Friday, April 12, 2013

அஞ்சலி - பார்வதிதேவி -களஞ்சியம் -பால திரிபுர சுந்தரி - வெளி வராத மர்மங்கள்

சினிமாவே எடுக்கலாம் போலிருக்கிறது. அந்தளவுக்கு திகில் திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது நடிகை அஞ்சலியின் சமீபத்திய நாட்கள். அஞ்சலி எங்கேயோ ரக‌சிய இடத்தில் பதுங்கி விட்டதால் அவரது ரகசியங்கள் ஊர்சுற்றக் கிளம்பிவிட்டன!

இணைய தளங்கள், தினசரிகள், சேனல்கள் எதைத் திருப்பினாலும் அஞ்சலி புராணம் தான் பாடுகின்றன. அஞ்சலி தலை மறைவு, ரகசிய காதலனுடன் ஓட்டம், இயக்குனர் களஞ்சியம் மற்றும் சித்தி பாரதிதேவி மீது சராமாரி புகார் என அஞ்சலியைப பற்றிய செய்திகள் புதிது புதிதாய் முளைத்துக் கொண்டே இருக்கின்றன.
 
 
அஞ்சலியின் கடந்த காலமும் க‌ரடுமுரடானதுதான். ஆந்திராவில் உள்ள ஜகன்னபேட்டா என்ற குக்கிராமத்தில் பிறந்த அஞ்சலிக்கு பெற்றோர் வைத்த பெயர் பால திரிபுர சுந்தரி. அம்மா பார்வதி தேவி. இதுமட்டும் தான் இப்போதைக்கு தெரிகிறது. பெரிய பின்னணி எதுவும் இல்லாததால் ஏழ்மையை சுமந்தே இருந்தது அஞ்சலியின் குடும்பம்

பார்வதிதேவிக்கு இரண்டுமே பெண் குழந்தைகள். தங்கையான‌ பாரதிதேவிக்கு இரண்டுமே ஆண் குழந்தைகள். பாரதிதேவிக்கோ பெண் குழந்தை என்றால் கொள்ளை பிரியம். அதனால், தனது அக்கா மகள் திரிபுர சுந்தரியை ( முழு பெயரையும் சொன்னா மூச்சு வாங்குதுங்க) முறைப்படி தத்து எடுத்து வளர்த்திருக்கிறார்.

சிறுவயதிலேயே திரிபுர சுந்தரிக்கு நடிப்பில் ஆர்வம் அதிகம். எப்படியும் சினிமா நடிகை ஆகியே தீருவேன் என்று சொல்லி வாய்ப்புகளை தேடி அலைய ஆரம்பித்தார். ' நீயெல்லாம் நடிக்கப் போறியாக்கும்' என்று ஏளனம் செய்தது சுற்றமும் நட்பும். அதை எல்லாம் பொருட்படுத்தாமல் வாய்ப்புக்காக காத்திருந்தார் திரிபுர சுந்தரி. அப்போது தான் டைரக்டர் களஞ்சியத்தின் கலைக் கண்ணில் சிக்கினார். 'மிட்டாமிராசு' படத்தை முடித்திருந்த களஞ்சியம், அடுத்ததாக அரசியல் பின்னணி கொண்ட ஒரு காதல் கதையை  திரைச்சித்திரமாக்கும் முயற்சியில் இறங்கினார்.

புதுப்படத்திற்கு, 'சத்தமின்றி முத்தமிடு' என்று தலைப்பும் வைத்தார். தேவயானியின் மூத்த தம்பி மயூர் தான் கதைக்கு நாயகன். இவருக்கு பொருத்தமான ஜோடியாக  18 வயது இளம் பெண்ணை  தேடினார் களஞ்சியம். எத்தனையோ பேர் வந்தார்கள். அத்தனை பேரையும்  சுட்டுவிரலில் தள்ளிவிட்ட களஞ்சியம், 'தமிழ் பொண்ணு சாயல் இருந்தா நல்லா இருக்குமே" என்று தனது விருப்பத்தை அழுத்தமாக சொன்னார். அதன் பிறகும்  நிறைய பெண்களை வரவழைத்து மேக்கப் டெஸ்ட், ஆடியேச‌ன் என சல்லடை போட்டு அலசினார்கள். அப்போது சிக்கிய மின்மினி தான் திரிபுர சுந்தரி.

பாரதிராஜா தனது படங்களுக்கு கிராமத்து குயில்களை தேடும்போது எல்லாம், அவருக்கு துணையாக இருந்தவர் அவரது ஆஸ்தான போட்டோகிராபர் ஒளிப்பதிவாளர் கே.வி. மணி. பாரதிராஜாவிடம் இருந்தவர் என்பதால், களஞ்சியம் தமது படத்தின் நாயகி தேர்வுகளிலும் கே.வி.மணியை பக்கத்தில் வைத்துக் கொண்டார். கே.வி.மணிதான் 'சத்தமின்றி முத்தமிடு படத்தின் நாயகி தேர்வில் திரிபுர சுந்தரியை களஞ்சியத்திற்கு க்ளிக் செய்து கொடுத்தவர்.'இந்தப் பெண்ணுக்குள் ஒரு சோகம் இருக்கிறது. இந்த மாதிரி ஒரு பெண்ணைத் தான் பாரதிராஜா ரொம்ப காலமா தேடிக்கிட்டு இருக்காரு. இவ தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோயினா வருவா. இவள மிஸ் பண்ணாதீங்க சார்" என்று அஞ்சலிக்கு இன்ட்ரோ  கொடுத்தவர், 'இவளுக்கு சின்னதா ஒரு குறையும் இருக்கு.. லேசா மாறுகண்ணு. கேமிரா ஆங்கிள் மூலமா அதை சரி பண்ணிக்கலாம் " என்றும் சொன்னார்.

அவர் இப்படிச் சொன்னதால், தான் ஏற்கெனவே செலக்ட் செய்து வைத்திருந்த பெண்ணை ரிஜக்ட் சொல்லிவிட்டு. திரிபுர சுந்தரியை  'சத்தமின்றி முத்தமிடு' படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்தார் களஞ்சியம். அரை கிலோ மீட்டருக்கு பெயர் வைத்திருந்தால் சினிமாவில் ஜெயிக்க முடியாதே! அதனால், பால திரிபுர சுந்தரியை சுருக்கி, திரிபுரா அல்லது சுந்தரி என பெயரை மாற்றிவிடலாம் என படக்குழு தீர்மானித்தது. இதுபற்றி வளர்ப்புத்தாய் என்று சொல்லப்படும் பாரதி தேவியிடமும் ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். ஆனால், ரெண்டு பெயர்களையுமே களஞ்சியம் ரசிக்கவில்லை. 'ஆங்கிலத்தில் முதல் எழுத்தான 'ஏ" யில் பெயரின் முதல் எழுத்து இருந்தால் நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்" என்று சொன்னார் களஞ்சியம். அப்படி பிறந்தவர் தான் அஞ்சலி.

பெயர் மாற்றம் திரிபுர சுந்தரிக்கும் பிடித்திருந்தது. உற்சாகமாய் படத்தில் நடித்தார். களஞ்சியத்திற்கு பிடித்த கதாநாயகியாக கலக்கினார். ஆனாலும் , சில சிக்கல்கள் வந்தன. 'சத்தமின்றி முத்தமிடு" படத்திற்காக அஞ்சலி பட்ட கஷ்டங்கள் என்ன... அப்படி கஷ்டப்பட்டும் அந்தப் படம் ஏன் வெளிவரவில்லை?   


த்தாரில் இருக்கும் தனது அம்மாவிடம் அஞ்சலி போனில் பேசினார். அதனால், அவர் பத்திரமாக இருப்பதாக சொல்லி புகாரை வாபஸ் வாங்க முயற்சித்தார் அஞ்சலியின் அண்ணன் ரவிசங்கர். அஞ்சலியை ஆஜர்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருக்கிறார் அவரது சித்தி பாரதி தேவி. ''குடும்பச் சூழ்நிலை காரணமாக வீட்டைவிட்டு வெளியேறி இருக்கிறேன். இன்னும் இரண்டு நாளில் துணிச்சலுடன் வெளியில் வருவேன்" என்று போனில் பேசி இருக்கிறார் அஞ்சலி. மணிக்கு ஒரு தரம் அலாரம் அடித்துக் கொண்டே இருக்கிறது அஞ்சலியை பற்றிய செய்திகள்.
இனி அஞ்சலியின் மறுபக்கம் ...


'சத்தமின்றி முத்தமிடு' படத்தின் நாயகியாக அஞ்சலியை தேர்வு செய்தவுடன், படத்திற்கான காஸ்ட்யூம்ஸ் எல்லாம் கொடுத்து நடித்துக் காட்டச் சொல்லி இருக்கிறார்கள். அஞ்சலியின் முதல் நடிப்பு குறித்து கேட்டதற்கு "தொடக்கத்தில் அந்தப் பொண்ணுக்கு நடிக்கவே தெரியலைன்னு தான் சொல்வேன். ஒரு நடிகைக்கான  நளினத்தோடு நடக்கக் கூட தெரியவில்லை. அதைக் கூட நாங்கள் தான் சொல்லிக் கொடுக்க வேண்டி இருந்தது. அவரது நடை, பாவணைகள் எல்லாமே வித்தியாசமாக‌ இருந்தது. சுருக்கமா சொல்லணும்னா, குக்கிராமத்துலருந்து வந்ததால கனவு தொழிற்சா லையின் அங்க அசைவுகள் எதுவுமே தெரியாமல் தான் இருந்தார் அஞ்சலி" என்கிறார்  இயக்குனர் களஞ்சியம்.

இத்தனை குறைகள் இருந்தாலும் அஞ்சலியை ஒதுக்கிவிட மனமில்லாத களஞ்சியம், 'சத்தமின்றி முத்தமிடு' படத்தின் இணை இயக்குனர் பரத்திடம் கதாநாயகன் மயூருக்கும், அஞ்சலிக்கும் நடிப்பை கற்றுக் கொடுக்கும் பொறுப்பை ஒப்ப டைத்தார். நடிப்பு வராத போதும் அஞ்சலி மீது அவர் காட்டிய கனிவிற்கு காரணமே அஞ்சலி முகத்தில்  நிரந்தரமாக குடியேறி இருந்த ஒரு சோகம்.


 இருவரும் தினமும் அஞ்சலிக்கு நடிப்பு பயிற்சி தந்தார்கள். காலை 10 முதல் மதியம் 1 மணிவரை டிரெயினிங் கொடுத் துக் கொடுத்து அஞ்சலியை செதுக்கினார்கள். வாரம் ஒரு காட்சியை நடிக்க வைத்து, அதை களஞ்சியத்திற்கு போட்டுக் காட்டினார் இணை இயக்குனர் பரத்.களஞ்சியத்தை மறந்தாலும் ஒளிப்பதிவாளர் கே.வி.மணியையும் இணை இயக் குனர் பரத்தையும் அஞ்சலியால் மறக்கவே முடியாது. இவர்கள் தானே அஞ்சலியை அரிதார மேடை ஏற்றுவதற்காக அரும்பாடுபட்டவர்கள்.


ஆறு மாத காலம் நடிப்பு பயிற்சி கொடுத்த  பிறகும் கூட அஞ்சலியை கேமரா முன்பாக நிற்க வைக்க தயங்கிய‌ படக் குழு, அவரது நடிப்பில் ஒரு டெலிஃபிலிம் ஒன்றை உருவாக்கியது. அந்த ஒருமணி நேர படம் தான் அஞ்சலிக்கு முதல் படம். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரின் தோற்ற சரித்திரத்தை  டெலி ஃபிலிமாக 'ஆதி அருணாச்சலம்' என்ற பெயரில் களஞ்சியத்தின் நண்பர் எல்.சீனிவாசன் உருவாக்கினார். அதில் திலோத்தமை பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை அஞ்சலிக்கு தந்தார்கள்.


 யாரும் எதிர்பாராத விதத்தில், திலோத்தமை பாத்திரத்தில் நேர்த்தியாக நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார். இதற்கு பிறகு தான், 'சத்தமின்றி முத்தமிடு' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ஓப்பனிங் நன்றாகத்தான் இருந்தது. ஆனால், ஃபினிஷிங் சரியில்லாமல் போனது. அமர்க்களமாய் முத்தமிட கிளம்பி யவர்கள் நிதிப்பற்றாக்குறையால் பாதி வழியில் படுத்துக் கொண்டார்கள். வேறு சில நெருக்கடிகளும் தன்னைச் சுழற்றி அடித்ததால் களஞ்சியத்தால் சத்தமினிறி முத்தமிட முடியவில்லை. பாதி முடிந்த நிலையில் படம் பெட்டிக்குள் முடங்கிக் கொண்டது.


ஆனாலும், அஞ்சலிக்கு சினிமாவில் நடித்து தனது குடும்பத்தின் பொருளாதார சூழலை சமாளிக்க வேண்டிய கட் டாயம். அதனால், களஞ்சியத்திற்காக காத்திருக்காமல், சித்தியும் மகளும் நேரடியாகவே களத்தில் இறங்கி சினிமா வாய்ப்புகளை தேட ஆரம்பித்தார்கள். சினிமா வாய்ப்புகள் மட்டுமில்லாமல், மாடலிங் துறை புகைப்படக்காரர்களை வைத்து, கையில் மடியில் இருந்ததை எல்லாம் செலவு செய்து போட்டோ ஷூட் எல்லாம் எடுத்தார்கள். திரைத் துறைக்குள் அடியெடுத்து வைக்கும் ஒரு பெண் சந்திக்க வேண்டிய இன்னல்களும் இடைஞ்சல்களும் அஞ்சலிக் காகவும் சேர் போட்டு காத்திருந்தது.  அத்தனையும் தாண்டி கலர்ஃபுல் கதாநாயகியாகி ஜொலித்தார் அஞ்சலி.
அது  எப்படி சாத்தியமானது?


- தொடரும் அடுத்து ஒரு ஃபிளாஸ் நியூஸ் 

காணாமல் போன நடிகை அஞ்சலியை 15 நாளில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தமிழக போலீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
நடிகை அஞ்சலியை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசுக்கு உத்தரவிட கோரி அவரது சித்தி  எஸ்.பாரதிதேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆள்கொணர்வு மனுவில், "அஞ்சலி என்கிற பாலா என்கிற திரிபுரசுந்தரி (27), எனது சகோதரி பார்வதிதேவியின் மகள். அஞ்சலியை நான் தத்து மகளாக எடுத்துக்கொண்டேன். இதற்கான நடைமுறைகளை கோடம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் 2003ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் செய்திருக்கிறேன்.

அதிலிருந்து எனது மகளாக அஞ்சலியை கவனித்து வருகிறேன். இந்த நிலையில் சினிமா இயக்குனர் களஞ்சியத்திடம் அஞ்சலியை அறிமுகம் செய்துவைத்தேன். "சத்தமின்றி முத்தமிடு" என்ற படம் அஞ்சலியின் முதல் சினிமாவாகும். இதன் பிறகு தமிழ், தெலுங்கு படங்களில் அஞ்சலி நடித்து வந்தார். தற்போது "பலுப்பு" என்ற தெலுங்கு படத்தில் அவர் நடிக்கிறார். இதற்காக அவர் மார்ச் 31ஆம் தேதி எனது கணவருடன் ஹைதராபாத் சென்றிருந்தார்.

அங்கு தாஸ்பல்லா என்ற ஓட்டலில் இரண்டு பேரும் அறை எடுத்து தங்கி இருந்தனர். கடந்த 8ஆம் தேதி காலையில் என் கணவர் கண்விழித்து பார்த்தபோது, அஞ்சலியைக் காணவில்லை. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.

நான் வளசரவாக்கம் போலீசில் புகார் கொடுத்தேன். சென்னை போலீஸ் கமிஷனரிடமும் 10ஆம் தேதி புகார் கொடுத்தேன். இதுசம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அஞ்சலியை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் அஞ்சலியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அஞ்சுகிறேன். அவர் காணாமல் போய் சில நாட்கள் ஆகிவிட்டதால், உயிருடன் இருப்பாரோ என்ற அச்சம் உள்ளது. எனவே அஞ்சலியை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறியிருந்தார்.


இந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகை அஞ்சலியை 15 நாளில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, நடிகை அஞ்சலி, ஹைதாபாத்தில் உள்ள காவல்நிலையத்தில் இன்று ஆஜராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்படி அஞ்சலி ஆஜராகும் பட்சத்தில் அவரை, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தமிழக காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். 

 நன்றி - விகடன்

1 comments:

கும்மாச்சி said...

சி.பி. அஞ்சலி கதையை உங்களுடைய டச்சுடன் நன்றாக கொடுத்துள்ளீர்கள்.

பாப்பாவை நம்ம போலிஸ் சீக்கிரம் கண்டுபிடிப்பாங்களா?