Tuesday, April 30, 2013

ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 11


உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் ஏப்ரல் 2-ம் தேதி தீர்ப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால், அந்த தீர்ப்பு தங்களுக்கு சாதகமானதாக இருக்க வேண்டுமே என்கிற ஆதங்கம் தூத்துக்குடி மக்களிடம் மட்டும் அல்லாமல் இந்த ஆலைக்கு எதிராக குரல் கொடுத்து வரும் அனைத்து சமூக ஆர்வலர்களிடமும் மேலோங்கி இருந்தது.


இந்த சூழ்நிலையில், மார்ச் 23-ம் தேதி மக்கள் ஆழ்ந்த நித்திரையில் இருந்தார்கள். அப்போது தூக்கத்தில் இருந்தவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. கண் எரிச்சல், தலைவலி, வாந்தி, மயக்கம் என அவதிப்பட்டார்கள். ஏதோ தங்களுக்கு மட்டும் இது போல இருக்கிறது என தூக்க கலக்கத்தில் நினைத்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால், நேரம் செல்லச் செல்ல இந்த தாக்கம் அதிகரிக்க தொடங்கியதால் வீடுகளில் இருந்த குழந்தைகள் மூச்சு விடமுடியாமல் அவதிப்பட்டார்கள். இதனால் குழந்தைகளின் இடைவிடாத அழும் சத்தமும், அலறல் சத்தமும் கூடிக் கொண்டே போனது.அப்போதுதான் ஏதோ விபரீதம் ஏற்பட்டு விட்டது என்பதை மக்கள் புரிந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் விசாரிக்க தொடங்கினார்கள். வீட்டுக்கு வெளியே வந்தபோது காற்றில் கரும்புகை சூழ்ந்து நிற்பதை பார்த்தார்கள். அதில் அமிலத்தின் நெடி தூக்கலாக இருப்பதையும் அறிந்த பிறகே ஸ்டெர்லைட் ஆலையில் ஏதோ சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டார்கள்.உடனடியாக மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டவர்களை தூக்கிக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு ஓடினார்கள். எங்கு பார்த்தாலும் பதற்றம் தொற்றிக் கொண்டது. சுவாசிக்க முடியாமல் மூச்சு திணறல் ஏற்பட்டதில் ஐநூறுக்கும் அதிகமானோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வெளி நோயாளிகளாக ஏராளமானோர் முதல் உதவி மட்டும் எடுத்துக் கொண்டு வீடுகளுக்கு திரும்பினார்கள். தனியார் மருத்துவமனைகளிலும் கூட்டம் அலைமோதியது. நச்சுப்புகையின் பாதிப்பு காரணமாக பல இடங்களில் மரங்களின் இலைகள், செடிகள், பூக்கள் நிறம் மாறி கருகிப்போயின. அந்த அளவுக்கு புகையின் தாக்கம் வீரியத்துடன் இருந்தது.
வலுவடைந்த போராட்டம்


ஸ்டெர்லைட் நிறுவனம் அளவுக்கு அதிகமாக கந்தக டை ஆக்சைடு என்ற நச்சுப்புகையை வெளியேற்றியதால் இந்த அளவுக்கு மக்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பது தெரிய வந்தது. இதனால் மக்களுக்கு ஆலை மீதான அச்சம் அதிகரித்தது. 'காற்றில் சிறிதளவு புகையின் அளவு கூடியதற்கே இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படுமானால், ஒருவேளை ஆலையில் பெரிய விபத்து ஏற்பட்டால் தூத்துக்குடி நகரமே காலியாகி விடும் போலிருக்கே' என ஒருவருக்கொருவர் பயத்தை பகிர்ந்து கொண்டார்கள்.இதனால் இந்த நச்சு ஆலைக்கு தடை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுவடைந்தது. மீனவ மக்கள் கடலுக்கு செல்லாமல் ஸ்டிரைக்கில் இறங்கினார்கள். வணிகர்கள் கடைகளை அடைத்து அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆலையை சுற்றிலும் இருக்கும் கிராமங்களை சேர்ந்த மக்கள், தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி ஆலைக்கு எதிரான தங்களின் எதிர்ப்பை அரசுக்கு தெரியப்படுத்தினார்கள்.
புகை வெளியேறியதால் ஏற்பட்ட பாதிப்பை நேரடியாக மக்கள் உணர்ந்ததால் இந்த போராட்டத்தில் அனைவருமே உணர்வு பூர்வமாக கலந்து கொண்டனர். அதனால் இது மிகப்பெரிய போராட்டமாக வெடித்தது. ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வந்து சாலை மறியல் செய்தார்கள். தமிழ் அமைப்புகள், கடலோர மக்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட சமூக அமைப்புகள், மீனவ சங்கங்கள், வியாபாரிகள் சங்கம், தமிநாடு வணிகர் சங்கங்களின் பேரவை மற்றும் ம.தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் மக்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றன. தூத்துக்குடி நகரத்தின் ஒட்டு மொத்த மக்களும் மார்ச் 28-ம் தேதி நடந்த போராட்டத்தில் பங்கேற்றதால் நகரமே ஸ்தம்பித்தது. மக்கள் வன்முறையில் இறங்கிவிடாமல் பாதுகாக்க போலீஸார் திணறினார்கள்.


விழித்துக் கொண்ட தமிழக அரசுதன் எழுச்சியாக ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற போராட்டத்தில், 'ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்ற ஒரே கோரிக்கை மட்டுமே முதல்வருக்கு முன்வைக்கப்பட்டது. தொடக்கத்தில் அரசு இந்த விசயத்தை மிகச் சாதாரணமாகவே பார்த்தது. மக்கள் போராட்டம் என்பது ஓரிரு நாளில் முடிந்து போகக்கூடிய விசயம் தானே. அதோடு எளிதில் மறந்து போகக்கூடியவர்களும் தானே..? அதுவே அரசியல்வாதிகளை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுகிறது.அதனால் இந்த விசயமும் மக்கள் மனதில் இருந்து சீக்கிரமே நீர்த்து போய் விடும் என அதிகார வட்டாரத்தினர் சாதாரணமாக நினைத்தார்கள்.அதனால்தான் முதலில் இந்த விவகரம் பற்றி பேசிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், 'ஆலையில் இருந்து நிர்ணயிக்கப்பட்ட அளவையும் விடவும் அதிகமாக வெளியேறிய புகையே மக்கள் பாதிப்பு அடைய காரணம்' என தெரிவித்தார். பின்னர் அதனை மாற்றிக் கொண்டு, 'மக்கள் மயக்கம் அடையும் அளவுக்கு பிரச்னை ஏற்பட காரணம் என்ன என்பதை ஆய்வு செய்து வருகிறோம்' என பட்டும் படாமலும் பேசினார். அதிகாரிகளும் சரி, ஆலை நிர்வாகமும் சரி, நச்சுப்புகையால் ஏற்பட்ட பாதிப்பை சரிக்கட்ட எடுத்த நடவடிக்கைகள் மக்களிடம் ஆத்திரத்தை ஏற்படுத்தியதால் முன்னிலும் வேகமாக போராட ஆரம்பித்தார்கள்.ஏற்கெனவே, ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்டு இருக்கும் அழிவுகளால் மக்கள் ஆத்திரத்தில் இருந்தனர். கடலுக்குள் ஏற்பட்டு இருக்கும் மாற்றங்கள் மீனவர்களின் வாழ்வாதாரதை பாதிக்க வைத்தது.சுற்றுப்பகுதிகளில் விவசாயம் அழிந்து போனதால் விவசாயிகள் கோபம் அடைந்து இருந்தனர். நிலத்தடி நீர் மஞ்சள் நிறத்துக்கு மாறி,  குடிக்க இயலாமல் போய் இருந்ததால் பொது மக்கள் அவதிப்பட்டனர். இவை அனைத்தும் சேர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களை ஒருங்கிணைத்து மிக்கபெரிய போராட்டத்தில் ஈடுபட வைத்தது. 

ஆலையை மூடக்கோரி மார்ச் 28-ல் பந்த நடக்கும் என போராட்டக் குழுவினர் அறிவிப்பை வெளியிட்டதும், தூத்துக்குடி வரலாற்றிலே முதல் முறையாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. வாகனங்கள் எதுவும் ஓடவில்லை. ஆலைக்கு அருகில் ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். நூறு சதவிகித வெற்றியை பார்த்து அரசு நிர்வாகம் மலைத்துப் போனது. இனியும் பொய் தகவல்களை கொடுத்தால் மேலிடத்தின் கோபத்துக்கு ஆளாக நேரிடுமென உள்ளூர் நிர்வாகிகள் பயந்தார்கள்.


அதனால் மக்களின் நியாயமான போராட்டத்தையும் அதன் வீரியத்தையும் விவரமாக அறிக்கையாக தயாரித்து முதல்வருக்கு அனுப்பினார்கள். மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் ஆலையிலிருந்து வெளியேறிய நச்சுப்புகை நூற்றுக்கணக்கான மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி மருத்துவ சிகிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளியதை சுட்டிக் காட்டியது. இதை அனைத்தையும் பரிசீலித்த முதல்வர் ஜெயலலிதா, மார்ச் 30-ம் தேதி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான உத்தரவை பிறப்பிக்க செய்தார்.    
இந்த அறிவிப்பைகேட்டதும் பட்டாசு வெடித்து கொண்டாடிய தூத்துக்குடி மக்களின் சந்தோசம் நீடித்ததா..? நாளை பார்க்கலாம்...diski - தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 1 , 2 ,3-http://www.adrasaka.com/2013/04/1-2-3.html 2  -தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 4, 5 -http://www.adrasaka.com/2013/04/4-5.html

3.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 6 , 7-http://www.adrasaka.com/2013/04/6-7.htmlதூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 8-http://www.adrasaka.com/2013/04/8.html

0 comments: