Thursday, November 19, 2015

கேரளாவில் அசத்தும் நம்ம ஊர் ஐ.ஏ.எஸ் தம்பதி!


காதலின் உண்மையான அர்த்தத்தை உணர்ந்து, வாழ்க்கையில் சாதித்துக் கொண்டிருக்கும் 
ஈரோடு கார்த்திகேயன்- சென்னை வாசுகி தம்பதியர், தற்போது கேரளாவின் அன்பிற்குரிய ஐ.ஏ.எஸ் தம்பதியராக அசத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள், தங்களின் வாழ்க்கையில் எதிர்கொண்ட அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்கள் இங்கே...

உங்களின் காதல் எப்போது, எப்படி மலர்ந்தது?

(முதலில் பேச ஆரம்பித்த வாசுகி)" 2003-ல் மெடிக்கல் தரவரிசையில நான் தமிழகத்துலயே முதலாவதாகவும், கார்த்திகேயன் மூன்றாவதாகவும் இடம்பிடித்து, சென்னை மருத்துவக் கல்லூரியில எம்.பி.பி.எஸ் படிக்க ஆரம்பிச்சோம். எங்களுக்கு சமூக சேவையில அதிக ஆர்வம் இருந்ததால, எங்க படிப்பை சமூகத்துக்கு பயனளிக்கும் வகையில மாத்திக்க ஆசைப்பட்டோம். அதன்படி ரெண்டு பேருமே ஃபைனல் இயர் படிக்கும் போது, ஐ.ஏ.எஸ் படிக்கலாம்னு ஒரே வேவ் லென்த்துல முடிவு பண்ணினோம். அந்த டைம்ல எங்க ரெண்டு பேருக்கும், ஒருத்தர் மேல் ஒருத்தருக்கு ஃப்ரெண்ட்ஸ்ங்கிற சர்க்கிளைத்தாண்டி, காதல் வைப்ரேஷன் இருந்துச்சி. அதை முதல்ல கார்த்திதான் சொன்னாரு. கொஞ்ச நாள் கழிச்சி, நானும் சம்மதம் சொன்னேன்."

மருத்துவத்துறையே பொதுமக்களுக்கு சேவை செய்கிற துறைதானே? குறிப்பாக ஐ.ஏ.எஸ் ஆனால்தான் மக்களுக்கு சேவை செய்ய முடியுமா?


"நீங்க சொல்றது சரிதான். மக்களுக்கு எதாவது நோய் வந்த பிறகுதான், மருத்துவரால் சேவை செய்ய முடியும்; சிகிச்சைக் கொடுக்க முடியும்" எனத் தொடர்கிறார், கார்த்திகேயன். ஆனால், 'மக்களின் தேவையை அறிந்து, பிரச்னை வருவதற்கு முன்பாகவே உதவுறதுக்கு, ஆளுமை பதவிகள்ல இருந்தால்தான் செய்ய முடியும். அதனால்தான் ஐ.ஏ.எஸ் ஆக முடிவு செய்தோம்."

உங்க ஐ.ஏ.எஸ் கனவு எப்போ நிறைவேறியது?

"நீங்க ஈஸியா இந்த கேள்வியை கேட்டுட்டீங்க. ஆனா, இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல ஒரு மணி நேரமாவது ஆகுங்க. இருந்தாலும் சுருக்கமா சொல்றேன்" என புன்னகையுடன் பதிலளிக்கிறார், வாசுகி.

"2007-ம் எம்.பி.பி.எஸ் முடித்துவிட்டு, முழு மூச்சாக நானும், கார்த்தியும் ஐ.ஏ.எஸ் படிக்க ஆரம்பிச்சோம். தேர்வுகளை எழுதி, முதல் முயற்சியிலேயே செலக்ட் ஆனோம். நான் தமிழ்நாட்டுல டாப் 10 மற்றும் கார்த்தி டாப் 20 ரேங்கிற்குள் இடம் பிடிச்சோம். எனக்கு ஐ.ஏ.எஸ் போஸ்டிங் கிடைச்சது. ஆனால் கார்த்திக்குக்கு ஐ.எஃப்.எஸ் போஸ்டிங்தான் கிடைச்சிது.

கார்த்திக் நீங்க எப்போ கலெக்டர் ஆனீங்க... உங்களுக்கு எப்போது திருமணம் நடந்துச்சி?

"எனக்கு ஐ.எஃப்.எஸ் போஸ்டிங் கிடைச்சாலும், எனக்கு ஐ.ஏ.எஸ் ஆகணும்கிறதுதான் ஒரே சாய்ஸா இருந்துச்சி. அதனால, கிடைச்ச ஐ.எஃப்.எஸ் பணியை ராஜினாமா செய்தேன். அடுத்து மறுபடியும் ஐ.ஏ.எஸ்-க்கு ப்ரிப்பேர் பண்ணினேன். ஐ.ஏ.எஸ்-ஆக செலக்ட் ஆன வாசுகி, உத்ரகாண்ட் மாநிலத்துல ட்ரெயினிங்கில் இருந்தாலும், தினமும் ட்ரெயினிங் முடிந்ததும், எனக்காக நோட்ஸ் எடுத்து இரவு நேரத்துல மெயில் பண்ணுவாங்க. மறுபடியும் 2009-ம் ஆண்டுல எக்ஸாம் எழுதினேன். அதுல ஐ.ஆர்.எஸ் பணிதான் கிடச்சிது. 

ஐ.ஆர்.எஸ் பணியில சேர்ந்து, லாங்க லீவ் எடுத்துகிட்டு, மறுபடியும் ஐ.ஏ.எஸ்-க்கு படிக்க ஆரம்பிச்சேன். மறுபடியும் 2010-ம் ஆண்டு ஐ.ஆர்.எஸ்தான் கிடைச்சிது. அந்த காலகட்டம் எல்லாம், 'நாங்க எவ்வளவு வேதனையில இருந்தோம் என வார்த்தையில சொல்ல முடியாது.

பொறுத்தது போதும்னு கிடைச்ச ஐ.ஆர்.எஸ் பணிக்கு ஓகே சொல்லி, ட்ரெயினிங்கில கலந்துகிட்டேன். அப்போ வாசுகி மத்திய பிரதேசத்துல சப்-கலெக்டரா இருந்தாங்க. அந்த நேரத்துல ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். நாக்பூர்ல ட்ரெய்னிங்கில இருந்துகிட்டே, தொடர்ந்து ஐ.ஏ.எஸ்-க்கு ப்ரிப்பேர் பண்ணிட்டேதான் இருந்தேன். இதனால, 1-2 மாசத்துக்கு ஒரு முறைதான் நாங்க ரெண்டு பேரும் மீட் பண்ணிக்குவோம்.

ஒரு வழியா 2011-ம் ஆண்டு, நான் ஐ.ஏ.எஸ் ஆக செலக்ட் ஆனேன். இந்த இடைப்பட்ட காலத்துல எங்க முதல் பொண்ணு, சையூரி பிறந்தாள். இந்த இடைப்பட்ட காலம் முழுக்க எங்க காதல், பாசம் எல்லாமே போன் மூலமாகத்தான் டெலிவரி ஆச்சி."
 
ரெண்டு பேரும் ஐ.ஏ.எஸ் ஆனீங்க சரி. எப்படி கேரளாவுல சங்கமிச்சீங்க?

"அவருக்கு ஐ.ஏ.எஸ் ட்ரெயினிங் முடிந்து, கேரளாவுல அசிஸ்டெண்ட் கலெக்டராக போஸ்டிங் கிடைச்சுது. அப்போ எனக்கு மத்தியப்பிரதேச மாநிலத்துல சப்-கலெக்டர்ல இருந்து, கலெக்டர் ஃப்ரமோஷன் வாங்குற தருணத்துல இருந்தேன்..ஆனா, கார்த்தி கூடவே இருக்கணும்னு, கேரளாவுக்கு 'கார்டர் சேஞ்ச்'க்கு அப்ளை பண்ணினேன். ஆனா, அப்போதைய-இப்போதைய மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், 'நம்ம வீட்டுப் பொண்ண நாம ஏன் கேரளாவுக்கு அனுப்பனும்; அவருடைய கணவரை இங்க போஸ்டிங் வாங்கிட்டு வரச்சொல்லுங்க'ன்னு சொல்லிட்டார்".

ஒருவழியா, 2012-ம் ஆண்டு கார்டர் சேஞ்ச் வாங்கி, கேரளாவுக்கே போயிட்டேன். 

நீங்க ரெண்டு பேரும், இப்போ எந்தெந்த துறைகளில் பணிபுரியிறீங்க?

"திருவனந்தபுரம் சப்-கலெக்டரா பணியாற்றிட்டு இருக்கும் நான், இன்னும் ஆறு மாசத்துல கலெக்டர் ஆகிடுவேன்" எனத் தொடர்ந்த கார்த்திகேயன், "வாசுகி, 'சுசித்வா மிஷன்' '(Suchitwa Mission) எனப்படும் 'தூய்மை கேரளா' துறையின் எக்ஸிகுடிவ் இயக்குனரா இருக்காங்க" என்றார். 

இந்த குறிப்பிட்ட காலகட்டத்துல நீங்க ரெண்டு பேரும் உங்களுடைய துறைகள்ல சாதித்தவைகள்?


"கிரீன் புரோட்டோகால், சபரிமலையை தூய்மையாக்குவது, கழிவு மேலாண்மை போன்ற பல திட்டங்களை வெற்றிகரமா செயல்படுத்துகிறேன்" எனக் கூறிய வாசுகி, 'வேஸ்ட்?' என்ற புத்தகத்தை எழுதி, அதனை கேரள முதல்வர் உம்மன்சாண்டி வெளியிட்டதாக பெருமிதம் கொள்கிறார். 

தொடந்த கார்த்திகேயன், "சமீபத்தில் வெற்றிகரமாக தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தியது, ஆக்கிரமிப்பு நீரோடைகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தது போன்ற பல செயல்பாடுகளை செய்து முடித்தேன். தற்போது சப்-கலெக்டர் பதவியுடன், கூடுதலாக ஊரக வளர்ச்சித்துறை மூலமாக, ஏழை மக்களுக்கு இலவச வீடுகளை கட்டிக் கொடுக்கும் திட்டத்தைக் கவனிக்கும் அதிகாரியாகவும் இருக்கிறேன்" என்றார். 

இரண்டு கலெக்டர்களும் வீட்டில் எப்படி?


"நாங்க ரெண்டு பேருமே ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டு, பல வருஷம் பொறுத்திருந்து கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அதனால, வீட்டுல ரெண்டு பேருக்கும் ஈக்குவல் ரைட்ஸ்தான்" என ஆரம்பித்தார் கார்த்திகேயன்.
"தினமும் காலையில குழந்தைகள் ரெண்டு பேரையும் ரெடி பண்ணி, ஸ்கூலுக்கு அனுப்பும் வேலை என்னுடையது. மாலையில குழந்தைகளுக்கு ஸ்னேக்ஸ் கொடுத்தும், இரவு சாப்பிட வைத்தும், தூங்க வைக்கிறதும் வாசுகியோட வேலை. இப்படி வீட்டு வேலைகளை சரிசமமாக பிரித்துதான் ரெண்டு பேருமே செய்கிறோம். பெண்களுக்கு சம உரிமை கொடுக்கச் சொல்லும் காலம் இதுங்க. அது வீட்டுக்குள்ள இருந்தே தொடங்கட்டுமே" என ஆச்சர்யப்பட வைக்கிறார்கள், ஐ.ஏ.எஸ் தம்பதியினர்.

இவ்வளவு கஷ்டங்களுக்குப் பிறகு, நீங்க கத்துக்கிட்ட வாழ்க்கைப் பாடம் என்ன?

"எங்களோட காதல்தான், எங்க இலக்குக்கு வழிகாட்டியா இருந்துச்சி. அதனால, காதலுடைய பாதையில, துன்பமும்-இன்பமும் கலந்து பயணிச்சோம். முடிவுல நல்ல பாதை கிடைச்சிது. இப்போ மகிழ்ச்சியாக வாழ்ந்துட்டு இருக்கிறோம். மக்களுக்கு எங்களால் முடிந்த சேவைகளை சிறப்பாக செய்துகிட்டு இருக்கிறோம். ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக்கொடுத்து போவதுதான், காதலின் உண்மையான அர்த்தமாக நாங்க நினைத்தோம்; வெற்றி பெற்றோம்" என  புன்னகையுடன் முடித்தனர், நம்ம ஊர் ஐ.ஏ.எஸ் தம்பதியர்.

கலக்குங்க கலெக்டர்ஸ்!

thanks vikatan

0 comments: