Saturday, April 13, 2013

பெண்கள் - கோடைக்கேற்ற ஆடை - தேர்வு செய்வது எப்படி?

கோடைக்கேற்ற ஆடை - உள்ளாடை... செலக்ட் செய்யலாமா?!
அவேர்னஸ்
வந்துவிட்டது கோடை. இந்த சீஸனில்... உணவு மற்றும் உடல் ஆகியவற்றில் காட்டும் அதே அக்கறையை... ஆடைகள் விஷயத்திலும் நூறு சதவிகிதம் காட்ட வேண்டியது அவசியம்... குறிப்பாக, உள்ளாடை விஷயத்தில். இல்லையெனில், சருமப் பிரச்னையில் ஆரம்பித்து அந்தரங்கப் பிரச்னைகள் வரை படுத்தி எடுத்துவிடுமே!


பொதுவாக, ''பருத்தி உடைகளே நல்லது. அதிலும் கோடை எனும்போது, பருத்தி ஆடைகளைத் தவிர வேறெதுவும் வேண்டாம்'' என்று சொல்லும் சென்னையைச் சேர்ந்த 'டெர்மடா லஜிஸ்ட்' ஜி.ஆர்.ரத்னவேல்,


''இறுக்கம் தவிர்த்து கொஞ்சம் தளர்வான உடைகளைத்தான் எப்போதுமே அணிய வேண்டும். அப்போதுதான் உடலுக்குத் தேவையான காற்று கிடைக்கும். குறிப்பாக, கோடையில் இத்தகைய ஆடைகளை முக்கியமாக அணிய வேண்டும். வியர்வையில் உடல் நனைந்துவிட்டால், சிலருக்கு அலர்ஜி ஏற்படும். பருத்தி ஆடைகள் வெயிலினால் ஏற்படும் வியர்வையை உறிஞ்சிவிடும். இதனால் வியர்வைக் குழாய் அடைபடாது, வியர்க்குரு வராது, வியர்க்குரு வராததால்... வேனல் கட்டியும் வராது, ஃபங்கஸ் பிரச்னையும் ஏற்படாது. பருத்தி உடைகள் எல்லா பிரச்னைகளையும் ஃபில்டர் செய்துவிடும்'' என்று மருத்துவக் காரணங்களையும் சொன்னார்!சரி, கோடையில் பெண்கள் அணியத் தகுந்த உள்ளாடைகள் எப்படிப்பட்டவைகளாக இருக்கலாம்?


இந்தக் கேள்விக்கு டிப்ஸ்களோடு தன் பதிலைத் தந்தார்... 'நாயுடு ஹால்' நிறுவனத்தின் விற்பனை மேலாளர் பி.சதீஷ்.


''உள்ளாடை அணிவது ஒருவித பாதுகாப்பு உணர்வைத் தரும். உள்ளாடை சௌகரியமாக இருந்தால்தான் அந்த நாள் இனியதாக இருக்கும். பெண்கள் புடவை, சுடிதார், மிடி, சல்வார் கமீஸ், ஸ்கர்ட், ஜீன்ஸ், டி-ஷர்ட் என்று பலவித உடைகளை அணிகிறார்கள். ஆனால், உடலோடு ஒட்டிஇருக்கும் உள்ளாடையைப் பற்றிய தேர்வும் அக்கறையும் வெகு சிலருக்கே இருக்கிறது. ப்யூர் காட்டன், ஹாய்சரி  மெட்டீரியல் மற்றும் பிஸ்லெசி வகை துணிகளில் தயாரிக்கப்படும் உள்ளாடைகளே வெயிலுக்கும் நம்நாட்டு சீதோஷ்ண நிலைக்கும் ஏற்றது. லிக்ரா வகைத் துணிகளில் தயாரிக்கப்படும் உள்ளாடை, குளிர்பிரதேசங்களுக்கு சரியாக இருக்கும், நம் ஊரில் அவை கிடைத்தாலும் அதை அணிவது அத்தனை சௌகரியமாக இருக்காது.


டீன் ஏஜ் பருவத்தினர் டி-ஷர்ட்டுக்கு உள்ளே அணிய ஸ்பெஷலாக சீம்லெஸ் என்கிற ஒரு வகை பிரேசியர் வந்துள்ளது. பொதுவாக எல்லா பெண்களுக்கும் ஏற்ற வகையில் பிரேசியர்கள் மற்றும் அந்தந்த உடைக்கேற்றபடி வசதியாக அணிந்து கொள்ள ஸ்லிப்புகள் வந்துவிட்டன. ஹாஃப் ஸ்லிப்களை குர்தி போன்ற உடைகளுக்கும், இடுப்புக்குக் கீழ் வரைக்கும் உள்ள ஸ்லிப்களை சுடிதாருக்கும் அணியலாம். சரியான உள்ளாடைகளைத் தேர்வு செய்து அணிவது, சௌகரியத்துடன் தன்னம்பிக்கையையும் அளிக்கும்.


ஃபைபர், நைலான் மெட்டீரியலில் தயாரிக்கப்பட்ட ஃபேன்ஸி உள்ளாடைகள், சருமத்தைப் பாதிக்கலாம். 'பேடட்’ மற்றும் 'ஸ்பான்ஞ்’ ரக பிரேசியர்கள் வெயிலுக்கு உகந்ததல்ல. பிரேசியரின் ஸ்ட்ராப் அதிகம் அழுத்தினால், சுட்டெரிக்கும் கோடை அந்த அழுத்தத்தில் அரிப்பை உண்டாக்கிவிடும். எனவே, அளவுக்கு அதிகமான இறுக்கத்தில் உள்ளாடை அணிந்து பழக்கப்பட்டவர்கள், கடைகளில் உள்ளாடைகள் சேல்ஸ் பிரிவில் இருக்கும் பெண்களின் உதவியுடன் உங்களுக்கான சரியான உள்ளாடை அளவைத் தேர்ந்தெடுத்து அணியுங்கள்.


நமது தேவைக்கும் வயதுக்கும் ஏற்ப உள்ளாடைகளைத் தேர்வு செய்வது முக்கியம். பேன்ட்டியிலும் காட்டனே சிறந்தது. இறுக்கம் தவிர்த்து, சரியான அளவு தேர்வு முக்கியம். மலிவான எலாஸ்டிக், லேஸ் வைத்த பேன்ட்டிகள் தவிர்த்து, தரமானதை உபயோகிக்கவும். அதிக எடை இருப்பவர்களுக்கும், சென் ஸிட்டிவ் ஸ்கின் உடையவர்களுக்கும் இந்தக் கோடை யில், தொடை இடுக்குகளில் அரிப்பு, அலர்ஜி உண்டாகக் கூடும். அப்போது பேன்ட்டி அணிவது சிரமமாகலாம். அவர்களுக்கு ஷார்ட்ஸ் போன்ற 'லெக் பேன்ட்டி’ அணி வது நல்ல தீர்வாக இருக்கும்'' என்று சொன்னார்!  


ஆக மொத்தத்தில், கோடைக்குத் துணை காட்டனே!


- உமா ஷக்தி, படங்கள்: ச. இரா.ஸ்ரீதர், ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ், செ.திலீபன்
மாடல்: ஸ்ரீவித்யா

ஆடை உதவி: ஸ்ரீகுமரன் ஸ்டோர்ஸ், தி.நகர்

நன்றி - விகடன்

0 comments: