைப்புலிகள் மீது பழி போட்ட ஸ்டெர்லைட் நிர்வாகம் குறித்த தகவல்களை நாளை பார்க்கலாம்.


thanx -vikatan

ிஸ்கி 1 -தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 1 , 2 ,3-http://www.adrasaka.com/2013/04/1-2-3.html
ிஸ்கி 2  -தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 4, 5 -http://www.adrasaka.com/2013/04/4-5.html

0 comments: