Thursday, March 14, 2013

பரதேசி

அதர்வா, வேதிகா, தன்ஷிகா மற்றும் பலர் நடிக்க பாலா இயக்கி இருக்கும் படம் பரதேசி. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, செழியன் ஒளிப்பதிவு செய்ய, வைரமுத்து பாடல்களை எழுதி இருக்கிறார். படத்தினை எழுதி, தயாரித்து இருக்கிறார் பாலா.

சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் என வித்தியாசமான கதைகளங்களை எதார்த்தமாக படமாக்கி வெற்றிக் கண்டவர் பாலா. அவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த அவன் இவன் திரைப்படம் மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனால் மீண்டும் தனது எதார்த்த களத்திற்கே திரும்பி இருக்கிறார் பாலா.

பரதேசி திரைப்படம், 'எரியும் பனிக்காடு' என்ற நாவலை தழுவி, அதில் கொஞ்சம் தனது கற்பனைகளை புகுத்தி இருக்கிறார் பாலா. இப்படத்தின் படப்பிடிப்பு சிவகங்கை,  மானாமதுரை, மூணாறு, பெரியகுளம் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள்.

பஞ்சம் பிழைக்க தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு சென்ற பரதேசி கூட்டத்தினரின் கதையினை எதார்த்தமாக படமாக்கி இருக்கிறார். பரதேசி படம் குறித்து பாலா "'நீங்கள் எதிர்பார்க்காத விஷயங்கள்தான் இருக்கும். கிட்டத்தட்ட என்னைத் தவிர, கேமராமேன் செழியன் முதல் எடிட்டர் கிஷோர் வரைக்கும் எல்லோரும் இதில் புதுசு.

முதல்முறையா என் படத்தில் வைரமுத்து பாடல்கள், ஜி.வி.பிரகாஷ் இசை. 25 வயசுக்கு 25 படங்கள் முடிச்சு நிக்கிறான் ஜி.வி.பிரகாஷ். அவனுக்குள்ள இருக்கிற பணிவும் பக்குவமும் பிரமிக்கவைக்குது. 'பரதேசி’யில பிரமாதப்படுத்தி இருக்கான்.

வைரமுத்து சார்... ஜி.வி.பிரகாஷின் வயசைக் காட்டிலும் கவிஞரின் அனுபவத்துக்கு வயசு பெருசு. அதுவும் இந்தப் படத்தின் பாடல்கள் ஒவ்வொண்ணும் கதை பேசணும். மேற்குத் தொடர்ச்சி மலை அடி வாரத்துல கெடந்தவன்தான் அதை எழுத முடியும். மொத்தப் படத்தையும் முடிச்சுட்டு வந்து, எடிட் பண்ணிப் போட்டுக் காட்டித்தான் பாடல்கள் கேட்டேன். மூணு மாசமாப் போராடி எடுத்துட்டு வந்த கதைக்கு மூணே வாரத்தில் வலி கூட்டிட்டார்." என்று தெரிவித்து இருக்கிறார்.

படப்பிடிப்பு துவங்கியவுடன், படத்தினைப் பற்றிய எந்த ஒரு செய்தியையும், புகைப்படத்தினையும் வெளியே வராமல் பார்த்துக் கொண்டார்கள். படத்தின் FIRST LOOK புகைப்படங்கள், டிரெய்லர் என பார்த்தவுடன் எதிர்ப்பார்ப்பு எகிறியது.

அதுமட்டுமன்றி, இப்படத்தின் சில காட்சிகளுக்காக சில ஏக்கர் தேயிலை தோட்டத்தினை வாங்கி, அங்கு செட் போட்டு படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள். 1930ல் நடைபெறும் கதை என்பதால் படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் மிகவும் மெனக்கெட்டு இருக்கிறார்கள். படத்தில் வரும் ஒரு காட்சிக்காக மின்கம்பம், வீடு என எதுவுமே இல்லாத இடத்தினை தேடி அங்கு 6 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள்.

அதர்வா, வேதிகா, தன்ஷிகா என அனைவருக்கும் விருது கிடைக்கும் என்று தெரிவித்து இருக்கிறார் பாலா. அதுமட்டுமன்றி இப்படத்தினைப் பார்த்த இந்தியின் முன்னணி இயக்குனர் அனுராக் கைஷ்யாப் " பாலாவின் 'பரதேசி' படத்தினை பார்த்தேன். நெகிழ்ந்து விட்டேன்.. அவரது இயக்கத்தில் வெளியான படங்களில் பெஸ்ட் இது தான்" என்று தெரிவித்தோடு, வட இந்தியாவில் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பரதேசி படத்தினை வெளியிட இருக்கிறார்.

பரதேசி வெளிவரும் முன்பே கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி இருக்கிறது. நீண்ட நாட்களாக தேதி அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டு வந்த பரதேசி படத்தினை JSK பிலிம்ஸ் நிறுவனம் வாங்கி மார்ச் 15ம் தேதி வெளிவரும் என அறிவித்து இருக்கிறது.

முதன் முறையாக பரதேசி படத்தினை விளம்பரப்படுத்த அனைத்து காட்சிகள் உருவான விதத்தினையும் படமாக்கி இருக்கிறாராம் பாலா. அதனை வைத்து படத்தினை பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். 'பரதேசி' படத்திற்காக பாலாவுக்கு தேசிய விருது நிச்சயம் என்று சொல்கிறது கோலிவுட்.

thanx - vikatan

2 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பரதேசி....


விமர்சனம்ன்னு வந்தா...

கும்மாச்சி said...

சி.பி. படத்திற்கு எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகவே இருக்கிறது, படம் வரட்டும் பார்ப்போம்.