Tuesday, November 24, 2015

சிறுவனை மலம் அள்ள வைத்த ஆசிரியை...

சாதிய வன்கொடுமைகள் தமிழகத்தில் அதிகரித்து வருவதாக எழுப்பப்படும் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் இரண்டு சம்பவங்கள் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
சம்பவம் - 1
தீண்டாமை ஒரு பாவச் செயல்...
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்...
தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல்!

- என சமத்துவத்தைச் சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியை, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தையின் பிஞ்சு விரல்களால் மலத்தை அள்ளவைத்த கொடுமை நாமக்கல் மாவட்டம் ராமாவரம் நகராட்சிப் பள்ளியில் நடந்துள்ளது.
காலையில் பள்ளிக்கூடம் ஆரம்பித்த சிறிது நேரத்தில் 2-ம் வகுப்பு ஆசிரியை விஜயலட்சுமி, தன் வகுப்பு மாணவன் சசிதரனை அழைத்தார். ஆத்திச்சூடியை ஒப்பிக்கச் சொல்லி அழைக்கிறார் என்றுதான் சசிதரனும் சென்றான். ஆசிரியை அவனுக்கு வைத்த வேலை... அநீதியானது. இன்னொரு மாணவனின் மலத்தை அள்ள வைத்திருக்கிறார் இந்த ஆசிரியை. இந்த விஷயம் வெளியே தெரியவர, பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். பின்னர் அவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுபற்றி சசிதரனின் தந்தை வீராசாமியிடம் கேட்டபோது, ‘‘நாங்க ராமாவரம் காலனியைச் சேர்ந்​தவங்க. நான் கோழிப் பண்ணையில லோடுமேனா இருக்கேன். என் மனைவி பேரு ரேவதி. எங்களுக்கு பரணிதரன், சசிதரன், கிருபாகரன் என மூணு பசங்க. மூணு பேரும் எங்க ஊருக்குப் பக்கத்தில் இருக்கிற ராமாவரம் புதூர் நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கூடத்தில படிக்கிறாங்க. இதில் நடுப்பையன் சசிதரனுக்கு ஏழு வயசு. 2-ம் வகுப்பு படிக்கிறான். இவனுக்குத்தான் இந்த அநீதி நடந்திருக்கு.
கடந்த 12-ம் தேதி மாணவன் முகமது ஷெரீப் வகுப்பறையில மலம் போயிருக்கான். என் பையன் சசிதரனைக் கூப்பிட்டு, அதைக் கையில் அள்ளி ஜன்னல் வழியா போடச் சொல்லி இருக்காங்க அந்த விஜயலட்சுமி டீச்சர். அவனும் கையில் அதை அள்ளி ஜன்னல் வழியா போட்டுட்டான். உணவு இடைவேளையில் இதைச் சொல்லி எல்லா மாணவர்களும் சசிதரனைக் கிண்டல் செஞ்சிருக்காங்க.
அதனால சாப்பிடாம இருந்து, சாயங்காலம் வீட்டுக்கு வந்ததும் என் மனைவியிடம் சொல்லி அழு​திருக்கான். இரவும் சாப்பிடாம அழுதுகொண்டே தூங்கிட்டான். விடியற்காலை 5 மணிக்கு நான் வந்ததும் என்னிடம் சொல்லி அழுதான்.
பள்ளி திறந்ததும் நானும் என் மனைவியும் சென்று விஜயலட்சுமி டீச்சரிடம் கேட்டோம். அவுங்க அதட்டலாகவும், மிரட்டும் தொணியிலும் பேசினாங்க. அந்த விஜயலட்சுமி டீச்சர் பள்ளிக்கூடம் இருக்கும் ராமாவரம் புதூரைச் சேர்ந்த உயர் சாதி சமூகத்தைச் சேர்ந்தவர். சாதிய கண்ணோட்​டத்துலதான் இப்படிச் செய்திருக்​காங்க. எங்க ஊர்க்காரங்க அனைவரும் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டோம்.
அதன் பிறகு கல்வித் துறை அதிகாரிகள் வந்து அனைத்துக் குழந்தை​களிடமும் விசாரிச்சாங்க. நடந்தது அனைத்தும் உண்மைனு எல்லாருக்​கும் தெரிஞ்ச பிறகும் அந்த விஜயலட்சுமி டீச்சர், ‘அந்தப் பையனுக்கு டி.சி-யைக் கொடுத்து அனுப்புங்க’னு எகத்தாளமாச் சொன்னாங்க. பிறகுதான் காவல் துறையிடம் புகார் கொடுத்தோம். இப்போ அவங்க தரப்பினரிடம் இருந்து எங்களை மிரட்டறாங்க. எனக்கோ, என் குழந்தைகளுக்கோ ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தா அதற்கு அவங்கதான் பொறுப்பு’’ என்றவர், ‘‘நீங்க சசிதரனிடமே கேட்டுப் பாருங்க, அவனே சொல்வான்’’ என்றார்.
மாணவன் சசிதரன், ‘‘நான் டூ பாத்ரூம் போகல. முகமது ஷெரீப்தான் போனான். அவன் போனதற்கு என்னைக் கூப்பிட்டு அள்ளச் சொன்னாங்க. நான் அதை அள்ளி ஜன்னல் வழியா போட்டேன். அதைப் பார்த்து எல்லா பசங்களும் சிரிச்சாங்க’’ என்று பரிதாபமாகச் சொன்னான். .
ஆசிரியை விஜயலட்சுமியின் உறவினர்கள், ‘‘ஒரு பையன் செய்த தவறுக்காக இன்னொரு பையனை எப்படி தண்டிப்பாங்க? லாஜிக்கே இல்லாம அந்தக் காலனிக்காரங்க டீச்சர் மேல பழி போடுறாங்க... இப்போ சாதிப் பிரச்னை தமிழகம் முழுக்க விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில் இந்தப் பிரச்னையைப் பெரிசு பண்ணப் பாக்கறாங்க’’ என்றனர்.
முகமது ஷெரீப்பின் தந்தை அப்துல்லா, ‘‘என் பையனிடம் விசாரிச்சேன். அவன்தான் டூ பாத்ரூம் போயிருக்கிறான். அதை சசிதரன் என்ற மாணவனை அள்ளச் சொல்லி இருக்கிறார் விஜயலட்சுமி டீச்சர். எங்களுக்கு போன் பண்ணி சொல்லி இருந்தால்கூட நாங்க போய் சுத்தம் செய்திருப்போம்’’ என்றார். 
முகமது ஷெரீப்பும், ‘‘நான்தான் டூ பாத்ரூம் போனேன். ஆனா, சசிதரனை அள்ளச் சொன்னாங்க டீச்சர்’’ என்றார்.
இதுபற்றி நாமக்கல் எஸ்.பி-யான செந்தில்​குமார், ‘‘அந்த வகுப்பறையில் இருந்த அனைத்துக் குழந்தைகளிடமும் விசாரித்ததில் தவறு நடந்துள்ளது உண்மை என்பது உறுதிசெய்யப்​பட்டது. பிறகு அந்த ஆசிரியை விஜயலட்சுமி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து, நடவடிக்கை எடுக்கப்​பட்டுள்ளது’’ என்றார்.
சம்பவம் - 2
டையைக் கழற்றச் சொல்லி அவமானப்​படுத்தியதால் ஓர் இளைஞன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இது.
நெல்லை மாவட்டம், பழவூர் அருகே பிள்ளையார் குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் பொன் தாமரைச்செல்வன். தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து வந்த அவர், திடீரென தற்கொலை செய்துகொண்டார். பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த சிலர் சாதி ரீதியாக அவரைத் துன்புறுத்தி, அவமானப்படுத்தியதே அவரது தற்கொலைக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
தங்களின் ஒரே மகனான பொன்தாமரைச் செல்வனை பறிகொடுத்துவிட்டு கதறி அழுதுகொண்டிருந்த தந்தை ராஜதுரை, தாய் சரோஜா ஆகியோரைச் சந்தித்துப் பேசினோம். ராஜதுரை, ‘‘என் பையனும் எதிர்வீட்டு ஐயப்பனும் நண்பர்கள். கடந்த 8-ம் தேதி ரெண்டு பேரும் வாய்க்காலில் குளிக்கப் போயிருக்காங்க. அப்போ, ஆவாரைகுளத்தைச் சேர்ந்த இளைஞர்கள், அவங்களுக்குள்ளே சண்டை போட்டிருக்காங்க. அவங்களை என் பையனும், ஐயப்பனும் சமாதானம் செஞ்சிருக்காங்க. அதுல ஒரு தரப்பு கோபம் ஆகியிருக்கு. அவங்க, ‘நேத்து சண்டையில ஒரு செல்போனும், மோதிரமும் காணாமல் போயிடுச்சு. அதைப் பத்தி விசாரிக்கணும்’னு சொல்லி கூட்டிட்டுப் போயிருக்காங்க. அங்கே என் மகனோட உடுப்பு எல்லாத்தையும் அவுத்து அடிச்சு அசிங்கப்படுத்தி இருக்காங்க. அந்த வேதனையில வீட்டுக்கு வந்த உடனே ஃபேன்ல தூக்குப்போட்டுத் தொங்கிட்டான்’’ என்று கண்ணீருடன் விவரித்தார்.
‘‘எம்பையன் யாருக்கும் எந்தக் கேடும் நினைக்காதவன். ‘படிப்பு முடிஞ்சதும் வேலைக்குப் போயி உன்ன உக்கார வெச்சி சாப்பாடு போடுவேம்மா’னு அடிக்கடிச் சொல்வான். எந்த வம்புதும்புக்கும் போகமாட்டான். அவனை அடிச்சு அசிங்கப்படுத்தித் தூக்குமாட்ட வெச்சிட்டாங்களே...’’ என கதறி அழுதார் தாய் சரோஜா.
வழக்கறிஞர் செம்மணியிடம் கேட்டோம். ‘‘பொன் தாமரைச்செல்வன் உடலை பழவூர் ஸ்டேஷனுக்கு  போலீஸ் தூக்கிட்டுப் போயிட்டாங்க. தங்கள் மகனின் மரணத்துக்கு ஆவாரைகுளத்தைச் சேர்ந்த தங்கராஜ், இளங்கோ, கலைசிகாமணி, இளையராஜா, பால்பாஸ்கர், மிராசு ஆகியோர்தான் காரணம் என்று பொன் தாமரைச்செல்வனின் தந்தை ராஜதுரை புகார் கொடுத்தார். அதனை பதிவுசெய்ய போலீஸார் மறுத்துட்டாங்க. ராஜதுரையிடம், ‘என் பையன் செலவுக்குப் பணம் கேட்டான். நான் கொடுக்காததால தூக்குப்போட்டு தற்கொலை செஞ்சுக்கிட்டான்’ என்று எழுதிக் கொடுக்குமாறு நிர்ப்பந்தம் செஞ்சிருக்காங்க’’ என்று கூறுகிறார்.
உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்திய போதிலும், நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன், நெல்லை சரக டி.ஐ.ஜி-யான அன்பு ஆகியோரிடம் மனுக் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
மதுரையைச் சேர்ந்த ‘எவிடென்ஸ்’ அமைப்பினர், கள ஆய்வுசெய்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அமைப்பாளர் எவிடென்ஸ் கதிர், ‘‘பிள்ளையார் குடியிருப்புக் கிராமத்தில் மூன்று தலித் குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றன. இவர்கள், சாதியத் தாக்குதலால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த இளைஞனை அடித்து, நிர்வாணப்படுத்தி, அசிங்கப்படுத்தி தற்கொலைக்குத் தூண்டி இருக்கிறார்கள். இதற்குக் காரணமானவர் களின் பெயர்களைக் குறிப்பிட்டு புகார் செய்தும் போலீஸார் வழக்குக்கூட பதிவு செய்யவில்லை. பொன் தாமரைச் செல்வனின் குடும்பத்துக்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். மாதம் 5 ஆயிரம் ரூபாய் பென்ஷன் வழங்க வேண்டும்’’ என்றார், திட்டவட்டமாக.
இதுபற்றி காவல் துறையினரிடம் கேட்டதற்கு, ‘‘நாங்கள் உரிய விசாரணை நடத்திய பிறகே வழக்குப்பதிவு செய்துள்ளோம். தற்கொலை செய்து கொண்ட பொன் தாமரைச்செல்வனுடன் ஆவாரைகுளத்துக்குச் சென்றதாக இவர்கள் புகார் தெரிவிக்கும் ஐயப்பனை அழைத்துப் பேசினோம். அவனோ, ‘அப்படி எந்தச் சம்பவமும் நடக்கவில்லை’ என எழுத்துப்பூர்வமாகவே கொடுத்து உள்ளான்’’ என்று சுருக்கமாக முடித்துக் கொண்டான்.
மழை வெள்ளம் ஊரையே மூழ்கடித்துக் கொண்டிருக்கிறது. சாதித் தீயை அணைக்க ஒரு பெரு வெள்ளம் எப்போது வரும்?

thanks vikatan

0 comments: