Sunday, November 29, 2015

சாமானியன் கூட மின்சாரம் தயாரிக்கலாம் - உலகத்தையே அசத்திய டெல்லி வாலா

- கார்க்கி பவா
சென்னை மழையில் சிக்கித் தவித்த பலரின் முக்கியமான தேவையாக இருந்தது எது தெரியுமா? மின்சாரம். வீட்டைச் சுற்றி தண்ணீர் நிற்க, தொட்டியில் குளிக்க தண்ணீர் இல்லாமல் தவித்தவர்கள் ஏராளம். உலகில் 3 பில்லியன் மக்களுக்கு எல்லா நேரமும் மின்சாரம் கிடைப்பதில்லை என்கின்றன சர்வேக்கள்.
"ஏழைகள் ஏழைகளாகவே இருக்க காரணம், மின்சக்தி இல்லாததுதான்!" என்கிறார் மனோஜ் பார்கவா. யார் இவர்?

மனோஜ் பார்கவா... அமெரிக்க நாட்டு தொழிலதிபர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரது குடும்பம் 1960 களில் அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்தது. அங்கே பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, இந்தியா திரும்பியவர், 12 ஆண்டுகள் டெல்லியில் இருக்கும் ஹன்ஸ்லோக் ஆசிரமத்தில் தங்கி இருந்தார். அந்த நேரத்தில் பார்கவாவின் தந்தை, அமெரிக்காவில் பிளாஸ்டிக் நிறுவனங்கள் தொடங்கி நடத்திக் கொண்டிருந்தார். அந்தப் பொறுப்பை ஏற்று நடத்த மீண்டும் அமெரிக்க சென்ற பார்கவா, அதை வெற்றிகரமாக நடத்தினார். இப்போது பார்கவாவின் நிறுவன மதிப்பு 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இதில் 99 சதவிகிதத்தை, உலகின் பல்வேறு தேவைகளுக்கான தீர்வுகளை கண்டுபிடிக்கச் செலவழிக்க இருக்கிறார். அதில் ஒன்றுதான் ’இலவச மின்சார’ திட்டம்.

மனோஜ் பார்கவா டீம் கண்டுபிடித்திருக்கும் “ஹைபிரிட் பைசைக்கிள்”லில் ஒரு மணி நேரம் பெடல் செய்தால், ஒரு நாளைக்கு தேவையான மின்சாரம் கிடைக்கும் என்கிறார்கள். மகிழ்ச்சியான விஷயம் என்னவெனில், இதிலிருந்து எந்தவிதமான மாசு ஏற்படுத்தும் கழிவுகளும் வெளியாகாது. நமக்கு தேவையான மின்சாரத்தை நாமே தயாரித்துக் கொள்வதால் பணமும் மிச்சம். இது செயல்படும் விதம் பற்றிய வீடியோவை கீழே காணலாம்.

 
இது மற்றும் இல்லாமல் எனர்ஜி தொடர்பான பல ஆய்வுகளில் மனோஜ் பார்கவா டீம் இயங்கி வருகிறது. அதில் இன்னொரு முக்கியமான புராஜக்ட்  “லிமிட்லெஸ் எலக்ட்ரிசிட்டி”. பூமியில் அடியில் செல்ல செல்ல, வெப்பநிலை அதிகரிக்கும். அங்கே அபரிதமான சக்தி மறைந்து கிடக்கிறது. ஆனால் அதை வெளிக்கொண்டு வர வழி இல்லாமல் மனித இனம் திணறி வந்தது. பார்கவாவின் கண்டுபிடிப்பான “கிராபீன்” என்றொரு மெட்டல் இதற்கு வழி காட்டி இருக்கிறது.

கிராஃபீன் ஒரு நல்ல மின்கடத்தி. இதன் ஒரு முனையில் 100 டிகிரி வெப்பம் செலுத்தப்பட்டால், அதன் இன்னொரு முனையில் அதே 100 டிகிரி வெப்பம் கடத்தப்படும். ஆச்சர்யம் என்னவெனில், நடுவில் கிராஃபின் குளிர்ந்தே காணப்படும். இது சில அடிகளுக்கு மட்டுமே கடத்தும் என நினைக்க வேண்டாம். எத்தனை மைல்கள் கடந்தாலும் அதே வெப்பசக்தி கிடைக்கும். இதை பூமிக்கு அடியில் செலுத்தி, அந்த வெப்பசக்தியை மேலே கொண்டு வந்தால் எளிதில் மின்சாரம் தயாரிக்கலாம். இதுவும் “பொல்யூஷன் ஃப்ரீ” என்கிறார் பார்கவா.

மின்சாரம் மட்டுமில்லாமல், நீர் மேலாண்மை மற்றும் சுகாதாரம் குறித்தும் பல புராஜக்டுகளை தொடங்கி இருக்கிறார் மனோஜ் பார்கவா. இவரது முயற்சிகள் மனித வரலாற்றில் மிக முக்கியமான அத்தியாயமாக இருக்கும் என்கிறார்கள். பார்கவாவின் ”பில்லியன் இன் சேஞ்ச்” என்னும் திட்டங்கள் பற்றிய ஒரு முழுமையான ஆவணப்படம் தயாரித்திருக்கிறார்கள். இந்தியாவில் இருக்கும் முன்னணி அலைவரிசைகளில் இது திரையிடப்பட இருக்கிறது.

இணையவாசிகள் அதற்காக காத்திருக்க தேவை இல்லை. இதோ அந்த படம் உங்களுக்காக.
  

thanks vikatan

0 comments: