Monday, April 15, 2013

காவிரி டெல்டாவுக்கு ஆபத்து! ( தஞ்சை - திருவாரூர் - நாகை )


மீத்தேன் அபாயம்

காவிரி டெல்டாவுக்கு ஆபத்து!

திருநாவுக்கரசு

ஐந்து திணைகளில் பாலை, தமிழகத்தில் இல்லை. அந்தக் குறையைப் போக்க, கடந்த சில ஆண்டுகளாகவே தீவிர முனைப்பு காட்டுகிறது மத்திய அரசு. தஞ்சை - திருவாரூர் மாவட்டப் பகுதிகளில் மீத்தேன் வாயு மற்றும் பழுப்பு நிலக்கரி எடுத்துக்கொள்ள, ‘கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிட்என்ற வெளிநாட்டு நிறுவனத்துக்கு அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு.


 காவிரிப் பாசனப் பகுதியின் விவசாயக் கருவூலங்கள், தஞ்சை - திருவாரூர் - நாகை மாவட்டப் பிரதேசங்கள். பசுமையான இந்த மருத நிலப் பகுதிகளை ஒட்டுமொத்த பாலைவனமாக மாற்ற வந்திருப்பதே இத்திட்டம் எனக் குமுறுகின்றனர் காவிரி விவசாயிகள்.

தமிழ்நாடு - பாண்டிச்சேரி கடலோரப் பகுதியில் அமைந்துள்ள காவிரி பெருங்குழிப் படுகையில் உள்ள பழுப்பு நிலக்கரிப் படிவத்தின் ஒரு பகுதியாக இருப்பதே மன்னார்குடி படுகைப் பகுதியில் மீத்தேன் தொகுதி. இந்த நீள்வடிவ பழுப்பு நிலக்கரி மண்டலம் பாண்டிச்சேரியின் பாகூரில் தொடங்கி, நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கம் முதல் ஸ்ரீமுஷ்ணம், ஜெயங்கொண்ட சோழபுரம், மன்னார்குடி மற்றும் தெற்குப் பகுதி வரை பரந்துள்ளது" என்கிறது கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவன ஆய்வறிக்கை.


தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம், திருவிடைமருதூர், ஒரத்தநாடு தாலுகாக்களிலும், திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, நீடாமங்கலம், குடவாசல், வலங்கைமான் தாலுகாக்களிலும் மீத்தேன் வாயுவும் பழுப்பு நிலக்கரியும் எடுக்கப்பட உள்ளன. சுமார் 691 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது இத்திட்டம். மன்னார்குடியைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கவிருக்கிறது. கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிட்.

இந்திய மாநிலங்கள் பலவற்றில் மின் உற்பத்தி கட்டமைப்புக்காகப் பணியாற்றி வருபவர் பொறியாளர் கோ.திருநாவுக்கரசு. இவர்பேரழிப்புக்கு எதிரான பேரியக்கத்தின், ஒருங்கிணைப்பாளர். இத்திட்டம் குறித்து இவரிடம் பேசினோம்.

திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டப் பகுதிகள் அடங்கிய மன்னார்குடி மண்டல நிலப்பகுதிகளில் தரைமட்டத்திலிருந்து 150 மீட்டர் முதல் 600 மீட்டர் ஆழத்துக்கு, சுமார் 760 சதுர கி.மீ.க்கும் அதிக பரப்பளவில் பழுப்பு நிலக்கரிப் படிமங்கள் இருக்கின்றன என்கிறது ஜி...சி. ஆய்வறிக்கை. ஆசியாவிலேயே மிக அதிக அளவு பழுப்பு நிலக்கரி இங்கே இருக்கின்றனவாம்


 மன்னார்குடியை மையமாகக் கொண்டு திருவாரூர் - தஞ்சை மாவட்டப் பகுதிகளில் சுமார் 690 சதுர கி.மீ. பரப்புக்கு மீத்தேன் வாயு மற்றும் பழுப்பு நிலக்கரி எடுத்திட வரைவுத் திட்டம் தயாரித்துள்ளது அந்த நிறுவனம்" என்றவரிடம், மீத்தேன் வாயு எரிபொருளுக்கும் பழுப்பு நிலக்கரி மின் உற்பத்திக்கும் பக்கபலமாக இருக்ககும். இரண்டுமே நமக்குஇப்பதேவைதானே?" எனக் கேட்டோம்.


இந்தப் பழுப்பு நிலக்கரிப் படிமங்கள் அதிக நுண் துளைகள் கொண்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. அந்த நுண்துளைகளுக்குள் அடைபட்டிருக்கும் மீத்தேன் வாயுவை வெளியேற்றிய பின்னரே, பழுப்பு நிலக்கரிப் படிமங்களை வெட்டியெடுக்க முடியும். அப்போது தரைமட்டத்துக்குக் கீழே பூமிக்கடியில் பெருமளவு தண்ணீரை முதலில் வெளியேற்றியாக வேண்டும். இயற்கையின் கொடையான நிலத்தடி நீரை முற்றிலும் வெளியேற்றி விட்டால், தஞ்சை - திருவாரூர் - நாகை மாவட்டங்களின் வயல்வெளிகள் அனைத்துமே கருகிப் போய்விடும். விவசாய விளை நிலங்களுக்கும், பொதுமக்களுக்கும் ஜீவாதார பாசன நீரும், குடிநீரும் கிட்டாது போய்விடும். வளமான நிலப்பரப்புப் பாலைவனமாக்கி விடும்!" என்கிறார் இவர்!


மேற்கு வங்கத்தின் பர்த்வான் மாவட்ட தாமோதர் பள்ளத்தாக்கில் ராணிகஞ்ச் பகுதியில் சுமார் 210 சதுர கி.மீ. பரப்பளவில் மீத்தேன் வாயு மற்றும் நிலக்கரியை எடுத்து வருவதாகச் சொல்கிறதே கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி நிறுவனம்என்று பேரழிவுக்கு எதிரான இயக்கத்தின் தலைவர் அத்திவெட்டி லெனினிடம் கேட்டோம்.

அங்கு விளைநிலங்களும், பொதுமக்கள் வசிப்பிடங்களும் மிகமிகக் குறைவு. இங்கு அப்படி அல்ல. ஆசியாவிலேயே இதுபோன்றதொரு மிகப்பெரிய பரப்பளவுக்கு சமவெளி வேளாண் பிரதேசம் வேறெங்குமே இல்லை என்பதுதான், தஞ்சை - திருவாரூர் - நாகை மாவட்டங்களின் காவிரி டெல்டாவின் மாபெரும் தொன்மை!" என்கிறார் லெனின்.


தரைமட்டத்துக்குக் கீழே (core drilling) உள்ளீட்டுத் துரப்பணத் துளைகள் மூலமாக, துரப்பணக் குழாய் கிணறுகள் அமைத்து, நிலத்தடி நீரை அருகருகே இருக்கும் பாசன வாய்க்கால்கள் மூலமாக வெளியேற்ற உள்ளனர். மீத்தேன் வாயு மற்றும் நிலக்கரிப் படிமங்களிலிருந்து வெளியேற்றப்படும் நீர், கடல்நீரைவிட ஐந்து மடங்கு உப்புத்தன்மை கொண்டது. அது வாய்க்கால் வழியாகச் செல்லும் போது விளைநிலங்களின் படிந்திருக்கும் அற்புதமான நுண்ணுயிர்களும், பயிர்களும் மடிந்து போகும். அப்புறம் தமிழகத்தின் நெற்களஞ்சியம் பாலைவனமாவதைத் தவிர வேறு வழியில்லை."

திருவாரூர் மாவட்டத்தில் 38 இடங்களிலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 12 இடங்களிலும் உள்ளீட்டுக் குழாய்க் கிணறுகள் அமைக்கப்பட உள்ளன. கடந்த நான்கைந்து மாதங்களாகவே இதுகுறித்து எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டங்களும், பொதுக் கூட்டங்களும் மன்னார்குடி மற்றும் தஞ்சாவூரில் நடைபெற்று வருகின்றன. காவிரி பாசனப் பகுதிக்குள் இத்திட்டத்தை முற்றிலுமாகக் கைவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்டத் துணைச் செயலாளர் பி.ஆர். பாண்டியன்.


ஏற்கெனவே காவிரி பொய்த்துப் போச்சு. இப்போது இதுவேற எங்களை வதைக்குது! விளைநிலங்களும், பொதுமக்களும் அடர்த்தியாக உள்ள பகுதியில் இத்திட்டத்துக்கு முன்னுரிமை அளித்துள்ளது முதல் குற்றம். பொதுமக்களுக்கு மருந்தில்லா நோய்கள் பரவக்கூடிய அபாயம் ஏற்படும். வெளியேற்றப்படும் நீரில் உள்ள மிக அதிகளவு உப்பு, கதிரியக்கக் கழிவுகள் மற்றும் ரசாயனக் கழிவுகளால் சுமார் இருபது லட்ச ஏக்கர் வயல்வெளிகளிலும் பூண்டுச் செடிகள் முளைக்கக் கூட லாயக்கற்றதாகப் போய்விடும். எங்கள் மூன்று மாவட்ட மக்களின் ஒரே வாழ்வாதாரமே விவசாயம் தான். அதுலயும் மண்ணை அள்ளிப் போட்டா நாங்க எங்கே போவோம்" என்கிறார் பி.ஆர். பாண்டியன்.

நன்றி - கல்கி