Friday, November 06, 2015

என்னுடைய மனைவியாகப் போற கெளதமி/அஜித் ரசிகை/-விஜய்ரசிகர்/இணைய விமர்சகர் பிரசாந்த் பேட்டி

படம்: எல். சீனிவாசன்
படம்: எல். சீனிவாசன்
“என்ன பிரதர்... உங்க தியேட்டர்ல எந்தப் படத்தையும் ஓட்ட முடியாது போலயே" என்று சும்மானாச்சுக்கும் சொன்னால் "அய்ய்யோ... ஜி. அப்படியெல்லாம் எதுவும் இல்லை. ஏதோ நல்ல சினிமாக்களை சாதாரண ரசிகனிடம் கொண்டுசெல்லும் ஒரு சாதாரண விமர்சகன் நான்!" என்று பதறி கைகுலுக்குகிறார் பிரசாந்த்.
இன்றைய தேதியில், நெட்டிசன்கள் மத்தியில் 'மோஸ்ட் வான்டட்' சினிமா விமர்சகர். யூடியூப்பில் இவரின் விமர்சனங்களைப் பார்த்துவிட்டுத்தான் இளைஞர்கள் பலர் சினிமாவுக்கு டிக்கெட்டைக் ‘க்ளிக்'குகிறார்கள் என்றால் அதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் இவர் விமர்சனங்களின் வீரியத்தை!
"யூடியூப்ல‌ இருந்து முதல்ல கிடைச்ச‌ வருமானம் சினிமா டிக்கெட் எடுப்பதற்கே பத்தாது. இன்னைக்கு டிக்கெட் எடுத்தது எல்லாம் போக, என்னுடைய தினசரி செலவுகளைக் கவனிச்சுக்குற அளவுக்கு வருமானம் வருது.
2010-ல் ‘ஈரம்' படத்துக்கு விமர்சனம் பண்ணினேன். அந்த விமர்சனத்தை நானே பார்க்குறதுக்குக் கேவலமா இருந்துச்சு. அதனால‌ உடனே அழிச்சுட்டேன். அப்புறம் கொஞ்ச காலம் விட்டு, முறையா விமர்சனம் பண்ண ஆரம்பிச்ச படம் ‘ஆயிரத்தில் ஒருவன்'.
ரெண்டு தடவை அந்தப் படத்தைப் பார்த்துட்டு, வெப் கேமிரா, ஹெட் போன் மட்டும் வைச்சிக்கிட்டுப் பேசினேன். அப்போது விமர்சனமாக இல்லாமல் படத்தைப் பற்றிப் பேசுவோம்னு பேசியதுதான். 4000 பேர் பார்த்திருந்தாங்க. அப்போ எல்லாம் 100 பேர் பார்த்தாலே பெரிய விஷயம்.
படங்கள் மட்டும்தான் வெள்ளிக்கிழமை வெளியாகணும்னு ஏதாவது சட்டம் இருக்கா என்ன. நான் வெள்ளிக்கிழமைதோறும் விமர்சனம் பண்ணலாம்னு முடிவெடுத்தேன்.
முதல்ல 3 வருஷங்களுக்கு எனக்கு எந்த ஒரு வருமானமும் கிடையாது. வீடியோ விமர்சனத்துக்கு வரும் வரவேற்பைப் பார்த்து ஒரு போதை மாதிரி ஆகிடுச்சு. இனிமேல் விடக் கூடாதுன்னு முடிவு பண்ணி, தொடர்ச்சியா விமர்சனம் பண்ண ஆரம்பிச்சுட்டேன்.
ஒரு படத்தை விமர்சிக்கிற அளவுக்கு உன்கிட்ட என்ன தகுதி இருக்குன்னு நீங்க கேட்கலாம். நானும் ஒரு ரசிகன்தானே! அது போதாதா? ஒரு சாதாரண ரசிகனா நானும் பல‌ விமர்சனங்களைப் படிச்சிருக்கேன். சினிமாவுக்கும் ஒரு ரசிகனுக்கும் பாலமாக இருக்கணும்னு விரும்புறேன். பேச்சு வழக்குத் தமிழ்ல‌ பேசி ஒரு படத்தைப் பற்றி மக்களுக்குப் புரிய வைக்கணும்கிறதுதான் என் எண்ணம். திரைப்பட விமர்சனம் பத்தி எனக்கு நானே வகுத்து வெச்சிருக்கிற ஒரே ஒரு விதி இது மட்டும்தான்!
யூடியூப்பில் வரும் ரசிகர்களின் கருத்துகள் மூலமாவே, நான் என்னுடைய விமர்சனம் செய்யும் திறனை மெருகேத்திக்கிறேன். அவர்கள் சொன்னதை எல்லாம் எடுத்துக்கொண்டு, அதற்குள் என்னுடைய பாணியையும் கொண்டு வந்து ஒரு வடிவத்துக்குக் கொண்டு வந்திருக்கேன்.
விமர்சனம் பண்ண ஆரம்பிச்ச காலத்துல‌, ட்விட்டர்ல‌ அந்தப் படம் சம்பந்தப்பட்டவங்களுக்கு ‘ப்ளீஸ் வாட்ச் மை ரெவ்யூ'ன்னு போஸ்ட் பண்ணுவேன். அப்படித்தான் செல்வராகவன் சாருக்கும் போஸ்ட் பண்ணினேன். "கீப் அப் யுவர் குட் வொர்க்"ன்னு ரிப்ளை பண்ணார். நம்முடைய விமர்சனத்துக்கு திரையுலகில் ஜெயித்த ஒருவர் ஊக்குவிக்கிறார்னு சந்தோஷப்பட்டேன். அதுக்குப் பிறகு நிறைய பேர் பாராட்டிட்டாங்க.
இதுவரைக்கும் பிரபலங்கள் என்னைப் பாராட்டத்தான் போன் பண்ணியிருக்காங்க. யாருமே திட்டுறதுக்கு போன் பண்ணலை. எனக்குப் பிரபலங்கள் தரும் கருத்துகளை விட, என்னை ஃபாலோ பண்றவங்க‌ தரும் கருத்துகள்தான் மிகவும் உதவியா இருக்கு.
ஆனா இப்பல்லாம் என்னை யாராவது பாராட்டுனா எனக்கு கொஞ்சம் கேராத்தான் இருக்கு. ஆரம்பத்துல விமர்சனம் பண்றதுங்கறது ஒரு ஜாலி. இன்னைக்கு ஏதோ பொறுப்பு வந்தது மாதிரி ஒரு ஃபீல்!
பெரிய பட்ஜெட் படங்களைக் கொஞ்சம் தைரியாமா இறங்கி அடிக்கலாம். என்னுடைய விமர்சனத்தால அந்தப் படங்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் வந்துடப் போறதில்லை.
என்னுடைய விமர்சனங்களை வைச்சுத்தான் படங்கள் ஓடுதுங்கிற‌ மனநிலை எப்ப எனக்கு வருதோ, அன்னைக்கு நான் காணாமல் போய்டுவேன். சின்ன படத்தைப் பாராட்டுறதுக்கும், பெரிய படங்கள்ல‌ இருக்கும் குறையைச் சொல்றதுக்கும் இங்கு ஆளில்லைங்கிறது தான் உண்மை.
எனக்கு ஒரு படத்தைப் பத்திப் பேச எந்த அளவுக்கு உரிமை இருக்கோ, அதே போல மத்தவங்களுக்கும் என் விமர்சனத்தைப் பதில் விமர்சனம் பண்ண‌ உரிமை இருக்குங்கிறதை நான் எப்பவும் உணர்ந்தே இருக்கேன்.
‘இவ்வளவு படங்களுக்கு விமர்சனம் பண்ணிட்டீங்க. நீங்களே ஏன் ஒரு படம் பண்ணக் கூடாது'ன்னு பலரும் கேட்கிறாங்க.
சும்மா ஒரு படம் பண்ணலாம்னா அதை என்னோட‌ பணத்துலதான் பண்ணுவேன். ஒரு குறும்படம் எடுத்து, அது எனக்கே பிடிச்சிருந்தா மட்டும்தான் சினிமாவுல கால வைப்பேன்.
மல்லுவுட்ல‌ ஏன் இந்த அளவுக்கு நல்ல படங்கள் வருதுன்னா அங்க அவங்க தங்களோட‌ வாழ்க்கையில‌ இருந்து கதையை எடுக்கிறாங்க‌. ‘ப்ரேமம்' ஒரு சின்ன கதையை வைச்சுக்கிட்டு எவ்வளவு அழகா திரைக்கதை பண்ணியிருந்தாங்க. கடந்த 3 வருஷத்துல‌ மலையாளப் படங்களோட‌ வெற்றியைக் கணக்கிட்டா, தமிழ்ப் படங்களைவிட அதிகம். ஆனா அவங்க‌ வியாபாரம் நம்மை விட சின்ன‌து. நம்ம‌ தமிழ்ப் படம் இங்கு 150 நாள் ஓடுறதில்லை. ஆனா, ‘ப்ரேமம்' படம் சப்-டைட்டில் போட்டு 150 நாள் ஓடுது.
அப்படின்னா என்ன பிரச்சினை இங்க? நாம‌ வியாபாரத்துல‌ மட்டுமே கவனம் செலுத்தி, சினிமாவை மறந்துட்டோம். நான் படம் பண்ணினா நிச்சயமா ‘வெற்றிநடை போடுகிறது'னுல்லாம் போலியா விளம்பரம் செய்ய மாட்டேன்.
நான் நல்ல சினிமாவின் ரசிகன். எந்த நடிகருக்கும் அல்ல! ஆனா, என் பேர்ல நிறைய மீம்ஸ், போலியான செய்திகள் எல்லாம் வருது. ஆரம்பத்துல நான் இதுக்கெல்லாம் கவலைப்பட்டேன். அப்புறம் போகப் போகத்தான் புரிஞ்சுது. ‘மாப்ள.. நாமளும் பிரபலம் ஆகிட்டோம்ல!ன்னு மனச தேத்திக்கிட்டேன்" என்று சொல்லி நிறுத்தினார் பிரசாந்த்.
அதற்குப் பிறகு அவர் வைத்ததுதான் ட்விஸ்ட்.
"என்னுடைய மனைவியாகப் போற கெளதமி முதன்முதலில் பார்த்ததே என்னுடைய ‘என்னை அறிந்தால்' விமர்சனம்தான். அவங்க அஜித் ரசிகை. நான் அந்தப் படத்தின் விமர்சனத்தில் படம் சரியில்லைன்னு சொல்லியிருந்தேன். உடனே ‘என்னை வேண்டாம்'னு சொல்லிட்டாங்க‌. அப்புறம் 2 நாள் கழிச்சு, என்னோட விமர்சனத்தை தீர ஆராய்ஞ்சு, எனக்கு ஓ.கே. சொல்லிட்டாங்க.
நான் இப்போ எப்படி இருக்கிறனோ அப்படியே ஏத்துக்குற பொண்ணா இருந்தா கல்யாணம் பண்ணிக்கிடலாம்னு இருந்தேன். ஏன்னா... நம்ம வாழ்க்கையும் குறைகளோடும் நிறைகளோடும் நகர்ற ஒரு சினிமாதானே!"
வெல்டன் மா..!


-தஇந்து

0 comments: